
மந்திரங்கள் என்றால் என்ன?
அ. ச. ஞானசம்பந்தன்
5. என்று தோன்றினார்?
மூலப்பரம்பொருள் என்றும், இறைவன் என்றும் சொல்கிறோம். விநாயகன் என்ற சொல்லுக்கு ‘வி-நாயகன்’ என்பது பொருள் ஆகும். தனக்கு மேல் யாரும் தலைவன் இல்லாதவன் என்று பொருள்படும். விநாயக வழிபாடு இன்றைக்குக் காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையில் பரந்து நிற்கின்ற ஒரு வழிபாடாகும். தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் விநாயக வழிபாடு என்று வந்தது என்று சொல்வதற்கு இல்லை. சங்க காலத்தில் விநாயகர் பற்றிய பேச்சே இல்லை. முருகனைப் பற்றிப் பாடல்கள் வருகின்றன. முருகன் சிவபெருமானுடைய மகன் என்று சங்கப் பாட்டுப் பேசுகிறது. ஆனால் விநாயகனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. பின்னர்க் காலாந்தரத்தில் ஏழாம் நூற்றாண்டில் தேவார காலத்தில் விநாயகனைப் பற்றிய பேச்சு வருகிறது. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பரவியிருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. இன்று, இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிரத்தில் விநாயகருக்குள்ள மதிப்பு வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. எல்லாவற்றிலும் விநாயக வழிபாடு மிக முக்கியமாகக் கருதப்படுவது மகாராஷ்டிரத்தில்தான். பின்னர் மிகவும் பிற்காலத்தில் தோன்றிய ஆறு சமயங்கள் என்று சொல்லப்படுகின்ற தொகுப்பில் ‘காணாபத்தியம்’ என்ற பெயரில் விநாயகனை மூலப்பரம் பொருளாக வைத்து வழிபடுகின்ற ஒரு முறை தோன்றியிருக்கிறது. அதைப் போல ‘கௌமாரம்’ என்று முருகனை மூலப்பொருளாக வழிபடுகின்ற முறையும் வந்தது. அப்படியே ஆறு தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அந்த அடிப்படையில் சமயங்கள் தோன்ற அவற்றை அறுவகைச் சமயங்கள் என்றும் சொல்லினர்.
இனி விநாயகனைப் பொறுத்தமட்டில் ஓங்கார வடிவினன் என்ற கருத்து இடைக் காலத்தில் பேசப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள ஒலியை “ப்ரிமார்டியல் சௌன்ட்” என்று சொல்வார்கள். எல்லா ஒலிகளுக்கும் தாயாக உள்ள ஒலி ஓங்காரம் என்று சொல்வார்கள். “ஓசை ஒலி யெல்லாம் ஆனாய் நீயே” என்று நாவுக்கரசர் சொல்வார். எனவே ஒலி வடிவாக முதல் தோற்றம் ஏற்பட்ட பொழுது அந்த ஒலி ஓங்கார வடிவைப் பெற்றிருந்தது என்று கருதுகிறார்கள். அந்த ஓங்காரத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டுமேயானால் அது விநாயகப் பெருமானின் உருவமாக அமைகிறது என்று நம்மவர் கருதுகிறார்கள். எனவே மிக மூலமாக, பழமையாக உள்ள ஒன்றைச் சுட்டுவதற்கு ஓங்கார வடிவத்தை விநாயகருக்குத் தந்திருக்கிறார்கள்.
இனி இந்த விநாயக வழிபாடு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தாலும் அந்தந்த நாட்டு மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு என்பனவற்றில் எவற்றை முக்கியமாகக் கருதுகிறார்களோ அவற்றையெல்லாம் விநாயக வழிபாட்டிலே சேர்த்திருப்பதைக் காணுகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் அருணகிரியார் சொல்வது போல ‘அப்பமொடு அவல் பொரி கொழுக்கட்டை’ முதலியன இவருக்கு வைத்து, நைவேத்தியமாக வழங்கப்படுவதைக் காணுகிறோம். என்ன காரணத் தினாலே இந்தக் கொழுக்கட்டை அவல் நைவேத்திய மாகப் படைக்கப்படுகின்றன என்று சொல்லுகின்ற முறையிலே இல்லை. ஏதோ ஒரு காலத்தில் இது அவனுக்குரிய பொருளாகத் தமிழர்களாலே கருதப் பட்டு அதுவே பரம்பரையாக வந்திருக்கிறது என்று அறிகின்றோம்.
இனி, விக்னம் என்று சொல்லப்படுகின்ற இடையூறு என்பது மனித வாழ்க்கையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலத்தில் அல்லது பல காலங்களில் குறுக்கிடத்தான் செய்யும். விக்னம் அல்லது இடையூறு இல்லாத ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது நம்பமுடியாத ஒரு காரியம். எனவே இடையூறு வரும்போது என்ன செய்வது? இடையூற்றைப் போக்குவதற்கு மனிதன் முயல் கின்றான். ஆனால் முயற்சியினாலே எல்லா இடையூறு களையும் போக்கிவிட முடியும் என்று ஒரு காலத்திலும் நினைக்க முடியாது. சாதாரண இடையூறுகளைக் சமயங்களில் நம்மாலே போக்கிட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலே நாம் என்ன செய்கின்றோம்? சாதாரணமாக நம்மோடு உடன் இருக்கின்றவர்கள், பெரியவர்கள், வலுவுடையவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பவர்களுடைய உதவியை நாடி நம்முடைய இடையூறுகளைப் போக்கிக் கொள்கின்றோம். இனி நம் இனத்தவர் களுடைய இடையூறுகளைப் போக்க வேண்டுமேயானால் நம்மைவிடப் பலம் பொருந்தியவர்களுடைய உதவியை நாடுகின்றோம். மனித சமுதாயம் முழுவதும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையூறு வரும்போது யாரைச் சென்று அணுக முடியும்? அப்படிப்பட்ட நிலையில்தான் விநாயகப் பெருமானை நாம் நினைக்கின்றோம். எத்தகைய இடையூறு ஆயினும் உலகியல் கடந்த இடையூறாக இருந்தாலும் சரி, தெய்வக் கோளாறாக திருந்தாலும் சரி, அந்த இடையூற்றைப் போக்குவதற்கு விநாயகப் பெருமானைத் துணையாக அழைக் கின்றோம். ஒரு காரியத்தைத் தொடங்குகின்றோம் என்றால் அது செம்மையாக முடிய வேண்டும். இடையூறு இல்லாமல் முடிய வேண்டும் என்பதற்காக முதன் முதலாக விநாயகப் பெருமானை வணங்குகின்றோம். ‘ஐயா உம்முடைய துணையோடு உம்முடைய அருளைக் கொண்டு இந்த முயற்சியில் நான் ஈடுபடுகின்றேன். உன்னுடைய திருவருள் முன்னே நின்று எவ்விதமான விக்னமோ அல்லது இடையூறோ இல்லாமல் இந்தப் பணி முடியுமாறு உதவ வேண்டும்’ என்ற கருத்திலேதான் தொடக்கத் திலேயே விநாயகரை வழிபட்டு நம்முடைய செயல் களைத் தொடங்குகின்றோம்.
இந்தப் பழக்கம் என்று வந்தது என்று தெரியாது. ஆனால் இன்று வலுவாக அமைந் திருப்பதைக் காண்கின்றோம். சங்கப்பாட்டு இடைக் காலத்திலே 9, 10 ஆம் நூற்றாண்டு வரையிலே வந்த நூல்கள் என்பவற்றில் விநாயக வணக்கம் சொல்வதாகக் காணப்படவில்லை. அதற்குப் பிறகு வந்த நூல்கள் எல்லாம் விநாயக வழிபாட்டோடுதான் தொடங்குகின்றன. கந்தபுராணம் பாடவந்த பெருமகனார் ‘திகட சக்கரச் செம்முகம்’ என்று மட்டமானவையாக தொடங்குகிறார். இந்த விநாயக வழிபாடு தமிழகத்திலே வலுவாக வேரூன்றி விட்டது. மிகச் சிறந்த கொள்கை, கருத்து என்பவற்றை அடிப்படை யாகக் கொண்டு விநாயகப் பெருமான் வழிபாடுகள் தோன்றினாலும், இது பற்றிய கதைகள் நிரம்ப தோன்றியிருக்கின்றன என்பதும் உண்மை.
பௌராணி கர்கள் கிராமங்களிலேயிருந்து மக்களைக் கவருவதற் காக எத்தனையோ கதைகளைப் பேசியிருக்கிறார்கள். அந்தக் கதைகளில் பல அவர்களுடைய கற்பனைகளில் தோன்றியவை ஆகும். இப்படிப் பல்வேறு கதைகள் இருந்தாலும் இக் கதைகள் அனைத்தும் சில உயர்ந்த தத்துவத்தைக் குறிப்பனவாக இருக்கும். சில மிக இருக்கும். இம்முறையிலே விநாயகப் பெருமானுடைய தோற்றத்தைப் பற்றிய கதைகள் பல எழுந்தன. பொருளாக, மணிகள் கோத்த மாலையில் நடுவே நூல் இருப்பது போல் இருக்கின்ற ஒரு கருத்து. உயிர்கள் எப்போது துன்பத்தை அனுபவிக்கின்றனவோ உயிர்களுடைய வாழ்க்கைக்கு எப்போது இடையூறு ஏற்படுகின்றதோ, அப்பொழுது அதைப் போக்குவதற்கு விநாயகப் பெருமானுடைய திருவருளை நாடினால் நிச்சயமாக அந்த இன்னல்கள் இடையூறுகள் நீக்கப்படும் என்பதுதான், இக்கருத்து எல்லாக் கதைகளிலும் நடுவே இருப்பதைக் காண்கின்றோம். இனி விநாயகப் பெருமான் ஒரு கொம்பை ஒடித்திருப்பதைக் காண்போம். அதற்காக ஒரு கதை தோன்றிற்று. மகாபாரதத்தை வியாசர் சொல்ல மாமேரு மலையில் எழுதுவதற்காக எழுத்தாணியாக விநாயகர் தம்முடைய தந்தங்களில் ஒன்றை ஒடித்துப் பயன்படுத்தினார் என்பது அது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்த நாட்டிலே விநாயக வழிபாடு, ‘தனக்கென்று ஒரு தலைவன் இல்லாதவன்’ என்ற பரம்பொருளின் வழிபாடு, மக்களுடைய வளர்ச்சிக்கு இடையூறுகள் எங்கே எப்போது எந்த வடிவில் தோன்றினாலும் அவை அனைத்தையும் போக்குவதற்கு விநாயகப் பெருமானுடைய உதவியை நாட வேண்டும் என்ற கருத்தை நம்மவர்கள் வலுவாகக் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.



