மந்திரங்கள் என்றால் என்ன?
அ. ச. ஞானசம்பந்தன்

3. கிழக்கும் மேற்கும்

“கிழக்கும் மேற்கும்”, “உலகாயதமும் ஆன்மிகமும்” என்பன என்னை வியப்பில் ஆழ்த்தின.

மேற்கு, கிழக்கு என்று பிரிவினை செய்து பேசுவது நியாயமானதா? உண்மையில் மேற்கு, கிழக்கு என்ற பகுதிகள் பிரிவினை செய்யக்கூடிய முறையில் உள்ளனவா? ‘மேற்கு, கிழக்கு என்பன இல்லை’ என்பதனை நான் சொல்லி, நீங்கள் அறிய வேண்டிய நிலையில் இல்லை. எல்லாவற்றையும்விட வேடிக்கை என்னவென்றால், சென்னைப் பட்டினத்தார் செங்கற் பட்டாரைக் தெற்கத்தியார் என்பார். செங்கற்பட்டார் தென்னார்க்காட்டாரைத் தெற்கத்தியர் என்பார். தென்னார்க்காட்டார் தஞ்சாவூர்க்காரரைத் தெற்கத்தி யார் என்பார். இப்படித் தெற்கு என்பது விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பனவெல்லாம் ஒப்புநோக்குச் சொற்களே தவிர, அவை அடிப்படையான பொருள் பொதிந்தனவும் குறிப்பிட்ட பொருளை அல்லது பகுதியை உணர்த்துவனவுமாகிய சொற்களாகா என்பதும் புலப்படும். கவிஞன் பாரதி,’புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே’ என்று எந்தத் திசையை நினைத்துப் பேசினான் என்பது ஆய்தற்பாலது. ஒருவேளை நம்மைவிட மேற்கே உள்ளவர்களை நினைந்து பேசினானோ என்று எண்ண வேண்டியுள்ளது. இது பற்றிப் பேசிய, எழுதிய பல ஆசிரியர்கள் கற்பனையால் ஒரு பிரிவினைச் செய்து கொண்டார்கள்.

இரஷ்ய நாட்டவரைக் கீழ்நாட்டவர் என்று மேலைநாட்டவர் கூறுவதனை நீங்கள் அறிவீர்கள். கீழை நாட்டவரின் பொதுவுடைமை மனப்பாங்கை நம்மால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியவில்லை’, (“We can never understand eastern communistic mind”) என்று மேலை நாட்டவர் கூறுவர். ஐரோப்பாவோடு சேர்ந்து நிற்கும் இரஷ்யரை நம்மோடு சேர்த்துக் கீழைநாட்டவர் என்றால், மேலைநாட்டவர்தாம் யார்? ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் வாழ்பவரும் அமெரிக்கரும் தாம் போலும். திசை கூறி ஒன்றை அறுதியிட்டுக் காட்டவோ வேறுபடுத்திப் பார்க்கவோ இடமில்லை என்பது நன்கு விளங்கும். எனினும், ஒன்றுமட்டும் உறுதி. ஐரோப்பாவின் மேற்குப்பகுதியிலும் அமெரிக்காவிலும் தோன்றி வளர்ந்த நாகரிகத்திற்கும், ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலும் ஜப்பான் முடிய உள்ள நாடுகளிலும் தோன்றி வளர்ந்த நாகரிகத்திற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. அந்த அடிப்படையான வேறுபாட்டைத் தத்துவ மேதைகளும், ஏனைய சமயத்துறை நின்றாரும், பண்பாட்டாராய்ச்சியாளரும், மானிடவியல் ஆராய்ச்சி வல்லுநரும் தனித்தனியே தத்தம் நிலையில் ஆய்ந்து கண்டறிந்து, இவைகட்கிடையே வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார்கள். ஆனால், இவை அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போமே யானால் ஏதாவது ஒரு புதிய காட்சி கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

மக்கள் அனைவரும் ஆறறிவு படைத்தவர்கள் என்றாலும், அவர்கள் அடிப்படை வேறுபாடு இல்லை என்றாலும், வாழ்க்கையின் குறிக்கோள் அவர்கள் வாழும் இடத்திற்கு இடம் மாறிவிடுகிறது. வாழ்வினைக் காணும் அடிப்படை நோக்கு முழுவதும் மாறுபட்டிருக்கும்

காட்சியைக் கிழக்கிலும் மேற்கிலும் காண முடியும். உங்களிலே சிலர் நினைக்கலாம் தொழில்துறை முதலானவற்றில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு முன்னேறியுள்ள அந்த நாட்டு மக்கள் நினைவு, செயல் முதலானவற்றிலும் மாறுபட்டு இருப்பதில் வியப்பில்லையே என்று. ஆனால், அது சரியன்று என்றுதான் தோன்றுகிறது. நம் சகோதர நாடான ஜப்பானியர்கள் கீழை நாட்டவராயினும் பொருளாதாரத் துறையில் அமெரிக்காவின் அடுத்த நிலையை எட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றால் வியப்படைய மாட்டீர்கள். பொருளாதார அடிப்படையிலே மட்டுமல்லாமல் தொழிலாக்கப் பொருள்களைப் பற்றிக் கூட இருபத்தைந்து ஆண்டு கட்கு முன்னர், ஜப்பான் நாட்டுப் பொருள் என்றால் அது தரக்குறைவான பொருள் என்று எள்ளி நகையாடி வந்த மேலைநாடுகளில், இன்று ஜப்பான் நாட்டுப் பொருள்கள் நம்பமுடியாத அளவு பாராட்டப் பெறுகின்றன. ஜெர்மனியின் தலைசிறந்த நகரமாகிய ஃபிரான்க்பர்ட்டிற்குச் சென்று எளிதாகக் கையில் எடுத்துச் செல்லும் வானொலிப் பெட்டி வேண்டு மென்றால், அவள் காட்டும் முதல் மூன்றும்-ஜப்பான் நாட்டில் உருவானவை என்பது தெரியவரும். புகைப்படக் கருவி வேண்டுமென்றால் ஜப்பான் நாட்டில் உருவான கேமிராக்களைத்தான் ஜெர்மனி நாட்டின் ஃபிரான்க்பர்ட்டில் காட்டுகிறார்கள். அவ்வளவு தூரம் தொழில் துறையில் ஜப்பானியர் முன்னேறியுள்ளனர். அவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ள ஜப்பான் நாட்டு உணவு விடுதியில் நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இரவு விடுதிகள் மிகுதியாக வளர்ந்துள்ள அந்த நாட்டில் காலை ஆறு மணிக்கு டோக்கியோவில் உள்ள ‘ஹில்ட்டன்’ உணவு விடுதியில் பணிபுரியும் பணியாளர்கள் கூட்டாக வழிபாடியற்றும் வியப்பைக் கண்டேன். மாதா கோயிலில் வழிபாடு செய்வதுபோல மண்டியிட்டு மூக்கு தரையில் படுமாறு குனிந்து வழிபடுவதனைப் பார்த்தேன். அவர்களைக் கேட்ட போது நாள்தோறும் அவ்வாறு கூட்டாக வழிபாடியற்றும் பழக்கம் உண்டு என்று கூறினார்கள். தொழில் துறையில் முன்னேறி உலகச் சந்தையில் போட்டி போடும் அளவிற்கு முன்னேற்றம் பெற்று விட்டதனால் பழைய வாழ்க்கைப் பாதையிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றோ, பழமையான தங்கள் வாழ்க்கை முறையை விட்டுவிட வேண்டும் என்றோ தேவை இல்லை என்று காட்டவே இதனைச் சொன்னேன்.

எவ்வளவு முன்னேறியும் பழைய பழக்கங்கள் என்று எவற்றை எண்ணுகின்றனரோ, அவற்றை விட அவர்கள் முனைவதில்லை. இரவு விடுதிகளைப் போற்றி மேற்கொள்ளும் பழக்கத்தில் அமெரிக்கர் களிடம் கூடக் காணமுடியாத அளவு நவ நாகரிகத்தில் புரளும் ஜப்பானியர் பழைமை வாய்ந்த மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் விடுவதில்லை. ஜப்பானியர் போன்று தனிமனிதரை உபசரிக்கும் உயர்வான நிலையை உலகில் வேறு எங்கும் காண இயலாது. விருந்தினரை அழைத்துத் தேநீர் அளிப்பதனால் அதனைத் “தேநீர் விழா” (Tea Ceremony) என்று பெயரிடும் அளவு அவர்கள் பழைமையைப் போற்றி வாழ்கின்றார்கள். கொடுப்பதென்னவோ ஒரு கிண்ணத் தேநீர்தான். ஆனால், அந்தத் தேநீர் விழாவில் விருந்தினரை உயரமான ஆசனத்தில் அமரச் செய்து தாங்கள் ஒருபடி தாழ்வாக உள்ள ஆசனத்தில் அமர்ந்து தேநீர் வழங்குவர். விருந்து உபசரிக்கும் அவர், விருந்து உண்பவரைவிடப் பொருள் வளத்தால் பல நூறு மடங்கு உயர்ந்தவராகக்கூட இருப்பார்; என்றாலும், அவர்கள் தனி மனித உபசாரத்தில் எவ்வளவு சிறந்து நிற்கின்றார்கள் என்பதற்காக இதைச் சொல்கின்றேன். புத்த தேவன் காலத்தில் தோன்றிய பழக்கத்தை அவர்கள் இன்றைக்கும் ஏற்றுச் செய்கின்றார்கள்.

இதனை நோக்குகையில், அவர்களது பண்பாட்டில் – நாகரிகத்தில் ஏதோ அடிப்படையான வேறுபாடு இருக்கத்தான் வேண்டும் என்பது தெரியவருகிறது. வாழ்க்கை முறையில் எவ்வெவற்றை வாழ்வின் குறிக்கோள்கள் என ஒரு சமுதாயம் ஏற்றுக் கொண்டுள்ளதோ அவற்றை மறவாமல் ஆனால், அதே நேரத்தில் வாழ்வில் முன்னேறுகின்ற அடிப் படையைக் காணுகின்றோம். எங்கிருந்து வந்தது இப் பழக்கம் என்று ஆராய்வோமானால் அது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

புவியியல் அடிப்படையில் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகள் என்பன இல்லை என்றாலும், மக்களைப் பொறுத்தமட்டில் வேறுபாடு இருக்கத் தான் செய்கிறது. மேற்கிலும், கிழக்கிலும் மட்டுமா வேறுபாடு? நம் நாட்டையே எடுத்துக் கொண்டாலும் தெற்கு, வடக்கு என்ற வேறுபாடு இருக்கிறது. பஞ்சாபியரை வங்காளிகள் ஏற்றுக்கொள்வதில்லை; வங்காளியரைப் பஞ்சாபியர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்று என்னோடு ஒரு வடநாட்டு நண்பர் இரயிலில் பயணம் செய்தார். அவர் குவெட்டாவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் கலவரத்தினால் பம்பாயில் குடியேறி, மோட்டார் உதிரி உறுப்புகள் (spare parts) விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். அவர் தம் இனத்திற்குத் தவிர இந்திய நாட்டில் உள்ள பிற அனைத்து இனத்தவர்க்கும் தேசிய இன இயல்பு என்று சில குணங்களைக் கூறினார்; அவை என்னை வியப்பில் ஆழ்த்தின. ‘இவர்கள் திருடர்கள்; இவர்கள் வஞ்சகர்கள்; இவர்கள் சாமான் இல்லாமலேயே விற்பனை செய்பவர்கள்’ என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அவர் தன் போக்கில் இவ்வாறு இந்திய இனங்களுள் வேறுபாட்டைக் கண்டார்.

பாலஸ்தீன நாட்டில் யூதர்களும், முகமதியர்களும் ஒரே கோவிலில் ஆளுக்கு ஒரு பக்கத்தில் சென்று வழிபாடு செய்யும் நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் வழிபாடு செய்பவர் அந்தப் பகுதியில் வழிபாடு செய்பவர் தாழ்ந்தவர் என்றும், அந்தப் பகுதியில் வழிபாடியற்றுபவர் இந்தப் பகுதியில் வழிபாடு செய்பவர் தாழ்ந்தவர் என்றும் கருதுகின்றனர். ஒரே நாட்டில் இருந்தவர்கள் தாம் என்றாலும் – ஒரே நாட்டில் இன்று வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள்தாம் என்றாலும் இந்த வேற்றுமை இருந்து வருகிறது. லண்டன் நகரத்தில் லண்டன் விமான நிலையத்தில் நாம் இறங்கியவுடன், “நீங்கள் இந்தியர், எனவே உள்நாட்டவர் வெளியேறும் இந்த வாயிற்படி வழியாகச் செல்லலாம்” என்கின்றனர். ஏழாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து செல்லும் நமக்கு ஒரு வழி. 22 மைல் தொலைவில் உள்ள பிரெஞ்சு நாட்டிலிருந்து வருபவருக்கு அந்நிய நாட்டார் வெளியேறும் வேறு ஒரு வாயில். ஏனென்றால், அவர் வெளிநாட்டவராம்.7000 மைலுக்கு அப்பாலிருந்து செல்லும் நாம் காமென் வெல்த் உறவாளர்கள். 22 மைல் தொலைவில் உள்ள பிரெஞ்சுக்காரர் இங்கிலாந்து நாட்டவருக்கு வெளிநாட்டாராம். இங்கிலாந்து நாட்டையே எடுத்துக் கொண்டாலும் பழைய அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையிலே வரும் ரோமன் கத்தோலிக்க மதத்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வேறு. அதிலிருந்து பிரிந்து, மக்கள் மனநிலை மாறுபாட்டிற்கு ஏற்ப மதமானது வளைந்து கொடுத்து மாறுபட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட புராட்டஸ்டண்ட் மதத்தவர் இருக்கிறார்களே, அவர்கள் வேறு.

புத்த தேவன் ஒருவன்தான். அவன் நிருமாணித்த மதமும் ஒன்றுதான். கருணையே உருவாகிய புத்த தேவன் உருவாக்கிய புத்தமதம் மகாயானம், ஹீனயானம் என்று இரண்டாகப் பிரிந்து குடுமிபிடிச் சண்டையில் நிற்கும் நிலையைக் காணலாம். இன்னும் கொஞ்சம் மேற்கே போனால் அமெரிக்க நாட்டில் டெட்ராய்டு பகுதி மக்கள் ‘டெக்சாஸ் பகுதி மக்கள் பேசுவது ஆங்கிலமே இல்லை’ என்று கூறும் நிலையைக் காணலாம்.

இவ்வாறு எங்கு நோக்கினும் மன வேறுபாடு, இனப் பிரிவினை, ஒரே இனத்துள்ளும் பிற வேறுபாடுகள் என்றிருக்கும் நிலையைக் காணலாம். ஆகவே, சமயத்தால் வேற்றுமை, தூரத்தால் வேற்றுமை, எல்லையால் வேற்றுமை, ஒரே எல்லையில் ஒரே இடத்தில் வாழுகின்றவர்கள் இடையேயும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களிடையேயும் அவர்கள் மேற்கொண்ட சமய அடிப்படைக் கொள்கையில் வேற்றுமை.

ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் ‘ஐடியலிசம்’ என்று சொல்கின்றார்கள். லூதரிலிருந்து வந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் தங்களைக் ‘குறிக் கோள் கொள்கையாளர்’ (ஐடியலிஸ்டு) என்று கூறிக் கொள்வர். தாங்களே மிகுதியான கடவுள் நம்பிக்கை யுடையவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனினும், இது ஐயத்திற்கிடமானது என்பதற்கு இரண்டு உலக மகா யுத்தங்களே சான்றா யமைவதனைக் காணுகின்றோம். அமெரிக்கர்க்கும் ஆங்கிலேயர்க்கும் அவ்வளவு தூரம் பழமையில் நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் புரட்சியின் அடிப்படையில் வந்த சமயத்தைப் பின்பற்றுகிறவர்கள். ஆங்கிலிகன் சர்ச் பழைய நம்பிக்கையை மாற்றியமைத்து அதன் மேலே எழுந்தது என்று சொல்லுவார்கள். ஆனால், மலைநாட்டவர்கள் தங்கட்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையளவு ஜெர்மானியர்க்கு இல்லையென்று பேசுகின்றார்கள். இவ்வாறு எங்கும் எப்பொழுதும் வேற்றுமை, வேற்றுமை, வேற்றுமை என்று வேற்றுமையே இந்தப் பரந்த உலகெங்கிலும் வளர்வதனைக் காணுகின்றோம். அப்படியானால் இரண்டுக்குமிடையே ஒற்றுமையே இல்லையா? இருக்கத்தான் செய்கின்றது. அதை மறுப்பதற்கில்லை.

புத்த தேவனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் ஜப்பான் நாடு இன்று அவனுக்கு நேர் எதிரான முன்னேற்றம் பெற்றிருக்கிறது. புத்த சமயம் என்பது தியானத்தை (contemplation) அடிப்படையாகக் கொண்டது. அவன் கொள்கைப்படி ஒன்றைப் பார்த்து இது நல்லது, இது தீயது என்று பேசுவதுகூடச் சரியில்லை. உலகத்தில் நல்லது என்றோ கெட்டது என்றோ தனியே ஒன்றும் கிடையாது; உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கிடையாது. உலகப் பொருள்களின் இலக்கணத்தை ஆய்ந்தால் எது நல்லது எது தீயது என்று கூற முடியாது. ‘இந்த நாற்காலி சிவப்பாகத்தான் இருக்கும். நாம் ஏன் அது பச்சையாக இல்லையே என்று மனம் வருந்த வேண்டும்? அவ்வாறு வருந்தினால் அது அறியாமையின் பாற்படும். நாற்காலி யின் நிறம் சிவப்புத்தான். ஆகவே, அறிவுடையவன் நாற்காலி பச்சையாக இல்லையே என்று கவலைப்பட மாட்டான். இருப்பதனை அப்படியே ஏற்றுக் கொள்வான். இப்படி இருந்திருக்க வேண்டும் என நினைப்பதே இல்லை. இரண்டையும் ஏற்றுக்

கொள்ளும் உயர்ந்த மனோபாவம் கொண்டவர் புத்த தேவர். அத்தகைய மனோபாவம் கொண்ட தேவனின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகச் சொல்லும் ஜப்பானியர் இன்றைக்கு மேலை நாட்டவரின் பழக்க வழக்கங்களில் புகுந்து துளையமாடுகின்றனர். ஆக, வேற்றுமை வேற்றுமை என்று எங்கே பார்த்தாலும் வேற்றுமையையே காண்கிறோமே; இந்த வேற்றுமைகளின் இடையேயும் அடிப்படைக் கலப்பையும், உறவையும் காண்கின்றோம்.

இன்றைக்கு மேலைநாட்டவரைப் பின்பற்றுவதாகச் சொல்லித் திரியும் நம்மிடையே பல சுவையான அனுபவங்களைக் காணலாம். ஓர் இடத்தில் சொற்பொழிவுக்குப் போனேன். அங்கே துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அது என்னைப் பற்றிய பிரசுரம். எனக்கும் வழங்கப்பட்டது. ‘விஞ்ஞானம் படிக்கப் போய்த் தமிழிலேயே விழுந்து எழுந்த ஞானசம்பந்தமே! பக்திமான் கண்டது பிரசாதம். விஞ்ஞானி கண்டது மின்சாரம். நீ பிரசாதம் வழங்க வந்தாயே தவிர, மின்சாரம் ஆக்கித் தருகிற ஆற்றலை ஏன் தரக்கூடாது” என்று அழகாக எழுதியிருந்தனர். இந்த மாதிரி அடிப்படையே இந்த நாட்டில் வளர்ந்தோங்கக் காண்கின்றோம். மின்சாரம் வழங்கவென்று ஒரு கூட்டத்தார்! பிரசாதம் வழங்க வென்று ஒரு கூட்டத்தார்! மக்கட் கூட்டத்தையே இப்படி இங்கே வேற்றுமைப்படுத்தி விட்டோம்! இவர்கள் இப்படி வேற்றுமைப்படுத்திப் பேசும் இதே நேரத்தில் மின்சாரம் கண்ட நாட்டின் நிலையையும் காண வேண்டும். ஹிப்பிகள் என்பவர்களைச் சென்னையில் அரிதாகக் காணலாம்; பம்பாயில் இன்னும் கொஞ்சம் மிகுதியாகப் பார்க்கலாம்; நேபாளத்தில் நிரம்பப் பார்க்கலாம். கோவா பகுதியில் ஏராளமான ஹிப்பிகளைப் பார்க்கலாம். அவர்கள் இன்பமாக எளிமையாக வாழ விரும்புகின்றனர்.

இவர்களைப்பற்றி எளிதாகப் பேசி, அவ்வளவு எளிதாகத் தள்ளிவிடவும் முடியாது. அவர்களில் பலர் இரண்டு டாக்டர் பட்டங்கள் பெற்றவர்கள். நம் ஊரில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் வரலாற்றில் வேண்டுமானால் டாக்டர் பட்டம் பெற முடியும். ஆனால், அங்கோ கீழைநாட்டுத் தத்துவத்தில் ஒரு டாக்டர் பட்டமும், ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் ஒரு டாக்டர் பட்டமும் பெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் ஹிப்பியாக எங்கள் இல்லத்திற்கு வந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தவர்; கற்றுமிருந்தார். அவர் நாடாகிய அமெரிக்க நாடோ பொருளாதாரத்தில் எவ்வளவோ முன்னேறி யுள்ள நாடு; அணுகுண்டைக் கண்டுபிடித்த நாடு. ஒரு கோளைவிட்டு நிலாவிற்குத் தாவிச் செல்லும் நாடு. இருந்தாலும் மனம்நிறைவு பெறவில்லை. பாரதி பாடினானே, “பல கற்றும் பல கேட்டும் பயன் ஒன்றும் இல்லையடி முத்துமாரியம்மா” என்ற நிலையில் உள்ள இவர்களைப் பார்க்கும்போது எல்.எஸ்.டி. மாத்திரைதான் நினைவுக்கு வருகிறது. எல்.எஸ்.டி. [எல். எஸ். டி. (L.S.D.) என்பது ஒரு மாத்திரை. அதை விழுங்கினால் பல மணி நேரம் இவ்வுலக நினைவில்லாமல் ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்க முடியும். ஆனால், அது பேராபத்தை விளைவிக்கக் கூடியது. ] மாத்திரை போடுகின்றவர்களும் மார்ஃபியா ஊசி போட்டுக் கொள்பவரும் மட்டமான இன்பம் கருதிச் செய்கின்றார்கள் என்று கருத வேண்டா. நூற்றுக்கு ஒருவர் அப்படி இருக்கலாம். ஆனால், நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் வாழ்க்கையில் அமைதி என்ற ஒன்றைக் காணாமையால் அதனை அடைவதற்கு வழி இதுதான் என்று நினைக்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பலவற்றைக் கண்ட மேலை நாட்டவர் அமைதியை அடைய வழி தெரியாமல் எங்கெல்லாமோ ஓடுகின்றார்கள்.

மனிதனுடைய அறிவின் எல்லையை வளர்த்துக் கொண்டே செல்ல எண்ணுகின்றார்கள்; அறிவை வளர்க்கின்றனர்; பலப் பல புதுப்புதுப் பொருள்கள் தோன்றுகின்றன. அறிவின் பெருக்கம் மட்டும் வளர்ந்து, மனம் வளராத காரணத்தால் அந்த வளர்ச்சி ஹிரோசிமாவில் போய் முடிகிறது. அறிவு வளர்ந்து வளருவதற்கேற்ப மனமும் வளர்ந் திருக்குமேயானால் அது அணுச் சக்தியை அமைதிப் பணிக்கு ஆளாக்கியிருக்கும். உணர்வைப் பற்றிக் கவலைப்படாமல் அறிவை மட்டும் வளர்த்தமையின் அவர்கள் வாழ்வில் ஒரு பெருஞ்சுமையும் அமைதி யின்மையும் காணப்படுகின்றன. எங்காவது, எப்படி யாவது அமைதியைப் பெற மாட்டோமா என்ற மனநிலை, ஏக்கம் அந் நாட்டில் வளர்ந்து வரக் காண்கின்றோம். எனவேதான், இன்று மகரிஷிகளுக்கு அங்கே நல்ல வரவேற்பு. செல்லும் மகரிஷிகளோ நம் நாட்டவர். மனம் வளரவும் அமைதியடையவும் இயமம், நியமம், தியானம் என்ற வழிகளைக் கூறினார்களே, அந்த உண்மையான மகரிஷிகளை இங்கே குறிப்பிடவில்லை. செல்லும் மகரிஷிகட்கே அது தெரிவதில்லை. என்றாலும், அங்கே சென்று மூக்கைப் பிடித்துப் பத்மாசனம் போட்டுவிட்டால் போதும், ஒரு பெரிய மகரிஷி என்ற பெயரைப் பெற்று விடலாம். அந்த அளவிற்கு அவர்களின் ஏக்கம் வளர்ந்துள்ளது; ஆதலின் இங்கிருந்து செல்பவர்களை உயர்வாக எண்ணிப் போற்றுகின்றனர். எலியைப் பிடித்து, பூட்டிய அறையில் விட்டுவிட்டால் எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் தப்பி ஓட முயலுவதைப் போன்று அவர்களின் வாழ்க்கை உள்ளது. பொருள் வளம் என்ற கோட்டைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். விடுதலை பெறும் வேட்கை அதிக மானவுடன் காவி வேட்டி கட்டியவர்களை மகரிஷிகள் என்று எண்ணி அவர்கள் பின்னே ஓடுகின்றனர். அந்த நாடுகளில் அமைதியை நாடி ஓடும் வேட்டை நடைபெறும் அதே நேரத்தில், அதுவும் நம்மை நோக்கி அவர்கள் ஓடிவருவதைக் கண்டும் நம் ஊர்க்காரன் “பக்திமான் கண்டது பிரசாதம்” என்று கேலிக்கூத்து செய்கிறான். ஆம்! இந்தப் பக்திமான் கண்ட பிரசாதத்திற்கு மின்சாரங்கண்ட அந்தப் புத்தி மான் ஓடிவருகிறான். என்றாலும், நம்மூரிலுள்ள பிரமுகர் – பிரசாதம், மின்சாரம் என்ற இரண்டையுமே காணாதவர் – இதனைக் கண்டு நகையாடுகிறார்.

‘அங்கு எல்லாம் உள்ளன’ என்று நம்மில் பலர் நினைக்கின்றனர். நமக்கு மின்சாரம் என்றுகூடச் சொல்லத் தெரியாமல் மிஞ்சாரம் என்போம். ‘மின்சாரம்’ என்று சொல்லத் தெரியாமல் ‘மிஞ்சாரம்’ என்று கூறுகின்ற நம்மூர் விஞ்ஞானி இருக்கிறானே இவன், ‘அந்த நாடுகளில் எல்லாம் வளர்ந்திருக் கின்றன, நம்மிடம் எந்த வளர்ச்சியும் இல்லை’ என்று கதைக்கிறான். ஆனால், உண்மையிலேயே மின்சாரம் கண்டுபிடித்த அந்நாட்டான் அறிவாற் கண்ட அப் புதுமைகள் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருதற்கு வல்லமையற்றன என்றும், அவை தருகின்ற வற்றிற்கு அப்பாற்பட்டும் வாழ்வில் பெற வேண்டியவை உள்ளன என்றும் ஏங்குகின்றான். அணுவைப் பிளந்து புரோட்டான், எலக்ட்ரான், பாசிட்ரான் எல்லாம் கண்டுபிடித்த அவன், இவற்றை யெல்லாம் கண்டபின்னரும் மனத்தில் அமைதி பெறவேண்டுமானால் வாழ்வில் துறவு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றான். எவ்வளவுதான் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பலவற்றைப் பெற்றாலும் அதற்கு மேல் மனத்தில் அமைதி பெற இயலவில்லையே என்ற கவலை, வருத்தம் அவர்களைச் சூழ்ந்து கிடப்பதனைக் காண்கின்றோம்.

கோடீசுவரருடைய பிள்ளைகள் இரண்டு (ஒரு பையனும் ஒரு பெண்ணும்) ஏழைகள் வாழும் இரண்டு குடிசைக்குத் தீ வைத்து வேடிக்கை பார்க்கும் நிலைமையை அங்கு காணுகின்றோம். அப் பிள்ளைகள் நினைத்தால் அழகிய கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தர முடியும். ஏன் அவ்வாறு தீ வைத்தனர், அதற்குரிய மனநிலை என்ன என்று அறியும் நோக்கத்தோடு ‘டைம்’ பத்திரிகை நிருபர் “ஏன் தீ வைத்தீர்கள்” என்று கேட்டபோது “எங்கட்குச் சலிப்பாக இருந்தது (We are bored); எனவே, சலிப்புத் தீர்ந்து ஒரு மாறுபாட்டைக் காணத் தீ வைத்தோம்” என்றனர். அவர்கட்கு வாழ்க்கை பெருஞ் சலிப்பாக உள்ளதாம்! என்னுடைய வீட்டில் இருந்துகொண்டு இதற்கு விளக்கம் காண முயன்றேன். என் மக்கள் மருத்துவத் துறை, விஞ்ஞானத்துறை போன்ற துறைகளில் கற்று வருகின்றனர். அதைதவிர வாழ்வில் வேறு ஒன்றும் இருப்பதாக அவர்கட்குத் தெரிவதில்லை. எனவே, அவர்களிடமும் இந்த போர் (bore) என்ற சொல்லை அடிக்கடி கேட்கின்றேன். இன்று நம் நாட்டிலும் குழந்தைப் பள்ளி முதல் குமரர் சுற்கும் பல்கலைக் கழகம் வரை இச் சொல் பயின்ற சொல்லாக இருக்கக் காணலாம். இந்த நிலை மிகவும் தீய அஞ்சத்தக்க நிலை என்பதனை எல்லோரும் அறிதல் வேண்டும். இன்னும் வளர்ந்தால், இச் சொல் தோன்றும் மனநிலைக்கு அடிப்படையை ஆராயாது விட்டுவிட்டால் எதிர்காலம் குடிசைக்குத் தீயிட்டு மகிழும் மன நிலையைத்தான் கொண்டுவரும்.

வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இல்லாத காரணத்தால் பொருள் தேடுதல் போன்ற சாதாரண சமாசாரங்கள் அவர்களின் வாழ்க்கையின் குறிக் கோள்களாக அமைந்துவிடுகின்றன. அவற்றை அடைந்து விட்டவுடன் வாழ்க்கையே ஒரு பெருந் துளைப்பாகப் போய்ச் சலிப்பு ஏற்பட்டுவிடுகின்றது. ஆகையினால், இந்த நாட்டுக்காரன் “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்” (குறள்) என்று சொன்னான். ஆனால், மேலைநாடுகளில் வாழ்பவர்கள் பெரும் பான்மையினரின் குறிக்கோள் என்ன? பக்கத்து வீட்டுக்காரனைப் போல, முடிந்தால் அவனைவிட அதிகமாக முன்னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோள். நேற்றுவரை ஒன்றும் இல்லாதிருந்த பக்கத்து வீட்டுக் காரன் இன்று லட்சாதிபதியாகி விட்டானே, அவனைப் பார்த்து நீயும் லட்சாதிபதியாகக் கூடாதா. “Look. What are you doing? Why don’t you do like him” என்பது அவர்கள் நாகரிகம். அவர்களின் குறிக்கோள் லட்சாதிபதியாவதுதான். அந்த நிலையை அடைந்த பிறகு வாழ்வில் பெறக் கூடியது வேறு எதுவுமே இல்லையா என்ற சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. காரணம் வாழ்வில் குறிக்கோளற்றுப் போய்விட்டதேயாகும். எதனையாவது ஒன்றைப்பற்றி இரவு பகலாக எண்ணி எண்ணி மறுகுகின்ற மனம் அதனைப் பெற்று விட்டால் அப்புறம் அதனோடு அமைதி அடைந்து விடுவதில்லை; வேறு ஒன்றை நாடுகிறது. மனித மனம் மிகவும் விநோதமானது. இதனை அறிந்து கொள்ளப் பெரிய மனோதத்துவ அறிஞனை நாடிக் கேட்க வேண்டா. நானூறு ஆண்டுகட்கு முன்னர்க் கோவையை அடுத்த பேரூரிலே வாழ்ந்த சாந்தலிங்க சுவாமிகள் இதனை “அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப் பெறாதன விரும்பும் உயிர்கள்” என்று கூறி விளக்கியுள்ளார். மிகவும் இடர்ப்பட்டு ஒரு பொருளைப் பெற்றாலும், பெற்ற பிறகு அதன்மேல் ஆசை அடங்கிவிடுகிறது. ஆகவேதான், பொருளா தாரத் துறையில் இவ்வளவு மேலூர்ந்து சென்றுவிட்ட மேலைநாட்டவர்களால் அதில் இன்பம் காண முடியவில்லை. வாழ்வில் நிறைவு பெறக் கீழை நாட்டாரிடம் ஏதாவது பெற இயலுமா என ஏங்கி நம்மை நாடி வருகின்றனர். இங்கே உள்ள ‘வானளாவிய வீடுகளைக் கட்டிவிட்டதனால் மட்டும் பயனில்லை’ என்பதையும், ‘அத்தகைய வீடுகளைக் கட்டுவதற்கு முன்பும் மனிதன் வாழத்தான் செய்தான்’ என்பதையும், ‘அவை அணுகுண்டினால் அழிக்கப் பட்டாலும் அதற்குப் பின்பும் வாழத்தான் போகிறான்’ என்பதையும் அறிந்து, இறுதியாக ‘மனித வாழ்க்கையின் குறிக்கோள் இந்த இரண்டிலும் இல்லை, இவற்றிற்கு அப்பாற்பட்டது’ என்பதையும் நினைக்கின்றார்கள். இந்த அடிப்படையின் வேறுபாடு மேற்கிலும் கிழக்கிலும் விளங்கக் காண்கின்றோம். இந்த வேறுபாடு ஏதோ புதிதாக வந்தது என்று யாரும் நினைத்துவிட வேண்டா.

மேலைநாட்டாரின் சம்ய வாழ்க்கை, வாழ்க்கை முறை, கல்விக்கொள்கை, அடிப்படையான இயல்பு ஆகிய எல்லாமே இந்த வேறுபாட்டின் அடிப்படையாக அமைந்துவிட்டன. மிகப் பழைய காலத்திலேயே பிளாட்டோவும், அரிட்ஸ்டாடிலும் போட்ட விதை அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய ஒரு வழக்கத்தைக் கொண்டு வந்து விட்டது. அதை எடுத்தாலும் அறிவின் துணைகொண்டு ஆயத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், கீழை நாடுகளான இந்தியாவில் தோன்றிய இந்து, சமண, பௌத்த சமயங்கள், சீனாவில் தோன்றிய கன்பூசியனிசம், அதற்கு அப்பால் தோன்றிய டோயிசம், அதற்கும் அப்பால் ஜப்பானில் தோன்றிய சிண்ட்டோயிசம் ஆகிய அனைத்தும் ஒரே அடிப்படையைக் கொண் டிலங்குவதனைக் காணலாம். ஜப்பான் எங்கே உள்ளது, நாம் எங்கே உள்ளோம்! இந்தக் காலத்தில் காணப்படுவதுபோல் அக்காலத்துப் போக்குவரவு வசதியில்லை; என்றாலும், இவற்றிற்கிடையே அடிப்படை ஒற்றுமையைக் காண முடிகின்றது. மேலை நாட்டாரைப் பொறுத்தமட்டில் இன்று இயேசு நாதருடைய கிறித்தவ சமயத்தர் அதற்கு முன்பு பல தெய்வ வணக்கமும் உடையவர்களாக இருந்தனர். அக்காலம் தொடங்கி இன்றைய வரையில் அந்நாடு அறிவின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்துள்ளது. நடு நாடுகளில் பரவியுள்ள முகம்மதிய சமயத்தைக் கூடக் கீழைநாட்டுச் சமயம் என்று சொல்லிவிட முடியும். ஒரு முறையில் பார்க்கப் போனால் இயேசுவும் கீழை நாட்டவரே ஆவார்.

மா சே துங் எவ்வளவு முயன்றும் சீனர்கள் வாழ்விலிருந்து பெயர்த்தெடுக்க முடியாத ஒன்றாய் விளங்குவது அவர்தம் சமயம். புத்தர் கோவில்களையும், கன்பூசியஸ் கோவில்களையும் இடித்து விட்டால் அவர்களின் சமய நம்பிக்கையை அடியோடு மாற்றி விடலாம் என்று முயன்றார். அதில் அவர் தோற்றுவிட்டதை உணர்ந்து கொள்ள அதிக காலம் ஆகவில்லை. நம்நாட்டில் கூடப் பிள்ளையாரையும், இராமரையும் எடுக்க முனைந்து கையும் வாயும் சலித்து விட்டு விட்டோம். ஆனால், பிள்ளையார் போனாலும், புத்தன் போனாலும் வேறு ஒன்றை அங்கே அமைப்பதால் பெயர் மாறுமே தவிரக் கீழை நாடுகளில் சமய நிலை மாறாது. ஒரு பிள்ளையார் சிலைக்குப் பதிலாக ஞானசம்பந்தன் சிலையை வைப்போம்! அவ்வளவுதான். மனித மனம்பற்றி ஆராய்ந்து கார்லைல் தாம் எழுதிய “வீரரும் வீரர் வழிபாடும்” (“Heroes and Hero Worship”) என்ற நூலில் அழகாகக் குறிப்பிடுகின்றார். ஒன்றைப் பெரிது என்று எண்ணி ஓடுகின்ற மனம் அதனை விட்டுவிட்டால் இன்னொன்றைப் பெரிதெனப் பின்தொடரும் என்பதனைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த அடிப்படையான மன இயல்பினை எவ்வாறு மாற்றுவது?

கிறிஸ்தவ சமயத்தின் முன்னரும் பின்னரும் உள்ள தத்துவக் கொள்கைகளே மேற்கு நாடுகள் இன்றைய நிலையை எய்துதற்குத் துணையாயமைந்தன. எதை எடுத்தாலும், அறிவின் துணைகொண்டு ஆராயத் தொடங்கினார்கள். அந் நாட்டுத் தத்துவக் கொள்கையாளரும் அதற்கு ஏற்றபடியே விளங்கினர். ஹேகல், லார்க், ஹியூம் இப்படி வரிசை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தத்துவக் கொள்கைகளை வளர்க்கத் தொடங்கினார்கள். விஞ்ஞானத்தில் காணப்படும் பல சொற்கள் கிரேக்க மொழியிலும், லத்தீனிலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். பிளாட்டோ காலத்திலிருந்தே விஞ்ஞான அடிப்படையில் தத்துவத்தை ஆராயத் தலைப்பட்டு விட்டார்கள். இந்த மரபில் தோன்றியதுதான் கிறிஸ்தவ சமயம். அதற்கு ஏற்றபடி, ‘கடவுள் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன, இரண்டுக்கும் என்ன தொடர்பு?’-இப்படிப் பட்ட ஆராய்ச்சியே மிகச் சிறந்தது என்ற கருத்தில், கணித அடிப்படையில் ஆராய்ச்சி செய்தனர். அரிஸ்ட்டாடில் காலத்தில் முன்னவர் கண்ட கணித உண்மை மாறவே உலகைப் பற்றிய கருத்தும் முற்றிலும் மாறுபட்டு விட்டது. பிளாட்டோவில் கணித இயலின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட சமயமும் மாற்றத்திற் குள்ளாகியது. அப்போதைய கிறிஸ்தவ சமயம் என்றால், ரோமன் கத்தோலிக்க சமயம் ஒன்றே; புராட்டஸ்டண்ட் பிரிவு அப்போது இல்லை. விஞ்ஞானப் புதுமைகள் தோன்றும்போது அதன் அடிப்படையில் வளரும் சமயமும் மாறுகிறது. அதன்படி பிளாட்டோ காலத்துச் சமயமும் மாற்றத்திற்குள்ளாகியது.

அவர்கள் சமயம் கட்டப்பட்டது விஞ்ஞான அடிப்படைமீதாகும். அவர்களுடைய கணித பூர்வமான சில கொள்கைகள் மாறினவுடன் சமயமும் ஆட்டம் கண்டது. அதற்குத் தோமிசம் என்பது பெயர். அந்தத் தோமிசக் கொள்கையார் அரிஸ்ட்டாடிலின் விஞ்ஞானக் கோட்பாடுகள் மீது சமயத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அது தீர, லாக்கே என்ற தத்துவ ஞானி பேருதவி புரிந்தார். அந்த நாட்டுச் சமயக் கொள்கை வளர்வதற்கு நியூட்டனுடைய உற்ற நண்பராகிய லாக்கே எவ்வளவு பெரிய அற்புதமான காட்சியைக் காணுகிறார்! அவர் காலத்தில்தான் இது விரிவடைகிறது. அதற்கு முன்பு கடவுள் என்பவர் ஆகாயத்தில் இருப்பவர் என்றும் அவருடைய தம் கால்களைப் பூமியின்மீது தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் நினைத்தார்கள். அறிவு பூர்வமாக வாழ்ந்து ஆராயத் தொடங்கினார்கள். மூன்று பொருள்கள் யாரும் இல்லையென்று சொல்ல முடியாதபடி அமைந்துவிடுகின்றன! காணுகின்றவனாகிய நான், காணப்படும் பொருளாகிய இந்த ஒலிவாங்கி, எங்களிடையே இருக்கும் உறவு. காண்பவனாகிய நான், காட்சியாகிய மீடியம் (medium), காணப்படும் பொருளாகிய ஒலிவாங்கி என்ற மூன்றும் உள்ளன; அப்படியானால் பொருளின் இயல்பு என்ன? இதுபற்றிய விரிவான ஆராய்ச்சி நடைபெற்றது.

இந்த நாட்டில் அத்வைத மதத்தின் தந்தையாக உள்ள ஆதிசங்கரர் இந்த ஆராய்ச்சியை எடுத்துக் கொண்டு பொருள்களை ஆராய்தார். இவை அனைத்தும் மித்தை என்று முடித்துவிட்டார். பொருள் என ஒன்றும் கிடையாது. “எல்லாம் பொய் என்றால் சிலர் கண்ணால் பார்க்கிறேன், ஒலியை வாங்குகிறது, வாங்கிப் பெரிதுபடுத்துகிறது! இதை எப்படி நீ மித்தை என்று சொல்லலாம்” என்ற வினாவைச் எழுப்பினர். “ஐயா, பழுதையைப் பாம்பு என்று எண்ணுகின்றவனும் இருக்சுத்தானே செய்கிறான்? கனவில் ஆடுவதாகவும், ஓடுவதாகவும் நினைக்கும் நீங்கள், படுக்கையில் இருந்தே காலை உதைத்துக் கொள்வதில்லையா? இதற்கும் நீ காணும் இப் பொருளுக்கும் வித்தியாசம் இல்லை. இது மாதிரி ஒரு பொருள் உலகில் கிடையாது. பரந்து விரிந்து காணப்படும் இவ்வுலகம் உன் காட்சியளவே தவிர உண்மையில்லை. இது மரம் என்று பார்ப்போமானால் மரமாக இருக்கிறது, அவ்வளவுதான். இதனையே ஆத்ம சக்தியாகிய பிரமம் என்று எண்ணினால் மரம் என்ற காட்சி போய்விடுகிறது. அதுவே பிரமம் ஆகிவிடுகிறது”. அதை இந்த நாட்டில் பலரும் ஓரளவுக்கு ஒத்துக் கொண்டார்கள். பெரிய செல்வர் வீட்டுக்குப் போகிறோம். நாய் இருக்கிறது. ‘ஓ! நாய்’ என்று அஞ்சி அங்கு நின்றுவிட்டோம். கொஞ்ச நேரம் நின்று பார்க்கிறோம். அது குரைக்கவுமில்லை, வாலைக் குழைக்கவுமில்லை. மூச்சு விடுவதாகவும் தெரியவில்லை. பின்னர் முடிவுக்கு வருகிறோம்: ஓ ‘இது கல்லால் செய்யப்பட்டது’ என்ற முடிவுக்கு வருகிறோம். முதலிலே பார்த்தபோது கல் அங்கே இல்லை. கல்லென்று தெரிந்த பிறகு நாய் இல்லை. இது நமது நாட்டில் சாதாரணப் பழமொழியாக வழங்கி வருகிறது. “நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்”. திருமூலர் திருமந்திரத்தில் “மரத்தில் மறைந்தது மாமத யானை, மரத்தை மறைத்தது மாமத யானை” என்று கூறுகிறார். கோவிலில் உள்ள யானை வாகனத்தைப் பார்க்கின்ற போது யானையாகத் தெரியவில்லை. யானை என்ற காட்சியைப் பார்க்கும்போது மரம் தெரியவில்லை. இந்த அழகான எளிய உதாரணத்தைச் சொல்லிப் பெரிய உண்மையை விளக்குகின்றார்.

பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் பரத்தை
மறைத்தது பார் முதல் பூதம்

இவ்வளவு விஸ்தாரமாக விரிந்து நிற்கின்ற பொருள்கள், இவைகளின் அடிப்படையில் இருக்கின்ற கடவுட் பொருளை மறைத்துவிட்டன. ‘இது மைக், இது பேப்பர், இது மேஜை’ என்று தனித்தனியே வேறுபடுத்திச் சொல்கிறேன். இவை அனைத்தின் அடிப்படையில் இருக்கின்ற மூலப் பொருளாகிய கடவுட் பொருள் மறைந்துவிடுகின்றது; ஞானியி னுடைய பார்வையோ மாறிவிடுகின்றது. ‘இது என்ன என்று கேட்டால் ‘பிரமம்’ என்பான். அது ? அதுவும் பிரமம். எல்லாவற்றையும் பிரமமாகவே காணுகின்றான். எல்லாம் பிரமமாகக் காட்சியளிக்கும் போது வேறுபாடு மறைந்து விடுகின்றது.

இந்த உண்மையை இந்த நாட்டுக்காரர் எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாகப் பேசினார்கள். இந்த உண்மையை நியூட்டன் காலத்தில் லாக்கே என்பவர் ஆராயத் தொடங்கினார். ஆராயத் தொடங்கியவர் காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்ற மூன்று பொருளைக் கண்டு, ஓர் அற்புதமான முடிவுக்கு வந்தார். அவர் நாட்டின் வளர்ச்சியே அதில் அடங்கிவிட்டது. இது என்ன? மைக்! இதன் நிறம் என்ன? வெண்மை. வெண்மை என்ற ஒன்றே இல்லை. மைக் என்றோ, வெண்மை நிறம் என்ற ஒன்றோ இல்லை என்றார் லாக்கே. ‘எப்படி? பார்க்கிறேன். உணர்கிறேன், அனுபவிக்கிறேன் எப்படி இவற்றை இல்லை என்று சொல்ல முடியும் என்று கேட்டால், அவர் சொல்வார் “அப்பா, உன் கண்ணாகிய புலன் பட்ட பிறகு அதற்கு இந்த வெண்மை நிறம் தோன்றிற்று. ஒரு நாய் இதனைக் கண்டு இது வெண்மை என்று நினைக்கிறதா, இல்லையே! இதனை மைக் என்று நினைக்கவில்லை. ஆகவே, இதற்கென்று தனியே ஓர் இயல்பு கிடையாது. காண்பவனுடைய மனோ நிலைக்கு ஏற்ப இதற்கு ஒரு வடிவு, நிறம், பண்பு ஆகியன ஏற்படுகின்றன என்றார். சங்கரருடைய கொள்கையோடு இது மிகவும் தொடர் புடையது. பொருளுக்கு என்று தனி இலக்கணம் இல்லை. உன் மனத்தில் பட்டவுடன் சில இலக்கணங்கள் உண்டாகின்றன; அவ்வளவுதான். இந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் அந்த நாட்டுச் சமயம் வளர்ந்தது.

பிறகு விஞ்ஞான அடிப்படைகள் மாறத் தொடங்கின. மாற்றத்தில் பழமை அடிபட்டவுடன் விஞ்ஞான அடிப்படையில் கட்டப்பட்ட சமயமும் மாறுகிறது. அந்தக் கொள்கைக்கு அசைவு என்றால் சமயத்திற்கும் அசைவுதானே? ஆகவே, பிளாட்டோ காணாத அறிவின் அடிப்படையில் எழுந்த தோமியக் கிறிஸ்தவ சமயம் அரிஸ்டாட்டிலின் அடிப்படை மாறி, பிறகு லாக்கேயின் அடிப்படையும் மாறி இவ்வாறு பெரு மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டே வந்து விட்டது. இன்றைக்கும் அவர்கள் சமயத்தில் உள்ள ஒரு பெரிய பிரச்சினை நாளாவட்டத்தில் காணுகிற விஞ்ஞானப் புதுமைகளோடு சேர்ந்து வைத்து வாழ்வைக் காண வேண்டும் என்பதாகும்.

ஒப்புமைக் கொள்கை கண்டு ஜெனரல் தியரிக்குப் (General Theory of Relativity) பாடுபட்ட ஐன்ஸ்டீன் என்ற அந்தப் பெருமகன் அதனோடு திருப்தி அடையவில்லை. அணு முதல் அண்டம் வரை ஒரே சட்டத்தின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். ஐன்ஸ்டீனின் விஞ்ஞானத்துக்கு மட்டுமல்ல, அந்த நாட்டிலிருக்கும் சமயவாதிக்கும் அதே கொள்கைதான். மேலை நாட்டவர் மக்கள் வாழ்க்கை, விஞ்ஞான நுண்மைகள், வாழ்க்கை முன்னேற்றம் பொருளாதாரச் சிறப்புமுறை இத்தனையையும் சேர்த்து ஒரே தத்துவத்தில் அடக்க வேண்டும் என்ற முயற்சி உடையவர்கள். இதனால்தான் அவர்களின் சமயம் நாளுக்கு நாள், நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வந்தது. ஒரே கிறிஸ்தவ சமயம்தான் எத்தனை மாறுதலுக்கு ஆளாகியிருக்கிறது! வேறு வேறு நாடுகளுக்கு இடையில் ஏசுவினுடைய சமயம் எத்துணை மாறுதல்களுடன் இருக்கிறது! ஏசுவின் ஒரே போதனையைக் கொண்டு இத்தனை வழிபாடு முறைகள், சமயங்கள் தோன்றக்கூடுமா? விஞ்ஞான அடிப்படையில் தத்துவத்தைக் கட்டியதால் விஞ்ஞானம் ஆட்டம் காணும்போது புதிய தத்துவத்தைக் கற்பிக்கத் தொடங்குகின்றனர். அது சரியா, தவறா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கப் போவதில்லை. மேற்கே உள்ள நாகரிகம் வளர்வது இந்த அடிப்படையில்தான் என்ற அளவில் விட்டு விடுகின்றேன்.

இனி, கீழை நாடுகளில் பார்ப்போமேயானால் முற்றிலும் மாறுபட்ட ஓர் அடிப்படையைக் காண முடியும். புத்தர் என்ன சொன்னார்! “இது ஒலிவாங்கி, அதைப்பற்றி ஆராய வேண்டுமா? உனக்கு என்ன கவலை?” என்று கேட்கிறார். ‘உனக்கு என்ன தேவை? நீ பேசும் பேச்சைப் பெரிதுபடுத்த வேண்டும். அவ்வளவுதானே? அதற்கு அது உபயோகப்படுகிறது. அவ்வளவுதான்! இருக்கும்போது அதனைப் பயன் படுத்திக்கொள். இது கெட்டுவிட்டால் சரி செய்ய வேண்டுமே என்று கவலைப்படாதே. போனால் போகிறது என்று விட்டுவிடு’ என்றார். கவலையில் தோய்ந்து காலத்தைப் போக்காதே. இந்த உபதேசம் நுண்மையான கருத்து. இதனைப் புரிந்து கொண்டால் தான் மேற்கும் கிழக்கும் எவ்வாறு மாறுபடுகின்றன என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலைநாட்டான் கீழ்வருமாறு கருதினான்; “என்னுடைய சமயத்தைப் பரப்ப ஒலிவாங்கி பயன் படுகிறது. என்னுடைய சமயம் அறிவின் அடிப்படையில் கட்டப்பட்டது. இந்த ஒலிவாங்கி என்ற பொருளில் கடவுளின் பெருமையை நான் எடுத்துச் சொல்கிறேன். அறிவின் துணைகொண்டு இந்த ஒலி வாங்கியைக் காணுமாறு செய்தவனே கடவுள். ஆதலின் இதனை நான் ஆராய வேண்டும் என்று கருதிக் கருவி ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத் தினேன்.” இந்த நாட்டுக்காரன் என்ன எண்ணினான் என்றால், “ஒலிவாங்கி வரும் முன்பும் மனிதன் பேசிக் கொண்டுதான் இருந்தான், இல்லாமல் போய் இருந்தான், இல்லாமல் விட்டாலும் மனிதன் பேசத்தான் போகிறான், இடையில் வந்தது இது. எதற்காக இது பற்றிய ஆராய்ச்சியில் இவ்வளவு கருத்தூன்றி நிற்க வேண்டும்” என்பதேயாகும். இது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. எந்தப் பொருளையும் ஏற்கும் பொழுது அதனுடைய இயல்புகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் மனிதனுக்குக் கவலையே வருவதில்லை.

எந்த ஒரு பொருளையும் கீழை நாட்டான் முன்னும் பின்னும் தொடர்பில்லாத ஒன்றாகக் காணவில்லை. மேலை நாட்டுக்காரன் பொருள்களைத் தொடர்பற்றவையாகக் காணுகின்றான். தொடர் பில்லாத ஒன்றாகக் காண்பதால் அவை பற்றிய ஆராய்ச்சி நிகழ்கிறது. இது எப்படி வாழ்க்கைக்குப் பயன்படும்?’ ‘தண்ணீரில் எப்படி நீர்க்குமிழி தோன்றித் தோன்றி மறைந்துவிடுகிறதோ, அப்படித் தான் முன்னேற்றம் என்ற பெயரினால் குறிக்கப்படுபவை அவற்றைப்பற்றி மிகுதியாகக் கவலைப்படத் தேவையில்லை. இவையெல்லாம் இல்லாத காலத்திலும் மனிதன் வாழத்தான் செய்தான். இவை ஒரு காலத்தில் மறைந்தபோதும் வாழத்தான் போகின்றான். எக் காலத்திலும் உலகம் என்பது வேறு, நீ வேறு. என்றுமே நீயும் உலகமும் ஒன்றாக ஆகப் போவதில்லை. அமைதியாக இருந்துகொண்டு தியானம் செய்கின்றார்களே (contemplation), அதில் பெறுகின்ற இன்பத்தை வேறு எதிலும் பெற முடியாது.” இதுதான் புத்ததேவன் உபதேசத்தின் அடிப்படை; கன்பூசியசின் உபதேசத்தின் அடிப்படை. இரண்டு பேர் மட்டுமே இவ்விதம் எண்ணினர் என்று நினைக்க வேண்டா. பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் ஐன்ஸ்டீனைப் பத்திரிகையாளர் அணுகி, “உங்கள் வாழ்க்கையில் மிகவும் பெரிதாகக் கருதுவது எதனை?” என்று கேட்டனர். அவர் “மிகவும் அழகான இரவு நேரத்தில் வெட்ட வெளியில் நின்று நிர்மலமான ஆகாயத்தைப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்ப்பதுதான் மிகப் பெரிய இன்பம்” என்றார். மிகப் பெரிதாக அவர் கருதியதும் அதுதான்.

இனி, மற்றொரு விஞ்ஞானி ஆஸ்போர்ன் (Osborne). இவருக்கு ஏதாவது புதியதாகக் கண்டு பிடித்துவிட்டால் மண்டை கனத்தது போலத் தோன்றுமாம். அப்போது வெளியே போவாராம். வானத்தை அண்ணாந்து பார்ப்பாராம். பால்வெளி (Milkyway) அவர்தம் பார்வையில் படுமாம். பால்வெளியைத் தியானம் செய்வாராம். அந்தப் பால் வெளியையும் விழுங்கக்கூடிய பேரண்டங்கள் உண்டு. அதனை எண்ணிப் பார்ப்பாராம். அதில் இந்தப் பால் வெளி சிறிய ஒரு பகுதி என்று தோன்றுமாம். அப்பால் வெளியில் நமது சூரிய மண்டலம் ஒரு சிறிய துகள் என்று நினைப்பாராம். சூரிய மண்டலத்தில் நமது பூமி மிகச் சிறியது என்று எண்ணுவாராம். அப்பூமியில் நமது நாடு மிகச்சிறியது என்று எண்ணுவாராம். அந் நாட்டில் நம் ஊர் மிகவும் சிறியது என்றும், அதிலும் தமது வீடு மிகவும் சிறியது என்றும், அந்த வீட்டிலும் தான் மிகவும் சிறியன் என்றும் எண்ணுவாராம். “சே! என் அகங்காரம் அழிந்தது; இனி உள்ளே போகலாம்” என்று வீட்டினுள் போய்விடுவாராம். ஆஸ்போனும், ஐன்ஸ்டீனும் விஞ்ஞானிகள்!

இந்த நாட்டில் சிலர், ‘பக்திமான் கண்டது பிரசாதம்’ என்று கூறுகிறார்களே அவனை நோக்கித்தான் ‘மின்சாரம் கண்ட விஞ்ஞானியும்’ வருகிறான் என்பதனை நினைவுபடுத்து கின்றேன். ஆகவேதான், இவர்கள் இந்தத் தியான முறையைப் பெரிதும் போற்றினர். பெரிய தொலைநோக்கியோ மைக்கிராஸ்கோப்போ, ஒன்றுமில்லாத காலத்திலேயே உட்கார்ந்த இடத்திலிருந்தே பலப்பல பெரும்பெரும் விஞ்ஞான உண்மைகளைக் கண்டு கூறிவிட்டுப் போயிருந்தார்கள் இந் நாட்டவர்கள். இவர்கள் பேசிவிட்டுப் போன புதுமையிலிருந்தே வெறும் தியான மூலம் எவ்வளவு காரியங்களைச் சாதிக்க முடியும் என்பது தெரியவருகிறது. மேலைநாட்டு விஞ்ஞானிகளும் இதே முறையில்தான் கொள்கைகள் சிலவற்றை வகுத்துக் கொடுக்கிறார்கள்.

நியூட்டன் கண்டுபிடித்த இயக்க விதிகள் மூன்றினையும் சோதனை செய்து கண்டறிந்தார்கள். நியூட்டனோ எனில் அவற்றைக் கொள்கையளவிலே கண்டார். விஞ்ஞானமும் அப்படித்தான். ஆழ்ந்த சிந்தனை அல்லது தியானத்தின் மூலமாகத்தான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுகிறது. விஞ்ஞானி யாகட்டும், ஞானியாகட்டும் மனத்தை ஒருமுகப் படுத்தி ஒருமுகப்படுத்திப் பொருளை ஆராயத் தொடங்கியவுடன் உண்மைகள் பளிச்சிடுகின்றன. காகிதத்தையும், பென்சிலையும் வைத்துக் கொண்டு தான் புளூட்டோ என்ற கோள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் மறைந்து உள்ளது என்ற உண்மையை உணர்ந்து கூறினார் விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டீன். அவர் ஆகாயத்தை அண்ணாந்து கூடப் பார்த்திருக்க மாட்டார். எல்லாவற்றையும் காகிதத்திலேயே எழுதிப் பார்த்தார். ஆகவே மனத்தை ஒருமுகப் படுத்தி அறிவை அதன் வழியில் செலுத்துவதினால் காணக் கூடிய பல புதுமைகளை இன்னுஞ் சிலர் மனத்தைப் பலமுகப்படுத்திக் கருவிகளின் உதவியினால் காணுகின்றார்கள். ஆக, மேனாட்டு விஞ்ஞானிகள் பலரும் கருவிகள் மூலம் காண்பதைப் பெரிதாக எண்ணி நம்பிக்கை வைத்தார்கள். இந்நாட்டு ஞானிகள் தியானத்தில் பெரிதாக நம்பிக்கை வைத்தார்கள். மேலைநாட்டார் விஞ்ஞானப் புதுமைகளில் நம்பிக்கை வைத்ததால் அந்த அடிப்படையில் தோன்றிய வாழ்வு முறையும் மாறத் தொடங்கி விட்டது.

ஹியூ டால்ட்டன் உடைக்க முடியாதது என்று தானே “ஆட்டம்” (atom உடைக்க முடியாதது) என்று பெயர் வைத்தார். ‘ஆட்டம்’ என்ற அந்த நிலை மாறி ‘உடைக்கக் கூடியது என்ற நிலை வந்து, அந்த அணுவிலிருந்து எலக்ட்ரான், புரோட்டான், பாசிட்ரான், மீசான் முதலிய பல சக்திகள் வெளி வந்து கொண்டே உள்ளன என்றாலும், அறிவின் அடிப் படையிலே செல்லும் அவர்கள் முன்னர் இதனைத் தவறாகக் கருதியதற்காக வெட்கப்படுவதில்லை. அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை தெரியத் தெரிய பழைய கருத்துக்கள் மாறிக் கொண்டே வருகின்றன. இந்த நாட்டுக்காரர்கள் இந்த விஞ்ஞான அடிப்படையில் வாழ்வும் சமயமும் கட்டப்பட்டால் விஞ்ஞானம் மாறும் பொழுதெல்லாம் இது மாறுகின்ற நிலைமை ஏற்படும் என்று கருதினார்கள். எனவே, அது வேண்டாம் என்று விட்டு விட்டனர். மனிதனுடைய அறிவை விட்டு அவனுடைய உணர்வு உலகம் என்ற ஒன்று இருக்கின்றதல்லவா, அதற்கு ஒரு பொதுத் தன்மை உண்டு. எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் மாறாத பொது இயல்புடையது உணர்வு உலகம். அந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்கள் வாழ்வை வளர்த்துவிட்டார்கள். ஆகையினால்தான் கீழை நாட்டில் தோன்றிய வாழ்வு முழுவதற்கும் அனுபவம் (experience) அடிப்படையாக உள்ளது. “Experience” என்று தத்துவ ஞானிகள் சொல்லும் சொல்லுக்கு அனுபவம் என்பது அவ்வளவு சரியான தமிழாக்கம் ஆகாது. ஆனால், எனக்கு வேறு சொல் தெரியவில்லை. எனவே, இதனைப் பயன்படுத்துகிறேன். சமயம் என்பது அனுபவித்து உணர வேண்டியதே தவிர, அறிவினால் ஆராய்ந்து பார்க்கக் கூடியதன்று. (Religion is something to be experienced) அதைச் சோதனைக் குழாயில் போட்டு குலுக்கிப் பயனில்லை; அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

இதிலிருந்து மற்றொரு புதுமையையும் நாம் காண முடியும். மேலைநாடுகட்குச் சென்றால் அவர்கள் பிள்ளைகட்கு நம்மைப் பற்றி அறிமுகப் படுத்தும் வேடிக்கையைப் பார்க்கலாம். “நீங்கள் இந்தியாவிற்குச் சென்றால், இரண்டு முக்கியமான செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கு யாராவது உங்களை விருந்துக்கு அழைத்தால் அதனை உண்மையாக எண்ணிவிடாதீர்கள். இரண்டாவது, நீ எந்தச் சாமானை எடுத்தாலும் சரி, பேரம் பேசி வாங்க அறிந்துகொள்” என்று சொல்லிக் கொடுப்பதனைக் கண்டேன். எவ்வாறு பேரம் பேசுவது என்பதனைச் செய்முறையாகச் செய்து காட்டியதனையும் கண்டேன். நம்மைப் பற்றிய இந்த இரண்டு எண்ணங்கள் எவ்வாறு அவர்கட்கு ஏற்பட்டன என்று என்னை எண்ணத் தூண்டியது. இந்த இரண்டும் நம் நாட்டில் நிகழ்வது உண்மைதான். ஏன் என்று புரியாமல் அவதிப்பட்டேன். நார்த்ரோப் (Northrope) எழுதிய “கிழக்கும் மேற்கும்” (East and West) என்ற நூலைப் படிக்கும்போதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது. அவர்தாம் இதற்கு விளக்கம் சொன்னார்: “இந்திய நாட்டான் உண்மை (Truth) என்று சொல்லுவதற்கும் மெய்ம்மை (Fact) என்று கூறுவதற்கும் என்றுமுள்ளது (Eternal) என்று பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. மேனாட்டானாகிய நீ எதனை உண்மை என்று கூறுகிறாயெனில் அன்றாடக் காட்சிகளையும் உண்மை என்கிறாய், எதனை நன்மை (Good) என்று எண்ணுகிறாயோ அதுதான் நன்மை. மிகப்பெரிய உண்மை இது. அதனால் மேனாட்டார் மதமாற்றம் (prosilitisation) செய்கிறார்கள்” என்று நார்த்ரோப் எழுதுகிறார். பிற மதங்களிலிருக்கின்றவர்கள் மோட்சம் போக முடியாது; தம்முடைய மதத்திற்கு வந்தால்தால் அது முடியும் என்பதால், நம்மையெல்லாம் தங்கள் வழிக்கு இழுத்துத் தம் சமயத்தைப் போதிக்கின்றனர்.

இந்த நாட்டுக்காரன் நன்மை என்பது ஓர் ஒப்புச்சொல் (relative term) என்ற முடிவுக்கு வந்து விட்டான். எனக்கு நல்லது என்பது மற்றொருவர்க்கும் நல்லதாக இருத்தல்வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மிக உயர்ந்தது என்று நான் எண்ணுவதனைப் பிறரும் மிக உயர்ந்ததாகக் கொள்ள வேண்டும் என்ற தேவையே இல்லை. தீர்க்கதரிசிகளை மட்டும் நம்பி வளர்ந்த சமயங்கள், அதாவது கிறிஸ்தவ சமயமும் இஸ்லாமிய சமயமும் மதமாற்றத்தை நம்புகின்றன. உண்மை என்பதனைத் தாங்கள் கண்டதாகவும், தங்களுடைய தலைவர்களாக இருக்கின்ற தீர்க்கதரிசிகள் உண்மை இதுதான் என்று அறுதியிட்டுக் கூறி விட்டதாகவும், இந்த உண்மையைத் தவிர வேறு ஒன்றும் உண்மையென உலகில் இருக்க முடியாது என்பதாகவும் நம்புகின்ற காரணத்தால் ஒருவன் நல்ல நிலையை அடையவேண்டுமானால் தாங்கள் பின்பற்றுகின்ற சமயத்தை அவனும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுகின்றனர். பழைய கன்பூசியனிசம், டோயிசம் ஆகியவை இதனை ஒத்துக்கொள்ளவே இல்லை.

உண்மை என்பது பல்வேறு கிளைகளை உடைய ஒரு பொருள். எந்தக் கோணத்தில் நீ நின்று பார்க்கிறாயோ அந்தக் கோணத்திற்கு ஏற்ற ஒளி உனக்குக் கிடைக்கிறது. எதிரில் உள்ள சோதரியார் அணிந்திருப்பது ஒரே வைரக் கம்மல்தான். ஒளி எக் கோணத்தில் பாய்கிறதோ அதற்கேற்றாற்போல் ஒளிவீச்சு ஏற்பட்டு நிறமாலை தோன்றுகிறது. எந்தக் கோணத்தில் நின்று அக்கல்லைக் காணுகின்றோமோ அதற்கேற்றாற்போல் நீலநிறமும், ஆரஞ்சு ஒளியும், சிவப்பு வண்ணமும் தோன்றும். எனவே வைரத்தின் நிறம் நீலம்தான், அல்லது ஆரஞ்சுதான் என்றோ, சிவப்புத்தான் என்றோ கூறிவிட முடியாது. அதுபோல உண்மை என்ற அந்தக் கண்காணாப் பொருள் அவனவன் நிற்கின்ற நிலைமைக்கு ஏற்பக் காட்சி தருகின்றது. ‘பிறர் கூறுவது உண்மை இல்லை, நான் கூறும் ஒன்றே உண்மை,எனவே அவரை விட்டு விட்டு என்னிடம் வா’ என்று கூறும் கோட்பாடு கீழை நாட்டிலில்லை. இதனை மேலை நாட்டில்தான் காண முடியும். இந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் தான் இந்நாடுகளில் தோன்றிய சமயங்கள் ஏன் மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை என்பது தெரியும். எல்லாச் சமயத்தில் இருப்பவர்களும் உண்மையை வெவ்வேறு கோணத்திலிருந்து பார்ப்பதால் ஒருவரை ஒருவர் உயர்த்தியோ இழித்தோ காண வேண்டிய தில்லை.

இந்த ஒப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் கீழ்நாட்டுச் சமயவாதிகளை மேனாட்டார் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு பாதிரியார் சீனாவுக்குப் போனாராம். பண்புடைய சீனர்கள் சிலரை மத மாற்றம் செய்தாராம். மதம் மாறிய அச் சீனர்கள் கிறிஸ்தவ சமயத்திலே பக்தியுள்ளவர்களாக, நம்பிக்கை யுள்ளவர்களாக ஆனார்களாம். அவர் “பிறருக்காக உன் வாழ்வின் நலங்களைத் தியாகம் பண்ண வேண்டும். இதுதான் கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை” என்று சொல்லிக் கொடுத்தாராம். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், தேவை ஏற்பட்டபொழுது அவர்கள் அதனை மறந்து விட்டார்களாம். எனவே, அந்தப் பாதிரியார் எழுதுகின்றார் “கிழக்கே இருக்கின்ற அத்துணைப்பேரும் யோக்கியதை இல்லாதவர்கள்; நம்பிக்கைக்குத் தகுதியில்லாதவர்கள்; கொள்கை இல்லாதவர்கள். ஆகவே இந்த நாட்டைக் காப்பாற்றவே முடியாது”. இதனைக் கண்ட நார்த்ரோப் அவர்கள் “தவறு அவர்களிடத்திலே இல்லை. பாதிரியாகிய உம்மிடத்திலேதான் தவறு உள்ளது. உங்களுடைய நம்பிக்கையின் அடிப்படை வேறு” என்று கூறியதுடன், மேலும் தொடர்ந்து கூறுகிறார்.

“இன்று மாலை எம் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு வாருங்கள்” என்று நான் சொல்லு கின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். “இன்று மாலை” என்ற சொல்லே ஒப்புச்சொல்.”சாப்பாடு” என்பதும் “வர வேண்டும்” என்பதும் ஒப்புச் சொற்களே. நான் அவரை அழைத்த சமயம் நிலவிய சூழ்நிலையில் நான் சொன்ன சொற்கள் அனைத்தும் உண்மையே. அதில் ஐயமே இல்லை! நேரம் ஆக ஆகச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சூழ்நிலை மாறும்போது இந்த அழைப்பே பொருளற்றதாகவும் ஆகிவிடலாம். இந்தக் கருத்தை ஆழ்ந்து பலமுறை எண்ணினால்தான் தெளிவாக இதனை விளங்கிக் கொள்ள முடியும். இது நமக்கு இயல்பாக உள்ள பழக்கம். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுதல் என்பது சொல்லப்பட்ட பொழுது உள்ள சூழ்நிலை தொடர்ந்து நிலவினால்தான். வெள்ளையர்களிடம் அத்தகைய கருத்து இல்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் சொல்லிய சொல் சொல்லப்படும் பொழுது இருந்த சூழ்நிலை மாறிவிட்டாலும் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே, சூழ்நிலை மாற்றத்தால் நாம் கொண்டுள்ள கொள்கை அவர்கட்குப் புதுமையாக உள்ளது. மேலை நாட்டு வாழ்க்கையில் நாமும் தோய்ந்து விட்டோம். நான் மேலே சொன்ன கருத்தைக் கேட்கும் போது நமக்கே இது புதுமையாக இருக்கும்; தவறு போலத் தோன்றும். மேலை நாட்டவருடன் பழகிப் பழகி இக்கருத்தின் அடிப்படை உண்மை நமக்கு விளங்காமல் போய்விடுகின்றது.

நன்மை என்று ஒன்றைச் சொல்கிறோமே, எது நன்மை? எனக்கு நன்மையாக இருப்பது பிறர் ஒருவருக்கு நன்மையாக இருக்கும் என்று கூற முடியாது. நண்பர் சளியால் அவதிப்படும்போது, “சகோதரா! இன்ன இருமல் மருந்து சாப்பிடுங்கள், உடனே சளி தீர்ந்துவிடும்” என்கின்றேன். ஏன்? எனக்கு அதனால் நலன் ஏற்பட்டது என்பதனால் அவருக்கும் நன்மை விளையும் என்ற உறுதி அங்கே உள்ளது. ஆனால், அதே மருந்து அவருக்குத் தீமையும் செய்தல் கூடும். இதுபோல எல்லார்க்கும் நன்மை என்று உலகில் எதுவுமே இல்லை. உடலுக்குமட்டுமன்று; ஆன்மாவிற்கும் அவரவர் நிலைமைக்கும் பக்குவத்திற்கும் ஏற்றாற் போல நன்மையும் தீமையும் அமைகின்றன. இதனை நம்பிய காரணத்தால்தான் கீழை நாட்டவர் விக்கிரக வழிபாட்டிலிருந்து தியானம் வரை பல்வேறு படிகளையும், நிலைகளையும் அமைத்தார்கள். அவரவர் மனப் பக்குவத்திற்கேற்ப இப்பல படிகளும் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கவையாகும்.

உபநிடத ஆசிரியரை அணுகி ஒரு சீடன் ‘ஐயா! நான் பிரமத்தைக் காண வேண்டுமே” என்று கேட்டான்.”அப்படியா வாழ்வில் எது முக்கியம் என்று நீ கூறுகின்றாய்?” என ஆசிரியர் வினவ, “ஐயா! சோறு தான் வாழ்வில் முக்கியம்” என்றான் சீடன். “போதுமே! அன்னம்தான் பிரமம்” என்று கூறி அனுப்பினார். சில நாள் சென்றன. சீடன் வந்தான். “ஐயா! உடல் பெருத்ததே தவிர உணர்வு தோன்ற வில்லையே, பிரமத்தைக் கண்டேனில்லையே” என்றான். “உனக்குச் சோறு முக்கியம் என்றால் அதுவே பிரமம் என்றேன். அதைவிட முக்கியம் எது என்று கருதுகிறாய்” எனப் புதுவினை எழுப்பினார் ஆசிரியர். “ஐயா! சோறுகூட இல்லாமல் இருந்து விடலாம். தண்ணீர் இல்லாமல் இருத்தல் இயலாது” என்றான் சீடன். “சரி,ஜலம் பிரமம்” என்றார் ஆசிரியர். இப்படியே பல முறை மாறி மாறி வந்து சென்று இறுதியாகச் சீடன் ஆசிரியரிடம் வந்தான். “ஐயா! இவைகளால் என்னால் பிரமத்தைக் காண முடியவில்லையே, வேறு எவ்வாறு பிரமத்தைக் காண்பேன்?” என இரங்கினான். “அப்படியா! பிரமம் எது என்ற உன் வினாவிற்கு ‘நேதி’ (இது அன்று) என்ற விடையைத்தான் கூற முடியும்” என்றார். நேதி என்ற சொல்லுக்கு இதுவன்று என்பது பொருள். ‘இது பிரமமா?’ என்ற வினவினால் ‘ஆம்’ என்ற விடை வரும். வினாவைச் சற்று மாற்றிப் “பிரம்மம் இதுவா?” என்றால் ‘இது அன்று’ என்ற விடைதான் வரும். இரண்டு வினாக்களும் ஒன்றுபோல இருப்பினும் வேறுபாடுடையன. “இது பிரம்மா” என்றபோது எங்கேயும் நிறைந்துள்ள பரம்பொருள் இங்கேயும் இருப்பதனால் “ஆம்” என்ற பதில் கிடைக்கிறது. ‘பிரமம் இதுவா?’ என்று கேட்கும்போது ‘ஆம்’ என்று விடை கூறினால் இது மட்டும் பிரமம்; பிற இல்லை என்று ஆகிவிடும். ஆகையால்தான் பிரமம் இதுவா என்ற இரண்டாவது வினாவிற்கு ‘இது அல்ல’ என்ற விடை பொருத்தமுடையதாய் உள்ளது. இதனை “நேதி” என்று கூறுகின்றனர்.

பிள்ளையார் வைப்பதும், கொழுக்கட்டை படைப்பதும் ஒரு நிலை. பாரதி பாடிய முறையில் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா, உன்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா; தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா; உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று எங்கும் நிறைந்திருக்கின்ற பரம் பொருளைக் கண்டு உணர்ந்து அனுபவிப்பது மற்றொரு நிலை. அதற்குப் பிரமம் என்றோ சத்தியம் என்றோ இயற்கை என்றோ எப் பெயரையாவது இடுங்கள். அதுபற்றிக் கவலை இல்லை! ஆனால், பாரதி பாடிய பாட்டின் கருப்பொருளாக உள்ள கருத்து யாதெனில், எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டு ஒன்றின் பல்வேறு வடிவங்களாகப் பார்க்கும் மனநிலை – இதுதான் கீழைநாட்டுச் சமயம். இச் சமயக் கொள்கை விஞ்ஞானத்தினை அதனோடு தொடர்பு படுத்தவே இல்லை. அப்படியானால் விஞ்ஞானம் வேண்டாவா?

விஞ்ஞானமும் விஞ்ஞானத்தின் பயன்களும் வேண்டும். மைக் இருந்தால் பேச, பிறர் கேட்க வசதியாக இருக்கும். மைக் வேண்டும். மைக் இல்லை யென்றாலும் பேசத்தான் வேண்டும். மைக் இருந்தால் தான் பேசுவது, பாடுவது என்றால் அது பேச்சுக்கோ பாட்டுக்கோ மதிப்புத் தராத நிலைமை. ஆகவே, இந்த நாட்டுக்காரன் உலகத்தில் அறிவை வளர்த்து அதனால் பெறுகின்ற பயன்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அப் பயன்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்காக ஏமாந்து ஏங்கி, அதனால் வாழ்வும், வாழ்வின் பயனும் இல்லாமற் போய்விடக் கூடாது என்றும் எண்ணினான். வாழ்க்கை என்பது வாழ்பவன் மனத்தில் இருக்கிறதே தவிர அறிவின் வளர்ச்சியில் இல்லை என்றான். ஆகவே, இவன் வளர்ச்சி, உணர்வின் துணைகொண்டு வளர்வது. அறிவின் பயனால் விளைந்த விளைவு களைப் பயன்படுத்திக் கொண்டு அதே சமயத்தில் உணர்வின் அடிப்படையில் வளர வேண்டும் என்று வாழ்க்கையைப் பற்றி இவன் எண்ணினான். எனவே தான், அறிவின் துணைகொண்டு வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சி உடைக்க முடியாதது என்ற நம்பிக்கையூட்டி ஆட்டம்’ என்று பெயரிட்டுப் பின்னர் அதனையே உடைக்க முடியும் என்ற உண்மையை உணர்த்தி, உடைத்துப் பல பொருள்களைப் பெறும் காட்சியை நல்கியபோதும் உணர்வின் துணைகொண்டு வளர்ந்த கீழைநாட்டுச் சமயம் அசையவில்லை எனக் காண்கிறோம். அறிவின் துணைகொண்டு வளரும் வளர்ச்சி எல்லை உடையது எனக் கண்டு கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் இது சரி என்று நம்மவர் கூறுகின்றனர்.

பொருளாதாரக் கோட்பாடுகள் நாளுக்கு நாள் எவ்வாறு மாறுபடுகின்றன? அவ்வாறானால் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு எவ்வளவு மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும்? இவ்வளவு விரைவாக மாறுகின்ற இயல்புடைய அறிவு வளர்ச்சியின் மீது, நம்பிக்கையின் அடிப்படையில் வாழவேண்டிய சமயத்தைக் கட்டினால் அது அசைந்து ஆட்டம் கொடுத்து விடுகிறது. எனவே, இந்த உண்மையை அறிந்த கீழை நாட்டான் புற வாழ்க்கை வளமாக அமைய அறிவின் துணை வேண்டும். அக வாழ்க்கை அமைதியுற வேண்டுமாயின் உணர்வின் அடிப்படையில் அமைந்த சமயத்தின் துணை வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். இந்த இரண்டோடும்தான் மனிதன் வாழ்கின்றான். இந்த அடிப்படை இப்படியே வளர வேண்டும் என்பதுதான் கீழை நாட்டு மரபும் குறிக்கோளுமாகும்.

இங்கே நாம் காணுகின்ற விளக்கையும் ஒலி பெருக்கியையும் காணும்போது எடிசனையும், மார்க்கோனியையும் எண்ணிப் பார்த்து நன்றி கூறுகின்றோமா? பென்சிலின் ஊசியை விரும்பிப் போட்டுக் கொள்ளும் யாரும் ‘சர் அலெக்சாண்டர் பிளமிங் வாழ்க’ என்று வாழ்த்திவிட்டுப் போட்டுக் கொள்வதில்லையே! நம் புற வாழ்வு வளம்பெற உழைத்துப் பல புதுமைகளை ஈந்த எடிசனோ, மார்க்கோனியோ, பிளமிங்கோ நம் நன்றிக்குரிய பெரியவர்களாக ஆகவில்லை. ஆனால், போட்டிருக் கிற சட்டையைக் கேட்டால் உள்ளே அணிந்துள்ள பனியனையும் சேர்த்துக் கொடு என்று கூறிவிட்டு, அதனுடன் அமையாமல் இடக் கன்னத்தில் அறைந்தால் வலக் கன்னத்தையும் காட்டு என்றார் ஒரு பெரியவர்.

புத்தனின் சீடனான உபகுப்தன் தெருவில் போய்க் கொண்டிருக்கிறான். உபகுப்தனிடம் அவ்வூர்ப் பெண் ஒருத்திக்கு எல்லையற்ற ஈடுபாடு. அவளோ உடலை விற்று வாழும் இயல்பினள். அவனைக் கண்ட அவள், “உபகுப்தா! இந்தக் கௌதம சாம்ராஜ்யத்தில் கால்வாசி என் காலடியில் உள்ளது. அவ்வளவையும் உன் காலடியில் காணிக்கை ஆக்குகின்றேன். நீ என்னிடம் தங்கிவிடு” என்றாள். உபகுப்தன் சிரித்தான். “தாயே! உன்னிடத்தில் வர வேண்டிய காலம் உள்ளது! அக் காலம் வரும்போது நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான். விரைவாக வாழும் வாழ்க்கையை உடைய அவளுக்குத் தொழுநோய் பற்றிக் கொண்டதால் யாரும் சீண்டுவாரற்றுப் போய்விட்டாள். உடல் அழுகும் தொழுநோயோடு நகரில் எல்லையில் அவல முற்றுக் கிடக்கிறாள். அவள் உடலழகில் ஈடுபட்டு வருணித்துக் கவிதை பாடிக் காலடியில் வீழ்ந்தவ ரெல்லாம் இன்று அவளைக் காறியுமிழ்ந்து செல்கின்றனர். ‘எப்படி இருந்த வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே’ என்று எண்ணி ஏங்கினாள். அப்போது உபகுப்தன் அங்கே வருகின்றான். அவளைத் தூக்கி மடியில் கிடத்தித் தலையை நீவிப் புண்களைக் கழுவி மருந்திடுகிறான்.

கண்களைத் திறந்து பார்த்தாள். “உப குப்தரே! தாங்களா? இந்நிலையிலா என்னிடம் வந்தீர்?” என்று வியந்து கேட்டாள். “தாயே! உன் பழைய நிலைமைக்கும் இப்போதைய நிலைக்கும் என்னைப் பொறுத்தமட்டில் வேறுபாடு கிடையாது” என்று அமைதியாக விடை இறுத்தான் உபகுப்தன். அறிவின் துணை கொண்டு பார்க்கும்போது அவள் முன்னைய வாழ்விற்கும் பின்னைய வாழ்விற்கும் வேறுபாடு உண்டு. உணர்வின் துணை கொண்ட இந்நாட்டுச் அடிப்படையில் காணும்போது இரண்டு வாழ்விற்கும் இடையில் வேறுபாடு காண முடியவில்லை. ஏன்? அன்றிருந்த அவளேதான் இன்றும் இருக்கிறாள். முன்பு நன்கு அமைந்திருந்து இன்று அழுகிப்போன அவளுடைய உடலை அன்றும் இன்றும் சமயவாதி மதிக்க மாட்டான். அழிவில்லாத அவளுடைய ஆத்மாவை அவன் என்றும் காண்கிறான். அவளுடைய உயிருக்குத் துணையாக, கருவியாக நின்ற உடம்பு அன்று காண அழகாய் இருந்தது, இன்று சீழ் வடிகிறது. அவ்வளவுதான் வேற்றுமை! உள்ளே இருக்கும் அவளாகிய ஆன்மா இன்றும் அன்றும் ஒன்றே. அன்றைக்கு அந்த உடம்பு வேறு காரணத்திற்காக உபகுப்தனை நாடிற்று. இன்று அந்த உடம்பை விட்டு விட்டு ஆன்மாவை உபகுப்தன் நாடிச் சென்றான். அன்றைய நாட்டம் அழிகின்ற கருவியாகிய உடம்பின் அடிப்படையில் வேறு காரணத்திற்காக நிகழ்ந்தது. உபகுப்தனோ, அழியாத ஆன்மாவை அன்றும் இன்றும் நாடினான். அதனால் அவள்மீது அவனுக்கு வெறுப்புத் தோன்றவில்லை; இன்றும் நாடுகிறான், அதனால் அவளுக்கு இரங்கிப் பணிவிடை புரிகிறான்.

இதுதான் உணர்வின் அடிப்படையில் தோன்றிய சமயத்தின் இயல்பு. இந்த நாட்டு மக்கள் அவ்வாறு உணர்வின் அடிப்படையில் சமயத்தைக் கட்டினார்கள் என்றால், அதற்குரிய மூல காரணம் அறிவின் துணைகொண்டு அமைவன மாறும் இயல்பின; வெறுப்புக்கும் வீழ்ச்சிக்கும் ஆளாவன என்பதேயாகும். மாறும் இந்த அடிப்படையில் மக்களின் நிலையான, அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான சமயத்தைக் கட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்த நம்மவர் இவ்வாறு அமைத்தனர்.

அறிவு தேவைதான். ஆனால், அந்த அறிவுக்கு ஓர் எல்லையுண்டு. உணர்வு என்றும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் இந்த உணர்வின் அடிப்படையில் விளக்கப்படுகின்ற ஒன்று என்றும் நிலைபெற்று வாழக்கூடியது. ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானங்களில்தான் விரைந்து பறந்து செல்கின்றோம். ஆனால், அவர்களை அந்த ஊர்க்காரர்கள் கூட மறந்துவிட்ட நிலையைக் காண்கிறோம். விஞ்ஞானத்தின் அடிப்படையில் இவ்வாறு நன்மையை அடைந்த இந்த உலகம் அவர்களை மறந்துவிடுகிறது. ஆனால், உலகியல் முறையில் மக்கள் நன்றாக வாழ்வதற்கு, ஏசுநாதரோ, புத்தரோ, நம்மாழ்வாரோ, நாவுக்கரசரோ எந்த வழியையும் சொல்லவில்லை. ஆனாலும், இவர்களை மட்டும் உலகம் மறவாமல் நினைவில் கொள்கிறது. அறிவின் நெறியில் நின்று மக்களின் புற வாழ்க்கை வளம்பெறச் செய்த விஞ்ஞானப் பெரியவர்களை மறந்து விட்டு – சட்டையைக் கேட்டால் பனியனையும் கொடு என்று கூறிய ஆன்மிகவாதிகளை மட்டும் ஏன் உலகம் போற்றுகிறது! இதன் காரணம் யாது? வாழ்க்கை வளம் என்பதற்குத் தரும்பொருள் வேறுபாட்டினால்தான் இது நிகழ்கின்றது. ஆடையும், அணிகலனும், பொன்னும், பொருளும், போகமும், பிறவும் ஒருவனுக்கு வளர்ந்து விட்டால் அதனை வளமான வாழ்க்கை என்று கூற முடியாது என்று உணர்ந்தனர் கீழை நாட்டார்.

ஒன்றின்மீது ஆசை ஏற்படுகிறதா? அடுத்து அது கிடைக்க வேண்டுமே என்ற கவலை! கிடைத்த பிறகு பயன்பாடு பற்றிய கவலை! இப்படியே கவலை கவலை என்று கவலையை வளர்த்துச் செல்லுகின்றனர். இதுவே துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என விரிகிறது என்றான் புத்தன். இதனெதிராக ஆசை தோன்றியவுடன் அதனைக் களைந்து எதுவும் வேண்டாம் என்று விட்டுவிடு. தொல்லையே இல்லை. மேலும் “விட்டேம் என்பாரை விடாஅள் திருவே” என்று புறநானூறு ஆசிரியர் விளம்புவது போல், வேண்டாம் என்று சொல்கிறவர் களிடம் அது வந்து குவியும் இயல் புடையது.”ஒளியை நோக்கி முன்னேறிப் போங்கள், நிழல் தொடர்ந்து வரும். நிழலைப் பிடிக்க எண்ணி நிழலைத் தொடர்ந்து சென்றால் நிழல் ஓடும்.நீங்களும் ஓட வேண்டும்” என்று இராமகிருஷ்ணர் அழகாகச் சொன்னார். இதனைத்தான் ‘பற்றற்ற நடுவு நிலை’ என்று கிழக்கே தோன்றிய சமயங்கள் கூறுகின்றன.

மக்கள் வாழ்வை இரண்டாகப் பகுத்து, அறிவின் துணை கொண்டு வாழ்கின்ற புற உலக வாழ்க்கை வேறு, உணர்வின் துணைகொண்டு வாழ்கின்ற அகவுலக வாழ்க்கை வேறு என்றும் புற உலக வாழ்க்கை வளர்ந்தாலும் வளரவில்லை யென்றாலும் அகவுலக வாழ்வில் வளர்ந்து அமைதி காண இயலும் என்றும் ஒரு பேருண்மையைக் கண்டதும் கீழைநாட்டுச் சமயங்களேயாகும். இந்த அகவுலக வாழ்க்கைதான் மனிதனுடைய முழுமையான ஆளுமையே தவிரப் புறவுலக வாழ்க்கை அன்று என்றும் கூறிற்று. அதற்கு மேலும் சென்று, அகவுலக வாழ்வில் முழு வளர்ச்சியடைந்தால் தான் உலகம் முழுவதனையும் ஒன்றாகக் காண முடியும் எனவும், மக்களைச் சகோதரராகக் கருதுவதோ பிறருடைய வாழ்க்கைக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்வதோ அறிவுலக வாழ்விலே இயலாது எனவும் கூறி, அகவுலக வாழ்வில் வாழ்ந்து பயின்றவர்களால்தான் இவை இயலும் எனவும் உணர்ந்து கூறியுள்ளனர்.

இதன் மறுதலையாக அறிவின் துணை கொண்டு காணப்பட்ட விஞ்ஞானப் புதுமைகளின் மீது தங்கள் சமயக் கோட்டையைக் கட்டிய மேலை நாடுகள் அந்தப் புதுமைகள் மாற மாறத் தம் சமயக் கோட்டைகளில் விரிசல்கள் வரவர சமயக் கருத்துக் களையும் மாற்றிக்கொண்டே சென்றுவிட்டன. அப்படி மாற்றினாலும், அதிலும் ஒரு நன்மை உண்டு Adventures of Ideas – என்றும் கூறினர். புதிய புதிய கருத்துக்களைக் காண்பதில் ஒரு வேகம் இருந்தது அவர்கட்கு. நமக்கு அது இல்லாமல் போய்விட்டது உண்மைதான். ‘புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே’ என்றால், அதற்குக் காரணம் அவர்களுடைய சமயக் கோட்பாட்டிலேயே இந்த அடிப்படை இருக்கிறது. சமயக் கொள்கைகளை மாற்றிக் கொண்டே சென்றுவிட்டனர். நம் நாட்டிலோ வேத காலத்திலிருந்து இன்றுவரை அது பெரு மாற்றங்களைப் பெறவே இல்லை. காயத்திரி மந்திரம் முதலியவை எத்துணைப் பழமையானவை என்பதை நோக்குக. அவ்வளவு வலுவாக அடிப்படை அமைந்து விட்டது. உங்களுடைய புற வாழ்க்கை எப்படி மாறினாலும் அது பற்றிக் கவலை இல்லை. சமுத்திரத்தின் மேலே அலையடித்தாலும், புயல் அடித்தாலும், அடிப்பகுதி அசையாமல் இருக்கிறதே, அதுபோல அடிப்படை வலுவாகக் கட்டப்பட்டது இந்தக் கீழைநாட்டுச் சமயம். அவர்களைப் பொறுத்த மட்டிலே அறிவின் துணை கொண்டு கட்டப்பட்ட அது புதிய புதிய கருத்துகளை, சோதனைகளை மேற்கொள்ள வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது. இது அவர் களின் சமயத்திலேயே ஊறிவிட்டது. நம் ஊரில் ஒருவன் விரைவாக நடந்தால்கூட அவன் விரைவைச் சுட்டி, ‘ஏன் அவசரப்படுகிறாய்’ என்பார்கள்? அப்படி அமைதியாக வாழ்ந்து ஒரு பழக்கம் பெற்று விட்டோம். அவர்கள் அவசர அவசரமாக முன்னேறுகிறார்கள். இற்றை நாளில் அந்த அவசரத்தில் ஒரு பகுதி நமக்கும் வேண்டும் என்பது உண்மைதான். நம் அமைதியில் ஒரு பகுதி அவர்கட்கும் வேண்டும். நம் நாட்டினருடைய நடுநிலை ஓர் 50 சதவிகிதமும் அவர்களுடைய அவசர முன்னேற்றம் 50 சதவிகிதமும் சேருமேயானால் ஒரு பி.எஸ்.ஜி.நிறுவனம் கிடைக்கும். நாமம் போட்டுக் கொண்டு இருக்கும் ஒருவர் இவ்வளவு நிறுவனங் களையும் தோற்றுவித்து இயக்கினாரென்றால் கிழக்கையும் மேற்கையும் இணைத்து விட்டார் என்பதுதானே பொருள்? நாமம் போட்டுச் சமயவாழ்க்கை வாழ்தல் என்பது கீழை நாட்டு நாகரிகம்; எஞ்சினியரிங் எண்டர்பிரைசஸ் வைப்பது மேலை நாட்டு நாகரிகம். இவை இரண்டையும் நினைத்து மேற்கும் கிழக்கும் இணையும் இணைப்புப் பாலமாக வாழ்ந்தார் திவான்பகதூர். நாமம் போடுவது உளத்திற்காக; எஞ்சினியரிங் எண்டர்பிரைசஸ் உடம்புக்காக இவை இரண்டும் நன்கு நடை பெற்றால் உங்கட்கு முழுமையான வாழ்வு அமைந்துவிடும். அவர்களைப் போல் அறிவை மட்டும் வளர்த்தால் ஹிரோசிமாவும் நாகசாகியும் தான் எஞ்சும். அதை விட்டுவிட்டு மனம் மட்டும் வளர்ந்தால் மரத்தடியில் உட்கார்ந்து ‘சாம்ப சதாசிவ’ என்று பாடவேண்டியதுதான். ஆகவே, இரண்டும் வேண்டும். அகமும் வேண்டும் அது அமைதிக்காக. புறமும் வேண்டும்

அது வாழ்க்கை வசதிக்காக. இவை இரண்டையும் சேர்த்துக்கொள்ளக் கூடுமானால் மேற்கையும் கிழக்கையும் சந்திக்க வைக்க முடியும். அப்படியொரு வளர்ச்சி ஏற்பட்டு – அறிவின் துணைகொண்டு வளரும் வளர்ச்சிக்கும் உள்ளத்தின் துணை கொண்டு வளரும் வளர்ச்சிக்கும் இடையே சண்டையோ, பிணக்கோ, மோதலோ இல்லையென்ற பேருண்மையை அறிந்து வாழத் தலைப்பட்டால், பாரதி கூறியபடி இந்த உலகம் தேவர்கள் வாழுகின்ற உலகமாக ஆதல் கூடும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *