
மந்திரங்கள் என்றால் என்ன?
அ. ச. ஞானசம்பந்தன்
4. ஆன்மிகமும் உலகாயதமும்
உலகாயதம் என்பதும் ஆன்மிகம் என்பதும் இன்று நேற்றுத் தோன்றியவை அல்ல. தாயுமானவர் சொல்லுவார் “என்று நீ அன்று நான் உனது அடிமை அல்லனோ” என்று. சிவஞான போதம் பாடிய பெரியவர், “இலது என்றலின் உளது” என்று பேசுகிறார். ‘ஒரு பொருள் இல்லை என்று ஒருவன் பேச ஆரம்பித்தாலே, அது இருக்கின்றது” என்பதற்கு அடையாளம் என்று கூறுவார். என்று ஒரு பொருளைப் பற்றி உண்டு, இல்லை என்ற வாதம் தொடங்கிற்றோ, அன்றே இரு சாராரும் அது உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டவர் என்று தர்க்க ரீதியாகப் பேசுவார் கூறுவர். ஆகவே, இது இன்று நேற்றுத் தோன்றிய தர்க்கவாதம் அன்று.மேலை நாட்டாரைப் பொறுத்தமட்டில் உலகாயதமாகிய மெட்டீரியலிசம் இருக்கிறதே, அதற்கு மெருகு கொடுத்து வரலாற்று உலகாயதம் (historical materialism) என்றும், விஞ்ஞான முறை உலகாயதம் (dialectical materialism) என்றும் இரண்டு வழியாகப் பார்க்கத் தொடங்கினர். ஆனால், இந்த நாட்டுக்காரரைப் பொறுத்தமட்டில் மிகமிகப் பழமையான வேத காலத்திலிருந்து இதற்கு ஒரு சிறப்பிடம் கொடுத்து வந்துள்ளனர். அந்தத் தனி இடம் கொடுத்ததனாலேயே இந்த நாட்டுக்காரர்களுடைய சிந்தனைப் பரப்புக்கும் ஓர் அளவு தெரிகிறது நமக்கு. இல்லை என்று சொல்பவனுக்கு முதலிடம்; எனவே, உண்டு என்று சொல்பவன் இல்லையென்று சொல்பவனிடமிருந்து தொடங்குகின்றான். ஆகவே, முதல் நிலை எவருக்கு என்றால், இல்லை என்று சொல்கின்ற உலகாயத வாதிக்கு. அவனுடைய வாதம் மிகமிக அழகாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமே யானால், என் வாழ்வே எனக்கு விளக்கமாக அமைகிறது.
1930-32-ஆம் ஆண்டுகளில் ஒரு கட்சியின் சார்பாகத் தீவிரமாக நின்று படிப்பதும் சிந்திப்பதும் செய்து, டைலக்டிகல் மெட்டீரியலிசம் என்ற ரஷ்ய நாட்டில் தோன்றிய ஒரு நூலையும், லெனினிசம் என்ற நூலையும் தமிழில் ஆக்க முயன்றேன். அப்படி அதில் ஈடுபட்டிருந்த போதுதான் என்னுடைய சிந்தனை விரிவடைய அது பேருதவி புரிந்தது. இதற்கு மறுப்புச் சொல்லக்கூடிய காட்சி ஒன்று இருக்கும் என்று நான் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து, திவான்பகதூர் அரங்கசாமி அவர்கள், என்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்க வாய்ப்பளித்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அது பற்றிச் சிந்திக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இப்போது இச் சொற்பொழிவு காரணமாக அவற்றை மீண்டும் நோக்குகையில் எப்படி எப்படியெல்லாம் இருந்திருக்கின்றேன், சிந்தித் திருக்கின்றேன் என்று என்னைப் பற்றியே எண்ணும் நிலைமையைப் பெற்றேன்.
விஞ்ஞான உலகாயதமும் நாமெல்லாம் எண்ணுவது போல அவ்வளவு எளிதானதன்று. இந்த நாட்டில் தோன்றிய பல்வேறு நூல்கள் தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் சைவ சித்தாந்த நூல்களுள் தலை சிறந்தது என்று கூறப்படுகின்ற சிவஞான சித்தியார் தொடக்கம் வடநாட்டில் தோன்றிய பல நூல்கள் ஈறாக உலகாயதத்தினை மறுத்துள்ளன. மறுக்கின்றன என்றாலும் அவ்வளவு எளிதாக உலகாயதத்தினை மறுத்துவிடவும் இயலாது என்பது உண்மை. காரணம், அவ்வளவு ஆழமாகச் சென்று பொருள்களைப் பற்றி உலகாயதவாதிகள் ஆராய்ந்துள்ளார்கள். நாம் இரண்டு மூன்று அடிப் படையில் நின்று அதனைக் காண்டல் வேண்டும். தமிழ் நாட்டில் தோன்றிய சித்தியாரில் ‘சுபக்கம்’ என்ற பகுதி வருகிறது; பரபக்கம் என்ற பகுதியும் வருகிறது. மேலை நாட்டிலிருந்து வந்துள்ள சில நூல்களைப் பார்த்தால்தான் எந்த அடிப்படையில் இவை தோன்றுகின்றன எனப் பாகுபடுத்தல் இயலும். உலகாயதத்தை வரலாற்று அடிப்படையில் காணப் படுகின்ற உலகாயதம், அறிவின் துணைகொண்டு ஆராய்கின்ற உலகாயதம் என்று இரண்டாகப் பிரித்து விடலாம். இவை இரண்டிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் இரண்டும் வெவ்வேறு திசை நோக்கிச் செல்கின்றன. அறிவின் துணைகொண்டு ஆராய்கின்ற உலகாயதம் தான் இந்நாட்டு நூல்களில் பரபக்கம் என்ற பகுதியில் மறுக்கப்படும் உலகாயதம் ஆகும்.
அளவைகள் எனப்படுபவை மூன்று. அவற்றில் காட்சி அளவையைத் தவிரப் பிறவற்றை உலகாயதவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. காணப்படுகின்ற அடிப்படையில் வைத்துத்தான் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருபவர்கள் ஆதலின் அந்த அடிப்படையில்தான் பேசுகிறார்கள். உலகில் எல்லாப் பொருள்கட்கும் மூல காரணமாய் இருப்பவை அணுக்கள். தமிழில் அணுக்கள் எனக் கூறும்போது ஆங்கிலத்தில் வரும் “ஆட்டம்” (atom ) என்ற சொல்லோடு சேர்த்துக் குறிப்பிட வேண்டா. தமிழில் அணுக்கள் என்று கூறுவது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கின்ற மிகமிகச் சிறிய நுண்ணிய தன்மையைத்தான் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
“ஒத்துறு புணர்ச்சியில் உருக்கள் பலவாம்”. இந்த நாட்டவரின் உலகாயதக் கொள்கைப்படி உலகம் அணுக்களின் கூட்டத்தால் பல்வேறு வடிவமாக உள்ளது. இந்த அணுக்கள் ஒன்றோடொன்று சேரும்போது பல்வேறு வடிவங்களைப் பெறுகின்றன. “வைத்துறு கலாதி பல மண்ணினால் வருமா போல்” மண் இருக்கிறது, அதனை எடுத்துக் குடமாகச் செய்கின்றோம், சட்டியாகச் செய்கின்றோம், செப்பாகச் செய்கின்றோம், அழகான வெவ்வேறு பொம்மைகளாகச் செய்கின்றோம். என்றாலும் மூலப் பொருள் மண்தான். இந்த மண், பல்வேறு வடிவத்தைப் பெறுவது போல, நுண் பொருளாக இருக்கின்ற அணுக்கள் இருக்கின்றனவே, அவை சேரும்போது சேர்க்கையின் அளவின் பிரகாரம், புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், கல்லாய், விளைநிலமாய், மனிதனாய் விளங்குகின்றன என்றனர். இதற்கு மேலும் ஒரு படி செல்கின்றனர். ‘புத்தி, குணம், பொறி, புலன்கள் இவையெல்லாம் நுண்மையாகக் காட்சி அளிக்கின்ற இந்த உலகம் இருக்கின்றதே, அதில் நுண்மைப் பொருள்களாக இருக்கின்றனவே புத்தி (intellect), குணம் (character), நல்ல பொறி புலன்கள் (fine senses) இவை என்ன ஐயா?’ என்று வினவினால் “இவையெல்லாம் இதில் வரும், இந்த அணுக்கள் ஒன்றாகச் சேரும்போது அவற்றில் தோன்றும் இயல்புகள், குணங்கள்” என்கிறார்கள்.
களிமண்ணைக் கொண்டு மனிதன் போன்ற உருவம் செய்தால் மனித உரு அதற்கு வந்துவிட்டது. சட்டியாகச் செய்தால் சட்டி உருவம் வந்து விடுகிறது. சட்டிக்கென்று சில குணங்கள், பொம்மைக்கென்று சில குணங்கள். சோற்றைச் சட்டியிலிட்டுப் பிசைந்து உண்ணலாம். பொம்மையிலிருந்துப் பிசையவோ உண்ணவோ இயலாது. பொம்மையும், மண் சட்டியும் மண்தான். சட்டி என்று பண்ணப்படும்போது அதற்குச் சில இயல்புகள், பொம்மை என்று பண்ணப் படும்போது அதற்குச் சில இயல்புகள்; இவை இரண்டின் இயல்புகளும் வடிவுக்கு ஏற்ப வேறுபட்டு விடுகின்றன. அதேபோல நுண்மையான இயல்புகளாகிய புத்தி முதலானவைகளெல்லாம் இந்த அணுக்கள் மனித வடிவைப் பெறும்போது அவைகட்கு இயல்பாக அமைந்து விடுகின்றன.
அணுக்கள் மரத்தினுடைய வடிவத்தைப் பெறும்போது அதற்குச் சில இயல்புகள். மேல்நோக்கி வளர்தல், பச்சை நிறமாக இருத்தல், காய்கனி முதலியன தருதல், வேர் கீழ்நோக்கி ஓடுதல், பூமியிலிருந்து சத்தையும் நீரையும் எடுத்தல் போன்ற இயல்புகள் தாமாகவே ஏற்பட்டு விடுகின்றன. இது தாவரத்தின் இயல்பு. ‘இதில் என்ன அதிசயம்?’ என்று கூறிய அவர்கள், இந்த அளவோடு நிறுத்தவில்லை. “சட்டி இருக்கிறது; அது உடைந்தால் மண் தானே. அது போல அணுக்களால் ஆன உடம்பும் பிறவும் இறக்கும் காலத்து மீண்டும் அணுக்களாக ஆகிவிடுகின்றன என்றால், காணப்படும் பொருள் ஐம்பூதங்களின் சேர்க்கைதானே? மனிதன் இறக்கையில் அவை ஐம்பூதங்களாகப் பிரிந்து, அது அது தன் மூலப் பொருளோடு சேர்ந்துவிட்டது; அவ்வளவுதான்” என்பார்கள். மண்ணுக்கு உருக்கொடுத்தபோது சட்டி என்ற பெயர் பெறுதல் போல, ஐம்பூதங்களின் சேர்க்கையில் உண்டாகிய மனித உரு ஞானசம்பந்தம் என்று பெயர் பெறுகிறது.’சட்டி உடைந்தால் மண்ணோடு மண்ணாதல் போல, மனிதன் இறந்த போது தன்மைகள் பிரிந்துபோய் விடுகின்றன’ என்று கூறுகின்றார்கள்.
ஒருவர் எவ்வளவுதான் உயர்ந்தவரானாலும் அவர் இறந்தபோது, ‘பெரிய மனிதரை எடுங்கள் என்றா கூறுகின்றனர். இல்லையே. ‘பிணத்தை எடுங்கள்’ என்றுதானே கூறுகின்றனர்! இதனைத் திருமூலர் “பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு” என்று குறிப்பிடுகின்றார். இதுதான் மரபு. அணுக்கள் சேர்ந்து ஒரு வடிவாக வந்த இந்த உடம்பு அதன் வேலை தீர்ந்த பிற்பாடு கல்யாணத்திற்குக் கடன் வாங்கிய சாமான்களைக் கல்யாணம் முடிந்தவுடன் திருப்பிக் கொடுத்து விடுதல் போல் – வேலை முடிந்த உடன் எல்லாம் அணுவாய்ப் போய்விடுகின்றன. ஐம்பூதங்கள் ஒன்றாகி வாழ்ந்து பிரிந்தவுடன் ஐம்பூதங்களின் பல்வேறு அணுக்களாய்ப் பிரிந்து போய்விடுகின்றன என்பார். ஆனால், ஒரு கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லாமல் விட்டுவிட்டனர். இந்த அணுக்கள் சேர்ந்தன; உருவாக மாறின; உண்மைதான். இவை எப்படிச் சேர்ந்தன, ஏன் சேர்ந்தன’ என்பதற்குச் சரியான பதில் இல்லை. ஆனால், விகிதாசாரம் காரணமாகப் பல்வேறு வடிவு பெறுகின்றன என்று மட்டும் சொல்லி விட்டனர். டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களும் “ஏன் சேர்ந்தன என்பதற்கு இவர்கள் விடை காணாமற் போய்விட்டார்களே” என்று வியந்து கேட்கிறார். ‘எப்படிச் சேர்ந்தது’ என்ற வினாவுக்குத் ‘தாமே ஒவ்வோர் அளவில் சேர்ந்தன’ என்று கூறிவிடலாம். ‘ஏன் சேர்ந்தன’ என்பதற்குப் பதிலே இல்லை. முடிவை மட்டும் பேசுகிறான், உலகாயதவாதி; “ஓடும் அவை ஆகிய உறுகாரியம் உலந்தால் ஆதியாம்” என்றான்.
‘புதியதாக எப்படியய்யா ஒரு குணம் உண்டாகும்’ என்று கேட்டதற்கு “வெற்றிலை பச்சை நிறம், பாக்கு தளிர் நிறம், சுண்ணாம்பு வெண்மை நிறம், இந்த மூன்றும் சேர்ந்தால் சிவப்பாதல் போல அணுக்கள் என்னென்ன விகிதாசாரத்தில் ஒன்றாகச் சேருகின்றனவோ அவைகட்கு ஏற்பக் குணங்களைப் பெற்றன. இதில் என்ன ஆச்சரியம்” என்றான். கன்மம், உரு, இறைவன் என்றெல்லாம் ஆன்மிகவாதிகள் பேசுவனவற்றைக் கேட்டுச் சிரிக்கிறான் உலகாயத வாதி. “காணப்படும் பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்று கேட்டாய். அதற்கு அழகிய விடை கூறியுள்ளேன். இதற்கு மேல் காணப்படாததாகிய உலகை நீயாகக் கற்பனை செய்து கன்மம் என்றும் கடவுள் என்றும் ஏன் பேசுகிறாய்? நீ கூறும் கடவுளின் வடிவம்தான் என்ன?” என்று உலகாயதவாதி கேட்பான். அதற்கு ஆன்மிகவாதியோ அருவானவன்” என்றான். “ஆண்டவன் அருவ மென்னில் ஆகாயமும் அருவம்தானே? அருவமே இறைவனாகில் அறிவன்று ஆகாயமாகும்” என்று கூறி மறுக்கின்றான் உலகாயதவாதி. ‘இல்லை, உருவம் உண்டு’ என்றான் சமயவாதி. “உருவமேல் இப் பூதக் கூட்டத்தில் அவன் ஒன்றென்றான்” உலகாயதவாதி. அடுத்துச் சொன்னான் ஆன்மிகவாதி: “இல்லை ஐயா ஆண்டவன் அருவுருவாக விளங்குகின்றான்” என்று. உருவமும் அருவமும் கலந்தது கடவுள் என்றால் இரண்டும் கலந்து நிற்றல் இயலுமா? அருவமாகிய விண்வெளியில் உருவமாகிய கல்லைத் தூக்கி எறிந்தால் அங்கேயே நிலைத்து நிற்குமா” என்று கேட்கின்றான் உலகாயதவாதி.
எப்பிக்குரியன் ஃபிலாசஃபி (epicurian philosophy) என்பது எகிப்து நாட்டில் புகழ்பெற்று விளங்கிய ஒன்று. நம்முள் பலருக்கு அந்தத் தத்துவத்தின் பெயர் தெரியாது. ஆனால், வாழ்க்கையில் அதனைத்தான் கொண்டு செலுத்துகிறோம். அதாவது “வாழ்வு நிலையற்றது, எனவே, கிடைத்த வசதிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்துக் கொள்” என்பதுதான் அந்தத் தத்துவம். அதனை விளக்க எகிப்து நாட்டு விருந்தில் உண்ணச் செல்வதற்கு முன்பு ஒரு சிறிய பெட்டியைக் கொடுப்பார்களாம். அதனைத் திறந்து பார்த்தால் அதனுள் இறந்த பிணப் பொம்மை ஒன்று இருக்குமாம். அதற்கு அடியில்,
EAT AND BE MERRY BEFORE
YOU BECOME LIKE THIS
என்று எழுதப்பட்ட காகிதம் இருக்குமாம். அற்புதமான தத்துவம்! நம்மில் பலர் பயிற்சியில் கொண்டாடும் இந்த நிலையை உலகாயதவாதி எடுத்துக் காட்டுகிறான், “இல்லாத பொருளைப் பற்றி எண்ணி எண்ணி ஏனய்யா அவலமுறுகின்றாய்? கண்ணால், காதால், மூக்கால், உடம்பால், வாயால் பெறுகின்ற சுகங்களே உண்மையான சுகங்கள்.” இவையெல்லாம் அடங்கிவிட்டால் பெறுவது என்ன? இந்த அடிப்படையை ஒருவாறு விளங்கிக் கொண்டால் மேலை நாட்டவர் காட்டும் உலகாயதத்தினை ஒருவாறு வகை புரிந்து கொள்ள முடியும்.
அவர்கள் காட்டுவது இரண்டு உலகாயதமாகும். ஒன்று வரலாற்று முறையில் பேசப்படுகின்ற உலகாயதம். மற்றொன்று விஞ்ஞான முறையில் பேசப்படுகின்ற உலகாயதம். மக்கள் வாழ்கிறார்கள்; பொருள்களை உற்பத்தி செய்கின்றனர்; பணி செய்கின்றனர்; பொருளீட்டுகின்றனர்; வம்ச விருத்தி செய்கின்றனர். இதுதான் வாழ்வு. இந்த உறவு தான் சமுதாய வாழ்வாகிறது. இதில் மனிதன் நின்று விடுவானேயானால் மனிதன் எத்தனையோ ஆயிரம் ஆயிரமாண்டுகள் பின்னால் நிற்க வேண்டும். இந்த உறவு முறைக்கு அடிப்படையில் வேறு ஒன்று வந்து விடுகிறது. மனிதர்களுக்கு இருக்கின்ற உணர்ச்சி. இந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படையில் இருக்கின்ற ஏதோ ஒன்று, அந்த உணர்ச்சிகள் பிறரிடம் சென்று தாக்குவதனாலே ஏற்படுகின்ற எதிர்ச்செயல்கள் (reaction) இவற்றைப் பற்றிப் பேச வந்த அவர்கள் “இதுதான் அடிப்படை, இந்த அடிப்படையிலிருந்து எதனையும் பெற்றுவிடலாம்” என்று சொன்னார்கள்”
ஜடப் பொருள் (matter) இந்த ஜடப் பொருள்களுக்குச் சில இயல்புகள் உண்டு. வடிவம், உருவம், பல்வேறு வடிவங்களையும் உருவங்களையும் பெறுதல் இவற்றிலெல்லாம் பிரச்சினையே கிடையாது.
இதனை அடுத்த நிலைக்குப் போகும்போது இந்த ஜடப் பொருள்களுக்குரிய இயல்புகள் மாறிப் புதிய இயல்புகளை ஏற்கும்போது தொல்லை வருகிறது. நல்லவன், தீயவன், கோபக்காரன், அன்புடையவன் என்று கூறப்படுகிற சில இயல்புகள் உண்டே, இவற்றை யெல்லாம் எதில் கொண்டுபோய் அடக்குவது? நினைக்கும் இயல்பு மனத்திற்கு உண்டு. ஆனால், மனம் என்பது என்ன? இங்கேதான் இரு சாரார்க்கும் மோதல் ஏற்படுகின்றது. அந்த மனமும் ஜடப்பொருள் என்றார்கள் உலகாயதர்கள். அது எப்படி ஜடப் பொருளாக இருக்க முடியும்? பருப்பொருளாக (concrete) இருக்கும் தன்மை மனத்திற்கு ஏற்றப் பட்டால் இந்த வாதத்தைச் சுலபமாக முடித்துக் கூறி விடலாம். ஆனால், இவ்வாறு சொல்லுகின்ற அவர்களே ஜடப்பொருளாக இருக்கும் ஒன்றிற்கு ஏற்றப்படுகின்ற குணங்கள் பருத்தன்மை உடையன வாக உள்ளனவற்றிற்கு ஏற்றப்பட முடியுமே தவிர நுண்மையாக உள்ள பொருள்களுக்கு ஏற்றப்படக் கூடியன அல்ல என்பதைக் காண முடியும்.
இதனை முதலில் கூறியவர் யார் தெரியுமா? பிரகஸ்பதி பகவானே ஆவார். பிரகஸ்பதியோ தேவகுரு. இப்படியொரு குரு கிடைத்திருந்தால் அந்தத் தேவர்கள் அரக்கர்களோடு சண்டை போட்டுக் காலம் கழித்ததில் வியப்பில்லை! ஸ்தல புராணங்கள் அனைத்தும் தேவர்கள் செய்த பாவ விமோசனத்திற்காகப் பூலோகத்தில் வந்து தவம் செய்ததனையே குறிப்பிடும். இதன் அடிப்படை நுணுக்கம் இதுதான். நாம் நினைக்கின்றபடி போக பூமியில் உள்ளவர்கள் எவ்வாற்றானும் உயர்ந்தவர்களல்லர். சூழ்நிலை காரணமாக அவர்கள் அங்கே உள்ளார்கள், நாம் இங்கே இருக்கின்றோமே தவிர வேறு இல்லை. இந்தப் பிறவியில் நாம் பெற்ற பயனைத் தேவர்கள் கூடப் பெறவில்லை. ஆகவே, தேவர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று எண்ண வேண்டா என்பதற்காகவே இப்படிப்பட்ட கதைகளைக் கட்டினார்கள். தேவர்களின் குருபகவானாகிய வியாழபகவான் தான் இந்தச் சாங்கிய மதத்தினை உண்டாக்கியவன் என்று கூறுகின்றார்கள். அவ்வளவு பழைய காலத்தில் பேசிய அந்தக் கருத்தைச் சமீப காலத்தில் பிறநாட்டு உலகாயதர்கள் பேசுகிறார்கள். நுண்மையான இயல்புகள் எப்படி ஜடப்பொருளுக்கு இயல்பாக இருக்க முடியும்?
சமுதாய மக்கள் வாழ்கின்றார்களே, இவர்களெல்லாம் ஜடப்பொருளின் உறுப்புக்களாவர். ஜடப் பொருள் வடிவாக இருக்கவேண்டிய மக்கள் ஒன்று கூடிச் சமுதாயமாக வாழும்போது அறிவுத்துறையில் அரசியல், ஒழுக்கம், பொருளாதாரநிலை, கலைத்துறை தத்துவம் (economical standard,artistical worth, philosophical doctrine) என்ற இவ்வளவும் மக்களுடைய சிந்தனை என்ற ஒன்றின் அடிப்படையிலே தோன்றியவை. இவைகளை எதில் கொண்டுபோய்ச் சேர்ப்பது? ஜடப் பொருளாக இருக்கின்ற ஒன்றிற்கு இவ்வளவு இயல்பு களையும் ஏற்ற முடியுமா? பழங்கால லோகாயத் வாதிகள் கொஞ்சம் விழித்துக் கொண்டார்கள். பேப்பர் என்றும், மைக்ரோஃபோன் என்றும், பேனா என்றும், மேஜை என்றும் உள்ள ஜடப் பொருளைப் பற்றி ஆராய்கின்ற பகுதியை மெட்டீரியலிசம் என்று சொன்னார்கள். மனிதனுடைய சிந்தனையின் அடிப்படையில் தோன்றியவைகளை மெட்டீரியலிசம் என்று சொல்லவே இல்லை.
மெட்டீரியலிசம் பேசி, இந்த உலகத்தில் உலவு கின்ற ஒரு சிலருள் தலையாக நிற்பவர் மார்க்ஸ்.
ஜெர்மனிக்காரர்கள் மார்க்ஸ் பற்றிச் சொல்கிறார்கள். ரஷ்யர்கள் சொல்லுகிறார்கள்; கிழக்கு ஜெர்மனிக் காரர்கள் சொல்லுகின்றார்கள்; சீனர்கள் சொல்லுகின்றார்கள். இவர்கள் கூறும் அத்தனையையும் ஒன்றாக்கிப் பார்த்தால், ‘இந்த மார்க்ஸ் என்னதான் சொன்னார்’ என்று சிந்திக்கவே முடியவில்லை. ஏனென்றால் வெள்ளைத் தாள் வெள்ளையென்று ஒரே கூற்றை எல்லோரும் சொன்னால் நியாயமானது. ரஷ்யாக்காரர் தாளைக் கறுப்பு என்று சொன்னால், சீனாக்காரர்கள் ‘நாங்கள்தான் உண்மை நிறம் கண்டோம்; அது கறுப்பு அன்று, மஞ்சள் என்று பேசுவார்கள். இப்படி முரண்படுகின்ற, சொல்லிலேயே எல்லையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடம் தருகின்ற கோட்பாட்டை மார்க்ஸ்தான் முதன் முதலில் ஆரம்பிக்கின்றார். ‘மார்க்ஸ்தான் இதற்குச் செம்மையான ஒரு கட்டளைக்கல் விதித்துக் கொடுத்தவர்’ என்று விஞ்ஞான முறை உலகாயதம் பேசுகிறவர்கள் கூறுகின்றார்கள்.
இனி, அவர்கள் பேசுவதனுடைய அடிப் படைக் கருத்தைச் சுருக்கிச் சொல்லிவிடலாம். மக்களுடைய வாழ்க்கையில் சொல்லப்பட்ட இந்தக் கருத்துக் குவியல்கள் இருக்கின்றனவே, இவையெல்லாம் அவர்கள் வாழ்க்கையின் அடிப்படையில் உண்மையானவையாகத் தோன்றியனவாய் இருப் பினும் அங்கே பண்பு என்று எதுவும் கிடையாது. அந்த ஜடப் பொருள்களுக்கு உள்ள ஓர் இயல்பு, அந்த இயல்பில் இந்தக் குணங்களும் வந்தன. உண்மையான இந்தக் குணங்களும் அந்த ஜடப் பொருள் தன்மையிலேயிருந்து தோன்றின. அதை அப்படியே யோசித்துக்கொண்டேயிருக்க வேண்டியதுதானே தவிர, வேறு எதுவும் கிடையாது.
ஜடப் பொருளைப்பற்றிச் சிந்திக்கின்ற இயல்பு ஒருபுறம் இருக்க, உண்மையான அறிவாவது இருக்கின்றதா என்று கேட்டால் உண்டு என்று பேசினார். எப்படி அவை இருக்கின்றன? அணுக்கள் என்ன செய்கின்றன? அணுக்கள் ஓயாமல் சுற்றித் திரிகின்றன. இந்த இயக்கம் அணுக்களுக்கு இயல்பு. அதற்கு விஞ்ஞானமும் இவர்களுக்கு ஏற்றாற்போல் ஒத்தாசையும் செய்துவிட்டது. ஆகவே, மெட்டீரியலிசம் பேசுவோர் மெட்டீரியலிசத்திற்குரிய விஞ்ஞானத்தின் சூழ்நிலை கொண்டு இலக்கணம் வகுத்தார்கள். அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்து, ‘மேட்டர் (matter) என்று சொல்லுகின்ற ஜடப்பொருள், இயங்கும் இயல் புடையது’ என்ற விஞ்ஞானக் கருத்து வந்தவுடனே இவர்களும் சேர்ந்துகொண்டு “ஆமாம் ஆமாம், நாங்கள் சொன்ன மாதிரிதான் விஞ்ஞானமும் கூறுகிறது” என்கின்றனர். ‘அந்த ஜடப்பொருளுக்கு இயக்கம் உண்டு என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம்; முன்னோக்கிப் போவதுதான் இயக்கம் என்று எண்ணாதே; பின்னோக்கிப் போவதும் பக்கவாட்டில் போவதும் இயக்கம்தான். ஆகவே, மக்கள் கூட்டமாகச் சேரும்பொழுது அவர்களுக்கு முன்னோக்கிச் செல்கின்ற எண்ணங்கள், பிறர் தங்களுடைய பிற்காலத்தில் வரலாற்றைப் பற்றிச் சிந்திக்கின்ற எண்ணங்கள், சமுதாயத்தில் எப்படி யெல்லாம் வாழ வேண்டும் என்று தோன்றுகின்ற எண்ணங்கள் ஆகிய இவையெல்லாம் தோன்றினாலும் இவைகளும் அணுக்களின் இயக்கம்’ என்று முடித்தார். மனிதனுடைய சிந்தனையை அணுக்களின் இயக்கத் தோடு முடிச்சுப் போட்டு, ‘இதுதான் அது’ என்று சொல்கின்ற அளவில் மார்க்ஸ் போய்விட்டார்.
இதில் வருகின்ற இடைஞ்சல் என்ன வென்றால், இன்னும் அதைப் பூரணமாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எவ்வளவுதான் டயலெக்டிக் மெட்டீரியலிசம் படித்தாலுங்கூட, எதை எடுத்தாலும் இயல்பு என்றும் ‘இவன் நல்லவனாக இருக் கின்றானே’ என்றால் ‘நல்லவனாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, இது அவன் இயல்பு’ என்றும் ‘இவன் முழுக் கெட்டவனாக இருக்கின்றானே ராபர்ட் கிளைவ் மாதிரி’ என்றால், ‘அது அவனுடைய இயல்பு’ என்றும் கூறப்படுகிறது. புறநானூற்றில்,
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில்
தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை
வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம் 192)
என்று ஒரு பாடல் உண்டு. பெரியோரைப் புகழ்தலும் இல்லை, சிறியோரை இகழ்தல் அதனினும் இல்லை. ஏன் தெரியுமா? நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படும் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தனம்! ஓர் ஆற்றில் கட்டையைத் தூக்கிப் போட்டால் என்ன செய்யும்? தண்ணீர் எப்படி ஓடுகிறதோ அப்படிக் கட்டையும் போய்த் கொண்டிருக்கும். கட்டைக்கு என்று சுய இயல்பு கிடையாது.தண்ணீர் எந்த வேகத்தில் எந்தத் திசையை நோக்கிப் போகிறதோ அந்த வேகத்தில் அந்தத் திசையில் அந்தக் கட்டையும் போய்க் கொண்டிருக்கும். அதுபோல இந்த மக்களுடைய உயிர்கள் என்ன என்ன விதிக்கு உட்பட்டு வந்திருக்கின்றனவோ, அந்தந்த விதிக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பதே இவர்தம் வாதம்போலும்!
ஆகவே, விளைவை அடியொற்றிச் செய்யும் போது ஒருவன் நல்லது செய்கிறான் என்றோ, கெட்டது செய்கிறான் என்றோ, ஏன் அவனிடம் சண்டைக்குப் போகவேண்டும்? இயல்பு என்று இதைத்தானே உலகாயத வாதிகள் சொல்கிறார்கள்? அணுக்கூட்டங்கள் இயக்கத்தின்பாற் படும் போது அரசியல் எண்ணங்கள் தோன்றுகின்றன, ஆன்மிக எண்ணங்கள் தோன்றுகின்றன, பொருளாதார எண்ணங்கள் தோன்றுகின்றன. இதுதான் அந்த அணுச் சேர்க்கையின் இயல்பாகக் காண்பது. அந்தக் கருத்தை இங்கே அப்படி வைத்துப் பார்ப்போமே யானால், பெரியோர்கள் என்று சொல்லப்படுபவர் கள் யாருமில்லை. ‘அவர்களுடைய செயல்கள், எண்ணங்கள் இவை’ என்று சொன்னால் ‘அவை அவர்களுடைய இயல்பு, ஆகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள்’ என்று கூறிவிடலாம்.
இந்தக் கருத்தைத்தான் லெனினும் பேசினார். டார்வின் எப்படி உயிர்கட்குக் கூர்தல் அறம் பேசினாரோ, அதுபோல மார்க்ஸ் இந்த ஜடப் பொருளினுடைய வளர்ச்சியை வற்புறுத்தினார். வளர்ச்சி என்பது மாறிமாறித் தோன்றுவதால், ஜடப் பொருள்கள் ஒருவகை வளர்ச்சியைப் பெறுகின்றன என்றனர் மார்க்சியவாதிகள். 19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் புரட்சி தோன்றியதென்றால், அதுவும் தேசிய உணர்வின் வளர்ச்சிதான் என்றனர். முதலாளித்துவம் பெருகினதென்றால் அதுவும் இதன்படிதான். இவை சமுதாய வளர்ச்சியின் இயல்பு என்ற அளவில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள்.
பொருளுக்கு இயல்பான பண்போ, வடிவமோ ஒன்றும் கிடையாது. காண்பானுடைய காட்சியின் அளவை ஓட்டி அதற்கு வடிவம் ஏற்படுகிறது. ‘இப்படி ஒரு பொருள் இருக்கின்றதே’ என்று என் கண்ணாகிய பொறி பார்த்து என் மனத்தில் பதிவு செய்தவுடன் ஒரு வெள்ளை நிறம் என் மனத்தை ஏற்றுக்கொண்டது’ என்று லாக்கே என்ற தத்துவஞானி சொன்னான். இதற்கு ஒரு வட்ட வடிவம் உண்டு என்று மனம் ஏற்றுக்கொண்டதாம். இப்படி வளைந்து கொடுக்கின்ற இயல்பும் இந்த வடிவம் உடையது என்றும் என்னுடைய மனம் ஏற்றுக்கொண்டதாம். ஆகவே, காண்பானுடைய மனத்தில்தான் இதற்கு ஒரு உண்டே தவிர, இதற்கென்று ஒன்றும் வடிவம் கிடையாது என்று பேசினான் லாக்கே. அங்கேதான் இந்த நாட்டின் சங்கரருடைய தத்துவம் தொடங்குகிறது.
இங்கே காணப்படுகின்ற பிரபஞ்சத்திற்கென்று ஒரு வடிவம் கிடையாது. வடிவம் இல்லாத பொருளுக்கு எப்படி வடிவம் இருக்கும் என்று கூறமுடியாமல் தொட்டுப் பார்க்கிறோம் என்று சொன்னால் அது அதனுடைய காட்சியளவாக இருக்கும். அந்த ரோஜாப் பூ இருக்கிறது. ரோஜாப் பூவைப் பார்த்தவுடனே காந்தியைப் போன்றவர்கள், “இந்த அழகான பூவினைக் காப்பாற்றுவதற்குக் கருணை வடிவமான கடவுள் முட்களை வைத்தானே” என்று நினைக்கின்றார். இதன் எதிராகக் “கடவுளே இல்லை; அப்படியே இருந்தாலும் அவன் அறிவற்றவன். ஏனென்றால் இந்த அழகான பூவைப் பறிக்க முடியாதபடி முள்ளைக் கொண்டுபோய் வைத்தானே” என்று நினைக்கிறான், மற்றொருவன். பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் கண்ணபிரான் நினைவில் ஈடு படுகிறார்; ‘அளைகமழ் பவளவாயனை’ என்று துதிக்கிறார். ‘வெண்ணெய் வாசம் வீசுகின்ற அற்புதமான திருவாயினை உடைய பெருமானே’ என்கிறார். அதே பாரதத்தில் துரியோதனன் என்பான், அதே கண்ணனைப் பார்க்கிறான். இதே அடை மொழிகளை அவனும் கொடுக்கிறான். ஆனால், கொஞ்சம் மாறுபாடுதான். ‘நாற்றம் அடிக்கும் வெண்ணெயைத் தின்ற நாற்ற வாயா!’ என்றான். தப்பா அது? திருட்டு வெண்ணெய் சாப்பிடுகிறவன் எங்கே நல்ல வெண்ணெய் எடுக்க முடியும்? ‘முடையெடுத்த நவநீதம் தொட்டுண்டும், கட்டுண்டும். முன்னாள் நாகக் குடையெடுத்து மழைதடுத்தும் வஞ்சனைக்கோர் கொள்கலமாம் கொடிய பாவி’ என்று துரியோதனன் அதே கண்ணனைப் பற்றிப் பேசுகிறான். கண்ணன் ஒருவன்தான். அந்த முழுமுதற் பொருளாகிய அவனே காண்பானுடைய காட்சி யளவில், அவனுடைய பண்பாட்டின் உயர்வாகக் காட்சியளிக்கின்றான். வில்லிபுத்தூராருடைய காட்சியில் ‘அளை கமழ் பவளவாயின’னாகக் காட்சியளிக்கின்றான். துரியோதனனுடைய காட்சியிலே ‘முடையெடுத்த நவநீதம் உண்டு கட்டுண்ட பாவியாகக் காட்சியளிக்கின்றான். இதே கருத்தைத் தான் இங்கே கொண்டு வர வேண்டும், வேறு வழி இல்லை. ஒலிவாங்கி (மைக்) என்ற வடிவம் ஒன்றும் இல்லை; ஆனால் காண்பானுடைய காட்சியளவிலே தான் உருவு, வடிவு, பண்பு, நிறம் ஆகிய அத்தனையும் தோன்றுகின்றன என்ற லாக்கேயின் கருத்தை அப்படியே இங்கு வாங்கிக் கொள்கின்றார் லெனின்.
“ஐயா, நீர் பார்க்கின்ற இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றதே இதற்கென்று ஒரு வடிவு, உரு ஒன்றும் கிடையாது. இது ஒரு ஜடம். அது ஒரு ஜடம். இது பச்சையாக இருக்கிறது, நீலமாக இருக்கிறது, சிவப்பாக இருக்கிறது, மேஜையாய் இருக்கிறது, நாற்காலியாய் இருக்கிறது என்றால், உம்முடைய பொறி புலன்களின் மூலம் உள்ளே சென்று இந்தப் பொருள்கள் உம்முடைய மனத்தில் படிந்து வடிவத்தைக் கொடுக்கின்றன; அவ்வளவுதான். “வட்டம் ஒன்றை வரைந்து விட்டு நான்கு பேரைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள் தெரியும். சும்மா பார்க்கச் சொன்னால் சரியில்லை. ‘இந்த வட்டம் சரியாக இருக்கிறதா’ என்று கேட்டுவிட வேண்டும். பிறகு பார்க்கச் சொல்ல வேண்டும்.ஒருவேளை சரியில்லாமல் இருக்கலாம்’ என்று நினைத்துப் பார்க்கும்பொழுது, சரி இல்லாமல் இருக்கிற மாதிரியும் தெரியும். பொறி புலன்கள் வெகு விரைவில் மனிதனை ஏமாற்றிவிடும் என்பது விஞ்ஞானம் படித்த அத்தனை பேருக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் பொறி புலன்கள் மேல்தான் நமக்கு நம்பிக்கை அதிகம்.
இனி, அதற்குமேல் ஒருபடி போகின்றார்கள். அதற்கு அப்பாற் பட்டிருக்கின்ற உண்மையான கருத்துக்களைப் பற்றியும் இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக இருக்கின்ற கடவுளைப் பற்றியும் ஆராய்கின்ற பொழுது வரலாற்று முறை உலகாயதவாதிகள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடாமல் விட்டு விடுகின்றார்கள்; இருக்கலாம். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், விஞ்ஞான முறையில் மெட்டீரியலிசம் பேசுகின்றவர்கள் இருக்கின்றார்களே, அவர்கள் இவற்றை ‘இல்லை’ என்று மறுக்கின்றார்கள். இப்படியொரு பொருள் இருத்தலுக்கே இடம் இல்லை.
ஏன்? ஜடப்பொருளுக்குரிய இயல்பு என்று சொல்லி விட்டால் நல்லது, கெட்டது, சிந்தனை, உணர்வு, உயர்வு, தாழ்வு எல்லாம் அதன் இயல்பாக ஏற்றி விடலாம். எனவே, கடவுள் முதலிய கற்பனை வேண்டா என்கின்றனர்.
இனி, இந்த அண்டம் முதல் அணுவரை உள்ள பொருள்களினுடைய இயக்கம் இருக்கின்றதே, இந்த இயக்கத்தில் ஒரு பொதுத்தன்மை இருக்கின்றது. ஒரு கோவையும் அழகும் ஒற்றுமைத்தன்மையும் உள்ளன. இதனை வெளியிடத் தகுந்த சொற்கள் இல்லை. நம்முடைய கருத்தை வெளியிடுவதற்குச் சொல் தகுதியுடைய கருவியே அன்று; அது சிறந்த தகுதியுடைய கருவியாக இருந்திருக்குமேயானால் இவ்வளவு நூல்கள் இந்த உலகிற்கு வேண்டியதில்லை. சட்டம் எழுதுகிறார்கள். சட்டத்தை அச்சடித்த காகிதங்கள் காய்வதற்குள் எத்தனை விதமான பொருள்களில் அச்சட்டங்கள் நீதி மன்றங்களில் பேசப்படுகின்றன! இத்தனை விதமான பொருள் களையும் இந்தச் சட்டத் துறையில் இருக்கின்றவன் சிந்திக்கிறான் என்றாலும் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்பச் சொற்களின் பொருள்கள் மாறுபட்டுக் கொண்டு போகின்றதாகவே தெரிகிறது. நாம் நினைக்கின்ற கருத்துகளை அப்படியே வாங்கித் தருகின்ற சக்தி அந்தச் சொற்களுக்குக் கிடையாது. அதிலும் சில சொற்களை நாம் பயன்படுத்தும்போது, நான் ஒரு கருத்தில் கூறுகிறேன்; கேட்கிறவர்களாகிய நீங்கள் ஒரு கருத்தில் அவைகளை வாங்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் வேறு கருத்தில் வாங்கிக் கொண்டீர்கள் என்று தெரிந்ததற்குப் பிறகு நான் என்ன செய்கிறேன்? வெவ்வேறு வழிகளில் என் கருத்தைப் புரிய வைக்க முயல்கிறேன். இப்படித்தான் இன்றைய நிலை உள்ளது.
இன்றுள்ள அனைத்தையும் அவை பருப் பொருளாயினும் சரி, நுண் பொருளாயினும் சரி, கருத்துக்களாயினும் சரி – அத்தனையையும் இயக்கம் (மோஷன்) என்ற வார்த்தையில் அடக்கப் பார்க்கிறார்கள். இந்த விஞ்ஞான உலகாயதர்களுக்கு எதை எடுத்தாலும் இயக்கம், இயல்பு என்று கூறி விட்டால், முடிந்தது.
இனி, அதற்குமேல் உணர்வுக்கும் (consciousness) வருகிறார்கள். அதாவது, ஜடப் பொருள்களினுள் வளர்ந்துள்ளதாகிய நம்முடைய மானிட உடம்பு இருக்கிறதே, உயிர் உடைய உடம்பு அது மிகவும் உயர்ந்தது. அதாவது புல்லாய், பூடாய், மரமாய், புழுவாய்… எல்லாம் உயிருள்ள பொருள்கள் தாம்; என்றாலும் அவைகளுக்குள்ளேயும் நாம் உயர்ந்திருப்பதாக நமக்கு ஒரு கர்வம். ‘நமக்கு மேல் ஒன்றும் கிடையாது; நமக்கு மேல் வளர்ச்சியுடைய பொருள் இருக்கின்றதென்றால், அது நாமாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற அளவில் அகங்காரம் கொண்டிருக்கின்றோம். மனிதனுக்குரிய சிறப்பு இயல்பாகச் சொல்லப்படுகின்றது இந்த உணர்வு. அதையும் கூட ஜடப் பொருளின் ஒருவகை இயக்கத்தால் கிடைப்பது என்று பேசிவிடுகின்றார்கள். தன்னுணர்வின் வெளிப்பாடாக இருக்கின்ற சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தம் என்று சொல்லுகின்ற – ஐந்து வகையான பொறி உணர்வுக்கும் அடிப்படையாக இருக்கின்ற – ஐந்து பொறிகளினாலே உணரப்படுகின்ற உணர்வுகள், அந்த உணர்வின் அடியிலே தோன்றுகின்ற சிந்தனைகள், அந்தச் சிந்தனையின் வெளிப் பாட்டின் வழியாகத் தோன்றுகின்ற கருத்துக்கள், அந்தக் கருத்துக்கள் தோன்றுவதனாலேயே ஒன்றோ டொன்று மோதுகின்ற எண்ண ஓட்டங்கள் இவையனைத்தும் ஜடப் பொருளின் இயல்பாம். எதை எடுத்தாலும் அதுதான் அதன் இயல்பு என்று சொல்லுகின்றவர்களுக்கு எதையுமே விளங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை. ஆனால், அதே நேரத்தில் அது அப்படி இல்லை என்று நிரூபித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையிலே நாமும் இல்லை.
இதுவரையிலே சொல்லப்பட்ட இந்த உலகாயதத்தைத் திருப்பிப் பார்த்து விடலாம். காணப்படுகின்ற இந்தப் பிரபஞ்சம் என்று சொல்லுகின்ற ஒன்று அணுப் பொருளின் கூட்டம். அணுப்பொருள் என்று சொல்லும்போது நாம் இன்றைக்கு விஞ்ஞானம் காட்டுகின்ற ஆட்டம் (atom) இருக்கிறதே, அது என்று கருதாமல் அதனையும் உளப்படுத்தியிருக்கின்ற அடிப்படைப் பொருள் (basic material) என்று கருதிக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையான பொருள்கள் பல்வேறு தன்மையில் பல்வேறு அளவையில் கூடுகின்றன. அப்படிக் கூடும்பொழுது பல்வேறு வடிவுபெற்ற பொருள்களாகப் பரிணமிக்கின்றன. பரிணமிக்கின்ற பொருள்கள் உயிரற்ற ஜடப் பொருள்களாகவும், நீங்கள் நினைக்கின்ற உயிருள்ள பொருள்களாகவும் பரிணமிக்கின்றன. ஜடப் பொருள் களாக இருக்கும்பொழுது அவற்றிற்குச் சில இயல்புகள் உண்டாகின்றன. உதாரணமாக, இந்தத் தரை இருக்கிறது. அதற்கென்று ஒரு வடிவம், உருவம் கொடுக்கப்படும் போது வேறு சில இயல்புகள் தோன்றுகின்றன. உயிருள்ள பொருள்களாக மாறும் பொழுது அதற்கென்று சில இயல்புகளும் வருகின்றன.
வெகு தூரத்தில் இருக்கின்ற அண்டங்கள் என்று சொல்லுகின்றோமே, பிற அண்டங்கள் எல்லாம் சேர்த்துத்தான் பிரபஞ்சம் என்று சொல்லுகின்றோம். அதற்கு மேல் ஏதாவது இருந்தால், அதையும் சேர்த்துக் கொள்ளட்டும்.
இனி, உயிருள்ள பொருள்களாக மாறும் பொழுது அவற்றின் அடிப்படையிலும் ஜடப் பொருள்களுக்கு உள்ள இயல்புகள்தாம் இருக்கின்றன. உண்மையான கருத்துக்கள், எண்ணங்கள் என்று சொல்லுகின்றீர்களே, அவைகளும் உண்மையானவைகள் அல்ல. இந்த ஜடப் பொருளாகிய மேட்டர் (matter) இருக்கிறதே, அதற்கு உரிய இயல்புதான். கருத்துக்கள் முதலியவையும் அவை முன்னே காணுகின்ற இயல்புகள், காண முடியாத இயல்புகள் என்ற அளவில் உலகத்தில் எதுவுமே இல்லை. ஜடப் பொருள்களின் கூட்டம், ஜடப் பொருள்களின் இயக்கம், ஜடப் பொருள்களின் இயல்பு என்று உலகாயதார்கள் இவ்வாறு மிக எளிதாக கூறி முடித்து விட்டார்கள். இந்தச் சுலபமான முடிவில் சார்புக் கொள்கையும் (theory of relativity) கொண்டு வந்து சேர்த்துவிட்டு, காலத் தத்துவத்தையும் அதில் ஏற்றிப் பார்த்து அதுவும் அதற்கு இயல்பு என்று சொல்லுகின்ற அளவில் அவர்களுடைய உலகாயதம் வளர்ந்திருக்கின்றது.
இனி, இவையெல்லாம் முதற்சொற்பொழிவில் சொன்னோமே, அந்த மின்சாரம் கண்ட விஞ்ஞானிகள் பேசுவது போலும் என்று நம்முடைய நாட்டு அன்பர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இனி, பக்திமான்கள் அதாவது பிரசாதம் கண்டவர்கள் – பேசுகின்ற பேச்சை அடுத்தபடியாகப் பார்க்கப் போகிறோம். அது ஆன்மிகம் (spiritualism) எனப் பெறும். ஆன்மா என்று நினைத்தவுடனேயே ஒரு கிளுகிளுப்பும் உணர்ச்சியும் தோன்றுகிறது. ஆன் மிகத்தைப் பற்றிச் சிந்திக்கிறவர்களுக்கு; அல்லாதவர் களைப் பற்றிய பேச்சே இல்லை. இந்த நாட்டில் அதாவது கீழை நாட்டில் தோன்றுகின்ற சமயங்களைப் பற்றிச் சொன்னேனே, அவற்றினுள்ளே இரண்டே இரண்டு முக்கியமான சமயங்களை எடுத்துக் கொள்கிறேன். புத்த சமயம் ஒன்று. நம்முடைய இந்து சமயம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று. (இந்து சமயம் என்று சொல்லப்படுகின்ற என்று கூறப்படுகிற அதற்கென்று ஒரு வடிவம் கிடையாது. இதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இதனைத் தோற்றுவித்தவர் யாரென்றும் கூற முடியாது.)
இந்து சமயம் என்பதற்கு வேதத்திலிருந்து நேற்று முன்தினம் காலையில் வந்து ‘ஓம் சக்தி’ பாடிய பாரதி வரை உள்ள அத்தனை பேரும் எத்தனையோ விதமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவைகளெல்லாம் ஓரளவு உண்மையே தவிர, முற்ற முடிந்த உண்மையாகா. புத்த சமயத்தைப் பொறுத்த மட்டில் புத்தர் பல கொள்கைகளை வகுத்தார். அதற்குப் பின்னர் ஹீனயானம், மஹாயானம் எனப் பிளவுபட்டாலும் அடிப்படையில் புத்தருடைய சமயத்தை எடுத்துக்கொண்டோமேயானால் அது ஒரு வரலாறாகும். ஜடப்பொருள்களைப் பற்றி உலகாய்த வாதிகள் எப்படி ஆராய்ந்தார்களோ அப்படியே பௌத்தர்களும் ஆராய்ந்தார்கள். அதற்குமேல் புத்தர் போன ஒரு படி என்னவென்றால், ஜடப்பொருளின் இயல்பு வகையில் ஆன்மாவினுடைய இயல்பு இது என்ற அளவிற்கு ஒன்றைச் சொன்னதுதான். ஆன்மாவினுடைய இயல்பு என்று சிலவற்றைக் கூறினாரே தவிர, ஆன்மாவிற்கு மேற்பட்ட பரம் பொருள் என்ற ஒன்று இருக்கின்றதா என்றால், அதற்குப் புத்தன் வாயே திறக்கவில்லை. புத்தனுடைய சீடன் ஆனந்தன், பிம்பிசாரனிடம் போய்ப் பேசுகிறான். பிம்பிசாரன் கேள்வி கேட்கிறான். “ஆனந்தா, மறு பிறப்பு ஒன்று உண்டு என்று நம்புகிறாயா?” “குருதேவன் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை” என்பது ஆனந்தனின் விடை. “சரி கடவுள் உண்டு என்று நம்புகிறாயா?” என்ற வினாவிற்குக் ”குருதேவர் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை” என்றே விடை தருகிறான். இப்படி மூன்று கேள்விகளையும் மிக அழகாக மறுத்து விடுகின்றான். அதிலும், இல்லையென்று ஆனந்தன் சொல்லாமல் ‘குருதேவர் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை’ யென்று சொன்னானே தவிர, இது உண்டு இல்லை என்ற ஆராய்ச்சியில் இறங்கவில்லை. ஆகவே, பௌத்தர்கள் ஆன்மாவை ஒத்துக் கொண்டார்கள். ஆன்ம இலக்கணத்தை ஒத்துக் கொண்டார்கள். இந்த ஆன்மா அடையக்கூடிய பயன்களை ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இந்த ஆன்மாவிற்குரிய பயன்களைத் தரக்கூடிய கர்த்தா ஆகிய ஆண்டவனை மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை. அது அவர்களுடைய ஆன்மிக சமயம். உலகாயதர் களைவிட அதிகமாக ஒருசில படிகளை ஏறிப் போய் விட்டார்கள் என்பது உண்மை.
சென்னைப் பட்டினத்திற்கு வந்தீர்களே யானால், கலங்கரை விளக்கம் (lighthouse) என்று ஒன்று இருக்கும். புதிதாக வருகிறவர்கள் அனைவரும் மேலே ஏறிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கிறுகிறுவென்று மேலே ஏறி, ஓடிப் போய்விடுகின்ற பையன்களும் உண்டு. கொஞ்சம் ஏறிப் போனவுடன் இடுப்பையும், முழங்காலையும் பிடித்துக்கொண்டு பாதியிலே உட்கார்ந்து கொண்டு ‘லைட் ஹவுஸ் பார்த்தது போதும், அம்மா!’ என்று சொல்லிவிட்டு, ஊருக்கு வந்த பிறகு ‘ஏம்பா லைட் ஹவுஸ் பார்த்தாயா’ என்று கேட்டால் ‘ஆஹா, பார்த்தேனே!’ என்பவர்களும் உண்டு. இவர்கள் ஏறினது கால்வாசி தான். ஆனாலும் ஏறாத என்னைவிடக் கொஞ்சம் பாதித்தூரம் ஏறினவர்கள்! உயர்ந்தவர்கள் தாமே பாதியாவது ஏறிவிட்டார்கள் இல்லையா? எனவே, அதுதான் லைட் ஹவுஸ் என்று கருதினால் தப்பு இல்லை. புத்தனுடைய நிலைமையும் அப்படிப் பட்டதுதான். ஆன்மாவை ஏற்றுக்கொள்ளுகின்ற புத்தன், ஆன்ம இலக்கணங்களை ஏற்றுக் கொண்ட புத்தன், அந்த ஆன்மாவின் இலக்கணங்களை அனுபவிக்க வேண்டுமேயானால், ஒரு கர்த்தா வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆகவே, ஆன்மிகத் துறையின் முதற்படியில் நிற்கின்றவன் புத்தன். இனி, அதற்கு அடுத்தபடியாக இந்த வடிவமற்ற இந்து சமயம் என்று சொன்னேனே அது பற்றிக் காண்போம். நிர்த்தாரணம் பண்ணக் கூடிய அளவில் இந்து சமயத்தில் வெகுதூரம் முன்னேறிக்கொண்டு போயிருக்கிறார்கள். மேலை நாட்டுக்காரர்களைப் பொறுத்தமட்டில் அதுவும் இந்த உலகாயதவாதிகள் இருக்கின்றார்களே அவர்களைப் பொறுத்தமட்டில் – புத்த சமயம் மிகவும் நன்றாகப் பிடிக்கும் அவர்களுக்கு. ஏனென்றால், அவர்கள் படிக்குமேல் ஒருபடிதான் போயிருக்கிறான் புத்தன். எனவே, விரும்புவது இயல்புதானே? உலகாயதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மேலை நாட்டார்கள், உலகாயதத்திற்குமேல் ஒருபடி சென்று ஆன்மாவை மட்டும் ஒத்துக் கொள்ளுகின்ற பௌத்தத்தைத் தங்களுடையதாக ஏற்றுக் கொள்ளு கின்றார்கள். இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம். மேலை நாட்டவர்க்குப் புத்த சமயத்தில் இருக்கின்ற ஈடுபாடும், ஈர்ப்பும், உணர்வும் மற்றச் சமயங்களில் இல்லை. நார்த்ரோப் என்ற அறிஞரும் புத்த சமயத்திற்குத்தான் அதிக மரியாதை தருகின்றார். ‘அடுத்த உலகம் என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்த மாதிரியெல்லாம் புத்தனிடத்தில் பேச்சே இல்லை’ என்று மிக அற்புதமாய் அச்சமயத்தை நார்த்ரோப் வியந்து பேசுகின்றார்.
மூலையிலே நின்றுகொண்டு வித்தைக்காரன் பேசுகிறான். எதுகை மோனையோடு கூடக் கடகட வென்று பேசுகிறான். அவ்வளவு பேரும் நின்று கேட்கின்றார்கள். ஆனால் என் மாதிரி பேசுகின்ற பொழுது ஒருத்தன் கூடக் கேட்கமாட்டேன் என்கின்றான். ஏன்? அவர்களுடைய எல்லையிலே நின்று அவனால் பேச முடிகின்றது. அந்த அளவை மீறும்பொழுது யாருக்கும் ஈடுபாடு ஏற்படுவதில்லை. அந்த நாட்டுக்காரன் எந்த அளவில் உணருகின்றானோ அந்த அளவில் புத்தன் நின்று பேசுகின்றான். மறு உலகம், பிற உலகம் என்றெல்லாம் பேசாத இந்தப் புத்த சமயத்தை ஏற்றுக் கொள்கின்றேன்’ என்று பேசுகிறார், ‘கிழக்கும் மேற்கும்’ என்ற சிறந்த நூலை எழுதிய அறிஞர் நார்த்ரோப்.
இனிப் புத்த சமயத்தின் அடிப்படையில் இருக்கின்றது தியானம். புத்தன் தியானம் (contemplation) என்று சொல்கிறானே அது என்ன என்று கேட்க விழைகிறோம். சர்க்கரை இனிக்கும் என்று சொல்லுகிறார்கள். ‘ஏன் சார், இனிப்பு என்றால் என்ன? என்று கேட்டால், ‘அது ஒரு ருசி’ என்றுதான் கூற முடியும். நாக்கில் போட்டால்தான் தெரியும். இந்தப் புத்தர் சொன்னாரே அக நோக்கு. இந்த அக நோக்கை அறிவின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், மற்றைச் சமயத்தார் சொல்லுகின்ற பிற உலகம், கடவுள் இவையெல்லா வற்றையும் புத்தர் சொல்லவில்லை. அந்த அளவில் அவர்கள் திருப்தியடைகிறார்கள்.
இனிக் கீழைநாட்டில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் அதாவது உள்ளத்தில் எழுகின்ற அனுபவத்தைப் (experience) பொறுத்தே அமைகின்றன. Experience என்ற ஆங்கிலச் சொல்லுக்கு எவ்வளவு ஆழமான அழகான பொருளைத் தத்துவ வாதிகள் சொல்லுகின்றார்களோ, அந்த அளவிற்கு அனுபவம் என்ற சொல்லிலும் பொருள் காணவேண்டும். வேறு ஒரு வழியும் தெரியவில்லை. ஆன்மிகம் என்பது அனுபவத்தினால் அனுபவிக்கின்ற ஒன்றாகுமே தவிர, இது இன்னது என்று சொல்லித் தெரியாத ஒன்றாகும் என்று இந்தக் கீழை நாட்டுக்காரன் நினைக்கின்றான் போலும். ‘தாய், தன் மணாளனோடு ஆடிய சுகத்தை மகள் கேட்டால், தாய் என்ன சொல்ல முடியும்?’ இவ்வாறு வள்ளலார் அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார். இதற்கு மிகவும் முன்னரே தொல் காப்பியரின் ‘அகம்’ என்ற சொல்லுக்கு ‘இன்னோர்க்கு இன்ன விதமாய் இன்னதென்று எடுத்துரைக்கப் படாததாய், உள்ளதே அகம்’ என்றனர் உரையாசிரியர். உரைக்கப்படாததே தவிர அதனை அனுபவிக்க முடியும். சொல்லினால் சொல்லி விளங்க வைக்க முடியாது. சர்க்கரை இனிக்கும் என்று சொன்னால் விளங்கப் போவதில்லை. அதே போலத்தான் ஆன்மிகம் என்பது அறிவின் துணைகொண்டு ஆராயப்படும் ஒன்றன்று; உணர்வின் துணை கொண்டு அனுபவிக்கப்படுவது.
மிகவும் விரிவாக மாயைபற்றி முப்பது நூல்கள் (volume) எழுதிய சங்கரர் கடைசியில் எங்கே வந்து முடிக்கிறார் என்று சொன்னால், வியப்பாக இருக்கும். அறிவின் துணைகொண்டு ஓர் அளவுதான் ஆராய முடியும். அதற்குமேல் பொருளை அனுபவிக்க வேண்டுமானால், ‘பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ மூடமதே’ என்று பாடும் உணர்வின் துணையினால்தான் முடியும்.
ஆகவே, நினைத்துப் பார்ப்போமேயானால், இளமையில் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அந்தப் பொருளின் இயல்பு என்ன என்று ஆராய்கின்ற வயதில் அனைவரும் அப்படித்தான் இருப்பர். அதனால் தவறு ஒன்றுமில்லை. ஆனால், ஒருநிலை வரும்பொழுது இந்த ஆராய்ச்சியில் பொழுதைக் கழிப்பதைவிட அனுபவிக்க வேண்டும் என்ற நிலை வருகிறது. அத்தகைய ஒருநிலை எல்லோருடைய வாழ்விலும் வருகிறது. சிலருக்கு இளமையில் இந்நிலை கிட்டலாம். சிலருக்கு முதுமையிலே கிட்டலாம். சிலருக்குப் பல பிறவியிலும் கிட்டாமலும் இருக்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். கீதைக்காரன் கரும யோகம், ஞானயோகம் என்று பல யோகங்களைச் சொல்கிறான். அவற்றைக் கேட்ட காண்டீபன், ‘இப்படிப் பல யோகங்களைச் சொல்வதானால், ஒரு மனிதனுடைய பிறப்பு முடியுமுன் இவற்றைக் கடைப் பிடிக்க முடியாதே கண்ணா… என்னுடைய முடிவுதான் என்ன?’ என்றான். ‘அதைப்பற்றி ஒன்றுமே கவலைப்படாதே. எந்த நிலையில் போய் முடிகின்றாயோ அங்கிருந்து அடுத்த பிறவியில் தொடரலாம்’ என்றான் கண்ணன். அதை மனத்தில் வாங்கிக் கொள்வோமேயானால் ஒருநிலை வரும் பொழுது அனுபவத்தைப் பற்றிச் சிந்திக்க முடிகின்றது. அந்த அனுபவத்தைத்தான் புத்தன் பேசுகின்றான். அனுபவமாகிய ஒன்று (மெடிட்டேஷன் என்ற பெயரிலே சொல்லப்பட்டாலும் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிலையில் சொல்லப்பட்டாலும் சரி எவ்வாறு பிறக்கிறது? பொருளைப் பார்க்கின்ற பொழுதும், அது நம்மோடு உறவாடும் பொழுதும், மோதும் பொழுதும் இரண்டு வகையில் நாம் எதிரொலிக்கின்றோம். நாம் பொருளை அனுபவிக்கின்றோம். இந்த நிலைதான் நாம்,பொருள், அனுபவம் என்ற மூன்று அற்ற நிலை.)
இன்னும் சிலர் பொருளை அனுபவிக்கின் றார்கள். ஓர் உதாரணம் சொன்னால் விளங்கிக் கொள்ள முடியும். திருவாசகத்தைப் பற்றிப் பாடுகிறார் வள்ளலார். ‘மணிவாசகப் பெருமானே, உம்முடைய திருவாசகத்தை நான் பாடுகின்றபொழுது நற்கருப்பஞ் சாற்றினிலே, தேன் கலந்து, பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து என் உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’ என்று பாடுகின்றார். திருவாசகத்தை என்னுடைய சிறிய வயதிலிருந்தே படித்தேன். ஆனால் ஒருநாள்கூடத் தேனும் பாலும் போலச் சுவைக்கவில்லை. ஆகவே, அடிப்படை எங்கே உளது? திருவாசகத்தைச் சொல்லுகின்றபொழுது நான் கலந்து பாடவேண்டும். படிக்கின்ற நான், படிக்கப் படுகின்ற திருவாசகம், படித்தலாகிய செயல் மூன்று இருக்கின்றவரை நான் வேறுதான் திருவாசகம் வேறுதான். நடுவிலே சப்தம்தான் வரும். ஆனால், நான் என்ற பொருள் திருவாசகத்தில் கரைந்துவிடுமே யானால் தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்தது போன்ற இன்பம் தரும். இதனைத்தான் தியானம் (meditation) என்று சொன்னார்கள். இந்த நாட்டுக்காரன் தியானம் என்று சொல்லும்பொழுது, புறத்தில் செல்லுகின்ற பொறி புலன்களையெல்லாம் அடக்கு, அடக்கு என்றுகூடச் சொல்லுவதில்லை. அடங்கு என்றுதான் சொல்லுகிறான். ஒரு செயலைச் செய்தால் எதிர்ச்செயல் உண்டு என்று தெரியுமல்லவா? (action has got equal and opposite reaction) ஆகையினாலே அடக்கு என்று கூறாமல் அடங்கு என்று சொல்லுகின்றான்.
இராமகிருஷ்ணருடைய கதையைச் சொன்னால் நன்றாகப் புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் தவம் பண்ண வேண்டும் என்று போனார். ஆற்றங்கரையில் உட்கார்ந்தார். தவம் பண்ண வேண்டுமானால் கண்ணை மூட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே! கண்ணைத் திறந்தே உட்கார்ந்திருந்தார். யாரோ ஒருத்தி அந்த வழியில் போனாள். அவளைப் பார்த்துச் சிந்தனை வந்தது. தவம் கலைந்தது. ‘சேச்சே. கண்ணைத் திறந்து இருந்ததால் தான் இந்தப் பிரச்சினை’ என்று, மறுநாள் கண்ணை மூடிக் கொண்டார். அவள் வழக்கம்போலத் தண்ணீர் எடுக்கப் போனாள். அவள் காலில் போட்டிருந்த மெட்டி கல் கல்லென்று ஒலித்தது. அன்றைக்கும் தவம் காலியாயிற்று. மூன்றாம் நாள் பார்த்தார், ‘இந்தப் பொறி புலன்கள் எல்லாம் திறந்திருந்தால்தான் இந்த வம்பு என்று நினைத்துக் கொஞ்சம் பஞ்சு எடுத்துக் காதையும் அடைத்துக் கொண்டார். கண்ணும் மூடியாயிற்று; காதும் மூடியாயிற்று. ஆனால், இந்த மனம் இருக்கின்றதே அது வினோதமான ஒன்று. காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டு மென்றால் அலாரம் (alarm) வைக்க வேண்டியதில்லை. அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தால், காலையில் எழுந்து விடலாம். இவருக்கு அந்த நேரம் வந்ததோ என்னவோ தெரியவில்லை. கண்ணும் மூடியிருக்கிறது. காதும் மூடியிருக்கிறது. இருந்தாலும், ‘இந்த நேரத்துக்குத்தானே அந்த அம்மை தண்ணீருக்குப் போவார்’ என்று நினைத்தார்; உடனே கண்ணைத் திறந்துவிட்டார்! ஆகவே, பொறி புலன்களை அடக்குவதனால் மட்டும் தியானத்தைச் செய்ய முடிவதில்லை என்பது தெளிவாகிறது.
ஆகையினால் இந்த நாட்டுக்காரராகிய திருமூலர் ‘ஐந்தும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்; ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை’ என்றார். இந்த நாட்டுக்காரருடைய ஆன்மிகம் எப்படிப் போகிறது என்று பாருங்கள். பொறி புலன்களின் வலுவை அறிந்த இவர்கள் பொறி புலன்களை அடக்குவதினாலேயே முழுப் பயனையும் அடைய முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் அதை அடக்குவதனால் மோட்சம் போக முடியாது என்று கூறினர். இதனைக் கருதித்தான் வள்ளுவர் “ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லாதவர்க்கு” என்றார். அடக்கினவர் மோட்சம் போவரென்றால் ஹிப்பிக்கள் அனைவரும் செயற்கை முறைகளில் பொறி புலன்களை அடக்கியவர்களே; ஆனால், அதனால் பயனில்லை என்பதை நம்மவர் கூறினர்.
‘ஐந்தும் அடக்கு, ஐந்தும் அடக்கு’ என்பார் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை என்றால், பொறி புலன்கள் அடங்க வேண்டும் என்பதில்லையா? உன்னுடைய உறுதி காரணமாக (will power) அவைகள் தாமே அடங்க வேண்டும். தாமே அடங்குவதென்றால்கூட, இடர்ப் பாடாகத்தான் இருக்கும். எவ்வளவு அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட அந்தப் பக்கம் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்களே யானால், காதில் விழத்தான் செய்யும். ஆகவே, இவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நீ அதை அடக்கவே முடியாது; அவைகளும் தாமே அடங்கா. அப்படியானால், என்ன வழி? இந்த நாட்டுக்காரன் மனத்தையும் எண்ணங்களையும் வேறு திசையில் திருப்பு என்று சொன்னான். மடைமாற்றம் (sublimation) என்பது எளிதில் அனைவருக்கும் முடியாது என்பதால் இந்த நாட்டுக்காரன் மனத்தையும் பொறி புலன்களையும் திசை திருப்பச் சொன்னான். பஞ்சை வைத்தாலும்கூடக் கண்டிப்பாகச் சப்தம் கேட்கும். கேட்பது உறுதி என்றவுடன் நல்லதைக் கேட்டால் பரவாயில்லை என்றான். இந்த அளவிற்குப் போகிறான் புத்தன். ‘சத் சங்கம்’ என்று கூறினான். அதாவது பலர் கூடிப் ‘புத்தஞ் சரணம் கச்சாமி’, ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருப்பது நலம் என்றான்.
இந்த நாட்டுப் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு; பர்மா, இலங்கை, புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு. பர்மாவிற்குப் போவீர்களானால், அவர்கள் மூங்கிலால் செய்த ஒரு மணியை வைத்து அடித்துக் கொண்டேயிருப்பார்கள். இது ஏன் எனச் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால், மனத்தைத் திருப்திப் படுத்துவதற்குத் தானே தவிர வேறொன்றுமில்லை. ‘டொன், டொன்’ என்ற ஓசையை ஆதாரமாகக் கொண்டு புத்தஞ் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுவார்கள். பொறி புலன்களை அடக்க முடியாதென்பதை அறிந்த இந்த நாட்டுக் காரர்கள் ‘திசை திருப்பு’ என்று சொல்லி விடுகின்றார்கள். கண்ணால் பார்க்கிறேனென்றால் அதற்கு ஒரு விக்கிரகம் வேண்டுமா என்று அதற்கு மேலே ஒருபடி போகின்றான். விக்கிரக வழிபாடு, எங்குமே வியாபித்திருக்கின்ற ஒன்று. அதைப்பற்றி மிக அழகாகச் சொல்லுவார்கள். கடவுள் ஒருவன் இருக்கிறானோ இல்லையோ, அதைப்பற்றி ஒன்றும் கவலை வேண்டா. இன்று உன்னுடைய ஆன்மா அமைதி அடையக் கூடுமானால் அதனால் இப்பொழுது ஒரு திருப்தி. என்னுடைய மனைவி 250 மைலுக்கு அப்பால் இருக்கிறாள். உடல் நலமில்லாம லிருக்கலாம். வீட்டில் இருக்கலாம். தூங்கிக் கொண்டிருக்கலாம்; உட்கார்ந்து கொண்டும் இருக்கலாம். மனம் ஏதோ ஒன்றை நினைவில் கொண்டு அமைதி அடைகிறது. இந்த நாட்டில் தூரத்தில் இருப்பவர்கள் எப்படியிருந்தாலும் “ஒன்றும் இருக்காதுங்க, நீங்க ஏன் கவலைப் படுகின்றீர்கள்” என்று அமைதியைத் தருகின்ற பேச்சுமுறை வழக்கில் இருக்கிறது; ஆன்மிகத்திற்கு மட்டும் இல்லை, உலகியலிலும் கூட ஒருவருக்கு ஒருவர் ‘கவலைப் படாதீர்கள்; ஒன்றுமே இருக்காது’ என்று கூறும் மரபுண்டு. ‘எல்லாம் முடிந்தது’ என்ற நிலையிலும்கூட இந்த நாட்டில் எத்தகைய தந்தி கொடுப்பார்கள் என்று தெரியுமா? ‘டேஞ்ஜர்’ (danger) என்றுதான் தந்தி அடிப்பார்கள். இதை ஒரு பயித்தியக்காரத்தனம் என்றுகூட நான் ஒரு காலத்தில் நினைத்ததுண்டு. ஆனால், இன்றோ அதிர்ச்சி கொடுக்கக்கூடாதென்ற நல்ல எண்ணத்தால்தான் மனித மனத் தத்துவத்தை உணர்ந்து அவ்வாறு செய்கிறார்கள் என்பதை அறிகின்றேன்.
மேலை நாட்டுக்காரர் நாகரிகத்தைப் பற்றிப் பேசுகின்றதையும் நம் நாட்டுக்காரர் பேசுகின்றதையும் கவனித்தீர்களானால் ஒன்று நன்றாகத் தெரியும். புத்தனுடைய உபதேசத்தில் கீழே பெறப் பெற்றது ஒரு பகுதியாகும். பிற்காலத்தில் ஏசுநாதரும் இதனைச் சொல்கின்றார். புத்தன் தியானத்தில் நல்லது, கெட்டது என்ற வேறுபாட்டிற்கு இடமில்லை என்றான். பிறர் படும் துன்பம், துயரம் ஆகியவற்றை இரு நாட்டாரும் பார்க்கும்பொழுது அவனுக்கும் இவனுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். மேலை நாட்டார்கள், மக்கள் துயரத்தைத் துடைப்பதற்காகத் தீர்க்கதரிசிகள் முயன்றதைப் பற்றிக் கூறுவர். ஆனால், இங்கே பிறருடைய துயரத்தைப் பார்க்கின்றான் புத்தன். கருணையையுடைய புத்தன் அதைப் பெரிதுபடுத்த வில்லை. தன்னாலே முடிந்த அளவுக்கு அந்தத் துயரத்தைப் போக்க முயன்றான் என்பதில் தவறே இல்லை. ஆட்டுக்குட்டிக்குப் பதிலாகப் பலிபீடத்தில் தன் கழுத்தைக் கொடுக்கப் போகிறான். ஆனால், “சகோதரர்களே, நீங்கள் பாவத்திற்கு ஆளாகப் போகிறீர்கள்; அதனால் நரகத்திற்குப் போவீர்கள்” என்று சொல்லவில்லை.
காரணம், எல்லா உயிர்களையும் படைத்தவன் இறைவன், எல்லா உடல்களிலும் உயிர் வடிவமாக இருப்பவன் ஆண்டவனே. நீ நரகத்திற்குப் போவாய் என்று சொல்கின்ற அளவுக்கு அதிகாரம் எவனுக்கும் இல்லை. அதனால்தான் இந்த நாட்டு ஆன்மிகவாதி எவனும் மத மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இந்த உலக வாழ்க்கையே நிலைபேறு இல்லாதது என்றால், இந்த உலகில் நீ நல்லவன் என்றால் அதுவும் நிலைபேறு இல்லாதது தானே! ஆகவே, நிலைபேறு இல்லாததொன்றை எதற்காக விளம்பரப்படுத்த வேண்டும்? வலி இருக்கிறது, வயிற்று வலி. ஏதோ உண்ணக் கூடாததனை உண்டிருக்கலாம். இதை ஒரு பிரமாதமாக விளம்பரப்படுத்திக் கொள்கின்ற சூழ்நிலை தேவையில்லை. இந்த நாட்டுக்காரன் வலி முதலிய துயரத்திலுங்கூட ஒருவகை நடு நிலைமையை (equanimity) ஏற்றுக் கொள்ளுகின்றான். வலி என்பது நிலைபெற்றதன்று. சுகம், இன்பம் என்பவை எப்படி நிலைபேறு இல்லாதனவோ, அப்படித்தான் துன்பம், துயரம் ஆகியனவும் நிலைபேறு உடையன அல்ல. எனவே, நிலைபேறு இல்லாத வாழ்க்கைக்காக நீ ஒன்றும் சிரமப்பட வேண்டா. அவற்றைப் போகிற போக்கில் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார் கள் இந்த நாட்டில் தோன்றிய புத்த சமயக்காரர்கள்.
இந்து சமயத்தை எடுத்துக்கொண்டால், ஒன்றே ஒன்றைத்தான் பார்க்க வேண்டும். ஆன்மிகம் என்று சொன்னவுடன் திருநீறு பூசுதல், உருத்திராட்சம் அணிதல், தேங்காய் உடைத்தல், பிரசாதம் கொண்டு போதல் ஆகியவற்றுடன் குழப்பிவிட வேண்டா. ஆன்மிகத்திற்கும், இவற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இவை ஒன்றுமே இல்லாமலும் ஆன்மிக வாதியாக இருக்க முடியும். கோயிலுக்குப் போகாமல், விபூதியோ நாம்மோ போடாமல், உருத்திராட்சமோ, துளசிமணியோ அணியாமல் எந்தவிதத் தடையிலும் கட்டுப்படாமல் சிறந்த ஆன்மிகவாதியாக இருக்க முடியும்.இதையும் இந்நாட்டார் ஏற்றுக் கொண்டார்கள். அந்த நாட்டுக்காரர்கள், நீங்கள் என் உபதேசத்தை நம்புவீர்களேயானால், இந்தக் காரியங் கைகூடச் செய்யலாம்; இல்லாவிட்டால் உங்களுக்கு நரகம்தான் சித்திக்கும்’ என்றார்கள். இதன் எதிராக இந்த நாட்டுக் காரன் ‘நீ என்ன செய்தாலும் கவலையில்லை; உன் மனம் எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்’ என்றனர். இதை மக்களுக்குப் புரியவைப்பதற்காக எவ்வளவு தூரம் போனார்கள் தெரியுமா?
மனிதனுக்கு நிறுவப்பட்டுள்ள கடமைகளைச் செவ்வனே செய்தால்தான் மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்று கூறினார்கள். இந்த அடிப்படை எதை உணர்த்துகின்றது? ஆன்மிகம் என்பது சடங்குகள் அன்று என உணர்ந்து, அவற்றின் மேல் உட்கார்ந்திருப்பவன் எவனோ அவன்தான் ஆன்மிக வாதி. இன்றைய நிலையில் பெரிய பெரிய பட்டை யாகப் போட்டுக்கொண்டு, படுத்தால் ‘முருகா’, நின்றால் ‘முருகா’, உட்கார்ந்தால் ‘முருகா’ என்று சொன்னால்தான் அவன் பெரிய பக்திமான், ஆன்மிக வாதி என்று சொல்லுகின்ற அளவு குழப்பம் ஏற்பட்டு விட்டது. உண்மையிலேயே இவற்றிற்கும் ஆன்மிகத் திற்கும் தொடர்பே இல்லை. அப்படியானால் எது ஆன்மிகம்? ஆன்மா என்ற ஒன்றைச் சிந்தித்தால், அதைச் சிந்திக்கத் தொடங்கினாலே அது ஜடம் (matter) என்று நினையாதபடி, அதற்கு அப்பாற்பட்ட ஒன்று என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளுகிறான். அந்த நிலையே ஆன்மிகத்தின் தொடக்கமாகும். ஏற்றுக் கொண்ட ஆன்மிக அனுபவ நிலையை நிரூபிக்க முடியுமா என்றால், நிரூபணம் பண்ண முடியாத ஒன்றாகும் இது.
இந்த உலகாயதவாதி இருக்கின்றானே அவன் தான் நிரூபணம் இயலாது என்பதைக் காட்டினவன். எத்தனைபேர் அணுவையும், எலெக்ட்ரானையும், புரோட்டானையும் கண்ணால் கண்டு வியந்தவர்கள்? ஒருவன் என்னவோ சொல்கிறான், நாம் நம்பு கின்றோம். ‘இந்த உலகத்தையெல்லாம் படைத்தவனாகிய கடவுள் என்ற எவனோ ஒருவன் இருக்கின்றான்’ என்று நான்கூடச் சொல்கிறேன்; அதனையும் நீங்கள் நம்பலாமே! ஆகவே, நீங்கள் நம்பும் எல்லாவற்றையும் நிரூபணம் என்ற ஒன்றினால் நிரூபித்துவிட முடியும் என்பது விஞ்ஞானத்திலும் கிடையாது; ஆன்மிகத்திலும் கிடையாது. விஞ்ஞானத்திலும் நம்பிக்கை பெரும்பணி செய்கிறது. ஆன்மிகத் திலும் அவ்வாறே. இந்த நினைவினால் பெறுகின்ற பயன்கள் இருக்கின்றன. அவற்றை நினைத்துத்தான் இவர்களும் வாழுகின்றார்கள், அவர்களும் வாழுகின்றார்கள்.
ஆன்மா என்ற ஒன்றை ஏற்றுக்கொண்ட பொழுது இந்த ஆன்மா உலகம் முழுவதும் நிலைத்திருக்கின்றது என்பதைக் காண்கின்றார்கள். அந்த எண்ணம் வந்ததோ இல்லையோ, வேறுபாடு, மாற்றம் என்ற எண்ணத்திற்கே இடம் இல்லாமல் போய்விட்டது. இங்கேயும் ஆண்டவன் இருக்கின்றான், அங்கேயும் ஆண்டவன் இருக்கின்றான் என்றால் பகை என்ற இடத்திலேயும் ஆண்டவன்தான் இருக்கின்றான்.
நீங்கள் மெட்டீரியலிசத்தில் இருக்கின்றவர்களுடைய வளர்ச்சியையும், ஆன்மிகத்தில் இருக்கின்றவர்களுடைய வளர்ச்சியையும் இப்பொழுது ஒரு தராசில் வைத்துப் பார்க்கலாம்.
பிறரைத் துன்புறுத்தியோ கொன்றோ தம் கொள்கைக்கு இழுத்தல் அவர்களுக்கு இயல்பு. சமுதாயத்திற்காகத் தனி மனிதனைப் பலியிடுவதில் தவறு இல்லை என்று உலகாயதவாதிகள் நினைக்கின்றார்கள். அது அவர்களுடைய அடிப்படைத் தத்துவம். இந்த நாட்டுக்காரன் அப்படி நினைக்கவில்லை. ஈ, எறும்பிலிருந்து மனிதன் வரை சங்கிலித் தொடர்பாக இருக்கின்ற ஆன்மா ஒன்றே என்று நினைப்பதினாலேயே ஈ, எறும்புகட்குக் கூடத் துன்பம் விளைவிக்கக்கூடாது என்று நினைக்கின்றான். இதன் எதிராக உலகாயதன் அனைத்தையும் ஜடப்பொருள் என்றும், அவற்றின் இயல்புகளே குணங்கள் என்றும் குறிப்பதால் ஒருவன் ஒன்றை நல்லது அல்லது உயர்ந்தது என்று கருதினால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களை வற்புறுத்தலாம்; அதில் தவறில்லை என்று நினைக்கிறான். ஆன்மிகவாதி இக் கருத்தை ஏற்றுக் கொள்வதே இல்லை. உயர்ந்தது என்று சொல்லுவதே தவறு என்பது எதனால் எனில், இன்றைக்கு இதுதான் உயர்ந்தது என்று ஒன்றை நினைத்தால் நாளைக்கு மற்றொன்று உயர்ந்ததாக இருக்க முடியுமல்லவா? இன்றைக்கு நல்லது என்று நீ நினைக்கின்றது நாளைக்கும் நல்லது என்று யார் சொல்லப் போகிறார்கள்? இன்றைய சூழ்நிலையிலே நீ நல்லது செய்யவேண்டுமென்று நினைத்துச் செய்வ தானாலும் அது பிறருடைய துன்பத்திற்கு ஏதுவாகக் கூடாது.
உலகாயத அடிப்படையில் வந்த அந்த நாட்டில் வளர்ந்த ஆன்மிகத்தில், ‘நீங்கள் பாவிகள் நீங்கள் அஞ்ஞானிகள், உங்களை உயர்வழிக்குக் கொண்டு செல்ல எந்த வழியையும் பயன்படுத்தலாம்’ என்று கூறுகிறவர்கள் உண்டு. இது நல்லது என்று கூறுகிறவர்கள் உண்டு. நல்லது என்று இன்றைக்கு இந்தச் சூழ்நிலையில் நான் ஒன்றை நினைக்கிறேன், அவ்வளவுதான். ஆனால், இதைச் சொல்லுவதற்குக் கூட உரிமையில்லை என்று நினைக்கின்றேன். காரணம், எனக்கு இந்தச் சூழ்நிலையில் நல்லதாக இருப்பது மற்றொரு சூழ்நிலையில் நல்லதாக இருக்குமா என்பது வினா. என்னுடைய சூழ்நிலையில் இன்றைக்கு ஒன்றை நல்லது என்கின்றேன். உன்னுடைய சூழ்நிலையில் அதே ஒன்று நல்லது என்பதை நாம் எப்படிச் சொல்ல முடியும்? உன்னிடத்திலும் ஆண்டவன் இருக்கின்றான், என்னிடத்திலும் ஆண்டவன் இருக்கின்றான். எல்லா வற்றிலும் உள்ளுறைந்து இருக்கின்ற ஆண்டவனைக் கண்டுவிட்ட ஒருவன் பிறரைத் திருத்துவதற்குக்கூடத் தனக்கு உரிமையில்லை என்று நினைக்கின்றான். ஒன்றை நியாயம் என்று கண்டது தன்னுடைய அளவில்தானே தவிரப் பிறரும் அதனை நியாயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்து வதற்கு உரிமை இல்லை என்று நினைக்கின்றான். அதேபோல் ஒருவனைத் துன்புறுத்துவதற்கும் தனக்கு உரிமையில்லை என்று நினைக்கின்றான். ஒருவன் துன்புறுவானேயானால் அவனுடைய துன்பத்தைப் போக்கத் தன்னாலான முயற்சியைச் செய்யலாமே தவிர, அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்று வற்புறுத்துகின்ற அளவுக்கு ஒருவனுக்கு உரிமை இல்லை என்று கூறுகின்ற அளவு இவனுடைய ஆன்மிகம் வளர்ந்து வந்துள்ளது.
காந்திஜியினுடைய வாழ்க்கையிலே இந்த அடிப்படையைப் பார்க்கின்றோம். ஆன்மிகம் என்பதைப் போர்வையாகக் கொள்ளவில்லை அவர். இந்த நாட்டுக்காரன் ஆன்மிகத்தைத் தன் உடம்பில் ஓடுகிற குருதியோடு கலந்ததாக நினைத்தானே தவிர சமயத்தை, அல்லது ஆன்மிகத்தைப் போட்டுக் கொள்கின்ற ஜிப்பாவாகக் கருதவில்லை. ஆகையினால்தான் இவர்கள் சமயம் பற்றிச் சட்ட திட்டம் அதிகம் வகுக்கவே இல்லை. இந்தச் சமயத்தைப் பின்பற்றிய நீ இந்தக் குறிக்கோளை மேற்கொள்ள வேண்டும்; இன்னது உண்ண வேண்டும்; இப்படிக் கோயிலுக்குச் செல்ல வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சொன்னதே இல்லை. இந்தக் கட்டுப்பாடு விதிப்பதே ஆன்மிகத்திற்கு விரோதம் என்ற அளவிற்கு வந்துவிட்டார்கள் இந்த நாட்டு ஆன்மிக வாதிகள். பிற உயிர்களுக்கு இரக்கம் காட்டுதலே ஆன்மிகம் என்று இவன் கருதினான். அந்த உலகாயதவாதி இரக்கம் இல்லாத நெஞ்சினனாய் இருப்பதில் தவறு காணவில்லை. இலங்கையில் வாழ்ந்த அரக்கர் அனைவரும் உலகாயதவாதிகள் என்று கம்பன் சொல்கிறான். அந்த உலகாயதவாதிகள் ‘இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார்கள்’ என்றும் கம்பன் கூறுகிறான். ‘எல்லாம் ஜடம் என்று கருதினதால் இரக்கம் என்ற பொருளுக்கு மதிப்பே இல்லாது போயிற்று. ‘எல்லாம் இறைவன் வாழுகின்ற இடம்’ என்று கருதினதால் இரக்கத்திற்கு ஆன்மிகத்தில் இடம் உண்டு.
இனி, அடுத்ததொரு நிலை தியானம். புத்த தேவன் சொல்லியதிலிருந்து இந்து சமயம் சொன்ன வரையில், பிறருக்காக வாழுகின்ற இயல்பு ஆன்மிகத்தில் இருக்கிறதே தவிர உலகாயதத்தில் இல்லை. தான் கொண்ட கொள்கைக்காக, எதனையும், எவனையும் அழிக்கலாம் என்ற முடிவில் உலகாயத் வாதிகள் போகிறார்கள். ஆன்மாக்கள் இறைவ னுடைய மறுபதிப்பு என்று நினைக்கின்றதனாலேயே எல்லா உயிர்களிலேயும் இறைவன் இருக்கின்றான் என்று கருதுவதனாலேயே பிறர் வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தியாகம் செய்கிறான் ஆன்மிகவாதி.
ஒருவன் ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்கின்றான். புத்தர் ‘இவ்வளவு ஆடுகளும் எங்கே போகின்றன’ என்று கேட்டார். ‘பெரிய யாகம் ஒன்று நடக்கிறது; அதற்காகப் போகின்றன’ என்ற விடை கிடைத்தது. ‘யாகத்தில் இவற்றை என்ன பண்ணு வார்கள்’ என்று கேட்கின்றார் புத்த தேவர். ‘இவற்றைப் பலியிட்டு விடுவார்கள்’ என்ற விடை கிடைத்தது. ‘இது பெருங் கொடுமை, இத்தனை ஆடுகளையும் கொன்று விடுவதனால் எவ்வளவு உயிர்கள் நாசமாகின்றன!’ என்ற இரக்க உணர்வு தோன்ற ஓர் ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டு யாகத்திற்குச் சென்றார். அரச குடும்பத்தில் பிறந்த இவர் ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தன் உயிரைத் தியாகம் பண்ணத் துணிகின்றார். ஆன்மிகத்தை உணர்ந்தவன் தன்னுடைய ஆன்மாவிற்கும் ஆட்டுக் குட்டியின் ஆன்மா விற்கும் வேறுபாடு கருதுவதே கிடையாது. உலகாயதன் தான் கொண்ட கொள்கைக்காக உலகத்தில் உள்ள அனைவரையுங்கூட அழிக்கப் பார்ப்பான். இது இன்று நேற்றுத் தோன்றியதன்று, என்றுமே உள்ளது. ஆகவே, காந்திஜி தம்முடைய பெரிய வாழ்க்கையில் ‘தியாகம்’ என்ற ஒன்றை உயிர்நாடியாகக் கொண்டாரென்றால் அதுதான் ஆன்மிகம். ஆன்மிகவாதி ஒருவனுக்குத்தான் இந்தத் தியாக உணர்வு கிட்டும்.
ஆன்மிகவாதி அறிவின் துணைகொண்டு சமயத்தைக் கட்டவில்லை. ஆன்மிக உணர்வின் துணைகொண்டு கட்டினான். அந்த உணர்வு என்றும் ஒரே மாதிரியாக இருந்ததனால் வேத காலத்திலிருந்து 707 ஜெட் விமானம் பறக்கும் இன்றுவரை அவன் கட்டிய தத்துவத்தின் அடிப்படை மாறவில்லை. அன்றைக்கும் அவனுடைய அடிப்படை இதுதான். இன்றைக்கும் அவனுடைய குறிக்கோள் இதுதான். எவ்வளவுதான் முன்னேறினாலும் உணர்வின் அடிப் படையில் தோன்றும் குறிக்கோள் ஒன்றாகத்தான் இருக்கும். ஆன்மிகவாதி சமுதாயத்தைக் காணுகின்ற காட்சி வேறு, உலகாயவாதி சமுதாயத்தைக் காணு கின்ற காட்சியே வேறு. ஆன்மிகவாதி தனி மனிதனைக் காணுகின்ற காட்சி வேறு; உலகாயதவாதி தனி மனிதனைக் காணுகின்ற காட்சியே வேறு. ஆன்மிகவாதி தனி மனிதனுக்கு ஊறு செய்து உலகத்தைக் காக்க வேண்டும் என்று கருதுவதில்லை. உலகாயதவாதி தனி மனிதனை அழித்துச் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றான். ஆன்மிகவாதி தனி மனிதன் ஒருவனுக்கும் துன்பம் வேண்டா என்று நினைக்கின்றான். ஏன்? தனி மனிதனிடத்திலும் இறைவனைக் காணுகின்றான், சமுதாயத்தினிடத்திலும் இறைவனைக் காணுகின்றான், உலகத்திடத்திலும் இறைவனைக் காணுகின்றான். ஆகவே, தனி மனிதனை அழித்து நன்மையைப் பெற வேண்டும் என்று ஆன்மிகவாதி நினைப்பதே இல்லை.
என்றாலும், புரட்சி என்றால் உலகாயத வாதிதான் புரட்சி பண்ணுகின்றான் என்று நினைக்க வேண்டா. மார்க்சும், லெனினும் வருவதற்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னரே சமய வாதிகள் புரட்சி பண்ணியிருக்கிறார்கள். உலகத்தில் அறிவின் விளக்கம் குறைந்திருந்த காலத்தில் உணர்வின் அடிப்படையில் பேருண்மையைக் கண்ட சமயவாதிகள்தாம் புரட்சி செய்திருக்கின்றார்கள். அந்தப் புரட்சியின் பயன் நீங்கள் நினைப்பது போல் அறிவுப் புரட்சியன்று, பிறரைத் திருத்தி உயர்த்தும் புரட்சியேயாகும். அப்படியானால் சமயத்தின் பெயரில் ஏன் இத்தனை பெரிய சண்டைகள், குழப்பங்கள் என்று கேட்கத் தோன்றும். ‘உலகத்திலே நடந்த சண்டைகளில் தொண்ணூறு பங்கு சமயச் சண்டை கள்தாமே’ என்று கேட்கலாம்.
இதுவரை யான் கூறிவந்தது ஆன்மிகத்தையே தவிர, புற வாதமிடும் சமயத்தைச் சொல்லவில்லை. சமயவாதிகள் வேறு, ஆன்மிக வாதிகள் வேறு. ஆன்மிக வாதி சமயவாதியாகவும் இருக்கலாம்.
சமயவாதிகளால் வளர்க்கப்பட்ட சமயம் வேறு; ஆன்மிக வாதிகள் வளர்த்த சமயம் வேறு. அது போலத்தான் இந்த நாட்டுச் சமயத்திலும், புத்த தேவன் சொன்ன அடிப்படைக் கொள்கைகளே இல்லாமல் அதன்மேல் போலிச் சம்பிரதாயம் போன்ற குப்பை மூடி விட்டது. அதுபோலத்தான் இந்து சமயமாகட்டும், மற்ற எந்தச் சமயமாகட்டும், அவைகளின் அடிப்படைக் கொள்கைகள் மிக எளிமையானவை; யாவரும் பின்பற்றக் கூடியவை. ‘அறிவே இல்லாத மக்களி லிருந்து பெரிய ஐன்ஸ்டீன் வரை புரிந்து கொள்ளும் முறையில் எவ்வளவு எளிமையாக ஏசுநாதர் உபதேசம் செய்தார்!’ என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் மிக அழகாகச் சொன்னார். ஆன்மிகவாதி எல்லா உயிரையும் தன் உயிர் போலக் கருதுவான். பிறருக்குத் துன்பம் செய்யக்கூடாது, பிறர் வாழ்வதற்காகத் தன்னைத் தியாகம் செய்ய வேண்டும், சத்தியவானாக இருத்தல் வேண்டும், சத்தியமான கொள்கையை உடையவனாக இருத்தல் வேண்டும். இது ஆன்மிக வாதியின் எளிய கட்டமைப்பு.
இந்த உண்மையான அடிப்படைக் கொள்கைகளின்மேல் சம்பிரதாயங்கள், கோட்பாடுகள், சடங்குகள் இவற்றையெல்லாம் ஏற்றி ஏற்றி உண்மைச் சமயம் ஆன்மிகத்தின் அடிப்படையில் உள்ள சமயம் மறைக்கப்பட்டது. ஆன்மிகத்தின் மேல் தோன்றிய சமயத்தில் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நாளா வட்டத்தில் ஆன்மிகத்தையும், சமயத்தையும் ஒழித்து விட்டுத் தாம் மட்டுமே எஞ்சின. இந்தச் சடங்குகளையே சமயம் என்று கருதியும் ஆன்மிகம் என்று கருதியும் நம்முடைய இளைஞர்களும், பெரியவர்களும் ஆன்மிகத்தையும் சமயத்தையும் ‘பயனற்றன, தீமை பயப்பன’ என்று ஒதுக்க முனைகின்றனர்.
ஆன்மிகம் என்பது ஆன்மாவினுடைய அடிப்படையாகத் தோன்றும். ஆன்மா என்பது ஒவ்வோர் உயிரினிடத்திலும் இருப்பது. உயிரன்று ஆன்மா. உயிர் என்பதனை மூச்சுக் காற்றளவிலே நிறுத்தி விட்டார்கள். ஆன்மாவை அதற்கும் அப்பாற் பட்ட ஒரு பொருளாகக் கண்டார்கள் ஆன்மிகர். அந்த ஆன்மாவின் அடிப்படையில் கட்டப்பட்ட ஆன்மிகத்திற்கு இலக்கணம் வகுத்தார்கள். மனிதனுடைய வாழ்வு, குறிக்கோள் உடைய வாழ்வாக அமைய வேண்டுமானால், அது ஆன்மிக வாழ்க்கையில்தான் முடியும் என்று கருதினார்கள். அந்த ஆன்மிகத்தின் அடிப்படையில் குறிக்கோள்களை வைத்தார்கள். மனித வாழ்க்கை உயர்ந்தது என்றால் கேவலம் விலங்கின் வாழ்க்கையிலிருந்து உயர்ந்தது என்றால் அது குறிக்கோள் என்பது பிற உயிருக்காகத் தியாகம் செய்கின்ற வாழ்க்கையாக சத்தியத்தைக் கடைப் பிடிக்கும் வாழ்க்கையாக அமைய வேண்டும் என்று சொன்னார்கள். இந்த ஆன்மிக வாழ்க்கையை யுடையவர்கள் தாம் உலகில் மிகப் பெரிய காரியங்களைச் செய்திருக்கின்றார்களே தவிர ஏனை யோரால் அவற்றைச் செய்ய முடியாது என்ற பேருண்மையையும் இந்நாட்டார் கூறினார்கள். ஆன்மிக வாழ்க்கையை நம்புகின்றவர்கள் மறந்தும் தவறு செய்ய முடியாது என்று கூறினார்கள். ஆன்மிக வாழ்க்கையையுடையவர்கள் உலகமே பெறுவதாக இருந்தாலும், ஒருவனுக்குத் துயரம் தந்துதான் அப் பரிசிலைப் பெற வேண்டும் என்றால், பெற மாட்டார்கள் என்ற பேருண்மையைக் கூறினார்கள்.
ஆன்மிகவாதிகள் கீழைநாடு, மேலைநாடு ஆகிய எல்லா நாடுகளிலும் உள்ளனர்.
ஆன்மிகத்தின் பேரில் எத்தனையோ குப்பைகள் ஏறி, இன்று ஆன்மிகம் என்ற சொல்லிற்கே பொருள் விளங்காது என்ற நிலைமைக்கு வந்து விட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால் உண்மையான ஆன்மிகத்தின் பொருள் விளங்க வேண்டுமானால் மக்களுடைய வாழ்வு பயனு டையதாக இருக்க வேண்டுமானால் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டுமேயானால், அது உலகாயதர்களால் செய்ய இயலாத காரியம் என்பதையும் ஆன்மிகம் என்ற ஒன்றுதான் மனிதனை மனிதனாக்கும் என்பதையும் அறியல் வேண்டும்.



