மந்திரங்கள் என்றால் என்ன?
அ. ச. ஞானசம்பந்தன்

6. மகா மந்திரம்

இன்றைக்கு 163 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தமிழகம் செய்த தவப்பயனாக ஒரு மாபெரும் சித்தர் இந்நாட்டில் தோன்றினார்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபினில் யான் ஒருவன் அல்லனோ

என்று பிற்காலத்தில் அவரே தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்ளுகிறார் என்றால், ஏதோ புதிதாக இந்த நாட்டிலே திடீரென்று முளைத்தவர் என்று யாரும் தயவு செய்து நினைத்துவிடக் கூடாது. வாலாயமாகப் பழகி வருகிற இந்த நாட்டில் ஒரு மாபெரும் மரபில் தோன்றிய பெரியவர் அருட்பிரகாச வள்ளலார் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற இராமலிங்க வள்ளலார்.

சங்க காலத்திலே தோன்றி இவருடைய காலம் வரையில் இருந்த பெரியவர்களைப் பார்ப்போமே யானால் ஒரு ஏகாக்ரக சித்தத்தோடு ஒரு குறிக் கோளை நோக்கிச் செல்லுகின்ற சித்தர் பரம்பரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவர் இவர் என்பதை அறிய முடிகின்றது.

மிகப் பழையதாகிய திருமுருகாற்றுப்படை ஒளியை மிகப் பெரியதாக

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு

என்று பேசும்.

ஏழாம் நூற்றாண்டிலே தோன்றிய திருநாவுக்கரசர்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

என்று சொல்லுவார்.

அவரை அடுத்து வந்த மாணிக்கவாசகர்

சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே

என்று பேசுவார்.

அதனையும் அடுத்து வந்த திருவிசைப்பாக்காரர்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே

என்று பேசுவார்.

அவரையும் அடுத்து, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தாயுமானவப் பெருந் தகையாகிய சித்தர்

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தி ஆகி, அருளொடு நிறைந்த தெது ?

என்று சொல்லுவார் என்றால் சங்ககாலம் தொடங்கி இதுவரையிலே இறைப்பொருளை நாடிச் சென்ற பெரியோர்கள் அனைவரும் ஒளியாகவே இறைப் பொருளைப் பேசுகின்றதைக் காணுகின்றோம். அதே மரபில் வந்தவர் ஆதலால் வள்ளற்பெருமான் ‘அருட்பெருஞ்சோதி’ என்ற அற்புதமான தொடரை இறைவனுக்குச் சூட்டி மகிழ்கின்றார்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இது வரையில் பேசுகின்றவர்கள் ‘ஒளி’ என்றுதான் சொல்லிக் கொண்டு வந்தார்கள். முதன் முதலாக ‘எங்கும் ப்ரகாசமாய் அருளொடு நிறைந்தது’ என்பதாக அருளை அந்த ஒளிக்கு அடையாகச் சேர்த்த பெருமை தாயுமானவப் பெருந்தகையைச் சேர்ந்ததாகும். அதனை அடியொற்றி வந்தவராகிய வள்ளற்பெருமான் ‘அருட்பெருஞ்சோதி’ என்ற ஒரு அற்புதமான சொற்றொடரைத் தருகின்றார். அரு ளொடு நிறைந்திருக்கிற பெரும் சோதி வடிவானவன் பரம்பொருள் என்ற கருத்தைப் பேசிய பெருமை அவருக்குரியதாகும்.

சித்தர்களுக்குத் தனியான சில சிறப்புகள் உண்டு. ஏனையோரைப் போல கல்வி முதலியவற்றை வரன்முறையாகக் கற்று பாடல்கள் எழுதியது இல்லை. எந்தப் பிறப்பிலேயோ செய்ய வேண்டிய அனைத்தை யும் செய்து முடித்துவிட்டு இறுதியாக இந்தப் பிறப்பிலே எல்லாவகையான சித்திகளும் கைவரப் பெற்ற சித்தர்களாகத் தோன்றி மலர்கின்றார்கள். எனவே ஏனையோரைப் போல கல்வி முதலியவற்றை வரன்முறையாகக் கற்கவேண்டிய தேவை இவர்களைப் பொறுத்தமட்டில் இருக்கவில்லை. ஆனால் வரன் முறையான கல்வி இல்லையே தவிர கற்பனவும் இனி அமையும் என்று சொல்லுகின்ற முறையிலே எந்த அளவுக்கு எந்தத் துறையில் அறிவு செல்லக்கூடுமோ அந்த அளவுக்கு அந்தந்தத் துறையில் அறிவு செல்லக் கூடிய பேராற்றல் படைத்த பெருமக்கள் ஆவார்கள் இவர்கள்.

இந்த நாட்டைப் பொறுத்த மட்டிலே வள்ளல் பெருமான் 19-ஆம் நூற்றாண்டிலே தோன்றினார் என்றால், திருஞானசம்பந்தர், நம்மாழ்வார் முதலியவர்கள் 7-ஆம் நூற்றாண்டிலும், இராம கிருஷ்ணர் முதலானவர்கள் வடநாட்டைப் பொறுத்த மட்டிலே, நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரும், இன்னும் பழைய அடிப்படையில் செல்வோமேயானால் ஏசு, குமரகுருபரர் ஆகியவர் களும் வரன்முறையாகக் கல்வி பயிலாது வந்த பெரியவர்கள் ஆவார்கள். ஏனையோரைப் போல கல்வி பெறாமலேயே கல்வியினால் பெற வேண்டிய அத்துணைச் சிறப்புகளைப் பெறுகின்ற சிறப்பு இவர் களைப் பொறுத்ததாகும். அத்தகைய மரபிலே வந்தவராகிய வள்ளல்பெருமான் இப்போது தொடக்கத்திலே அதாவது இளம்பிராயத்திலேயே,

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் கந்தவேளைப் பற்றிப் பாடுகின்றார். பின்னே அவரது வாழ்க்கை எப்படி வரப்போகிறது என்பதை அரும்பு ஆக இருக்கின்ற அந்தப் பருவத்திலேயே, அந்தப் பாடலின் மூலம் காட்டுகின்றார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளல் பெருமான் தோன்றுகின்ற காலத்திலே இந்தத் தமிழ்ச் சமுதாயம் எப்படி இருந்தது என்பதையும் ஒரு பாடலில் சொல்லுகின்றார்.

பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது பதிஏது, பசுஏது, பாசம் ஏது,
பத்திஏது அடைகின்ற முத்திரது அருளேது பாவபுண்ணியங்களேது

என்று, வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு, அதையே வாழ்க்கை என்று ‘சுகமே கைகண்ட பலன்’ என்று நினைக்கின்ற மனித சாதி நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட சமுதாயத்திலே தோன்றுகின்ற அந்த இளம் குருத்து என்ன நினைக்கின்றது? வாழ்க்கை கேவலம் இந்த முறையிலே செலுத்தப்பட வேண்டிய ஒன்று அன்று என்று நினைக்கின்றது. அதனுடைய பயனாக ஒருசிலவற்றை ஒதுக்கி, ஒருசிலவற்றை ஏற்றுக் கொண்டு ஒரு குறிக்கோளுடன் செல்ல வேண்டியது தான் வாழ்க்கையின் அடிப்படை என்பது உணர்ந்து அதனையும் பேசுகின்றார்.

ஒதுக்கப்பட வேண்டியவற்றை முதலில் சொல்லுகின்றார்.

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந் துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலையென்
றியம்புபா தகனுமாம்இவ்
எழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்

இதிலே சிறப்பு என்னவென்றால் ஒரு மனிதன் முன்னேற வேண்டுமானால் முதலில் தன் மனத்தை தூய்மையுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மனத்திலே குடியிருக்கின்ற இந்தக் கொடியவர்கள் அனைவரையும் ஒதுக்கினாலொழிய நன்மை உள்ளே புக இடமில்லை. பட்டினத்துப்பிள்ளை அற்புதமாகப் பாடுவார்.

‘ஐந்து பொறிகளாகிய யானைகளைக் கட்டி, அந்த யானைகள் அசிங்கப்படுத்திய என் மனத்தை இப்பொழுது தூய்மைப் படுத்தி, அப்பாழ் அறையை உனக்குப் பள்ளியறை ஆக்கினேன். இறைவனே வந்து தங்குவாயாக’ என்று பேசுகின்றார். அந்த மரபிலே வந்தவர் ஆகையால் வள்ளல் பெருமானும் ‘இந்தப் பகைவர்கள் பற்றிடாமல் வந்து அருள்வாய்’ என்று பேசுகின்றார். இத்துணை பேரையும் ஒருசேர நின்று தானாகவே வெல்வது என்பது இயலாத காரியம். இந்தக் கருத்தும் நம்முடைய நாட்டைப் பொறுத்த மட்டில் பலர் அருளிய கருத்துத்தான்.

‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பாடுவதுபோல இப்போது இறைவனைப் பார்த்து, இக் கொடியவர்கள் என்னிடம் வாராமல் அருள்புரிய வேண்டும் என்று கேட்கின்றார்.

அப்படியானால் எதிர்மறை என்று சொல் கிறோமே நெகேஷன் இவை எல்லாம் கூடாது என்று சொல்லிவிட்டுப் போனால் அது சிறப்புடையது ஆகாது. எனவே இந்தக் கொடியவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு, உள்ளே வரக்கூடியவர்கள் யார் யார் என்றும் பேசுகின்றார்.

நிலை உறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்
மருள்நீக்கும் அறிவாம் துணைவனும்

மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம் என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று வாழ்கின்ற
வாழ்வருளுவாய்

எனவே ஒருசிலவற்றை உள்ளத்தைவிட்டு வெளியே எடுக்க வேண்டுமென்று பேசிய பெருமானார், இப்போது என்னென்ன, எவரெவர்களெல்லாம் உள்ளே வரவேண்டுமென்று நினைக்கின்றார்.

இந்த நற்பண்புகள் வந்து குடியேறிய மனத்திலே கொடிய எண்ணங்கள் நசிகின்றன. அதாவது ஆண்டவனை அடையவேண்டுமென்ற தாகம், மிக விரைவாக, வலுவாக வளர்கின்றது. அப்படி வளர்கின்ற காலத்திலே எப்போதும் இறைவனைக் காண வேண்டுமென்ற துடிப்பிலே ஒரு அற்புதமான பாடல் வருகின்றது.

பண்ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டு கிலாய் கருணைஈதோ

என்று நொந்து பாடுகின்றார். “பெருமானே, உன்னுடைய திருவடிகளைக் கனவிலேயாவது பார்க்க வண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆனால் என்னுடைய துரதிருஷ்டம் என் கண் பார்த்தால் அந்தத் திருவடிக்கு கண்ணேறு பட்டுவிடும் என்ற எண்ணத்தினாலா திருவடிமலர்களைக் காட்ட மாட்டேன் என்று சொல்லுகிறாய்” என்று நினைந்து வருந்துகிற வருத்தத்தை, அந்த இளம்பிராயத்திலேயே அவர் மனம் எந்த வழியிலே செல்கிறது, என்பதை நாம் அறிய முடிகிறது.

இனி மற்றொரு சிறப்பையும் திருவருட்பாவை ஒருமுறை கற்றவர்களும் அறிய முடியும். ஆறு திருமுறைகளாக அப்பெருமகனாருடைய பாடல்கள் தொகுக்கப் பெற்றிருக்கின்றன. முதலாம் திருமுறையில் இருந்து ஆறாம் திருமுறை வரையில் உள்ள பாடல்கள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளிலே அப்பெருமகனார் செய்த பாடல்களாகும். இதில் தனிச் சிறப்பு என்ன வென்றால் இந்த ஆறு திருமுறைகளையும் வரன் முறையாகக் கற்றாலே அவருடைய மன வளர்ச்சியை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இலக்கியத் திறனாய்வாளர்கள் மேலை நாட்டைப் பொறுத்தமட்டில் சொல்லுவார்கள். வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞன் பரிவேவ் என்ற பகுதியை எழுதியிருக்கிறான். அந்தக் கவிஞனுடைய வளர்ச்சியை அந்த ஒரு பகுதியில் முழுமையாகக் காணமுடிகிறது என்று சொல்லுவார்கள்.

அதுபோல அருட்பிரகாச வள்ளலார் என்று சொல்லப்படுகின்ற இராமலிங்க சுவாமிகளுடைய வளர்ச்சியை, தொடக்கத்திலிருந்து இறுதிவரை அறிய வேண்டுமானால், வரலாற்றைப் பாராமலே முதலாந் திருமுறையிலிருந்து ஆறாம் திருமுறை வரை பார்ப்போமேயானால் அந்த வளர்ச்சியை நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

முதல் திருமுறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ‘பண்ணேறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினை பார்க்க’ வேண்டுமென்று அவர் மனம் விரும்புகிறது.

மனித மனத்திற்குள்ள தனிச் சிறப்பு என்ன வென்றால், எவ்வளவு தீவிரமாக ஒன்றைப் பற்றிச் சிந்தித்தாலும், விரைவிலே அதை விட்டு விட்டு மற்றொன்றிலே தாவுகின்ற தன்மைதான் இதன் இயல்பு. ‘மனமெனுமோர் பேய்க் குரங்கே நீதான்’ என்று சொல்லுவார்.

எனவே குரங்குத் தன்மை படைத்த மனம் இருக்கிறதே, அது எப்பேர்ப்பட்ட பெரியவர்களையும் சுழற்றிவிட்டு விடுகின்ற பேராற்றல் உடையது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் பார்க்கின்றோம். நல்ல காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறவர்கள் கூட ‘இன்று இல்லாவிட்டால் நாளை செய்து கொள்ளலாம். இப்போது அதற்கு என்ன அவசரம்?’ என்று நினைந்து நாளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போவதைத் தான் காணுகின்றோம். வள்ளல் பெருமான் தம் குருவாக ஏற்றுக்கொண்ட திருஞானசம்பந்தப் பெருமான் சொல்லுவார்,

இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்

என்று இன்றைவிட நாளை நல்லது என்று நினைக்கின்ற இந்த மனோ நிலையை ஒதுக்கி, உடனடியாக குறிக்கோளை நோக்கிச் செல்லுக என அப்பெருமான் கட்டளையிட்டதை இங்கே வள்ளல் பெருமானும் பாடுகின்றார்.

நாளைஏகியே வணங்குதும் என
நாளைக் கழிக்கின் றோம்

என்று மனித மனத்தைப் பார்த்துப் பேசுகின்றார். ‘நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என நினைத்து, நினைத்து நாளைக் கழிக்கின்றாய் ஏழை நெஞ்சமே, இப்போது உன்னோடு வாழ வேண்டி யிருக்கிறதே’ என்கிற நிலையில் அந்தப் பாடல் அமைந்திருப்பதைக் காணுகின்றோம்.

இனி இப்பெருமகனாரின் வாழ்க்கையை, இந் நாட்டிலே இவருக்கு முன்னர் வாழ்ந்த மூவர் முதலிகளாகிய தேவார ஆசிரியன்மார்களும், திரு வாசகம் செய்த மாணிக்கவாசகரும் பெரும் அளவில் பாதித்திருக்கின்றார்கள் என்பதை திருமுறைகளைப் பார்க்கின்றவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

முதல் திருமுறையிலிருந்து ஐந்தாம் திருமுறை முடிய மூவர் முதலிகளாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியவருடைய செல்வாக்கும் இவர்களைவிட அதிகமாக மணி வாசகப் பெருமானுடைய செல்வாக்கும் எந்த அளவிலே அவரைத் திருத்தி அமைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்.

சுந்தரர் தேவாரத்தில் ஒன்று சொல்லுவார். “பெருமானே இதற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடைய வரலாற்றைப் பார்த்தேன். மார்க்கண்டனுக்காக நீ மாபெரும் காரியத்தைச் செய்தாய்.

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வினாய்க் கின்றுன் வண்மைகண் டடியேன்
எந்தை நீஎனை நமன்தமர் நலியின்
இவன்மற் றென்னடி யான்என விலக்கும்
சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

என்று சொல்லுவார். இந்தப் பாடலிலே வள்ளல் பெருமான் மிகமிக ஈடுபட்டிருக்கிறார் என நினைக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பாடலிலே ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் திருக்கச்சூர் ஆலத்தூர் என்ற இடத்திலே சுந்தரர் பசியால் வாடுகின்ற நேரத்தில் இறைவன் பிச்சையெடுத்துக் கொண்டுவந்து அவருக்கு உணவருத்தினான் என்று சுந்தரர் வரலாறு பேசுகின்றது. அந்த வரலாற்றிலே ஈடுபட்ட வள்ளல் பெருமான் இங்கே பாடுகிறார்.

அண்மை யாகும்கந் தரர்க் கன்று கச்சூர்
ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த வண்மை
கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்வாய்தி
றந்தொரு வார்த்தையும் சொல்லீர்

ஐயா! பெருமானே! சுந்தரருக்கு அன்று கச்சூர் ஆலத்தே உலகம் முழுவதையும் படைத்தவனாகிய நீ, வீடுதோறும் சென்று பிச்சை எடுத்துக் கொண்டு வந்து உணவு தந்தாய். அடியார் குறை அன்று தீர்த்ததினாலே எனக்கும் செய்வாய் என்று அறிந்த காரணத்தினால் உன்திருவடி வந்தடைந்தேன்.

வாய்திறந் தொரு வார்த்தையும் சொல்லீர்

பெருமானே இவ்வளவு வருந்திக் கேட்கின்றவனாகிய எனக்கு அன்போடு ஆதரவு தருகின்ற வகையிலே ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடாதா?” என்று வருந்துகிறார்.

ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடாதா என்ற இந்த எண்ணம் கூட, காரைக்கால் அம்மை யாருடைய பாடலில் இருந்து வள்ளல் பெருமானார் பெறுகின்றார் என நினைக்க வேண்டியிருக்கிறது. வள்ளல் பெருமானுக்கு ஏறக்குறைய 1300 ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பேசுகிறார்.

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறி பணியா ரேனும்

‘இந்த வழியில் போ’ என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லத் தயங்குகிறாரே’ என்ற அதை அப்படியே வள்ளல் பெருமானின் நினைவில் வர வர இங்கே பேசுகிறார்.

வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்

என்று சொல்லி வருந்துகின்ற இயல்பைக் காண முடிகின்றது.

இதனுடைய அடுத்த பரிணாமமாக நாம் காணுகின்றது வள்ளல் பெருமான் விக்கிரக வழிபாட்டிலே பெரிதும் ஈடுபட்டார் என்பதை அறிய முடிகிறது. ஏன் இதனை இவ்வளவு வலியுறுத்திப் பேசுகிறேன் என்றால் இந்த விக்கிரக வழிபாட்டில் இவ்வளவு வலுவாக இருந்த அவர் – அவரது வளர்ச்சி முதிர முதிர ஆறாம் திருமுறை பேசுகின்ற காலத்திலே எல்லாவற்றையும் உதறி அடுத்துச் செல்லுகின்ற பெருவளர்ச்சியைக் காண முடிகின்றது. அங்கேதான் தம்முடைய முத்திநெறி வாழ்க்கையைச் சொல்லிச் சென்றார்.

இங்கே ‘திங்கள் விளங்கும்’ என்பதாக சிவனுடைய வடிவத்தை உறுப்பு உறுப்பாக அமைத்துப் பாடுகின்ற பாடல்களைக் காண முடிகின்றது என்றால் இந்த விக்கிரக இறைவழிபாடு ஒருவருடைய வளர்ச்சிக்கு தொடக்கத்தில் துணையாக இருக்கிறது என்பதை இந்த நாட்டவர்கள் நம்பினார்கள். மாபெரும் வேதாந்தம் பேசிய விவேகானந்தரும் கூட விக்கிரக வழிபாடு தேவை என்பதைத்தான் சொன்னார். அதுவும் தொடக்கத்திலே மனம் சென்று குவிவதற்கு விக்ரக வழிபாடு தேவை என்பதை வள்ளல் பெருமானுடைய வாழ்க்கையிலேயே நாம் காண முடிகின்றது.

இனி விக்கிரகத்தைப் பற்றி விரிவாகப் பேசிய அந்தப் பெருமகனார் சைவ சமயத்தில் ஈடுபட்டு, அதற்குரிய குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்.

கடவுள் நீறு இடாக் கடையரைக் கண்காள்
கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக

என்று பேசுகின்றார். இறைவனுக்குரியதாகிய திரு நீற்றினை இடாதவர்களை மறந்தும்கூட கண்விழித்துப் பார்க்காதே என்று பேசுகின்றார்.

அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை

அணியும் தொண்டரை அன்புடன் காண்க ‘யாரையாவது காண வேண்டுமேயானால், அவர்கள் திருநீறு அணிந்தவர்களாக இருத்தல் வேண்டும். திரு நீறு அணியாதவர்களைக் காணவே கூடாது’ என்று பேசுகின்ற ஒரு வளர்ச்சியைக் காணுகிறோம் என்றால் விக்கிரக வழிபாடு, சைவ சமயம், சைவ சமயத்தின் அடிப்படையில் இருக்கின்ற திருநீறு முதலானவற்றுக்கு எல்லையில்லாத மதிப்புத் தருகின்ற வளர்ச்சியைக் காணுகின்றோம்.

இந்த வளர்ச்சி எங்கே கொண்டு போய் விடுகிறது வள்ளல் பெருமானை என்றால் ஒரு பூரணத் தொண்டராக, அடியாராக அவரைக் கொண்டு செலுத்துகின்றது. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் பெரியபுராணம் கற்றவர்கள் அனைவரும் அறிவர், தொண்டர்களுக்கும், அடியார்களுக்கும் ஒரு பொது இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது இந்த நாட்டிலே.

தொண்டர்கள் என்று சொன்னவுடனே ஏதோ இந்த உலகத்தையும் குடும்பம் முதலானவற்றை யும் துறந்து காட்டிற்குச் சென்று கனசடையிட்டு வாழவேண்டுமென்று தமிழர்கள் ஒருக்காலும் விரும்பியதில்லை. அதிலும் சைவ சமயத்தைப் பொறுத்த மட்டில் இத்தகைய துறவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இங்கே இருந்துகொண்டு தங்கள் கடமைகளைச் செய்துகொண்டு, அதே நேரத்தில் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பவர்களையே தொண்டர்கள் என்று கருதினார்கள்.

தொண்டர்களுக்கு இலக்கணம் சொல்ல ஒரே ஒருவர்தான் தோன்றினார் இந்த நாட்டிலே அவர் சேக்கிழார். அவர் சொன்னார்,

ஆரங் கண்டிகை ஆடையும் சுந்தையே
அவர்கள் அணிந்திருக்கிற ஒரே ஒரு ஆபரணம்
ருத்திராக்கம். அவர்கள் அணிந்திருக்கிற ஒரே ஆடை கந்தலாடை ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

ஓடும் செம்பொன்னும் அவர்களைப் பொறுத்த மட்டில் ஒன்றாகவே காட்சி அளிக்கின்றன. அதைவிட ஒருபடி மேலே சென்று சொல்லுகிறார்.

கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி வீடும்
வேண்டா விறலின் விளங்கினார்

‘ஆண்டவனே, இந்த இடம் இருந்து. இந்த உலகத்திலே இருந்து அன்றாடம் உன்னை வழிபடுவதைத் தவிர மோட்சமே கிடைப்பதானாலும் வேண்டா என்று பேசுகின்ற வீரம் படைத்தவர்கள் என்று பேசுகிறார் சேக்கிழார்.

அந்தப் பெரிய புராணத்திலும், சேக்கிழா ரிடத்திலும் எல்லையில்லாது ஈடுபட்டவராகிய வள்ளல் பெருமான் அப்படியே அந்தக் கருத்தை வாங்கிக் கொள்கிறார்.

அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடை

அடுத்த என்றால் பொருத்தமான என்பது பொருள். இதில் சிறப்பு என்னவென்றால் 19-ஆம் நூற்றாண்டில் இந்தத் தமிழகத்தைப் பொறுத்த மட்டிலே உடைக்குச் சிறிது மதிப்புக் கொடுக்கப்பட்ட காலங்கூட ஆகும். ஆடையில்லாதவர்கள் அரைமனிதர்களாகக் கருதப் பட்ட காலத்திலே சென்னையில் இருந்து இவற்றை யெல்லாம் கண்ட வள்ளல்பெருமான் – இப்படி மன வளர்ச்சி கொள்ளுகின்ற காலத்திலே,

அணிகொள் கோவணக் கந்தையே நமக்கு அடுத்த ஆடை

என உலகத்திற்குச் சொல்வதற்குப் பதிலாக தன் மனத்தையே நோக்கிப் பேசுகிறார். அதற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று,

கணிகொள் மாமணிக் கலன்கள் மேலே சென்று
கண்ணுள் மாமணிக் கண்டிகை கண்டாய்

மாமணிக்கலன்களை – வைரம் முதலான கற்களினாலே செய்யப்பட்ட ஆபரணங்களைப் பூண வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இவரைப் பொறுத்த மட்டிலே மாமணிக் கலன்கள் எவை தெரியுமா?

கடவுள் கண்ணுள் மாமணிக் கண்டிகை

நம்முடைய இறைவனுடைய கண்டிகை எனச் சொல்லப்படுகிற ருத்திராட்சம் ஒன்றுதான், அற்புதமான ஆபரணமாகும் என்று பேசுகின்ற முறையிலே இந்த வளர்ச்சியின் அடுத்தபடியை நாம் காண முடிகின்றது. விக்கிரகத்தின் வழிபாட்டில் ஈடுபட்டார். திருநீற்றில் ஈடுபட்டார். ருத்திராக்கத்தில் ஈடுபட்டார்.

இது ஏதோ வாழ்க்கையிலே காலையிலோ, மாலையிலோ சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று என்ற நிலைமாறி 24 மணிநேரமும் இந்த நினைவாக இருக்கும் போது அவரையும் அறியாமல் அந்தத் துறவு அவருள்ளே புகுகின்றது. இந்தத் துறவு மனப்பான்மை தான் வள்ளல் பெருமானை மாபெரும் சித்தராக மாற்றுவதற்குக் காரணமாக இருக்கின்றது என்பதனைப் பின்னே பார்க்கின்றோம்.

இனி இதுவரையிலே உருவவழிபாடு, அதற்குரிய சின்னங்களைப் பற்றிப் பெரிதாகப் பாடிய வள்ளல்பெருமான் ‘நெஞ்சறிவுறுத்தல்’ என்ற பகுதியிலே மற்றொருபடி மேலே செல்லுகிறார். அங்கே விக்கிரகம், அதற்குரிய அடையாளம், அதற்குரிய குறியீடுகள், அதனை வழிபட வேண்டிய முறை என்பனவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டு, இறைப் பொருளை தத்துவ ரீதியாக சிந்திக்கின்ற இயல்பைக் காணுகின்றோம்.

அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்

என வள்ளல்பெருமான் பேசுகின்ற பேச்சு சிவஞான போதத்தை நினைவுறுத்துகின்றது.

உலகத்தில் எத்தனையோ சமயங்கள் தோன்றி இறைப்பொருளுக்கு இலக்கணம் சொல்ல வந்தன. ஆண்டவனைத் தந்தை என்று சொல்லும்போது பெண்மையிலிருந்து விடுபட்டவனாகி விடுகிறான். தாய் என்று சொல்லும்போது ஆண்மையிலிருந்து விடுபட்டவனாகிவிடுகிறான். இந்த அடிப்படையை யெல்லாம் மனத்திலே கொண்ட தமிழர்கள் அற்புதமாகப் பாடினார்கள்.

அவன் அவள் அது

என்று சிவஞான போதம் தொடங்குகிறதே, அதிலே ஈடுபட்ட காரணத்தினாலே வள்ளல்பெருமான்,

அதுவாய் அவளாய் அவனாய் அவையும் கதுவாது நின்ற கணிப்பாய்

என்று பேசிக்கொண்டு போகிறார்.

இனி அந்த நெஞ்சறிவுறுத்தல் வளர வளர, இவருடைய வளர்ச்சியையும் அதிலே காண முடிகிறது.

மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு சிற்றுரும்பை நாட்டிநின்ற சித்தனெவன்

ஒரு துரும்பை எடுத்துப்போட்டு, இதுதான் மூலப் பொருள் என்று உபதேசத்தைச் செய்கின்ற சித்தன் எவன் என்று குருவணக்கமாக சிலவற்றைப் பேசிக் கொண்டு செல்கிறார். அந்த ‘நெஞ்சறிவுறுத்தல்’ என்ற பகுதி முழுவதும் அவருடைய நெஞ்சே அவரை வளர்ச்சிக்குக் கொண்டு செலுத்துகிறது என்பதை அறிவதற்குப் பேருதவியாக இருக்கிறது.

நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண்

என்கிறார். இறைவனையே குருவாகக் கொள்கின்ற இயல்பு இந்த நாட்டுக்கு மிகமிகப் பழமையான பழக்கமாகும். அந்த குருவுக்கு இலக்கணம் பேசுகிறார். இங்கே. நாம் தேடா முன்னம் நமைத்தேடி வருகின்றானாம்.

பொதுவாக உலகத்திலே நாமாக ஒரு பொருளைத் தேடிச் சென்றால் அது நம்முடைய மனத்தளவிலே தான் நிற்கும். நம்முடைய மனம், கற்பனை, அறிவு என்பன எந்த அளவுக்கு விரிந்திருக் கின்றனவோ அந்த அளவுக்கேற்ற பொருளைத்தான் நாம் காண முடியுமே தவிர இதனைக் கடந்து நிற்கின்ற பொருளை நம்முடைய மனம் காணுதல் இயலாது. எனவேதான் விக்கிரக வழிபாட்டை முதலில் வைத்தார்கள். இந்த அடிப்படையில் சொல்ல வேண்டு மானால் குரு நம்மைத் தேடி வரவேண்டுமே தவிர நாம் குருவைத் தேடிச் செல்வது என்பது ஏலாத காரியம். ஏனென்றால் நம்முடைய அறிவுக்கு அப்பாற் பட்ட ஒரு எல்லையில் இருக்கின்ற குருவை நாம் கண்டுகொள்வதும் இயலாத காரியம். கண்டால் அதனை ஏற்றுக்கொள்வதும் இயலாத காரியம். எனவே நாம் குருவைத் தேடிச் செல்வதைவிட குரு நம்மைத் தேடி வருகிறான் என்கிற அற்புத வளர்ச்சியை வள்ளல்பெருமான் இங்கே சுட்டுகிறார்.

அப்படி குரு நம்மைத் தேடி வரும்போது பார்த்த மாத்திரத்திலேயே, நம்முடைய பக்குவத்தை அறிந்து, நமக்கு எது தேவையோ அதனைச் செய்கிறான். நாம் குருவைத் தேடிச் செல்லும்போது நம்மைப் பற்றி நாம் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய பக்குவம் என்ன, தரம் என்ன என்பதை நாம் அறிய முடியாது. எனவே அதற்கேற்ற குருவைத்தான் நாடிச் செல்ல முடிகின்றது. அதற்குப் பதிலாக குரு நம்மைத் தேடி வரும்போது நம்முடைய தகுதி, பரிபக்குவம் ஆகியவற்றை ஒருகணம் பார்த்த மாத்திரத்திலே முடிவு செய்து விடுகிறார். ஆகையால் அவன் நமக்கு வேண்டிய வற்றைச் செய்கிறான் என்ற கருத்தைப் பேசுகின்றார். ‘நாம் தேடா முன்னம் நமைத் தேடி வருகின்றான். பின்பு என்ன செய்கிறான்?

பின்புதனை
நாம் தேடச் செய்கின்ற நற்றாய் காண்

அவன் வந்து உபதேசம் செய்து, பின்பு தன்னையே நாம் தேடுமாறு செய்கிறான். எப்படியும் தன்னையே நாம் தேடுமாறு செய்கிறானே, இந்தக் காரியத்தை நாம் முன்னமே செய்தால் என்ன? அது நடைபெறாத காரியம்.

அவன் வழிகாட்டிய பிறகு அந்த வழியிலே சென்று அவனை அடைய முடியுமே தவிர, நாமாகத் தேடிச் சென்றால் அது பெரும்பாலும் நற்பயனை விளைவித்தது இல்லை.

காலம் அறிந்தே கனிவோடு

இந்த இரண்டு சொற்களும் மிகமிக முக்கியமானவை. காலம் அறிதல் என்பதனை உலக இயலுக்கே வள்ளுவப் பேராசான் பெருமையாகச் சொல்லுவான். காலம் அறிதல் வேண்டும். இடம் அறிதல் வேண்டும். கேவலம் இந்த உலக இயலுக்கே காலமும், இடனும் அறிய வேண்டுமானால் ஆன்மிக வளர்ச்சியைத் தேடிச் செல்கிறவர்களுக்கு காலமும், இடனும் அறிந்து உபதேசம் செய்தாலொழிய அது பயன்படுவதில்லை. ஆகவே நெஞ்சறிவுறுத்தலில் அற்புதமாக இந்தக் கருத்தைப் பேசுவார்.

காலம் அறிந்தே கனிவோடு நல்லருள்பால் ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய்காண்

காலம் அறிதல் முக்கியம். அதைவிட முக்கியம் குருவாக வருகிறவனுக்கு நம்முடைய குறைபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, போனால் போகிறான் என்ற கனிவோடு அருள் செய்ய வேண்டிய மனோ நிலை இருக்க வேண்டும். அவனுடைய நிலையை ஒப்பு நோக்க நாம் எங்கோ அதல பாதாளத்தில் இருக்கிறோம். அப்படியானால் நம்மைத் தேடி வந்த அவன் நமக்கு அருள் செய்ய வேண்டுமானால் எந்த அடிப்படையில் செய்கிறான்? நம்முடைய தகுதி நோக்கியா? நிச்சயமாக இல்லை. தகுதி இல்லா விட்டாலும் செய்கின்றானே ஏன் என்றால் ‘கனிவோடு’ என்று சொல்லுவார். அருள் காரணமாக பாவம் பிழைத்துப் போகட்டும் என்ற வள்ளன்மை காரணமாக அவன் இந்த அருளைச் செய்கின்றான் என்று அற்புதமாக ஒரு மாபெரும் உண்மையை விளக்கிச் செல்கிறார். குருவாக வந்தவன் அருளைச் செய்கின்ற இடம் அதிலும் ஒரு பேருண்மை புலப்படுகிறது அவருக்கு. வந்தவன் சொன்னானாம்,

அற்றவருக் கற்ற சிவன்

வள்ளுவப் பேராசான் சொன்னானே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுடைய திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று.

பற்றுக பற்றற்றான் பற்றினை

ஏன் பற்ற வேண்டும்? ‘பற்றுவிடற்கு’ என்றாலே அந்த அற்புதத்தை காலத்திற்கு ஏற்ற அளவிலே ஓரளவு மாற்றி,

அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் பொன்மொழியை

என்று தன்னுடைய நெஞ்சையே பார்த்து, ‘குருவாக வந்து இவ்வளவு பெரிய அற்புதத்தை அருளிச் செய்தானே நீ மறந்துவிட்டாயா என்று சொல்வதைப் போல வள்ளல் பெருமான் பேசுவதைக் காண் கின்றோம்.

இப்படி நெஞ்சறிவுறுத்தலில் தொடங்கியது மகாதேவ மாலையிலும் அது விரிந்து செல்கிறது.

முதலில் விக்கிரக வழிபாட்டிலே ஈடுபட்டு இறைவனை உறுப்பு உறுப்பாக வருணித்து,

திருத்தணிகை மலை வாரேனோ, சாமி உன் அழகைப் பாரேனோ

என்றெல்லாம் பாடியவர் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு தத்துவ உலகத்திலே புகுகின்றார்.

உலகநிலை முழுதாகி ஆங்காங்குள்ள உயிர் ஆகி என்று வரிசையாக இலக்கணம் சொல்லிக் கொண்டே போகிறார். அதைப் பார்ப்போமேயானால் அந்த வளர்ச்சியில் ஏறத்தாழ நடுப் பகுதிக்கு வள்ளல் பெருமான் வந்துவிட்டார் என்பதை நாம் அறிய முடிகின்றது. தத்துவரீதியாக இறைவனைப்பற்றி மகாதேவ மாலையிலும், நெஞ்சறிவுறுத்தலிலும் இவ்வளவு விரிவாகப் பேசிய பிறகு மனித மனத்திற்கு ஒரு சிறு வளர்ச்சி ஏற்படத்தான் செய்யும்.

இவ்வளவு அரிய பொருள் இறப்ப இழிந்த நமக்கு நமக்கு அருள் செய்ததே என்றால் அதில் வியப்பு ஒன்றுமில்லை. பெரியவர்களாகிய இவர்கள், தம் பாடல்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நமக்குப் பயன்படும் முறையில் வாழ்ந்து காட்டியவர்கள். ஆகையால் நம்மைப் போன்ற சாதாரணமானவர் களுக்கு வருகின்ற ஐயங்களை தாங்களும் ஏறிட்டுக் கொண்டு அற்புதமாக அமைதி பாடுவார்கள்.

மனித மனம் இவ்வளவு உயர்ந்த பொருள் நமக்குக் கிட்டக் கூடியதா என்று ஐயுற்றுத் தளர்கின்ற நேரத்தில் கவலையே வேண்டா. எவ்வளவு தவறுகள் இழைத்திருந்தாலும் சரி, குன்றே அனைய குற்றங்கள் செய்திருந்தாலும் அவன் அருள்வான் என்று பாடு வார்கள் மணிவாசகப் பெருந்தகை. ஆகவே மலை போன்ற குற்றங்களைச் செய்தாலும் தவறில்லை. ஆனால்,

வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

என்று சொல்லுவார். பெருமானே ‘என்னைவிடுதி கண்டாய்’ என்று இறைஞ்சுவார்.

ஆகவே மாணிக்கவாசகரது திருவாசகத்தில் எல்லையில்லாது ஈடுபட்டவராகிய வள்ளல் பெருமான் அந்தக் கருத்துக்களை அப்படியே இங்கே வாங்கிப் பேசுகிறார்.

பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டிடேல்

ஏன்? எனக்கு வேண்டியவன் நீ. நீ என்னை வெறுத்தாலும், எனக்கு வேறிடம் இல்லை. நான் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் அந்தக் குற்றங்களைப் பொறுக்கமாட்டாது ஒறுத்தாலும் எனக்கு வேறு வழியே இல்லை ஐயா உன்னை விட்டால்.

என்னுடையவன்நீ

வெறுத்தாலும் வேறிலை வேறோர் இடத்தை விரும்பி என்னை அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்குன் அருளிடமே

என்று சொல்லி, குற்றங்களைப் பொறுத்து அருள் புரியக்கூடிய பேராற்றல் படைத்தவன் இறைவன் என்ற பேருண்மையை எடுத்து விளக்கும்போது அவருடைய வளர்ச்சியையும் நாம் அதிலே காண முடிகின்றது.

அப்படியானால் இயல்பாக ஒரு ஐயம் தோன்றும். உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. இறைவன் இருக்கிறான். அப்படி இருக்க இந்த இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன தொடர்பு?

எவ்வளவு குற்றங்களை இந்த உயிர்கள் இழைத்தாலும், அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அருள் செய்ய வேண்டுமென்ற இன்றியமையாமை என்ன? என்ற ஒரு வினாத் தோன்றுமல்லவா?

அதற்கு சைவசித்தாந்தம் மிக அழகான ஒரு விடையைத் தருகிறது. அதை அப்படியே வள்ளல் பெருமான் வாங்கிப் பேசுகிறார். சிவஞான போதத்தின் 8 ஆம் சூத்திரம்,

ஐம்புல வேடரின்

என்று பேசும். இந்த ஆன்மா இறைவனோடு தொடர் புடையது. அதனால் என்றைக்கும் இறைவன் கைவிட மாட்டான். ஆனால் ஆன்மா இப்போது பொறிபுலன்கள் என்று சொல்லப்படுகிற ஐந்து வேடர்கள் கையிலேபட்டு, தான் அரசகுமாரன் என்பதைக் கூட மறந்துவிட்டு இந்த வேடர்களின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆண்டவனைப் பொறுத்தமட்டிலும், உயிர்கள் தம்முடைய முதல் இடம் எது என்பதை மறந்துவிட்டு வேடர்களை கையிலே அகப்பட்டு வளர்ந்தாலும் மூலவனாக இருக்கின்ற இறைவன் அவர்களை விட்டுவிடுவதில்லை. அன்னியன், இன்னியன் தனக்கும் உயிர்களுக்கும் வேறுபாடில்லை என்ற காரணத்தினால் குருவாக வந்து தவற்றினைத் திருத்தி ஏற்றுக் கொள்கிறான் என்ற அற்புதமான சிவஞானபோதக் கருத்தை வள்ளல் பெருமான் தமக்கே உரிய முறையில் மிக விரிவாகப் பாடுகிறார்.

கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரிநடுவில்
குவைகொண்ட ஒரு செல்வன் அருமைகொண் டீன்றிடு
குலங்கொண்ட சிறுவன் ஒருவன்

என்ற பாடலில் மறவர் குடியில் வந்து என்னை ஆட் கொண்டாய் என்று பேசுவது சிவஞான போத சூத்திரத்திற்கு அப்படியே விரிவுரை செய்தது போல கிடக்கக் காண்கிறது.

அப்படியானால் இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஓரளவு விளக்கியாயிற்று. அவன் கருணைக் கடல். ஆதலாலே நிச்சயமாக வந்து அருள் புரிந்து நம்மை மீட்டுக் கரையேற்றுவான் என்ற உறுதியும் பெற்றாயிற்று. அப்படியானால் இந்த உறுதிப் பாட்டிலே திளைக்கின்றபோது மனித மனத்திற்குள்ள மற்றொரு இயல்பு அங்கே குறுக்கிடுகிறது. ‘சமயத்தில் ஒருவேளை கைவிட்டுவிட்டால்’ என்ற எண்ணம் மனித மனத்திற்கு இயல்பாக உண்டு.

சாதாரணமாக உலகியல் முறையில் பார்க்கின் றோம். குறிப்பிட்ட இடத்திற்குப் போகின்ற புகை வண்டியெனத் தெரிந்து, அதற்குரிய பயணச் சீட்டு வாங்கி, அதிலே ஏறிக்கொண்ட பிறகு கூட பக்கத்திலே இருக்கிற நாலுபேரைப் பார்த்து, ‘ஐயா இது இன்ன ஊருக்குத்தானே போகும்?இன்ன ஊருக்குத்தானே போகும்?’ என்று கேட்பதை நம் அன்றாட வாழ்க்கை யில் காணுகின்றோம் என்றால், எந்த ஒன்றிலும் உறுதிப் பாடு இல்லாத காரணத்தினாலே இத்தகைய ஐயங்கள் வரத்தான் செய்கின்றன. ஆகவே அப்படி வரும்போது என்ன செய்வது?

இறைவனுடைய கருணை நம்மாட்டு இருக்கிறதா, இல்லையா என்ற ஐயம் வந்துவிடுகிறது. அப்போது இறைவனையே பார்த்து ‘இதோ பாரய்யா, உன்னுடைய கருணை என்னிடத்தில் பாயாவிட்டால் குற்றம் என்பேரில் இல்லை. உன்பேரில்தான் என்று சொல்வதுபோல வஞ்சகப் புகழ்ச்சியாகப் பாடுகின்ற மரபு இந்த நாட்டிலே இருந்து வருவதைப் பழங்காலம் முதல் காணுகின்றோம்.

திருநாவுக்கரசர்பெருமான் சொல்லுவார்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

என்று பேசுவார். அனுபவம் மிகுந்த பெரியவராகிய அவர் தன்னுடைய குறைபாட்டை நன்கு அறிந்திருந்த காரணத்தினாலே தன்னுடைய மனத்திலே இறைவனுடைய திருவடி தங்கியிருக்க வேண்டிய பொறுப்பு இறைவனுடையது என்று பேசுகிறார். ‘அந்தத் திருவடியை எப்போதும் மனத்தில் தரித்திருக்க வேண்டுமென்றால்’ பொறுப்பு இவருடையதாகிவிடும். அதற்காக அந்தப் பெரியவர் பேசுகிறார். ‘உன் திருவடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும். அப்படி இருக்கும்படியான காரியத்தை நீ செய்தல் வேண்டும் என்று பேசுகிறாரே அந்தக் கருத்து வரிசையாகத் தொடர்ந்து வருவதைக் காணுகின்றோம்.

கடையவனேனைக் கருணையினால் கலந்து
ஆண்டுகொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய்

என்று பேசுவார் மணிவாசகப் பெருந்தகை. ஆகவே என்னை விட்டுவிடாதே என்று பேசுகின்ற கருத்து மனிதனுடைய மனத்தின் குறைபாட்டை நினைந்து சொல்வதாகும். இங்கே வள்ளல்பெருமான் பேசுவார், எனக்கு உன் அருளிடமேயாதலால், நன்றினிக் கைவிட்டிடேல் என இந்த உலகத்தில் உள்ளவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் ஐயா. ஏதோ திருவருள் பெற்று விட்டேன் என்று பீற்றிக் கொண்டாயே, எங்கே அந்தத் திருவருள் என்று சிரிப்பார்களே. அப்படியானால் பிறர் சிரிப்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது கருத்தன்று. அதைவிட ஆழமான பொருளும் அங்கே இருக்கிறது.

‘பகவானே உன்னுடைய திருவருளை நான் பெற்று, மக்களால் புரிந்துகொள்ள முடியாமல், நான் பெற்றது தீது என்று அவர்கள் பேசுவார்களேயானால் இழுக்கு எனக்கன்று. உனக்காகும். ஏன்? ‘திருவருளைக் கொடுத்து அதைப் பெற முடியாமல் செய்து விட்டாய் என்று உன்னுடைய பெருமைக்குக் குறைபேசும் உலகம். ஆகவே ‘தயவு செய்து விட்டுவிடாதே’ என்று பேசுவார்.

இப்படிப் பேசுவதற்கு அடிப்படை என்ன? ஏன் இப்படிப் பேசவேண்டும் இறைவன் நேரே இவருக்குக் காட்சி தந்தான் என்ற பெருமையைப் பின்னே பேசுகிறார். ஒருமுறை அந்தக் காட்சியைப் பார்த்துவிட்ட காரணத்தினாலே, திருப்பியும் அவர்கள் அது தங்களைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டு மென்று நினைக்கின்ற நினைப்பு நியாயமானதேயாகும். இவர் குருவாகக் கொண்ட மணிவாசகப் பெருமான் பேசுவார்.

கணக்கில்லாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே

என்று சொல்லுவார். ஆகவே எல்லையில்லாததாகிய நாம் ரூபமற்ற பொருள், நாம ரூபமுடைய எல்லாப் பொருளுமாக அமைந்திருக்கின்றது. அந்தப் பொருள்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகக் கூட இருக்கின்றன. என்றாலும் முரண்பட்ட பொருள்களினிடையே அந்த இறைவன் இருக்கின்றான் என்று மணிவாசகப்பெருமான் சொல்லியதைக் கம்ப நாடனும் பேசக் காண்கின்றோம். அவன் சொல்லுவான் ‘இராமா, உன்னுடைய திருவடி’ இங்கே காணப் பெறுகின்றது.

ஒன்றினோடு ஒன்று ஒவ்வா பூதங்கள் தொறும்
உறைந்தால் அவை உன்னைப் பொறுக்குமோ

இப்படி முரண்பாட்டினிடையே முழு முதலைக் காணுகின்ற இயல்பு இந்தத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆதலால் அந்த முரண்பாட்டைச் சொல்லியே இங்கு கணக்கில்லாக் கோலம் நீ காட்டினாய்’ என்று மணிவாசகப்பெருமான் பேசுவதை வள்ளல்பெருமான் இங்கே எதிரொலிக்கின்றார்.

சொல்நிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித் துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம் கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே

என மிக நுணுக்கமான கருத்தை மிக அற்புதமாகப் பாடுகிறார் வள்ளல்பெருமான் இங்கே.

இறைவன் திருவருள் இருக்கிறதே, அது நாம் தேடிச் சென்று அடைகின்ற ஒன்று அன்று. எவ்வளவு சிறந்த முறையிலே நம்முடைய முயற்சி நடை பெற்றாலும் மனித முயற்சியினாலே திருவருளைப் பெறுவது என்பது இயலாத காரியம். இதனாலேதான் மணிவாசகப் பெருமான்,

அவனருளாலே அவன்தாள் வணங்கி

என்றார். அவனுடைய திருவடியை வணங்குதலாகிய காரியத்தைச் செய்வதற்குக் கூட அவனுடைய திருவருள் வேண்டுமென்ற பேருண்மையை அறிந்தவர்கள் இந்த நாட்டவர்கள். ஆதலால் இங்கே வள்ளல் பெருமான் அந்தப் பெரிய கருத்தை மிக அழகாகச் சொல்கிறார்.

‘இரவு நேரத்திலே நான் இருக்கும் இடத்தைத் தேடி வந்து கதவைத் தட்டி, ‘என் மகனே இந்தா என்று நீ தந்தாயே ஐயா’ என்னுடைய தகுதியை நோக்கியா தந்தாய்? இல்லை. உன்னுடைய கருணைத் தன்மையை என் புகல்வேன்? எல்லையில்லாத கருணாமூர்த்தி நீ ஆகையாலே நீ என்மாட்டுக் கொண்ட பெருங் கருணையினாலே உன் அருளை வெளிப்படையாகக் கொண்டு எனக்கு உன்னைக் காட்டினாய் என்ற கருத்தைப் பேசுகின்றாரே இந்தக் கருத்தும் இந்த நாட்டிலே மரபுபற்றி வருகின்ற கருத்தாகும்.

எங்கே என்னை இருந்திடந் தேடிக்கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்

என்று சொல்லுவார் திருநாவுக்கரசர். ஆகவே வரிசையாக வருகின்ற இந்த மரபு பற்றிய உண்மையே வள்ளல்பெருமானாலே பெரிதாகப் பேசப்படுகின்றது.

இறைவன் திருவருள் எளிதாகக் கிடைத்து விட்டால் அதிலேயும் ஓர் அல்லல் ஏற்படுவதுண்டு. மனிதன் முயன்று பெற்றால் ஓரளவு அதைக் காத்துக் கொள்ள வேண்டுமென்ற முயற்சியிலே ஈடுபடுவான். அப்படியில்லாமல் எளிதாக ஒரு பொருள் கையிலே கிடைத்துவிடுமானால் அதைப் போற்றிப் பாது காக்கின்ற தன்மை மனிதனிடம் இல்லாமல் போய் விடும். இந்த அடிப்படைத் தத்துவம் மனித மனத்திற்கு இயல்பாக அமைந்திருக்கிற காரணத்தினாலே இந்தப் பெரியவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே ஏறிட்டுக் கொண்டு சொல்கிறார்கள்.

‘பெருமானே, நீ கருணைபாலித்தாய். ஆனால் நான் அதனுடைய அருமைப்பாட்டை அறியாமல், அதனுடைய சிறப்பை அறியாமல், அதனுடைய பெருமையை அறியாமல் கைநழுவ விட்டுவிட்டேன் என்று வருந்துகின்ற வருத்தத்தை மணிவாசகப் பெருமான் பேசுவார். சின்னக் குழந்தையினுடைய (மழலை) கையிலே பொற்கிண்ணத்தைக் கொடுத்தால் பொற்கிண்ணத்தின் சிறப்பை அறியாத அந்தக் குழந்தை அந்தக் கிண்ணத்திலே மண்ணை மண்ணை வாரும். கல்லிலே அதைப் போட்டுத் தட்டி ஒலி கேட்க முயலும் முயற்சியில் இன்பத்தை அடையுமே தவிர பொற்கிண்ணத்தினுடைய மதிப்பை அது அறியப் போவதில்லை. அதுபோல – மழலைக் கை கிண்ணம் போல உன்னை அருமைப்பாடுடையவன், கிடைத்தற் கரியவன் என்று நினைக்காமல் எளிமையாகக் கருதி விட்டேன் என்று பேசுகிறார். அந்தக் கருத்து மிகமிக ஆழமானது. மனித மனத்தின் குறைபாட்டை நன்கு அறிந்து பேசப்படுவது. ஆதலால் அதனையே வள்ளல் பெருமான் இங்கே பேசுகிறார்.

அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்

நீ இரவிலே வந்து, கதவைத் தட்டி ‘மகனே இந்தா பிடி’ என்று கொடுத்தாயே, அதனுடைய அருமைப் பாட்டை அறியேன்.

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே மகிழ்ந்தளித்த பெருங்கருணை

‘நான் வேண்டா என்று கூறினேன். ஐயா என்ன கொடுமை இது? ஐயா நீ யார்? உன் திருவருள் எத்தகையது? அதை நீயாகத் தேடிக் கொண்டு வந்து, கதவைத் தட்டிக் கொடுத்தபோதும் அதனுடைய அருமைப்பாட்டை அறியாமல் வேண்டா என்று சொல்லிவிட்டேன். வேறு யாராக இருந்தாலும், வலிய வந்து கொடுத்து நான் அதனை ஏற்றுக் கொள்ளாத போது என்மாட்டுச் சினங்கொண்டு போயிருப்பார்கள். ஆனால், அருளுடையாய் அருளே வடிவமாக இருக்கின்ற பெருமானே, நீ ‘வேண்டா’ என்று நான் ஒதுக்கிய பிழைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு,

மருளுடையேன் தனை அழைத்துத் திரும்பவும்என் கரத்தே மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்

என்று பேசும்போது எவ்வளவு பெரிய தத்துவத்தைப் போகின்ற போக்கிலே இந்தச் சித்தர் பேசுகின்றார் என்பதை அறிய முடிகின்றது.

முதல் திருமுறையிலிருந்து ஆறாந் திருமுறை வரை வளர்கின்ற வளர்ச்சியை ஒரு பிறப்பிலே பெற்றவர்தாம். என்றாலும் தமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்களுடைய வாழ்க்கை தங்களுக்குப் பெரிய துணையாக – கலங்கரை விளக்காக -வழிகாட்டியாக அமைந்திருப் பதை இவர்கள் மறுப்பதே இல்லை.

ஓதாது உணர்ந்தவரும், அம்மையின் ஞானப் திருஞானசம்பந்தப் பெருமானைக் குருவாக ஏற்றுக்கொண்டு பேசுகிறார்.

உயிர்அனு பவம்உற் றிடில் அதனிடத்தே
பாலை உண்டவருமாகிய
ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த
சிவஅனு பவம்உறும் என்றாய்.

ஞானசம்பந்தப்பெருமான் தனக்கு உபதேசித்த தாக, வள்ளல் பெருமான் பேசுவது உயிர் அனுபவம் உற்றிடுமானால், அதனிடத்தே அருள் அனுபவம் உறும். குற்றமற்ற அந்த அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் பயிலும் என்று சொல்லுகின்ற முறையிலே, இந்த உபதேசம் செய்வதற்குரிய தகுதியும் அவர் மாட்டு உண்டு என்று சொல்வதுபோல மிக அற்புதமாக ஞானசம்பந்தருடைய வாய் மொழியில் இந்தக் கருத்தைப் பேசுகின்றார். அந்தப் பகுதியோடு ஐந்தாம் திருமுறை முடிந்துவிடுகிறது.

வள்ளல் பெருமானுடைய வாழ்க்கையிலே முதல் திருமுறையில் தொடங்கி ஐந்தாம் திருமுறை முடிய அவர் வளர்ந்துகொண்டிருந்த வளர்ச்சியைக் கண்டு கொண்டிருந்தோம். விக்கிரக வழிபாட்டிலே, உருவ வழிபாட்டிலே உருவ வழிபாட்டுக்குரிய சில கொள்கைகளிலே, அதற்குரிய சில அடையாளங்களிலே ஈடுபட்டுத் தொடங்கிய அந்த வாழ்க்கை இப்போது மெள்ள முதிர்ந்து வந்து உயிர் அனுபவம், இறை அனுபவம் இரண்டையும் பெறுகின்ற நிலைக்கு வந்துவிட்டதை ஐந்தாம் திருமுறை முடித்துக் காட்டு கின்றது. இதற்கு பிறகு வள்ளல் பெருமானுடைய வாழ்க்கையை முழுவதுமாகக் காட்டுகின்றது ஆறாம் திருமுறை. அது தொடங்குகின்ற நேரத்திலேயே

மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே

என்று ஐந்தாம் திருமுறையை முடிக்கும்போது மணி வாசகப்பெருமானைப் பார்த்துப் பேசுகின்றார். ‘ஐயா வாழ்க்கையில் ஒருவன் எளிதாகக் கைக்கொண்டு முன்னேறுவதற்குரிய வழியை நீ அல்லவா வகுத்துத் தந்தாய்.

நெடுங்காலம், என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க நீ என்று பேசப்படுகின்ற நீ புருவத்தின் மத்தியிலே, சிந்தையைச் செலுத்தி, ஏகாக்ர சித்தர்களாக தவம் செய்கின்றவர்கள் எல்லாம் நெடுங்காலம் காத்திருக்க

அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ

அன்பே வடிவாக ஆனாய். அதன் பயனாக அருளே வடிவாக் மாறினாய் என்றால், இறைவனை அடைவதற்கு மிக எளிதான வழி அன்பு வழி என்பதை இங்கே விரிவாக எடுத்துக் காட்டுகின்றார்.

இவருக்கு முன்னர்த் தோன்றிய சித்தராகிய திருமூலர்

அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

என்று சொன்னாரே அதை அடியொற்றி வந்து, கண்ணப்பருடைய வரலாற்றிலே ஈடுபட்ட மாணிக்க வாசகர் அன்பின் முழுவடிவாக ஆன கண்ணப்பரை நினைந்து பேசுவார். அடுத்து அந்தக் கண்ணப்பருடைய வாழ்க்கையை எடுத்துப் பேசுகின்ற சேக்கிழார் தன்பரிசும் வினைஇரண்டும் சாருமல மூன்றும் அற அன்புபிழம் பாய்த்திரிவார். அவர்கருத்தின் அளவினரோ? என்று சொல்லுவார். ஆகவே மனிதனுக்குரிய வாலீசன் என்று சொல்வார்களே, தன்பரிசு, வினை இரண்டு அதாவது நல்வினை, தீவினை,ஆணவம், மாயை, கன்மம் அனைத்தும் நீங்க என்ன இருந்தது என்றால் சர்க்கரையிலே மிளகாய் மிட்டாய் பண்ணினாலும் அது இனிப்பாகவே இருப்பதுபோல ‘அன்பே முழுவடிவமாக ஆகிவிட்டார் கண்ணப்பர் என்று சொல்லுகிறாரே, அந்த இலக்கணத்தை வாங்கி அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ என்று சொல்லி ஐந்தாம் திருமுறையை முடிக்கிறார். அடுத்து அவர் ஆறாந் திருமுறையில் நுழைகின்ற காலத்தில் வள்ளல்பெருமான் இதுவரையில் இருந்த ராமலிங்க வள்ளலாராக இல்லாமல் திரு அருட் திருஅருட் பிரகாச வள்ளலாராக மாறுகின்ற பெரும் பேற்றைக் காணுகின்றோம். ஆறாம் திருமுறையைத் தொடங்கும் போதே

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள்
அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே

என்று பேசும்போது இதுவரையிலே பெரிய தத்துவங்களை எல்லாம் பேசிவந்த அவர்,யோகம், தியானம் முதலானவற்றையெல்லாம் பேசிவந்த அவர் அவை அனைத்தையும்விட்டுவிட்டு ஒரேயடியாக அன்பு மார்க்கத்தைக் கடைப்பிடிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையிலே வந்த மிகப்பெரிய திருப்பமாகும். பின்பு சுத்த சமரச சன்மார்க்க சங்கம் வைப்பதற்கும் உலகத்திலுள்ள எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு பொதுத் தன்மையோடு சமய வழிபாட்டை நிறுவ வேண்டுமென்ற அவருடைய எண்ணத்திற்கும் விதையாக அமைந்தது இந்தக் கருத்துத்தான்.

அன்பு ஒன்றுதான் இறைவனை அடைவதற் குரிய வழி. அன்பே வடிவாக இருக்கிறான் இறைவன் என்பதை எந்த வினாடி உணர்ந்தாரோ அதிலிருந்து அவருடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டதைக் காணுகின்றோம். அதனைத்தான்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

‘நிர்க்குண, நிராமய, நிராலய’ என்று சொல்லிக் கொண்டிருந்தது போக அன்பெனும் பிடிக்குள் அகப்படுகின்ற மலையாகக் காணுகின்ற காட்சி அன்பு எனும் குடிலுக்குள் புகுகின்ற சாதாரண இறைவனாகக் காணுகின்ற காட்சி, அன்பெனும் வலைக்குள் படுகின்ற பரம்பொருளாகக் கூறுகின்ற காட்சி, அன்பெனும் கரத்துள் அம்ருதமாகக் காணுகின்ற காட்சி இந்த நிலை வந்த பிறகு அவருடைய வாழ்க்கை முற்றுமாக மாறிவிடுகிறது.

இனி இந்த அன்பின் அடிப்படையில் நின்று உலகத்தைக் காணுகின்றார் வள்ளல்பெருமான்.

முதலில் திருநீறு இடாதவர்களைக் காணக் கூடாது என்று பேசியவர், உருவ வழிபாட்டிலே சிவ பெருமானையும், முருகப்பெருமானையும் விரிவாகப் பேசியவர், அந்த நிலையில் இருந்து மாறி, இப்போது அன்பு என்ற கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கும்போது எத்தகைய வேறுபாட்டையும் அவரால் காண முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இறைவனை வழிபடுகின்ற அனைவருமே ஓரினத்தார் என்ற ஒருமைப்பாட்டை சின்தஸிஸ் காண்பவராகத் தொடங்கிவிடுகிறார்.

இதற்கு முன்னே சைவசித்தாந்த அடிப்படையிலே இறைவனைப்பற்றிப் பேசிய வள்ளலார், இப்போது முழுவதுமாக மாறி அன்பு, அன்பு, அன்பு என்று பேசும்போது வேறுபாட்டிற்கு அங்கு இடமே இல்லாமல் போய்விடுகிறது.

உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் எடுத்து ஆராய்கின்றார். எந்தச் சமயமாக இருந்தாலும் அந்தச் சமயத்தில் நம்புகின்ற கடவுள் பொருளுக்கு ஒரு நாமம், ஓருருவம், ஒன்றுமில்லாப் பொருளாயினும் ஆயிரம் பெயர்கள் இட்டிருப்பார்கள். அந்தப் பெயர்கள் ஒன்றுக்கொன்று மாறுபடலாம். என்றாலும் எந்தச் சமயவாதியாக இருந்தாலும் ஒன்றுமட்டும் உறுதி. ‘ஒளி’ என்ற ஒன்று மாறுபடப் போவதில்லை. எந்தச் சமயவாதியும் தன்னாலே கருதப்பட்ட பரம்பொருள் ஒளிவடிவானவன் என்று சொல்லித் தான் தீருவான். எங்களது கடவுள் இருட்டு வடிவானவன் எனச் சொல்லத் துணிய மாட்டார்கள். எனவே உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் எடுத்து ஆராய்ந்தவராகிய வள்ளல் பெருமான் இந்த ‘ஒளி’ என்ற கருத்தை வாங்கிக் கொள்ளுகின்றார்.

இதற்கடுத்தபடியாக ஒளிவடிவாக இருக்கிற இந்த ஆண்டவன் ‘பண்பாடு’ என்று அவனுக்குரிய குணம் ஒன்று இருக்குமானால் அது எதுவாக இருக்க முடியும் என்றால் அருள் அல்லது கருணையாகத்தான் இருக்க முடியும்.

ஏக தெய்வ வணக்கம் பேசுகின்ற இஸ்லாமியர் கள் கூட ‘பரம கருணை உடையவன்’ என்றுதான் இறைவனைச் சொல்லுவார்கள். ஆகவே ‘கருணை, ஒளி’ என்ற இரண்டும் உலகிலுள்ள எல்லாச் சமய வாதிகளுக்கும் பொது என்பதை வள்ளல் பெருமான் உணருகின்றார்.

அதுமட்டுமல்ல. கடவுள் கொள்கை பற்றிப் பேசாமல் இருந்த பௌத்த, ஜைனம் கூட ‘ஒளி’ என்பதையும், ‘கருணை’ என்பதையும் விட்டுவிடுவதே இல்லை. புத்தனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ‘பிறர்க்கென முயலும் பெரியோன்’, என்றும் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ என்றும் ‘கருணையே வடிவானவன்’ என்றேதான் பேசுகின்றன பௌத்த நூல்கள்.

எனவே, ‘கருணை, ஒளி’ இரண்டையும் வாங்குவதன் மூலமாக ‘க்ரேடெஸ்ட் காமன் பாக்டர்’ என்று சொல்லுகிறோமே அதுபோல உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் பிழிவோமேயானால், இரண்டு கருத்துகள் மிஞ்சுகின்றன. ஒன்று இறைவன் ஒளி வடிவானவன்; இரண்டாவது அவன் கருணை வடிவானவன். இந்த இரண்டையும் எடுத்துக் கொண்ட வள்ளல் பெருமான் ஒரு சூத்திரம் போல அமைக்கின்றார்.

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி

என்ற மகாமந்திரம் போல் இருக்கிற இந்தத் தொடரை வேண்டா என்று கூறுவார் எவருமே இரார்.

‘சமயம் வேண்டா என்று சொல்கிறவர்கள் கூட ‘அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை என்று சொல்லப்படுகிறபோது அதனை எதிர்த்துப் பேச நாவெழாமல் நின்றுவிடுவார்கள்.

எனவே உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவற்றை ஒருங்கிணைந்த சமயமாகச் செய்ய வேண்டுமென்ற கருத்திலே பேசிய வள்ளல் பெருமான்.

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி

என்று பேசுவதைக் காணுகின்றோம். 6ஆம் திருமுறை முழுவதும் அதன் விரிவாகவே இருக்கக் காணுகின்றோம்.

அதுமட்டுமல்ல. அந்த மாதிரி நிலையிலே ஒரு பிரச்சினை தோன்றத்தான் செய்கிறது. இப்படி ஒரு பிறப்பிலேயே விக்கிரக வழிபாட்டில் ஆரம்பித்து, அருட்பெருஞ் சோதி என்ற நிலைக்கு ஒருவர் வளருவாரேயானால் அவர் வாழுகின்ற காலத்திலே உள்ள சமுதாயம் நிச்சயமாக அவரைப் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள முடியாமையி னாலேதான் அருட்பா மருட்பா போராட்டங்கள் தோன்றின. அந்தக் கருத்தை அடியொற்றி வள்ளல் பெருமானே பாடுகிறார், ஆறாந் திருமுறையில்.

பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர்

தோழியிடத்தில் பேசுவதுபோல அமைந்திருக்கிறது இந்தப் பாடல். தோழீ, என்னுடைய கணவர் என்னைப் பொறுத்தமட்டில் அவர் அம்பலத்தே நடிக்கும் இயல்புடையவர். ஆனால் அவர் பெயர் என்ன என்று கேட்கிறாயா?

அருகர் புத்தர் ஆதிஎன்பேன் அயன்என்பேன் நாரா யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன்என்பேன்

என இப்படி அருகர், புத்தர் முதலான பேர்களும் அவனுக்குண்டு என்று பேசும்போதுதான் அவர் உலகமனைத்தையும் ஒன்றாகக் காணுகின்ற பரந்துபட்ட நிலையைக் காண முடிகின்றது.

இனி அதற்கடுத்த பாட்டிலே ஒரு வினாவை அவரே எழுப்பிக் கொள்கிறார்.

சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்

அருகர், புத்தர் என்ற பெயர்கள் எல்லாம் புறச் சமயத்தார்கள் பேர் அல்லவா? அவை எல்லாம் உன் கணவர் பேர் என்று சொல்லுவது பொருத்தமா என்ற தோழி கேட்கின்றாள் என்று சொல்லி

பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்

என்கிறார்.

‘பிறசமயத்தார்’ என்று சொல்லும்போது பெளத்தம், சமணம் போன்ற பழைய சமயங்கள் மட்டுமல்ல. பிற்காலத்தில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சமயங்களையும் ஒன்றாக ஆக்கிக் கொண்டு

பித்தர்என்றே பெயர்படைத்தார்க்கு எப்பெயர்ஒவ் வாதோ

‘என்னுடைய கணவனைப் பித்தர் என்று நாங்கள் சொல்கிறோம் என்றால் எந்தப் பெயரைச் சொன்னால் என்ன என்று சொல்லி, உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற பெருங் காட்சியைக் காணுகின்றோம்.

தொல்காப்பியர் தொடங்கினாரே ‘ஓரறிவு உடைய உயிரே’ என்பதில் தொடங்கி, உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் தொடர்புடையன என்ற அந்தக் கருத்தை வள்ளல்பெருமான் தம் ஆறாம் திருமுறையில் வைத்து எல்லா உயிர்களும் ஒன்று என்றால் வேற்றுச் சமயம் என்று நினைப்பதற்கோ, வேற்று மனிதர்கள் என்று நினைப்பதற்கோ, வேற்று உயிர்கள் என்று நினைப்பதற்கோ எதுவும் இல்லாத காரணத்தினாலே, அன்பினாலே அனைத்தையும் தழுவி எல்லா உயிர்களும் வீடு பேற்றினை அடைய விரும்புகின்றன என்றால் அந்த உயிர்கள் அனைத்தும் சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்று. அனைவரும் ஒன்று என்று கூடிச் சிந்திக்கின்றபோது பொதுத்தன்மையாக இருக்கிற மகாமந்திரம்

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

என்று கூறுகின்றார் என்று காண்போமேயானால், இன்றைக்கு 163 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு பெருமகனார் இந்த நாடும் உலகமும் உய்வதற்குக் கண்ட பெருவழியே நாம் சிந்திக்கின்ற பெரு வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றோம் என்பதை அறிய முடிகின்றது.

முற்றும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *