
மந்திரங்கள் என்றால் என்ன?
அ. ச. ஞானசம்பந்தன்
2. சித்தர்கள்
முதன்முதலாக எனது சிந்தனையைத் தூண்டியவனே ராஜராஜன். அதற்காக நன்றி பாராட்டுகிறேன் அவனுக்கு.
ராஜராஜனுடைய கல்வெட்டுகளைப் படித்து தேவாரத் திருப்பதிகம் பாடிய 48 பேர்களுக்கும் அதில் பேர் கொடுத்துள்ளதைப் படித்தபோதுதான் எனக்கு முதன்முதலாக ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.
காரணம் சமய அடிப்படையில் பழகியவன் நான். ஆகவே பேரோடு ஒரு பெயரைச் சேர்ப்பதற்கு தீட்சாநாமம் என்று பெயர். அதை நம்மில் பலர் நினைக்காத காரணத்தினால் ராஜராஜன் கல்வெட்டுகளைப் படித்து தேவாரம் பாடியவர்களை எல்லாம் ராஜராஜன் நியமித்தான் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். திருநாவுக்கரசன், ஞான சம்பந்தன் என்ற பெயரை சும்மாவிடவில்லை அவன். ‘திருநாவுக்கரையனான அகோரசிவன்’, ஞானசம்பந்தனான ‘வாமதேவசிவன்’ என்று கல்வெட்டில் அவன் ஏன் போடவேண்டும்? பின்னால் வருகிற நாமங்கள் எல்லாம் தீட்சா நாமம். தேவாரப் பதிகம் பாடுவதற்கு தீட்சா நாமம் எதற்கு? ஆகவே, இங்கே இருக்கிறவர்கள் தேவாரத் திருப்பதிகம் பாடத் தகுதியில்லையென்று கருதி, அவர்களுக்கெல்லாம் தீட்சை பண்ணி வைத்த பிறகுதான் தேவாரம் பாடவேண்டும் என்ற கருத்திலே அது வந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
இப்படி கல்வெட்டுகளை எல்லாம் படித்து ஒன்பதாம் திருமுறையைப் பற்றி, சென்னை பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு சிந்திக்கிறபோது எத்தனை கல்வெட்டுகள் ராஜராஜனுக்கு முன்னாலே தேவாரப் பதிகம் பாடுவதற்கு ஏற்பட்டன என்பதைக் காண முடிந்தது.
ராஜராஜனுக்கு நூற்றிச் சொச்சம் வருஷங்களுக்கு முன்னாலே திருவல்லம் கல்வெட்டு நந்திவர்மனது. ‘தேவாரப் பதிகம் பாடுவார் உள்ளிட்ட’ என்றே தொடங்கி அவன் ஒரு நாற்பது பேருக்குப் பட்டியல் கொடுக்கிறான். இது கி.பி.750ல்.
கி.பி. 873 இல் முதலாம் ஆதித்தனின் திருவெறும்பூர்க் கல்வெட்டு. கி.பி. 910 இல் முதலாம் பராந்தகனுடைய திருவாவடுதுறைக் கல்வெட்டு. கி.பி. 941இல் எங்கள் ஊராகிய லால்குடி – திருத்தவத்துறைக் கல்வெட்டு. கி.பி. 977 இல் உத்தமசோழன் கோனேரி ராஜபுரம் என்று இன்று வழங்குகிறதே திருவல்லம்- அந்தக் கல்வெட்டு.
ஆக ராஜராஜன் வருவதற்கு முன்னாலே ஐந்து பேர் தேவாரப் பதிகம் பாடுகிறவர்கள் பட்டியல் கொடுத்து, அவர்களுக்கு நிபந்தம் விட்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை, அந்த ஐந்துபேருக்கும் தீட்சா நாமம் கொடுக்கவில்லை.
முதன் முதலாக ராஜராஜன்தான் தீட்சா நாமம் கொடுத்தான். இது ஏன் என்ற யோசனை தோன்றியது எனக்கு. இவனுடைய குரு சதுரானன பண்டிதன் என்பவர். இவனுடைய மகனாகிய ராஜேந்திரனுடைய குரு லகுலீச பண்டிதன் என்பவர். இந்த லகுலீச பண்டிதனோ, சதுரானன பண்டிதனோ நம் ஊர்க்காரனோ சைவனோ அல்லன். இவர்கள் அங்கேயிருந்து வந்த காளாமுகச் சைவர்கள். இந்தக் காளமுகச் சைவர்களைக் குருவாகக் கொண்டிருக்கிற ஒருவன் எப்படி இங்கிருக்கிற தேவாரங்களுக்கு மதிப்புக் கொடுக்க முடியுமென்ற சிந்தனை தோன்ற ஆரம்பித்தது.
‘உண்மை என்னவென்றால் இவர்களுக்கு முன்னாலே இத்தனை பேர் தேவாரப் பதிகம் பாடியவர்களுக்குக் கல்வெட்டுப் போட்டிருந்தார்கள் என்றால் தேவாரத்தை யாரும் புதிதாகக் கண்டுபிடிக்க வில்லை. அது என்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அப்படியிருக்க திருமுறை கண்ட புராணம் என்ற ஒன்றே ஒன்று தொங்குகிறது. எனது தந்தையார் பெரியபுராணம் பல பிரதிகள் சேர்ப்பதில் சூரர். ஆறுமுக நாவலர் பதிப்பித்த பெரியபுராணத்திலே திருமுறைகண்ட புராணம் என்று எழுதி, ஒரு நட்சத்திரக் குறிபோட்டு அடியில் இதை இயற்றியவர் இன்னார் என்று தெரியவில்லை, உமாபதி சிவம் என்று சிலர் கூறுவர் என்று இருக்கிறது. அடுத்த பதிப்பு போடும்போது ஆறுமுகநாவலர் காலமாகிவிட்டார். இங்கே இருக்கிற உமாபதி சிவத்தை மேலேபோட்டு, நட்சத்திரக் குறியீட்டை எடுத்து விட்டார்கள். அதையே நம்பிக் கொண்டு ‘கொற்றவன்குடி உமாபதி சிவம்’ எழுதியது, அதை எப்படி ஐயா மறுக்க முடியும்?” என இவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உமாபதி சிவத்திற்கும், இந்தத் திருமுறை கண்ட புராணத்திற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது. அந்த திருமுறை கண்ட புராணத்தில்தான் இந்த அதுவும் இந்த ராஜராஜன் என்று சொல்வதற்கும் வழி கிடையாது. பண்டாரத்தாரும், வெள்ளைவாரணனாரும், மாறு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருமுறை கண்ட புராணத்தில்தான் சிதம்பரத்திலே மூடி வைத்திருந்தது, கை வைத்தது எல்லாம் இருக்கிறது. இதைத்தவிர வேறு எங்கேயும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம்.
தேவாரம் பாடிய இவர்களுக்கு இவ்வளவு சிறப்புக் கொடுத்து பட்டயம் எழுதிய ராஜராஜன் தான் தேவாரத்தையே கண்டிருப்பானேயானால் அதைக் கல்வெட்டிலே காட்டியிருக்க மாட்டானா? இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தவன் – பரசூரி சின்னச்சின்ன சமாசாரங்களுக்கெல்லாம் கல்வெட்டிலே இடம் குறிக்கின்றவர்கள் அவன் திருமுறைகளைக் கண்டு பிடித்திருந்தான் என்றால் ஏன் கல்வெட்டிலே சொல்லவில்லை. தன் அகம்பாவம் கூடாது என்றால் அவன் மகன் ராஜேந்திரன் சொல்லியிருக்கலாம் அல்லவா? இரண்டு பேருமே சொல்லவில்லையே என்றவுடன் சந்தேகம் தோன்றியது.
‘நெகேஷன் இஸ் நாட் எ கன்பர்மேஷன்’ இல்லை யென்றதனாலே ஒன்றைச் சாதிக்க முடியாது. ஆகையினாலே இந்த ஆர்க்யுமெண்டை நான் பெரிதுபடுத்தவில்லை. இவர்கள் சொல்லவில்லை. அதனால் எங்கோ, ஏதோ கோளாறு இருக்கிறது. என்ன கோளாறு என்றால் திருமுறை ஏற்கெனவே இருந்தது. அவ்வுளவுதான் சமாசாரம். இவனுக்கு முன்னாலே ஐந்துபேர்கள் திருமுறை பாடுகிறவர்களை வரிசைப் படுத்தி அவர்களுக்கு நிபந்தம் விட்டுள்ளது போல இவனும் விட்டிருக்கிறான். அதிலே ஒன்றும் அதிசயம்! இல்லை. ஆனால் ஒரு வித்யாசம். அவர்கள் எல்லாம் தமிழர்கள். இங்கே இருக்கிற தமிழர்களை எல்லாம் தேவாரம் பாட வைத்து நிபந்தம் கொடுத்தார்கள். இவன் அதுவும் இல்லாமல் – இவனுக்கு அந்த உரிமை இல்லையென்று, எங்கோ இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளாமுகர்கள் தீட்சிதர்கள் குருமார்களுடைய உபதேசத்தைப் பெற்று எல்லோருக்கும் தீட்சை பண்ணிவைத்து அப்பறம்தான் பாடவேண்டுமென்று பண்ணிவைத்த காரியம்தான் இவன் செய்த புண்ணியம். ஆக இதை நன்றாக மனத்தில் வாங்கிக் கொண்டோமேயானால் ‘திருமுறை கண்ட புராணம்’ கதை எப்படி வந்தது என்கிற ஆராய்ச்சிக்குப் போவோம்.
இனி 9ஆம் திருமுறையைச் சிந்திக்க வேண்டும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு. இதிலே கருவூர்த்தேவர், திருமாளிகைத்தேவர், சேந்தனார் இந்த மூவரும் சித்தர்கள். ஒன்பதாந் திருமுறை பாடிய ஒன்பது பேர்களுமே இந்த மூவர் உட்பட – ராஜராஜன் காலத்திலிருந்து 2 ஆம் குலோத்துங்கன் காலத்திற்குள் முடிந்தனர். ஒரு 250 ஆண்டுகளுக்குள்ளே ஒன்பது பேர்களும் வந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாட்டு ஏன் வந்தது? திருமுறைகள் இருக்கும்போது இந்தப் பாடல்கள் ஏன் வந்தன என்று சிந்திக்கத் தொடங்கிய போது பெரிய ஒரு புதுமையைக் கண்டேன் புராணத்திலே.
இரண்டாம் நரசிம்மன் கைலாசநாதர் கோயிலைக் கட்டினவன். அவன் காலத்தில்தான் சுந்தரர் இருக்கிறார் – காஞ்சீபுரம் போனவர்களுக்குத் தெரியும். நேரே எதிர்த்தாற் போல கைலாசநாதர் கோவில். இன்றைக்கும் அந்தக் கோயில் மிக அழகாக இருக்கிறது என்றால், புதிதாகக் கட்டின காலத்தில் எப்படி இருந்திருக்கும்? இரண்டாம் நரசிம்மன் என்ன பண்ணினான்? கைலாசநாதர் கோவிலுக்குள் நுழையும்போது இரண்டு தூண்கள் இருக்குமே அதிலே கல்வெட்டுப் போட்டான். ‘ஏன் இதை நான் கட்டினேன் என்றால் கயிலயங்கிரி வாழ்வு சலிப்பேற்படின் உமாதேவியோடு வந்து கைலாசநாதர் தங்குவதற்காக எவ்வளவு திமிர் இருக்கும்? சிவபெருமானுக்குச் சலிப்பு ஏற்படின் வந்து தங்குவதற்காக இவர் கோவில் கட்டினாராம், அதனால் தான் ‘உன் கோயில் வேண்டாமடா’ என்று பூசலார் கோவிலுக்குப் போய்விட்டார், விஷயம் அவ்வளவுதான்.
அந்தக் கோவில் சுந்தரருக்கு முன்னாலே இருக்கிறது. இந்தக் கோயில் வண்ணப்பூச்சு இன்றைக்கும் போகவில்லை யென்றால் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் சுந்தரர் அந்தக் கோவிலுக்கும் போகவில்லை. பாடவில்லை. பெரிய அதிர்ச்சி எனக்கு.
அப்படியானால் பல்லவர்கள் சுந்தரருக்கு விரோதிகளா? அல்லர்.
உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமான்…
என்று பாடுகிறவர்,
கடல்கடந்த உலகெல்லாம் காக்கின்ற
பெருமான் காடவர்கோன்
என்று பாடுகிறவர் சுந்தரர். பல்லவர்மேல் எல்லை யில்லாத அன்பு வைத்திருக்கிறார். அப்படியிருக்க தன் காலத்திலிருந்த பல்லவனாகிய ராஜசிம்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலைத் திரும்பிப் பார்க்காமல் அதற்கு ஒரு நூறு, நூற்றைம்பது அடி தள்ளி உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்கு பிள்ளையார் கோயில் என்று சொல்வதற்குக் காரணம் – மிகச்சிறிது – 12′ × 11’ அளவினது திருக்கச்சி அனேகதங்காவதம் என்ற கோவிலுக்குப் போய்ப் பாடியிருக்கிறார் என்றால் வேண்டுமென்றே கைலாசநாதர் கோவிலுக்குள்ளே சுந்தரர் போகவில்லை என்ற முடிவுக்கு வந்தேன் மன்னித்துக்கொள்ளுங்கள். தப்பாக இருந்தால் விட்டுவிடுங்கள்.
கைலாசநாதர் கோவிலுக்கு ஏன் போக வில்லை. அகம்பாவத்திலே கட்டப்பட்ட கோவில் என்பது ஒன்று. இரண்டு புதியதாக வந்தவற்றை இவர்கள் வரவேற்பது இல்லை. மூன்றாவதாக தமிழ் மக்களே கூட பழமைக்குக் கொடுத்த மரியாதையை புதுமைக்குக் கொடுக்கவில்லை.
ஆகையினாலே சோழர்கள் இத்தகைய கோயில்களைக் கட்டியும் அவை இன்றைக்கு இருப்பது போலத்தான் அன்றைக்கும் இருந்தன. பாடல் பெற்ற கோயில்களுக்குப் போனார்கள் தமிழர்கள். அதற்குக் காரணம் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இல்லை. ஆன்மிகத்தில் பார்க்கலாம். பாடல்பெற்ற கோவில் என்று ஏன் பெயர் என்றால் விஞ்ஞான முறையிலே சொல்ல வேண்டுமானால் ‘மெல் அதிர்வுகள்’ உள்ள இடங்கள்.
பழனி இருக்கிறது. திருப்பதி இருக்கிறது. எங்கள் ஊரிலே மாங்காடு இருக்கிறது.
இங்கெல்லாம் சித்தர்கள் தங்கி வாழ்ந்து அங்குள்ள மூர்த்தங்களுக்கு ஆற்றல் கொடுக்கிறார்கள். விக்கிரகம் இருக்கிறதே அது மின்விளக்கு போல. அது எரிவதனாலே ஆற்றல் எங்கே இருக்கிறது என்று யாரும் கவனிக்கிறது இல்லை. சித்தர்கள் அங்கே தங்கி ஆற்றல் கொடுக்கிறார்கள்.
ஆக இந்தக் கோயில்கள் எப்படித் தோன்று கின்றன என்றால் யாராவது ஒருத்தர் அதற்குச் சக்தி ஏற்ற வேண்டும். அந்தச் சக்தி மெல் அதிர்வுகளாக நின்றுவிடும். இப்படி சக்தி கூடி பாடல் பெற்ற கோயில்களுக்குப் போனார்களே தவிர சோழர்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு யாரும் போகத் தயாராயில்லை.
அந்த நிலைமையிலே கருவூர்த்தேவர், சேந்தனார் முதலிய சித்தர்கள், இந்தச் சோழர்களுடைய சைவப்பற்றை வைத்துக்கொண்டு மக்களை வழி திருப்ப வேண்டுமென்றால் ஒரேவழி – இனிமேல் த்ரைலோக்கிய சுந்தரத்துக்கும், ராஜராஜேச்வரத் துக்கும் ஞானசம்பந்தரைக் கூட்டி வந்து பாடல் பெற முடியாது. காலம் கடந்து போனது எனவே இவர்களே பாடினார்கள். அதுதான் சமாசாரம்.
திருவிசைப்பா என்பது சோழர் காலத்திலே தோற்றுவிக்கப்பட்ட கோவில்களுக்கு ஒரு ப்ராதான்யம் கொடுப்பதற்காக கருவூர்த் தேவர், சேந்தனார், அமுதனார் முதலியவர்கள் பாடினார்கள். அப்படிப் பாடும்போது இந்தக் கோயிலை மட்டும் பாடினால் பயனில்லை. சிதம்பரம் எல்லாவற்றுக்கும் மூல ஸ்தானம். அதையும் பாடினார்கள். பெரும்பாலான சோழர்கள் கட்டிய கோயிலை வைத்துப் பாடின சிறப்பு இவர்களுடையது. இவர்கள் சித்தர்கள். இவர்கள் பாடலுக்கு ஆற்றல் உண்டு. இந்தப் பாடல் பெற்றதனாலே இந்தக் கோயில்களுக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் போக ஆரம்பித்தார்கள். இது இத்தனையும் நிகழ்ச்சி முறை. இதன் அடிப்படையைச் சிந்திக்கும்போது ஒரு பெரிய போராட்டம். ராஜராஜன் ஒன்றும் செய்துவிடவில்லை பக்தி இலக்கிய காலத்திலே என்ன போராட்டம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னேன்.
‘வேதம்’ பற்றய பேச்சு வருகிறது. ஆனால் வேதத்திலே சிவனுக்கு ஒன்றும் இடம் கிடையாது. அப்படியிருக்க எப்படி இந்த வளர்ச்சி ஏற்பட்டது என்பது.
களப்பிரர்கள் கொலைக்கஞ்சாப் பாதகர்கள் என்பதிலே சந்தேகம் இல்லை. ஆனால் என்ன உபகாரம் செய்தார்கள்? இந்தத் தமிழர்களைத் தட்டி எழுப்பினார்கள். அதுதான். ‘ஷாக் ட்ரீட்மெண்டு’ என்று சொல்கிறோமே அதிர்ச்சி தருகின்ற வைத்தியம்
அந்த வைத்தியத்தின் பயனாகத்தான் பக்தி இலக்கியம் தோன்றிற்று. பக்தி இலக்கியத்தைத் தோற்று வித்தவர்கள் என்ன செய்தார்கள்? மக்களை மனம் திருப்புவதற்கு ஒரு வழி வகுத்தார்கள்.
தமிழகத்தை களப்பிரர்கள் விட்டுவிட்டுப் போகிற காலத்தில் வடமொழி இங்கு சிறப்புப் பெற்றிருந்ததே தவிர தமிழுக்கு இடம் கிடையாது. ஆகவே 4196 பாடல்கள் பாடிய ஞானசம்பந்தர் 147 இடத்திலே தன்னை தமிழ்ஞான சம்பந்தன், ‘முத்தமிழ் விரகன்,’ என்று சொல்லிக் கொள்ளும்படியாக ஆயிற்று. அடித்துப் பேசி தன்னைத் தமிழோடு சேர்த்துச் சொல்லிய காரணத்தினாலே தமிழுக்கு முக்கியத்துவம் சொடுத்தார்.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்ல. சில அடிப்படைப் பழக்க வழக்கங்களும் நுழைய ஆரம்பித்தன. வேதத்திலே விக்கிரக வழிபாட்டுக்கு இடமேயில்லை. தீ வளர்த்தனர் – தீக் கடவுள் ஒருத்தன்தான் தெய்வம். அதற்குமேலே இந்திரன், வருணன் முதலானவர்கள். எதாக இருந்தாலும் ‘ஸ்வாஹா’ என்று அக்னியிலே போடுவது அந்த மரபு. அங்கே விக்கிரகத்துக்கு வழியில்லை.
அங்கே விக்கிரகத்தை வைத்தார்கள். அதற்கு மேலே அபிஷேகம் செய்தார்கள். வேதம் ஒத்துக் கொள்ளாத ஒன்று ‘விக்கிரகம் வைப்பதும், அபிஷேகம் செய்வதும்’. அதனால்தான் வேத வழியிலே வருகிற வைதிகர்கள் ‘கல்லைக் கழுவு கிறவன்’ என இவனைக் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த அபிஷகத்தை மூவர் அற்புதமாகப் பாடினார்கள். யார் யார் அபிஷேகம் செய்தார்கள். அர்ச்சனை செய்தார்கள் என்பதை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார். இப்போது நாம் கோவிலுக்குப் போனால் குருக்கள்கிட்டே கொடுத்துவிட்டு வெளியே நிற்க வேண்டியதாக உள்ளது. ஞானசம்பந்தர் சொல்கிறார்.
செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை
தெரிந்த அவரோ
டந்தமிக்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய
அமர்கின்ற அரனூர்
(திருமுறை 3 பதிகம் 80 – 4)
செந்தமிழர் உள்ளே போய் அர்ச்சனை செய்தார்கள் என்பதுதானே அர்த்தம். இவன் போய் நேரடியாக அர்ச்சனை பண்ணுகிற பழக்கம் இந்த நாட்டிலே இருந்தது. இதற்குமேலே சுந்தரர் வருகிறார்.
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயிர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
அர்ச்சித் தார்
இந்த பட்டியலில் புலி, சிங்கம் நாகத்தோடு எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.
இனி சிவவாக்கியர் மட்டுமல்ல, பாம்பாட்டிச் சித்தர் பாடுவார்.
“சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே… என்பார்.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்“
என்று. அதனால் இவற்றையெல்லாம் தனித்தனியாகப் பேசப் போகிறாயா என்று பேசுவார் கொங்கணச் சித்தர்.
“சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே உற்பத்தி
நெய்தயிர் மோராச்சு“
ஆக சாதிகளை அடித்து நொறுக்க வேண்டுமென்பது இவர்களுடைய முதலாவது கொள்கை.
அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு நல்ல காரியத்தைச் செய்தார். எந்த நல்ல காரியத்திலும் நாளாவட்டத்தில் குழப்பம் தோன்றத் துவங்கும்.
மிகப் பழைய காலத்திலே தத்துவங்களை வைத்து, க்ரியைகள், சடங்குகளை வைத்தார்கள். நாளாவட்டத்தில் தத்துவங்கள் மறைய க்ரியைகளும், சடங்குகளும் மிஞ்சிவிட்டன. “ஏம்பா இதைச் செய்கிறே?. என்னமோ பெரியவங்க செஞ்சுவந்தாங்க. நான் செய்கிறேன்” என்பதாக அறியாமையினாலே நொந்து போகின்ற அளவுக்கு சடங்குகள் வளர்ந்து விட்டன.
சிவபூஜை முக்கியம். சிவபூஜை பண்ணுவதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தான். ‘தங்கத்திலே லிங்கம் பண்ணி வச்சா இன்ன பலன் கிடைக்கும். வெள்ளியிலே பண்ணி வச்சா இன்ன பலன் கிடைக்கும். சிவப்புப் பூவைப் போட்டுப் பண்ணினா இன்ன பலன் கிடைக்கும்.’ இப்படியெல்லாம் மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். ஆக சிவபூஜை எங்கேயோ போய் பொன்பூஜை, வெள்ளி பூஜையாகிவிட்டது.
இந்த நிலையிலே நால்வர்கள் கூட இதைத் திட்டுகிறார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. திருநாவுக்கரசர் வயது முதிர்ந்தவர். நொந்துபோய்ப் பாடுகிறார்.
‘மனத்திலே இறைவனை நினைந்து உருகிப் பாடினால் அவன் தானாகவே வந்து நிற்பான்.’
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
நெக்கு நெக்கு நினைக்கின்றான் என்றால் அப்படி இறைவன் பெயரைச் சொல்லும்போதே உருகுகிறானாம். அப்படி சிவபூஜை பண்ணுகிறவர் இறைவனைத் தேடிப் போகவேண்டியதில்லை. இறைவன் அவன் மனத்தைத் தேடிப் போகிறான். புக்கு நிற்கும் தானே புகுந்து இருப்பான் என்று சொன்னவர் அடுத்த இரண்டு அடியிலே ஒரு போடு போட்டார்.
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே
வஞ்சகன், திருட்டுப் பையனுடைய பூவையும் நீரையும் பார்த்து நக்கு நிற்பன் என்றார். ‘தோலைக் கடிச்சு, துருத்தியைக் கடிச்சு வேட்டை நாயாயிற்று’ என்று சொல்வார்களே அதுபோல பலரையும் ஏமாற்றி, என்னையும் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டாயே மகனே, என்று ஆண்டவன் சிரிக்கிறானாம். அதுமட்டுமல்ல. ‘அவர் தம்மை நாணியே’ நிற்பன் என்றார். ‘உன்னைப் படைச்சேனே நான்’ என ஆண்டவனுக்கே வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ‘வஞ்சகத்தனுடைய பூவையும்,மலரையும் பார்த்து ஆண்டவன் வெட்கப்பட்டுப் போகிறான் என்று நாவரசர் பெருமான் சொல்லுவார்.
ஆக வெறும் சடங்கு சம்பிரதாயம் என்பது அதிகப்பட்ட காலத்திலே நால்வர்களும் சாடியிருக் கிறார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் திருநாவுக்கரசர் போன்றவர்கள் கொள்கை வேறு; வந்த காரியம் வேறு. ஆக போகிற போக்கில் சாடிவிட்டுப் போனார்கள்.
க்ங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே
‘ஈசன் எங்கும் இருக்கிறான் என்ற நினைவு வந்தாலொழிய கங்கையிலும், காவேரியிலும் குளித்ததனாலே என்ன பிரயோசனம்? ஒவ்வொரு புண்ணிய தீர்த்தமாகக் குளித்து வருவதனாலே பயன் இல்லை’ என நாவுக்கரசர் அவருக்கேயுரிய கெளரவமான முறையில் பேசுவார்.
சித்தர்கள் அப்படிப் பேசமாட்டார்கள். ஒவ்வொரு குளமாய்ப் போய் காலை, மாலை, நண்பகல் என குளித்தாயே மகனே. என்ன ஆயிற்று? இப்படித் தீர்த்தாடனம் ஆடிவிட்டு வந்ததனாலே ரொம்ப புண்ணியமா? அந்தத் தவளை ஆயிற்று? அந்தத் தண்ணீரிலேயே இருக்கிறது பார், இருபத்துநாலு மணி நேரமும் இந்தத் தேரை. அவை போயினவா மோட்சத்துக்கு?’ என்று கேட்கிறார்.
அதனாலே தண்ணீரிலே குளித்தால் மோட்சம் என்றால் தவளையும், மீனும் மோட்சம் போயிருக்கும். இது சித்தருடைய வாதம். ஆக ஒவ்வொரு ஊராகப் போவதனாலேதான் நீ வீடு பேற்றை அடைய முடியுமென்றால் பறவை, விலங்குகள் இரையைத் தேடிப் போகின்றனவே. அவை எல்லாம் மோட்சம் போயிருக்க வேண்டுமே. கோவிலுக்குப் போய்த்தான் கும்பிட வேண்டு மென்றால் அங்கிருக்கிற வௌவால் எல்லாம் மோட்சம் போயிருக்கும்.
ஆக இப்படிச் சொல்வதனாலே ஏதோ இவர்கள் இறை என்பதையோ, இறை பக்தியையோ, இறை எண்ணத்தையோ தவிர்த்தார்கள் என்று நினைப்பது பெருந் தவறு. அதனுடையை அடிப்படையில் இருக்கின்ற தவற்றை எடுத்துக் காட்டினார்கள்.
சமுதாயத்திலே நாலு பேரோடு பழகுகிற போது அங்கே நீ குளிக்காமல் போனால் அது நன்மை இல்லை. கெடுதல். ‘ஆகவே நீராடு என்றால், குளிக்கிறதையே ஒரு சாத்திரமாக்கி, ஒரு சம்பிரதாயமாக ஆக்கி, அதற்கு ஏதோ சடங்குகளை வைத்துக் கொண்டு முங்கி முங்கி எழுந்திருக்கிறதுதான் தண்ணீரிலே குளிக்கிறதுதான் புண்ணியம் என்றால் திட்டுகிறார்கள் சித்தர்கள். திட்டாமல் என்ன செய்ய முடியும்?
அதற்குமேலே எதனாலே லிங்கம் பண்ணுவது, அதற்கு எந்தப் பூவைப் போட்டுப் பூசை பண்ணுவது? இந்த சாஸ்திரம் ஜாஸ்தியாகி சிவபூஜையே மறக்கப் பட்ட காலத்திலே சித்தர் பாடுகிறார். எல்லோருக்கும் தெரிந்த பாட்டுதான்.
நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பஞ் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று
சொல்லு மந்த்ர மேதடா?
‘ஓகோ, இவர் பிற்காலத்திலே வந்த கடவுள் இல்லை என்கிறவர் கட்சி போல இருக்கிறது’ என்று தயவு செய்து நினைத்திட வேண்டா.
நட்ட கல்லும் பேசுமோ
என்பது வரை இவர்களும் கேட்கிற கேள்விதான்.
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினார்
என்பார் மாணிக்கவாசகர்.
இல்லையென்று சொல்பவன் எப்பொழுதுமே சிறந்த பேச்சாளனாக இருப்பான். ஏனென்றால் ஒரு ரெக்கார்டுதான் அவனுடம் இருப்பது. அதைப் போட்டுப் போட்டு சிறந்த பேச்சாளனாக இருப்பான். சித்தர்களும் அப்படியோ என்று தயவு செய்து நினைத்திட வேண்டாம்.
நட்ட கல்லும் பேசுமோ ?
என ஒரு கேள்வி கேட்டார்.
நாதன் உள்ளிருக் கையில்
‘இறைவன் உள்ளே இருக்கிறான் என்கிற நினைவு இல்லாமல் நீ இந்தக் கல்லுக்குப் பண்ணினேன்னா இது என்ன பயனைத்தரும்’ என்று கேள்வி கேட்கிறார். இன்னும் ஒரு படி மேலே போகிறார்.
பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம் ?
ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்திலே போய் ஏதோ அங்கேதான் இருக்கிறான் இறைவன், அங்கேதான் சாந்நித்யம் இருக்கிறது என்று சொல்கிறாயே மகனே பரமிலாதது எவ்விடம் ? பரம் இருப்பது எவ்விடம்?
பரம் என்றால் பரம்பொருள். பரம்பொருள் இல்லாத இடம் ஒன்று சொல்லு. இருக்கிற இடம் ஒன்று சொல்லு.
அறமிலாத பாவிகட்குப் பரமிலை அது உண்மையே
அறம் அடிப்படை வாழ்க்கையில் இல்லையென்றால் நீ எங்கே போனாலும் உனக்குப் பரம் இல்லை.
“ஏதோ ஒரு பெரிய அபிஷேகம் பண்ணி விட்டதாலே பழனியிலே போய் எல்லாவற்றையும் ஒரு வருஷக் கணக்கையும் கழித்துவிடலாம் என்று நினைக்கலாம். பாசவதைப் பரணிக்காரர் என்ற ஒரு பெரியவர் பாடுகிறார். ‘நூறு குடம் பால் அபிஷேகம் பண்ணிட்டா 365 நாளும் பண்ணின பாவத்தைப் போக்கிவிடலாம் என்று நினைக்காதே, ‘என்பாவம்’ என்று கேட்கிறார்.
ஆறு, கடல் ஏழு இருந்தும்
சப்த கடலில் இருந்தும் தீர்த்தத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கிறான். சங்கல்ப ஸ்தோத்திரத்தில் சொன்ன அத்தனை ஆறுகளில் இருந்தும் தீர்த்தத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கிறான். அவர் கேட்கிறார்.
என்பாவம் ஆறு,கடல் ஏழிருந்தும்
அம்பாள் இதனை விரும்பவில்லை.
என் அன்னை அன்பாளர் கண்ணருவி ஆடுவது
திருவுள்ளம்
அம்பாள் சொல்கிறாள் ‘மகனே நான் படைத்த தண்ணியடா இது. இதையே எடுத்து எனக்கு அபிஷேகம் பண்ணாதே. நீயாகப் படைத்தது எதாக இருந்தாலும் அதை எடுத்து அபிஷேகம் பண்ணு. கேவலம் மனிதன் எதைப் படைக்க முடியும்?’ அம்பாள் சொல்கிறாள்.
அன்பாளர் கண்ணருவி
அவர்களது கண்களில் இருந்து வருகிறதே உப்புத் தண்ணீர் – இரண்டு சொட்டு அதற்குத்தான் அம்மை அங்காந்து இருக்கிறாள், எனப் பாசவதைப் பரணிக் காரர் சொல்லுவார்.
அதைத்தான் இங்கே சித்தர் கொஞ்சம் வேகத்தோடு பேசுவார்.
சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
இவைகளைத் தின்றுகொண்டு தண்ணீர் குடிப்பவர்களே!
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே ஆண்டவன் படைத்த உணவு இருக்கும்போது இந்த இலைகளையே தின்று கொண்டு இருந்தீர்களானால் உடம்புதாண்டாப்பா குறையும்.
சிட்டரோது வேதமும் சிறந்தஆக மங்களும் நட்டகார ணங்களும் நவின்றமெய்ம்மை நூல்களும் கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்
ஆக வேதத்திலிருந்து, ஆகமங்களிலிருந்து, உபநிஷத்து களிலிருந்து என்ன ஆகிவிட்டன? ஏதோ ஒரு கருத்தை, சிறந்த தத்துவத்தை சொல்ல வந்திருக்கிற கருவிகள் அவை என்பதை மறந்துவிட்டு அவற்றையே வழிபடத் தொடங்கினார்கள்.
சாலையிலே வருகிறான். சென்னைப் பட்டினம் 60 கிலோ மீட்டர் என கைகாட்டி மரம் போட்டிருக்கிறது. அது இவனுடைய அறிவை வழிப்படுத்தி, இதன் வழியாகப் போ என்று சொல்வதற்கு. அதற்கடியில் உட்கார்ந்துகொண்டு ‘இதுதான் சென்னைப் பட்டினம்’ என்று ஒருவன் சொல்வானேயானால் அதற்கு என்ன செய்வது?
சிட்டரோது வேதமும் சிறந்தஆக மங்களும் வழிகாட்டுவதற்காக வந்த கைகாட்டிகள். இவன் என்ன பண்ண ஆரம்பித்து விட்டான்?
திருமுறை பூஜை என்பான், ஞானசம்பந்தர் தேவாரம் ஆகிய முதலாம் திருமுறையிலிருந்து சேக்கிழாருடைய பன்னிரண்டாந் திருமுறை வரையிலே சத்தியமா ஒருமுறை கூடத் திறந்து பார்த்திருக்க மாட்டான் – அழகாக அடுக்கி வைத்து நம் போல்வார் திறந்து பார்த்து விடுவாரோ என்பதற்காகக் கண்ணாடி போட்டுப் பூட்டி சீல் வைத்து பூஜை செய்வான், ஊதுவத்தியைக் கொளுத்தி வச்சு.
பாரதி காலத்திலேயும் நடந்திருக்கிறது.
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம்இவள் பூசனை யன்றாம்
என மனம் நொந்து பாடுவார் அந்தக் கவிஞர் பிரான். ஆக திருமுறை பூஜை செய்வது திருமுறைகளைப் படித்துப் பயன்கொள்வது என அர்த்தம். தினமும் அதைப் படிக்கவேண்டும் என்று அர்த்தம். இதை உணராது தவறு நடந்தபோது சித்தர்கள் கண்டிக்கிறார்கள்.
‘வாழ்க்கை வழிகாட்டியாக வந்த நூல்களை அதுவே வழியென்று நினைத்துவிட்டாயே, மகனே
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின் ‘பரம்பொருள் யார் என்று தெரிந்த பின்னாலே, இதெல்லாம் படு பைத்தியக்காரத்தனமாகப்பட்டது. ஏன்?’
ஒரே வேதத்திலே பலவிதமான வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சைவர்களுக்கு ஓரு ஆகமம். வைஷ்ணவர்களுக்கு ஒரு ஆகமம். அவர்கள் அதுதான் பரம்பொருள் என்பார்கள். இவர்கள் இதுதான் பரம் பொருள் என்பார்கள். எந்த வழியில் போகிறது? அவரவர்களுடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றபடி அமைக்கப்பட்டது. மனம் வளரவளர இவை யெல்லாம் புளியம்பழம் போல விட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
இவன் நாலு வயதிலே பள்ளிக்கூடம் போகும் போது மாம்பழத்திலே சொல்லி கணக்கு கற்றுக் கொண்டான். எம்.ஏ. படிக்கிற காலத்திலும் மாம்பழத்தோடே படித்தான் எனில் இவன் என்ன பண்ண முடியும்?
குழந்தைப் பருவமாக இருக்கும்போது இந்த சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் வைத்து அவனது மனத்தை ஒருமுகப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தார்கள். இவன் எல்லாம் தாண்டின நிலைமையிலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான் என்றால் சாகிற வரையில் அனுஷ்டானம் பண்ணிக்கொண்டிருந்தால் என்ன பண்ண முடியும்? அதைத்தான் நினைக்கின்றார், இங்கே சித்தர்.
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள் தேவர்
கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்.
ஆக ‘கல்’ என்பது அடையாளம் குறியீடு. இங்கு எப்படி நிழற்படம் நம் நினைவை அவர்களிடம் கொண்டு செல்வதற்கு உதவுகிறதோ அதுபோல்
குறிகளும் அடை யாளமுங் கோயிலும்
நெறிகளும்அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்சொல் புகாததே
என்று சொல்லுவார் திருநாவுக்கரசர். இது குறிகள், அடையாளங்கள் என்று தெரிந்துகொண்ட பிற்பாடும் இவற்றை வழிபடுவதில் தவறில்லை. அதை வலுவாக இந்தச் சமுதாயத்திற்கு இடித்துச் சொல்வதற்காகத் தான் சித்தர் பெருமக்கள் தோன்றினார்கள். அதுமட்டுமல்ல. இடைக்காலத்திலே சாதி சமயத்தைச் சாடி, விக்ரக வழிபாட்டையும் ஓரளவு சாடி பழக்க வழக்கங்களையும் சாடினார்கள். அதற்குமேலே சமுதாயத்திற்கு மாபெரும் நன்மையைச் செய்யத் தொடங்கினார்கள். அதனையும் சற்று விரிவாக நாம் காணவேண்டும்.
திருக்கோயிலுக்குப் போகிறவர்கள் தனியாகப் போக முடியாது. ஊரிலுள்ள பலரும் வருவார்கள். சமுதாயம் முழுவதும் ஒன்றாகக் கூடுவதற்குரிய இடம். பழைய காலத்திலே திருக்கோயில்கள் இறைவனை வழிபடுவதற்குரிய இடமாக மட்டுமே இல்லையே. அதுவே ஆதுலர் சாலையாக இருந்தது. அதுவே மருத்துவமனையாக இருந்தது. அதுவே பள்ளிக்கூட மாக இருந்தது. அதுவே சொற்பொழிவு மேடையாக இருந்தது. அந்த கிராம சமுதாய மக்கள் கூடி பஞ்சாயத்துப் பேசுகின்ற இடமாகவும் இருந்தது. ஆன்மா மட்டும் லயிக்கின்ற இடமாக இல்லாமல் சமுதாய மக்கள் அனைவரும் கூடும் இடமாக அமைந்ததுதான் பழைய திருக்கோயில்களுக்குள்ள தனிச் சிறப்பு.
திருவொற்றியூர் கல்வெட்டு முதலானவற்றைப் பார்த்தோமானால் தமிழ்நாட்டுக் கோயில் எந்த அளவுக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் ஊடாடி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தனிப்பட்ட மனிதன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும் அவன் வீட்டில் கூடுவது என்பது ஒரு சிலருக்குப் பிடிக்கும். ஒரு சிலருக்குப் பிடிக்காமல் போய்விடும். ஆகவே சமுதாயத்தார் என்ன செய்தார்கள்? விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரும் ஒன்றாகக் கூடுவதற்கு கோயில் வாயிற் படிதான் சிறந்த இடம். ஆகவே அதற்கு ‘மன்று’ என்று பெயர் வைத்தனர். இன்றைக்கு அந்த மன்று என்ற சொல் மறைந்து ‘மந்தை’ என்றாகிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் மந்தை, சாவடி என்று சொல்லுவான். மந்தை என்றால் ஏதோ ஒரு காளி கோயில் இருக்கும். எல்லோரும் வேறுபாடற்றுக் கூடுகின்ற இடம். சமுதாய மக்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுகின்ற இடத்திலே ஒருத்தன் குளிக்காமலோ, தூய்மை இல்லாமலோ போனான் என்றால் அவன் பிரச்சினைக்குரியவன் ஆகிவிடுவான்.
ஆகவே கோயிலுக்குப் போகவேண்டுமென்றால் கண்டிப்பாகக் குளித்துவிட்டுப் போகவேண்டுமென்று வைத்தார்கள். இது நாளாவட்டத்தில் என்ன ஆகிவிட்டது? ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துவிட்டு, குளித்துவிட்டுப் போனாலும் போதும் என்று நினைத்தானே தவிர, தூய்மை காரணமாக இது சொல்லப்பட்டது என்பதை மறந்துவிட்டு, அதை சம்பிரதாயமாக்கிவிட்டான். இந்த நிலையைத்தான் சித்தர்கள் பாடுகிறார்கள்.
காலைமாலை நீரிலே மூழ்கு,மந்த மூடர்காள்
நீரிலே மூழ்குவது எதற்கு என்று தெரியாததனாலே அவனை மூடன் என்று: திட்டினார். சொன்னாலும் தெரிந்துகொள்ளவில்லை. அவனை மந்த மூடர் என்றார்.
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்?
ஏனப்பா, நீ இரண்டு வேளை மூழ்கினதற்கு இத்தனை பலன் என்று எதிர்பார்க்கிறாயே, இருபத்துநாலு மணி நேரமும் அந்தத் தேரை நீருக்குள்ளேயே கிடக்கிறது. அதற்கு ஏதாவது பயன் உண்டா?
நாலு வேதங்களையும் விடாமல் ஓதுகிறான். ஓதுகிறவன் பொருள் தெரிந்து ஓதுகிறானா, இல்லை. ஏதோ அது ஒரு கடன், ஒரு தொழில் என்ற முறையிலே. அதுபோல விபூதி இடுகிறவனும் உடம்பு, தலை கால் என்று விலை குறைவா(க)க் கிடைக்கிறது என்பதற்காகப் பூசித் தள்ளிவிடுகிறான். ஓயாமல் ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கிறான். கேட்டால் ஆண்டவன் நாமத்தைப் பஜித்துக்கொண்டே இருக்கிறேன் என்கிறான். சொல்லுகிறானே அவனது உதட்டுக்கும், மனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்கிறதா என்றால், கிடையாது. வெறுமனே சொல்வதற்கு பயன் உண்டென்றால் உலகத்திலே உள்ள டேப்ரெக்கார்டர்கள் எல்லாம் மோட்சம் போயிருக்க வேண்டும். இந்தத் தமிழ் நாட்டுப் பெரியவர்கள் சொன்னார்கள். நாலு வேதத்தை ஓதினாலும்,நீறு பூசினாலும், பிதற்றினாலும் பிரான் இரான் என்று என்ன செய்ய வேண்டும்?
உருக்கி நெஞ்சை உள்கலந்து உண்மை கூற
வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே,
சுருக்கமற்ற சோதி வடிவாக இருக்கிறான் இறைவன். அவன்
நெக்கு நெக்கு நினைபவர் செஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
என்று நாவுக்கரசர் பிரான் சொன்னாரே, அதையே தான்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
என்று ஞானசம்பந்தர் சொல்லுவார்.
சித்தர்களும் நமச்சிவாய என்ற அஞ்செழுத்தைப் பெரிதுபடுத்திச் சொல்லுவார்கள். ஆனால் அஞ்செழுத்தைச் சொல்வதற்கு வழிதுறைகள் சொல்லுவார்கள்.
ஒரு எட்டு குயர் நோட்டை வாங்கி ‘ஓம் நமச்சிவாய’ என்று ஒரு கோடி தடவை எழுதி விடுகிறான். எழுதுபவன் என்ன செய்கிறான்? ஒவ்வொரு பக்கத்தினுடைய அடியிலும் கோடு போடுகிறான். இதோடே இத்தனை ஆச்சு, இதோடே இத்தனை ஆச்சு என்று. ஆக ஆண்டவன்கிட்டே இவன் வியாபாரம் செய்கிறான். எண்பதாயிரம் எழுதிட் டேன், இப்போ என்ன தர்ரே, ஒரு லட்சம் எழுதிட்டேன். இன்னும் பார்க்காம இருக்கிறாயே. இதை சித்தர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்
என்று சொன்னால், பத்துகோடி தடவை எழுதினால் என்ன? ஒரு லட்சம் தடவை எழுதினால் என்ன? அதைத்தான் இங்கே சொல்கிறார்.
ஆடியா டியகம் கரைந்துஇசை
பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடிநா டிநரசிங்கா வென்று, வாடும்
என்று ஆழ்வார் பெருமானும் பாடுவார். அகம் கரைந்து நாடி நாடி நரசிங்கா என்று சொல்லணுமே தவிர யாரோ ஒருத்தன் பேரை வச்சுகிட்டு தினம் கூப்பிடுவதனாலே ஒரு பிரயோசனமும் இல்லை. இதைத்தான் வெட்ட வெளிச்சமாகப் பாடுகிறவர்கள் சித்தர்கள்.
உருக்கி நெஞ்சை உள்கலந்து உண்மைகூற வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே
என்று.
இனி வாலைச்சாமி என்ற ஒரு சித்தர்
தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடி வேத
சாத்திரப் பொத்தலை மூடுங்கடி முத்தி
பெற ஞான வஸ்து வரக்கண்டு
மூட்டிக் கும்மியடி
ஆக இது பல சமயங்களிலே வெறும் குப்பையாகி விட்டது. அதன் தத்துவங்களும், பொருளும் மறைந்து விட்ட நிலையிலே, ஏன் இது என்று அறிய முடியாத நிலையிலே வெறும் பாரமாகப் போய்விட்டதனாலே அதை ஒதுக்கிவிடுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு மேலே வழிபாட்டு முறையைச் சாடுகிறார் சிவவாக்கியர்.
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ச்சிடுந்த ராக்களில் வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின் தொல்லையற்றி டப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
ஸ்படிக லிங்கம் சார், அதிலே பூஜை பண்ணினா மதிப்பு அதிகம். கண்ணாடி லிங்கத்துக்கும், ஸ்படிக லிங்கத்துக்கும் இப்படி வித்யாசம். தங்கம் மதிப்பு ஜாஸ்திதான். ஆக அதை வைத்துப் பூஜை பண்ணினால் அதற்கேற்றபடி பலன் என்று நம்புகிற நிலை வந்துவிட்டது.
ஒரு காலத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் தங்க லிங்கத்தை வைத்து வழிபட்டுக் கொண்டிருந்த போது மற்றொரு நண்பர் சொன்னார், ‘எப்பவாவது உனக்குப் பூஜையிலே மனம் ஈடுபடுமா?’. ‘ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?
‘வச்சிருக்க தங்கத்தை யாராவது தூக்கிக் கொண்டு போய்விடுவானே என்கிற நினைவுதானே உனக்கு இருக்கும்’ — அப்போது தங்கத்தின் விலை 48 ரூபாய்தான். இருந்தாலும் இந்த நினைவுதானே உனக்கு இருக்கும் என்று. இதை அவருக்கு முன்னாலே வியாக்யான கர்த்தாக்கள் சொன்னார்கள், ‘செருப்பை வைத்து திருமால் தொழப் போனாற் போலே’ என்று.
புதிசா வாங்கின செருப்பைக் கோயிலுக்கு வெளியே வைத்துவிட்டு ஆண்டவனைக் கும்பிடப் போனா, ஆண்டவன் நினைவா வருகிறது இவனுக்கு. அதை யாராவது தூக்கிக் கொண்டு போய்விடுவார் களோ என்றே நினைப்பான்.
கல்லு, வெள்ளி, செம்பு, இரும்பு என்று இதனாலே விக்கிரகங்களைப் பண்ணி வைத்துக் கொண்டு
வல்லதேவ ரூப பேதம்
அவரவர்களுக்கு விருப்பமான வடிவங்கள் அமைத்துப் போற்றிவிட்டால்
தொல்லையற்றி டப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
இதை வழிபட்டுவிட்டதனாலே, இதற்கு ஏதோ பொங்கல் முதலானவற்றைப் படைத்துவிட்டதனாலே ஒரு நிலையை அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா?
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசனாணை
இல்லையே.
என்பார் சித்தர்.
‘மகனே தங்கத்திலும், வெள்ளியிலும் பண்ணி வைத்து வழிபட்டு விட்டதனாலே ஏதோ கிடைத்து விடும் என்று நினைக்காதே. ஈசன் ஆணை இதனாலே எந்தப் பயனையும் நீ அடைய முடியாது’ என்று பேசுவார்.
“இப்படிப் பேசுகிறார்களே, இவர்கள் ஏதோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவியாக ஓடிவிட வேண்டுமென்று – இடைக்காலத்திலே போலித் துறவு வந்ததே – சித்தர்கள் இதைத்தான் வரவேற்கிறார்களோ என்று தயவு செய்து நினைத்துவிட வேண்டாம்.எப்படி ள்ளுவப் பேராசான் இல்லறத்தைப் போற்றினாரோ அதேபோல சித்தர்களும் போற்றியிருக்கிறார்கள்.
மாதர்தோள் சேராத தேவர்
மாநிலத்தில் இல்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்
வாழ் சிறக்கும்
ஆக இல்லற வாக்கைதான் மிகச் சிறந்தது என்று பேசுவார் சிவவாக்கியர்.
வருவிருந்தோ டுண்டுடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் வருவிருந்தோ னீசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே
என்று பேசுவார்.
‘இல்லற வாழ்க்கை நடத்தி, வர்றவங்களுக் கெல்லாம் சாப்பாடு போட்டீன்னா, வந்து சாப்பிட்ட வங்களிலே ஒருவேளை யாராவது ஒருத்தன் ஈசனாகக் கூட இருக்கலாம்.’
இளயான்குடிமாறனார் உணவு அருத்தினார் அல்லவா? அதுபோல வருகிறவர்களுக்கு எல்லாம் உணவு அருத்துவது என்ற ஒரு கொள்கையோடு இருப்போமேயானால், மிக உயர்ந்தவர்கள் கூட வந்து சிக்கிக் கொள்வார். ஆக திருமூலர் சொல்லுவார்.
திலம் அத்தனை சிவஞானிக்கு ஈந்திடில்
என்று சொல்லுவார். திலம் எள்ளு. மூன்று பிறப்புக்கும் இது உதவும் என்பார்.
சரி, எங்கே போய்ச் சிவஞானியைத் தேடிப் பிடிப்பது? எதை எடுத்தாலும் போலி இப்போ ரூபாய் நோட்டிலே போலி வந்தமாதிரி மனிதர்களிலே போலி. சிவனடியாரை எங்கே தேடிப் பிடிப்பது? அதிலும் சிவஞானியை எங்கே தேடிப் பிடிப்பது?
அதற்குத்தான் சிவவாக்கியர் சொல்கிறார். ‘மகனே, நீ போய் சிவஞானியைத் தேடிப் பிடிப்பது என்பது முடியாத காரியம். ஏன்னா உன் அளவுக்குத் தானே நீ போய்த் தேடிப் பிடிக்க முடியும், உன்னைவிடக் கடந்து நிற்பவர்களை நீ எங்கே போய் கண்டுபிடிக்க முடியும்? முடியாது. அப்போ என்ன வழி? ஒரே வழிதான். எல்லோருக்கும் போடு. எல்லோருக்கும் போடுவதிலே அந்த சிவஞானி வந்து சிக்குவான்.
வருவிருந்தோ னீசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே
என்பதாக மிகப் பரந்துபட்ட நோக்கத்தோடு, சமுதாயம் நன்கு வாழவேண்டுமென்று கருதினார்கள் இவர்கள். மிக உயர்ந்த நிலைக்குப் போனாலும் நான் மட்டும் தானே மோட்சம் போக முடியும். அதனால் யாருக்கென்ன பிரயோசனம்?
இராமானுஜர் கோபுரத்தின் மீது ஏறிக் கொண்டு அட்டமந்திரத்தைச் சொன்னார். குரு ஏசினார், ‘நரகத்துக்குப் போவே’ என்று. ‘ஸ்வாமி கவலைப்படவில்லை. இந்தச் சமுதாயம் முழுவதும் வீட்டுப் பேற்றைப் பெறுவதானால், நான் ஒருத்தன் நரகம் போவதற்குத் தயாராக இருக்கிறேன்’ என்றார். இதுதான் இந்த நாட்டிலே தோன்றிய பரம கருணையுடைய பெரியவர்களுடைய உள்ளம் இருந்தவாறு. சித்தர்களும் அப்படித்தான். சமுதாயம் வாழ வேண்டும். கடைசி மனுஷன் மோட்சம் போறவரை எனக்கு ஒன்றும் அங்கே வேலையில்லை என்று நினைத்தவர்களே பெரியவர்கள். முன்னமேயே சொன்னோம்.
சித்தர்களுக்கு எங்கேயும் போகவேண்டிய நிலையில்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற அவர்கள், பரம்பொருளின் ஆணைபெற்று வந்து அங்கங்கே வந்து தங்கி பணி புரிகின்றவர்கள். ஆகையினாலே அவர்களுக்கு விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. வேண்டப்பட்டவர்கள், வேண்டாதவர்கள் எதுவும் கிடையாது. அவர்கள் இதைச் செய்ய வேண்டுமென்ற சட்டதிட்டமும் இல்லை. இதைச் செய்துதான் முன்னேற வேண்டு மென்ற பிரச்சினையும் கிடையாது. ஆகவே எது தேவையோ அதைக் கூசாமல் சொல்லுவார்கள். எப்படி மருத்துவன் அறுவையினாலேதான் அதைப் போக்க முடியும் என்றால் கருணை காட்ட மாட்டான். அறுத்துத் தள்ளிவிடுவான். அறுவை சிகிச்சையினாலே தான் அவனை வாழ வைக்க முடியும் என்றால் பண்புடைய வைத்தியன், ‘ஐயோ பாவம்’ என்று கருதினான் என்றால் அவன் பண்புடைய மருத்துவன் அல்லன். வருந்தினாலும், அழுதாலும் கவலையில்லை. அதைத்தான் ஆழ்வார் சொல்லுவார்.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்
என்று. அதுபோல் சமுதாயத்திலே இருக்கிற துன்பங்களைத் தவறுகளைப் போக்க வேண்டுமானால், இந்தச் சித்தர்கள் பளார் பளார் என்று அடிப்பார்கள். ஆக மென்மையாகச் சொல்கிற வழக்கம் கிடையாது. எப்படியாவது அதைப் போக்க வேண்டு மென்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு. ஆகவே சொல்கிறார்.
‘மகனே சௌக்கியமா இல்லற வாழ்க்கை நடத்து. வருவிருந்துக்கு எல்லாம் சோறுபோடு. வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும்’ என்று பேசுவார்.
இனி பூசை செய்வதற்கும் வழி சொல்லுவார்.
ஆசைகொண்ட அனுதினமும் அன்னியர் பொருளினை மோசஞ்செய்த பகரிக்க முற்றிலும்ம லைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினில் எழுநரகைக் காத்திருப்ப துன்மையே
“என்னப்பா அங்கே உட்கார்ந்துகிட்டு மறுமறுங்கறே. அடுத்தவனை எப்படி க்ளோஸ் பண்ணலாம்னு கணக்குப் போடறயா? காசினியில் ஏழ் நரகுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லுவார்.
“தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார். சண்டாளக் கோபத்தை நீக்கமாட்டார். ஊன்கண்ட சுகபோகம் ஒழிக்கமாட்டார்.எப்படி ஐயா வீட்டுப் பேற்றை அடையப் போகிறார்?” என்று சட்டைமுனி பேசுவார்.
இனி ஒருவகையாக எல்லாக் காலத்திலும் இருக்கின்றவர்கள் இந்தச் சித்தர்கள் என்று கண்டோம். சமுதாயத்திற்கு வாழ்வளிப்பதற்காக வந்தவர்கள் என்று கண்டோம். நிர்க்குணமாக இருக்கின்ற இறைப் பொருளினுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அங்கங்கே தோன்றியவர்கள் என்று கண்டோம். இதற்குமேலே இவர்களுடைய ஆற்றலையும் பற்றி ஓரளவு காண வேண்டும்.
சித்தர்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றார்கள். இருக்கின்றார்கள் என்று நிகழ்காலத்திலே பேசுவதற்குரிய காரணம் உலகத்திற்கு அவர்களுடைய சேவை தேவைப்படுகிறது. ஆகையினாலே அங்கங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பலசமயங்களிலே நமக்கு அது தெரிவதில்லை. அவ்வளவுதான்.
உதாரணமாகப் பழனி, திருப்பதி முதலிய பெரிய க்ஷேத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பழனியிலே உள்ள ஆண்டவனது வடிவத்திற்கும் மற்ற இடங்களிலே உள்ள ஆண்டவனுடைய வடிவத்திற்கும் வேறுபாடு உண்டா? நிச்சயமாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஒரே ஆண்டவன் பழனியிலே ஏன் அவ்வளவு சாந்நித்யத்துடன் விளங்க வேண்டும்? திருப்பதியிலே அது பெருமாளா, அன்னையா? முருகனா அந்த ஆராய்ச்சி அப்புறம் இருக்கட்டும். அங்கேயிருக்கிற வடிவு ஏனைய கோவில்களிலே இருக்கிற வடிவு போன்றதுதானே. அந்த வடிவு ஏனைய கோவில்களிலே இருக்கிற வடிவுதான் என்றால் அந்த இடத்திலே ஏன் இவ்வளவு சாந்நித்யம் இருக்க வேண்டும்? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பழனிக்குப் போகிறவர்கள் ஆயிரம் பேர் என்றால் 999 பேருக்கு ‘போகரை’ப் பற்றித் தெரியாது. திருப்பதிக்கு பதினாறாயிரம் பேர் போகிறார்கள் என்றால் ஒரு சிலருக்குக் கூட ‘கோரக்கரை’ப் பற்றித் தெரியாது. திருச்செந்தூருக்கு ஆயிரம் பேர் போகிறார்கள் என்றால் ‘பஞ்ச சித்தர்களை’ப் பற்றி யாருக்குமே தெரியாது. இந்தத் திருப்பதியில் இருக்கிற வடிவம், பழனியில் இருக்கிற வடிவம், திருச்செந்தூரில் இருக்கிற வடிவம் இவை யாவும் பதினாயிரம் வால்ட் பல்பு என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த விக்கிரகம் பதினாயிரம் மெழுகுவர்த்தி வெளிச்சம் தருகின்ற பல்பு. இதற்கு மின்சாரம் சப்ளை பண்றது அங்கே எங்கேயோ மறைவில் இருக்கிறது.
பழனியில் போகர் ஆக, திருப்பதியிலே கோரக்கர் ஆக, திருச்செந்தூரிலே பஞ்ச சித்தர்களாக அங்கங்கே இருக்கிறார்கள். ஏதோ விஷயம் தெரிந்தவர்கள் பழனிக்குப் போய்ப் போகருடைய சமாதியை வழிபட்டு வருகிறார்கள். அதே மாதிரி திருச் செந்தூருக்குப் போனால் பாதாள லிங்கம் என்று சொல்லுவார்கள். யாரேனும் ஒருத்தன் கேட்டான்னா அந்த விருப்பக்காரருக்கு கோவில்காரன் கொண்டு காட்டலாம். எல்லா இடங்களிலும் இந்தச் சித்தர்கள் தங்கிக் கொண்டு, விக்ரகத்தின் மூலமாகவோ அல்லது நடமாடும் மனிதர்கள் மூலமாகவோ தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். இரண்டும் உண்டு. விக்கிரகத்தின் மூலமாக அருள் செய்வதும் உண்டு. மனிதர்கள் மூலமாக அருள் செய்வதும் உண்டு. அப்படி எந்தவிதமான அருள் செய்தாலும், சமுதாயத்திற்கு எது தேவையோ அதனை இவர்கள் செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்தப் பெரியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஏசு, புத்தர் முதலானவர்கள் செயற்கரும் செயல்களைச் செய்தார்கள் என்று நாம் சொல் கிறோம். இப்போது சிலபேர் இது முடியமோ என்று நினைக்கிறார்கள். நினைப்பதிலும் தவறு இல்லை. Angle என்று சொல்கிறோமே எந்தக் கோணத்தில் நின்று பார்க்கிறோமோ அந்தக் கோணத்தின் அடிப்படையில் தான் விளங்கிக் கொள்ள முடியும்.
ஐந்து வயதுக் குழந்தை ஒரு கிலோகிராம் தூக்குவது என்பது முடியாத காரியம். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இருபது வயது வாலிபனுக்கு அது மிக எளிதான காரியம். இருபது வயது வாலிபன் ஐந்து வயதுக் குழந்தையை, தூக்க முடியவில்லை என்றாலும் அதை எள்ளி நகையாடுவதும் அறியாமை, இதைக் கூடவா தூக்க முடியவில்லை என்று. ஐந்து வயதுக் குழந்தை ஒரு கிலோ கிராமைத் தூக்குவதைப் பார்த்தோ, இருபது வயது வாலிபன் அந்தக் குழந்தையைத் தூக்குவதைப் பார்த்தோ மாபெரும் செயல் என்று நினைப்பதும் அறியாமை. அதுபோல செயற்கரிய செய்வார் பெரியர் என்று வள்ளுவப் பேராசான் சொல்லுகிறானே செயற்கரிய என்று எதுவுமே உலகத்தில் கிடையாது. நம்முடைய மனோ நிலையிலே இது செயற்கரியது. மேலே போகும்போது இது சாதாரணமாகப் போகிறது.
கீழே தரையில் இருந்து பார்த்தால் நாலு சுவர் தெரிகிறது. லைட் ஹவுஸ் மேலே நின்று பார்த்தால் ஊர் முழுவதும் தெரிகிறது. நாற்பதாயிரம் அடிமேலே போகிறபோது செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம் வரை தெரிகிறது. அதுபோல் மேலே போகப்போக இது சாதாரண சமாசாரம். ஆக செயற்கரிய செயல் என்றோ, உலகத்தில் நம்பமுடியாத் செயல் என்றோ எதுவும் கிடையாது. அவரவர்கள் நிலையிலே அததனைச் செய்ய முடிகிறது. பொதுவாகச் சித்தர்கள் என்ன செய்ய முடியும் என்று ‘பாம்பாட்டி’ பாடிக் காட்டுவார்.
தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம் துரும்பைப் பெருந் தூணாகத் தோன்றச் செய்குவோம் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணுமாகச்
செய்குவோம்
எட்டு மலைகளைப் பந்தா எடுத்தெறி குவோம்
மூண்டெழும் அக்கினிக்குள் மூழ்கி வருகுவோம்
முந்நீருள் இருப்பினும் மூச்ச டக்குவோம்
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கிவிடுவோம்
செப்பரிய மூன்றுலகும் செம்பொன் னாக்குவோம் செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இது பலரும் அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். கலிலியோ கடலில் அன்பர்களுடன் படகில் போகும்போது புயல் வந்தது. அன்பர்கள் வருந்தினார்கள். ஏசு பெருமான் புயலைப் பார்த்து STOP என்று சொன்னார். நின்றுபோய்விட்டது என்று விவிலியத்தில் படிக்கிறோம்.
இங்கே ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரலாற்றிலே பார்க்கிறோம். கொள்ளம்புதூர் வெள்ளத்தில் புகுந்து போனார்கள் என்று. இப்போதும் இவையெல்லாம் நடைபெறுகின்றன என்பதை ஓரிருவர் அறிய முடியும்.
முன்னே சொன்னபடி சித்தர்கள் பல்வேறு இடங்களிலும் இருக்கிறார்கள் என்றதுபோல சென்னையை அடுத்து 92 கிலோமீட்டர் தூரத்தி லிருக்கிற மேல்மருவத்தூர் என்ற இடத்திலே ஒரு சித்தர் ஒரு சித்தர் என்று சொல்வது தவறு – பல சித்தர்கள் வாழ்கிறார்கள்.
இந்த அச்சிறுப்பாக்கம், மருவத்தூர், திருவண்ணாமலை இந்தப் பகுதியிலே நிரம்ப சித்தர்கள் அன்றும் இன்றும் இருந்து வருகிறார்கள் என்று தெரிகிறது. அங்கே ஒருவர் இதனைச் செய்து கொண்டிருக்கிறார் பலரும் காண. அற்புதங்கள் நடைபெறுகின்றன.
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னாலே ஒரு ஐந்து வயதுப் பையன் அங்கப்பிரதட்சிணம் செய்து வரவேண்டுமென்று முடிவு செய்தார். பிற்பகல் பன்னிரண்டேகால் மணிக்கு. சாதாரண மனிதர்களால் கூட காலை வைத்து நடக்க முடியாத உச்சி நேரத்தில் இந்தப் பையன் அங்கப்பிரதட்சிணம் வரவேண்டுமென்றால் நடக்கிற காரியம் இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு துணிச்சலோடே அங்கப்பிரதட்சணம் வா என்று சொன்னார்கள். ‘பையன் கீழே விழுந்தான் உருண்டான் திறந்தவெளி வெயில் அடிக்குது’ எல்லோரும் பார்த்தார்கள். இறுதியாக அங்கப்பிரதட்சணம் முடிந்த பிறகு அந்த சித்தர் பேசுகிறார். ‘குழந்தையை வா’ என்று சொன்னால் அவனுக்குரிய கடமையைச் செய்து தருவது என் கடமை. வெயிலைக் குளிர்ச்சியாக்குவது சாதாரண சமாசாரம்.
ஆடிப்பூரத்துக்கு முதல்நாள் மழை என்றால் நம்ப முடியாத மழை. முழங்காலளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆடிப்பூரத்தையொட்டி சிலர் விழாவைக் கொண்டாட வேண்டுமென்று நினைத்தவர்கள் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்து வைத்துவிட்டு இந்த மழையைக் கண்டு பயப்படு கிறார்கள். ஒன்றுமே நடைபெறாமல் போய்விடுமோ என்கிற வருத்தம் அவர்களுக்கு. ‘கவலை வேண்டாம். மழையை இந்த விநாடியே நிறுத்திவிடுகிறேன்’ என்றார் அந்தச் சித்தர். பூரம் முடிகின்ற வரையில் மழை இராது என்று சொன்னால் பூரம் முடிகிற வரையில் ஒரு சொட்டு மழை இல்லாமல் செய்ய முடிகிறது. ஆக இயற்கையை மாற்றுவது என்பது சித்தர்களுக்கு மிகச் சாதாரண சமாசாரம்.
காரணம் இயற்கையென்று நீங்கள் எதையோ மனதில் நினைத்துக் கொண்டு அது உங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டதென்று நினைக்கிறீர்கள். அவர்கள் அப்படி நினைப்பதில்லை. இயற்கையே அவர்கள், அதுதான் அவர்களுக்கும் நமக்குமுள்ள வித்யாசம். நாம் இயற்கையில் இருந்து நம்மை பிரித்துக் கொண்டோம். அதுதான் உலகத்திலே இருக்கின்ற பிரச்சினை எல்லாம். இந்தச் சித்தர்கள் இயற்கையே தாங்களாக மாறிவிட்டார்கள். ஆகவே அவர்கள் அதை அடக்குவதும், விருப்பம் போல செய்யச் செய்வதும் சாதாரணமான சமாசாரம். இதை விளங்கிக் கொள்வோமேயானால் சித்தர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்துவிடுவோம் என்று பாடுவார் பாம்பாட்டி. மேல் மருவத்தூரில் நடந்தது இது.
வேதன்செய்த சிருட்டிகள்போல் வேறு செய்குவோம் வேதனையு மெங்கள்கீழே மேவச் செய்குவோம்.
வேதன் – பிரம்மா.
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்.
நாதன் – பரம்பொருள். பரம்பொருள் வேறு, தாங்கள் வேறு என்ற சூழ்நிலை இல்லாதவர்களாதலாலே
சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச் சிற்றடிக்குக்
குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
இதற்கும் மேலே கூடுவிட்டுக் கூடு பாயும் வல்லபம்’ என்று கூறுவார். பரகாயப் பிரவேசம் என்பது இன்று நேற்றன்று. மிகப் பல காலமாக இந்த நாட்டிலே இருந்து வருகின்ற ஒன்று.
அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்…
கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழும் கார ணக்குரு
என்று சொல்லுவார்கள். கடம்- உடம்பு . ஆக இந்த உடம்பை அப்படியே வைத்துக்கொள்வது வஜ்ரத் துக்கே பழுது வாய்க்குமாயினும் வல்லுடம்புக்கு ஒரு குறை வாய்த்திடாது.
இதைப் பின்னே வந்தவர்கள் என்ன நினைத்து விட்டார்கள். “ஏதோ பஞ்சபூதத்தினாலான இந்த உடம்பை வச்சுகிறது” என்று நினைத்தார்கள். அதிலேதான் வந்தது தவறு.
வள்ளல்பெருமான் ‘சாவா மூவாப் பெரு வாழ்வு’ என்று சொன்னவுடனே ‘ஊரிலே இருக்கிற பிணத்தை எல்லாம் கொண்டுவந்து போட்டு உயிர்ப் பிக்கணும்’ என்று நினைத்தார்கள். சித்தர் பெரு மக்களுடைய அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததனாலே வந்த பிரச்சினை இது.
உடம்பு வேண்டுமானால் இதை விட்டுவிட்டு வேறு ஓர் உடம்பு. அதை விட்டுவிட்டு வேறோர் உடம்பு. ஏனையோர்கள் விஷயத்தில் அவரவர்கள் வினைப்படி உடம்பு கொடுக்கப்படும். சித்தர்களைப் பொறுத்த மட்டிலே அப்படியில்லை. ‘பாம்பு வடிவோ, புலி வடிவோ மனித உடம்போ எது வேணுமோ அந்த உடம்பை எடுத்துக்கொள்ள முடியும் அவர்களாலே, கூடுவிட்டுக் கூடு பாய்கிற காரணத்தினால்.
அதை வாங்கிக் கொள்வோமேயானால் சாவா மூவாப் பெருவாழ்வு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த உடம்பு ஏன் எடுக்கிறார்கள்? அன்றைய தேவைக்கு எந்த உடம்பு தேவையோ அந்த உடம்பை மேற்கொள்கிறார்கள். ஒருவருக்கு நலம் செய்ய வேண்டும். அதை இந்த உடம்போடுதான் என்றால் செய்கிறார்கள். அந்த உடம்பு வேண்டா என்றபோது மற்றொரு உடம்பை எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே குறிப்பிட்ட ஒரு உடம்போடுதான் இருக்க வேண்டுமென்ற பிரச்சினை இல்லவே இல்லை. அதுதான் சித்தர்களுடைய வாழ்க்கையிலே நாம் காணுகின்ற ஒன்று. ஆக பரகாயப் பிரவேசம் செய்கின்ற பேராற்றல் உடையவர்கள். எந்த நேரத்திலும், எந்த உடம்பிலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம் என்பதை அறிந்து கொள்வோமேயானால் கண்டின்யுடி என்று சொல்கிறோமே அவர்களைப் பொறுத்தமட்டில் இடையீடு இல்லாமல் விடுபாடு இல்லாமல் இருந்து வருகிற வாய்ப்புக் கிடைக்கிறது. ஆக சித்தர்கள் என்றும் உள்ளவர்கள். திரூமூலரில் தொடங்கி இன்றைய வரையிலே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியவர்கள் என்று யாரும் நினைந்துவிட வேண்டாம். எல்லா நாட்டிலும் இருக்கின்றார்கள்.
நம்முடைய நாட்டைப் பொறுத்தமட்டிலே இடைக்காலத்திலே இவர்களுடைய பெயர்களிலே பல பாடல்கள் தோன்றின. இடைச்செருகல் முதலான கோளாறுகளும் வந்தன. இவர்களைப் பொறுத்த மட்டிலே பரம்பொருளுக்கு மக்களைக் கொண்டு செலுத்துவதைக் காட்டிலும் சமுதாயத்திலே மக்களை செம்மையான முறையிலே வாழ வைப்பதே மேல் என்று நினைத்தார்கள். அந்த அடிப்படையிலே சாதி சமயத்தைச் சாடினார்கள். தேவையில்லாத சடங்கு களைச் சாடினார்கள்.
சித்தர்களுடைய கோயில், ஆனதாலே இஸ்லாமியர் பூஜை பண்ணுகிறார். கிறிஸ்துவர் பூஜை பண்ணுகிறார். அரிசனர் பூஜை பண்ணுகிறார் மேல் மருவத்தூர்க் கோயிலே. ஆக சித்தர்களுடைய கோயில் என்றால் அங்கே சாதி சமயத்திற்கு இடம் கிடையாது. சமயமே இல்லை என்றால் அங்கே மனித குலம் முழுவதுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
செயற்கரிய செயல் என்பது ரொம்ப சர்வ சாதாரணமான சமாசாரம் சித்தர்களைப் பொறுத்த மட்டில். ஆகவே அதையும் செய்கிறார்கள்.
இனி சித்துக்கள் என்று சொல்கிறோமே, இந்தச் சித்துக்களைத் தேவையில்லாமல் ஆடம்பரத்துக்காகச் செய்வது சித்தர்களுடைய வேலை அன்று.
எங்கே எப்பொழுது தேவைப்படுகிறதோ அங்கே அப்பொழுது பயன்படுத்துவார்கள். அது மட்டுமல்ல. அதற்கு அதிக மதிப்பு வைக்காதே என்றும் சொல்லுவார்கள். அதுவும் மருவத்தூர் போன்ற இடங்களிலே நேரடியாகக் காண முடியும். ‘சித்துக்களைச் செய்ததனாலே சித்தர்கள் அல்ல. சித்தி அடைந்ததனாலே சித்தர்கள்’ என்று சொல்கிறோம்.
இவர்களுடைய பாடல்களை ஆழ்ந்து பார்ப்போமே யானால் நம்முடைய சமுதாயத்தை, வாழ்வை, இந்த உலகத்திலே சிறந்த முறையில் அமைத்து மறு உலகத்தையும் பெறக்கூடிய வாய்ப்பை அளிக்கின்றன என்பதை நினைக்கும்போது தமிழர்களுக்கு சித்தர்கள் செய்த பேருபகாரம் என்றும் மறக்க முடியாதது என்பதை அறிய முடிகிறது.



