சைவச்சடங்கு விளக்கம் 
கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவச்சடங்கு விளக்கம்
கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவச் சடங்கு முறை

(பொது)

இந்திய நாட்டிலே மக்கள் வாழ்க்கையிலே பிறப்பு நாள் முதல் இறுதிநாள் முடிய உள்ள காலப்பகுதியுள் முக்கியமான செய்திகள் நிகழும்போதெல்லாம் சமயத்த தொடர்பான நெறிச்செயல் செய்விப்பது அவசியமான வழக்கமாயிருக்கின்றது. கிரியையினை ஆசிரியர் தொல் காப்பியனார் கரணம் என்றனர். எல்லாக்கரணங்களின் நோக்கமும் அவற்றைச் செய்வோரின் நன்மையின் பொருட்டு ஒரு கடவுளையாதல் அக்கடவுளின் அடியார்களாய பல தெய்வங்களையாதல் வாழ்த்தி வழிபடுதலே யாமென்க. நிறைமொழிகளாகிய மந்திரங்கள் செப்பி உரிய கடவுளரை நினைந்து கரணங்கள் செய்தல் சிறந்த முறையென்ப கரணங்கள் பொதுவெனவுஞ் சிறப்பெனவும் இரு திறப்படும். மந்திர மிகக்கலவாது செய்யு முறை பொதுவெனவும், மந்திரத்தோடு விரிவாகச் செய்யுமுறை சிறப்பெனவுங் கருதப்படும். பொது முறையை இச்சிறுநூலுட் கூறுதும். இங்கே குறிக்கு முறையனைத்தும், விரிவாகச் சடங்குசெய்ய இயலாது உலக வாழ்க்கையி லீடுபட்டுச் சிவநெறி நிற்போர் பொருட்டு, ஆசிரியனில்லாவிடத்துச் சடங்கிற்குரியார் தாமே எல்லாம் நடத்திக்கொள்ளத்தக்க முறையிற் கூறப்பட்டுள்ளன. சைவநூல் நெறியிற்றிறம்பா மக்கள் இதனைக் குறைகூறாதிருப்பாராக.

ஒவ்வொரு சடங்கு நிகழ்தற்கு முன்னும், சடங்கு செய்தற்குரிய இடத்தை மெழுகி, கோலமிடுதலும் வாழை, மாவிலை, பூமாலை முதலியவற்றால் அழகு செய்தலும் பிள்ளையார், திருவிளக்கு, நிறைநாழி, முதலியன வைத்து வழிபடுதலும், வழிபடுங் கடவுளர்க்குத் தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, வெற்றிலை பாக்கு, செஞ்சோற்றுப் பொங்கல் முதலியன நிவேதித்தலும், இயல்பாகவே நடைபெறுகின்றன செஞ்சோறென்பது, தவிடு நீக்காத பச்சரிசிச் சோறு. சடங்கின் துணைப்பகுதிகளை முதற்கண் விளக்கிப் பின்னர்ச் சடங்குகளை விவரமாகக் கூறுவாம். அவைகளாவன:-

1. குறிக்கோள்பகர்தல் (சங்கற்பம்)

2. புனிதநீரமைத்தல் (புண்யாகம்)

3. ஆவிலைந்தமைத்தல் (பஞ்சகவ்யம்)

4. காப்புக்கட்டுதல் (ரக்ஷாபந்தனம்)

5. முளை வளர்த்தல் (அங்குரார்ப்பணம்)

6. குட வழிபாடு (கும்ப பூஜை)

7. நெருப்பு வழிபாடு (அக்கினி காரியம்)

8. வடிவ வழிபாடு (மூர்த்தி பூஜை)

9. கொடை (தானம்)

குறிக்கோள் பகர்தல் (சங்கற்பம்):- ஒரு சடங்கினைத் தொடங்குமுன், அதன்கண் மனம் பதிந்து நிற்கும் வண்ணம், இன்ன காலத்திலே, இன்ன இடத்திலே, இன்ன செய்தி செய்வல் என்று சொல்லிக்கொள்ளுதல் குறிக்கோள் பகர்தலாகும். குறிக்கோள் பகருமுன் ‘சுக்லாம் பாதரம்’ என்ற வடமொழிச் சுலோசுத்தாற் கணபதியைத் துதிப்பதுண்டு பிள்ளையார் வணக்கத்தின்பொருட்டுப் பின்வரும் தமிழ்ச்செய்யுளை இயம்புக.

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும்உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர் தங்கை.”

குறிக்கோள் பகருங்கால், காலத்தையும் இடத்தையும் விரித்துரைத்தல் பண்டை வழக்கம் பரமசிவன் கட்டளைப்படி, அயன் ஆயுளிலே இரண்டாவது பாதியிலே முதலாண்டு முதற்றிங்கள் முதல்நாளில் இருபத்தெட்டாவது நாலூழியில், கலியின் முன் பகுதியிலே, நாவலந்தீவிலே மேருவிற்குத் தென்பாகத்திலுள்ள பரத கண்டங் குமரித் தீவிலே அறுபதாண்டுகளிலே இன்ன ஆண்டு இன்ன திங்கள், இன்ன பக்கத்திலே இன்ன நாளிலே இன்ன சடங்கு செய்கின்றேனென்று விரித்துரைப்பது பழைய முறை. இக்காலத்திலே சுருக்க மான முறைபிலே, இவ்வூரிலே ஒரு வீட்டிலே புண்யாக வசனம்போன்ற ஒரு கிரியையினைச் செய்வதாயிருந் தால், ஓங்கார வடிவாய முழு முதற் கடவுளருளினாலே, தவமிக்க இத்தமிழ் நாட்டிலே சீர்மிக்க திருநெல்வேலி மாதகரென்னுத் திருப்பதியிலே, (திரு வேலாயுதம் பிள்ளையவர்கள்) வீட்டிலே மெய்கண்டான் ஆண்டு ஆனி மாதம் வளர்பிறைப்பக்கம் திங்கட்கிழமையன்று காலை நல்வேளையிலே, வீடு கூடுதற்குரிய எல்லாவகைச் சுத் தியின்பொருட்டும், குடும்பத்தின் எல்லாவகை நலங்களின் பொருட்டும், புனிதநீர்ச்சுத்தியென்னுஞ் சமயச் செயலினைச் செய்கின்றேன் என்று சொல்லிக் கொள்ளுதல் போதுமானது.

புனிதநீர்ச்சுத்தி (புண்யாக வசனம்):- உள்ளத்தையும் உடம்பையுஞ் சுத்திசெய்தலே புண்யாகவசனத் தின் நோக்கமாகும். நீரானது உடம்பைத் தூய்மை செய்வது வெளிப்படை. நீரிலே ஆக்கியளித்தழிக்குங் கடவுளுடைய ஆற்றலைப் பாவித்து, அதனைத்திருவருட் பெருக்காகக் கருதி, அதனை உடம்பிலே தெளித்துக் கொள்ளுதலால், தீமை நீக்கமும் அகப்புனிதமும் ஏற்படுமென்பது முன்னோர் கொள்கை.

புனிதநீர்க்கும்பம் வைக்குமுறை:- ஓரிடத்திலே பிள்ளையார், நிறைநாழி, விளக்கு முதலியவைகளைக் கீழ்த்திசை நோக்கி வைத்து வழிபாடியற்றியபின் அவற்றிற்குமுன், ஓரிலை மீது அரிசியைப் பரப்பி அதன் நடுவில் எட்டிதழ்த் தாமரை வரைந்து அதன் மத்தியில் திருமகளைப் பூசித்து, அதனைச்சுற்றி நாற்புறமுந் தர்ப்பையிட்டுக் கும்பம் வைக்க வேண்டும். சடங்கு செய்பவன் வடக்குநோக்கி யிருக்கவும். கும்பத்தைக் கிழக்கு முகமாக வைக்கவும். கும்ப பூசையிற் கூறிய முறையிற் கும்பத்தை அமைத்து, அதன்மீது ‘படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை’ என்றியம்பி மலர்தூவி

தாவிமுதற்காவிரி நல் யமுனை கங்கை சரச்சதிபொற்றாமரைபுட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தஞ்சூழ்ந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே!”

என்பதை ஓதி எழுநதித் தீர்த்தமும் கும்பத்துள் இருப்பதாகக் கருதி மலர்தூவி, திருவைந்தெழுத்தை நூற்றெட்டுருக்செபித்து மலர் சாத்துக்க. பின்னர்

செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழுஞ்சுடர் தீ ஞாயிறெனச் செய்யபோற்றி

என்றோதிக் கும்ப நீரை மாவிலையினால் எங்குந்தெளிக்க.

ஆவிலைந்தமைத்தல்:- தூய பசுவிலுள்ள பால், தயிர், நெய். சிறுநீர், சாணம், என்னும் ஐந்தையும் ஓரளவிலே கலந்து நிறைமொழியோதி உட்கொண்டால், அது புனிதத்தைத் தருமென்பது நம்மவர் கொள்கை. தூய பொருள்களிலே மந்திர மொழிகளின் அதிர்ச்சி நன்கு பதியும் அப்பொருள்களை உட் கொள்ளுவார்க்கு மனத்தெளிவு ஏற்படும்.

சிறுநீரும் சாணமும் தொத்துநோய் நீக்குவதற்கும் இடத்தைப் புநிதமாக்குவதற்கும் பயன்படுதல் யாரும் அறிந்ததே, இவ்விரண்டிற்குப் பதிலாகச் சந்தனத்தையும் பன்னீரையும் பயன்படுத்துவதுமுண்டு

சடங்கு செய்யுமிடத்தின் தென்மேற்குத் திசையிலே ஒரு வாழையிலையிலே அரிசியைப்பரப்பி அதில் நாற்கோணம் வரைந்து அதனைத் தர்ப்பைகளால் ஒன்பது சதுரமாகப் பிரித்து நடுச்சதுரத்தில் ஒரு பாத்திரத்திற் பாலை வைக்கவும் அதற்குக் கீழ்புறமுள்ள சதுரத்திலே, பாலிற் பாதியளவு தயிர் உள்ள பாத்திரமமைக்க. பாற்பாத்திரத்தின் தென் பக்கத்திலேயுள்ள சதுரத்தில், காற்பங்கு பசுநெய்யை ஒரு கிண்ணத்தில் வைக்கவும். பாலுக்கு வடக்குச் சதுரத்திலே ஆவின் நீர் காற்பங்கு ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்க. பாலுக்கு மேற்குச் சதுரத்திலே ஒன்று, அல்லது. இரண்டு மிளகு அளவு தூய சாணத்தை ஒரு பாக்திரத்தில் வைக்கவும் பாலிற்கு வட்கிழக்குச் சதுரத்தில் தூயநன்னீரை ஒரு கிண்ணத்தில் வைத்து அதில் நறு மலரிட்டு ஒரு தர்ப்பை முடிச்சினையிடுக.

பாற்கிண்ணத்திலே ஓம் முதல்வ போற்றி
யென்றும்
தயிர்க்கிண்ணத்திலே ஓம் அண்ணலே போற்றி
யென்றும்
நெய்க்கிண்ணத்திலே ஒம் வெய்யாய் போற்றி
யென்றும்
ஆவினீர்க்கிண்ணத்திலே ஓம் தண்ணியாய் போற்றி
சென்றும்
சாணக்கிண்ணத்திலே ஓம் தோன்றலே போற்றி
யென்றும்
நன் னீர்க்கிண்ணத்திலே ஒம் சிவனே போற்றி
யென்றும்

முறையே ஒன்று முதல் ஆறு தடவை கூறி மலரிடுக அக்கிண்ணங்களை உள்ளங்கையால் மூடி அம்மந்திரங்களை நினைந்தெண்ணுக. பின், மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்குத் திசைகளிலுள்ள கிண்ணங்களிலுள்ள வற்றை நடுப்பாத்திரத்திற் கலந்து நன்னீர்க் கலனிலுள்ள தர்ப்பை நீரையும் பாற் பாத்திரத்திலூற்றித் திருவைந்தெழுத்தை ஏழுமுறை அபிமந்திரித்து உட்கொள்ளுக. ஒரு பொருளை அங்கையால் மூடி நிறைமொழி பகர்தலே அபிமந்திரித்தலெனப்படும்.

பாவமும் பழிப்பற்றற வேண்டுவீர்
ஆளிலைந்துகந்தாடு மவன்கழல்
மேவராய் மிகவு மகிழ்ந்துள்கு மின்
காவலாளன் கலந்தருள் செய்யுமே என்னுந்’

திருப்பாட்டை ஓதி உட்கொள்ளலாம்.

காப்புக்கட்டுதல்:- மணம், உபதேச முதலியவை நிகழுங் காலங்களிலே, திருவருட் பாதுகாப்பை நினைவுறுத்தற் பொருட்டும், எடுத்த காரியத்திற் கருத்தூன்றி அதனை நிறைவேற்றுதலைக் குறித்தற்பொருட்டும், ஆண் மக்கட்கு வலதுகையிலும் பெண் மக்கட்கு இடது கையிலுங் காப்புக்கட்டுதல் சடங்கின் ஓர் உறுப்பாகும். பிள்ளையார்க்கு வழிபாடு செய்தபின் ஒரு பாத்திரத்திலே திருநீற்றை வைத்து அதன் நடுவிலே முடிச்சிட்டு மஞ்சள்பூசிய ஒரு நூற்கயிற்றை வைத்து அதனை உலகங்கள் பலவற்றையுந் தொடர்பு படுத்திநிற்கும் அருளாற்றலின் வடிவாக நினைந்து

பாடிளம் பூகத்தினானும் பவளச்செவ்வாய் வண் ணத்தானும், கூடிளமென் முலையாளைக்கூடிய கோலத்தினாலும் ஓடிளவெண் பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும் ஆடிளம்
பாம்பசைத்தானும் ஆரூரமர்ந்த அம் மானே

என்னுந் திருப்பாட்டை ஒதுக. பின்னர், சடங்கு நடத்துபவர் அதற்குரியவர் கையிலே நூலினைக்கட்டி முடியிடுக. அப்போது ‘முக்கணா காப்பாய் போற்றி யென்றியர்புக.’ ‘பூசவினியது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு’ என்று ஓதித் திருநீற்றை அணிவிக்க. காப்புக்கட்டினபின் ஆசாரமில்லாத செயல்கள் செய்தல் கூடாது. சடங்குமுடியும்வரை காப்பினை அவிழ்த்தல் கூடாது.

முளை வளர்த்தல்:- தமிழ் மக்களுட் சிறந்த நாகரிகம் உழவை அடிப்படையாக உடைத்தாயிரூந்த வையால், சிறப்பான சடங்குக் காலங்களிலே மட்கலங்கள் பன்னிரண்டு வைத்து, செந்நெல், பயறு, எள்ளு, வெண்கடுகு, உழுந்து, மொச்சை, என்பவற்றின் விதைகளை அவற்றிலிட்டுப் பாதுகாத்து வளர்த்தல் சடங்கின் ஓர் உறுப்பாக நிகழ்கின்றது இது இப்போது மண வினைக்காலத்திலே சிறப்பாக நடைபெறுகிறது.

மணமேடையில் வடக்குத்திக்கிலாவது வடகிழக்கிலாவது சாணத்தால் மெழுகி நாற்கோணஞ் செய்து அதன்மேல் அரிசியை இரண்டங்குல உயரம் பரப்பி, மேல்கிழக்காகவும் தெற்கு வடக்காகவும் அவ்வைந்து கோடுகள் வரைந்து பதினாறு சதுரங்கள் தோற்றுவித்து மத்தியில் நான்கு சதுரங்களில் நெல்லிட்டு, அதன்மேல் கும்பம் ஒன்று வைக்கவேண்டும். அதனைச் சுற்றியுள்ள பன்னிரண்டு சதுரங்களிலும் பன்னிரண்டு மண்பாலி சைகள் (கிண்ணங்கள்) வைத்து, அவைகளில், ஆற்றங்கரை, குளக்கரை முதலிய இடங்களிலிருந்து கணபதியை வணங்கி எடுத்துக்கொண்டு வந்த மண்ணையும் காட்டெரு முட்டைத் தூளையும் நிறைத்து வித்துக்களை இடவேண்டும். கும்பத்திலே பதினாறு கலைகளுடைய முழுமதி போன்ற திருமேனியோடு உமையொருபாகர் வீற்றிருந்து பயிர்களை வளர்ப்பதாகக் கருதி ஓம் அமுத முதல்வ போற்றி என்று மும்முறை சொல்லி மலர்தூவ வேண்டும். சுற்றியிருக்கும் பன்னிரண்டு விதைக் கிண்ணங்களிலே பன்னிரண்டு கதிரவரின் ஒளி நிலவுவதாகப் பாவிக்க வேண்டும் கும்பத்தின் நீரை அடிக்கடி அவைகளிலே ஊற்றுதல் வேண்டும். கும்பத்தை, வேண்டும் போது, நிறைத்துக் கொள்ளுக. பாவிகைகளிலே பால் தெளித்தலும் உண்டு.

பாரவன்காண் பாரதனிற் பயிரானான்காண்
பயிர் வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் தேவாரம்

ஒன்றாயரும்பிப் பலவாய் விரிந்தீவ்வுலகெங்கு மாய் நின்றான் ?

என்ற மறைப் பாடல்களை யோதுக.

சடங்கு முடிவிலே. கும்பத்திலே வீற்றிருக்கு முதல்வன் பூசனை புரிவாரது உள்ளத்திற் புகுந்ததாகக்கருதி இலை, மாலை முதலியவற்றைக் களைக. இச்சடங்கு மங்கள காரியங்களிலேயே செய்யப்படும் பாலிகைகளில் முளைகள் நன்றாயிருந்தால், அது நல்ல அடையாள மென்று கூறுவார்கள்.

திருக்குடவழிபாடு (கும்ப பூஜை):- காண்கின்ற பொருள்களின் வாயிலாகக் கடவுளை வழிபடுதல் நம்மவர் வழக்கம். ஐம்பூதங்களிலே, மண், புனல், அனல் என்னு மூன்றுமே கண்ணிற்குப் புலனாவன். வடிவம் அமைத்து இறைவனை வழிபடுவது முதற்பூதம் வாயிலாக வழிபடு முறையாகும். கும்பம் வைத்து வழிபடுவது நீரின் வாயிலாகக் கடவுளை, வழிபடுமுறை ஓமஞ்செய்வது நெருப்பில் வழிபடுமுறை.

கும்பபூசை:- ஓரிடத்தைச் சுத்திசெய்து நாற் கோண மேடையிட்டு, அல்லது நாற்கோணமாக மாப் பொடியாலு மஞ்சப்பொடியாலுங் கோலமிட்டு, அதன் மேல் ஒரு வாழையிலைமீது நெல்லும் அதிற்பாதியரிசியும் அதிற் பாதி எள்ளும் ஒன்றின் மேலொன்றாக வைத்து அதன் நடுவிலே தாமரையிதழெழுதி அதன் மேல் கும்பம் வைக்கவேண்டும் கும்பத்திற்கு மூன் றிழையாலாகிய நூலினை வலப்பக்கத்திலிருந்து இடப் பக்கமாகச்சுற்றி அதன் வாயில் மாந்தளிர், அரசிலை. தேங்காய் அல்லது பழம் என்பவற்றை வைத்துத் தேங்காய் மீது மூன்று அல்லது ஐந்து நுனித் தர்ப்பைகளின் முடிச்சினை அமைத்தல் வேண்டும் தர்ப்பையின் நுனிகள் மேல்முகமாகத் தோன்றும்படி முடிச்சிட்டிருத்தல் வேண்டும். கும்பத்தினுள்ளும் தர்ப்பை முடிச்சு பொன், மணி, வாசனைப் பொருள் என்பனவற்றை இயன்றவரை யிடுக. கும்பத்தின் மேலுள்ள தர்ப்பை முடிச்சாகிய கூர்ச்சத்திலே சந்தனம், குங்குமம், பூ முதலியன சாத்துக. எந்தக்கடவுளை வழிபடுகின்றோமோ, அந்தக்கடவுள் அக்குடும்பத்தில் வீற்றிருப்பதாகக் கருதவேண்டும்

நெருப்புவழிபாடு:- சுத்தமான இடத்திலே பச்சை நெல் உமியையாவது தூய மணலையாவது நாற் கோணமாக விரித்து, ஆல், அரசு, புரசு, மா, முருக்கு முதலியவற்றின் சிறு குச்சிகள் சிலவற்றை நெருப்புப் பற்றும்படி வைத்துக் கற்பூரத்தைக் கொளுத்தியிட்டு

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணை மூலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்தயனு மாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையி
னிறைமலர்க்குருந்த மேவியசீ
ராதியே யடியே னாதரித்தழைத்தா
லதெந்துவே யென்றருளாயே

என்னு மந்திரங் கூறி, ‘ஓமத்துள் அங்கியுள் உள்ளுள னெம்மிறை’ என நினைந்து, சிவபெருமான் வீற்றிருப்பதாகப் பாவித்துக் கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோலநீடி யருமறைச் சிரத்தின்மேலாஞ் சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புட னடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி என்னும் பாட்டையோதுக,

பின்னர், அத்தழலின்கண் எத்தெய்வத்தை வழிபட வேண்டுமோ, அத்தெய்வம் வீற்றிருப்பதாகக்கருதி அதற்கு ‘உவகையாக’ என்று நெய், பொரி, தானியம், சமித்து என்பவைகளைச் சிறிது சிறிதாக இடுக. ஓம முடிவிலே, நெய்த்தாரை விடுக. சடங்கு முடிவிலே, தழலில் வழிபடப்பட்ட கடவுளர் அகத்திலொடுங்கிய தாகப் பாவித்து,

தெள்ளத்தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத்தேற லமுத வொளி வெளி என்றோதுக.

வடிவ வழிபாடு:- சிவபெருமானையும் பிறதெய்வங்களையும் வடிவ வாயிலாக வழிபடும் விதிகள் ஆகம நூல்களில் விரித்தோதப்பட்டன. பூசனைக்குரிய இடத்தைப் புனிதமாக்கிப் பீடமிட்டு அதன்மேல் திரு வுருவை எழுந்தருளச் செய்ய வேண்டும் வழிபடுவோன் தன்னையும் புனிதமாக்கித் தூய ஆடை உடுத்துத் திருநீறணிந்து கொள்ளுதல் வேண்டும் புறப்பூசைக் குரியவற்றைச் சித்தப்படுத்திக் கொண்டு, முதற்கண் வழிபடுந்தெய்வத்தை மனதில்நினைந்து அகப்பூசை செய்த பின், அத்தெய்வம் புறத்தேயுள்ள உருவில்வந்து பூசை கொண்டருள்வதாகப் பாவித்து அத்தெய்வத்தின் திருவடிவமுணர்த்தும் பாட்டையோதுக. அறிவு நல்குந் தென் முகத்தெய்வத்தை வழிபடுவான்,

சீதளப்பளிக்கு மேனியும் பளிக்குச் செழுமலை பதித்த துப்பன்ன பாதமுஞ் செவ்வாய் மலரு முக்கண்ணும் பங்கயச் செங்கரநான்கும் வேதபுத்தகமு மமுத கும்பமும் விழிமணி வடமு மெய்ஞ்ஞான போதமுத்திரையுந் தாங்கிய தனி மைப்போதன்முன் றாழ்ந்தெழுந்தேத்தா’

என்ற திருப்பாட்டைப் படிக்கலாம்.


விநாயகப்பெருமானைத் தியானிப்பதானால்,

ஒருகோட்ட னிருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் றருமொரு வாரணத்தின் றாள்கள் உரு கோட்டன் பொடும் வணங்கி யோவாதே யிரவுபக லுணர்வோர் சிந்தைத் திருகோட்டும் அயன் றிருமால் செல்வமும் ஒன்றோ வென்னச் செப்புந் தேவே.

என்பதை ஒதுக.

அகப்பூசை முடிந்தபின், தனதுள்ளத்தே நின்று புறத்தேயுள்ள உருவில் வந்து வீற்றிருப்பதாக, வழிபடுந்தெய்வத்தைக் கருதி, வடிவிலே கைந்நிறைந்த மலர் நூவிப் போற்றுக.

உள்ளத்து வள்ளலே இடங்கெண்டருள்க வடிவத்துறைக அருளொளி தருக உடையாய் போற்றி

என்றுரைக்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !