

சைவத் திறவு
திரு. வி. கலியாணசுந்தரனார்
அணிந்துரை
ஒன்றுகண் டீருல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீருல குக்குயி ராவது
நன்றுகண் டீரினி நமசிவா யப்பழந்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே
-திருமூலர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக்கொள்வதில்லை.
ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்கவேண்டுவது தலையாயார் கடன்.
கடவுளுண்மையில் உறுதி யுடையார் பலர். அவ்வுண்மை யுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழிகோலினார் மிகச் சிலர். அம் மிகச்சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக் காரணம் பற்றியே இந்நூற்குச் சைவத் திறவு என்னும் பெயர் சூட்டப்பட்டது.
தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையின் நாற்பத்தைந்தாம் ஆண்டு விழா, ஆயிரத்தித் தொள்ளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு, டிசம்பர் திங்கள், இருபத்தெட்டு இருபத்தொன்பதாம் நாட்களில், அடியேன் தலைமையில் நடைபெற்றது, அவ்விழாவில் தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னுந் திருவாக்கைக் குறிக்கோளாகக் கொண்டு அடியேன் தலைமையுரை நிகழ்த்தலானேன். அத் தலைமையுரையைக் கொண்டது இந்நூல்.
இந்நூலிடை, மாணிக்கவாசகனார் நிலை, திருவண்டப் பகுதி நுட்பம், நினைப்பற நினைத்தலின் விளக்கம், மூவித உடலங்களின் பாகுபாடு, ஒரே கடவுளுண்மை, தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்பது, இறைக்கும் இயற்கைக்கு முள்ள தொடர்பு, சேய் சிவம் என்பது, சமரசம், இறைவனை யுணரும்வழி, இறைவனது சொரூப தடத்த இயல்புகள், காவியங்களின் இன்றியமையாமை, நம்பிக்கையின் அவசியம், ஆராய்ச்சியின் அளவு, சைவத் திறவுள்ள இடம், கடவுளின் அகண்டாகாரப் படம், தோடுடைய செவியன் என்பதின் உள்ளுறை, ஆண்டவன் பெண் ஆண் வடிவமாக இருக்கும் நுட்பம், தோடு விடை மதி சுடலை முதலியவற்றின் உட்பொருள், கோயில்களின் நோக்கம், தற்காலக் கோயில்கள், சாதிப்பேய் நூல்களுங் கோயில்களே என்பது, சீர்திருத்தம், பெரிய புராணம் சீர்திருத்த நூல் என்பது தவப்பேறு முதலிய பொருள்கள் சுருங்கிய முறையில் ஆங்காங்கே விளக்கப்பட்டிருக்கின்றன.
உருவ வழிபாட்டின் நுட்பமும், இன்றியமையாமையும் விளக்கமாக இந்நூற்கண் ஓதப்பட்டிருக்கின்றன. இந்நூலைப் படிப்போர்க்கு உருவ வழிபாட்டைப் பற்றிய பலதிற ஐயப்பாடுகள் நீங்குதல் ஒருதலை.
கடவுள் நெறியைப் பற்றியும், அந்நெறி யோம்பிய அடியார் களைப் பற்றியும், திருக்கோயில் வழிபாட்டைப் பற்றியும் நாட்டிடைப் பலதிற ஐயந்திரிபு மயக்கங்கள் தோன்றியுள்ள இவ்வேளையில் வெளிவந்த இந்நூலைப் பற்றி ஈண்டு யான் விரிவுரை கூறவேண்டுவதில்லை. பிழை பொறுக்க.
ஒன்றியிருந்து நினைமின்கள்உந்தமக்கு ஊனமில்லை – அப்பர்
திருவாரூர்–வி. கலியாணசுந்தரன்



