சங்கப் புலவர் சன்மார்க்கம் சாமி. சிதம்பரனார்

பொருளடக்கம்

சங்கப் புலவர் சன்மார்க்கம் சாமி. சிதம்பரனார்

முன்னுரை

சங்கப் புலவர் சன்மார்க்கம் என்னும் இப்புத்தகம், அருள் நெறித் தொடரின் மூன்றாவதாக வெளிவருகின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த புலவர்களை யெல்லாம் பொது வாகச் சங்ககாலப் புலவர்கள் என்று கருதுகின்றனர். அவர்கள் சங்ககாலத்துத் தமிழ்மக்களின் கொள்கைகளைப் பற்றியே பெரும்பாலும் பாடியிருக்கின்றனர். ஆதலால் அவர்களைச் சங்ககாலப் புலவர் மரபினராகக் கருதுவதிலே தவறில்லை.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழகத்திலே வைதீக மார்க்கமும், பக்தி மார்க்கமும் பரவின. தேவார காலத்துக்குப் பின் தோன்றிய தமிழ்நூல்களால் இவ்வுண்மையை அறியலாம்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குமுன் தோன்றிய கவிதைகளிலும், நூல்களிலும் வைதீக மார்க்கத்தையோ, பக்தி மார்க்கத்தையோ மிகுதியாகக் காணமுடியாது. அக்கவிதைகளும், அந்நூல்களும் பெரும்பாலும் ஒழுக்க நெறியையே எடுத்து ஒதுகின்றன.

சங்க நூல்களாகக் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே பல வகைப்பட்ட தெய்வங்கள் காணப்படுகின்றன; சொர்க்கம், நரகம் காணப்படு கின்றன; ஊழ்வினை காணப்படுகின்றது; தெய்வப் பிரார்த்தனை களும், வழிபாடுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவைகளைப்பற்றி விரிவாகக் கூறவில்லை.

சங்ககாலப் பாடல்களிலும், நூல்களிலும், சங்ககாலப் பண்பைப் பின்பற்றிய பாடல்களிலும், நூல்களிலும் மக்கள் இவ்வுலகில் வாழவேண்டிய வழியைப் பற்றியே சொல்லப்படுகின்றன. அவைகள் உலக வாழ்வைப் பொய்யென்றோ, மாயம் என்றோ, நிலையற்றவை என்றோ வலியுறுத்தவில்லை.

இல்லறத்தை நன்றாக நடத்துவது எப்படி? காதலனும் காதலியும் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும்? மக்களின் சமூதாய வாழ்வு எப்படியிருக்கவேண்டும்? மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் யாவை? அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? கணவன் கடமை யென்ன? மனைவியின் கடமை என்ன? அரசாட்சி எப்படி நடைபெற வேண்டும்? அரசன் கடமை என்ன? அமைச்சர்களின் கடமை என்ன?

இவ்விஷயங்களைப்பற்றியே சங்க நூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இவைபோன்ற செய்திகளை அகத்திணைப் பாடல் களிலும் காணலாம்; புறத்திணைப் பாடல்களிலும் பார்க்கலாம்.

சங்ககாலப் புலவர்கள் கூறும் அறங்கள், நீதிகள் அனைவர்க்கும் பொது வானவை. அவைகள் இன்ன மதத்தினர்க்கு உரியவை; இன்ன இனத்தினர்க்கு உரியவை; இன்ன மொழியினர்க்கு உரியவை; இன்ன நாட்டினர்க்குத் தான் ஏற்றவை என்று சொல்லமுடியாது. அவைகள் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவாக அமைந்திருக்கின்றன. உலக மக்கள் அனைவரும் அவற்றை ஒப்புக் கொள்ளுவார்கள். இத்தகைய உண்மை நெறிகளே சங்ககாலக் கவிதைகளில் காணப்படுகின்றன.

மதப் பற்றோ, இனப் பற்றோ, சாதிப் பற்றோ இல்லாமல் மனிதப் பற்றுடன் மட்டும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றிக் கூறுவதனால் அவை எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடி யவைகளாகத்தான் அமையும். சங்ககாலப் புலவர்கள் மனிதப் பற்று ஒன்றையே உளங்கொண்டவர்கள். ஆதலால் அவர்கள் பாடல் களிலே பொதுதர்மமே ஓங்கி நிற்கின்றது.

உலக மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க பொதுதர் மத்தையே உண்மை அறம் – உண்மை நெறி – சன்மார்க்கம் என்று கூறினர்; கூறுகின்றனர்.

சங்கப் புலவோர் பாடல்களிலே உண்மை நெறி – சன் மார்க்கம் காணப்படு கின்றது. சன்மார்க்க போதனை செய்வதைச் சங்ககாலப் புலவர்கள் தமது கடமையாகக் கொண்டனர், அவர்கள் அகத்திணைப் பாடல்களிலும், புறத்திணைப் பாடல்களிலும் சன்மார்க்கத்தைக் குறித்தனர்; அமைத்தனர். இது மறுக்கமுடியாத உண்மை.

இவ்வுண்மையை விளக்குவதே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். சங்ககால நூல்களில் உள்ள கவிதைகள் சிலவற்றை எடுத்துக்காட்டி அவற்றில் உள்ள சன்மார்க்க போதனையைச் சுட்டிக்காட்டும் முறையிலேயே இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக் கின்றன.

சங்ககாலப் புலவர்களின் பாடல்கள் வெறும் வறட்டுப் பாடல்கள் அல்ல. அவைகள் அறம், பொருள், இன்பங்களைக் குறிக்கோளாகக் கொண்ட பாடல்கள் என்பதையும் இப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளால் அறியலாம்.

இந்நூல் கட்டுரைகளைப் படிப்போர் மற்றொரு உண்மையையும் அறியலாம். சங்ககாலத்தை விட, செய்யுள் அமைக்கும் – கவிதை பாடும் கலையிலே இக்காலத்திலே நாம் வளர்ச்சி யடைந்திருக்கின்றோம். பொதுமக்களுக்குப் புரியும் வகையிலே, அவர்கள் சுவைத்துப் படித்துப் பாடும் வகையிலே விதவிதமான பாடல்களைப் பாடியிருக்கின்றனர்; இன்னும் பாடி வருகின்றனர். இது கவிதையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி என்பதில் ஐயமில்லை.

கவிதைகளின் உருவ அமைப்பில்தான் வளர்ச்சி கண்டிருக் கிறோம். ஆனால் அவற்றின் பொருள் அமைப்பில் நாம் வளர்ச்சி யடையவில்லை என்பதை மறுக்கமுடியாது. இவ்வுண்மையைச் சங்ககாலப் பாடல்களையும், இக்காலப் பாடல்களையும் படிப்போர் காணலாம்.

கவிதைகளின் உருவில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது போலவே, அதன் உள்ளடக்கத்திலும் வளர்ச்சியேற்பட வேண்டும். அப் பொழுதுதான் கவிதைக் கலை பூரண வளர்ச்சியை அடைந்து விட்டது எனக் கூறலாம். இத்தகைய வளர்ச்சியைக் காண வேண்டும் என்பதே நமது ஆவல். கவிஞர் பட்டத்துடன் விளங்கும் இக்காலக் கவிஞர்கள் இவ்வுண்மையை மனங்கொள்ள வேண்டும். இவ்வுண்மையை உள்ளத்திற்கொண்டு, அவர்கள் மிகுந்த வேதனைப்பட்டாவது கவிதைகளைப் பெற்றெடுப்பார்களானால், அக்கவிதைகள் சிறந்து விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. இவ்வுண்மைகளை எடுத்துக் காட்டும் நோக்கத்துடனேயே இப்புத்தகம் வெளிவருகிறது.

இந்நூலின் கட்டுரைகளிலே பல, சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பிலே, மெய்கண்டான் என்னும் பெயரில் என்னால் எழுதப்பட்டவை. அவைகளே கூட்டல், கழித்தல், பெருக்கலுடன் இப்புத்தக உருவில் வெளிவருகின்றன.

சாமி. சிதம்பரன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !