
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
17. அமரிலும் அருள்நெறி
தமிழர்கள் யாருக்கும் தலைவணங்காத வீரர்கள்; தங்களன்புக்காகத் தயங்காமல் உயிரையும் கொடுப்பவர்கள்; மானங்கெட்டு வாழ ஒருபொழுதும் நினைக்க மாட்டார்கள்; எதிரிகள் யாராயிருந்தாலும் அவர்களுக்குத் தலைவணங்க மாட்டார்கள்; அவர்களை எதிர்த்துச் சண்டை செய்து அழிப்பார்கள் என்று சொல்லிப் பாராட்டுவார்கள். வீணான முரட்டுத்தனத்தைக்கூட வீரம் என்று விளம்புவோர் உண்டு. முரட்டுத்தனம் வேறு; வீரம் வேறு.
உடல் பலத்தால், அச்சமற்ற தன்மையால் எதையும் செய்யத் துணிவது முரட்டுத்தனம். இதைக் குருட்டுத் தனம், கண்மூடித்தனம் என்றும் கூறுவர். இந்த முரட்டுத் தனத்தை வீரம் என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
தன்மானத்திற்கு ஆபத்து வரும்போது அதைக் காப் பாற்றிக் கொள்ளத் துணிவது வீரம். தான் உண்மை என்று நம்பும் கொள்கையை நடத்தி வைக்கப் பாடுபடுவது வீரம்; தான் தந்த உறுதிமொழிகளை உயிர் போனாலும் மறுக்காமல் நிறைவேற்றிவைப்பது வீரம்; உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் உண்மையை உண்மையாகவே உரைப்பது வீரம்; அறிவையும், பொறுமையையும் துணையாகக் கொண்டு எக்காரியத்தையும் இனிது செய்து முடிப்பது வீரம்.
படைக்கலமேந்திப் போர்க்களத்திலே புகுந்து முன் வைத்த காலைப் பின்வைக்காமல் போர் செய்து உயிர் விடுகின்றவன் சிறந்த வீரன்தான். ஆனால் அவனைவிடப் போர்களத்திற்கே செல்லாமல் தான் கருதிய செயலைச் செய்து முடிப்பவன் சிறந்த வீரன். எதிரியின் ஆத்திரத்தை அடக்கி, அவனால் ஆகவேண்டிய வற்றைச் சமாதானமாகவே செய்து முடித்துக்கொள்வது எல்லோராலும் ஆகக் கூடிய செயல் அன்று. அறிவும், பொறு மையும், திறமையும், அஞ்சாமையும் உள்ளவர்களால் தான் இவ்வாறு செய்து முடிக்கக்கூடும்.
அன்றியும், உண்மையான வீரர்களிடம் தனிச்சிறப்பு ஒன்றுண்டு. அவர்கள் தமக்குச் சமமானவர்களோடுதான் சமர்புரிவார்கள். எதிரி தமக்குச் சமமானவராயிருந்தாலும் அவர் கையில் ஆயுதம் இல்லாதபோது, தாம் மட்டும் படையேந்திப் போர் புரிய மாட்டார்கள். இப்படிச் செய்வது யுத்த தர்மத்திற்கு விரோதம். எதிரிகளோடுதான் சண்டை போடுவார்கள். சண்டைக்குச் சம்பந்தம் இல்லாதவர்களோடு சண்டை போட மாட்டார்கள். இதுமட்டும் அன்று; போர் செய்யத் தகுதியற் றவர்களுக்குத் தக்க பாதுகாப்புத் தேடி தருவார்கள். தாமும் எதிரியும் போர் செய்வதன்மூலம் தம்மைத் தாம் காப்பாற்றிக் கொள்ளத் திறமற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் உண்டா காமல் பாதுகாப்பதில் அவர்கள் முழுக் கருத்தையும் செலுத்து வார்கள்.
தம்மைத் தாம் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர் களுக்குப் போர் தொடங்குவதற்கு முன்பே அறிவிப்புக் கொடுத்து விடுவார்கள். போதுமான காலத்திலேயே முன்னறி விப்புக் கொடுப்பார்கள். இது பழந்தமிழ் மக்களிடம் இருந்த சிறந்த அருள் நெறி யாகும்.
பசு, பசுவின் தன்மையைக் கொண்ட பார்ப்பனர்கள், பெண்கள், நோயாளிகள், தம் முன்னோர்க்குரிய அரிய கடன் களைச் செய்வதற்குரிய சிறந்த பிள்ளைகளைப் பெறாதவர்கள் இவர்களுக்குப் போரால் எவ்வித இன்னலும் நேரக் கூடாது என்பது தமிழர்களின் தலைசிறந்த அறம்.
பசு குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் சத்துள்ள உணவளிக்கும் உயிர்ப்பிராணி. அதனாலேயே பசுவைப் பாது காப்பதை ஒரு அறமாகக் கொண்டனர். பசுக்களின் பரம்பரை குறைந்துவிட்டால் அது மக்களின் உடல்நல வளர்ச்சிக்கே ஆபத்தாகிவிடும். இயற்கைச் சத்து நிறைந்த உணவிலே பசும் பாலுக்கு நிகர் வேறொன்றுமில்லை. இதை உணர்ந்துதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் பசுவைப் பாதுகாக்கும் வேலையை மேற்கொண்டிருக்கின்றனர்.
எதிரியுடன் போர் தொடங்குவதற்கு முன், அவர்களுடைய பசு மந்தையைக் கவர்வதுதான் முதல் வேலை. பசுக்களுக்குச் சேதம் உண்டாகாமல் அவற்றைப் பத்திரமான இடத்திற்குக் கொண்டு போவதற்காகத்தான் அதைக் கவர்வார்கள். இதுவும் மக்கட்சமுதாயத்திற்குப் பசுக்கள் எவ்வளவு பயன் உள்ளவை என்பதைக் காட்டுவதே யாகும்.
பசுப் போன்ற தன்மையுள்ள பார்ப்பனர்களும் யாருக்கும் தீங்கு செய்யாதவர்கள். அறநூல்களைக் கற்பது, அந்த அறங்களை மக்களுக்கு எடுத்துரைப்பது, ஒழுக்க நெறி தவறாமல் நடப்பது, மற்றவர்களையும் ஒழுக்க நெறியிலே நடக்கும்படி அறிவுரை கூறுவது, மக்கட் சமுதாயத்திற்குக் கல்வி போதிப்பது, அரசாட்சி, வியாபாரம், விவசாயம், தொழில்கள் ஆகியவை வளர்வதற்கு ஆலோசனை கூறுவது, இவை எல்லாம் பார்ப்பனர்கள் தொழில் களாக இருந்தன. இக்காரியங்களைச் செய்து வருவோரையே பார்ப்பனர்கள் என்று அழைத்தனர். இவர்கள் நாட்டின் நன்மைக்கு இன்றியமையாதவர்களாயிருந்தனர்.
போர் காரணமாக இத்தகைய நிபுணர் கூட்டங்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று கருதினர். ஆகையால் இவர்களையும் காப்பாற்றவேண்டியது தங்கள் கடமையென்று கொண்டனர் முன்னோர்.
அக்காலத்துப் பெண்கள் போரின் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாதவர்கள்; பிறர் பாதுகாப்பில் வாழ வேண்டிய வர்கள். ஆதலால் அவர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதைக் கடமையாகக் கொண்டனர்.
நோயாளிகள் பிறர் துணையின்றி வாழமுடியாது. ஆகையால் அவர்களையும் போர் நடக்கப்போகும் இடத்தி லிருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள். இறந்து போன முன் னோர்களைத் தெய்வம்போலப் போற்றும் வழக்கம் பண்டைத் தமிழர் வழக்கம். பழமையான நாகரிகமுள்ள எல்லா இனத்தாரி டையிலும் இவ்வழக்கம் இருக்கின்றது. புராதன நாகரிகம் படைத்த சீனர்களும் தங்கள் முன்னோரை வழிபடுகின்றனர். எகிப்தியர்களும் தங்கள் முன்னோரை வணங்கி வந்தனர். ஆதலால் பண்பாட்டிலே முதிர்ந்த தமிழர்களிடம் இவ்வழக்கம் குடி கொண்டிருந்ததிலே வியப்பில்லை.
தங்கள் முன்னோர்களுக்கான கடன்களைச் செய்வதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று விரும்பினர். பிள்ளை பெற்றவர்களுக்குத்தான் புண்ணிய லோகம் உண்டு; பிள்ளை பெறாதவர்களுக்குப் புண்ணிய லோகம் இல்லை என்ற நம்பிக்கை கூடத் தமிழர்களிடம் உண்டு. ஆகையால்தான் பிள்ளை பெறாதவர்களையும் போர் நடக்கும் இடத்தைவிட்டுப் போய்விடும்படி முன்னறிவிப்புக் கொடுத்து வந்தனர்.
தமிழர்களின் இச் சிறந்த அறத்தைப் பற்றி எண்ணுவோர் வியப்படைவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னி ருந்த தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை எண்ணுந்தோறும் நமக்கு வியப்புண்டாகின்றது.
அறிவுத்துறையிலே இன்று எவ்வளவோ முன்னேறி யிருப்பதாகப் பெருமையடித்துக் கொள்கின்றோம். பண்டைக் கால மக்கள் அறிவுத்துறையிலே ஓரளவு பின் தங்கித்தான் இருந்தார்கள். ஆனால் மனிதத் தன்மை என்பது வேறு; அறிவு என்பது வேறு. அறிவும் மனிதத் தன்மையும் ஒன்று சேர்ந்திருந் தால் எவ்வளவோ நன்மையாக இருக்கும். பண்டைக் காலத்திலே அறிவு குறுகியிருந்தாலும் மனிதத் தன்மை பெரும்பாலான மக்களிடம் குடிகொண்டிருந்தது. இன்று அறிவு எவ்வளவோ விரிந்து கிடந்தாலும் மனிதத் தன்மை சுருங்கிவிட்டது. இந்த உண்மையைச் சிறந்த விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.
பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளிகள், பிள்ளை பெறாதவர்கள் ஆகியவர்களைக் கொல்லக்கூடாது என்ற தமிழர் அருள்நெறியை இக்காலப் போர்வெறியர்கள் பின்பற்ற முடியாது. அணுக்குண்டும், நீர்வாயுக் குண்டும் போர்ப்படை யாகப் பெருகிவரும் காலத்தில் பொது மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்? அணுக்குண்டும், நீர்வாயுக் குண்டும் ஒரு தீவையே – ஒரு நாட்டையே – ஒரு பெரிய நகரத்தையே – அப்படியே அழிக்கக் கூடியன. இத்தகைய போர்க்கருவிகளைப் பெருக்குவோர் மனிதத் தன்மையை எப்படிப் பாதுகாக்க முடியும்.
போரிலே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது; போர்வெறி கொண்ட வீரர்கள்தாம் போர்க் களத்தில் சண்டையிடவேண்டும்; உயிர்ச்சேதம் அவர்களிடம் மட்டுந்தான் உண்டாகலாம்; போர்வீரர்கள் அல்லாத மற்றவர் களுக்குப் பாதுகாப்பளித்த பிறகுதான் போர் தொடங்க வேண்டும். இதுதான் போர் பற்றித் தமிழர்கள் கொண்டிருந்த அருள்நெறி யாகும்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யென்பவன் சிறந்த வீரன். தமிழர் அருள்நெறியைப் பின்பற்றி நடப்பவன். அவனைப்பற்றி நெட்டிமையார் என்னும் புலவர் பாடியிருக்கும் ஒரு செய்யுளிலே தமிழர் அருள்நெறி அமைந்து கிடக்கின்றது.
ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்! என
அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்தின்,
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எம்கோ வாழிய குடுமி! தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்,
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
(புற. 9)
பாண்டியன் பெருவழுதியை வாழ்த்தும் முறையிலே அமைந்தது இச் செய்யுள். அவனை வாழ்த்தும்போது அவனிடம் உள்ள உயர்ந்த மனிதத் தன்மையை எடுத்துக் காட்டினார் புலவர்.
இச்சிறிய பாட்டு, தமிழர்கள் போர்க்காலத்திலும் அறத்தையும், அருள்நெறியையும் பாதுகாத்து வந்தார்கள் என்பதைக் காட்டுகின்றதன்றோ! அறிவுத்துறையிலே உலகம் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டது உண்மைதான். ஆனால் அறிவும், மனிதத் தன்மையும், வீரமும், அருளும் இணைய வாழ்ந்த தமிழர் அருள்நெறியை இன்று உலகம் பின்பற்றினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!



