சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

22. தமிழ்நாட்டுத் தவசிகள்

உழைப்பில்லாத சோம்பேறிகள் ஒருநாளும் உருப்பட மாட்டார்கள்; பிறர் உழைப்பிலே வாழும் பேதைகள் அடிமைகளாகத்தான் வாழ்வார்கள். அவர்கள் எந்நாளும் மனஅமைதியுடன் வாழ மாட்டார்கள். எவ்வளவு தான் இனிய பண்டங்களை வயிறார உண்டாலும், கவலையில்லாதவர் களைப் போல உறங்கினாலும், ஆடம்பரமாக ஆடையணிகள் பூண்டு உலவினாலும் அவர்கள் நெஞ்சிலே வேதனைத் தீ அணையாமல் எரிந்து கொண்டுதான் இருக்கும்.

மன அமைதியுடன் – கவலையில்லாமல் – வாழ்கின்றவர்கள் சிலர்தாம். தந்நலம் துறந்தவர்கள், பிறர்நலத்திற்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். ஒருபொழுதும் சோம்பிக் கிடக்காமல் பொதுஜன நன்மைக்காகவே எப்பொழுதும் ஊக்கத்துடன் உழைப்பவர்கள் சிலர் உண்டு. இவர்கள் மக்களால் மதிக்கப்படுவார்கள்; இவர்களே எல்லோராலும் ஞானிகள், முனிவர்கள், தவசிகள் என்று பாராட்டப்படுவார்கள். இவர்கள் தாம் உண்மையான தியாகிகள் ஆவார்கள். இத்தகைய மனிதர்கள் பண்டைக் காலத்தில் பலர் இருந்தனர்.; இன்றும் இல்லாமல் போய்விடவில்லை.

இவர்கள் நல்லொழுக்கம் உள்ளவர்கள், பொதுப் பணி புரிகின்றவர்கள், தந்நலம் துறந்தவர்கள், உலக மக்களின் நன்மைக்காகவே தங்கள் வாழ்நாளைத் தத்தம் செய்தவர்கள் என்பதற்கு அடையாளமாகச் சில ஆடையணிகளைத் தாங்கி யிருப்பர். இத்தகைய வேடத்தையே தவவேடம், சமயக் குறிகள் என்பர். பொதுஜனங்கள் இவர்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டே இவர்களுக்கு என்று தனியான ஆடையணிகளை அமைத்துக் கொண்டனர்.

உண்மையான தவநெறியில் வாழ்கின்றவர்கள் தாம் தவவேடம் கொள்ளத் தகுதியுள்ளவர்கள். இதுவே முன்னோர் களின் கொள்கை; கருத்து. தவவேடம் பூண்டோர் யாராயிருந் தாலும் அவர்களுக்கு மரியாதை காட்டுவது இந்நாட்டு மக்களின் பரம்பரைப் பண்பு. தவவேடம் பூண்டோர் ஒழுக்கந் தவறியவர் களானாலும் அவர்களுடைய வேடத்திற்கு மதிப்புத் தரத்தான் வேண்டும் என்று கூறுவோர் இன்றும் உள்ளனர். இன்றும், மனிதன் இயல்பை அறியாமல் வேடத்திற்கு மதிப்புக் காட்டும் மக்களைக் காண்கின்றோம்.

துறவிகளும், தவசிகளும் தரிக்கும் தவவேடம் வெறும் கோலத்திற்காக அன்று; ஆடம்பரத்துக்காகவோ, பிறரை பயமுறுத்துவதற்காகவோ அன்று. தவசிகளும், துறவிகளும், தியாகிகளும் மனம், மொழி, செயல், நடத்தை இவைகளை விளக்கிக் காட்டும் அடையாளமாகவே வெளிக்கோலம் கொண்டி ருப்பர். அவர்கள் அணிந்திருக்கும் வேடத்தைக் கொண்டு அவர்கள் யார்? அவர்கள் பணி என்ன? எதற்காக வாழ்கின்றனர்? என்பவைகளை அறியலாம்.

பண்டைக் காலத்தில் மக்களின் உள்ளத்தை உணர்வதற்கு, அவர்களுடைய மாசற்ற பண்பைக் காட்டுவதற்கு வெளிக் கோலத்தையும் கருவியாகக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்ட வேடம் பொய் வேடமோ, போலி வேடமோ, பிறரை வஞ்சிக்கும் வேடமோ அன்று.

இந்தக் காலத்தில் இந்த நிலை மாறிவிட்டது. புனிதமான வேடம் பூண்டவர்களையெல்லாம் கள்ளம் கபடற்ற மனிதர்கள் என்று நம்பிவிட முடியாது. தூய்மைக்கு – பரிசுத்தத்துக்கு – அடையாளமான வேடங்களைப் பூண்டு குற்றங்களைச் செய்து வாழ்வோர் பலர். தங்கள் குற்றங்களை, வஞ்சக நடத்தைகளை மறைக்கவே பலர் பரிசுத்தமான வேடம் பூண்டு திரிவதைப் பார்க்கின்றோம். தந்நலத்தின் பொருட்டே பரிசுத்தமான சின்னங்களைப் பயன்படுத்திக்கொள்ளுகின்றனர். மக்களுக்குச் சமய போதனை அளிக்கத் தோன்றிய புனிதமான மடங்களின் தலைவர்களிலே பலர், புனித வேடம் பூண்டு கூடாவொழுக் கத்தில் மூழ்கியிருப்பதைக் காண்கிறோம். இந்த நிலைமை பண்டைக் காலத்தில் அவ்வளவு அதிகமாக இல்லை.

உள்ளத்திலே களங்கமற்ற முனிவர்கள் பலர் தமிழகத்திலே வாழ்ந்தனர். உலகம் – உலக மக்கள் – துன்பமில்லாமல் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் தவம் புரிந்த முனிவர்கள் பலர் தமிழகத்திலே வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் உள்ளத்தை – மாசற்ற மனத்தை ஒழுக்கத்தை – விளக்கும் தவக்கோலமும் பூண்டிருந்தனர். இவ்வுண்மையைத் திருமுருகாற்றுப்படையிலே நக்கீரர் தெளிவாகத் தெரிவிக்கின்றார்.

முருகன் வாழும் பழனி மலையிலே முனிவர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் ஆடம்பரமான பட்டாடையோ, பருத்தி நூல் ஆடையோ அணிவதில்லை; மரவுரியைத் தான் ஆடையாக அணிந்திருப்பார்கள்.

அவர்கள் அழகாக நரைத்த தலைமயிரை உடையவர்கள்; அவர்கள் தலைமயிர் வலம்புரிச் சங்கைப்போல வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும்; அம்மயிரைச் சங்கின் உருவாக உச்சியிலே உயர்ந்து நிற்கும்படி எடுத்து முடிந்திருப் பார்கள். ஆதலால் அவர்கள் தலைமயிர் உருவிலும், நிறத்திலும் வலம்புரிச் சங்குபோலவே காணப்படும்.

அவர்கள் மூன்று காலமும் குளித்து முழுகி இறைவனைப் பூசிப்பர். அதனால் அவர்கள் உடம்பு மாசற்றுப் பரிசுத்தமாக காணப்படும். மான் தோலை அணிந்திருப்பர். அவர்கள் மார்பிலே உள்ள எலும்பு முழுவதையும் எண்ணிக் கணக்கிட்டு விடலாம். பல பகல் விரதம் என்னும் பெயரால் உணவின்றி வாழ்கின்றவர்கள்; ஆதலால் இவ்வாறு எலும்பு தெரியும்படி இளைத்துக் காணப்படுகின்றனர்.

அவர்கள் உள்ளத்திலே பகையில்லை; நீடித்திருக்கும் சினமும் இல்லை.

அவர்கள் எல்லாவற்றையும் கற்றவர்களும் அறியாத உண்மையை உணர்ந்தவர்கள்; கற்றவர்களுக்கெல்லாம் ஒரு எல்லையாக நிற்பவர்கள்.

காமத்தையும், தீமை செய்யும் கொடிய சினத்தையும் கடிந்தவர்கள்; அவற்றைத் துறந்தவர்கள்; சிறந்த ஞானம் உள்ளவர்கள்; எவர்க்கும், எவ்வளவேனும் கெடுதி செய்ய எண்ணாத, கெடுதி செய்யாத இயல்புள்ளவர்கள்; மேலும் மேலும் வளர்கின்ற மாசற்ற அறிவுள்ளவர்கள்.

இவ்வாறு தமிழகத்துத் தந்நலந் துறந்த முனிவர்களைப் பற்றிப் பேசுகின்றது திருமுருகாற்றுப்படை.

சீரை தைஇய உடுக்கையர், சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்;
மாசற இமைக்கும் உருவினர்; மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்; நன்பகல்
பலஉடன் கழிந்த உண்டியர்; இகலொடு
செற்றம் நீங்கிய மனத்தினர்; யாவதும்
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர்; காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்; மேவரத்
துனியில் காட்சி முனிவரர்.

இவைகளே முனிவர்களின் பண்பை விளக்கும் திருமுருகாற்றுப்படை அடிகள். இவ்வடிகள் தமிழ் நாட்டிலே வாழ்ந்த தவசிகளின் சிறப்பையும், இயல்பையும், தோற்றத்தையும் எடுத்துக்காட்டின. இத்தகைய தவசிகளால் – முனிவர்களால் – தமிழகம் சீரும் சிறப்பும் அடைந்திருந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !