சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

28. சிறந்த நடத்தைகள்

ஒழுக்கம், நடத்தை, நெறி முதலியன ஒரே பொருள் உடைய சொற்கள். மக்களுக்கு மதிப்பளிப்பது ஒழுக்கமே யாகும். ஆதலால்தான் திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்தது என்று கூறினார். ஒழுக்கமற்றவன் உயிரற்ற மனிதன். அவன் மக்களுக்குள் மதிப்புப் பெறவே மாட்டான்; எல்லா மக்களாலும் இழிவாகவே எண்ணப்படுவான். ஆதலால்தான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார். உயிரைக்காட்டிலும் ஒழுக்கமே சிறந்ததாகக் காப்பற்றத்தக்கதாகும் என்பேத வள்ளுவர் கொள்கை.

இதுவே தமிழர் கொள்கை. தமிழில் உள்ள அற நூல் களில் எல்லாம் – நீதி நூல்களில் எல்லாம் – நல்லொழுக்கத்தின் பெருமையைப் பற்றியே பேசப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நூல் களில் எல்லாம் நன்னடத்தை வலியுறுத்தப்படுகின்றது. இதனால் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ்ந்தனர்; எல்லா மக்களும் நெறியுள்ளவர் களாக வாழவேண்டுமென்பதிலே கவலை கொண்டிருந்தனர். நெறியுள்ள சமுதாயந்தான் நிலையான ஒற்றுமையுடனும், அன்புடனும் நீண்டநாட்களுக்கு வாழ முடியும் என்றும் நம்பியிருந்தனர் என்பதை அறியலாம்.

நான்மணிக்கடிகை என்னும் நூல் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. அதில் ஒரு செய்யுளில் கூறப்படும் உயர்ந்த ஒழுக்கத்தைமட்டும் பார்ப்போம். இந்த ஒரு வெண்பாவிலே நான்கு நீதிகள் இருக்கின்றன. அந்நான்கு நீதிமொழிகளும் எவ்வளவு உயர்ந்தவை, சிறந்தவை என்பதை எண்ணிப் பார்த்தால் போதும்; ஒழுக்கத்தின் உயர்வைக் காணலாம்.

திருஒக்கும் தீதுஇல் ஒழுக்கம்; பெரியஅறன்ஒக்கும் ஆற்றின் ஒழுகல்;-பிறனைக்கொலைஒக்கும் கொண்டு கண்மாறல், புலைஒக்கும்போற்றாதார் முன்னர்ச் செலவு.

இந்த வெண்பாவிலே உள்ள செய்திகள் நான்கு. வெண் பாவும் அழகிய முறையில் மோனை எதுகைகளுடன் அமைந் திருக்கிறது. தெளிவான கருத்துக்கள் இதன் பொருளைப் பார்ப்போம்.

1. தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் – குற்றமற்ற ஒழுக்கம் செல்வத்தைப் போன்றதாகும். குற்றமற்ற நல்லொழுக்கமே சிறந்த செல்வம். செல்வம் உள்ளவன் ஒழுக்கம் அற்றவனாயிருந்தால் அவனை ஒருவரும் போற்ற மாட்டார்கள். அவனுடைய செல்வத் திற்காக, அவன் எதிரிலே அவனைக் குறைசொல்லாமல் இருக்க லாம்; அவனைப் புகழ்ந்தும் பேசலாம். ஆனால் உள்ளத்தால் அவனை மதிப்போர் – புகழ்வோர் – பாராட்டுவோர் ஒருவருமே இருக்கமாட்டார்கள். அவனைப்பற்றிய புகழ்ச்சியெல்லாம் உதட்டளவில்தான்.

நல்ல நெறியுள்ளவன் வறுமையால் நலிவடையலாம்; ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த முடியாதவனாயிருக்கலாம்; ஒருவருக்கும் உதவி செய்து உபசரிக்கமுடியாதவனாயிருக்கலாம். ஆயினும் அவனைப்பற்றி ஒருவரும் குறை கூறமாட்டார்கள். அவனைப் பற்றிப் பேச்சு வரும்போது, நல்ல நெறியுள்ளவன்; நெறி தவறாதவன்; ஒழுக்கம் உள்ளவன்; நடத்தைப் பிசகு இல்லாதவன்; நீதிமான், பாவம் வறுமையால் வாடுகின்றான்! என்றுதான் அனைவரும் அனுதாபம் காட்டுவார்கள்.

ஆகையால் அழிந்து – குறைந்து – மறைந்துபோகும் செல்வத்தைக் காட்டிலும், என்றும் அழியாத பெருமையைத் தரும் ஒழுக்கமே சிறந்தது.

2. ஆற்றில் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் – முறைப்படி ஒழுங்கு தவறாமல் நடந்துகொள்ளுவது பெரிய அறத்தைப் போன்றதாகும்.

தன்னுடைய கடமையை முறைப்படி செய்வதே சிறந்த அறம். தன் கடமை தவறாதவன் வேறு எந்த அறத்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை.

அரசாங்க அலுவலிலே இருப்பவர்களை எடுத்துக் கொள்ளுவோம். அவர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்வது என்று முடிவுகட்டிக்கொள்ளுவார்களாயின் தொல்லையே இல்லை.

சுகாதார அதிகாரிகள், தயவு தாட்சண்யம் இல்லாமல் சுகாதாரத்திற்காகப் பாடுபட வேண்டும்; பொது மக்கள் நல்வாழ்விற்கு விரோதமாக நடந்து கொள்கின்றவர்களைத் தண்டிக்கவேண்டும்; மக்கள் உண்ணும் உணவு விடுதிகளிலே நோய்க்கிருமிகள் அணுகுவதற்கு இடமின்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கல்வியதிகாரிகள், ஆசிரியர்கள் தந்நலமின்றிக் கல்வி வளர்ச்சியிலே கருத்துள்ளவர்களாகப் பணியாற்றவேண்டும். கல்வியை மக்கள் அனைவரும் கற்பதற்கான திட்டங்களை வகுத்து அதிலே கவனத்தைச் செலுத்தவேண்டும்.

பத்திரிகையாசிரியர்கள் மக்கள் சார்பிலே நின்று நேர்மைக்காகப் போராட வேண்டும். நீதியின் பக்கத்திலே நின்று அநீதியை எதிர்க்கவேண்டும். இவ்வாறே ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் உண்மையாக உழைப்பார்களானால் அதுவே அறநெறியில் நடப்பதாகும்; முறைப்படி நடப்பதாகும். இப்பரந்த பொருளிலேயே இச்செய்யுள் இரண்டாவது நீதி அமைந்திருக் கின்றது.

3. பிறனைக்கொண்டு கண்மாறல் கொலை ஒக்கும் – பிறன் ஒருவனை நட்பாகக் கொண்டு, பிறகு அவனைக் கைவிட்டு அவன்மேல் குறைகூறுவது, அவனைக் கொலை செய்வது போன்றதாகும்.

ஒருவனுடன் நட்புக்கொள்ளும்போது ஆராய்ந்தபின் தான் நட்புகொள்ள வேண்டும். நட்பாக ஏற்றுக் கொண்டபின் அவன் நட்பைக் கைவிடக்கூடாது; அவன் தவறு செய்தாலும் திருத்த வேண்டும்; பொறுத்துக் கொள்ளவேண்டும்; பொறுமை காட்ட வேண்டும்.

நட்புள்ளவன் பெரிய குற்றம் இழைத்தாலும் அதற்காக அவன்மீது சினத்தல் பிழையாகும். அவன் உள்ளம் திருந்தும் வகையிலே நயமாகப் பேசி அவனை நல்லவனாக்க வேண்டும். நட்பைக் கைவிடுதல் தவறு. அதை விடப் பெருந்தவறு. நட்பினைப் பற்றிப் பிறரிடம் குறை கூறுதல் ஆகும். இதுவே புறம்பேசுவதும் ஆகும். இச் செய்கை கொலை செய்வதைக் போன்றதாகும்.

4. போற்றாதார் முன்னர்ச் செலவு புலை ஒக்கும்- தம்மை மதியாதாரிடம் சென்று ஒன்றைப் பெற விரும்புதல் இழிவை ஒப்பதாகும்.

மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்பது நமது பள்ளிக்கூட பாடம். தமிழர்களின் தன்மான உணர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நம்மை மதிப்பவர்களையே நாமும் மதிக்க வேண்டும்; நம்முடன் வேற்றுமையின்றிச் சமமாகப் பழகுகின்ற வர்களுடன் நாமும் அப்படியே பழக வேண்டும். நம்மை இழி வாக நினைப்பவர்கள் – அல்லது நம்மைத் திரும்பிப் பாராதவர் யாராயிருந்தாலும் சரி, நாமும் அவர்களிடம் அப்படியே நடந்து கொள்ளவேண்டும். இது எல்லோரும் போற்றக்கூடிய சிறந்த நீதி.

இந்தச் சிறய வெண்பாவிலே கூறப்படும் நான்கு நல்லுரை களையும் நமது நடத்தையிலே காட்டுவோமாயின் நாம் சிறந்து வாழ்வோம்.

குற்றமற்ற நடத்தை, கடமையைத் தவறாமல் செய்தல், நட்பினரைக் குறைகூறாமை, மதியாதாரிடம் செல்லாமை இவையே அந்த நான்கும். இந்த நான்கு நல்லொழுக்கங்களும் தமிழர் அருள்நெறிக்குத் துணை செய்வன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !