சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

11. இனம் இனத்தோடே

இனம் இனத்தோடே என்பது ஒரு பழமொழி. இந்தப் பழமொழியின் பொருளை நாம் கண்ணெதிரே கண்டறியலாம். இப் பழமொழி, மக்களுக்கும் பொருந்தும்; மற்ற உயிரினங்களுக்கும் ஒக்கும்.

பறவையினங்களிலே பல ஒரு கூட்டமாக வாழ்வதைக் காணலாம்; விலங்குகளிலே பல ஒரு கூட்டமாக வாழ்வதைக் காணலாம். காக்கைகள் பல ஒன்றுகூடி வாழ்கின்றன; கடற் பறவைகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. குரங்குகள் பல ஓரிடத்திலே வாழ்கின்றன; மாடுகள், ஆடுகள் மந்தைகளாக வசிக்கின்றன.

மக்களும் மொழி, மதம், நாகரிகம், நாடு, கட்சி காரணமாக ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறோம். ஒரு மொழி பேசும் மக்கள் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். அவர்களுக்குள் மத வேற்றுமை, சாதி வேற்றுமை இருந்தாலும் மொழியால் ஒன்றுபடுகின்றனர்.

மதத்தினால் மக்களுக்குள் ஒரு ஒற்றுமை உருவாகின்றது; பல்வேறு நாட்டினர், பல மொழியினர், பல்வேறு இனத்தினர் மத அடிப்படையில் ஒன்றுபடுகின்றனர்.

நாகரிகம் – அல்லது கலாச்சாரம் காரணமாக மக்களுக்குள் ஒரு ஒற்றுமை வளர்கின்றது. பலவேறு நாட்டினராயினும், பலவேறு மொழியினராயினும், பலவேறு மதத்தினராயினும், கலையிலும், பழக்கவழக்கங்களிலும் ஒன்றுபட்டிருப்பார் களானால் அவர்களுக்குள் தொடர்பு வளர்கின்றது.

ஒரு நாட்டினர்க்குள் ஒற்றுமை தழைக்கின்றது. அவர்களுக்குள் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தங்கள் தாய்நாட்டின் மீதுள்ள பற்று அவர்களை விட்டு விலகிவிடுவதில்லை. தாய்நாட்டிற்கு ஒரு ஆபத்தென்றால் அனைவரும் ஒன்று திரண்டு நாட்டைக் காப்பாற்றப் பாடுபடுகின்றனர். நாட்டுப் பற்றின் முன்னே எல்லா வேற்றுமைகளும் நாசமாகி விடுகின்றன!

கட்சிக் கொள்கை காரணமாக பல நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை வளர்கின்றது. கட்சிக் கொள்கையின் அடிப்படையிலே நாடு, மொழி, மதம், இனம் என்ற வேற்றுமைகளை மறந்து விடுகின்றனர். பல நாட்டு மக்கள் ஒன்றுகூடி உறவாடுகின்றனர். கொள்கைப் பற்று அவர்களை ஒன்றுசேர்த்து விடுகின்றது. அகில உலக இயக்கங்களே இதற்குச் சான்று.

இனம் இனத்தோடே என்பதன் உண்மைப் பொருளை இவ்வாறு பல துறையிலும் நாம் காணலாம்.

அறிஞர்கள், கற்றவர்கள், நல்லொழுக்கமுள்ளவர்கள் ஒன்றுகூடி வாழ்வார்கள்; அவர்களுக்குள் ஒவ்வொரு நாளும் ஒற்றுமை வளரும்; அவர்கள் ஒன்றுபட்டு உலகம் நன்றாக வாழ்வதற்கு வழி தேடுவர். அறிவும், கல்வியும், ஒழுக்கமும் உள்ளவர்களே சான்றோர் என்று அழைக்கப்படுவார்கள். சான்றோர் என்றால் எல்லா நன்மைகளும் நிரம்பியவர்கள் என்று பொருள்.

யார் எவ்வளவு முயன்றாலும் – சூழ்ச்சிகள் செய்தாலும் – சான்றோர்களுக்குள் சண்டைத் தீயை வளர்க்க முடியாது; அவர்களைப் பிரித்துவிட முடியாது; அவர்களிடையிலே மொழி, இனம், நிறம், நாடு, மதம், கலாச்சாரம் என்ற பேதங்கள் தலைகாட்ட மாட்டா; இவற்றால் அவர்கள் வேறு வேறாயிருந் தாலும் அறிவால் – கல்வியால் – ஒழுக்கத்தால் – ஒன்றுபட்டே வாழ்வார்கள்.

மூர்க்கர்கள் – தந்நலமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் – தம் வாழ்வுக்காக இன்னது இனியது என்று பாராமல் எதையும் துணிந்து செய்கிறவர்கள் பலர் உண்டு. இந்தக் கும்பல் எல்லா நாட்டிலும் உண்டு. இவர்களும் ஒன்றுபட்டு வாழ்வார்கள்.

மூர்க்கன் மூர்க்கனைத் தான் விரும்புவான்; கல்லாதவன் கல்லாதவனைத் தான் காமுறுவான். ஒழுக்கமற்றவன் ஒழுக்க மற்றவனைத் தான் விரும்புவான். இந்தக் காட்சியையும் நாம் கண்கூடாகக் காணலாம்.

இந்த உண்மையைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று விளக்கிக் காட்டுகின்றது. சான்றோர்கள் எப்பொழுதும் சான்றோரைத்தான் விரும்புவார்கள்; அவர்களோடுதான் சேர்ந்து வாழ்வார்கள். சாலாதவர்கள் – கல்வி அறிவு ஒழுக்கங் களிலே நிரம்பாதவர்கள் – சான்றோரைச் சேர மாட்டார்கள்; விரும்ப மாட்டார்கள்; தங்களைப்போல ஒன்றும் நிரம்பாதவர் களைத் தான் நேசிப்பார்கள் என்று கூறுகிறது அச்செய்யுள்.

சான்றோர்கள் சான்றோர்களைத் தான் சேர்ந்து நிற்பார் கள் என்பதற்கு அச் செய்யுளின் அழகான உவமானம் ஒன்று காட்டப்பட்டிருக்கின்றது.

பொன், பவளம், முத்து, இரத்தினம் இவை வெவ்வேறிடத்திலே பிறப்பன. இவை ஒன்றிக்கொன்று சம்பந்தமில்லாத தொலைதூரத்திலே பிறந்தனவாக இருக்கலாம். சிறப்பாக பொன்னும், இரத்தினமும் நிலத்திலே பிறப்பன. பவளமும், முத்தும் நீரிலே பிறப்பன. ஆயினும், பொன் ஒரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்; இரத்தினம் மற்றொரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்; பவளம் பிறந்த நாடு ஒன்றாயிருக் கலாம்; முத்து பிறந்த நாடு மற்றொன்றாயிருக்கலாம்.

இப்படிப் பொன்னும், பவளமும், முத்தும், மணியும் வெவ்வேறு நாடுகளிலும், இடங்களிலும் பிறந்தனவாயினும், அவைகளை ஒன்றாகச் சேர்த்து வரிசையாக மாலையாக்கலாம். அந்த மாலை கண்ணுக்கு அழகு தரும்; மக்கள் அதை விரும்பி அணிவார்கள்; அது உயர்ந்த விலை மதிப்புள்ளதாயிருக்கும்.

இதைப் போலவேதான் அறிவு நிரம்பியவர்கள், மொழி, இன, மத வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டிருப்பர்: மற்றவர் களுக்கு நலம் புரிவதிலே ஈடுபட்டிருப்பர். சான்றோர்களின் ஒற்றுமை தன்மையை இவ்வாறு அழகிய உவமானத்தினால் விளக்கிச் சொல்லியிருக்கின்றது அச்செய்யுள்.

அச் செய்யுள் புறநானூற்றின் 218-வது பாட்டு. கண்ணகனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ் சோழன் என்னும் வேந்தனும், ஒருவரை ஒருவர் சந்திக்காமலே அன்பினராயிருந்தனர்; நட்பினரா யிருந்தனர். அவர்களுடைய அன்பை-நட்பை-ஒற்றுமையைப் பாராட்டும் முறையிலேயே அச்செய்யுளைப் பாடினார் கண்ணகனார். அச் செய்யுள் கீழ் வருவது:

பொன்னும், துகிரும், முத்தும், மன்னியமாமலை பயந்த காமரு மணியும்இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்துஅருவிலை நன்கலம் அமைக்கும் காலை;
ஒருவழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர்சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

ஏழே வரிகள் கொண்ட இச் செய்யுளின் இனிய பொரு ளைப் பார்த்தால் இனம் இனத்தோடே என்ற பழமொழியின் பரந்த பொருளைக் காணலாம்.

தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் செய்யுட்களிலே இது ஒரு சிறந்த செய்யுளாகும். இக்கருத்துள்ள செய்யுட்கள் பிற்காலத்திலே பல தோன்றியிருக்கின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !