
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
3. பேதம் இல்லை
உலகிலே ஒற்றுமை நிலவவேண்டும்; மனிதர்களுக்குள் இன்று நிலவி வரும் வெறுப்பும், பிரிவுகளும் ஒழிந்து போக வேண்டும்; எல்லா மக்களும் அன்புடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும்; மதத்தால் – மொழியால் – இனத்தால் – நாட்டில் மனிதர்கள் பிரிந்து நிற்கும் நிலை மாறவேண்டும். மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லா மனிதர்களும் ஒன்று தான்; இவ்வுலகில் இன்பத்துடன் வாழவே எல்லா மனிதர்களும் விரும்புகின்றனர். இத்தகைய மனிதர்கள் ஏன் பல்வேறு காரணங்களைச் சொல்லிக் கொண்டு பிரிந்து நிற்க வேண்டும்? வேண்டாம்; பிரிவினைகள் – வேற்றுமைகள் – வேண்டாம்! ஒன்றுபட்டு மனிதத் தன்மையுடன் வாழ்வோம் என்று தான் இன்று உலகில் உள்ள அறிஞர்கள் அனைவரும் சொல்லு கின்றனர்.
மனித குலம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு மாறாக நிற்கும் தடைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும். அப்பொழுது தான் ஒற்றுமை தழைக்கும் என்றும் அறிஞர்கள் சொல்லுகின்றனர்.
பண்டைக்கால மக்களுக்குள் ஒற்றுமையின்மையால் அவர்கள் அடைந்த தீமைகளுக்கு அளவில்லை. தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். பண்டைத் தமிழகம் எப்படி யிருந்தது? பண்டைத் தமிழக மக்களின் வாழ்வு எப்படியிருந்தது? என்பதை ஆராய்ந்தால் அக்கால வாழ்வைக் காணலாம். பண்டைத் தமிழகம் மிகவும் உன்னதமான நிலையில் இருந்தது. பண்டைத் தமிழக மக்களிடம் ஒன்றுபட்ட வாழ்வும், இன்ப வாழ்வும் தழைத்துக் கிடந்தன; நாடெல்லாம் பாலுந் தேனும் வழிந்தோடின; புலியும் மானும் ஒரு துறையிலே நீர் குடித்தன; பாம்பும் கீரியும் சேர்ந்து விளையாடின; கிளியும், பூனையும் கூடிக் குலாவின; பண்டைத் தமிழர்களிடம் எத்தகைய வேற்றுமையும் இல்லை என்று பேசி மகிழ்வோர் உண்டு. இது உண்மைதானா? என்பதைக் காணவேண்டும்.
இன்றுள்ள தமிழ்நாடு, இப்பொழுது இருப்பதை விடப் பரப்பிலே இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்த தமிழ்நாடு – பண்டைக் காலத்தில் மூன்று வல்லரசுகளின் கையிலே இருந்தது. தமிழகத்து முடியுடை வேந்தர்கள் மூவர். அவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்கள். இவர்கள் ஆண்ட நாடுகளைத் தான் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று சொல்லுகிறோம். மூன்று நாடும் மூன்று வல்லரசுகள் நாடுகளாகும். இவ்வரசுகள் ஒவ்வொன்றின் கீழும் பல சிற்றரசுகள்.
மூன்று வல்லரசுகள் நிலைபெற்ற தமிழகம் எப்படியிருந்தது? தமிழகத்தில் அமைதி-சமாதானம் நிலவியிருந்த காலம் குறைவு; அமைதியின்மையும், கலகமும், சண்டையும் குடிகொண் டிருந்த காலமே மிகுதி. சேர, சோழ, பாண்டியர்கள் ஒத்து வாழ்ந்த காலம் குறைவு; ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்த காலந்தான் மிகுதி. இந்த உண்மையைப் பேசும் மக்கள் வாழும் நாட்டில் – அரசுப் பிரிவினை காரணமாக – சதா சண்டையும் சச்சரவும் நடந்து கொண்டிருந்தால் அந்நாட்டு மக்கள் எப்படித்தான் ஒன்றுபட்டு வாழ்ந் திருக்க முடியும்? அரசு வேற்றுமை காரண மாக அவர்கள் அல்லற்பட்டார்கள் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய அவலநிலையைக் கண்ட தமிழ்ப் புலவர் ஒருவர் மிக்க மனவேதனைக்கு ஆளானார். மனிதர்க்கு மனிதர் வேற்றுமை ஏது? எல்லா மனிதர்களும் பண்பிலும், வாழ்விலும், எண்ணத் திலும், ஆசைகளிலும் ஒன்றாகத்தானே இருக்கின்றனர்? இருந்தும் அவர்களுக்குள் ஒருமைப்பாடு ஏற்படாத காரணம் என்ன? என்று ஆலோசித்தார். அவர் உள்ளத்திலே உண்மை பிறந்தது.
தமது ஊர் வேறு, மற்ற மக்கள் வாழும் ஊர் வேறு; தமது நாடு வேறு, பிறர் வாழும் நாடு வேறு; என்று நினைக்கின்றனர். தமது நன்மை தீமைகளுக்கெல்லாம் தாம்தான் காரணமென்பதை மறந்தனர்; பிறர்தான் தமது நன்மை தீமைகளுக்குக் காரணம் என்று நினைக்கின்றனர். தாம் என்ற அகங்காரம் வேறு; இது மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது. தமது இன்ப துன்பங் களுக்குத் தமது வினைதான் காரணம் என்பதை அறியாமல் போய்விட்டனர் என்பதே அவர் கண்டறிந்த உண்மை.
மக்கள் அனைவரும் இந்த உண்மையை உணர்ந்து விட்டால் இவ்வுலகில் எவ்வித வேற்றுமையும் காலூன்றி நிற்க முடியாது; வாழ முடியாது. உலகம் ஒன்றுபடும்; உலக மக்கள் மத, இன, மொழி, நாடு என்ற வேற்றுமையின்றி ஒன்றுபட்டு வாழ்வார்கள் என்று நம்பினார். உடனே தன் கருத்தை – முடிவை – உண்மையை ஒரு பாடலாக எழுதி வைத்தார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றுஓர் அன்னசாதலும் புதுவது அன்றே; வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்இன்னாது என்றலும் இலமே மின்னொடுவானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லல்பேர் யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல், ஆர்உயிர்முறைவழிப் படுஉம் என்பது, திறவோர்காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமேசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநா – 192)
இதுவே அப்பாடல். இப்பாடலை எழுதிவைத்த புலவர் கணியன் பூங்குன்றனார் என்பவர் எமக்கு எல்லாவூரும் சொந்த ஊர்தான்; எல்லா மக்களும் உறவினர்தாம்; தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல; துன்புறுவதும் துன்பந் தீர்வதும்கூட அவைபோலத்தான்; சாவதும் புதிது அன்று; பிறந்தவர் இறந்துதான் ஆக வேண்டும்; வாழ்வது என்றும் நிலையானது. இன்பமானது என்று மகிழ்ச்சியடையவும் இல்லை. ஏதேனும் வெறுப்பு வந்த போது மட்டும் இவ்வுலக வாழ்வு துன்பமு டையது என்று சலிப்படைய மாட்டோம். மின்னுகின்ற மேகம் குளிர்ந்த மழையைப் பெய்வதால் எப்பொழுதும் கல்லிலே மோதி ஆற்றிலே, நீர் ஓட்டத்தின் வழியே அதிலே விட்ட தெப்பம் – மிதவை ஓடிக் கொண்டேயிருக்கும். அதுபோல் இன்பமோ துன்பமோ அடையும். இவ்வுண்மையை அறிஞர் களின் நூல்களால் தெளிவாக அறிந்தோம். ஆதலால் நன்மை செய்யும் பெரியோரைக் கண்டு வியப்படையவும் மாட்டோம்; சிறியோரைப் பழிக்கவும் மாட்டோம். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள்.
இப்பாடலைப் போற்றாத தமிழ்ப் புலவர்கள் இல்லை. இப்பாடலைப் பாடி, உலக ஒற்றுமைய விரும்பியவன் தமிழன்; உலகம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வழிகாட்டியவன் தமிழன் என்று புகழாத புலவர்கள் இல்லை.
இப்பாடலைப் பாராட்டும் புலவர்களிலேயே பலர், இப் பாடலின் கருத்துக்கு மாறாக இனவேற்றுமை பாராட்டுவதைக் காண்கிறோம்; மொழி வேற்றுமை பாராட்டுவதைக் காண்கி றோம். நாட்டின் ஒற்றுமைக்கு விரோதமாக நாட்டைத் துண் டாட வேண்டும் என்று பேசுவதைக் காண்கின்றோம்.
உலகமே ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் கருத்துள்ள இப்பாடலைப் போற்றுவோர், நாடு, இன, மொழி, மத வெறுப் பிலோ, வெறியிலோ தலையிடமாட்டார்கள்; உலகம் ஒன்று படவே உழைப்பார்கள்.
இப்பாடலில் கூறும் பொருள்தான் உண்மை நெறியாகும்; சன்மார்க்க நெறியாகும். எல்லா மக்களும் – எல்லா நாட்டு மக்களும் ஒன்றுபட்டு வாழ்வதுதான் சன்மார்க்கமாகும். இத்தகைய சன்மார்க்க நெறியை ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன் கண்டறிந்த கனியன் பூங்குன்றனாரின் அறிவு வியத்தற்குரியது. அவர் காலத்தில் தமிழகத்தில் இருந்த சூழ்நிலை அவரை, இவ்வுண்மையைக் காணச் செய்தது என்பதில் ஐயம் இல்லை.



