
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
20. நீதியும் அமைச்சும்
செல்வத்திலும், செல்வாக்கிலும் வலுத்தவர்களிலே நீதிவழி நடப்போரும் உண்டு; தம்மைப்போலவே பிறரையும் எண்ணி மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளுவோர் உண்டு; தமது செல்வத்தையும், செல்வாக்கையும் பொதுஜன நன்மைக் குப் பயன்படுத்துவோர் உண்டு. ஆனால் இவர்களிலே பலர், ஏழைகளைக் கசக்கிப் பிழிவதிலேயே கண்ணும் கருத்துமா யிருப்பர். மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நாம் வாழ்ந் தால் போதும் என்ற எண்ணத்துடன் ஏழைகளின் உழைப்பையும், செல்வத்தையும் சுரண்டுவோர் உண்டு; தமக்கு அடங்காதவர் களை – தமது அக்கிரமத்தை எதிர்ப்பவர்களைப் பலாத்காரத் தால் அடக்கி நசுக்குவோர் உண்டு.
ஒரு நல்ல அரசாங்கம் உள்ள நாட்டிலே அகங்காரம் பிடித்த செல்வர்கள் தங்கள் இஷ்டம்போல் நடக்க முடியாது; சட்டத்தையும் நீதியையும் மீறி நடக்க முடியாது. ஏனென்றால், இவர்களால் கொடுமைப்படுத்தப்படும் மக்கள் அரசாங்கத்திடம் முறையிட்டுக் கொள்ளுவார்கள்; அரசாங்கத்தின் அடிப்படை யாக இருக்கின்ற நீதிமன்றத்திலே வழக்கு தொடுப்பார்கள்; தங்கள் உரிமையைப் பெற முயற்சிப்பார்கள். இது சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுவதற்காக அமைந்திருக்கும் ஆட்சி யுள்ள எல்லா நாடுகளிலும் நடைபெறுவதாகும்.
நாட்டின் ஆட்சியும், ஆள்வோரும் எப்படியிருந்தாலுங் கூட, பொதுஜனங்களுக்கு நீதிமன்றங்களிலேயுள்ள நம்பிக்கை போய்விடவில்லை. நீதி மன்றங்களிலே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மனிதர்களிடம் இன்றும் குடி கொண்டிருக்கின்றது. நல்ல அரசாட்சி ஏற்பட்ட காலந்தொட்டு மக்களுக்கு நீதி வழங்கும் மன்றங்களும் அமைக்கப்பட்டிருக் கின்றன. அரசாட்சியுள்ள எல்லா நாடுகளிலும் நீதி மன்றங்கள் உண்டு. அவற்றில் அமர்ந்து நீதியை நிலைநாட்டும் சிறந்த நியாயாதிபதிகளும் இருக்கின்றனர். நீதிபதிகள், நியாய சபைகள் இல்லாத நாடுகள் எவையும் இல்லை. இவைகள் இல்லாத நாடுகள், நாடுகள் என்ற பெயருக்குத் தகுதியுடையவைகளும் அல்ல.
நீதி சபைகளில் அமர்ந்து நியாயம் கூறும் நீதிபதிகளை – அறிஞர்களை – பண்டைக்கால மக்கள் தெய்வங்களுக்குச்
சமமாகவே நினைத்து வந்தனர். அவருக்குப் பொது ஜனங்கள் நல்ல மதிப்பும் மரியாதையும் காட்டி வந்தனர். இன்றும் நீதிபதி களிடம் மக்கள் கொண்டிருக்கும் மதிப்பில் குறைவில்லை. நீதிபதிகளிடம் மக்கள் நம்பிக்கையிழந்தால் – நியாய சபைகளைப் பற்றிக் தவறாக எண்ணத் தொடங்கிவிட்டால் அவர்கள் நீதிமன்றங்களை நாடமாட்டார்கள்; பணத்தைச் செலவு செய்து கொண்டு நியாயந் தேடி நீதிமன்றங்களுக்குப் போக மாட்டார்கள்.
பண்டைக் காலத்தில் நீதிபதிகள் எப்படி இருந்தனர் என்பதைப் பற்றிப் பத்துப் பாட்டிலே காணப்படுவது குறிப்பிடத் தக்கது. பத்துப்பாட்டிலே மதுரைக் காஞ்சியில் நீதிபதிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது. நியாயாதிபதிகள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவதாகும். மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் என்னும் பழம்பெரும் தமிழ்ப் புலவர். புலவர்களிலே தலைசிறந்தவராகப் போற்றப் படுகின்றவர். நீதிபதிகளின் பண்பைப் பற்றி அவர் சொல்லியிருப் பதைக் காண்போம்.
இவர் நடுநிலையிலிருந்து வழக்கை ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவாரா? நடுநிலை தவறி நீதியைப் பொருட்படுத்தாமல் ஒரு பக்கமாக நின்று தீர்ப்புச் சொல்லுவாரா? என்ற ஐயமோ, அச்சமோ பொது மக்கள் உள்ளத்திலே பிறப்பதில்லை.
வழக்கிலே தோற்றவர்களும், அத்தோல்வியால் துன்புற மாட்டார்கள். நியாயமான தீர்ப்பாக – முடிவாக – இருந்தால் ஏன் மனத்துயரம் அடைய வேண்டும்?
வழக்கிடுவோர் உள்ளத்திலே கொண்டிருந்த நியாய மற்ற ஆசையை நீக்குவார்கள். அவர்கள் மனம், நீதிபதியின் முடிவு நியாயந்தான் என்று ஒப்புக்கொள்ளும்படி தீர்ப்பளிப்பார்கள்.
நீதிபதிகள் எக்காரணத்தாலும் தமது உள்ளத்தைப் பிறரிடம் ஒப்படைத்து விடமாட்டார்கள்; நடுநிலையிலே நிறுத்திக் கொள்ளும் உரம் படைத்தவர்கள். வழக்கிடுவோர் உறவினராயிருந்தாலும் சரி, பகைவராயிருந்தாலும் சரி, நொது மலராயிருந்தாலும் சரி, நடுநிலையிலே நின்று வழக்குரைகளைக் கேட்டறிவார்கள். ஒரு பக்கம் கோபமும், மற்றொரு பக்கம் உவகையும் கொள்ளமாட்டார்கள்.
துலாக்கோலைப் போல நடுநிலையிலே நின்று நீதி உரைப்பார்கள். இத்தகைய சிறந்த கொள்கையையுடைய நீதிபதிகள் உறையும் நீதிசபை.
இது, மதுரையில் அக்காலத்திலிருந்த நீதிமன்றத்தைப் பற்றி மாங்குடி மருதனார் சொல்லியிருப்பது.
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்சிறந்த
கொள்கை அறம்கூறு அவையமும்
(மதுரைக் 489-492)
இவ்வடிகளிலே மேலே குறித்த பொருளைக் காணலாம். நீதிமன்றத்தை அறம் கூறு அவையம் என்று பெயரிட்டு அழைத்தனர். சபை என்ற சொல்லே அவை, அவையம் என்று திரிந்தது.
இவ்வாறு நீதிமுறை ஒழுங்காக நடைபெறுமானால், அதற்கு நல்ல அரசே அடிப்படையாகும். ஆட்சியை நடத்து வோரும், நேர்மையாளர்களாக – நடுநிலை தவறாதவர்களாக – தந்நலமற்றவர்களாக – இருக்க வேண்டும். ஆட்சியாளர்க்கும், நீதிமன்றங்களுக்கும் இணைப்புண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது; ஆட்சியாளர்களிடம் கோளாறு ஏற்பட்டால் அது நீதிமன்றங்களையும் குலுக்கித்தான் தீரும்; இது மறுக்கமுடியாத உண்மை.
அரசை இயக்கும் – நடத்தும் அச்சாணிகள் அமைச்சர்கள் தாம். குடிஅரசிலும் சரி, முடி அரசிலும் சரி, இவர்கள் தாம் ஆட்சி வண்டி குடைசாயாமல் காத்து வருகின்றனர்; வந்தனர். இத்தகைய பொறுப்புள்ள அமைச்சர்களிடம் – மந்திரிமார் களிடம் – நேர்மையிருக்க வேண்டும்; நடுநிலையிருக்க வேண்டும்; தியாக புத்தியிருக்க வேண்டும்; மனிதாபிமானம் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய அமைச்சர்களைக் கொண்ட அரசுதான் உண்மையான ஜனநாயக அரசாக – மக்கள் அரசாக – விளங்கும். ஆட்சித் தேரும் தங்குதடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
அமைச்சர்கள் ஒழுங்கு தவறினால் நீதிபதிகளும் ஒழுங்கு தவறக் கூடும். நீதபதிகள் நியாயமாக நடக்க நினைத்தாலும் அவர்கள் ஒழுங்கீனமாக நடக்கும்படி கட்டாயப்படுத்தப் படுவார்கள். ஆதலால் அமைச்சர்களின் உயர்வையும், ஒழுக்கத் தையும், மனிதத் தன்மையையும் பொறுத்தே ஒரு நாட்டின் ஆட்சி அமைந்திருக்கும். அந்த நாட்டின் நீதி முறையும் நடைபெறும்; இது ஐயத்திற்கிடமில்லாத உண்மை. இந்த உண்மையையும், மதுரைக் காஞ்சியிலே மாங்குடி மருதனார் குறிப்பிடுகின்றார்.
அரசனிடம் உள்ள நல்ல எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் ஆராய்ந்து காண்பார்கள்; அவர்களை நல்ல எண்ணத்தின்படி நடக்கச் செய்வார்கள்; நல்ல காரியங்களையே செய்யும்படி தூண்டுவார்கள்; கெட்ட எண்ணங்களைக் கைவிடும் படி செய்வார்கள்; கெட்ட செயல்களைச் செய்ய விடாமல் அடக்குவார்கள்.
அன்பையும் அறத்தையும் கைவிடாமல் காப்பார்கள். அரசர்கள் குடிமக்களிடம் அன்புடன் நடந்து கொள்ளும்படி செய்வார்கள்; அறந் தவறாமல் நடந்துகொள்ளும்படியும் செய்வார்கள்.
தாமும் பழிப்புக்கு இடமான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; பலரும் புகழத்தக்க – பாராட்டத்தக்க – ஏற்றுக் கொள்ளத்தக்க – நல்ல காரியங்களையே செய்வார்கள். இதனால் உயர்ந்த நிலையிலே வைத்துப் போற்றப்படுவார்கள். எல்லோரும் அறியும்படியான புகழையும் பெறுவார்கள்.
இத்தகைய சிறப்பமைந்தவர்கள்; காவிதிப் பட்டம் பெற்றவர்கள்; இவர்களே அமைச்சர்கள்.
இவைகளே அமைச்சர்களின் பண்பென்று கூறுகின்றது மதுரைக்காஞ்சி.
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து, அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்,
பழிஒரீஇ, உயர்ந்து, பாய்புகழ் நிறைந்தசெம்மை
சான்ற காவிதி மாக்களும்
(மதுரைக் 496-499)
இவ்வடிகள் மேலே காட்டிய கருத்தை வலியுறுத்து கின்றன.
மதுரைக்காஞ்சியில் இவ்வாறு நீதியைப்பற்றியும், அமைச்சரைப்பற்றியும் அடுத்தடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நாம் அறியும் உண்மை ஒன்றுண்டு. அமைச்சர்களின் ஒழுக்கத்தையும், திறமையையும், நேர்மையையும் பொறுத்தே ஒரு நாட்டின் நீதிமுறையும் அமைந்திருக்கும் என்பதுதான் அவ்வுண்மை.
அமைச்சர்கள் அநீதியாளர்களாயிருந்தால் அந்த நாட்டிலே நீதியும் நிலைகுலையும்; நியாயசபைகள் அநியாய சபைகளாக மாறத்தான் செய்யும். இதை நாம் உலக நடப்பிலே – உலக வரலாற்றிலே இன்றும் நேராகக் காணலாம்.
மாங்குடி மருதனார் பாடியிருக்கும் மேலேகாட்டிய அடிகள் பண்டைத் தமிழர்களின் சிறப்பைக் காட்டுகின்றன; அவர்கள் நீதியைக் காப்பாற்றுவதிலே எவ்வளவு கவலை கொண்டிருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. மதுரைக் காஞ்சியின் அடிகள், மாங்குடி மருதனாரின் காலத்தில் நீதி மன்றங்கள் எப்படியிருந்தன? அமைச்சர் எப்படி இருந்தனர்? என்பதை விளக்கின. ஆயினும், இவைகள் நீதிமன்றங்கள் எப்படி யிருக்க வேண்டும்? அமைச்சர்கள் எப்படியிருக்க வேண்டும்? என்பதையும் அறிவுறுத்துவதைக் காணலாம். இத்தகைய அறத்தைப் பின்பற்றும் நாடு என்றும் உயர்ந்து சிறந்து விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.



