
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
15. அரசுக்கு வெற்றி அறமே
படைபலத்தால் மற்றவர்களை அடக்கி ஆளலாம்; அல்லது நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்; என்று எண்ணுகின்றனர் பலர். இப்படி எண்ணக்கூடியவர்கள் தாம் இன்று பல நாடுகளில் அரசியல் ஆதிக்கம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படும் செல்வத்தை, படைகளைப் பெருக்குவதற்குச் செலவழித்து வருகின்றனர்.
இப்படிப் படைகளைப் பெருக்குவோர் சமாதானத்திற் காகவே படைகளைப் பெருக்கி வருகின்றோம், வளர்த்து வருகின்றோம் என்று பேசுகின்றனர். இதுதான் வேடிக்கை. இவர்கள் மற்றவர்களைப் பார்த்து, போர் வெறியர்கள்; யுத்த மோகத்தால் ஆட்டி வைக்கப்படுகிறவர்கள்; உலக சமாதானத் துக்கு உலை வைக்கின்றவர்கள் என்றெல்லாம் உளறிக் கொட்டுகிறார்கள். இது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை.
ஒரு அரசாட்சிக்குப் படைபலம் ஆக்கந் தந்துவிடாது. படைப் பெருக்கத்தால் மட்டும் எந்த அரசும் நிலைத்து வாழ்ந்துவிட முடியாது. அறநெறியே அரசு நிலைத்து நிற்பதற்கு அடிப்படையாகும். குடிமக்களிடம் விருப்பு வெறுப்பின்றி நடந்துகொள்ளும் அரசாங்கமே மக்களால் மதிக்கப்படும். குடிமக்களின் குறைகளைக் களைந்து அவர்களை அமைதியுடன் வாழச் செய்யும் அரசாங்கமே படை பலத்தைக் காட்டிலும் சிறந்த பலம் பெற்ற அரசாங்கமாக விளங்கும்.
இந்த உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர். அற நூல்களிலே இதையே சிறந்த நீதிமுறையாக எழுதிவைத்தனர். தமிழ்ப் புலவர்கள் இந்த அறத்தை மன்னர்களுக்கு அடிக்கடி நினைப்பூட்டி வந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந் திருந்த இந்த உண்மையை உணராத அரசாங்கங்கள் இன்றுகூட இவ்வுலகில் இருக்கின்றன. இதை எண்ணும்போது தமிழர்களின் பழமையான பண்பாட்டின் பெருமை விளங்கும். இந்த உண்மை யை நமக்குக் காட்டுகின்ற செந்தமிழ்ச் செய்யுட்கள் எத்தனையோ உள்ளன. இங்கே புறநானூற்றுப் பாட்டு ஒன்றை மட்டும் பார்ப்போம்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பவன் சேர, சோழர்களைவிடச் சிறந்த புகழ் பெற்றவன்; வீரமுள்ளவன்; படைபெருக்கமுள்ளவன். அவன் ஒரு சமயம் தன் பெரும்படையைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டிருந்தான். மற்றவர் களை விட நால்வகைப் படைகளும் அவனிடம் நிறைந்திருந்தன. அதனால் அவன் எக்களிப்பும் இறுமாப்பும் கொண்டிருந்தான்.
இவன் நிலைமையைக் கண்ட மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் அவன் செருக்கடங்கும்படி சில அறிவுரை களைக் கூறினார். அவர் கூறியுள்ள அறவுரையில் தமிழர்களின் அருள்நெறி அடங்கிக் கிடக்கின்றது. புலவர் உரையைப் பாருங்கள்.
பூமாலையை அணிந்த பாண்டியனே! நீ அரசர்களுக் குள்ளே சிறந்தவன். மேரு மலையை வில்லாகக் கொண்டு வாசுகியை நாணாக ஏற்றி ஒரே அம்பினால் திரிபுரத்தை அழித்து, தேவர்களுக்கு வெற்றியை அளித்தான் சிவ பெருமான். அவன் கழுத்திலே நஞ்சை அடக்கியவன்; அழகிய சென்னியை யுடையவன்; பிறை போன்ற நெற்றியை உடையவன். அந்த நெற்றியிலே ஒரு கண்ணும் அவனுக்கு உண்டு. அந்த நெற்றிக்கண் பார்வையால் இந்த உலகை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவான். அவ்வளவு ஆற்றலும் பெருமையும் உள்ளது அக்கண். அந்தக் கண்ணைப் போல் நீ உயர்ந்தவன்.
உனக்கு ஒரு உண்மை அறத்தை உரைக்கின்றேன்; கேட்பாயாக. உன்னுடைய படையிலே களிறுகள் நிறைந்திருக் கின்றன. அவை கடுமையான சினத்தையுடையன; பகைவர்களை அஞ்சாமல் கொன்று குவிக்கும் குணம் உடையன! இத்தகைய யானைப்படை உன்னிடம் நிறைய உண்டு. விரைந்து ஓடக்கூடிய குதிரைப் படைகளும் நிறைந்திருக்கின்றன; நீண்ட கொடிகள் அமைந்த பெரிய தேர்களும் நிறைந்திருக்கின்றன; அஞ்சா நெஞ்சமுள்ள – போரென்றால் மகிழ்ந்து துள்ளும் புகழ்பெற்ற – வீரர்களும் நிறைந்திருக்கின்றனர்.
இவ்வாறு யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகைப் படைகளால் உன்னுடைய சேனை, வீரத்தில் உயர்ந்து விளங்குகின்றது; அளவிலும் பெருகியிருக்கின்றது. ஆயினும் உன் அரசாட்சியின் வெற்றிக்கு இந்தப் படை அடிப் படையாக நிற்கமுடியாது; ஆதரவளிக்கவும் முடியாது.
எக்காலத்திலும், எல்லோராலும் கொண்டாடப்படும் சிறப்புள்ள அறநெறிதான் அரசுக்கு வெற்றி தருவதாகும். அறநெறியை மறந்த அரசு – அதைக் கைவிட்ட அரசு – நிலைக் காது; தலைசாய்ந்து தரைமட்டமாகி அழிந்து விடும். ஆகையால் கொடுமை செய்த ஒருவரை, இவர் நமது உறவினர் என்று எண்ணித் தண்டிக்காமல் விடக் கூடாது; பிறர் என்பதற்காக நல்ல குணம் உள்ளவர்களைத் தண்டித்து விடக் கூடாது. யாராயிருந்தாலும் சமமாக எண்ணி, கோல் கோடாமல் முறை செய்ய வேண்டும்.
கதிரவனைப் போன்ற சிறந்த ஆண்மையும், சந்திரனைப் போன்ற இனிமை தரும் தண்மையும், மேகத்தைப் போல் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையும் கொண்டு, நீ நீடூழி வாழ்க! இவ்வுலகிலே, இல்லையென்று சொல்லி வருந்தும் வறியவர்களே இல்லாதபடி செய்து, நீ நீடூழி வாழ்க!
சிறந்த பெருமையுள்ளவனே! சிறந்த முருகன் அமர்ந்திருக் கின்ற செந்தில் நகரிலே, ஆழமுள்ள கடல் கரையிலே, வெண்மை யான தலையையுடைய அலைகள் மோதும் பெரிய கடல் துறையிலே கடுங்காற்றால் குவிந்திருக்கும் மணலைக் காட்டிலும் நெடுங்காலம் நீ வாழ்க!
இதுதான் மருதன் இளநாகனார் கூறிய அறிவுரை. தமிழர் களின் பண்பாட்டையும், தமிழ்ப் புலவர்களின் அறநெறி உள்ளத் தையும் தெளிவாக எடுத்துக்காட்டும் சிறந்த கவிதை. மேலே காட்டிய பொருள் அமைந்த பாடல் வருமாறு:
ஓங்குமலைப் பெருவில், பாம்புஞாண் கொளீஇ;
ஒருகணை கொண்டு, மூஎயில் உடற்றிப்
பெருவிரல் அமரர்க்குவென்றி தந்த
கரைமிடற்று அண்ணல், காமர் சென்னிப்,
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல,
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
கடும்சினத்த கொல்களிறும்,
கதழ்பரிய கலிமாவும்,
நெடுங்கொடிய நிமிர்தேரும்,
நெஞ்சுடைய புகல்மறவரும், என
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமர்எனக் கோல்கோடாது,
பிறர்எனக் குணம்கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெம்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெரும் சாயலும்,
வானத் தன்ன வண்மையும், மூன்றும்
உடையை ஆகி, இல்லோர் கையற
நீநீடு வாழிய; நெடுந்தகை!
தாழ்நீர் வெண்தலைப் புணரி
அலைக்கும், செந்தில் நெடுவேள் நிலைஇய
காமர் வியன்றுறைக், கடிவளி தொகுப்ப
ஈண்டிய, வடுவாழ் எக்கர் மணலினும் பலவே.
(புறநா. 55)



