சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

16. கொடுங்கோலாட்சி குலையும்

அரசு என்பது மக்கள் நன்மைக்காக, மக்களால் ஏற்படுத்திக் கொண்டதாகும். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள், கருத்துடையவர்களாக வளர்ந்தபின் தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியைக் கருதிப் பல கட்டுப்பாடுகளை உண்டாக்கி கொண்டனர். அவர்கள் வகுத்துக் கொண்ட சமுதாயக் கட்டுப் பாடுகளைக் கண்காணித்து காப்பாற்ற அரசு அவசியமாயிற்று.

வல்லான் ஒருவனைத் தலைவனாக வைத்து, அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதென்று முடிவு செய்து கொண்டனர். அந்த வல்லானையே அரசனாக வைத்துக் கொண்டனர். அவனுக்கு அனைவரும் அடங்கி நடக்க வேண்டும்; அவனைப் பெரியவனாக மதிக்க வேண்டும் என்பதற்காகவே அரசன் கடவுளின் அம்சம் என்று கூறினர். அவன் செய்வது கொடுமையாயினும், நன்மையாயினும் மறுக்காமல் கீழ்படிவதே மக்கள் கடமை யென்றும் சொல்லி வைத்தனர்.

இந்தக் காரணத்தால் அரசர்களிலே சிலர் குடிகளின் நலத்தைக் கருதாமல் தங்கள் நலமொன்றையே பெரிதாக எண்ணி நடக்கவும் தொடங்கினர். இவ்வாறு நடந்த மன்னர்களுக்கு அறிஞர்கள் அவ்வப்போது அறிவுரைகளைப் புகட்டி வந்தனர். இவர்களைப் பார்த்து, நீ நேர்மையுடன் நடக்காவிட்டால் உன் வாழ்வு நிலைக்காது; உன் அரசும் தாங்காது; நீயும் நிலைகெட்டுப் போவாய் என்று பயமுறுத்தியும் வந்தனர்.

அறிஞர் சொற்களைக் கேட்காத அரசன் அழிந்து போ வான் என்ற நீதியையும் இளம் பருவத்திலேயே மன்னர்களின் உள்ளத்திலே ஊன்றி வைத்தனர். ஆதலால் அக்காலத்து அரசர்கள் அவ்வப்போது அறிஞர்கள் காட்டும் நெறியிலே நின்று செங்கோலாச்சி வந்தனர்.

அரசர்கள் தவறு செய்த காலத்தில் அவர்களுக்குப் புலவர் களால் எடுத்துரைக்கப்பட்ட அறிவுரைகள் பல, அவை இன்று நீதிநூல்களாகவும் அறிவுரைகளாகவும் திகழ்கின்றன. அக் காலத்திலே தனிப்பட்ட மன்னர்களுக்குக் கூறிய அறிவுரைகள் இக்காலத்திலே மக்களின் பிரதிநிதியாக இருந்தது ஆளுவோர்க்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். இதற்கு ஒரு உதாரணம் கீழ்வரும் வரலாறாகும்.

பாண்டியன் அறிவுடை நம்பி என்பவன், அறிவுள்ளவன் தான். அவனிடம் அறிவும் இருந்தது; அழகும் இருந்தது. நம்பி என்பது எல்லா அழகும் பொருந்தியவனையே குறிக்கும். இப் பாண்டியன் அழகோடு அறிவும் நிரம்பியிருந்தான்.

இவன் தீயோர் சேர்க்கை காரணமாகக் குணங்கெட்டான்; தன் அரசக் கடமையை மறந்தான்; தனது இன்ப வாழ்வை மட்டும் எண்ணினான். ஆதலால் குடிகளிடம், அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக வரிகளைத் தண்டினான். குடிகளும் மன்னன் சொல்லுக்கு மறுசொல்லுரைக்காமல் மனவேதனை யோடு தாங்கமுடியாத வரிச்சுமையால் தள்ளாடினார்கள். அரசனுடைய கொடுமைக்கு ஆதரவாயிருந்த அதிகாரவர்க்க மும் அட்டகாசம் புரிந்து வந்தது. இந்தக் கொடுமைகளைக் தாங்கமுடியாமல் பரிதவித்தனர் பாண்டிய நாட்டுக் குடிமக்கள்.

இந்நிலையைக் கண்டு ஏக்கமடைந்தார் ஆந்தையார் என்னும் அருந்தமிழ்ப் புலவர். அவரும் பாண்டிய நாட்டுக் குடிகளிலே ஒருவர்தான். அவர் இருந்த ஊரின் பெயர் பிசிர் என்பது. ஆதலால் அவருக்குப் பிசிராந்தையார் என்று பெயர்.

மதியுள்ள மன்னன், மதியற்ற நெறியிலே நடந்து வருவது அவர் மனத்தைக் கலக்கிற்று. உடனே புறப்பட்டு மன்னனிடம் வந்தார். அவன் உள்ளத்திலே இடித்து நல்லுரை கூறினார். அவர் அவனுக்கு நவின்ற நல்லுரை ஒரு செய்யுள் உருவாக இன்றும் நின்று நிலவுகின்றது. அந்தப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறிய அறிவுரையைப் பார்ப்போம்.

நிலத்திலே நெல் விளைந்து கதிர்கள் முற்றிக் காய்த்திருக் கின்றன. அந்த நிலம் பரந்த நிலமும் அன்று; ஒரு மாவுக்குக் குறைந்த அளவுள்ள நிலம்தான். ஆயினும் அந்நிலத்தில் உள்ள கதிர்களைச் சேதமில்லாமல் சிறிது சிறிதாக அறுத்துக் கொண்டு வந்து உணவாகக் கொண்டால் பல நாட்கள் உணவாகக் கொள்ளலாம். நூறு வயல்களிலே நெற்பயிர் விளைந்திருக்கின்றது; நன்றாக விளைந்திருக்கின்றது. அவ்வயல்களிலே ஒரு யானை தனியாகப் புகுந்து அந்த நெற்கதிர்களை மேயத் தொடங்கினால் என்ன ஆகும்? அந்த யானையின் வாயிலே புகும் நெல்லை விட அதன் கால்களால் மிதியுண்டு சேதமடையும் நெல் ஏராள மாகும். யாருக்கும் பயன்படாமல் நூறு வயல்களிலே விளைந்த நெல்லும் பாழ்பட்டுப் போய் விடும். பாண்டியனே! இந்த உண்மை உனக்குத் தெரியாதது அன்று.

அறிவுள்ள ஓர் அரசன் மக்களிடம் வரி வாங்கும் முறை யை அறிந்து அறவழி கெடாமல் வாங்க வேண்டும். இம்முறை யிலே வரி தண்டினால், குடிகள் கோடிக்கணக்கான பொருளை மனங்கோணாமல் கொடுப்பார்கள். மக்கள் மகிழ்ச்சியோடு வரி கொடுக்கும் நாடும் மிகவும் சிறந்து விளங்கும்; வளம் பெருகும்.

அரசன் அறிவற்றவனானால், அளவுக்கு மேல் தகாத வழியில் வரி தண்டினால், அவனுடைய அதிகாரிகளும் ஒழுங் கீனமாக நடப்பார்கள். குடிகளின் தரமறியாமல் வற்புறுத்தி வரி வாங்குவார்கள். இவ்வாறு வரி வாங்குவதனால் குடிகளின் அன்பு அடியோடு அறுந்து போகும்படி வரி வாங்கி உண்டு உண்டு கொழுக்கும் அரசன் அழிந்து போவான்., யானை புகுந்த நெல்வயல்போலத் தானும் செல்வத்தை நுகரமாட்டான். பிறரும் செல்வத்தை அனுபவிக்கமாட்டார்கள். அவனால் ஆளப்படும் இந்த உலகமும் கெடும். என்று இவ்வாறு அறிவுரை கூறினார். இந்த அறிவுரை அமைந்த பாடல் கீழ்வருவது.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு வாயினும் தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு அதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன், ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே.

(புற. 184)

இச் செய்யுளிலே எடுத்துக் காட்டியிருக்கும் உவமானம் மிகவும் சிறந்தது. சேதமாகாமல் அறுக்கப்படும் சிறு வயலின் நெல் பலர்க்கும் பல நாட்களுக்கும் உணவாகும். நூற்றுக்கணக் கான வயல்களிலே விளைந்திருக்கும் நெல், யானை புகுந்தால் அதற்கும் பயன்படாது; பிறருக்கும் பயன்படாது பாழடையும். இது போலக் குறைவாக வரி வாங்கும் அரசு – குடிகள் தாங்கும் அளவுக்கு வரி விதித்து வாங்கும் அரசு – நிலைத்து வாழும்; குடிகள் தாங்கமுடியாத அளவுக்கு வரி விதிக்கும் அரசு வீழ்ந்து விடும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்தது இச்செய்யுள். இன்னும் இது உயிருடன் செழித்து நடமாடு கின்றது. இச்செய்யுளில் அமைந்திருக்கும் அறவுரையை இன்றும் அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முடிஅரசுக்கு உரைத்த இந்த நல்லுரை இன்றையக் குடியரசுக்கும் ஏற்றதாக இருக் கின்றது.

இந்த அரசியல்பற்றிய தமிழர் அருள்நெறி, என்றும் அழியாத செல்வம் என்பதில் ஐயம் இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !