சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

26. நட்புக்குத் தகுதியற்றவர்

கலித்தொகையிலே உள்ள பாலைக்கலிப் பாடல்கள் இனிமையானவை; படிக்கப் படிக்க உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றவை. அவைகள், தெவிட்டாத இன்பம் ஊற்றெ டுத்துச் சுவை தரும் செய்யுட்கள். இச் செய்யுட்கள் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியவை என்று சொல்லப்படுகின்றன.

பாலைக்கலிப் பாடல்களிலே பல சிறந்த நீதிகளைக் காணலாம். அரசியல் தர்மம்; சமூக தர்மம்; மக்கள் பண்பு; இவை களை விளக்கும் பல உண்மைகளைக் காணலாம்; உள்ளத்தைக் கவரும் உவமைகள் பலவற்றைக் காணலாம். இனிய நடை யினாலும், சிறந்த உவமைகளாலும் கலித்தொகை பாடல்களிலே பாலைக் கலிப் பாடல்களே சிறந்து நிற்கின்றன.

பாலைக்கலியின்சிறப்புக்கு-பெருங்கடுங்கோவின் புலமைக்கு – உதாரணமாக ஒரு பாடலை மட்டும் பார்ப்போம்;

தலைவன் பொருள் தேடப் புறப்படுகின்றான். அப்பொ ழுது தோழி அவனிடம் உரையாடுகின்றாள். நீ தலைவியை விட்டுப் பிரிந்துபோகாதே என்று சொல்லுகின்றாள். இவ்வாறு அமைந்த பாடல் ஒன்று. இது கலித்தொகையின் 24-வது பாட்டு.

தோழி தலைவனைப் பார்த்து, நீ அற்பரைப்போல, அறிவற்றவரைப்போல, பெருமையற்றவரைப்போலத் தலைவியை விட்டுப் பிரிந்துபோகாதே என்று சொல்லுகின்றாள். இப்படிச் சொல்லுகின்ற தோழியின் கூற்றிலே, அற்பர்கள் யார்? அறிவற்றார் யார்? பெருமையற்றார் யார்? என்பதை விளக்க மாகக் காணலாம்.

இன்னார்தான் அற்பர் என்று தெளிவாகச் சொல்லி யிருப்பது, இன்னார்தான் அறிவற்றவர் என்று விளக்கிக் கூறியிருப்பது, இன்னார்தான் பெருமையற்றவர் என்று விரித் துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவைகள் நம் உள்ளத்திலே படியும்படி நீங்காமல் ஒட்டிக்கொள்ளும்படி அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகள் படிப்போர், கேட்போர் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திலே கொள்ள வேண்டிய அறிவுரைகளாக, அருள் நெறியாக, நீதி மொழிகளாக அமைந் திருக்கின்றன.

வெறுக்கத்தக்க குணம் படைத்த மக்களிலே பல வகையினர் உண்டு: வெறுக்கத்தக்க குணம் படைத்தவர்கள் நட்புக்குத் தகுதியற்றவர்கள். சில மனிதர்கள் செய்கை மிகவும் வெறுக்கத்தக்கது; அவர்கள் ஒருவர் தம் பக்கத்தில் இருக்கும் போது, அவருடைய குறைகளை எடுத்துச் சொல்ல மாட்டார்கள்; அவர்களைப் போற்றி உபசரிப்பார்கள்; புகழ்ந்து கொண்டாடு வார்கள்; உங்களைப்போல் உத்தமர்கள் உலகில் ஒருவருமே இல்லையென்று எதிரிலேயே புகழ்வார்கள். அவர்கள் அவ் விடத்தை விட்டுப் போனவுடன் அவர்களைப் பற்றிப் பிறரிடம் குறை கூறுவார்கள்; அவர்களிடம் இல்லாத குற்றங்களைக்கூட இருப்பதாகக் சொல்லி வசைபாடுவார்கள். இது சிலருடைய இயற்கைக் குணமாக இருக்கும். இத்தகைய வர்கள் மிகவும் அற்பமானவர்கள்; விரும்பத் தகாதவர்கள்; நட்புக்கு தகுதி யற்றவர்கள்.இவ்வாறு அற்பர்களின் இயல்பை விளக்கமாகக் கூறியுள்ளார்.

சிறப்புச்செய்து உழையராய்ப்புகழ்போற்றி,
மற்றுஅவர்புறக்கொடையே பழிதூற்றும்புல்லியார்

இவ்வடிகள் அற்பர்கள் யார் என்பதை விளக்கின. ஒருவரை எதிரில் புகழ்ந்துவிட்டு, அவர் இல்லாதபோது இகழ்வோரே – புறம் பேசுவோரே – அற்பர் என்று இவ்வடி களால் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதன்பின் அறிவற்றவர்கள் யார் என்பதை விளக்கிச் சொல்லுகின்றார். ஒருவருடைய படிப்பைக் கொண்டோ, பட்டங்களைக் கொண்டோ அவரை அறிவுள்ளவர் என்று தீர்மானித்துவிட முடியாது. அவருடைய நடத்தையைக் கொண்டு தான், செய்கையைக் கொண்டு தான் அவரை அறிவுள்ளவர் அல்லது அறிவற்றவர் என்று தீர்மானிக்க வேண்டும். ஒருவருடைய நடத்தையே – பண்பே – ஒழுக்கமே – அவருடைய அறிவின் தன்மையை வெளியிடுவதாகும்; இதுவே ஒருவருடைய அறிவை அளந்து காணும் கருவியாகும். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, பெருங்கடுங்கோ சொல்வதை நாம் காண வேண்டும்.

சில மனிதர்கள், பிறர் நல்ல செல்வத்துடன் வாழும் போது அவர்களிடம் சேர்ந்து வாழ்வார்கள்; அவர்களுடைய உயிர் நண்பரைப் போல நடிப்பார்கள்; அவர்கள் விரும்பியபடி யெல்லாம் ஆடுவார்கள். கண்டவர்கள், இவரைப்போல உத்தம நண்பர் – உள்ளன்புடைய சினேகிதர் உண்டா? என்று சொல்லும்படி இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்து, செல்வர்களிடம் பிடுங்கித் தின்பார்கள். வேண்டியமட்டும் அவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை யடிப்பார்கள். அந்தச் செல்வர் வறியவர் ஆகி விட்டால் – தமது செல்வத்தை இழந்து விட்டால் – அவ்வளவு தான்; அதன்பின் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். அவருக்கு உதவி செய்யக்கூடிய சக்தி தனக்கிருந்தாலும் கூட இம்மி அளவும் உதவமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும் மனம் இரங்கமாட்டார்கள். இதற்கு முன் நமக்கு ஏராளமாக உதவி செய்தவர்கள் ஆயிற்றே. அவர்கள் செல்வத்தை நாம் ஏராளமாக அனுபவித்தோமே என்று கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். இவர்கள்தான் அறிவற்றவர்கள் என்று கூறியிருக் கின்றார்.

செல்வத்துள் சேர்ந்துஅவர்வளன் உண்டு,
மற்றவர்ஒல்கிடத்து உலப்புஇலாஉணர்விலார்

என்ற அடிகளால் மேற்கூறிய பொருளைக் காணலாம்.

தனக்கு உதவி செய்தவர் வறுமையால் வாடும் போது அவர்க்கு உதவி செய்யாதவர் அறிவற்றவர் என்று இவ்வாறு தெளிவாக எடுத்துக்கூறினார் பெருங் கடுங்கோ.

அடுத்தபடி, பெருமை அற்றவர்கள் யார் என்று கூறியிருப் பதைக் காண்போம்.

சிலர் உண்மையான நண்பர்களைப்போல நடிப்பார்கள். நண்பர்களிடமுள்ள இரகசியங்களையெல்லாம் தெரிந்து கொள்ளுவார்கள். நண்பர்களுடைய இரகசியங்களைப் பிறர் அறிய உரைப்பது, தூற்றுவது நட்புக்குத் துரோகமாகும் என்பதை உணரமாட்டார்கள். நண்பர்கள் பிரிந்தவுடன் – அல்லது நண்பர்களை விட்டுப் பிரிந்தவுடன் அல்லது ஏதோ காரணத்தால் நட்பு விட்டுப் போனபின் – அவர்களிடம் தாம் தெரிந்து கொண்ட இரகசியங்களைப் பிறரிடம் – அவர்க ளுடைய விரோதிகளிடம் வெளியிடுகின்றவர்கள் சிறிதும் பெருந்தன்மையில்லாதவர்கள்; பெருமை அற்றவர்கள். இதனை,

பொருந்திய கேண்மையின்மறைஉணர்ந்து,
அம்மறைபிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும்பீடுஇலார்

என்ற அடிகளால் அறியலாம். நண்பர்களின் இரகசியத் தைப் பிறரிடம் வெளியிடுவோர் பெருமையற்றவர்; பெருந் தன்மை அதாவது மனிதத்தன்மை இல்லாதவர் என்பதை இவ்வாறு தெளிவாகக் கூறினார்.

மேலே காட்டியவற்றால், அற்பர்கள், அறிவற்றவர்கள், பெருமையற்றவர்கள் யார் என்பதைக் காணலாம்.

புறம்பேசுவோர் அற்பர்கள்; ஒருவரிடம் செல்வம் உள்ள போது அவரைச் சுரண்டிச் சாப்பிட்டுவிட்டு, அவர் செல்வ மற்று வருந்தும்போது உதவாதவர்கள் அறிவற்றவர்கள்; நண்பர் களின் இரகசியங்களைப் பிறரிடம் சொல்லித் தூற்றுவோர் பெருமையற்றவர்கள்; என்று இவ்வாறு மூவரைப் பற்றியும் விளக்கியுரைத்தார் பாலைபாடிய பெருங்கடுங்கோ.

மனிதர்கள் அற்பத்தன்மையில்லாமல் வாழ வேண்டும்; அறிவற்ற தன்மையில்லாமல் வாழவேண்டும்; பெருந்தன்மை யுடன் வாழவேண்டும்; என்பதற்காகவே அகத்திணைப் பாடலிலே இப் புறத்திணையாகிய அறம் கூறப்பட்டது. இவ்வாறு கூறுவதே பண்டைத் தமிழர்களின் அருள்நெறியாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !