சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

13. ஒற்றுமையே உயர்ந்த பண்பு

ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; இன்றேல் தாழ்வு தான். எல்லாத் துறையிலும் வெற்றிக்கு வழிகாட்டும் வெளிச்சம் ஒற்றுமைதான்; ஒருவர்க்கொருவர் முரண்பட்டுப் பகைமை பாராட்டும் கும்பலால் எந்தச் செயலையும் முற்றுப்பெற நிறைவேற்ற முடியாது. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை சின்னாபின்னமாகச் சிதைந்துதான் போகும்.

ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த அலுவலகத்தின் பொறுப்பாளருக்கும், அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஒற்றுமையிருக்க வேண்டும். ஊழியர்களும் தங்களுக்குள் வம்பு தும்புகள் இன்றித் தங்கள் கடமையைச் செய்துவர வேண்டும். அப்பொழுது தான் அந்த அலுவலகத்தின் வேலை தாமதமில்லாமல் நடைபெறும்; அலுவலகத்தின் நோக்கமும் நிறைவேறும். முரண்பட்ட கருத்துக்களின் காரண மாக ஒருவரோடு ஒருவர் சண்டைபிடித்துக் கொண்டிருக்கிற அலுவலகங்களிலே சரியாக வேலைகள் நடைபெற மாட்டா.

ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையில்லாவிட்டால் அந்தப் பள்ளிக்கூடம் குட்டிச்சுவர் தான். அவ்வாசிரியர்கள் பாடஞ் சொல்லிக் கொடுப்பதிலே போதுமான கருத்தைச் செலுத்த மாட்டார்கள்; தங்களுடைய வம்புகளிலேதான் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பார்கள்.

இதைப் போலவே மாணவர்களிடம் ஒற்றுமையில்லா விட்டால் அவர்கள் சரியாகப் பாடம் படிக்கமாட்டார்கள். பாடங்களைப் பற்றி – படித்தவற்றைப் பற்றி – ஒருவரோடு ஒருவர் அளவளாவ மாட்டார்கள்; தங்களுக்குள் கட்சி கட்டிக் கொண்டு சண்டை பிடித்துக்கொள்வதில்தான் காலம் போக்குவார்கள்.

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர் களிடமும் ஒற்றுமை வேண்டும். அவர்களிடம் ஒற்றுமை இல்லா விட்டால் பேராசை கொண்ட முதலாளிகள் அவர்கள் தலையிலே மிளகாய் அரைத்துவிடுவார்கள். தொழிலாளிகள் முன்னேறவே முடியாது; தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளவே முடியாது.

ஒருநாட்டு மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றிச் சண்டை யிட்டுக் கொண்டிருப்பார்களாயின் சுயநலக்காரர்கள் அவர்களைச் சும்மா விட்டுவிட மாட்டார்கள்; அவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களிடமிருந்து எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவும் சுரண்டிக் கொண்டிருப்பார்கள். தங்களுக்குள் சாதி, மதம், இனம், மொழி காரணமாகச் சண்டையிட்டுக் கொண்டி ருக்கும் மக்கள் சுதந்தரமாக வாழமுடியாது. பிறர் பூட்டாமலே, தாங்களாகவே அடிமை விலங்கை மாட்டிக்கொண்டு துன்பப் படுகுழியிலே வீழ்ந்து தவிப்பார்கள்.

ஒரு நாட்டுக்கும், அதன் பக்கத்து நாட்டுக்கும் ஒற்றுமை யில்லாவிட்டால் ஆபத்துதான். சமாதானம் குலையும். சண்டைக்கு விதை போடப்படும். சண்டை நேர்ந்தால் அதனால் பெரும் பாதகம் ஏற்படும். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் ஏற்பட்ட சண்டையாக வளர்ந்து உருவெடுத்துவிடும்.

இதைப் போலவேதான் குடும்ப நிலையும். குடும்பம் என்பது ஒரு இருசக்கர வண்டி. அந்த வண்டியின் இரு சக்கரங்கள் கணவனும் மனைவியும். அக் கணவன் மனைவியிருவரும் நாயும் பூனையுமாக வாழ்ந்தால் அவர்கள் குடும்பக் காரியங்களைச் சரிவர நிறைவேற்ற மாட்டார்கள். கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கூட நல்ல முறையிலே வளர முடியாது; அக் குழந்தைகளிடம் நல்ல பண்புகள்கூட வளராமல் தேய்ந்து விடும்.

குடித்தனமோ துரைத்தனமோ என்பது ஒரு பழமொழி. இது இன்னும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. தன் குடும்பத்தைக் கண்ணியமாக நடத்தத் தெரிந்தவன் தான் அரசி யலையும் நடத்த முடியும். தன் குடும்பத்தைத் திறமையுடன், ஒற்றுமையுடன் நடத்தத் தெரியாதவன், தான் மேற்கொண்ட எந்த அலுவலையும் நன்றாக நிறைவேற்ற மாட்டான்.

ஒரு நாடு என்பது பல சமூகங்களைக் கொண்டது. ஒவ்வொரு சமூகமும் தனித்தனிக் குடும்பங்களைக் கொண்டது. பல குடும்பங்களைக் கொண்டது ஒரு சமூகம். பல சமூகங்களைக் கொண்டது ஒரு சமுதாயம். இந்தச் சமுதாயமே ஒரு தேசத்தின் உயிர்நாடி. ஆகவே ஒவ்வொரு குடும்பத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும்; ஒற்றுமை நிலவினால்தான் சமூகமும், சமுதாயமும், நாடும் நன்றாக வாழமுடியும்; இதுவே பண்டைத் தமிழர்களின் கருத்து. இக் கருத்தை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

பேகன் என்பவன் ஒரு கொடைவள்ளல். யார் துன்பப் பட்டாலும் அதைக் காண அவனால் முடியாது. உடனே அவர்கள் துன்பத்தைக் களைய முற்படுவான். இவன்தான் மயிலுக்குப் போர்வை தந்தவன். இவன் மனைவியின் பெயர் கண்ணகி என்பது. அவள் கணவனே தெய்வமெனக் கொண்ட கற்புடையவள்.

எந்தக் காரணத்தாலோ, பேகனுக்கும் அவன் மனைவிக்கும் பிணக்கு ஏற்பட்டது. அப்பிணக்கு வளர்ந்து விட்டது. தன் மனைவியை அவள் தாய்வீட்டுக்கு அனுப்பி விடும் அளவுக்குப் பிணக்கும் பிளவும் வளர்ந்துவிட்டன. பேகன் தன் மனைவியை – கண்ணகியை – அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான்.

கண்ணகி தாய்வீட்டுக்குச் சென்றதுமுதல் துக்கமே உருவாகிவிட்டாள். கட்டின சேலையோடு கண் கலங்கி நின்றாள். குளித்தல், உண்ணல், உடுத்தல் எல்லாவற்றையும் இழந்தாள். ஏங்கிப் பெருமூச்சு விடுவதே அவள் வாழ்க்கையாகிவிட்டது.

பேகன் இருக்கும் இடத்திற்கு வரும் வழியில்தான் கண்ணகியின் தாய்வீடு. பேகனைத் தேடிவரும் புலவர்கள் அந்த வீட்டிலே இளைப்பாறி வருவது வழக்கம். கண்ணகியின் கோலத் தைக் கண்ட புலவர்கள் அத்தனை பேரும் அவளிடம் அநுதாபம் கொண்டனர். அவர்கள் பேகனிடம் வந்து அவன் கொடுக்கும் பரிசிலை ஏற்றுக் கொள்வதில்லை. உன் கற்புக்கரசியின் கவலையைக் களைவதுதான் நீ எமக்களிக்கும் பரிசு என்று பாடிவிட்டுத் திரும்பிவிடுவார்கள்.

பேகன் தன் மனைவியைப் பிரிந்திருக்கும் வரையிலும் அவனிடம் எந்தப் புலவர்களும் பரிசு பெறவேயில்லை. பேகன் ஒரு சிற்றரசன்; சிறந்த கொடையாளி. அவன் குடும்பத்தில் பிளவிருந்தால் அவன் மனத்திலே அமைதியிருக்க முடியாது. உள்ளத்திலே அமைதியற்றவன் ஒன்றையும் ஒழுங்காகச் செய்து முடிக்கமாட்டான். அமைதியின்மை காரணமாக அவசரப் பட்டுத் தவறு செய்தாலும் செய்துவிடுவான். இவ்வுண்மை புலவர் களுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் அவர்கள் பேகனுடைய குடும்பத்திலே சமாதானம் – ஒற்றுமை – ஏற்படுத்தவே பாடுபட்டு வந்தனர்.

புலவர்களுடைய முயற்சியாலும் அறிவுரையாலும் பேகன் தன் மனைவியின் மீது கொண்டிருந்த வெறுப்பை கைவிட்டான். அவளை அன்புடன் அழைத்து வந்து ஒருமனப்பட்டு வாழ்ந் தான். வழக்கம்போல புலவர்கள் போற்றப் புகழுடன் வாழ்ந்தான். இது ஒரு உண்மை நிகழ்ச்சி. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தமிழ்மக்களின் குடும்பங்களிலே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதிலே எவ்வளவு கவலை கொண்டிருந்தனர் என்பதை இந்நிகழ்ச்சி விளக்கி நிற்கின்றது. இதற்கு ஆதரவான ஒரு செய்யுளை மட்டும் காண்போம்.

அன்ன ஆகநின் அரும்கல வெறுக்கை!
அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புலம்
நன்னொடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை ஆயின், குரிசில்நீ!
நல்காமையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்நின் திருந்துஇழை அரிவை
கலிமயில் கலாவம் கால்குவித்து அன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே.

(புற. 146)

இது அச் செய்யுள். இது அரிசில் கிழார் என்னும் புலவரால் பாடப்பட்டது.

நீ கொடுக்கும் பரிசில் அப்படியே இருக்கட்டும். நீ கொடுக்கின்ற சிறந்த ஆபரணங்களையும், செல்வங்களையும் நாம் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. போரிலே பகைவர் களைக் கொல்லும் பேகனே! சிறிய யாழை நல்ல சுதியுடன் நிற்கும் படி செய்து வாசித்தேன்; உனது வலிய நிலமாகிய நல்ல மலைநாட்டைப் புகழ்ந்து பாடி வந்தேன். இப்படி வந்த என்னை நீயும் அன்புடன் வரவேற்றாய்; நல்ல பரிசில்களைத் தர விரும் பினாய். உண்மையாகவே நீ என்னிடம் இரக்கமும் அன்பும் கொண்டவனாக இருந்தால் எனது வேண்டுகோள் ஒன்றுண்டு; அதை நிறைவேற்ற வேண்டும்.

பெருமைக்கு உரியவனே! நீ அருள் செய்யாமையால் உன் கற்பரசி வருந்திக் கிடக்கின்றாள்; கண்டோர் மனம் வருந்தும்படி சோர்ந்து கிடக்கின்றாள்; சிறந்த ஆபரணங்களை அணிந்த நினது இல்லாள் பெருந்துயரால் வருந்துகின்றாள். அவள் குளித்து நீராடவில்லை; கூந்தலைச் சீவி முடிக்கவில்லை; உண்ண வில்லை; உறங்கவும் இல்லை. ஆதலால் தழைத்த மயில் பீலியை ஒன்றாகச் சேர்த்து வைத்தது போன்ற செழித்த மெல்லிய அவள் கூந்தல் வாசனைப் புகையைப் பெறவில்லை. அக்கூந்தல் நல்ல வாசனைப் புகையைப் பெற்று, குளிர்ந்த மணம் கமழும் மலர் மாலையையும் சூடும்படி செய்யவேண்டும். அதன் பொருட்டு மிக விரைந்து செல்லும் உன்னுடைய பெரிய தேரிலே உன் குதிரைகள் பூட்டப்பட வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்.

இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். அரிசில் கிழாரின் இச்செய்யுள், அக்காலப் புலவர்களின் அருள் உள்ளத்தை – இரக்க மனத்தைக் காட்டுவதாகும். நாட்டிலே வாழும் நல்லவர்களின் குடும்ப வாழ்வும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் குடும்பத்திலே ஒற்றுமை நிலவ வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் நாட்டுக்கு நலம் புரிவார்கள் என்ற கருத்துடன் இரு.ந்தனர். அதற்காகத் தம்மால் இயன்ற வரையிலும் பாடுபட்டனர்; முயன்றனர். இவ்வுண்மை யையே இப்பாடல் நமக்கு அறிவிக்கின்றது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !