
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
18. அறநெறி வாழ்வு
பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் சேரமன்னர் பரம்பரையைச் சேர்ந்தவராக எண்ணப்படுகிறார். இவர் பாலைத் திணையைப் பற்றிப் பாடுவதிலே வல்லவர். இவருடைய பாடல்கள் பெரும் பாலும் பாலைத்திணையைப் பற்றிக் கூறுவதாகவே அமைந் திருக்கின்றன.
வளமற்ற வறண்ட நிலமே பாலைநிலம். அந்த நிலத்தைப் பற்றியும், அதில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் பாடுவ தென்றால் அது சிறந்த கற்பனை உள்ளம் படைத்தவர்களால் தான் முடியும். இவர் எவற்றையும் உற்று நோக்கும் இயல்பு படைத்தவர்; கற்பனா சக்தி மிகுந்தவர். ஆதலால்தான் பாலையைப் பற்றிப் பாடும் ஆற்றல் பெற்றுள்ளார். இவர் பெயருக்கு அடை மொழியாக – சிறப்பு மொழியாக – பாலை பாடிய என்னும் பட்டம் பெற்று விளங்குகின்றார்.
இவருடைய பாடல்கள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு முதலிய தொகை நூல்களிலே காணப்படுகின்றன. இவர் தாம் சொல்லத் தொடங்கிய பொருளை உவமை கூறி விளக்குவதிலே வல்லவர்; சிறந்த கருத்துக்களை – நீதிகளை – அறங்களை – அழகாகவும் விளக்கமாகவும் சொல்லுவார். பிறர் நன்மைக்காக வாழ்வதே மனித வாழ்வாகும் என்ற கருத்துள்ளவர். இவருடைய உயர்ந்த கருத்துக்கள் – அறவுரைகள் – சிலவற்றைக் காண்போம்.
ஆண்கள் ஒரு காரியமும் செய்யாமல் சோம்பிக் கிடத்தல் கூடாது; சுறுசுறுப்புடன் எதையாவது நல்ல காரியங்களைச் செய்து கொண்டேயிருக்கவேண்டும்; செய்யும் தொழில் பயனற்ற வீண் செயலாக இருத்தல் கூடாது; நல்ல பயன் தரத்தக்க தொழிலாக இருக்க வேண்டும்; அது பழிபாவத்திற்கு இடமான தொழிலாக இருக்ககூடாது; அவற்றிலிருந்து விலகி நிற்கும் செயலாக இருக்க வேண்டும்.
ஒன்றும் செய்யாமல் சும்மா சோம்பித் திரிகின்ற – கிடக்கின்ற – வாழ்கின்ற – ஆண்மக்கள் உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் உண்ணலாம்; உறங்கலாம்; உலவலாம்; வீண் வம்புப் பேச்சுக்கள் பல பேசலாம்; ஆயினும் அவர்கள் உயிருள்ள மக்களாகமாட்டார்கள்; நடைப் பிணங்களாகத்தான் கருதப் படுவார்கள்.
இவ்வுலகில் இன்பம் அடைவதற்கான பொருள் சும்மா வந்துவிடாது. ஏதேனும் தொழில் முயற்சியில் ஈடுபட்டால்தான் பொருள் சேர்க்க முடியும்; பொருள் சேர்த்தால்தான் அப்பொரு ளால் அறம் புரிய முடியும்; இன்பம் நுகரவும் இயலும். அறத் துக்கும், இன்பத்துக்கும் பொருளே – செல்வமே – அடிப்படை யாகும். ஆதலால், வினையை – தொழிலை – காரியம் செய்வதை – உயிராகக் கொண்டிருப்பவர்கள் தாம் ஆண்மக்கள் ஆவார்கள்; ஆண் தன்மையுள்ளவர்கள் ஆவார்கள்; உள்ளத்திலே ஊக்கம் உள்ளவரையில் – உடலிலே வலுவுள்ளவரையில் – உழைப்பது, பிறருக்கு உதவுவது, தாமும் இன்புறுவது ஆடவர் கடமை யாகும்.
இல்லத்திலே வாழும் மனைவிகளின் கடமை – பெண் களின் கடமை – தம் கணவர்களைப் போற்றுவதே யாகும். தம்முடைய உயிர் தம் கணவரைத் தவிர வேறில்லை என்று கருதுவதேயாகும். கணவர் வாழ்வு போய்விட்டால் தமது வாழ்வும் போய்விட்டது; அதன்பின் தமக்கு வாழ்வில்லை; என்று கருதுவதாகும்.
நல்ல மனைவியின் கடமை கணவன் மனங்கோணாமல் நடப்பதுதான். வெளியிலே சென்று வேலைபார்த்துத் திரும்பும் கணவனுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்; அவன் உள்ளத்திலே ஒரு கவலையும் தோன்றாதபடி நடந்து கொள்ள வேண்டும். அவன் உடல்நலத்தைப் பாதுகாக்கத் தக்க நல்ல உணவை ஆக்கி அளிக்க வேண்டும்.
சிறந்த மனைவிமார்கள் – இல்லறத்திலே பற்றுள்ள மனைவிமார்கள் – குடும்பம் வளர்ந்து தழைக்க வேண்டும் என்னும் பற்றுள்ள மனைவிமார்கள் – தம்முடைய இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணவே மாட்டார்கள்; பொருட் படுத்தவே மாட்டார்கள். தம் கணவர்களின் மனத்திலே மகிழ்ச்சி பொங்கும்படி நடந்து கொள்ளுவார்கள்; அவர்களின் நாவுக்குச் சுவையும், உடலுக்கு உரமும் தரக்கூடிய நல்ல உணவு வகைகளைத் தேடிச் சமைத்து ஊட்டுவார்கள் தம் கணவரை உயிரென நேசிக்கும் மனைவிமார்களின் முதல் கடமை இதுதான்.
முயற்சி – உற்சாகம் – உள்ள கணவன், அன்பு நிறைந்த மனைவி இவர்கள் நடத்தும் இல்லறம் சிறந்து விளங்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆதலால் இத்தகைய ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழும் வாழ்வே சிறந்த இல்லற வாழ்வாகும்; நல்ல குடும்ப வாழ்வாகும். இவர்களே பிறர்க்கு நன்மை செய்யும் உத்தம குடும்பமாக – தம்பதிகளாக விளங்குவார்கள்.
ஒரு குறுந்தொகைப் பாடலிலே இத்தகைய உயர்ந்த கருத்துக்களை அமைத்துப் பாடியிருக்கிறார் பெருங் கடுங்கோ
வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்மனை
உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்; எனநமக்குஉரைத் தோரும் தாமே;
அழாஅல்தோழி! அழுங்குவர் செலவே.
(குறுந். 135)
இதுவே அந்தக் குறுந்தொகைப் பாட்டு. நான்கே அடிகளைக் கொண்ட இக் குறுந்தொகைச் செய்யுளிலே மேலே எடுத்துக்காட்டிய சிறந்த பொருள் அமைந்து கிடப்பதைக் காணலாம்.
கணவன் பொருள் தேடும்பொருட்டு வெளியூருக்குச் செல்லத் துணிந்தான். அதை அறிந்தாள் தலைவி; காதலி. அவள், காதலன் பிரிந்து சென்றால், நாம் தனித்திருக்க வேண்டுமே! அவர் இல்லாமல் எப்படித் தனித்திருந்து வாழ்வது? என்று நினைத்து வருந்தினாள். அப்பொழுது அவளுடைய தோழி அவளுக்குச் சொல்லிய சமாதானமாக – ஆறுதல் மொழியாக – அமைந்திருப்பது இச்செய்யுள்.
தொழில் தான் ஆண்களுக்கு உயிராகும்; வீட்டிலே வாழ்கின்ற ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண்களுக்கு ஆண்களே உயிர் ஆவர். இவ்வாறு நமக்கு நீதியைச் சொல்லி யவர் அவர்தான். ஆதலால் தோழியே! நீ அழ வேண்டாம். அவர் நம்மை விட்டுப் பிரிந்து போக மாட்டார். போனாலும் விரைவில் வந்து நமக்கு மகிழ்ச்சியூட்டுவார். இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருளாகும்.
இவ்வாசிரியர் – இப்புலவர் – மற்றொரு செய்யுளில் கூறியிருக்கும் அறமும் குறிப்பிடத்தக்கது. அச்செய்யுளில், பொருளீட்டுவதும், வறியோர்க்கு உதவுவதுந்தான் ஆடவர் கடமை என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.
மெல்இயல் அரிவைநின் நல்அகம் புலம்பநின்துறந்து அமைகுவென் ஆயின், என்துறந்துஇரவலர் வாரா வைகல்பலஆகுக; யான் செலவுறு தகவே.
(குறுந். 137)
இதுவே அந்தச் செய்யுள். மெல்லிய தன்மையுள்ள அரிவை! உன்னுடைய நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்தும்படி நான் உன்னை விட்டுப் பிரிந்து செல்லமாட்டேன். சென்றாலும், சென்ற இடத்திலேயே தங்கிவிட மாட்டேன். அப்படித் தங்கி விடுவேனாயின் இரவலர்கள் யாரும் என்னை வெறுப்பார் களாக! என்னிடம் வாராமல் ஒழிவார்களாக! இப்படியே பல நாட்கள் கழிவதாக! என்பதே இப்பாடலின் பொருள்.
இச்செய்யுள் ஆடவர் கடமையை வலியுறுத்துவதைக் காணலாம். பொருளீட்டுவதும், ஈட்டிய பொருளால் இல்லாத வர்களுக்கு உதவி செய்வதுமே ஆண்மக்கள் கடமையாகும். ஆண்கள் இக்கடமையைச் செய்வார்களானால் மனித சமுதாயம் உயர்ந்து வாழும்; எல்லா நன்மைகளையும் பெற்று இன்பத்துடன் வாழும். இதில் ஐயம் இல்லை.
தலைவியை முதல்முதல் சந்தித்துக் காதல்கொண்டு கலந்து மகிழ்ந்த தலைவன் அவளை விட்டுப் பிரியும்போது சொல்லிய உறுதிமொழி இது.
மேலே காட்டிய குறுந்தொகைப் பாடல்கள் இரண்டும் பழந்தமிழ் மக்களின் அருள்நெறியை உணர்த்தின. ஆடவரும், பெண்டிரும் கணவன் மனைவிகளாய் ஒன்றுபட்டு வாழ்வது இல்லறம்; அவர்கள் தந்நலத்தை மட்டும் பேணாமல், பிறர்நலம் பேணும் பண்புள்ளவர்களாய் வாழ்வதே அருள்நெறியாகும்; இப்படி வாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும். இவ்வுண்மை களையே மேலேகாட்டிய குறுந்தொகைப் பாடல்கள் இரண்டும் – பாலைபாடிய பெருங்கடுங்கோவின் செய்யுட்கள் இரண்டும் எடுத்துக்காட்டின.



