
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
21. உழவரும் வணிகரும்
தேசம் என்பதை ஒரு வண்டியாக வைத்துக் கொண்டால், அதற்கு உழவரும், வணிகரும் இரண்டு உருளைகள் ஆவார்கள். அல்லது அவ்வண்டியை இழுத்துச் செல்லும் இரண்டு எருதுகள் என்று சொன்னாலும் பொருந்தும். இந்த இரண்டு இனத்தினரும் நல்வாழ்வு வாழவேண்டும்; நேர்மையாக நடக்கவேண்டும்; தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். இவர்கள் ஒழுங்கு தவறினால் – தங்கள் கடமையை அலட்சியம் செய்தால் – அவர்கள் வாழும் நாடு பாழ்படும்; அந்த நாட்டு மக்களின் வாழ்விலே இன்பமோ, மகிழ்ச்சியோ, ஒழுக்கமோ, கட்டுப் பாடோ, ஒற்றுமையோ,உற்சாகமோ எதுவும் இருக்க முடியாது.
நாட்டிலே உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர் களையெல்லாம் உழவர்கள் என்ற வரிசையிலே நிறுத்தி விடலாம். உற்பத்தி செய்த பண்டங்களை நாட்டு மக்கள் அனைவர்க்கும் கிடைக்கும்படி – அவர்கள் பெற்று அனுபவிக் கும்படி – விநியோகம் செய்பவர்களையெல்லாம் வணிகர்கள் என்ற வரிசையிலே வைத்து விடலாம். பண்டங்களை உற்பத்தி செய்பவர்களும், அவற்றைப் பங்கீடு செய்வோரும் ஒரு தேசத்தின் இரு கண்கள். இவர்கள் சரியாக இல்லாவிட்டால் அந்த நாடு உருப்படாது; வாழாது.
முதலில் உழவர்களை எடுத்துக்கொள்வோம். உழவர் என்னும் சொல், ஏரைப் பிடித்து உழுகின்றவர்கள் என்னும் பொருளுடையது. இது முதலில் நேரடியாக வயலில் – நிலத்தில்- ஏர் பிடித்து உழுகின்றவர்களையே குறித்தது. நாளடைவில் இச்சொல்லின் பொருள் விரிவடைந்தது. உழுகின்ற பலருக்குத் தலைமை தாங்கி, அவர்களை வேலை வாங்கி உணவுப் பண்டங் களை உற்பத்தி செய்கின்றவர்களையும் இச்சொல் குறித்தது. இதனால் உழவர்களில் உழுதுண்போர், உழுவித் துண்போர் என இரு பிரிவுகள் தோன்றின. இருவரும் உழவர்கள் என்றே வழங்கப் பட்டனர்.
உழுவித்துண்போர் நாளடைவில் வேளாளர் என்று குறிக்கப்பட்டனர். வேளாண்மை செய்பவர் வேளாளர்; வேளாண்மை முயற்சி. க்ருஷி என்னும் வடமொழிச் சொல்லும் இப்பொருளுடையதே. வேளாண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு உபகாரம் என்னும் பொருளும் உண்டு. உழுவித் துண்போரிலே பலர் பெரிய நிலக்கிழவர்களாயிருந்தனர்; குறுநில மன்னர்களாக வாழ்ந்தனர்; பெரிய கொடைவள்ளல் களாகவும் விளங்கினர். ஆதலால் அவர்கள் மக்களால் பாராட்டப்பட்டனர்; வேளாளர் என்ற சிறப்புப் பெயர் பெற்றனர்.
பண்டைத் தமிழகத்தில் வேளாளர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்தி வந்தனர்? எத்தகைய சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி வந்தனர்? அவர்கள் நாட்டுக்குச் செய்த நன்மைகள் யாவை? மக்களுக்குச் செய்த உதவி – உபகாரம் என்ன? இக்கேள்வி களுக்குப் பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் சரியான விடையளிக்கின்றார். அவ் விடையின் மூலம் வேளாளர் களின் பண்பை விளக்கியிருக்கின்றார்.
உழவுத்தொழில் செய்து வாழ்வோர் வேளாளர்கள். அவர்கள் கொலைத்தொழிலை அறியாதவர்கள்; அக் கொடுந் தொழிலை அடியோடு வெறுத்தவர்கள்; திருட்டுத் தொழிலை நெஞ்சத்தாலும் நினைக்காதவர்கள்; அவ்வெண் ணத்தை அடியோடு கடிந்தவர்கள்.
அவர்கள் தேவர்களைப் போற்றி வணங்குவார்கள். அவர்களுக்கு திருவிழாச் செய்வார்கள்; அவர்களுக்காக வேள்வி செய்து, வேள்விப் பலியை அர்ப்பணிப்பார்கள்.
நாட்டுக்கு – மக்களுக்கு – சிறந்த உணவூட்டும் நல்ல பசுக்களை வளர்ப்பார்கள்: காப்பார்கள்: உழவுக்கு உதவும் எருதுகளை பாதுகாப்பார்கள்.
அவர்கள் நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர் களுக்கு உதவுவார்கள்; இவர்களின் உதவியினால் அந்தணர்கள், சோற்றுக் கவலையின்றி, வேத விதிப்படி நடந்து புகழ் பெறுவார்கள்.
அவர்கள் தம்மிடம் வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பார்கள்; அவர்களுக்குப் பலகாரங்களைக் கொடுத்து உண்ணும்படி செய்வார்கள்; புதிதாகச் சமைத்த, பதமான உணவளிப்பார்கள்.
வேளாளர்கள் இத்தகைய சிறந்த செயல்களைச் செய் வார்கள்; புண்ணிய காரியங்களையே இடைவிடாமல் செய்து கொண்டிருப்பார்கள்; அவர்களும் நல்ல இன்ப வாழ்வில் வாழ்வார்கள். இவர்கள் உழுதொழிலால் வரும் செல்வம் ஒன்றையே விரும்பி வாழும் உழவர்கள்.
இச் செய்தி பட்டினப்பாலையில் காணப்படுவது.
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
நல்ஆ னொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியம், பசும்பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசைஉழவர்.
(பட்டினப் 199 – 205)
இவ்வடிகளே மேலேகூறிய பொருளமைந்த அடிகள்.
இவ்வடிகள் உழவர்களின் இயல்பையும், உழவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தின. இத்தகைய உழவர்கள் வாழும் நாட்டிலே பஞ்சம் ஏது? பிணியேது? இன்பம் கொழிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
அடுத்தபடி, வணிகர்களைப் பற்றிய பட்டினப்பாலை கூறுகின்றது. அவர்களுடைய நேர்மையைப் பற்றியும், பண்பைப் பற்றியும், நடத்தையைப் பற்றியும் உருத்திரங் கண்ணனார் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வணிகர்கள் நடுநிலை தவறாதவர்கள்; நீண்ட நுகத்தடியின் நடுவிலே உள்ள ஆணி போன்றவர்கள். அந்த ஆணி, நுகத்தடி யின் இரு முனைகளும் ஏற்றத் தாழ்வின்றிச் சமமாக நிற்கும்படி செய்யும். அதுபோல் இவர்கள் எவரிடமும் பட்சபாதம் காட்ட மாட்டார்கள்; விருப்பு வெறுப்பின்றி நடந்து கொள்ளுவார்கள். அவர்களுடைய மனம் எல்லோரையும் சமமாகவே நினைக்கும். பழிக்கு அஞ்சுவார்கள்; உண்மையையே உரைப்பார்கள்; தம்முடைய பொருள் வேறு, பிறர்பொருள் வேறு என்று எண்ணமாட்டார்கள்; தாம் கொடுக்கும் பண்டத்துக்கு அதிக விலை வாங்கமாட்டார்கள். தாம் கொடுக்கும் பண்டத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்க மாட்டார்கள்; முகத்தல் அளவிலும், நிறுத்தல் அளவிலும் மோசம் இருக்காது; பல பண்டங்களையும் விற்பனை செய்யும் போது நியாய விலைக்குத் தான் விற்பார்கள்; பண்டத்தின் கொள்முதலையும், இலாபத் தையும் சொல்லியே விற்பனை செய்வார்கள். இவ்வாறு செய்யும் பழமையான வியாபாரத்தையுடையவர்கள் – வணிகர்கள் நிறைந்திருக்கும் இடம்.
இவ்வாறு வணிகர்களின் பண்பைக் குறிப்பிடுகிறார் உருத்திரங்கண்ணனார்.
நெடுநுகத்துப் பகல்ஆணிபோல்
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்;
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது,
கொடுப்பதூஉம் குறைகொடாது,
பல்பண்டம் பகர்ந்துவீசும்
தொல்கொண்டித் துவன்றுஇருக்கை.
(பட்டினப். 206 – 212)
இவ்வடிகளிலே மேலேகாட்டிய பொருள் அமைந்திருக் கின்றது. இவை, ஒரு வியாபாரி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நேர்மையான வியாபாரி எப்படி நடந்து கொள்ளு வான்? என்பதை அறிவித்தன. இக்காலத்தில் இத்தகைய நேர்மை யுள்ள வியாபாரிகள் எத்தனை பேர் இருக்கின்றனர்?
மேலே சொல்லியவற்றைக் கொண்டு, பண்டைத் தமிழ கத்து வேளாளர்கள் – அதாவது உழவர்களின் பண் பாட்டை அறியலாம். வணிகர்களின் பண்பாட்டைக் காணலாம். உழவர் களும், வணிகர்களும் எப்படி வாழ வேண்டும்? அவர்கள் எப்படி வாழ்ந்தால் அவர்கள் வாழும் நாட்டுக்கு நன்மையுண்டு? என்ற உண்மையையும் உணரலாம். இவைகள் பழந்தமிழர்களின் அறநெறியையும், அருள்நெறியையும் விளக்கி நிற்கின்றன.



