சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

6. செல்வத்தின் பயன்

செல்வம் நிலையற்றது என்று எல்லோரும் பேசுகின்றனர். அது ஒருவரிடம் அசையாமல் நிலைத்திருக்கக் கூடியது அன்று; கை மாறிக் கொண்டுதான் இருக்கும். செல்வம் என்னும் சொல்லுக்கே ஓரிடத்தில் நிலைத்து வாழ்வதன்று என்பதுதான் பொருள். நாம் செல்வம்; அதாவது நாம் செல்வோம்; என்று சொல்லிக் கொண்டிருக்கிறதாம் அது.

இந்த மாதிரி செல்வத்தின் நிலையாமையைப் பற்றி எடுத்து ரைப்போர் பலர். நீதி நூல்கள் எல்லாம் இதைப் பற்றியே அறிவுறுத்துகின்றன.

படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் இந்த உண்மையைப் பற்றிப் பேசுவதற்குப் பின்வாங்குவதில்லை. செல்வம் என்பது நாம் தேடுவதுதான், இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போய்விடும்; மறுநாள் வரும். ஆதலால் அதன் இழவுக்காக ஏக்கம் உறக் கூடாது என்று இனிமையாக உரை யாடுவோரும் உண்டு.,

செல்வம் நிலையற்றதென்று எவ்வளவுதான் வாய் வலிக்கப் பேசினாலும் அதன்மேல் ஆசை வைக்காதவர்கள் யாரும் இல்லை. செல்வம் இருந்தால்தான் இன்பமாக வாழ முடியும்; செல்வம் இருந்தால்தான் எண்ணிய செயல்களையெல்லாம் எளிதிலே நிறைவேற்ற முடியும்; செல்வமிருந்தால் தான் மற்ற மக்கள் மதிக்கும்படி மனிதர்களாக வாழ முடியும்; இந்த நிலை இப்பொழுதுள்ள சமுதாய அமைப்பில் ஏற்பட்டுவிட்டது. இந்தக் காரணத்தால்தான் செல்வத்தைச் சேர்க்க முயலாதவர் கள் இல்லை; அதன்மேல் ஆசைப்படாதவர்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்கள் சூழ்நிலையைப் பொறுத்தே மாறுகின்றன. உழைத்தால் போதும்: அவர்களுக்கு உணவுண்டு; அவர்கள் விரும்பும் காட்சிகளைக் காண வசதியுண்டு; பொழுது போக்கப் போதுமான நேரம் உண்டு; உழைக்கமுடியாத வயதேறிய பருவத்திலும் பட்டினி கிடந்து சாவாமல் வாழ முடியும்; அவர்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கும் இத்தகைய வசதியுண்டு என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் யாரும் செல்வத்தைச் சேர்க்க ஆசைப்படமாட்டார்கள். மனித சமுதாயத்தில் இந்த நிலை இப்பொழுது இல்லை.

இப்பொழுது மட்டும் அன்று; ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே செல்வம் உள்ளவர்கள்தாம் சிறந்து வாழ முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது. ஆதலால் ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த மக்களிலும் பலர் பேராசைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். செல்வத்தின் உண்மைத் தன்மையை உணராமல் தங்கள் நன்மைக்கு மட்டும் என்றே செல்வத்தைச் சேர்க்கத் தொடங்கினர். இவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை; மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்ணால் கண்டாலும் மனதிலே அதைப் பற்றி எண்ணுவதில்லை; வறுமையால் வருந்துகின்றவர்கள் தங்கள் துயரத்தைச் சொல்லிக் கொண்டாலும் அச் சொற் களைக் காதிலே போட்டுக் கொள்வதில்லை. இப்படிப் பட்ட பேராசை பிடித்த செல்வர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே இருந்தனர்.

இவர்களைக் கண்ட அறிஞர்கள் மனம் வருந்தினர். உலகில் உள்ள செல்வம் எல்லாம் பேராசை பிடித்த ஒரு சிலரிடம் சேர்ந்து விட்டால் அது மனித சமுதாயத்திற்குப் பெருந் தீமையை உண்டாக்கிவிடும்; மக்கள் அனைவரும் இல்லாமைக் கொடுமை யால் இறந்துபடுவார்கள். இல்லாமை மனித சமுதாயத்தை ஆட்கொள்ளுமானால் மக்களின் கட்டுத் திட்டங்கள் குலைந்து விடும்; ஒழுக்கக் கேடுகள் உருப்பெற்று உலவத் தொடங்கும்; பல மக்கள், மக்கள் பண்பையே மறந்துவிடுவார்கள் என்ற உண்மையைச் சிந்தித்தார்கள் அந்த அறிஞர்கள்.

செல்வம் ஓரிடத்தில் குவியாமல் இருக்க வேண்டும்; அது பலரிடமும் பரவவேண்டும் என்பதே அந்த அறிஞர்களின் கொள்கை. ஆதலால் செல்வத்தின் பயன் ஈகை தான் என்று வற்புறுத்திக் கூறினர். தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு உதவுகின்றவனே உத்தமன்; நல்லவன்; உயிர் இரக்கம் உள்ளவன்; மனிதருக்குள் மாணிக்கமானவன்; புகழுக்கு உரியவன்; மனிதனாகப் பிறந்த பயனை அடைகிறவன் என்றெல்லாம் அறிவுரை புகன்றனர்.

இதனால் செல்வமுள்ளவர்களிலே பலர் திருந்தினர்; பிறர் துயரங் கண்டபோது உதவினர்; பிறருக்கு உதவி செய்வதே தம் கடமையென்று கொண்டனர்; துன்புறுவோரை இன்புறச் செய்து, அதனால் தாமும் இன்புற்றனர். இத்தகைய இரக்கம் உள்ள செல்வர்களால்தான் பண்டைத் தமிழகத்திலே கலைகள் வளர்ந்தன. காவியங்கள் வளர்ந்தன; மக்களுக்குள் அன்பும், தொடர்பும், சமுதாய ஒற்றுமையும் பிறந்து வளர்ந்தன.

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் செல்வம் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறிய நீதிப்பாடல்கள் பலவுண்டு. அப் பாடல்களின் கருத்துக்கள் இன்றும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வன. அவை என்றும் அழியாத உண்மையை உரைப்பன. அப் பாடல் களிலே ஒரு பாடல்தான் கீழ்வருவது:

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே,
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, நப்புத பலவே.

(புறநா. 189)

இப் பாடல் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரனாரின் பாட்டு. தமிழரின் அருள் நெறியை விளக்கும் பாடல்களிலே இது ஒரு தலைசிறந்த பாட்டு.

கடல் சூழ்ந்த இவ்வுலகை ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசனாயினும் சரி, இரவும் பகலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனாயினும் சரி – இருவரும் உண்பது நாழி அரிசிச் சோறுதான்; உடுப்பவை இரண்டு தான்; இடையில் ஒன்று, தோளில் ஒன்று; ஆக இரண்டேதான்; மற்றவையும் அப்படித்தான். ஆதலால் செல் வத்தின் பயன், இல்லாதார்க்கு ஈவதாகும். இப்படியில்லாமல், நாம் மட்டும் அதை அனுபவிப்போம் என்று இருந்தால் அதனால் வரும் தவறுகள் பல உண்டு.

இதுதான் மேலே கண்ட செய்யுளின் பொருள். உணவு, உடை, உறக்கம், இன்பம், துன்பம், சாவு, வாழ்வு எல்லாம் அரசனுக்கும் உண்டு; ஆண்டிக்கும் உண்டு. இவற்றிலிருந்து யாரும் தப்புவதில்லை; ஆதலால் செல்வத்தைப் பெற்றால் அதை வறியோர்க்குக் கொடுத்து வாழ்தலே சிறந்தது என்ற நீதியை இப் பாடல் எடுத்துரைத்தது.

நமக்கு மட்டுந் தான் செல்வம் என்று சேர்த்து வைத்துக் கொள்வதால் பல ஆபத்துக்களும் உண்டு; அத்தகைய ஆபத்துக் களுக்கு ஆளாகாமல் செல்வம் பெற்ற போதே அதை நல்வழி யிலே பயன்படுத்து என்று எச்சரிக்கையும் செய்கிறது இச் செய்யுள். ஏறத்தாழ ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றியது இப் பாட்டு.

செல்வம் செலவு செய்வதற்கே உரியது; வருந்துவோர்க்கு வழங்குவதற்கு உரியது. இவ்வாறு செய்யாவிட்டால் செல்வத் தால் பயன் இல்லை.இச் செய்தியைக் குறிப்பதே இப்பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !