சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

4. இன்ப வாழ்வுக்கு அடிப்படை

உலகிலே அனைவரும் இன்பமாக வாழ முடியும். இன்பத்துடன் வாழ்வதற்கு வழியுண்டு. மக்கள் அல்லற்படத்தான் இவ்வுலகிலே பிறந்தார்கள் என்று எண்ணுவது தவறு. வாழ்விலே அல்லல்கள் – துன்பங்கள் – அவதிகள் இருக்கலாம். ஆனால் அவைகளைத் தகர்த்தெறிந்து ஆனந்தமாக வாழ்வதற்கு இடம் உண்டு. இதுவே சங்க காலப் புலவர்களின் கொள்கை.

மனிதன் வாழ்வதற்குத்தான் பிறந்தான்; சாவதற்குப் பிறந்தவன் அல்லன். மனிதனுக்கு அறிவுண்டு; எதைப் பற்றியும் சிந்திக்கும் மதியுண்டு; உண்மையைக் கண்டறியும் திறமையுண்டு. உண்மையென்று கண்டதை உறுதியுடன் நடத்தி வைக்கும் ஆற்றலும் மனிதனுக்கு உண்டு.

பண்டைக் காலத்தில் மனிதனால் செய்யமுடியாதவை என்று நினைத்திருந்த காரியங்கள் பல. மனிதனால் செய்ய முடியாத காரியங்கள் இயற்கையாக நடைபெற்றால் அவைகளைத் தெய்வீக நிகழ்ச்சிகள், தெய்வத்தால் நடத்தப்படுகின்ற வைகள் என்று நம்பினர்.

இன்று அந்த நம்பிக்கையிலே மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மனிதனால் ஆகாதவை என்று நினைத்திருந்த பல காரியங்கள் இன்று மனிதனாலேயே செய்யப்படுகின்றன. உதாரணமாக ஒன்றை மட்டும் காண்போம்.

பண்டையோர், வானத்தில் செல்பவர்கள் – வான வழியிலே நடப்பவர்கள் தேவர்கள்; அவர்கள் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர்கள். அவர்கள் வாழும் உலகமே வேறு; அது மண்ணுலகத்திற்கு அப்பால் இருக்கின்றது. அவ்வுலகத்துக்கு தேவலோகம் – அமரலோகம் என்று பெயர். அந்த உலகத்தினரான தேவர்களால்தான், நினைத்த இடத்திற்கு வான வழியிலே பறந்து – நடந்து போக முடியும். இது மனிதனால் ஆகாத காரியம் என்று நம்பி வந்தனர்.

தேவர்களைப் போல வான வீதியிலே நாமும் செல்ல முடியும் என்று நம்பிய மனிதர்களும் அக்காலத்தில் இருந்தனர். அவர்கள் யோக மார்க்கத்தால் – யோகசித்தியால் அக்காரியத்தைச் செய்யலாம் என்று எண்ணினர். யோகிகள், ஞானிகள் என்போர் தங்கள் தெய்வ சக்தியால் வானத்தின் வழியே சென்றதாகக் கதைகளில் காண்கிறோம். இக்கதைகள், மனிதர்களும் வானவர்களைப் போல – தேவர்களைப் போல ஆகாய மார்க்க மாகச் செல்லமுடியும் என்ற நம்பிக்கை பண்டை மக்களிடமும் இருந்தது என்பதற்கு உதாரணம்.

இன்று மனிதன் வானத்தில் பறப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். வானவூர்திகள் – ஆகாய விமானங்கள் பறக்காத நாள் இல்லை; நாடுகள் இல்லை. வானத்தில் இயங்குவது தெய்வச் செயல் என்று நினைத்திருந்த கொள்கை இன்று மறைந்துவிட்டது. இதுபோலவே தெய்வச் செயல்கள் என்று எண்ணப்பட்ட பல செயல்கள் இன்று மனிதச் செயல்களாக மாறி வருகின்றன. இத்தகைய சக்தி படைத்த மனிதன் இவ்வுலகில் ஏன் துன்பமடைய வேண்டும்? வாழ்வை வெறுக்க வேண்டும்? துன்பம் அடைய வேண்டாம்; வாழ்வை வெறுக்கவும் வேண் டாம். எல்லா மனிதர்களும் இன்பத்துடன் வாழ முடியும். வாழ்வதற்கான வழி உண்டு.

இந்த உண்மையைச் சங்ககாலப் புலவர் ஒருவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உலகம் இன்பமாக வாழ்வதற்கு அவர் சொல்லும் வழியைக் காண்போம்.

இவ்வுலகம் நிலையற்றது; அழிந்து விடக்கூடியது; ஆதலால் இவ்வுலக வாழ்வில் இன்பம் இல்லை என்று சொல்லுவது உண்மையன்று. இவ்வுலகம் உண்டு; இவ்வுலகிலே இன்பம் உண்டு; இவ்வுலகிலே வாழ்வு உண்டு. இது உண்மை. இதைத் தெளிவாகச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும், தந்நலமுடையவராய் இருந்தால்தான் இவ்வுலகில் இன்பம் இல்லையென்று சொல்லலாம்; தந்நலம் பிடித்தவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ மாட்டார்கள்; ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொள்ள மாட்டார்கள்; ஒருவரிடம் மற்றொருவர் அன்புகாட்ட மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள்; தமக்குள் அடித்துக் கொள்ளுவார்கள்; ஒருவரை ஒருவர் அழிப் பதற்கே – ஒழிப்பதற்கே – கெடுப்பதற்கே சமயம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தகைய மிருகத்தன்மை படைத்தவர் கள் நிரம்பிய சமுதாயத்திலே எவரும் இன்பமாக அமைதியாக – மகிழ்ச்சியாக வாழ முடியாது என்பது உண்மை.

ஆனால் உலகம் இப்படியில்லை. உலகில் உள்ள எல்லா மனிதர்களும் தந்நல வெறி கொண்டவர்கள் அல்லர். மனிதப் பண்புள்ளவர்கள் ஏராளமாக இவ்வுலகில் இருக்கின்றனர். ஆகையால் இவ்வுலகில் இன்பம் உண்டு; வாழ்வுண்டு.

உலகத்தை இன்பமயமாக்கும் மனிதத்தன்மையுள்ளவர்கள் யார் தெரியுமா? அதையும் சொல்லுகிறேன் கேளுங்கள். மக்க ளுக்குக் கிடைக்காத உயர்ந்த இனிய உணவு, இந்திரர் – அதாவது தேவலோகத்தில் உள்ளவர்கள் உண்ணும் உணவாகி அமுதம் கிடைத்தால்கூட அதைத் தாம் மட்டும் உண்ணமாட்டார்கள். இது இனிய உணவு; கிடைத்தற்கரிய உயர்ந்த உணவு; ஆதலால் நாமே உண்டு மகிழ்வோம் என்று எண்ண மாட்டார்கள். பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.

யாரிடத்திலும் வெறுப்புக் காட்டமாட்டார்கள்; எல்லா மக்களிடமும் அன்பு காட்டுவார்கள். சும்மா சோம்பேறித் தனமாகத் தூங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள்; சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்துக் கொண்டேயிருப்பார்கள்.

பிறர் – அறிஞர்கள் செய்வதற்கு அஞ்சுகின்ற கெட்ட காரியங்களைத் தாமும் செய்வதற்கு அஞ்சுவார்கள்; கெட்ட காரியங்களைச் செய்யவே மாட்டார்கள். ஆனால் அழியாத புகழ் உண்டாகக்கூடிய நல்ல காரியங்களை – சிறந்த செயல் களைச் செய்யப் பின்வாங்க மாட்டார்கள்; தமது உயிரைக் கொடுத்தாவது அக்காரியங்களைச் செய்து முடிப்பார்கள்.

பிறர் பழிக்கத்தக்க – வெறுக்கத்தக்க – பிறருக்ககுத் தீமை உண்டாக்கத்தக்க – பழிச் செயல்களைச் செய்வதற்கு முன்வரவே மாட்டார்கள். பழிச் செயலைச் செய்வதனால், இந்த உலகமே பரிசாகக் கிடைப்பதானாலும் செய்யவே மாட்டார்கள். சிறிதும் சோர்வடையமாட்டார்கள்; உள்ளத்தில் உறுதியுடன் இருப்பார்கள்.

இத்தகைய தன்மையுள்ள பெருமையுள்ளவர்கள் இவ்வுலகில் இருக்கின்றனர். அவர்கள் தம் நலத்தைக் கருதி உழைக்காதவர்கள்; இவ்வுலக மக்களின் உயர்வுக்காகவே உழைப்பார்கள். இத்தகையோர் இவ்வுலகில் இருக்கின்றனர்; ஆதலால் இவ்வுல கிலே இன்பம் உண்டு; வாழ்வு உண்டு.

இதுவே அந்தப் பழம்புலவரின் பாட்டு. இப்பொருள மைந்த பாடல் கீழ்வருவது;

உண்டால் அம்ம! இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுஉடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.


(புறநா. 182)

இது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் புலவர் பாட்டு. கிடைத்ததைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ண வேண்டும்; சோம்பேறித்தனம் கூடாது; யாரையும் வெறுக்கக் கூடாது; அஞ்சத்தக்க பாவ காரியங்களைச் செய்யக் கூடாது; நல்ல செயல்களையே செய்ய வேண்டும். எவ்வளவு தான் லாபம் கிடைப்பதாயினும் பழிச்செயல்களைச் செய்யக் கூடாது; இத்தகைய மன உறுதி வேண்டும். தந்நலமின்றிப் பிறர் நன்மைக் காக உழைக்க வேண்டும் என்பதே இப்பாடல் அறிவிக்கும் நீதி.

எல்லா மக்களும் இத்தகைய நீதியைப் பின்பற்றுவார் களானால், இவ்வுலகில் துன்பமேது? துக்கமேது? இவ்வுலகை யார்தான் வெறுப்பார்கள்?

பழங்காலத் தமிழர் கண்ட இந்த உண்மையைத்தான் வள்ளுவரும் வலியுறுத்தினார்.

பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்பதே வள்ளுவர் வாய்மொழியாகும். கிடைத்த உணவைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துப் பல உயிர்களையும் காப்பாற்று தல் வேண்டும்; இதுதான் அற நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறமாகும். இதுவே வள்ளுவர் சொல்லியதன் பொருள்.

ஆகவே உலகம் பட்டினியின்றி வாழவேண்டும்; பட்டினி யில்லாத உலகிலேதான் மக்கள் வாழ்வு இன்பமாக இருக்கும்; ஆகையால் பட்டினியற்ற உலகத்தைக் காண வேண்டும். இது பழம்புலவர்கள் காட்டும் சன்மார்க்கமாகும். இத்தகைய உலகில் தான் ஒழுக்கமும், நீதியும், அன்பும் நிலைத்து வாழும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !