சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

8. இரக்கத்தால் இன்பம்

இல்லாமையால் வருந்துவோர் ஒருபுறம்; செல்வத்தால் சிறந்து வாழ்வோர் ஒருபுறம். இல்லாதவர்கள் எண்ணற்றவர்கள்; செல்வமுள்ளவர்களை எண்ணிக்கையிலே அடக்கிவிடலாம். மக்களிடம் நாகரிகம் பிறந்த காலத்திலிருந்து இந்த இரு பிரிவும் இருந்துதான் வருகின்றது.

இந்த நிலைமையை மாற்றுவதற்கான முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகின்றது. எல்லோரும் எல்லாச் செல்வமும் எய்திவிட்டால் இவ்வுலகமே இன்பமாகத் திகழும் என்பது முன்னோர் கண்ட உண்மை.

இந்த உண்மை ஒருபுறம் இருக்க, செல்வம் நிறைந்தவர்களில் சிலர் எளியவர்களிடம் இரக்கங்காட்டி வாழ்ந்தனர். எளியவர்களுக்கு உதவி செய்து அவர்கள் துன்பத்தைத் துடைப் பதே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள் பலர் உண்டு. இவர்களைத் தான் வள்ளல்கள், அறிஞர்கள், சான்றோர்கள், பெரியோர்கள் என்று மக்கள் பாராட்டினர்.

பிறர் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாத செல்வர்களும் இருந்தனர். அவர்கள் தங்கள் இன்பமே பெரியதெனக் கொண்டு வாழ்ந்தவர்கள். உலக சமுதாயத்தின் அமைப்பைப் பற்றி எண்ணாதவர்கள், கூட்டுறவினால்தான் மனித சமூகம் நாகரீகம் அடைந்தது என்பதை அறியாதவர்கள். இப்படிப்பட்டவர் களுக்கு உண்மைகளை விளக்கிக் காட்டுவதற்கே கலைகளும், காவியங்களும், கவிதைகளும் ஏற்பட்டிருக்கின்றன. வாழ்க்கை யிலே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் அறநூல்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இவற்றை அறியாமல் இறுமாந்து வாழ்ந்தவர்களுக்கும் புலவர்கள் அவ்வப்போது அறிவுரைகளைப் புகட்டி வந்தனர். அவர்களுக்கு உலக நிலைமையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டி வந்தனர். ஏழைகளும் வாழவேண்டும்; வாழ்க்கையின்பங்களைப் பெற வேண்டும்; செல்வம் படைத் தோரும் வீணாக அழியாமல் சிறந்து விளங்கவேண்டும் என்று நினைத்த அறிஞர்கள் – புலவர்கள் சும்மாவிருக்கவில்லை. ஏழை களுக்கும் செல்வர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த என்னென்ன செய்வேண்டுமோ அவற்றைச் செய்து வந்தனர்.

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வருமுன் கையைக் கட்டிக் கொண்டு சும்மாவிருந்தால் என்ன செய்வது? ஏதேனும் செய்து தானே தீரவேண்டும்? செல்வம் படைத்தவர்கள், உணவில்லாமல் உயிர் விடும் ஏழைகளுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். இத்தகைய உதவியும் ஒத்தாசையும் புரியும் இரக்க மனம் செல்வர்களுக்கு உண்டாக வேண்டும். துன்புறுவோர்பால் இரக்கங் காட்டும் சிந்தையை மக்களிடம் எழுப்ப வேண்டியது அறிஞர் கடமை – புலவர் கடமை – என்று கருதி வந்தனர் தமிழர். இந்த உண்மையை விளக்கும் தமிழ்ப் பாடல்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்றைக் காண்போம்.

சோழன் நலங்கிள்ளி என்பவன் ஒரு சோழ மன்னவன். அவன் செல்வத்திலே சிறந்தவன். ஆனால் கொடை வள்ளல் அல்லன். பசியினால் வருந்துவோர் துன்பத்தைக் கவனிக்காமல் வாழ்ந்து வந்தான்; தானும் தன் சுற்றமும் மட்டும் இன்பத்திலே வாழ்ந்தால் போதும் என்று எண்ணியிருந்தான்.

இவனுடைய நிலையைக் கண்டார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர். சோழர் குலத்திலே ஒரு மன்னன் தன் குடிப் பெருமைக்குக் கேடு வரும் நெறியிலே வாழ்வது தவறு என்று கருதினார்; அவனுடைய கஞ்சத்தனத்தை விரட்டி அவனை இளகிய நெஞ்சமுள்ள இனியவன் ஆக்க எண்ணினார். அவர் அவ்வரசனை நெருங்கி உலக நிலைமையை எடுத்துச் சொல்லி உண்மையான அருள்நெறி இன்னதென்று அறிவித் தார். இதைப் புறநானூற்றின் 27-வது செய்யுளால் காணுகின் றோம். இதோ அந்தப் பாடல்.

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேள்
நூற்றுஇதழ் அலரின் நிரைகண் டன்ன,
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணும் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே;
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன்ஏவா வானஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்துஎனக்
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி! இருள்இலர்
கொடாமை வல்லர் ஆகுக;
கெடாத துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

(புறநா. 27)

சேற்றிலே பிறந்து வளர்ந்துவந்திருக்கும் தாமரையில், ஒளிபொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. அதுபோல, ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், அவர்களிலே புகழும் பாட்டும் பெற்றவர்கள் சிலர் தாம்.. தாமரை யிலைபோல பாட்டும், புகழும் இன்றி மாண்டவர்கள் பலர்.

புலவர்களின் பாடல் பெற்ற புகழுடையவர்கள் தாம் செய்யும் கடமைகளைக் குறைவறச் செய்து முடிப்பர். அதன் பயனாக வானத்திலே ஓட்டுவோன் இல்லாத வானஊர்தியிலே ஊர்ந்து இன்புறும் பெரும்பொருளைப் பெற்று இன்புறுவர். எந்தையே! சேட்சென்னியே! நலங்கிள்ளியே! இவ்வாறு அறிஞர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.

இவ்வுலகிலே சந்திரன் ஒரு உண்மையை விளக்கிக் காட்டிக் கொண்டே திரிகின்றது. செல்வம் தேய்ந்து போவது உண்டு; பெருகுவது உண்டு; அடியோடு அழிவதும் உண்டு; மீண்டும் பிறப்பதும் உண்டு; என்ற உண்மையைச் சந்திரன் தன் செய்கை யால் வெளிப்படுத்துகின்றது. கற்றறியாதவரையும் உண்மையைக் காணுங்கள் என்று கூறுவது போலக் காட்டுகின்றது.

ஆதலால் இவ்வுலகிலே ஒன்றைச் செய்வதற்கு வல்லவ ராயினும் சரி; வல்லமை அற்றவராயினும் சரி; வறுமையால் வருந்திவந்தோர் யாராயினும் சரி; அவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்கு. அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்! அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுள்ளவன் ஆகுக. இத்தகைய செல்வத்தையும் நீ என்றும் அழியாது அடைந் திருப்பாயாக. அழியாத வலிமையுள்ள உன்னைப் பகைத்து எதிரியாக இரு.ப்பவர்கள் வறுமையுள்ளவர்களுக்குக் கொடாத தன்மையை உள்ளவர்கள் ஆகுக! அத்தகைய கல்நெஞ்சமும், செல்வமற்ற சீர்கேடும் அவர்கள் அடைவார் களாக!

இதுவே இப்பாடலின் பொருளாகும். இது தமிழர் அருள் நெறியை விளக்கும் பாடல்களிலே ஒன்றாகும்.

உயர்ந்த புகழ் பெற்ற குடிப்பிறப்பினால் மட்டும் ஒருவனுக்குப் பெருமையுண்டாகிவிடாது. அவன் புகழுக்குரிய செயல்களைப் புரியவேண்டும்; அறிஞர்களால் பாராட்டப்பட வேண்டும். அவனே சிறந்தவன். தீமைகளை நீக்கி, நன்மைகளைச் செய்பவனே புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவான். பண்டைக் காலப் புலவர்கள் இத்தகையவர்களையே போற்றிப் பாடுவார் கள். இந்த உண்மையை, வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை எண்ணுங்காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே என்ற மூன்றடிகளும் விளக்கிக் காட்டின.

சந்திரனுடைய இயற்கைத் தன்மையை வைத்து ஒரு உண்மையை விளக்கி உரைத்தது இச்செய்யுள். சந்திரன் தேய் கின்றது; வளர்கின்றது; சிலகாலம் நாம் பார்க்க முடியாமல் மறைந்து விடுகின்றது; பின்னர் புறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி யைச் செல்வத்தின் இயல்போடு இணைத்துக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது.

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் என்ற வரிகள் எவ்வளவு எளிய சொற்கள் கொண்டவை! எவ்வளவு இனிய தொடர்கள்! என்பதைப் படிப்போர் – சுவைப்போர் – அறிவர்.

இவ்வடிகளின் கருத்து, செல்வம் நிலையற்றது என்பதைக் குறிப்பதுதான். கண்ணாலே கண்டுணரும் இந்த உவமை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமை யாகும்.

புகழுடன் வாழ்க! செல்வம் இருக்கும்போதே நல்லறம் புரிக! என்பதுதான் தமிழர் அருள்நெறி. இதனையே இச்செய் யுள் விரிவாக விளக்கிக் காட்டிற்று.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !