
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
24. தமிழர் பரம்பரைப் பண்பு
நான் வருந்திப் பாடுபடுகிறேன்; பொருளீட்டுகிறேன். என்னுடைய உழைப்பில்லாவிட்டால் – என்னுடைய முயற்சி இல்லாவிட்டால் – என்னுடைய திறமையை பயன்படுத்தா விட்டால் – இந்தப் பொருள்களைச் சேர்த்திருக்க முடியாது; சேமித்திருக்க முடியாது. ஆகையால் இப்பொருள் முழுவதும் எனக்கே உரிமை; இவற்றையெல்லாம் நானேதான் அனுபவிக்க வேண்டும்; அழகாக அடுக்கி வைத்து உள்ளங் குளிரக் கண் குளிரக் கண்டு ஆனந்தமடையவேண்டும்.
இவ்வாறு நினைப்பது மக்கள் இயற்கை. செல்வத்தைச் சேர்ப்போர் சிந்தையிலே இவ்வெண்ணம் முளைத்துத் தழைத்து கிளைவிட்டுத் தழைக்கத்தான் செய்யும். எல்லா நாட்டிலும் இவ்வெண்ணம் படைத்தவர்களே பெரும்பாலான மக்கள்; எல்லா இனத்தினரிலும் இவ்வெண்ணம் உள்ளவர்களே எண்ணற்ற மக்கள்.
இதற்கு மாறான மனம் படைத்தவர்கள் மிகச் சிறுபான்மை யினர். நாம் உழைப்பது நமக்காக மட்டும் அன்று. உலகம் வாழ, மக்கள் இன்பமடைய, எல்லோரும் இனிது வாழ நாம் உழைக் கின்றோம். நமது உழைப்பின் பலன் நமக்குமட்டும் பயன் பட்டால் போதாது; அல்லது ஒருவர்க்கு மட்டும் பயன்பட்டால் போதாது; பலருக்கும் பயன்படவேண்டும் என்று நினைக் கிறவர்கள் சிலர்தான் இருக்க முடியும்.
இத்தகைய எண்ணம் கொண்ட சிலரால்தான் இவ்வுலக மக்களிடையே ஓரளவாவது ஒற்றுமையுணர்ச்சி நிலவுகின்றது. அன்பு படர்ந்திருக்கின்றது. இது மறக்க முடியாத உண்மை.
நாட்டு மக்கள் அனைவரும் வாழவேண்டும்; பசி பட்டினி யில்லாமல், பல நன்மைகளும் பெற்று வாழ வேண்டும். பசி, பட்டினியில்லாவிட்டால்தான் நாடு செழிக்கும்; நாட்டு மக்களிடம் அறமும் அருளும் நிலைத்து நிற்கும்; நாட்டிலே நல்ல வினைகள் நடைபெறும் என்பதே சான்றோர்களின் கொள்கை.
தமிழ்ச் சான்றோர்கள் இக்கொள்கையையே உயிராகக் கொண்டவர்கள். இக்கொள்கையைத் தாங்கள் நடைமுறையிலே பின்பற்றி வந்தனர்; மற்றவர்களையும் பின்பற்றும்படி செய்து வந்தனர்.
பிறருக்கு உதவி செய்வது நமது கடமையென்று நினைப் பது தமிழர்களின் பரம்பரைக் குணம். நாட்டு மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ்ந்தால் தான் நாமும் வாழ முடியும்; அமைதி யுடன் மனச்சாந்தியுடன் அறநெறியிலே வாழ்க்கை நடத்த முடியும் என்று இன்றும் தமிழ் மக்களில் பெரும்பாலோர் எண்ணுகின்றனர். இதை மறுக்கும் தமிழர்கள் எவருமில்லை.
நாளை உணவுக்கு என்செய்வோம் என்று ஏங்கும் ஏழைத் தமிழனிடமும் இரக்கத்தன்மையுண்டு; தன்னிடம் வந்தவர்களை வரவேற்கும் தன்மையுண்டு. தன்னால் உதவி செய்யமுடியா விட்டால்கூட, அன்புடன் பேசி ஆதரவு காட்டும் இயல்பு உண்டு. இது தமிழரின் வழிவழிப் பண்பாடு. பெரும்பாலான தமிழ் மக்களிடம் இப் பண்பாட்டைக் காணலாம்.
தமிழர்கள் இத்தகைய பண்பாடுள்ளவர்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களிலே காணலாம்.
சங்க இலக்கியங்களில் எல்லாம் இக்கருத்துள்ள செய்யுட் கள் காணப்படுகின்றன.
ஐங்குறுநூற்றிலே மருதத்தைப் பற்றிய பாடல்களிலே இக்கருத்துப் பொதிந்திருப்பதைக் காணலாம்.
காதலன் பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பினான். அவன் தன் தலைவியைச் சந்திப்பதற்கு முன் அவளுடைய தோழியர்களைச் சந்தித்தான். தான் பரத்தையர் நலத்தை நாடிச் சென்றதால், தன் மனைவி தன்மேல் மிகவும் சீற்றங் கொண்டிருப் பாள்; ஆதலால் அவள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள்; தன்பால் அன்பு காட்ட மாட்டாள்; இன்சொற் பேசமாட்டாள்; புன்சிரிப்புடன் வரவேற்க மாட்டாள் என்பது தலைவன் எண்ணம். ஆதலால் அவன் தலைவியின் – அதாவது தன் மனைவியின் மனப்பான்மையைத் தெரிந்து கொள்ளுவதற் காகவே தோழியர்களை அணுகினான். தோழியர்கள் அவனுக் குத் தலைவியின் உள்ளத்தை எடுத்துரைக்கின்றனர்; தங்கள் கருத் தையும் தெரிவிக்கின்றனர். இம்முறையிலே பத்துப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தமிழர்களின் அருள்நெறியை – கருணை உள்ளத்தைக் காணலாம்.
வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே! வருக இரவலர்;
என்வேட் டோளே யாயே! யாமேபல்இதழ்
நீலமொடு நெய்தல் நிகர்க்கும்தண்துறை ஊரன் கேண்மை;
வழிவழி சிறக்க என வேட் டேமே.
வாழி ஆதன் அவினி என்னும் மன்னன்! வயல்கள் நன்றாக விளைக! இரவலர்கள் தாராளமாக வந்து வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு போகட்டும் என்று என் தலைவி விரும்பி னாள். நாங்கள் பல இதழ்களோடு கூடிய நீலோற்பல மலர்க ளோடு, நெய்தல் மலர்கள் ஒத்துக் காணப்படுகின்ற குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவனிடம் எம் தலைவி கொண்டி ருக்கும் உறவு இடையறாமல் சிறக்க வேண்டும் என்று விரும்பி னோம்.
இது ஐங்குறுநூற்றின் இரண்டாவது பாட்டு. விளைக வயலே வருக இரவலர் என்ற அடிதான் தமிழர் அருள்நெறியை விளக்குவதாகும். வயலில் தானியங்கள் விளைவது தமக்கு மட்டும் அன்று; இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே என்ற கருத்தைக் கொண்டதே இவ்வடி.. இவ்வடி இல்லறத்தில் உள்ள ஒரு தமிழ் மங்கையின் மனத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
வாழி ஆதன்! வாழி அவினி!
பால்பல ஊறுக; பகடுபல சிறக்க;
என, வேட் டோளே யாயே! யாமே,
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்,
பூக்கஞல் ஊரன் தன், மனைவாழ்க்கை பொலிக, எனவேட் டேமே.
வாழ்க ஆதன் அவினி! நமது வீட்டில் உள்ள கறவைகள் மிகுந்த பாலைச் சொரியட்டும்; உழவுத் தொழில் மிகவும் வளரட்டும் என்று விரும்பினாள் தலைவி.
விதைத்த உழவர்கள் வயல் விளைந்தபின் அறுத்துத் திரட்டிய நெல்லுடன் வீட்டுக்கு வருகின்ற மலர்கள் நிறைந்த நீர்நிலைகளையுடைய இவ்வூரின் தலைவன் சிறந்து வாழ்க! அவனுடைய இல்லற வாழ்வு இனிது சிறப்பதாக! என்று நாங்கள் விரும்பினோம்.
இது மூன்றாவது செய்யுள். இச்செய்யுளும் தமிழரின் அருள்மனத்தை எடுத்துக்காட்டுகின்றது. தன் வீட்டிலே உள்ள மாடுகள் ஏராளமாகப் பால் கறக்க வேண்டும்; தன் குடும்பத் துக்குரிய உழவுத் தொழில் நன்றாக நடைபெற வேண்டும்; அதன்மூலம் ஏராளமான உணவுத் தானியங்கள் வீட்டிலே வந்து குவிய வேண்டும் என்று இல்லக்கிழத்தி விரும்புகின்றாள்.
இச்செய்யுளில் உள்ள, பால் பல ஊறுக; பகடு பல சிறக்க என்ற அடி இக்கருத்தை விளக்கி நிற்கின்றது.
பண்டைக்காலத் தமிழ்மக்களின் இல்லறச் சிறப்பை விளக்க இந்த இரண்டு செய்யுட்களே போதுமானவை. இல்லறத்திலே வாழும் ஒரு தமிழ் மங்கையின் மனப்பான்மையை இச்செய்யுட்கள் எடுத்துக்காட்டின.
இல்வாழ்வோன் கடமை மற்றவர்களுக்கு உதவி செய்வ தாகும். இல்லார்க்கு உதவுவது, உறவினர்க்கு உதவுவது இல்வாழ் வோன் கடமை.
துறவறத்தில் இருப்பவரை விட இல்லறத்தில் உள்ளவர் களுக்குத்தான் உதவி செய்யும் வாய்ப்பு மிகுதியாக உண்டு. இதனால்தான் தமிழர்கள் இல்லறமே நல்லறம் என்று போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர்.
இல்லறமே சிறந்தது என்ற கொள்கையே தமிழர்களின் உயர்ந்த அருள்நெறியை உணர்த்தும். இல்லறத்தில் வாழ் கின்றவர்களே உழைக்கின்றனர்; உற்பத்தி செய்கின்றனர்; உதவு கின்றனர். குடும்பப் பொறுப்பற்றவர்கள் எதுவும் செய்ய வேண்டும் என்ற கவலையற்றவர்கள். இது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.



