சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

9. புகழ் கெடுக்கும் புன்மை

அவர் மிகவும் கண்டிப்பானவர்: உண்மையானவர்: வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுதான் பேசுவார்: அவர் நம்மைப் பலமுறை அலைய வைக்க மாட்டார்; முடியும் அல்லது முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார் என்று சில மனிதர்களைப் பற்றி பேசுகின்றோம். இத்தகைய குணமுள்ள சிலர் இருக்கின்றனர். இவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். இவர்களை அனைவரும் சிறந்த மனிதர்கள் என்றுதான் எண்ணுவார்கள்; கொண்டாடுவார்கள்.

மக்கள் பின்பற்றவேண்டிய சிறந்த குணங்களிலே இது ஒன்றாகும்; தலைசிறந்த குணமும் ஆகும். அதிலும், செல்வாக் குடன் இருக்கும் மக்களுக்கு – அதிகாரத்திலிருக்கும் மக்களுக்கு – இம்மாதிரியான தன்மை மிகவும் இன்றியமையாதது.

தன்னிடத்தில் ஒரு காரியத்தை நாடி வருகின்றவரை வீணாகக் காக்க வைக்கக்கூடாது; பல தடவை வந்து அலையும் படி செய்யவும் கூடாது. தன்னால் செய்யக்கூடிய காரியமானால்- உதவியானால் – உடனே செய்து அனுப்பி விடவேண்டும். செய்ய முடியாத காரியமானால், ஐயா! என்னால் அக்காரியம் செய்ய முடியாது; வீணாக என்னை நீங்கள் நம்புவதில் பயனில்லை; என்னைத் தேடி அலைவதும் வீண் முயற்சிதான்; வேறு யாரை யாவது கொண்டு உங்கள் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கூறிவிடுவதுதான் உயர்ந்த குணமாகும்.

முடிந்ததை முடியும் என்று சொல்லிச் செய்வதும் முடியாததை முடியாது என்று சொல்லிவிடுவதும் உயர்ந்த குணம் என்பதில் ஐயமில்லை. இவர்களுக்கு நண்பர்கள்தான் பெருகுவார்களே யன்றிப் பகைவர்கள் பெருகமாட்டார்கள்.

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் இத்தகைய குணத்தைப் பாராட்டியிருக்கும் பாடல்கள் பல. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இத்தகைய குணத்தைப்பற்றி மிகவும் புகழ்ந்து கூறப்படு கின்றது.

இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஒரு பாண்டிய மன்னன். ஆவூர் மூலங்கிழார் என்பவர் ஒரு புலவர். அவர் அப் பாண்டிய மன்னனிடம் பரிசில் பெறவேண்டிச் சென்றார். மன்னவன் புலவர் வந்திருக்கும் செய்தியை அறிந்தான். அறிந்தும் அவன் உடனே அவருக்குப் பரிசில் கொடுத்து அனுப்பவில்லை; காலந் தாழ்த்திக்கொண்டே வந்தான். அதைக் கண்ட புலவர் அந்த மன்னவனுக்கு அறிவுரை கூறவேண்டும் என்று கருதினார்; அவனுடைய இந்த கெட்ட குணத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த அரசனைப் பார்த்து ஆவூர் மூலங் கிழார் கூறியதாவது;

மன்னவனே! தம்மால் கொடுக்கமுடிந்த பொருளை முடியும் என்று சொல்லிக் கொடுப்பது; தம்மால் கொடுக்க முடி யாத பொருளை முடியாது என்று மறுத்து விடுவது. – இந்த இரண்டும் நல்ல குணந்தான்; உதவி செய்யும் தன்மையோடு கூடிய நட்பின் தன்மைதான்.

தன்னால் முடியாததை முடியுமென்று சொல்லுதல், தன்னால் செய்யமுடிந்தததைச் செய்யமுடியாது என்று மறுத்தல் – இந்த இரண்டு செயலும் தீய குணங்கள்; தன்னிடம் உதவிதேட விரைந்துவந்த இரவலர்களைத் துன்புறுத்துவதாகும். அதுமட்டு மன்று; ஈவோரின் புகழ் தேய்ந்து போவதற்கான வழியுமாகும்.

நீ என்னிடம் இத்தன்மையுடன் நடந்து கொண்டனை எம் குடியிலே பிறந்தவர்கள், இதற்கு முன் இத்தகைய குணமுள்ளவர் களைக் கண்டதில்லை. நாம் மட்டும் இன்று புதிதாக இத்தகைய குணமுள்ள உன்னைப் பார்த்தோம்.

நீ செய்த தவறால் உனக்கு யாதொரு குற்றமும் நேரா திருக்கவேண்டும்; உன் புதல்வர்கள் நோயின்றி வாழவேண்டும்; எனது வேண்டுகோளும் விருப்பமும் இதுவாகும்.

வெயில் என்று வெறுக்காமல், பனியென்று சோம்பியி ராமல் கல்லாற் செய்யப்பட்டது போன்ற உடம்பையுடைய நான் போகின்றேன்.

காற்றை மறைத்துக் கொண்டிருக்கின்ற ஏழ்மை நிறைந்த என் இல்லத்திலே, நாணம் என்ற அணிகலனைத் தவிர வேறு அணிகலனே இல்லாத கற்பு நிறைந்த என் மனைவியை நினைந்து நான் செல்லுகின்றேன். நீ நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக.

இவ்வாறு பாண்டியனைப் பார்த்துக் கூறிச் சென்றார் புலவர். இந்த நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 196-வது பாடல் எடுத்துக்காட்டுகின்றது. அது ஆவூர் மூலங்கிழார் பாட்டு. அப் பாட்டும், அதன் பொருளும் கீழ்வருவன:

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல், அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில்; அத்தை,
அனைத்து ஆகியர்; இனி இதுவே, எனைத்தும்,
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்
நோயிலர் ஆக நின் புதல்வர்; யானும்
வெயில்என முனியேன், பனியென மடியேன்;
கல்குயின் றன்ன, என் நல்கூர் வளி மறை
நாண் அல்லது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்இயல் குறுமகள் உள்ளிச்
செல்லல், அத்தை; சிறக்கநின் நாளே.

(புறம். 196)

பாண்டியன் கொடுக்கும் வல்லமையுள்ளவன்; இருந்தும் காலந்தாழ்த்திருந்தான். அவன் காலந்தாழ்த்தமை கொடாமைக் குத்தான் அறிகுறியாகும். ஆதலால் தன்னால் முடிந்ததை முடியாது என்று கூறுவது போலவே அவன் நடந்து கொண் டான். இது அறநெறிக்கு முரணானது. அற நெறிக்கு முரணாகப் பாண்டியன் நடந்து கொண்டாலும் அவனுக்கோ, அவன் குடும்பத்துக்கோ எத்தகைய தீமையும் நேரக்கூடாது என்பது புலவர் கருத்து. ஆதலால் அவன் பிள்ளைகளையும், அவனையும் புலவர் வாழ்த்திச் சென்றார். இது தமிழரின் அருள்நெறியை உணர்த்துவதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !