
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
5. செல்வரும் ஆலமரமும்
வறியவர்க்கு இவ்வுலகில் வாழ்வில்லை. செல்வம் உள்ளவர்களே சிந்தை மகிழ்ந்து சிறந்த இன்பத்தை நுகர்வார்கள். இது எந்தக் காலத்திலும் உள்ள இயற்கை உண்மை. ஆதலால் தான் அக்காலத்திலும் இக்காலத்திலும் செல்வத்திற்கு மதிப்புக் கொடுத்தனர்.
ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுவோம். மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்கு வேண்டிய பண்டங்கள் எல்லாம் நிரம்பியிருக்கும் நாட்டில்தான் அமைதி நிலவும்; இன்பம் தழைக்கும்; மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்கு வேண்டிய கலைகள் எல்லாம் வளர்ந் திருக்கும்; மக்கள் மனப் பண்பும் உயர்ந்திருக்கும். அவர்கள் ஒழுக்கந் தவறாமல் வாழ்வர்; உலகுக்கு வழிகாட்டும் நன்மக்களாக நாள்தோறும் சிறந்து வாழ்வார்கள்.
வறுமை குடிகொண்டிருக்கும் நாட்டிலே அமைதியைக் காணமுடியாது; மக்களிடையிலே ஆனந்தம் தாண்டவம் ஆடாது; உயிரினும் சிறந்த ஒழுக்கத்தையும் உதறித் தள்ளுவார்கள். தங்கள் வாழ்க்கைப் பள்ளத்தை நிரப்பிக் கொள்ளுவதே மக்களுடைய குறிக்கோளாக இருக்கும். அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். பஞ்சப் பிணி மக்களை வாட்டுங் காலத்திலே இத்தகைய கொடும் நிகழ்ச்சிகளை நாம் கண் கொண்டு பார்க்கலாம்.
பண்டோ, அல்லது இன்றோ தோன்றிய இதிகாச புராணங்கள் எவற்றை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலே நாட்டுச் சிறப்புக்களையும், நகரப் பெருமைகளையும் பற்றி நவில்வதைக் காண்கிறோம். நாட்டுச் சிறப்பும், நகரப் பெருமைகளும் புலவர்களுடைய கற்பனைத் திறத்திலே பிறந்த காட்சிகளாக இருக்கலாம். ஆயினும் அவற்றுள் ஓர் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அந்த உண்மை, வறுமையற்ற நாடு; செல்வம் நிறைந்த நகரம் என்பது தான். இப்படிப் புகழ்ந்து பாடியிருப்பது தான் அவ்வுண்மை.
வறுமையற்ற நாட்டிலேதான் மக்கள் மனக்குறையில்லாமல் வாழ்வார்கள். செல்வம் நிரம்பிய நகரத்திலேதான் மக்கள் சிறுமைப்படாமல் வாழ்வதற்கு வழியுண்டு என்ற உண்மைகளை உணர்த்துவதற்காகவே புலவர்கள், நாட்டு, நகரச் சிறப்புகளைப் புனைந்துரைத்தனர்.
இந்தப் பொதுக்கொள்கை ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். செல்வம் பெற்ற மனிதனே சிந்தையிலே கலக்க மின்றி அமைதியுடன் வாழமுடியும். இதை எண்ணித்தான் இடம், பொருள், ஏவல் என்ற மூன்றையும் முதற்செல்வமாகக் குறித்தனர். வாழ்வதற்கு வசதியுள்ள இடம், வேண்டியவற்றைப் பெறுவதற்குப் போதுமான செல்வம், உதவி செய்யும் உறவினர்கள் இவை மூன்றும் உடையவரே இன்பத்துடன் வாழ்க்கை நடத்த முடியும் என்றனர்.
செல்வம் பெற்றவர்கள், அவர்கள் மட்டும் அச் செல்வத் தைக் கொண்டு இன்பம் நுகர வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை. தந்நலத்துக்காக மட்டும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று ஒருவரும் உரைக்கவில்லை. தாம் வாழ்வும், தம்மை அண்டியிருப்போர் வாழ்வும், துன்புறுவோர் துயரைத் துடைக்கவுமே அரும்பொருளைச் சேர்க்க வேண்டும் என்பதே நீதி நூல்களின் கொள்கை.
செல்வத்தைச் சேர்த்து வைத்து அழகு பார்ப்பவனை அறிஞர்கள் வெறுத்தனர்; அவனை கஞ்சன், உலோபி, தந்நலக் காரன் என்றெல்லாம் பெயரிட்டு அழைத்தனர். பிறருக்கு உதவும் நோக்குடன் பொருள் ஈட்டும் பெருந் தன்மையுள்ளவனைப் பாராட்டினர். உபகாரி, கொடை வள்ளல், பேரறிவாளன், நல்லறிவாளன் என்றெல்லாம் புகழ்ந்தனர்.
ஊர்உணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்பேர் அறிவாளன் திரு
என்பது வள்ளுவர் வாய்மொழி. பெரியோர்களால் பாரட்டப்படும் பெரிய அறிவுள்ளவனிடம் உள்ள செல்வம் அனைவர்க்கும் பயன்படும்; அது ஊராரால் தண்ணீர் எடுத்து உண்ணப்படும் குளத்திலே நீர் நிறைந்திருப்பது போன்றதாகும் என்பது இக்குறளின் பொருள்.
ஒருவனுடைய செல்வம் பலர்க்கும் பயன்படவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. பலர்க்கும் உதவி செய்யும் செல்வர் களைத்தான் பண்டைத் தமிழர்கள் சிறந்த செல்வர்களாக நினைத்தனர்; போற்றினர்.
அறிவுள்ளவர்களிடம் – இரவலரை வரவேற்று உதவி செய்யும் கருணையாளர்களிடம் – செல்வம் நிறைந்திருக்க வேண் டும். இவர்களிடம் உள்ள செல்வம், வறுமையுள்ளவர்களின் செல்வமாகும். இத்தகைய புரவலர்களிடம் உள்ள வறுமை இரவலர்களின் வறுமையே ஆகும் என்ற உண்மையைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று எடுத்துரைக்கின்றது. அப் பாடல் செல்வரை ஆலமரத்திற்கு ஒப்பாகவும், அவர்களிடம் செல்லும் இரவலரைப் பறவைக் கூட்டத்திற்கு ஒப்பாகவும் கூறியிருக் கின்றது. இத்தகைய உவமையமைந்த அரிய செய்யுளைக் கீழே காண்போம்:
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே கலிகொள் புள்இனம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெரும்செய் ஆடவர்
உடைமை, ஆகும் அவர் உடைமை;
அவர்இன்மை, ஆகும் அவர் இன்மையே.
(புறநா. 199)
தெய்வம் வாழ்கின்ற ஆலமரத்தினது பெரிய கிளையிலே பழுத்த பல பழங்களையும், நேற்று தான் கொத்தித்தின்றோ மென்று நினைத்து ஓசையிடுகின்ற பறவைக் கூட்டம், மீண்டும் அந்த மரத்தை அணுகாமல் இருப்பதில்லை. அத்தன்மையுள்ள வர்களே இரவலர்களும். அவர்களை ஆதரிக்க எதிர்கொண்டு அழைத்து மிகுந்த நன்மையைச் செய்வர் கொடை வள்ளல்கள். அத்தன்மையுள்ளவர்களின் உடைமை – செல்வம் – அவ்விரவலர் களின் செல்வமே யாகும். அவ்வுபகாரிகளின் வறுமை, அவ்விர வலர்களின் வறுமையே ஆகும்.
செல்வம் பெற்ற மக்கள் எப்படி, வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே இச் செய்யுள். இக்கால நிலைக்கு இச் செய்யுளின் கருத்து முரண்பட்டதாயிருக்கலாம்.
இக்காலத்திலே பிறரிடம் சென்று பிச்சை கேட்டுப் பொருள் வாங்கிப் பிழைப்பதை அறிவுள்ளோர் ஆதரிப்ப தில்லை. பிச்சை யானாலும் – யாசகமானாலும் – நன்கொடை பெறுவதனாலும் – எல்லாம் ஏறத்தாழ ஒன்றே தான். உழைக்க வேண்டும்; ஊதியம் பெற வேண்டும்; வாழ வேண்டும்; ஊதியம் என்பது பற்றாக்குறையாக இல்லாமல் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்க வேண்டும்; இதுவே இக்காலக் கொள்கை. இக்கொள்கைக்கு பண்டைக் கொள்கை முரண்பட்டது தான். ஆயினும் செல்வமுள்ளவர் கொடையாளியாக வாழ வேண்டும் என்னும் கொள்கை பண்டைக்காலச் சமுதாய அமைப்பிலே இன்றியமையாத ஒரு பண்பட்ட கொள்கையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
செல்வம் படைத்தவர்கள் சிலர்; வறியவர்கள் பலர். இந்தச் சமுதாய அமைப்பு நிலைத்திருந்த காலத்திலே ஈகையும், இரப்பும் நிலவியிருந்தன. இதனாலேயே மக்களுக்குள் சண்டை சச்சரவின்றி ஒழுக்கமும் நீதியும் நிலவியிருந்தன. பிறருக்கு உதவி செய்வது மக்கள் கடமை; பிறருக்கு உதவி செய்யும் குணமே மக்கட் பண்பு என்னும் உண்மையும் உதவி செய்வோர்களின் மூலம் உலகிலே பரவி வந்தது. மிருகங்கள் பறவைகளை விட மனிதர்கள் உயர்ந்த பண்புள்ளவர்கள் என்பதை மெய்ப்பிக்க இதைத் தவிர வேறு வழியில்லை. ஆதலால்தான் ஈகைத் தன்மையை ஏற்றிப் போற்றினர்.



