
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
14. அருளே அரசியலுக்கு அடிப்படை
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி. அற்பன் என்றால் அறிவில்லாதவனைக் குறிக்கும். ஆராய்ந்து பார்க்கும் அறிவற்றவன் திடீரென்று ஏராளமான செல்வத்தைப் பெற்றுவிட்டால் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாதுதான்.
இப்பழமொழியின் கருத்தை வேறுவிதமாக மாற்றிக் கூறுவோர் சிலர் உண்டு. அற்பன் என்பது வறுமையாளனைக் குறிக்கும் என்பர். வறுமையிலேய பிறந்து செல்வத்தையே காணாமல் வாடிய ஒருவனுக்குப் பணம் வந்துவிட்டால் அவன் தலைகால் தெரியாமல் துள்ளுவான் என்று சொல்லுவர்.
இது அவ்வளவு பொருந்தாது. வறுமையால் வாடியவன் செல்வத்தின் சிறப்பை அறிவான்; அருமையை உணர்வான். ஆதலால் அவன் அதனை ஆடம்பரமாக வீண்செலவு செய்து விடமாட்டான். கஞ்சத்தனம் செய்தாலும் செய்வானே தவிர, கண்மூடித்தனமாகச் செலவு செய்துவிட மாட்டான். இதுதான் இயற்கை யாகும். அறிவற்றவன்தான் ஆகாத செயல்களிலே செல்வத்தை அநியாயமாகச் செலவழிப்பான். அதனால் இன்பமும், புகழும் எய்துவதற்கு மாறாகத் துன்பமும், தொலையாத அவமதிப்பும் அடைவான்.
இதுதான் பழந்தமிழர்களின் கருத்துமாகும். இதை விளக்கும் பழம்பாட்டு ஒன்று உண்டு. அது வெறும் கற்பனை பாட்டு அன்று. செல்வத்திலே சிறந்து நிற்கும் ஒருவனுக்கு அறிவுரை கூறும் அருந்தமிழ்ச் செய்யுள்.
ஒரு காலத்தில் கருவூர் சேரர்களின் தலைநகராயிருந்தது. சேர மன்னர்களைச் சேர்ந்தவர்கள் அந்த நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்டிருக்கின்றனர். இதற்குச் சரித்திரச் சான்றுகள் உண்டு. இதை வைத்துக் கொண்டு கருவூர்தான் வஞ்சிமாநகரம் என்று சாதிப்போரும் உண்டு.
ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் ஒரு சேரமன்னன். இவன் வாட்போரிலே வல்லவன். இவன் கருவூரிலே இருந்து ஆட்சிபுரிந்தான். இவன் சிறந்த வீரனாயிருந்த தோடு, ஒப்பற்ற செல்வமும் பெற்றிருந்தான்.
இவன் காலத்திலிருந்த வேந்தர்களின் இவனே சிறந்த செல்வம் உள்ளவன்.
இவனை நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் கண்டார். அப்பொழுது அவர் உள்ளத்தில் என்ன தோன்றிற்றோ! இரும் பொறையின் செல்வத்தையும் வீரத்தையும் கண்டதும் அவர் சிந்தனையில் ஒரு உண்மை பிறந்திருக்க வேண்டும்.
வீரமும் செல்வமும் ஒன்று சேர்ந்துவிட்டால் செருக் கென்னும் குழந்தை பிறக்காமல் போகாது. செருக்கென்னும் செல்வப் புதல்வன் யாரையும் பொருட்படுத்த மாட்டான். மனம்போன போக்கில் எல்லாம் போய் அல்லல்களிலே மாட்டிக் கொள்வான். தன்னைப் பெற்றெடுத்த வீரமும் செல்வமும் வீழ்ந்து வீணாகும்படியான செயல்களையெல்லாம் செய்து விடுவான். என்ற உண்மை அவர் உள்ளத்திலே பிறந்தது. ஆதலால் அவர் அந்த அரசனுக்கு அறிவுரை கூறவேண்டு மென்று தீர்மானித்தார்.
இவன் குலப்பெருமை படைத்த சேரமன்னன். வீரத்திலும் செல்வத்திலும் நிகரற்று விளங்குகின்றவன்; நானோ ஒரு ஏழைப் புலவன். ஏழை பேச்சு அம்பலம் ஏறாது என்று சொல்லுவார்கள். ஆகையால் நான் சொன்னால் இவன் கேட்பானா? மாட்டானா? என்ற எண்ணம் அவர் நெஞ்சிலே பிறக்காமல் இல்லை. இவ்வெண்ணத்தால் சிறிது தயங்கித்தான் நின்றார்.
உடனே கடமை உணர்ச்சி – தமிழர் பரம்பரையின் அருள் உள்ளம் – எது வரினும் உண்மையை உரைத்தே தீர்வது என்ற தமிழர் வீரம் அவர் உள்ளத்திலே தலையெடுத்தது. இம்மன்னன் தீய நெறியிலே செல்லாமல் தடுக்கவேண்டியது நமது கடமை என்று உறுதி கொண்டார். ஆதலால் அச் சேரமன்னனைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்; பேசுவதுபோலப் பாடத் தொடங்கினார்.
சேரமன்னனே! உன்னுடைய நாடு கானக நாடு. உனக்குக் காட்டுச் செல்வமும் உண்டு நாட்டுச் செல்வமும் உண்டு. எருமைபோலக் காணப்படும் கருங்கற்கள் நிறைந்த இடங்களில் எல்லாம் பசுவைப்போலப் பல யானைகள் நிறைந்து கிடக் கின்றன. பசு மந்தையைப் போல உன்னிடம் யானைக் கூட்டங்கள் நிரம்ப உண்டு. இத்தகைய காடுகள் நிறைந்த நாட்டின் தலைவன் நீ; மிகச் சிறந்த பெருமையுடையவன்.
நீ ஒப்பற்றவனாக விளங்குகின்றாய்! உன்னை எதிர்க்கும் வேந்தர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை. பகைவர்கள் உன்னை அணுகுவதற்கு அஞ்சும்படியான வீரத்தையும், செல்வத்தையும் உடையவனாக விளங்குகின்றாய். இத்தகைய உனக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். நீ கேட்டாலும், கேட்காவிட்டாலும் நான் உறுதியாகச் சொல்லித்தான் தீரவேண்டும். நான் சொல்வது உன் செவிக்கு இனிமை தராவிட்டாலும் – கசப்பாயிருந்தாலும் உனது நன்மைக்காகவே சொல்லுகிறேன். உனது நன்மைக்காக மட்டும் அன்று; இந்த நாட்டின் நன்மைக்காகவும் சொல்லு கிறேன்; இந்த நாட்டு மக்களின் நன்மைக்காகவும் சொல்லு கிறேன்.
உன் வீரத்தையும் செல்வத்தையும் பார்த்துப் பலர் உன்னைப் பாராட்டிப் போற்றுவார்கள். உன்னைக் கொண்டாடு வோர் அத்தனை பேர்களையும் அறிவாளிகள் என்று எண்ணி ஏமாந்துபோகாதே. அவர்களிலே இரக்கமும் அன்பும் அற்றவர்கள் பலர் உண்டு. அவர்கள் எப்பொழுதும் நரகத்திலேயே கிடந்து உழலத் தகுந்தவர்களாயிருப்பார்கள். அப்படிப்பட்ட கொடுமைக் காரர்களுடன் நீ கூட்டுறவு வைத்துக் கொள்ளக்கூடாது. இரக்கமும் அன்பும் இல்லாதவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் நீயும் இரக்கத்தையும் அன்பையும் விட்டு விடுவாய். இரக்கமும் அன்பும் உன்னைவிட்டு ஓடிவிடுமானால் உன் வீரமும் செல்வமும் என்ன நிலையை அடையும் தெரியுமா?
தள்ளாடித் தடுமாறுவோரைத் தாங்கி வாழ வைப்பதே வீரத்தின் செயல். இதற்கு மாறாக உன் வீரம் தந்நலங் கருதிக் கொடுமையாக மாறிவிடும். துன்புறுவோரை இன்புறுத்து வதற்குப் பயன்படுவதே செல்வத்தின் சிறப்பு. இதற்கு மாறாக உன் செல்வம் உனக்கும் உனது கூடாநட்பினரின் ஆடம்பரத்துக்குமே பயன்பட்டு அழிந்து போகும். ஆதலால்தான் அருளும் அன்பும் அற்றவர்களுடன் சேராதே என்று சொல்லுகிறேன்.
நீ உனது நாட்டை நன்றாகப் பாதுகாப்பதிலே கருத்தைச் செலுத்து. குழந்தையை வளர்ப்பவர்கள் எவ்வளவு கருத்தோடு – பாதுகாப்போடு – அதை வளர்ப்பார்களோ அவ்வாறு நீ உன் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு என்பது இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இரக்க மற்றவர்களிடம் நால்லாட்சி மாட்டிக்கொண்டால், அந்நாட்டு மக்கள் தாயில்லாப் பிள்ளைகளைப்போலத் தவியாய்த் தவிக்க வேண்டியதுதான். இத்தகைய நாடுகாவல் கிடைத்தற்கரிய செல்வமாகும். ஆதலால் நீ இந்த உண்மையை மறந்துவிடாதே என்று கூறினார் புலவர். அச்செய்யுள் கீழ்வருவது:
எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனில் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ! பெரும!
நீஓர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்!
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே; அதுபெறல் அரும் குறைத்தே.
(புற. 5)
எட்டே வரிகள் கொண்ட இச்சிறிய செய்யுளிலே எத் துணை அரும்பொருள் அடங்கியிருக்கிறது என்பது மேலே காட்டப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் எவ்வளவு இரக்கச் சிந்தை படைத்தவர்களாயிருந்தனர் என்பதற்கு இச் செய்யுள் ஒரு எடுத்துக்காட்டாகும்.
மன்னர் ஆட்சி நடைபெற்று வந்த அக்காலத்திலே மக்களிடம் அன்பு கொண்ட புலவர்களும் அமைச்சர்களும் மன்னர்களை அடக்கி ஆண்டு வந்தனர். ஆட்சிமுறை அருளை யும், அன்பையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதே பழந்தமிழர்களின் கருத்தாகும். இக் கருத்தை இச் செய்யுள் உள்ளங்கையில் உள்ள பதுமை போல் விளக்கிக் காட்டுகின்றது.



