
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
30. இருகால் எருதுகள்
இனி என்ன செய்யவேண்டும்? வாழ்வதற்கு வழி என்ன? இன்புறுவதற்கு நெறியுண்டா? துன்பத்தைத் தொலைக்க என்ன செய்யலாம்? வரும் இடையூறை எப்படித் தடுப்பது? இப்படி யெல்லாம் எண்ணிப் பார்ப்பவர்களே அறிவுள்ள மக்கள் ஆவார்கள்.
ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, எதிர்காலத் தைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றவர்களே சிறந்தவர்கள். இவர் கள்தாம் இன்னல்நெறியிலிருந்து தப்ப முடியும்; நன்னெறியிலே நடக்க முடியும்.
எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கும் குணம் சிலரிடம் இருப்பதில்லை. நடந்ததைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப் பார்கள்; பேசிக்கொண்டிருப்பார்கள். இரவுபகல் எந்த நேரத்திலும் கடந்தவற்றைப்பற்றியே நினைப்பு; அவற்றைப் பற்றியே அடிக்கடி பேச்சு.
இவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரைகளை எடுத்துரைத் தாலும் பயன்படாது. நடந்தவற்றை மறந்து விடுங்கள்; அவற்றை எண்ணவேண்டாம்: பேசவேண்டாம்; நடந்தவற்றைப்பற்றி நினைப்பதாலும், பேசுவதாலும் எப்பயனும் ஏற்படமாட்டா என்று சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
எப்பொழுதும் சென்ற செய்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சுக்கும் இறந்தவர்களைப் பற்றி எண்ணி வருந்திப் பெண்கள் ஓலமிடும் ஒப்பாரிக்கும் ஒரு வேற்றுமையும் காண முடியாது.
கடந்தவற்றைப்பற்றியே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தம்மையும் துன்புறுத்திக் கொள்ளுவார் கள்; தம்மைச் சேர்ந்தவர்களையும் கவலைக் குழியிலே தள்ளிச் சித்திரவதை செய்வார்கள்.
சென்ற நிகழ்ச்சிகளைப்பற்றியே எண்ணிப் பேசிக் கொண் டிருப்பவர்கள் உள்ளத்திலே ஒருபொழுதும் அமைதியிருக்காது. அமைதியில்லாவிட்டால் ஆனந்தமாக வாழ்வது எப்படி? எப்பொழுதும் கவலையிலேயே அவர்கள் காலம் கழிந்து கொண்டிருக்கும். ஆதலால்தான் கழிந்தவற்றைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று எல்லா அறிஞர்களும் சொல்லிவைத் திருக்கின்றனர்.
நடந்தவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்களிலே இருதிறத்தினர் உண்டு.
ஒருசார்பினர் கடந்த காலத்திலே தாம் அடைந்த துன்பங் களைப்பற்றிப் பேசுவார்கள்; தாம் சாதித்த சாதனைகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருப்பார்கள்; வாழ்க்கையிலே தமக்கு நேர்ந்த துன்பங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உயர் பதவியை அடைந்ததைப் பற்றிச் சொல்லுவார்கள்.
இத்தகைய வர்கள் இன்று நல்ல நிலையிலே வாழ்வார்களானால் அவர் களால் யாருக்கும் ஆபத்தில்லை; துன்பம் இல்லை. அவர்களும் முன்னிருந்ததைவிட இன்று நல்ல நிலையில் வாழ்வதை எண்ணி எண்ணி இன்பம் எய்துவார்கள்.
கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள் எமது பழமையைப்பற்றி நினைப்பதனால், அவர்களின் உள்ளத்தின் அமைதி குலைந்துவிடாது; அவர்கள் வாழ்க்கையிலே எந்த இடையூறும் ஏற்பட்டுவிடாது. அவர்கள் வாழ்க்கையிலே அமைதியும் மகிழ்ச்சியுமே கலந்து கிடக்கும்.
அன்று நாம் உயர்ந்த நிலையிலிருந்தோம்; இன்று தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று எண்ணுவோரும், பேசு வோரும் பலர் உண்டு. இவர்கள் அமைதியாக வாழும் வழியை அறியாதவர்கள்.
சில மனிதர்கள் தமது பழம்பெருமையைப் பற்றிப் பேசிக் கொள்ளுவதிலே அளவுகடந்த மகிழ்ச்சியடைவார்கள். இன்றி ருக்கும் நிலையைப்பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்கவே மாட்டார்கள். இன்று நல்ல நிலையிருந்தாலுங்கூடப் பழம் பெருமையைச் சொல்லிக் கொள்ளுவதிலேதான் அவர்களுக்குத் தனியொரு மகிழ்ச்சி.
அந்தக் காலத்தில் நான் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளானதில்லை. துன்பம் என ஒன்று இருப்பதாகவே எனக்குத் தெரியாது. செல்வத்திலே கிடந்து புரண்டேன்; இன்பக் கடலிலே மூழ்கி நீந்தி விளையாடினேன்; இன்று என் கதி இப்படி யாயிற்று என்று எண்ணி எண்ணிப் பேசிப் பேசிப் பெருமூச்சு விடுவோர் உண்டு. இவர்கள் அறிவுடையவர்கள் கூட்டத்திலே சேர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்.
இன்னும் சிலர் தம்முடைய அழகைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று அவர்களைப் பார்த்தால் அசல் அனுமந்த ராயராகக் காணப்படலாம். நானே அழகுள்ளவன்; மன்மதன் அவதாரம் நானேதான் என்று சொல்லுவார்கள். இவ்வாறு சொல்லிக்கொள்ளும் ஆண்களும் உண்டு. அலர்மேல் மங்கை – திருமகள் – இலக்குமி தேவி என்றால் நானேதான்! என்னை விட அழகுள்ளவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? என்று சொல்லிக்கொள்ளும் பெண்களும் உண்டு.
பழைய காலத்தில் துன்பமில்லாமல் வாழ்ந்தோம்; இன்று துன்பத்திற்கு ஆளாகித் துடிக்கின்றோம். அக்காலத்தில், கண்டவர்கள் விரும்பும் அழகுள்ளவராகக் காணப்பட்டோம்;
இன்று, பார்ப்போர் அருவருக்கும் உருவெடுததுள்ளவராக மாறிவிட்டோம் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் மனிதர் களே அல்லவாம். அவர்கள் உருவத்திலே மனிதர்களாயிருந் தாலும் பண்பிலே விலங்கினத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு கூறுகின்றார் ஒரு பழந்தமிழ்ப் புலவர்.
எருதுகளுக்கு நான்கு கால்கள் உண்டு. இரண்டு கால் களையுடைய எருதுகள் இல்லை. இரண்டு கால்களையுடைய எருதுகள் இருந்தால் அது வியப்புக்குரியதாகும் அன்றோ?
முன்பு துன்பமில்லாமல் வாழ்ந்தோம்; நாங்கள் தான் அழகுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் இருகால் எருதுகளாம்! என்ன வியப்பு!
சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் காரி ஆசான் என்பவர் இந்தத் தற்புகழ்ச்சிக்காரர்களை இருகால் எருது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
தேவரே கற்றவர்; கல்லாதர் தேருங்கால்பூதரே;
முன்பொருள் செய்யாதார் – ஆதரே;
துன்பம் இலேம் பண்டு, யாமே வனப்புடையேம்,
என்பார் இருகால் எருது.
இச்செய்யுளின் பின்னடிகள் குறிப்பிடத்தக்கவை. துன்பம் இலேம் பண்டு; யாமே வனப்புடையேம்; என்பார் இருகால் எருது என்ற அடிகள் குறிப்பிடத்தக்கவை.
கல்வி கற்றவர்கள் தேவர்களைப் போன்றவர்கள்; கல்வி கற்காதவர்கள் பைசாசங்களைப் போன்றவர்கள்; முதுமைக் காலத்துக்கு வேண்டிய செல்வத்தை இளமைக் காலத்திலேயே சேர்த்து வைத்துக்கொள்ளாதவர்கள் அறிவில்லாதவர்கள். முன்பு நாம் செல்வம் உள்ளவராயிருந்து துன்பம் இன்றி வாழ்ந்தோம்; நாம் தாம் அழகுடையேம் என்பார் இருகால் எருதுகள் ஆவார்கள்.
இதுவே இச்செய்யுளின் பொருள். பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பவர்களும், தம் அழகைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கின்றவர்களும் முன்னுக்கு வரமுடியாது; வாழ்க்கை யிலே இன்பம் பெறமுடியாது என்ற கருத்தை வலியுறுத்துவதே இதன் நோக்கம். பழம் பெருமையைப் பேசாதவர்களே வருங்கால வாழ்வுக்காக உழைப்பார்கள்.
முற்றும்.
★ ★ ★



