சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

27. பசுவைப் பாதுகாத்தல்

மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் உயிர்களைக் கொல் லாமல் பாதுகாக்கவேண்டும் என்பது பழந் தமிழர் கொள்கை. அது மட்டும் அல்ல. அவ்வுயிர்களை நன்றாக வளர்க்க வேண்டும்; அவற்றால் பெரும்பயனைப் பெற வேண்டும் என்பதும் தமிழ் மக்களின் பண்பாகும்.

மற்ற உயிர்களைக்காட்டிலும் பசுவைப் பரிபாலிப்பதிலே பழந்தமிழர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். தமிழர்கள் மட்டும் அன்று; பாரதநாடே இதில் கருத்தைச் செலுத்தி வந்தது. திருமால் கண்ணனாகப் பிறந்து பசுக்களை மேய்த்தான் என்னும் கதையும், மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் பசுக்களையும், உழவுக்கு உதவி செய்யும் காளைகளையும் நன்றாகப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டதுதான்.

பசும்பால் மிகவும் இனிமையானது; பால்களிலே மிகவும் உயிர்ச் சத்து நிறைந்தது; மக்களுக்கு நல்ல உடல்நலத்தை ஊட்டவல்லது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட செய்தி. பசும்பாலின் சிறப்பைப் பற்றியும், அதில் உள்ள உணவுச் சத்தைப்பற்றியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் அறிந்திருந்தனர். ஆகையால்தான் எல்லா நாடுகளிலும் பால் தரும் பசுக்களைப் பாராட்டி வளர்த்து வந்தனர்; இன்றும் வளர்த்து வருகின்றனர்.

பண்டைத் தமிழகத்திலே பசுக்கள் மேய்வதற்கென்று தனி நிலங்கள் உண்டு. நன்றாகப் புல் வளரக் கூடிய செழித்த நிலங்கள் பசுக்கள் மேய்வதற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும். அரசாங்கமே இவ்வாறு நிலங்களை ஒதுக்கிவிட்டது.

இன்றுங்கூட நாட்டுப்புறங்களிலே மாடுகள் மேய்வதற் கான பொது நிலங்கள் உண்டு. இந்நிலங்களை மந்தைவெளி யென்றும், மேய்ச்சல் நிலமென்றும் அழைக்கின்றனர். இந்நிலம் ஊருக்குப் பொதுவான நிலமாகும்; தனிப்பட்ட யாருக்கும் உரிமையுள்ளதன்று.

புல் மேய்ந்த பசுக்களின் பால் மிகவும் சத்தும் இனிமையும் உள்ளது. உலர்ந்து போன தானியங்களையும் வைக்கோல் முதலியவற்றையும் தின்று வளரும் மாடுகளின் பாலிலே அவ்வளவு கொழுப்பில்லை; இனிமையுமில்லை; தம் விருப்பப் படி பசும்புல்லை மேய்ந்து வரும் பசுக்களின் பால்தான் சிறந்தது என்பது எல்லோருமறிந்த உண்மை. இதற்காகத்தான் முன்னோர் கள் மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி வைத்தனர்.

பசுவை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்; அதனுடைய பால் மக்கள் வாழ்வுக்கு மிகவும் வேண்டியதொன்று; பசு மிகவும் சாதுவான விலங்கு; அதற்குத் துன்பம் செய்வது கூடாது; என்ற கருத்தை விளக்கும் கதைகளும் பல உண்டு.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையுள் இக்கருத்துடைய கதை ஒன்றுண்டு. பசுவின் சிறப்பைக் கூறி அதைக் காப்பாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே அக்கதை புனையப்பட்டது என்று சொல்லிவிடலாம்.

ஆபுத்திரன் என்பவன் வேத வேதாந்தங்களையெல்லாம் கற்றறிந்தவன். அவன் இருந்த ஊரிலே ஒருநாள் வைதீகப் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு யாகம் செய்யத் தொடங்கினர். அந்த யாகத்திலே பலி கொடுப்பதற்காகப் பசுவொன்று கட்டப்பட்டிருந்தது.

யாகச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரவு நேரத்திலே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள்தான் யாகம் முடியும். அப்பொழுதுதான் பசுவும் பலிகொடுக்கப்படும்.

இரவிலே அவ்வழியாக வந்த ஆபுத்திரன், அந்த யாகப் பசுவின் கதறலைக் கேட்டான்; உள்ளங் கலங்கினான். ஒரு பாவமும் அறியாத இந்த உத்தமமான உயிரைப் பலி கொடுக்கப் போகிறார்களே என்று எண்ணி ஏக்கமடைந்தான். அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று கருதினான்.

ஆதலால் அந்த ஆபுத்திரன் யாகம் புரிவோர் அயர்ந் திருக்கும் சமயம் பார்த்து, அந்தப் பசுவை கட்டிலிருந்து அவிழ்த்துப் பிடித்துக்கொண்டு வெளியிலே வந்து விட்டான்.

இதற்குள் யாகசாலையில் அயர்ந்திருந்த அந்தணர்கள் விழித்துக் கொண்டனர். பசுவைக் காணாமல் தேடிக் கொண்டு புறப்பட்டனர். பசுவைப் பிடித்துக் கொண்டு போன ஆபுத்திர னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர். அந்த யாகத்தைச் செய்துவைக்கும் ஆசிரியன் ஆபுத்திரனைப் பிடித்துக் கொண்டு, தன் கையிலிருந்த கோலால் அடிக்கத் தொடங்கினான். திருட்டுப் பயலே! நீ ஏன் இந்த யாகப் பசுவைப் பிடித்துக் கொண்டு வந்தாய்? நீ அந்தணன் மகனாக இருந்தும் இந்த நீசத்தன்மையான செயலை ஏன் செய்தாய்? என்று அடித்துத் துன்புறுத்தினான்.

அப்பொழுது அந்தப் பசு ஆபுத்திரன் கையிலிருந்து விடுபட்டது. மற்றவர்கள் யார் கையிலும் பிடிபடவில்லை. ஆபுத்திரனைக் கோலால் அடித்துத் துன்புறுத்தும் அந்தணர் உபாத்தியின் வயிற்றிலே தன் கொம்பால் முட்டிற்று. அவன் குடலை வெளியிலே சரியும்படி செய்து விட்டு காட்டை நோக்கி ஓடிவிட்டது.

அப்பொழுது அந்த ஆபுத்திரன் அந்த அந்தணர்களை நோக்கிக் கூறுகின்றான்:

அந்தணர்களே! என்னைத் துன்புறுத்த வேண்டாம்; நான் சொல்வதைச் சிறிது கேளுங்கள். இந்தப் பசு உங்களுக்கு யாதொரு துன்பத்தையும் செய்யவில்லை.

இந்தப் பசுவுக்கு நீங்கள் உணவு கொடுத்துக் காப்பாற்றி னீர்களா என்றால் அதுவும் இல்லை. அரசாங்கத்தால் பசுக்களுக் கென்று விடப்பட்ட நிலத்திலே, தானே முளைத்த புல்லை மேய்ந்து வளர்ந்த பசு இது.

இன்னும் இப்பசுவின் செயலைப் பாருங்கள். இப்பெரிய உலகிலே பிறந்துள்ள மக்களுக்கெல்லாம் தன்னுடைய சிறந்த இனிமையான பாலை மிகவும் அன்புடன் ஊட்டி வருகின்ற உயர்ந்த பண்புடையது.

இப்படிப்பட்ட இப் பசுவுடன் உங்களுக்கு நேர்ந்த பகைமைக்கு காரணம் என்ன? நீங்கள் எல்லாம் பழைய வேதங் களை நன்றாக பயின்றவர்கள்; அவற்றின் உண்மைகளையெல்லாம் உணர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள். நீங்கள் இப் பசுவைப் பலியிட நினைத்தது ஏன்? அதைச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

இந்தப் பகுதியை மணிமேகலை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது.

நோவன செய்யன்மின்! நொடிவன கேண்மின்!
விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து,
நெடுநில மருங்கின் மக்கட்கு எல்லாம்பிறந்தநாள் தொட்டுச், சிறந்ததன் தீம்பால்அறம்தரு நெஞ்சொடு அருள்சுரந்து ஊட்டும்,
இதனொடும் வந்த செற்றம் என்னை?
முதுமுறை அந்தணிர்! முன்னியது உரைமோ!

இதுவே அப்பகுதி யாகும். இதிலே பசுவைப் பற்றி – அதன் தன்மையைப்பற்றி – எடுத்துரைக்கும் அடிகள் படிப்போர் உள்ளத்தை உருக்கும் தன்மையுடையன. இந்த நான்கு வரிகளும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கின்றன என்பதைக் காணலாம்.

இதனால் தமிழர்கள் மனித சமுதாய வாழ்வுக்குப் பயன் படும் பிராணிகளின்மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என்பதை அறியலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !