
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
29. நான்கு நல்லுரைகள்
பழந்தமிழ் நீதிநூல்களில் பல நல்லுரைகள் கூறப்படுகின்றன. அந்த நீதியுரைகள் யாவும் இயற்கையோடு இணைந் தவை; அறிவால் ஆராய்ந்து கூறப்பட்டவை; அனுபவத்தில் கண்டறிந்து சொல்லப்பட்டவை.
பண்டைய தமிழாசிரியர்கள் தங்கள் அறிவுக்கும் அனுப வத்திற்கும் ஒத்து வராததைப்பற்றி உரைக்கமாட்டார்கள். அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராதவை உண்மைகளா கவும் இருக்க முடியாது; உறுதியாக நிலைத்து நிற்கவும் முடியாது. இது அவர்கள் அறிந்த உண்மை.
அறிவுக்கும், நடத்தைக்கும் பொருந்தாதவற்றைச் சொல்லி வைப்பது புலமைக்குப் பொருத்தம் அன்று. புலமை என்றாலே அறிவுடைமை என்றுதானே பொருள்? அறிவுக்கு ஒத்து வராதவற்றை உரைப்போரைப் புலவர்கள் என்றுதான் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்?
மெய்யுரைகள்தாம் எப்பொழுதும் நிலைத்து நிற்கும்; மக்களால் போற்றப்படும்; பின்பற்றப்படும்; பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படும். அவ்வுரைகள் வழிவழியாக மக்களுக் குப் பாடமாகப் போதிக்கப்பட்டு வரும்.
ஆயிரங்காலத்து நீதிநூல்கள் பழமையானவையானாலும், புதுமைக்கு மதிப்புக் கொடுக்கும் இக்காலத்தில் போற்றப்படு கின்றன; கற்கப்படுகின்றன. இதற்குக் காரணம் அவற்றில் பல உண்மைகள் அடங்கியிருப்பது தான்.
இதற்கு உதாரணமாக ஒரு அரிய செய்யுளைப் பார்ப் போம். இங்கே எடுத்துக்காட்டப் போகும் செய்யுள் நான்மணிக் கடிகை என்னும் நூலில் உள்ளது.
அந்தச் செய்யுளிலே நான்கு செய்திகள் சொல்லப் படுகின்றன. அந்த நான்கிலும் உண்மையும் அறிவும் பொதிந் திருக்கின்றன. அவற்றை முறையே காண்போம்.
1. எல்லாவற்றையும் நன்றாகக் கற்றறிந்தவர்கள் சென்ற தைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். சென்றதைப்பற்றிக் கவலைப்படுவதனால் எப்பயனும் ஏற்படாது. சென்றதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் மேலே செய்யவேண்டிய வேலைகள் சுணக்கமாகும். மேலே செய்யவேண்டியவற்றைச் சிறப்புடன் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் வலுப்படாது; உள்ளத்திலே ஊக்கம் பிறக்காது; முயற்சி குறையும்.
அறிவற்றவர்தாம் நடந்துபோன செய்தியைப் பற்றி எண்ணிக் கொண்டேயிருப்பார்கள்; காணாமற்போன பொரு ளைப்பற்றி நினைத்து நினைத்துக் கலக்கமடைவார்கள்; இருந்ததை இழந்துவிட்டோமே என்று ஏங்கி நிற்பார்கள்.
கல்வியுள்ளவர்கள் – உலக இயற்கையை உணர்ந்தவர்கள் – இவ்வாறு இழந்ததைப்பற்றி எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பார் களாயின் அவர்கள் அறிவாளிகள் அல்லர். அவர்கள் படித்திருந் தாலும், பல செய்திகளை அறிந்திருந்தாலும் அவற்றை அவர்கள் தம் வாழ்க்கையிலே பயன்படுத்திக் கொள்ளவில்லை யென்று தான் கருதப்படுவார்கள். ஆகையால் உண்மையாகக் கற்றறிந்த வர்கள் என்பவர்களிடம், இழந்த பொருள்களைப் பற்றி ஏக்கமே உண்டாகாது.
2. இரண்டாவது, முயற்சியுள்ளவர்கள் இடையிலே தம் முயற்சியைக் கைவிட்டுவிடமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தை நிறைவேற்ற முயலும்போது அவர்களுடைய சொல், சிந்தை, செயல் எல்லாம் அந்த முயற்சியிலேயே மூழ்கிக் கிடக்கும்.
இன்னும் காரியம் நிறைவேறவில்லையே! எப்பொழுது முடியுமோ? இவ்வளவு நாள் உழைத்தும் பலன் இல்லையே! இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு உழைக்க வேண்டுமோ, தெரியவில்லையே! என்பனபோன்ற எண்ணங்களே அவர்களி டம் எழும்பமாட்டா. காரியம் கைகூடும் வரையிலும் அலுப்பு சலிப்பின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இதுதான் உண்மையான உழைப்பாகும்; சிறந்த முயற்சியாகும்.
3. எந்தக் காரியத்தில் இறங்கவேண்டுமானாலும் நன்றாக எண்ணிப் பார்த்த பின்தான் இறங்கவேண்டும். தான் தலையிடும் காரியத்தை முடிக்கும் திறமை தன்னிடம் இருக்கின்றதா? அக்காரியத்தைச் செய்துமுடிப்பதனால் வரும் பயன் என்ன? அது நற்பயனா? தீப்பயனா? என்றெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதுதான் அறிவுள்ள மக்கள் கடமை.
இந்தக் கடமையை மறந்து, தீமையானது என்று தெளி வாகத் தெரிந்துங்கூட அதைச் செய்யத் துணிகின்றவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். அவர்களுக்கு அறத்தைப் பற்றியே ஒன்றும் தெரியாது. அதன் சிறப்பை – மாண்பை அவர்கள் அறியவே மாட்டார்கள்.
அறியாமையால் தீமை புரிகின்றவர்களைத் திருத்த முடியும். அவர்களை நல்வழிப்படுத்த முடியும். வேண்டுமென்றே அறமல்லாதவற்றை துணிந்து செய்கின்றவர்களை நல்வழிப்படுத் தவே முடியாது. இவர்கள் மனித சமுதாயத்திற்கே ஒரு நோய் போன்றவர்கள். இவர்களை விட்டு விலகுவதே சிறந்ததாகும்.
4. அடுத்தது சினத்தின் குணம். சினத்தைப் போல – கோபத்தைப் போலக் கொடுமையானது ஒன்றுமில்லை. சினம் உள்ளவர்களிடம் எந்த நல்ல பண்புகளும் பொருந்தாமல் போய்விடும்.
கோபத்தைப்போலக் கொடுமை செய்வது வேறு ஒன்றுமே இல்லை. அன்பை அறுப்பது சினம்; நட்பைக் கைவிடுவது சினம்; செல்வத்தைச் சிதைப்பது சினம்; உதவி செய்தவர்கள் உயிருக்குக் கூட உலைவைக்கும் கொடுமையைச் செய்வது சினம்.
சினம் தன்னைக் கெடுப்பது மட்டும் அன்று; பிறருக்கும் இன்னல் செய்யும். அமர்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் அறிவைச் சிதைப்பதில் சினத்திற்கு ஒப்பாக வேறு எதையும் இயம்ப முடியாது.
சுருக்கமாகச் சொன்னால் சினத்துடன் எந்த நன்மைகளும் நட்புக்கொண்டிருக்க முடியாது. நன்மைகள் என்பவை என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் அடியோடு கல்லி யெறிவது சினமேதான்.
ஆகையால், அறிவுள்ளவர்கள் சிறுபிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும்போதே, ஆறுவது சினம் என்று கற்பித் தார்கள்.
மேலே காட்டிய நான்கு பொருள்களைப் பற்றியும் நான் மணிக்கடிகைப் பாட்டு ஒன்று அழகாக எடுத்துரைக்கின்றது. அச்செய்யுள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அமைந்திருக்க வேண்டிய செய்யுளாகும்.
கற்றார்முன் தோன்றா கழிவுஇரக்கம்; காதலித்துஒன்றுஉற்றார்முன் தோன்றா உறாமுதல்; தெற்றெனஅல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம்வெகுண்டார்முன் தோன்றா கெடும்.
என்பதே அப் பாடல். கற்றவர்களிடத்திலே சென்று போனதைப் பற்றி வருந்தும் தன்மை காணப்படாது. ஒரு பொருளைப் பெற அன்புடன் முயல்பவர்களிடத்திலே அப் பொருள் விரைவில் கிடைக்கவில்லையே என்று துன்பங் காணப்படாது. தெளிவாகத் தீமையென்று தெரிந்தும் அவற்றைச் செய்வோரிடம் அறநெறியில் ஒழுகும் குணம் உண்டாகாது. சினங்கொண்டவர்களிடம் எல்லா நன்மைகளும் ஒழிந்துவிடும். ஒரு நன்மையாவது காணப்பட மாட்டாது.
இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். இச்சிறந்த நீதிகள் என்றும் நிலைத்திருக்கும் உண்மையுரைகள்.



