சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

23. நாட்டின் நல்வாழ்வு

பண்டைத் தமிழர்கள் நாட்டின் நல்வாழ்விலே கவலை கொண்டவர்கள்; நாடு நன்றாக வாழ்ந்தால்தான் நாமும் நன்றாக வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள். நாட்டு மக்கள் அனைவரும் வறுமையின்றி வாழ வேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் உள்ளவர்களாயிருந்தனர்.

இதயத்திலே கனிவுள்ள மக்கள் இதைத்தான் விரும்புவார் கள். பண்டைத் தமிழகத்தில் இருந்த அறிவுள்ள ஆண்மக்கள், பெண்மக்கள் அனைவரும் பொது மக்களின் நல்வாழ்வைத்தான் சிறப்பாகக் கருதினார்கள்; அவர்கள் அதற்காக அல்லும்பகலும் பாடுபட்டும் வந்தனர்.

இதற்கு இலக்கியங்களிலே பல சான்றுகள் கிடைக்கின்றன. மக்கள் நல்வாழ்வுக்கு அடிப்படையென்று அவர்கள் எண்ணிய கொள்கைகள் மிகச் சிறந்தவை; அக் கொள்கைகளும், கருத்துக் களும் இன்றும் நம்முடைய நல்வாழ்வுக்கு அடிப்படையாக நிற்பதைக் காணலாம்.

எல்லா மக்களும் பசியின்றிப் பிணியின்றி வாழ வேண்டும். மக்கள் மட்டும் அல்ல; மற்றைய உயிர்த் தொகைகளும் இந் நிலையிலே இனிது வாழவும் வேண்டும் என்று விரும்பினர். இந்த விருப்பம் முதன்மையானது. இன்றும், உலகம் இவ்வாறு வாழவேண்டும் என்று விரும்பாதவர்கள் இல்லை.

மக்களுடைய பசித்துன்பத்தை நீக்குவதற்கான பல முயற்சிகள் இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன; நோயைத் தடுப்பதற்கான முயற்சியும், நோய் வந்தால் அதை நீக்குவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக் கின்றன. உலகிலே பசிக்கொடுமையும், நோய்த் துன்பமும் இருக்கும் வரையிலும் இம் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும்.

பசிக்கொடுமை ஒழிய வேண்டுமானால், பிணிகள் தலை தூக்காமல் மறைய வேண்டுமானால் நாட்டிலே சமாதானம் நிலவவேண்டும்; அமைதி குடிகொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் பசியையும் பிணியையும் அழிப்பதற்கான முயற்சிகள் வெற்றியடையும்.

நாட்டிலே சமாதானம் ஓங்கி வளரவேண்டுமானால், அரசாங்கத்திற்குள்ள பகைகள் ஒழியவேண்டும். உள் நாட்டிலும் அரசாங்கத்திற்குப் பகைவர்கள் இருக்கக் கூடாது; வெளிநாட்டி லும் பகைவர்கள் இருக்கக் கூடாது.

உள்நாட்டு மக்கள் உள்ளத்திலே வெறுப்பும், பகையும் வளராத முறையில் அரசாங்கம் நடத்த வேண்டும். மக்களுக்கான நல்ல காரியங்களை நடத்தும் அரசாங்கம் நாட்டு மக்கள் எல்லோருடைய ஆதரவையும் பெறும் என்பதிலே ஐயம் இல்லை. தனது நாட்டு மக்களின் செழித்த வாழ்வையே குறிக் கோளாகக் கொண்ட எந்த அரசாங்கமும் பக்கத்து நாட்டின் மேல் பகையை வளர்த்துக்கொள்ளாது; சமாதானத்துடன் வாழ்ந்து அமைதியை வளர்க்கத்தான் முயற்சிக்கும்.

இவ்வாறு உள்நாட்டு ஆதரவும், வெளிநாட்டு உறவும் பெற்று வாழும் அரசாங்கத்தில் உள்ள மக்கள்தான் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வார்கள். பசியும், பிணியும் இல்லாத நாட்டிலே மக்கள் நீண்ட வாழ்நாள் பெற்று வாழ்வதிலே வியப்பில்லை.

ஆதலால்தான் அமைதியுடன் வாழும் அரசாங்கம் வேண்டும் என்று மக்கள் விரும்பினர். பண்டைக்காலத் தமிழ் மக்களின் இவ்விருப்பம் இன்றும் நன்மை தரும் உண்மையாக இருப்பதைக் காணலாம்.

நாட்டிலே நல்லறங்கள் சிறக்கவேண்டும்; அவை வளர்ந் தோங்க வேண்டும். அனைவரும் அன்புடன் கூடி வாழ்வது, ஒருவரை ஒருவர் வெறுக்காமலிருத்தல், துன்புறுவேர்க்குத் துணையாக நின்று அவர்கள் துன்பத்தைக் களைதல் இவையே சிறந்த நல்லறங்கள். வெறுப்பையும், கலக்கத்தையும், வேற்றுமை யையும் விளைவிக்கக்கூடிய தீமைகள் நாட்டிலே நடைபெறக் கூடாது. நன்மை வளர வேண்டும்; தீமை ஒழிய வேண்டும் என்ற இத்தகைய நோக்கமே, பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த நோக்கம்.

பண்டைத் தமிழர்கள், மக்களுடைய நல்வாழ்வுக்கு

ஏற்றவை என்று எண்ணியிருந்த கொள்கைகள் உலக நன்மைக்கே அடிப்படைகளாக இருக்கின்றன.

முதலாவதாக, உலகில் உள்ள உயிர்த் தொகைகள் பசியின்றி வாழவேண்டும்; நோயின்றி வாழ வேண்டும்.

இரண்டாவதாக, பசியும், பிணியும் பரவாமல் காக்க வேண்டுமானால் அரசாங்கம் நன்றாகத் திறமையுடன் நடை பெற வேண்டும். உள்நாட்டு மக்களின் வெறுப்புக்கும், அயல் நாட்டினரின் படையெடுப்புக்கும் ஆளாகாமல் அமைதியை நிலைநாட்டும் அரசாங்கமாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, நாட்டிலே நல்லறம் – நல்லொழுக்கம் – நிலவண்டும்; தீமைகள் – அறநெறிக்கு மாறான செயல்கள் – நடைபெறக்கூடாது.

மேற்காட்டிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வையாக நிற்பதைக் காணலாம்.

வாழி ஆதன்! வாழி அவினி!
பசி இல்லாகுக பிணிசேண்

நீங்குகஎனவேட்டோளே யாயே

வாழ்க ஆதன் அவினி என்னும் மன்னவன்! இவ்வுலகம் பசியில்லாமல் வயிறார உண்டு இன்புறுக. உயிர்களைப் பிடித்துத் துன்புறுத்தும் நோய்களும் இல்லாமல் ஒழிக; அவை தூரத்தில் தொலைந்து போகட்டும் என்று விரும்பினாள் என் தலைவி.

இது ஐங்குறுநூற்றில் ஐந்தாவது பாட்டு.

வாழி ஆதன்! வாழி அவினிவேந்து பகை
தணிக; யாண்டு பல நந்துக;
எனவேட்டோளே யாயே

வாழ்க ஆதன் அவினி என்னும் மன்னவன்! அரசன் எத்தகைய பகையும் இன்றி வாழ்க! அரசன் பகைவர் இல்லாமல் வாழ்வதனால் நாடு செழிப்புற்று நாட்டு மக்கள் நீண்டநாள் பசியும் பிணியும் இன்றி வாழ்க! என்று விரும்பினாள் எமது தலைவி.

இது ஐங்குறுநூற்றின் ஆறாவது பாட்டு.

வாழி ஆதன்! வாழி அவினிஅறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
எனவேட்டோளே யாயே

வாழ்க ஆதன் அவினி என்னும் மன்னவன்! அரசன் அறத்துறைகள் எல்லாம் சிறந்து வாழ்க! வளர்ந்து பெருகித் தழைப்பதாகுக! அறம் அல்லாத தீமை – அறநெறிக்கு மாறான புறநெறி – அடியோடு அழிக! என்று விரும்புகின்றாள் எம் தலைவி.

இது ஐங்குறு நூற்றின் ஏழாவது பாட்டு.

இவ்வாறு மூன்று பாட்டுக்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருக்கின்றன. இந்த மூன்று பாடல்களில் உள்ள கருத்துக்களும் ஒன்றையொன்று தாங்கி நிற்பன; ஒன்றற்கு ஒன்று அடிப்படையாக இருப்பன.

முதலிலே உயிர்கள் எல்லாம் பசியின்றி வாழ்வதற்கான உணவுப்பொருள்கள் நாட்டிலே நிறைந்திருக்க வேண்டும். உணவுப் பஞ்சம் இன்றேல் பிணியும் இருக்காது.

இரண்டாவதாக சமாதானத்தை நிலைநாட்டும் அரசாங்கம் நடைபெற வேண்டும். சமாதானம் நிலைத்திருக்கும் நாட்டிலே தான் உற்பத்தி பெருகும்; வறுமையும் பிணியும் வாழ்வதற்கு இடம் இல்லை.

மூன்றாவதாகச் சமாதானம் நிலவும் நாட்டிலேதான் அறநெறி தழைத்தோங்கும்; மறநெறிக்கு இடம் இல்லை.

இந்த மூன்று உண்மைகளும் இக்காலத்து அறிஞர்களாலும் போற்றப்படுகின்றன. இந்த மூன்றும் உலகிலே நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே அறிஞர்கள் – அருள் உள்ளம் படைத்தவர்கள் – மக்கள் சமுதாயத்தின் முன்னேற் றத்தை நாடுகின்றவர்கள் – அனைவரும் பாடுபட்டு வருகின்றனர்.

இச் சிறந்த உண்மைநெறியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இது வியப்புக்குரியது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !