
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
25. சித்திரத்தால் அருள்நெறி
ஓவியர்களும், கவிஞர்களும் ஒரே மனப்பான்மை படைத் தவர்கள். கற்பனை உள்ளம் படைத்தவனே கவிஞனாகத் திகழ முடியும்; கற்பனைச் சித்தம் படைத்தவனே சித்திரக்கார னாகச் சிறந்து விளங்க முடியும்.
இன்ன செய்தியை இன்ன முறையிலே பாடவேண்டும்; பாட்டில் உள்ளவை படிப்பவர் உள்ளத்தை உடும்புபோல் பற்றிக் கொள்ள வேண்டும்; பாட்டில் உள்ள செய்தியைப் படிப்பவன் பின்பற்றி நடந்து மகிழவேண்டும் என்ற குறிக்கோளுடன் சிறந்த கவிகளைப் பாடுகின்றவனே உயர்ந்த கவிஞன்; அவன் உடம்பு மறைந்தாலும், புகழ் மறையாத புலமையுள்ளவன்.
இத்தகைய கவிஞனைப்போலவே ஓவியத்தில் உயிர்த் தன்மையை அமைத்துக் காட்ட முயற்சிப்பவன்தான் உண்மை யான ஓவியன். சிரிப்பு, அழுகை, வியப்பு, சினம், ஐயம், ஆலோ சனை, வீரம், பொறுமை, சாந்தம் முதலிய மனப்பான்மைகளை முகத்திலே அமைத்து எழுதும் ஓவியனே உயர்ந்த ஓவியக்காரன்; கற்பனை உள்ளம் படைத்த கவிஞனைப் போன்றவன்.
கவிஞன் பல நூல்களைப் படித்தவனாக இருக்கலாம். ஆனால் படிப்பு மட்டும் கற்பனா சக்தியை உண்டாக்கி விட முடியாது. உலகத்திலே கண்ணாற் காணப்படும் இயற்கை நிகழ்ச்சிகள், தம் வாழ்க்கை அனுபவம், பிறர் வாழ்க்கை நிகழ்ச்சி களைக் கண்டும் கேட்டும் தெளிதல் இவையெல்லாம் கற்பனை உணர்ச்சியை வளர்க்கும் எருவும் தண்ணீருமாக இருப்பவை. கவிஞனுக்குக் கல்வியும் அவசியமானதாகும். கல்லாதான் கவிஞர் உலகிலே நடமாடமுடியாது.
ஆனால் ஓவியனுக்குக் கல்வி வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏட்டுப் படிப்பு இல்லாதவனும் ஓவியனாக உயர்ந்து வாழமுடியும். கற்பனாசக்தியிருந்தால் போதும். காணும் காட்சியை உள்ளத்திலே படம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்; கேட்கும் செய்திகளை மறவாமல் மனத்திலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்; மனக்கருத்தை வெளியிலே காட்டும் முகத் தோற்றங்களை அப்படியே நினைவுகூரக்கூடிய ஆற்றல் வேண்டும். இப்பண்புள்ளவன் சிறந்த ஓவியனாக முடியும். இப்பண்புகளுடன் கல்வி அறிவிருந்தால் அது அவனை நிகர் அற்ற சிருஷ்டிகர்த்தாவாகச் செய்துவிடும்.
ஆகவே கவிஞனுக்கும் ஓவியனுக்கும் கற்பனாசக்தியே அடிப்படை உயிர்நிலை யாகும்.
சிறந்த கவிதைகள், காவியங்கள், கற்பனை செய்யுட்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்பட்டு வந்தன. அவற்றைப் போலவே, உயர்ந்த சித்திரங்களும் மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்து வதற்குப் பயன்பட்டு வந்தன.
கவிஞர்களின் படைப்பான கவிதைகளில் உள்ள பொருள் களைப் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறி அவர்களை நல்வழிப் படுத்தி வந்தனர் அறிஞர்கள். பண்டைக் காலத்தில், திருவிழாக் காலங்களில், கோயில்களிலும், பொதுவிடங்களிலும் புலவர்கள் இவ்வாறு பணிபுரிந்து வந்தனர்.
இதைப்போலவே சித்திரங்களும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வந்தன. கோயில்களிலும், பொது விடங்களிலும் சித்திரங்களை எழுதி வைத்தனர். அச் சித்திரங்கள் பொது மக்களுக்கு நல்லுரைகள் கூறவே எழுதப்பட்டன. தீமை செய்தவர்கள் கெட்டுப் போவர்கள்; நன்மை செய்தவர்கள் தீமை அடைய மாட்டார்கள்; நன்மை தான் பெறுவார்கள் என்ற உண்மையைக் காட்டும் படங்களை எழுதி வைத்தார்கள். இத்தகைய ஓவியங்கள் கவிதைகளைப் போலவே பயன்பட்டு வந்தன.
இந்த உண்மையைப் பரிபாடல் என்னும் நூல் விளக்க மாகக் கூறுகின்றது.
இரதி காமன், இவள், இவன் எனாஅவிரகியர் வினவ, வினாஇறுப் போரும்;
இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன்சென்ற கவுதமன், சினம்உறக் கல்உருஒன்றிய படிஇது, என்று உரை செய்வோரும்;
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
ரதிதேவி இவளா? மன்மதன் இவனா? என்று காமங் கொண்ட பெண்கள் கேட்பர். அவர்களுக்கு, அவர்களுடன் இணைந்து செல்லும் ஆடவர்கள், ஆம் இவள் ரதிதேவி; இவன்தான் மன்மதன் என்று பதில் இறுக்கின்றார்கள்.
இந்திரன் – தேவேந்திரன் – இதோ பூனை வடிவாகக் காணப்படுகின்றான். இதோ நிற்கும் பெண் உருவம் அகலிகை யின் உருவமாகும். இவன் – இந்திரன் அகலிகையின் கற்பை அழித்த காலத்தில் சென்று, அந்த அநீதியைக் கண்ட கவுதம முனிவன்.
இதோ கிடக்கும் கல், கவுதமன் சினங்கொண்டதனால் அகலிகை அடைந்த உருவம்.
இவ்வாறு இந்திரனுடைய காமச்செயலையும், அகலிகை யின் கற்பழிவையும், கவுதமரின் சினத்தையும் சித்தரித்துக் காட்டும் சித்திரத்தைப் பார்த்து அதை விளக்கிக் கூறுகின்றனர். இதுபோன்ற இன்னும் பலப்பல சித்திரங்கள் எழுதப்பட்டி ருக்கும் மண்டபம்.
இது பரிபாடலின் பத்தொன்பதாவது பாட்டிலே உள்ள அடிகள். திருப்பரங்குன்றத்திலே இத்தகைய சித்திரந் தீட்டிய மண்டபம் இருப்பதாகக் கூறுகின்றது.
இதனால் சித்திரங்களின் மூலம் மக்களுக்கு நல்லுரைகள் போதித்த செய்தியைக் காணுகின்றோம்.
இந்தப் பரிபாடல் பாட்டிலே இரண்டு செய்திகள் சித்திரங்கள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக் கின்றது.
காதலனும் காதலியும் வாழ்க்கையிலே என்றும் இணை பிரியாமல் வாழவேண்டும். மன்மதனையும், ரதியையும் போல மாறாத அன்புடன் வாழவேண்டும். மன்மதன் ரதியைத் தவிர வேறு மாதரைக் காதலித்ததாகக் கதையில்லை. ரதியும் மன்மத னைத் தவிர வேறு ஆடவனைக் உள்ளத்திலே எண்ணியதாகக் கதையில்லை. அவர்களைப் போலவே காதலர்கள் வாழவேண்டும்.
இந்திரன் காமத்தால் அறிவிழந்தான். அகலிகை தன்னைத் தான் காத்துக் கொள்ள முடியாமல் இந்திரனிடம் ஏமாந்தாள்; கற்பிழந்தாள். அதனால் முனிவன் கல்லுருவாகும்படி சாபம் இட்டான். இந்திரன் தான் இழைத்த குற்றத்திற்காக அருவருப் பான உருவம் பெற்றான். உடம்பெல்லாம் பெண்குறி களைப் பெற்றான்; ஒன்றிரண்டல்ல ஆயிரம் பெண்குறிகள். அவையே கண்கள் எனப்படுவன. ஏமாந்து கற்பிழந்த அகலிகை கல்லுரு வானாள்.
இவை மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சிகள். இந் நிகழ்ச்சி களைக் கவிகளிலே புனைந்துரைப்பது போலவே வண்ணச் சித்திரங்களிலே தீட்டியிருக்கின்றனர்.
இந்நாளில் ஓவியம் எவ்வளவு பயன்பட்டுவருகின்றதோ, இதைப் போலவே பண்டைநாளிலும் ஓவியம் பயன்பட்டு வந்தது என்பதைக் காண்கின்றோம்.
காவியப் புலவன் மக்களின் அறிவுக் கண்ணைத் திறப்பது போலவே ஓவியப் புலவனும் மக்களின் அறிவுக் கண்ணைத் திறந்து வந்தான். காவியப் புலவன் மக்களின் உள்ளத்திலே இன்ப உணர்ச்சியை வளர்த்து வந்தது போலவே, ஓவியப் புலவனும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் காதற் சித்திரங்களைத் தீட்டிவந்தான்.
தமிழர்களின் வாழ்க்கையை வளம்படுத்த – அவர்கள் வாழ்க்கை மறநெறியிலே செல்லாமல் அருள்நெறியிலே செல்லும் வாழ்க்கையாக மிளிர, காவியப் புலவர்களையும், ஓவியப் புலவர்களையும் பண்டைக்காலத் தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஆதரித்து வந்தனர்; அவ்விரு புலவர்களும் கவலையின்றிக் கற்பனா சக்தியிலே ஊறித் திளைத்து, வாழ்ந்து, உலகுக்கு நன்மை செய்வதற்காக அவர்களை ஊக்குவித்து வந்தனர்.
மக்களை அருள்நெறியிலே நடக்கச் செய்வதற்கு நமது முன்னோர்கள் பின்பற்றிவந்த இந்த முறை வியக்கத் தக்கது. காவியப் புலவர்களும், ஓவியப் புலவர்களும் தமிழர்களின் அருள்நெறி வாழ்வுக்குத் துணை செய்ததும், துணை செய்வதும் போற்றத்தக்கது.



