
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
7. நயமொழியால் நன்மை
குற்றம் செய்வது மக்கள் இயற்கை அன்று. குற்றவாளி களில் பெரும்பாலோர் சூழ்நிலையைப் பொறுத்தே குற்றவாளி கள் ஆகின்றனர். சில சந்தர்ப்பங்கள் அவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுகின்றன. நேர்மையிலே நிலைத்த உறுதியுள்ள வர்கள் சூழ்நிலைச் சிறையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். குற்றப் படுகுழியிலே தம்மைத் தள்ளும் சந்தர்ப்பப் பிடியிலி ருந்து விடுபடுவதற்கு மனஉறுதியும் ஆண்மையும் வேண்டும். இவை இல்லாதவர்களே குற்றங்களைப் புரிகின்றனர்.
பொய் சொல்வது குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பொய் சொல்லாதவர்கள் ஒருவருமே இல்லை யென்று சொல்லிவிடலாம். சிறு காரியங்களில் கூடச் சிலர் பொய் சொல்லுகின்றனர். உண்மையைச் சொன்னால் தமது திறமையைக் குறைவாக நினைக்கிறார்கள்; தமது மதிப்புக்குப் பங்கம் உண்டாகும் என்று நினைத்துப் பொய் சொல்கின்றவர்கள் பலர்.
இதற்கு ஒரு உதாரணம்; நாம் இருபது ரூபாய்க்கு ஒரு பண்டம் வாங்கியிருப்போம். அந்தப் பண்டத்தை மற்றவர்கள் இருபது ரூபாய் மதிப்பிடுவார்களா? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகிறது. இந்த நிலையில் அப் பண்டத்தின் விலையென்ன வென்று நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். நாம், உள்ள விலையைக் கூறாமல், ஐந்து ரூபாய் குறைத்துப் பதினைந்து ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறுவோம். உடனே அந்த நண்பர், இதன் விலை இருபது ரூபாய் பெறும்; நீங்கள் மலிவாகத்தான் வாங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டால் போதும்; நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். பண்டம் வாங்குவதில் நாம் ஏமாறவில்லை; சாமர்த்தியமாகத்தான் வாங்கியிருக்கிறோம். என்ற மனநிறைவு உண்டாகும்.
அந்த நண்பர் நாம் வாங்கியதாகச் சொல்லிய பதினைந்து ரூபாய் சரியான விலைதான் என்று சொல்லிவிட்டால் போதும்; நம் மனத்துக்குள் சிறிது வருத்தந்தான் தோன்றும். ஐந்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து ஏமாந்து போனோமே என்று எண்ணா மலிருக்க முடியாது. ஆயினும் நாம் இருபது ரூபாய் கொடுத்த செய்தியை அவருக்குத் தெரியாமல் மறைத்து விட்டதில் சிறிது மகிழ்ச்சி; நமது ஏமாந்த தன்மை வெளிப் படாமல் போனதிலே ஒரு திருப்தி.
இத்தகைய சிறு குற்றங்களைப் பலர் செய்கின்றனர். பெருங் குற்றங்களைச் செய்வோர் சிலர் உண்டு. அவர்களை யெல்லாம், வேண்டும் என்றே குற்றம் செய்கின்றவர்கள்; தலைக் கனம் காரணமாகத் தவறு செய்கின்றனர்; என்று சொல்லி விட முடியாது. சோற்றுக்கு வழியில்லாதவன் திருட்டு தொழிலிலே இறங்குகின்றான். அவனுக்குத் தான் செய்யும் தொழில் மோசமானது என்பது தெரியும்; அகப்பட்டால் மானம் போகும் என்பதையும் அறிவான்; தான் மனித சமுதாயத்தில் மதிப்புள்ள வனாக வாழ முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் திருடத் தொடங்குகின்றான். இதற்குக் காரணம் வறுமை தான்; பிழைப்பதற்கு வேறு வழியில்லாமைதான்.
பிறரை ஏமாற்றிப் பணம் பறிப்பது; கடன் என்று பணம் வாங்கிக் கொண்டு பிறகு அதைக் கொடுக்க முடியாமல் திண்டாடுவது; கடன் கொடுத்தவர் கேட்டால், நீ கொடுக்கவும் இல்லை, நான் வாங்கவும் இல்லை என்று பேசுவது; கடன் கொடுத்தவர், வாங்கினவர் இருவருக்கும் பேச்சு வளர்ந்து, கைகலப்பு ஏற்பட்டு, அதன் மூலம் குத்து, வெட்டு, கொலை வரையிலும் போய்விடுவதும் உண்டு. இவையெல்லாம்கூட சூழ்நிலை காரணமாக ஏற்படுவதுதான்.
சூழ்நிலை காரணமாக ஏற்படும் குற்றங்களைத் திருத்துவது அவ்வளவு எளிதல்ல; குற்றங்கள் நிகழ்வதற்கேற்ற சூழ்நிலைகளே தோன்றகூடாது. அப்பொழுதுதான் அக் குற்றங்களும் பிறந்து வளராமல் இருக்கும். உலகத்தில் உள்ள இந்தச் சூழ்நிலையைச் சிறிது சிறிதாகத்தான் மாறும்படி செய்ய வேண்டும்.
குற்றம் செய்யவேண்டிய அவசியமே இல்லை; யாருக்கும் எந்தத் தீமையையும் செய்யாமல் மானமாக வாழ்க்கை நடத்த முடியும்; என்ற நிலையில் உள்ளவர்களும் குற்றம் செய்கின்றார்கள் என்றால் அது மன்னிக்க முடியாத குற்றம்தான். பேராசை, சுயநலம், கடினசித்தம், அறியாமை இவை காரண மாகத்தான் அவர்கள் குற்றம் புரிகின்றனர்.
போதுமான வருமானம் இருக்கின்றது. நிலைத்த வருமான முள்ள வீடுகள், நிலங்கள், தோட்டங்கள் முதலான செல்வங் களும் இருக்கின்றன. இருந்தும், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க நினைக்கின்றோம். இப்படி நினைப்பதும், செய்வதும் தவறல்ல. தாராளமாக நினைக்கலாம்; செய்யலாம்.
ஆனால் இந்த ஆசை காரணமாகப் பிறரை ஏமாற்றிப் பொருள் பறித்தல்; பிறர் செல்வத்தை வஞ்சித்து கவர்தல்; தம்மை நம்பிச் செல்வத்தை ஒப்படைத்தவர்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிடுதல்; கள்ளச் சந்தையிலே கொள்ளையடித்தல் இவைபோன்ற காரியங்களிலே ஈடுபடுவோர் சிலர் உண்டு. இவர்கள் எல்லாம் மக்கள் சமுதாயத்திற்கே தீங்கிழைப் போராவர்.
பொது ஊழியர்கள், உத்தியோகதர்கள், அதிகாரிகள், அரசை நடத்தி வைப்பவர்கள் என்பவர்களிலே சிலர் தம் கடமையைக் கைவிட்டவர் களாயிருப்பதைக் காண்கின்றோம். இவர்களிலே சிலர் தமது அதிகார உரிமையை வரம்பு மீறிய வழியிலே பயன்படுத்துவதையும் பார்க்கின்றோம். பொதுமக்க ளிடம் பணம் பறிப்பதையும் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அரசுக்குக் கேடு சூழ்பவர்கள்: பொது மக்களுக்குத் தீங்கு செய்பவர்கள். இவர்கள் பொதுமக்களால் வெறுக்கப் படுவார்கள். இத்தகைய சுயநலம் பிடித்த அதிகாரவர்க்கம் நிறைந்த அரசாங்கம் நிலைத்து வாழமுடியாது; விரைவில் அழிந்து விடும்.
அதிகாரவர்க்கமானாலும் சரி, பொதுமக்களாயினும் சரி – தம் கடமையை மறந்து தீமை செய்வார்களானால் கண்டிப்பாக அவர்களைத் திருத்தித்தான் ஆக வேண்டும்.
அதிகாரவர்க்கமாகட்டும், பொதுமக்களைச் சேர்ந்தவர் களாகட்டும்-அவர்கள் செய்த குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால் ஒழிய அவர்களைத் தண்டிக்க முடியாது. இது என்றும் உள்ள நீதி. ஆதலால் சிலர் மிகத் திறமையுடன் மறைந்திருந்து குற்றம் புரிந்து கொண்டிருக்கலாம். அவர்களை நல்ல வார்த்தை களால்தான் திருத்தமுடியும்; பொதுவான அறிவுரைகளால் தான் மாற்றமுடியும். இது தான் பழந்தமிழர் கையாண்ட முறை. இந்த முறையை வலியுறுத்தும் பாடல் ஒன்று புறநானூற்றில் காணப்படுகின்றது.
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள்அன்ன நரைதுமுதிர் திரைகவுள்
பயன்இல் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடும்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்ஆற்றுப்படூஉம் நெறியும்ஆர் அதுவே.
(புறநா. 195)
இது நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் பாட்டு. வாழ்நாள் முழுவதும் நல்லவற்றைச் செய்யாமலே வயிற்றுப் பாட்டுக்கு உழைத்து வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துப் பாடிய பாடல் இது. வயது முதிர்ந்தவர்களுக்குத் திடுதிப்பென்று கோபம் வருவது இயற்கை. ஆகையால் அவர்கள் கோபப்படாத வகையில் வெகு நயமாகக் கூறுகிறார் புலவர்.
பல சிறந்த நற்குணங்களை யுடையவர்களே! பல சிறந்த நற்குணங்களை யுடையவர்களே! கயல்மீனின் முள்ளைப் போன்ற நரைமயிரையுடைய முதிர்ந்தவர்களே! சுருங்கிய கன்னங்களை உடையவர்களே! பயனில்லாமல் கிழப்பருவம் அடைந்த பல சிறந்த குணங்களை உடையவர்களே! மழுவாகிய கூர்மையான ஆயுதத்தையுடைய வலிமை நிறைந்த காலன் உம்முடைய உயிரைக் கவரும் போது துன்புறுவீர்கள். நன்மை செய்திருந்தால் எமவாதனைக்கு ஆளாகாமல் இருக்கலாமே என்று அப்பொழுது நினைப்பீர்கள். ஆதலால் இப்பொழுது உங்களால் நன்மை செய்யமுடியாவிட்டாலும் குற்றமில்லை; தீமை செய்யாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் போதும்; இதுதான் எல்லாரும் மகிழ்ச்சியடையக்கூடிய செயலாகும். அன்றியும் நல்லற வழியிலே செல்லும் வழியும் அதுதான்.
இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். நல்லது செய்யமுடியாவிட்டாலும் பாதகம் இல்லை; அல்லது – அதாவது தீமை செய்யாமல் இருந்தால் போதும்; தீமை செய்யாதவர்கள் எமனுக்கு அஞ்சவேண்டியதில்லை. தீமை செய்யாமை ஒன்றே நல்லறமாகும் என்ற கருத்தை இப்பாடல் வலியுறுத்திற்று.
பயனின்றி வயதேறியவர்களே! என்று மட்டும் கிழவர் களைப் பார்த்துக் கூறினால் கண்டிப்பாக அவர்கள் சண்டைக்குத் தான் வருவார்கள். நாம் என்ன சொன்னாலும் காதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்களை, ஐயா, பெரியவர் களே! உத்தம குணம் நிறைந்த பெரியவர்களே! என்று முதலில் புகழ்ந்துவிட்டால் போதும்; பிறகு நம் வழிக்கு வந்துவிடுவார்கள். இந்த மனப்பாங்கை உணர்ந்து கூறிய இப்பாடல் சிறந்ததொரு பாடலாகும்.
மறைந்திருந்து குற்றம் புரிகிறவர்கள் இப் பாடலைப் படித்தால் அவர்கள் உள்ளமே அவர்களை உதைத்துத் திருத்தி நல்வழிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நயமான வார்த்தைகளால் குழந்தைகளையும் திருத்த முடியும்; வயது முதிர்ந்தவர்களையும் திருத்த முடியும். கண்டிப்பை விட – கடுஞ் சொல்லை விட – நயமான சொல் நல்ல பலனைத் தரும். இதுவே உண்மை. இந்த உண்மையைப் பின்பற்றியே இப் பாடலின் போக்கு காணப்படுகின்றது.



