சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

1. நீதி சொல்லும் காதல் கவிதை

காதல் கவிதைகள் எழுதப்படாத காலமே இல்லை. இன்றும் பலர் காதல் கவிதைகள் எழுதுகின்றனர்; அன்றும் பலர் எழுதினர். இக்காலத்தினர் எழுதும் கவிதைகளிலே, காதலைப் பற்றிய கவிதைகள்தாம் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் இக்கால கவிதைகளிலே ஆழ்ந்த பொருளைக் காண முடியவில்லை. ஒரு சிலர் கவிதைகளில் தான் நல்ல கருத்துக்களைக் காணமுடிகிறது. ஒரு பெண்ணைப் பற்றிப் புகழ்ந்து கூறுவது; அவளுடைய தோற்றத்திலே நெஞ்சைப் பறிகொடுத்துவிட்டதாகச் சொல்லுவது; அவளுடைய பார்வையினால் தன்வசம் இழந்துவிட்டதாகப் பேசுவது; அவளுடைய வாய்மொழி கேட்டுத் தன் உள்ளம் உருகிவிட்டதாகப் பாடுவது; அவளுடைய அன்பைப் பெறாமல் பரிதவிப்பது; அன்பைப் பெற்றுவிட்டால் அதுவே சுவர்க்க வாழ்வு என்று மொழிவது; இவை போன்ற விஷயங்கள்தாம் இன்றையக் காதற் கவிதைகளிலே காணப்படுகின்றன.

நிலவொளியில் காதல் மூள்வது; தென்றல் காற்றால் உள்ளத்திலே காதல் வளர்வது; தன் காதலியின் முகத்தை வானத்து மதியிலே காண்பது; அவளுடைய உடம்பின் சேர்க்கை யைத் தென்றல் காற்றிலே நினைப்பது; நீலத் திரைக்கடலிலே காதலியின் கூந்தலழகைக் காண்பது; வானத்தில் பளிச்சிடும் நட்சத்திரங்களிலே காதலியின் புன்சிரிப்பு நிலவுவதாகக் கூறுவது; பறவைகளின் இனிய ஓசையிலே, தன் காதலியின் சொற்கள் தவழ்ந்து வருகின்றன என்று பாடுவது; இவை போன்ற செய்திகளையும் தற்காலக் கவிஞர்களின் காதற் கவிதைகளிலே காண்கிறோம்.

சங்ககாலப் புலவர்கள் ஏராளமான காதற் கவிதைகள் பாடியிருக்கின்றனர். சங்க நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலிய நூல்களில் உள்ள கவிதைகள் எல்லாம் காதல் கவிதைகள்தாம். இவைகளை அகப்பொருள் நூல்கள் என்பர். இவைகளில் உள்ள பாடல்களை அகத்திணைப் பாடல்கள் என்பர்.

சங்ககாலத்துப் புலவர்களின் அகத்திணைப் பாடல்கள் வெறும் வறட்டுப் பாடல்களாக இல்லை. காதலனும் காதலியும் சந்திப்பது; ஒன்றுகூடுவது; பிரிவது; பிள்ளைகளைப் பெற்று வாழ்வது; காதலனுக்கும் காதலிக்கும் ஏற்படும் பிணக்குகள்; காதலனும் காதலியும் ஒருமனப்பட்டு இல்லறம் நடத்துவது; அவர்கள் இல்லறத்துக்குரிய கடமைகளைச் செய்வதிலே கண்ணும் கருத்துமாக இருந்து நடத்துவது; இவை போன்ற செய்திகளையே சங்கப் புலவர்களின் காதற் பாட்டுகள் கூறுகின்றன.

சங்கப் புலவர்களின் காதற் பாட்டுகளிலே இயற்கை நிகழ்ச்சிகள் பலவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. சங்கப் புலவர்களின் காதல் கவிதைகளிலும் கடலைக் காணலாம்; கடலின் அழகைக் காணலாம்; மழையைக் காணலாம்; மின்னலைக் காணலாம்; இடி வானத்தைக் காணலாம்; முழக்கத்தைக் கேட்கலாம்; தண்மதியைக் காணலாம்; நட்சத்திரங்களைக் காணலாம்; தென்றலை அனுபவிக்கலாம்; மரங்களையும், செடிகொடிகளை யும், மணம் வீசும் பல வண்ண மலர்களையும் காணலாம்; ஆறு, மலை, அருவி, காடு, கழனி முதலியவை களையும் பார்க்கலாம்; பலதிறப்பட்ட மக்களின் உரையாடல்களையும் அவர்கள் பண்பையும் பார்க்கலாம். இன்னும் எத்தனை எத்தனையோ இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

சங்கப் புலவர்களின் காதல் பாடல்களின் இத்தனை காட்சிகளுக்கும் இடையிலே நீதிகள் பல அமைந்திருக்கும்; அப்பாடல்கள் மக்கள் இன்பத்துடன் வாழ்வதற்கான அறிவுரைகள் பலவற்றைச் சொல்லும்; சன்மார்க்கத்துடன் வாழ்வதற்கு வழி காட்டும். இதுதான் பண்டைக்காலக் காதல் பாடல்களில் உள்ள தனிச்சிறப்பு. காதலிலும், நீதியை – அறத்தை – சன்மார்க்க நெறியை எடுத்துரைக்கப் பண்டைக்காலப் புலவர்கள் மறந்து விடுவதில்லை. இதற்கு உதாரணமாக நற்றிணைப் பாடல் ஒன்றைக் காணலாம்.

செல்வம் உள்ள காதலன் ஒருவன்; அவன் மருத நிலத்துத் தலைவன்; நீர்வளம் பொருந்திய நிலத்துத் தலைவனுக்குப் பஞ்சம் என்பதே தெரியாது. அவன் அரசனால் பாராட்டும் செல்வச் சிறப்புள்ளவன்; அரசனால் கௌரவப் பட்டமும் பெற்றவன். அவன் பரத்தையர் மீது காதல் கொண்டான். தன் மனைவியை விட்டுப் பிரிந்தான். பரத்தையர் சேரிக்குச் சென்று சிலநாள் தங்கிவிட்டான். பிறகு தன் மனைக்குத் திரும்பினான். இவன் செயலைக் கண்டு அவன் காதலிக்கு ஒரே கோபம். அதனால் திரும்பி வந்த அவனுடன் அவள் முகங் கொடுத்துப் பேசவில்லை. ஆதலால் அவன் தன் காதலியின் தோழியிடம் சென்று தன் மனைவிக்கும் தனக்கும் சமாதானம் செய்து வைக்கும்படி வேண்டினான். அப்பொழுது அத் தோழி, அத் தலைவனிடம் – அக் காதலனிடம் – சொல்லியதாக அமைந் திருக்கின்றது ஒரு நற்றிணைப் பாட்டு. அந்த நற்றிணைப் பாட்டிலே அமைந்திருக்கும் கருத்து மிகச் சிறந்தது; அது சன்மார்க்கத்தைப் போதிக்கும் கருத்தாகும்.

முதலில் பயிர் செய்த நெல்லை அறுத்தபின் அந்த அழகிய பெரிய வயல் சும்மா கிடந்தது; மீண்டும் உழுத ஈரமுள்ள அந்த வயலிலே விதைப்பதற்காக விதை நிரம்பிய கூடையை எடுத்துச் சென்றாய்; விதைத்தாய். அந்தக் கூடையை வெறும் கூடையாகக் கொண்டு வராமல் அதிலே பற்பல மீன்களை நிரப்பிக் கொண்டு வந்தாய். இத்தகைய புதிய வருவாயையுடைய மருத நிலத்துத் தலைவனே!

அரசனால் பாராட்டப்படுவதும், விரைந்து செல்லக் கூடிய வாகன வசதியைப் பெற்றிருப்பதும் செல்வம் அன்று. இவை வினைப்பயனால் வருபவை. செல்வம் என்று அறிவுடையோர்களால் கொண்டாடப்படுவது வேறு. அது என்னவென்றால், தன்னைச் சேர்ந்தவர்களின் துன்பத்தைக் கண்டால் அஞ்சுவது; அவர்கள் துன்பத்தை நீக்குவது; இத்தகைய பண்புடன் அவர் களிடம் அன்பு காட்டுவது; அவர்களை இன்புறச் செய்வது; இத்தன்மை தான் செல்வம் என்பது; இது தான் ஆன்றோர்கள் போற்றும் செல்வமாகும். நீ உன்னை நம்பிய காதலியைக் கைவிட்டாய்; பரத்தையரை நாடினாய்; உன் காதலி யின் உள்ளத்தைப் புண்படுத்தினாய்; ஆதலால், உன்னிடம் சான்றோர் போற்றும் செல்வம் இல்லை என்று கூறினாள் தோழி. இப்பொருளமைந்த பாடல் கீழ்வருவது:

அரிகால் மாறிய அம்கண் அகல்வயல்மறுகால் உழுத ஈரச் செறுவின்வித்தொடு சென்ற வட்டி, பற்பலமீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும், கடிய ஊர்தலும்செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்புன்கண் அஞ்சும் பண்பின்மென்கண் செல்வம், செல்வம் என்பதுவே.

(நற்றிணை – 210)

இப்பாட்டு ஒரு மனிதனுடைய சிறந்த கடமை இன்னதென்பதை வலியுறுத்திற்று. தன்னை நம்பியிருக்கும் மனைவி மக்களை, உறவினரைக் காப்பாற்றுவது; அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வது, ஆண்மகன் கடமை என்பதை எடுத்துக் காட்டிற்று. இதுதான் உண்மையான செல்வம்; வீண் ஆடம்பர மான ஏனைய புகழும், வாகனாதிகளும், ஆடையணிகளும் செல்வம் அல்ல என்று சொல்லிற்று.

பழந்தமிழ்ப் புலவர்கள் காதல் பாடல்களிலும் நீதியை – சன்மார்க்கத்தை எடுத்துக்காட்ட மறந்துவிடுவதில்லை என்ப தற்கு இப்பாடல் ஒரு உதாரணமாகும். இப்பாடல் மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் புலவரால் பாடப்பட்டது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !