சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

2. சோம்பர்க்கு வாழ்வில்லை

சோம்பர் என்பவர் சோம்பித் திரிவர் என்பது நாம் இளமையில் படித்த பாடம். இது உண்மையான பாடம். ஒன்றும் செய்யாமல் – ஒன்றும் செய்யத் திறமையில்லாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள். இவர்கள் இவ்வுலக வாழ்விலே எந்தப் பயனும் பெறமாட்டார்கள்; தேம்பித் தான் திரிவார்கள். அதாவது உடைக்கும், உணவுக்கும் வழியின்றி வாடித் திரிவார்கள். இப்படித் திரியும் சோம்பேறிகளை நாம் காண்கிறோம்.

மனிதன், இவ்வுலகிலே சோற்றுக்குக் கேடாகவும், பூமிக்கு பாரமாகவும் வாழப் பிறக்கவில்லை. நல்ல செயல்கள் பலவற்றைச் செய்வதற்கே பிறந்தான். ஆகையால் நல்ல செயல்களைச் செய்கின்றவனே-செய்ய முயல்கின்றவனே மனிதன்; மனிதப் பிறப்பின் பண்பை அறிந்தவன். இதுவே ஆன்றோர்களின் – சான்றோர்களின் கொள்கை.

மனிதன் என்றால் அவனைப் பலர் புகழ்ந்து பேச வேண்டும். எல்லா மனிதர்களையும் நாம் புகழ்ந்து பேசுவதில்லை. எத்த னையோ கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்தார்கள்; வாழ்ந்தார்கள்; மறைந்தார்கள். இன்றும் வாழ்கின்றார்கள். இவர்களிலே ஒரு சிலரைப்பற்றித்தான் உலகம் அறியும்; நாமும் அறிவோம். இவ்வாறு உலகம் அறியும் மக்களே புகழ்பெற்றவர் கள்; நம்மால் நினைக்கப்படும் மக்களே புகழ்பெற்றவர்கள்.

புகழ்பெற்று வாழ வேண்டுமானால் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் மக்கள் பெற வேண்டும். இவ்வுலகில் மக்கள் அடையவேண்டிய செல்வம் இம்மூன்றும் என்பதே முன்னோர்களின் கொள்கை. பழந்தமிழ் நூல்களிலே இம்மூன் றைப்பற்றித்தான் சொல்லப்படுகின்றன. இம்மூன்றையும் பொரு ளாகக் கொண்டே கவிதைகளும், நூல்களும் இயற்றப்பட வேண்டும் என்று மொழிந்தனர்.

பொருள் என்பது செல்வம்; முயன்று அதைச் சேர்க்க வேண்டும். அப்பொருளால் இன்பந் துய்க்க வேண்டும்; அப் பொருளால் அறம் புரிய வேண்டும்; அறம் புகழைத் தரும். பெருமையை உண்டாக்கும்.

மக்கள் இத்தகைய அறம், பொருள், இன்பங்களாகிய வாழ்க்கைப் பயனைப் பெற வேண்டும் என்பதைப் பற்றி பழங்காலத்துப் புலவர்கள் காதல் பாடல்களிலும் பாடியிருக் கின்றனர்; அகத்திணைப் பாடல்களிலும் அறம், பொருள், இன்பத்தை அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக நற்றிணைப் பாடல் ஒன்றைக் காண்போம்.

தலைவன் பொருள் தேடப் போனான்; அவன் காதலி அவனுடன் கருத்திலும் அன்பிலும் ஒன்றுபட்டவள். அவனை விட்டுப்பிரிந்து வாழ்வதால், பெருந்துயரத்தில் மூழ்கியவள். அவனும் அப்படித்தான். சிறிது நேரங்கூடப் பிரிந்து வாழ முடியாத அவ்விருவரும் சில மாதங்கள் பிரிந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம், செல்வந் தேடவேண்டிய அவசியந்தான். செல்வம் இருந்தால்தான் அவனும் அவளும் இன்புற்று வாழமுடியும். ஆதலால், அக்காதலன் பொருள்தேடப் போவதற்கு முடிவு செய்தான்.

இதை அறிந்த அவன் காதலி வருந்தினாள். காதலனை விட்டு எவ்வாறு பிரிந்திருப்பேன் என்று ஏங்கினாள். அப்பொழுது அக்காதலன் அவளுக்கு ஆறுதல்மொழி கூறினான். அவன் கூறிய ஆறுதல் மொழி மக்களின் கடமையை உணர்த்துவதாகும்.

இவ்வுலகிலே பிறந்த மக்கள் வீணாகப் பிறந்து, இருந்து, சாவதிலே பயன் இல்லை. புகழ் பெற வேண்டும். புகழ் சும்மா வந்துவிடாது. ஈதல் என்னும் அறத்தினால் தான் வரும். அறம் புரிவதோடு இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும். இன்பத்தை நுகரவேண்டுமானால் பொருள் வேண்டும். வீட்டிலே சும்மா இருப்பவர்க்குப் பொருள் கிடைத்து விடாது. பொருள் இருக்கும் இடத்தை நாடிச் சென்று, அதைச் சேர்க்க முயலவேண்டும். முயன்றால்தான் – முயல்வோர்க்குத்தான் பொருள் கிடைக்கும். வீட்டிலே சோம்பிக் கிடப்போர்க்குத் தப்பித் தவறிக் கூடச் செல்வம் கிடைக்காது. ஆதலால் நீ வருந்தாதே. நான் சென்று பொருள் தேடிக்கொண்டு மழைக்காலம் வருவதற்கு முன் வந்துவிடுவேன். என்று உறுதி கூறிச் சென்றான்.

இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கும் பாடல் மக்கள் கடமை யை உணர்த்தும் பாடல்; மக்களுக்கு அவர்கள் செய்யவேண்டிய கடமையை அறிவுறுத்தும் பாடலாகும்.

மழைக்காலம் வந்துவிட்டது; ஆயினும் காதலன் இன்னும் வரவில்லை. அப்பொழுது அத்தலைவி காதலன் கூறிய மொழி களை எடுத்துரைத்து வருந்தியதுபோலப் பாடப்பட்ட பாட்டு அது.

இசையும், இன்பமும், ஈதலும் மூன்றும்அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்பம்எனவினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை;
அரும்பு அவிழ் அலரிச் சுரும்புண் பல்போதுஅணிய வருதும்நின் மணியிரும் கதுப்பு;எனஎஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி,
மைசூழ் வெற்பின் மலைபல இறந்துசெய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர்கேளார் கொல்லோ தோழி! தோள்இலங்குவளை நெகிழ்த்த கலங்குஅஞர், எள்ளிநகுவதுபோல மின்னி,
ஆர்ப்பது போலும்இக் கார்ப்பெயல் குரலே.

(நற்றிணை – 214)

இதுவே மக்கள் கடமையை உணர்த்தும் அப்பாடலாகும்.

தோழியே! புகழும், இன்பமும், அறமும் ஆகிய இம்முன்றும் சோம்பியிருப்போரிடம் தவறிக்கூட உண்டாவ தில்லைஎன்று கூறினார். இப்படிச் சொல்லிப் பொருள் தேடும் தொழிலை மேற்கொண்டு வேறுபட்ட கொள்கையுடன் சென்றார். அவர் செல்லும்போது, கார்காலத்திலே அரும்பு விரிந்த மலர்களையும், வண்டுகள் தேனையுண்ணும் பல வண்ணப் பூக்களையும் உன்னுடைய நீலமணி போன்ற நீண்ட கூந்தலிலே அணியும்பொருட்டு நாம் வந்துவிடுவோம் என்றார். இவ்வாறு என் மனங்கொள்ளும்படி உறுதியாகச் சூள் உரைத்துச் சென்றார். மேகங்கள் சூழ்ந்த வெற்பாகிய மலைகள் பலவற்றையும் கடந்து செல்வத்தைச் சேர்க்கும்பொருட்டு அவர் சென்றார். அவர் குற்றமற்றவர். என்பால் ஆராத அன்புள்ளவர். அவர் சென்றதனால் என் தோளில் உள்ள வளையல் கழலும்படி என் மனங் கலங்கிய துன்பத்தைக் கண்டு இகழ்ந்து சிரிப்பது போல மேகம் மின்னுகின்றது. ஆரவாரம் செய்வது போல மேகம் மழையைப் பெய்து இடியையும் எழுப்புகின்றது. இந்த இடியின் குரலை அவர் கேட்கமாட்டாரோ? அவர் கேட்டால் உடனே திரும்பி வந்துவிடுவார் அன்றோ?

இதுவே மேலேகண்ட பாடலில் பொருந்தியுள்ள பொருள். தலைவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றான இந்த அகத்திணைப் பாட்டிலே உயர்ந்த சன்மார்க்க போதம் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இப் பாடல் கருவூர்க் கோசனார் என்னும் புலவர் பாடியது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !