
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
19. உலகத்தை உணர்ந்த உத்தமர்
உலக இயல்பை நன்றாக உணர்ந்தவர்களே ஞானிகள், அறிவுள்ளவர்கள், தீர்க்கதரிசிகள் என்று போற்றப்படுவார்கள்; உத்தமர்கள் என்று புகழப்படுவார்கள். உலகப் போக்கின் உண்மையை உணர்ந்தவர்கள் சிலர் தாம். எல்லோரையும் உலக நிலைமையின் உண்மையை உணர்ந்தவர்கள் என்று சொல்லி விட முடியாது.
யார் உலகப் போக்கின் உண்மையை உணர்ந்தவர்? இதற்கு விடை காணவேண்டும். இவ்வுலகில் காணப்படுகின்றவைகளிலே என்றும் அழியாமல் நிலைத்திருப்பவை யாவை? நிலைத்து நிற்காமல் நீர்மேல் குமிழிபோல் அழிந்து மறைவன யாவை? இவ்வுலகிலே நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும்? நாம் பின்பற்றி நடக்க வேண்டிய ஒழுக்கங்கள் எவை? பின்பற்றாமல், நெஞ்சத்தாலும் நினைக்காமல் விடடுவிடக்கூடிய, ஒதுக்கித் தள்ள வேண்டிய செயல்கள் யாவை? இவைகளையெல்லாம் சிந்தித்து முடிவுகட்டுகின்றவனே சிறந்தவன் ஆவான்; அறிவாளி யாவான்.
உள்ளத்தால் நினைத்து நினைத்து உண்மையை உணர்வது மட்டும் போதாது; உணர்ந்த உண்மையைப் பிறர் அறிய வாயால் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது மட்டும் போதாது, வாய்ப்பறையால் தான் அடையும் பயன் ஒன்றுமில்லை. தான் அறிந்த உண்மையை – நம்பும் உண்மையை – ஓரளவாவது, முடிந்த வரையிலாது பின்பற்றி நடக்க வேண்டும்; இப்படி உண்மை நெறியிலே ஒழுகுகின்றவர்கள்தாம் உயர்ந்த மனிதர்கள்; உத்தம மனிதர்கள்; உலகத்தாரால் மதிக்கப்படும் மனிதர்கள் ஆவார்கள்.
பண்டைக்காலத்திலே உலகம் எவ்வளவோ உயர்ந்த நிலையில் இருந்தது; மனிதன் சிறந்தவர்களாக வாழ்ந்தனர்; என்று சொல்வோர் உண்டு. இவர்களை உலக சரித்திரம் அறியாதவர்கள் என்று சொல்லிவிடலாம். பண்டைக்காலத்தை விட இக்காலத்திலே மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் மறுக்க மாட்டார்கள். கல்வித் துறை, செல்வத் துறை, அரசியல் துறை, சமுதாயத் துறை, வாழ்க்கைத் துறை, விஞ்ஞானத் துறை போன்ற பல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றோம். பண்டைக் காலத்தில் நெஞ்சிலே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்; இன்னும் முன்னேறிக் கொண்டே வருகின்றோம். இந்த முன்னேற்றம் எந்த எல்லையிலே போய் நிற்கும் என்பதை நம்மால் முடிவு கட்ட இயலாது.
ஆயினும் ஒரு உண்மையை மட்டும் நாம் மறந்து விடுவதற் கில்லை. ஒரு துறையில் மட்டும் நாம் முன்னேறவில்லை. பின்தங்கித்தான் நிற்கின்றோம். நிற்கின்றோம் என்பதை விடப் பின்னோக்கிப் போய்க் கொண்டேயிருக்கின்றோம் என்று சொன்னால் கூடப் பொருந்தும். அந்தத் துறை யாது? சுருங்கக் கூறினால் ஒழுக்கத் துறையென்று அதைச் சொல்லிவிடலாம். முன்னோர்கள் பெரும்பாலும் தங்கள் சொல்லையும், நினைப் பையும் செயலிலே காட்டினார்கள். அவர்கள் உள்ளமும், சொல்லும், செயலும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்து வந்தன. இம்முறையைப் பின்பற்றி நடப்பதுதான் அறம், ஒழுக்கம், தர்மம் என்று நம்பினார்கள். இதற்கு மாறாக நடப்பது பாவம், பழிச் சொல்லுக்கு இடம், அறமற்ற செயல் என்று நினைத்தார்கள். இக்காலத்தினர் – பல துறைகளிலும் இக்காலத்தில் முன்னேறி யிருக்கும் மக்கள் – இந்த நடத்தையைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை. எண்ணம் வேறு; சொல் பற்றிக் கவலைப் படுவதில்லை. எண்ணம் வேறு, சொல் வேறு, செயல் வேறு என்று சொல்லும் படி நடக்கும் மனிதர் களையே மிகுதியாகக் காணுகின்றோம். இது ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் நாம் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு காரணம், அறிவின் வளர்ச்சிதானோ? அல்லது வேறு என்னவோ? அகடவிகடங்கள் செய்வதிலே அறிவுள்ளவர்கள் தாம் சமர்த்தர்கள். அப்பாவிகளுக்குத் தில்லுமுல்லுகள் செய்யத் திறமையேது?
இந்த உண்மையை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரு செய்யுளில் எடுத்துக்காட்டியிருக்கின்றார். அந்தப் பாடல் குறுந்தொகையிலே உள்ளது. அது குறிஞ்சித் திணையைப் பற்றிப் பாடும் அகப்பொருள்பாட்டு.
உற்றார், உறவினர், ஊரார் அறிய மணம் புரிந்து கொள்ளாத காதலர்கள், களவு மணத்திலே தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். காதலன், காதலியை விரைவிலே கற்புமணம் புரிந்துகொள்ளத் தீர்மானித்தான். அதன் பொருட்டு அவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து போனான். அப்பொழுது காதலி காதலன் பிரிவால் வருந்தியிருந்தாள். அவள் துன்பத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறியதாக அமைந்திருப்பது அச்செய்யுள். அச்செய்யுளிலே அமைந்திருக்கும் அரும் பொருள் என்றும் அழியாமல் நிற்கும் அறமாகும்; பழந் தமிழர்களின் அறநெறியைப் பறைசாற்றுவதாகும்.
சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்ணே! தலைவன் பிரிந்து சென்றான் என்பதற்காக நீ வருந்த வேண்டாம். அவன் நமது நன்மைக்காகத்தான் பொருள் தேடப் பிரிந்து போனான். அவன் பொருள் தேடிக் கொண்டு வந்தவுடன் நம்மை மணம் புரிந்துகொள்ளுவான்; இப்பொழுதுள்ள களவு ஒழுக்கத்திற்கு முடிவு கட்டுவான். உற்றார்க்கும், ஊரார்க்கும் தெரியாமல் அஞ்சி மறைந்து வாழும் இந்த வாழ்வுக்கு இனி இடமில்லை. உற்றார் உறவினர் காண, ஊரார் அறிய, வெளிப்படையாக உன்னைக் கற்புமணம் புரிந்து கொள்ளுவான். ஆதலால் இனி ஏற்படப்போகும் இன்ப வாழ்வை நினைத்து நீ வருந்தாமலிரு; சிறிதுகாலம் பிரிந்திருக்க நேர்ந்ததைக் குறித்து மனம் கலங்காதே.
நல்ல பயனைத் தரும் மலைநாட்டுத் தலைவன் நம்மைப் பிரிந்து போனதால் அவனுக்கு எவ்வித இன்பமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. அவன் சென்ற இடத்திலே தனிமையால் நம்மைப் போலவே வருந்துவான்.
அவன் சிறந்த பண்புள்ளவன்; பழிக்கு அஞ்சும் இயல் புள்ளவன்; பிறர் தன்னைப் பழித்துப் பேசும்படி – குறைகூறும்படி – வசை கூறித் தூற்றும்படி – ஒருபொழுதும் நடந்து கொள்ளவே மாட்டான்.
அவன் இந்த உலக இயல்பையும், போக்கையும் நன்றாக அறிந்தவன். நமது இளம்பருவமும் யாக்கையும் நிலைத்தவை அல்ல; நம்முடைய செல்வமும் வாழ்வும் சிதையாமல் சிரஞ்சிவீ யாக வாழ்வன அல்ல; இவைகள் எல்லாம் அழிந்துபோகக் கூடியவைகள். இவ்வுலகில் என்றும் அழியாமல் நிலைத் திருப்பது புகழ் ஒன்றுதான் என்ற உண்மையை உணர்ந்தவன். ஆதலால் நீதிநெறி தவறாமல், நேர்மையாக நடந்து கொள்ளும் உத்தம குணம் உள்ளவன் அவன். இத்தகைய உண்மை அறிவும், உத்தம குணமும் உள்ளவர்கள் யாராயிருந் தாலும் சரி, அவர்கள் தம் பொருளை நல்வழியிலேதான் செலவழிப்பார்கள். வறுமை யால் வாடி வதங்கும் ஏழைகளுக்கு இரங்காமல் உதவி செய்யாமல் இருக்க மாட்டார்கள். இவ்வாறு உதவி செய்யும் குணம் உள்ளவர்களின் செல்வம் அவர்களிடம் தங்கியிராது. அவர்களை விட்டுப் பிரிந்துதான் போகும். இதைப்போலவே உன் உடம்பிலே தோன்றி விளங்கும் பசலை நிறமும் நீங்கிப் போய்விடும். ஆதலால் நீ வருந்தாதே இதுவே அச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள்.
அழியல் ஆயிழை! அன்புபெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பயமலை நாடன்;
நில்லா மையோ நிலையிற்று, ஆகலின்
நல்இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட் டாளனு டைப்பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று; நின்
அம்கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
(குறுந். 143)
இதுவே மேலே காட்டிய – சொல்லிய – பொருள் அமைந்த பாடல். அகப்பொருள் துறையிலே புறப்பொருள் அறத்தை அமைத்துப் பாடிய அழகான பாட்டு. தமிழர்களின் – பண்டைத் தமிழர்களின் – அறிவையும், அறத்தையும், அருளையும் விளக்கும் அருமையான தமிழ்ப் பாட்டு.
இப்பாட்டு, பண்டைத் தமிழர்களின் சிறந்த பண்பாட்டை உணர்த்துவதோடு, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுவதாகவும் அமைந்துள்ளது. இப்படி வாழ்வது தான் மனிதப் பண்பாகும் என்ற உண்மையையும் உரைத்தது.



