சைவச்சடங்கு விளக்கம்
கா. சுப்பிரமணிய பிள்ளை

வழிபாட்டுப் பதங்களாவன.

திருவடி விளக்குதல் (பாத்தியங் கொடுத்தல்):- ஒருகிண்ணத்தில் சந்தனங் கலந்த நன்னீர்விட்டு அது புனிதமான தாகப்பாவித்து, வழிபடுங் கடவுள் திருவடி போற்றியென இருமலரிடுக அத்கீசை அம்மந்திரங் கூறித் திருவுருவில் வீற்றிருக்குந் தெய்வத்தின் றிரு வடி உவிலே தெளிக்க.

பருகு நீரளித்தல் (ஆசமன நீர் கொடுத்தல்):- மற்றொரு கிண்ணத்திலே சந்தனங்கலந்த புனல்வார்த்து அதில் வழிபடுங் கடவுள் பெயர்க்குரியவென்று மும்முறை மலரிடுக அந்நீரை அத்தெய்வத்திற்குப் பருகுவான் அளிப்ப, மலரினால் நீரையெடுத்து விடுக.

பனிநீர் தெளித்தல்:- மற்றொரு கிண்ணத்தில் சந்தனங் கலந்த நீரையூற்றி அதில் வழிபடுங் கடவுட் குவரையாகவென்று மும்முறை மலரிடுக. அந்நீரைத் திருவுருளின் சென்னியிலே மலரினாற் றெளிக்க மூன்று கிண்ணங்கள் கிடையாதபோது ஒரு கிண்ணத் திலேயுள்ள நீரைப் பயன்படுத்தலாம், அக்கிண்ணத் திலே பிரணவத்தை எழு முறை கூறி நீரை நிறை மொழிப்படுத்துக.

திரு முழுக்கு:- பின்னர், நறும் புகையும் நல் விளக்குங்காட்டி பழம் ஏதாவது பெருமானுக்கு நிவேதித்து, நீரும் நிவேதித்த பின், திருமுழக்குப் பீடத் திலே பெருமானை எழுந்தருள்வித்து, மஞ்சட்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், பழச்சாறு, இளநீர், சந்தனம், பூநீர் முதலியவற்றினால் திருமுழுக்காட்டுக.

கவினுறுத்தல்:- திருமுழுக்கு முடிந்தபின், திறு வடிப்புனல், பருகுபுனல் அளித்துத் திருவொற்றாடை சாத்தி, பெருமானைப் பூசையிடத்திலே எழுந்தருளப் பண்ணி, திருநீறு, சந்தனம், குங்குமம், மலர்மாலை, அணி முதலியன சாத்துக.

படைத்தல்:- திருவமுது, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, தண்புனல், முதலியன படைத்தளிக்க நறும்புகை, நல்விளக்கு, ஒளிநிரல், சூடன் ஒளி, முதலியன பணி மாறுதல், பின்னர் நிகழ் தற்பாற்று.

மலர்தூவிப் போற்றுதல் (அர்ச்சனை):- பெருமானுக்கு அர்ச்சனை செய்ய விரும்புவோர், பெருமான் றிருப்பெயரோடு போற்றியென்பதைச் சேர்த்த மந்திரத்தாலும், தேவார முதலியவற்றிலுள்ள அர்ச்சனைப் பதிகங்கள், திருவாசகத்திலுள்ள அர்ச்சனை யகவல்கள் முதலியவற்றாலும், மலர்தூவிப் போற்றுக.

வாழ்த்து (தோத்திரம்):- தேவார முதலிய திருவருட்பாக்களை இசையுடன் ஓதி,வலம் வந்து, கையாலும், மெய்யாலும் வணங்குக.

வேண்டுகோள் (பிரார்த்தனை):- வழிபடுவோர் விரும்பியதைப் பெருமான்பால் வேண்டுக.

உருவெண்ண விரும்புவார், பெருமானது திரு நாம மந்திரத்தை இயன்ற அளவு விழி மணி மாலை கொண்டு எண்ணுக. பூசை முடிவிலே, பூசையில் நேரிட்ட பிழைகளைப் பொறுக்கும்படி பெருமானை வேண்டிக் கொண்டு, திருவுருவம், நிலைபேறிலதாயின் உள்ளெழுந்தருள்க போற்றி, என்றுரைத்து, வழிபா டியற்றப்பெற்ற கடவுள் தனது அகத்துட் புகுந்த தாகக் கருதுக. பின், மண் மூதலியவற்றாலாய திரு வடிவத்தைத் தீர்த்தத்திலே சேர்க்கவும்.

தானம்:- சடங்குக்காலங்களிலே, தக்கார்க்கும் வறியார்க்கும் வேண்டிய பொருள்களை நன்கொடையாகக் கொடுத்தல் ஒரு வழக்கம். ஒருவன் தனது வாழ்நாளிலே பொருள் வளம் தனக்கு ஏற்பட்ட போதெல்லாம், வறியவர்க்கும், கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்த தக்கார்க்கும், பல்வகைப் பொருள்களையுங் கொடுத்துதவுதல் பெரும் புண்ணியமே, அங்ஙனஞ் செய்ய இயலாதார், சிறப்பான சடங்குக் காலங்களிலே அத்தகைய கொடைகளை இயற்ற வேண்டுமென்பது நமது முன்னோர் கருத்து. இக்காலத்திலே மிகுதியும் அறுபதாண்டின் நிறைவிலாவது எண்பத்து நாலாவ தாண்டின் நிறைவிலாவது ஆயுசு முடிவிலாவது தானஞ் செய்தல் வழக்கமாயிருக்கின்றது. பழம், வெற்றிலை பாக்கு திருநீற்றுப்பை. உருத்திராக்கம், விளக்கு, குடை, செருப்பு, எள்ளு, உப்பு, படுக்கை, தண்ணீர்ப் பாத்திரம், உடை, கைக்கோல், நெய், எண்ணெய், பசு, பொன், மணி, நிலம் முதலியவற்றை அவை இல்லதார்க்கு இயன்றவரை கொடையாகக் கொடுத்தல் சிறந்த அறச்செய்கையே. தானப் பொருள்கள் பலவற்றையும் ஒருவரை வாடகைக்குக் கொணரும்படி செய்து போலித்தானஞ் செய்வதினும், கொடை யாதுஞ் செய்யாமை நல்லது. தனது வருவாய்க்கேற்ப, ஒருவன், ஏதாவது ஒரு கொடை யியற்றினாற் போதுமானது அடியார்களுக்கும் உறவினர்க்கும் பொருளுதவி செய்தல் நலம்.

செல்வர்கள் கலாசாலையமைத்தல், நூல் நிலையங்கள் நிலையிடுதல், பொதுவான சத்திரம் அமைத் தல், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு விடுதியமைத்தல், வேலையில்லாருக்கு வேலை கொடுத்தல், கொடுப்பித்தல், மருத்துவச் சாலையமைத்தல், கைத்தொழிற் சாலையமைத்தல், முதலிய அறங்களிலே, ஒன்றையோ, பலவற்றையோ, இயற்றுதல் இற்றைக் காலத்திற்குப் பொருந்துவதாகும்.

இனி, சடங்குகளைக் கூறத்தொடங்கி, முதலில் மணச்சடங்கினைத் தெரிவிப்பாம்.

திருமண மேடைமேல், பிள்ளையார், திருவிளக்கு நிறைகாழி, புனிதநீர், ஆவிலைந்து, முளைப்பாலிகை, சிவ கும்பம், முதலியன அமைத்துச் சடங்கு செய்விப்பார். அவற்றிற்குரிய வழிபாடியற்றியபின், மணமக்களையும் அவர் பெற்றோரையும் வருவித்து, அவர்கள் மீது புனித நீர் தெளித்து ஆவிலைந்து உட்கொள்ளித்து, அவர்களைத் தனித்தனியே பிள்ளையார், திருவிளக்கு, நிறைநாழி ஆவிலைந்து, சிவகும்பம், என்பவற்றை மலர்தூவிப் போற்றுமாறு செய்க.

(1) ஒங்கார முதல்வனே போற்றி

(2) ஒளிவளர் விளக்கே போற்றி

(3) நிறை செல்வ அமுதே போற்றி

(4) ஆவிலைந்துகப்பாய் போற்றி

(5) சிவபரம் பொருளே போற்றி

என்பவற்றை மலர்தூவுங்கால் ஒதுவிக்க பின்னர், அக்கடவுளார்க்கு, தேங்காய், பழ முதலியன உண்பித்து, நறும்புகையெடுத்து, நல்விளக்குக்காட்டி சூடன் பணிமாறுக, பிள்ளையார் நிகழுந் திருமணச் செய்திகள் யாவும் இனிது முடிவித்தருளுமாறு வேண்டு கோள் செய்விக்க பின், நெருப்பு வழிபாடு இயற்றுவான், ‘மாதொரு பாகனாகிய மணாளர்க் குவகையாக’ ஏன ஐந்து முறை, நெய், தானியம், சமித்து என்பவற்றால் ஆகுதி செய்சு, மணமகன் தந்தை பிதிர்வழிபாடு செய்தலுமுண்டு பின், மணமகனது மாமனாரும் கன்னிப்பெண் ஒருத்தியும் வந்து முளை தெளிக்க முளைதெளிப்பவர்கள் அமுத முதல்வனே, நற்பயிர் போல, மணமக்கள் வளர்ச்சியடைய அருள் புரிக’ என்றியம்புக.

மணமகனுக்குக் காப்புக்கட்டும். ஐந்தெழுத்து, ஆடை கொடுக்க. மணமகளும் அவள் பெற்றோரும் மணவறைக் கடவுளரை வழிபடுக.

(மணமகள் தந்தை பிதிர்வழிபாடு.)

மணமகளும் அவள் மாமனாரும் கன்னிப்பெண்ணும் வந்து முளைதெளிக்க.

மணமகனுக்குக் காப்புக்கட்டுக. ஐந்தெழுத்து ஓதுவிக்க ஆடை கொடுக்க

(மணமகள். வீட்டினுள் நாட்பானை ஏறவைத்தல், கலப்பருப்பிடுதல் நிகழற்பாலன)

நாட்கால் நடுதல்.

மணமகளை ஊஞ்சலிலும், மணமகனை எதிராக ஒரு இருக்கையிலும் அமர்வித்து திருவாசகம், பொன் னூசல் முதலிய ஊஞ்சற்பாட்டுப் பாடுக.

அப்போது சடங்கு செய்விப்பார் திருமங்கல நாணிற்கு மலருங் குங்குமமுஞ் சாத்தி வெற்றிலை பாக்கு நிறைந்த தாம்பாள மொன்றிலிட்டுப் பெரியாரால் தொட்டு வாழ்த்துதல் பெற்று வைத்துக் கொள்ளுக.

ஊஞ்சல் முடிந்தபின், மணவறைக்கு மணமக்கள் வந்ததும், சடங்காசிரியர் அவர்கள் ஒருவரையொருவர் மணப்பதற்கு இணக்கமுடையாரென்பதை உசாவித் தெரிக, பின்,

மகட்கொடை:- மணமகளுடைய தந்தை, உடன்பிறந்தார், மாமனார் முதலியவர்களுள் ஒருவர் மணமகள் கையை மணமகன் கைமேல் வைத்தும் பொன்னுடன் நீரைவார்த்து, மணமகளை மணாளனுக்கு அளிப்பதாகக் கூற வேண்டும் மணமகள் தந்தை, “யானும் என் மனைவியும், எங்களருமை மகளாகிய (இன்ன பெயருடைய) இவளை இறைவன் திருவுள்ளப் படி இன்ன ஊர் இன்ன பெயருடைய மணமகனாகிய உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக உள்ளும் புறமு மொத்துக் கொடுக்கிறோம். நீவிர் இருவீரும் என்றும் நிலைத்த அன்பும் அறனுமுடையராய்ப் பிரிவின்றி நீடூழி இனிதுவாழ்க” என்றியம்புக (மணமகளைக் கொடுக்கும் பிறரும் தங்கள் முறைக்கேற்றவாறு சொற்களை இசை வித்துக் கொள்ளுக). பின் மாலையிடுதல் நிகழ்தற்பாற்று. மணமகள் மணமகனுக்கு மாலையிடுங்கால், இல்லற வாழ்க்கைக்கு இன்னுயிர்த் துணையாகத் தங்களைப் பெறுகின்றேன் தங்கள் மனம் நோவ எச்செயலையும் யான் செய்பாதிருக்கவும், உடலுமுயிரும் போலவும், கண்ணுமிமையும் போலவும், அமுதுஞ் சுவையும் போலவும், இருவேமும் வாழ்ந்தின்புற்று அறநெறி நிற்குமாறு அருள் செய்யும் வண்ணம், மாதொருபாகனை வேண்டி இம்மாலையைத் தங்களுக்கு இடுகிறேன்’ என்றியம்புக. பின்,

திருமங்கல நாண்பூட்டு :- மணமகன் உடன் பிறந்தாளுதவியோடு, திருமங்கல நாணினைச் சடங்கா சிரியரிடமிருந்து வாங்கி மணமகள் கழுத்திற் பூட்டுக. பூட்டுங்கால், மணமகளை நோக்கி, நீ மாலையிடுங்காற் செப்பிய வண்ணமே, என்றும் நாம் ஒற்றுமையாய் இன்புற்று இல்லறம் நடத்தி வாழ, இறைவன் அருள்புரியும் வண்ணம், அவனை வணங்கி இத்திருநாணைப் பூட்டுகின்றேன் என்று மொழிக. அப்போது ‘குவளைக்கண்ணி கூறன் காண்க’ என்று சடங்கினர் கூற, பிறர் ‘அவளுர் தானுமுடனே காண்க என எதிர் மொழி பகர்க. பின்னர், மாலைமாற்று நிகழ்க, கண்ணேறு கழிக்க பின், அறிவுரையும் ஆசியும் சடங்கியற்றுவார் கூறுக:-

மண்ணில் நங்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக் கியாதுமோர் குறையிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகையிருந்ததே.”

என்பதை ஓதி, மணமகனை நோக்கி:

பொதுமறை விதித்தவாறே, திறனறிந்து தீதின்றி வந்த பொருளைப் பகுத்துண்டு பல்லுபிரோம்பிப் பிறனில் விழையாது பீடு பெறுக

எனவும்,

மணமகளை நோக்கி;

கணவன் வளத்திற்குத் தக்க வாறு வாழ்க்கை நடத்தித் தற்காத்துத்தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாது திகழ்க

எனவும்,

மணமக்களை நோக்கி, இருவீரும் நீடூழி இன்ப வாழ்வெய்தி நன்மக்கட்பெற்று, இனியவை சொல்லுத லும் பயனில சொல்லாமையும், செய்ந்தன்றியறிவும், நடுநிலையும், அடக்கமும், ஒழுக்கமும் பொறையும் வாய் மையும் அகத்தூய்மையுமுடையராய் வாழ்ந்து, தமிழ் மணங்கமழுஞ் சைவந்தழுவி, ஆல் போற்றழைத்து, அறுகு போல் வேரூன்றி, மூங்கிலன்ன சுற்றம், முசியாமல் வாழ்வோங்கிப் பல்லாண்டு வாழப் பரனருள் புரிய எனவுமொழிந்து மணமக்கட்குத் திருநீறிடுக. அவர் கட்குப் பிறபெரியாருந் திருநீறு பூசுக பெரியோர் ஆசிமுடிந்தபின், மணமக்கள் கைப்பிடித்துத் திருவனலைச் சுற்றிவந்து மும்முறை அதன்கட் பொரியிடுக பொரியிடுவார், திருவருள் வழிநின்று அறம், பொருள் இன்ப நெறிபற்றி யாங்கள் செய்வன உமையொருபாகனுக்கு உவகையாக என்றியம்புக.

பின், மணமக்கள் மனைபுகுந்து பால் பழம் உட் கோடலும், மங்கலப்பெண் வாழ்த்தும் நடைபெறுவன.

மணம் நிகழும் நாள்களிலே, காலையுமாலையு மண் மக்கள் மணமேடைக்கு வந்து, கணபதி வழிபாடு, ஆகுதி, முளையில் நீர்தெளித்தல் முதலியவற்றைச்செய்து திருநீறணிதலும் உண்டு மணமக்கட்குத் திருநீறு பூசியபின், சடங்கு செய்வார், ஒரு தர்ப்பைப்புல்லை ஓமநெருப்பிற் சுட்டெ டுத்து, ஒரு மாவிலையில் வைத்து அவிசொரியும் நெய்த் துளிவிட்டுக் குழைத்து மணமக்கள் நெற்றியிற் றிலகந் தீட்டுதலுமுண்டு.

மணநாள் கழிந்தபின், காப்பவிழ்த்து, மணவறைக் கடவுளரை உள்ளத்திலொடுக்கியபின், நிறைநாழி முதலியவற்றை உரிய இடங்களிற் சேர்த்தலும், முளைகளை நீரில் விடுதலும் நிகழற்பாலன.

திருக்கோயிலின்கண் திருமணம் நடைபெறுவதா யின், இறைவன் இறைவியர்க்கு வழிபாடியற்றிப் பெருமான் திருவடியில் வைத்தெடுத்த திருமங்கல நாணை மணமகன் மணமகள் கழுத்திற் பூட்டுதலும் பெரியோர் ஆசி கூறுதலும், மணமக்கள் ஓர் ஊர்தியில் மணவீட்டிற்குச் செல்லுதலும் நிகழ்வன.

பூப்புச்சீர்:-

பெண்களுக்கு முதற்பூப்பு நேரிட்டபின், நல்ல வேளையில், விநாயகர் வழிபாடு, புனிதநீரமைத்தல், ஆவிலைந்து கூட்டுதல் முதலியன நிகழ்த்திக் கும்பபூசை யிற் கூறியவாறு சந்திரகும்பம் வைத்து அமுத முதல்வனை அதன்கண் பூசித்துத் திருவைந்தெழுத்தை ‘நூறு உருவெண்ணி, பூப்புப்பெண்மீது புனி நீர் தெளித்து, ஆவிலைந்து குடிப்பித்து, கும்பநீரிலே முழுகுவிக்க. நெய் கலந்த பாலை உண்பித்தலும் விதிக்கப் பட்டிருக்கிறது.

மணமக்கள் தம்முட்சேருங்கால் சிவமுஞ்சத்தியும் தம்மை இயக்குவதாகப் பாவிக்க.

கருச்சீர்:-

கருத்தரித்து ஒரு திங்கள் கழிந்தபின், கருநிலைத்தற்பொருட்டு இறைவனை வழிபடுதலும், இரண்டாந் திங்களில், மாதொருபாகனை வழிபட்டுச் சூலிக்குக் கோதுமை உளுந்து முதலியன கலந்த நெய்யுணவு, பாலுணவுகளைக் கொடுத்தலுமுண்டு.

கருமுதிர்வு: –

சீமந்தமானது கருத்தரித்து நான்கு, ஆறு, அல்லது எட்டாவது திங்களில் நடைபெறுதற்குரியது. அப்போது ஒன்பது கோள்களுக்கு வழிபாடியற்றுவ தும், முட்பன்றி மயிர், தர்ப்பை, அத்திக்குச்சு முதலியவற்றால் சிவமந்திரஞ் சொல்லி நாயகன் சூவிக்குத் தலை வகிர்ப்பெடுத்தலும், அறுகும், மஞ்சளரிசியுங் கலந்து முழங்கால், கொப்புள், மார்பு, நெற்றி, சிரசு என்னுமிடங்களில் அதனைச் தெளித்தலும், மணமகள் வயிற்றைத் தொட்டுச் சிவமந்திரம் உச்சரித்தலும், சூலிக்கு வளையவிடுதலும் நிகழ்வன. ஆல், அரசு, முருக்கு, அத்தி என்பவைகளின் மொட்டுக்களை நெய் கலந்த பாலுடனமைத்து அதனை வடித்தெடுத்த சாற்றினை மனைவியின் நாசியிற் பிழிதலும் உண்டு.

இவையெல்லாம், கருவானது வளம்படுதற்பொருட்டுச் சூலியின் உடலை மிக்க சூடிலதாகவும், சத்து டையதாகவுஞ் செய்தற்பொருட்டு நிகழ்வனவென்ப.

பிறப்புச்சீர்:-

குழந்தை பிறந்தவுடன், பிறந்த இடத்தின் மருங்கு சுத்தத்தின் பொருட்டு, எள்ளுப் பொடியினாலும், வெண் கடுகுப் பொடியினாலும் புகையிடுதலும், குழந்தையின் தந்தை நீர்மூழ்கித் திருநீறிட்டுக் கணபதியை வழிபட்டு, எல்லாவற்றையும் புனிதமாக்குஞ் சிவத்தினது செவ்வொளி வடிவைச் சிறிதுநேரம் மனமொன்றி நினைத்திருந்து,குழந்தை முகத்தைப் பார்த்து

குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமுங்
காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே

என்னுந் திருப்பாட்டைப்பாடுக.

கொடியறுத்தபின், ஐம்முகக்கடவுள் திருமேனியை நினைந்து நிறைகுட நீரால் குழந்தையை முழுக்காட்டி பாதுகாப்பின் பொருட்டுத் திருவைந்தெழுத்தோதித் திருநீறிடுக’

வறியார்க்கும் தக்கார்க்கும் உணவு அளிக்க குழந்தையின் தாய்க்குக் கடவுளுக்குப் படைத்த தேன், நெய், சர்க்கரைக் கலவைகளைக் கொடுக்கலாம்.

காதுகுத்தல்:-

குழந்தை பிறந்த பத்தாம் நாள் அல்லது பன்னிரண்டாம் நாள் அல்லது பின்னர் ஒரு மாதத்திற்குள், கடுக்கன் அணிதற் பொருட்டு, காதுகுத்தல் நிகழற்பாலது. அப்போது பிள்ளையார், நிறைநாழி, திருவிளக்கமைத்து வழிபாடியற்றிச் சர்க்கரை கலந்த பச்சரிசியை நிவேதித்தல் மரபு

தாய்வீடுகூடல்:-

கொப்பூழ்க் கொடியறுக்கும் வரை, கருப்பத்திற் குழந்தை இருக்குங்காலத்திற் போலச் சூதகம் இல்லை. சூக்கம் நீங்கும் நாளில், இடங்களையும் பாத்திரங்களையுஞ் சுத்தி செய்து, புனிதநீர்ச்சுத்தியின் பின் ஆவிலைகதைப் பெற்றோரும் குழந்தையும் பருகுதல் வேண்டும். ஒரு மண்மடக்கில் அல்லது உலைமுடியில் திருவைக் தெழுத்தோதி யமைத்த நீரினை உட்கொள்ளுதலு முண்டு. குழந்தைக்குக் காப்பிடுதல் வழக்கம்

பெயரிடுதல்:-

குழந்தை பிறந்த பத்தாநாள் அல்லது பன்னிரண்டாவது நாள் அல்லது பிறிதொரு நன்னாளிலே, சிவ பெருமானுக்கும் அடியார்க்கும் பிதிர்களுக்கும் முனிவர்களுக்கும் வழிபாடியற்றிக் கடவுட்பெயர், அடியார் பெயர், பெற்றோரின் பெற்றோர் பெயர், என்பவற்றுள் ஒன்றைக் குழந்தைக்குப் பெயராக இட்டு ஆசிரியரும் தந்தையும் பிறரும் அழைக்கற்பாலர். அப்போது ஆசிகூறித் திருநீறிடுக. பெண் மகவிற்கு உமையம்மையின் திருநாமங்களையும், மென்மையும் பண்பும் அன்பும் உணர்த்தும் பெயர்களையும் இடுதல் வேண்டுமென்பது சைவநூற் கருத்து.

வெளிக்கொணர்தல்:-

குழந்தை பிறந்த நான்காவது மாதத்திலே வெளிக் கொணர்தல் என்னுஞ் சடங்கு நிகழ்தற்பாலது. அப்போது கணபதியையும் பிதிர்களையும் வழிபட்டு, பகலவன் கதிர்கள் படும் இடமொன்றில் மெழுக்கிட்டு மணலால் மேடைசெய்து அதன்மேல் அரசிலைகளை வைத்துக் கதிரவனையும் கதிரவன் நடுவில் உள்ள உருத்திரமூர்த்தியையும் வழிபட்டுச் செம்மலர் தூவிப் போற்றிச் சர்க்கரைப்பொங்கல் படைக்கவும்.

குழந்தையை அதன் தாய்மாமனார் நல்வேளையில் வெளியே எடுத்துக்கொண்டு வரவேண்டும் பிள்ளைக்குப் பெரியோர் ஆசிகூறுக. பிள்ளைக்கு மூன்றாமாதத்திலே கதிரவனையும் நான்கா மாதத்திலே திங்களையுங் காட்டுதல் வேண்டும்

இதுவுமன்றி, பிள்ளையைத் திருக்கோயிற்கெடுத்துச்சென்று, அறவடிவாகிய நந்திக்குப்பின் நின்று

“தோடுடைய செவியன்” என்னுந் தேவாரமோதிப் பிள்ளைக்குச் சிவவடிவங் காட்டுதலுமுண்டு.

பாலுணவு கொடுத்தல்:-

குழந்தை பிறந்த ஆறாவது அல்லது எட்டாவது திங்களிலே நல்லதொரு நாளிலே சிவபெருமானுக்குப் படைத்த பாயசத்தைக் குழந்தைக்கு ஒரு சிறிது ஊட்டுக. அப்போது, அன்னம் பாளிக்குந் தில்லைச் சிற்றம்பலம் என்பதை ஒதுக. சோறுண்பித்தற்கு முற்பட்ட மாதங்களில் குழந்தைக்கு நீர்வடிவான உணவே கொடுத்தல் வேண்டும். ஆறாவது மாதத்திலே நெகிழ்ந்த உணவும், பத்தாவது மாதத்திலே திண்ணிய உணவும் கொடுத்தற்குரியன.

பிறந்தநாட் கொண்டாட்டம்:-

ஓராண்டு முடிவிலே, பிள்ளையைப் புனித நீரிலாட்டுவித்து, ஆவிலைந்து கொடுத்து, பிள்ளையாரையும் அம்மை யப்பரையுஞ் சிறப்பாக வழிபாடு செய்வித்து சாவை நீக்கு மறைத் தலைவராகிய மிருத்தியுஞ்சய தேவராகிய தென்முகப் பரமாச்சாரியரையும், சாவா வரம் பெற்ற மார்க்கண்டரையும், பிறந்தநாட் தேவதையாகிய நட்சத்திர தேவதையையும் வழிபடுதலுமுண்டு. ஆயுள் ஓமஞ் செய்தல் சிறப்பு விதி.

குழந்தைக்குப் பெரியோர் ஆசிகூறித் திருநீறிடுதலும், வறியவர்க்கும் அடியார்க்கும் உணவளித்தலும் நிகழற்பாலன.

முடியெடுத்தல்:-

மூன்றாம் ஆண்டிலே நல்லதொரு நாளிலே புனித நீரமைத்து அதனைக் குழந்தை மேல் தெளித்து, வெந்நீரினாலே தலைமுடியை நனைத்துக் குழந்தையின் தந்தையாவது ஆசிரியனாவது தொட்டுக் கொடுத்த கத்தியைக் கொண்டு, மயிர் வினைஞன், குழந்தை தலைபின் முன்மயிர் கழிக்க. பின், குழந்தையை முழுக்காட்டித் திருநீறணிவித்து ஆசி கூறுக

கல்வித்தொடக்கம்:-

வடகீழ்த்திசையில் புனிதநீர் ஆவிலைந்து முதலியன அமைத்துக் கிழக்குநோக்கிச் சதாசிவமூர்த்திக்கும் ஒரு கும்பம் அமைக்க. அதற்குக் கிழக்குமுதல் வட கிழக்கு வரை உள்ள திசைகளில் முறையே திருமால், திருமகள், அயன், கலைமகள், கணபதி, வருணன், சண் முகர், தென்முகத்தெய்வம், எழுத்தின் மூலதேவதை என்போர்க்குக் கும்பம் வைத்து வழிபடுக. சதாசிவ மூாத்தி திருமுன்பு,

கற்றவர் விழுங்குங் கற்பகக்கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவறியா மாணிக்கமலையை
மதிப்பவர் மனமணிவிளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிரவென் கண் குளிர்ந்தனவே.

என்னுந் திருப்பாட்டையோதி, அரிசியைப் பரப்பி அதன்கண் விந்துவடிவாய அன்னையை வணங்கிப், பிரணவத்தோடு கூடிய திருவைந்தெழுத்தை முன்னும் நெடுங்கணக்கின் எழுத்து வரிசையைப் பின்னுமாகக் குழந்தையைக் கையைப் பிடித்து மும்மூன்று முறை எழுதுவித்தல் வேண்டும் எழுத்தறிவிக்கும் ஆசிரியனுக்கு உடை. பொருள் முதலியன கொடுக்கவும். தக்கார்க்கு உணவளிக்க.

ஐந்தெழுத்தோதுவித்தல், திரு நீறிடுவித்தல். ஐந்து, ஏழு, ஒன்பது, பதினாறாவது ஆண்டுகளிற் பூணூலணிதலும், சமயமந்திரங் கேட்டலாய தீக்கையும் விதிக்கப்பட்டுள்ளன. ஆகம முறையிலே தீக்கை செய்விக்க இயலாதவர்கள் திருவைந்தெழுத்தினைப் பொது முறையாகவேனும் குழந்தைகட்குப் போதிக்தல் வேண்டும். கணபதியை வழிபட்டு ஓங்காரத்தை உச்சரிக்கும் படி குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும். சிவபெருமானது திருமுன்பு திருவைந்தெழுத்தினைப் பல்லாயிர முறை பயின்ற பெரியாரைக் கொண்டு குழந்தைக்குத் திருவைந்தெழுத்தை ஓதுவித்துக்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஒதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாத நாமம் நமச்சிவாயவே“.

என்னுந் திருமந்திரங்கூறிச் சிவசிவவென்று திருநீறணி முறையையுங் கற்பிக்கவேண்டும்

திருவைந்தெழுத்திற்குரிய தமிழ் முனிவராய அகத்தியனாரை வழிபடவேண்டு மென்பாருமுளர்.

இவ்வைந்தெழுத் துபதேச நிகழுங் காலத்திலே சிவபெருமானை வழிபடுமுறையும், எவ்வுயிர்க்கும் இரங்குங் கடமையும், பிதிர்கள், தெய்வங்கள், குருமார், பெற்றோர், உறவினர், நண்பர், அயலவர் முதலியோர்க்குச் செய்யுங் கடமைகளும், கற்பிக்கப்படவேண்டு மென்பது சைவநூற் கருத்து. உபதேசம் பெற்ற நாள் முதல், காலை, நண்பகல், மாலை என்னும் பொழுதுகளில் தவறாது திருநீறணிதலும், இயன்ற அளவு திருவைந் தெழுத்தை உருவெண்ணுதலும், சிவ வழிபாடியற்றுதலும் வற்புறுத்தல் வேண்டும்.

சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.

என்னுந் தேவாரத்தையுங் கற்பிக்கவும்.

மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் [திருநீறே.

கல்வி பயிலுங் காலத்திலே ஐம்பொறி யடக்கம் பிள்ளைகளுக்கு இன்றியமையாது வேண்டப்படும் அதனையே சிறந்த நோன்பாய்ப் பெரியோர் விதித்திருக் கின்றார்கள். ஐம்பொறி யடக்கமுடையவனாய் நற்கல்வி பயின்ற மாணவன் துறவுநிலைக்குரிய உள்ளத்தோடு கல்விப்பயிற்சி முடிவிலே மூர்த்தி, தலம், தீர்த்தம், என்பவற்றை நாடி யாத்திரை செய்தல் அக்காலத்து வழக்கம்.

அங்ஙனஞ் செல்வோனைப் பெற்றோரும் பிறரும் இல்லறத்திற் புகுத்த முபன்ற காலை, மணம் நிகழ்ந்தது. மாணவனது யாத்திரையைப் பரதேச யாத்திரையென்றும் கல்விப்பயிற்சி முடிவைச் சமா வர்த்தனமென்றும் வடநூலார் கூறுவர்.

திருநீறிடுதல் (புனற்சுத்தி):-

திருநீறிடும் நீரைப் புனிதமாக்குவதற்கு முக்கண் முதல்வர் அதைப் பார்ப்பதாக நினைந்து, ‘செஞ்சுடர்த் தூயசோதி நின்னருள் சிறக்க’ என்னு மந்திரங்கூறி நீரைப்பார்க்கவும்.

உட்கோள்:-

நீரினை உள்ளங்கையில் உழுந்து அமிழும் அளவு எடுத்து மும்முறை உட்கொள்ளுக. அப்போது

ஓம் உயிர்முதற் குரியதாக ஓம் புலமுதற் குரியதாக ஓம் சிவமுதற் குரியதாக

என்பவற்றையுரைக்க, திருநீற்றினை உள்ளங்கையில் வைத்து மூடிப்பின் வரும் சொற்றொடர்கனைக் கூறிப் புனலிட்டுக் குழைத்து முக்குறியிடுக. அவையாவன:-

கலை மறைகள்:

ஓம் வீடருளன்னை போற்றி
ஓம் நிலையருளன்னை போற்றி
ஓம் அறிவருளன்னை போற்றி
ஓம் அமைவருளன்னை போற்றி
ஓம் ஒன்றருளன்னை போற்றி.

பதினொரு பஞ்ச மந்திரங்கள்: பிரமம்:

ஓம் வான்முதல் போற்றி
ஓம் பொன்னவ போற்றி
ஓம் வளியாய் போற்றி
ஓம் ஒளியாய் போற்றி
ஓம் அமுதே போற்றி

அல்லது,

பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி

ஆறங்க மந்திரம்:

உள்ளத்தாய் போற்றி
சென்னியாய் போற்றி
உச்சியாய் போற்றி
காவலா போற்றி
முக்கணா போற்றி
ஏவொளி போற்றி.

திருவைந்தெழுத்து:

ஓம் நமசிவய என்பது போகம் விரும்பினோர் எண்ணுதற்குரியது.

ஓம் சிவயநம என்பது முத்தி விரும்பினோர் எண் ணுதற்குரியது.

மூச்சடக்கு (பிராணாயாமம்):-

திருவைந்தெழுத்தை இருமுறை சொல்லி முச்சை இடது நாசிவழியாக இழுத்து அதனை எண்முறை சொல்லி உள்ளே நிறுத்திப் பின் வலது நாசிவாயிலாக ஐந்தெழுத்தை நான்குமுறை சொல்லும் வரை மெள்ள வெளியிடுதலும், அவ்வாறே மூச்சை வலது நாசியா லிழுத்து நிறுத்தி இடது நாசியால் வெளியிடுதலும், மூச்சடக்கு என்னும் பிராணாயாமமாம். இருநாசியாலும் இழுத்து நிறுத்திவிடுதலுமுண்டு.

சத்தித்தியானம்:-

திருநீறிட்டயின் பருகுநீர் மும்முறை உட் கொண்டு, மூச்சடக்கு இயற்றிப் பின்னர் சிவசத்தியை நினைத்தல் நிகழற்பாற்று. காலையில் நெஞ்சினிற் படைப்புச் சத்தியைச் செம்மேனியுஞ் செஞ்சடையும் செவ்வணிகளும் நான்முகமுமுடையவளாய், வலதுகைகளில், ஒமத்தில் நெய்பெய்யுஞ் சிருக்கும், செபமாலையும் இடதுகைகளில் தண்டுகமண்டலமு முடையவளாய் அன்னவாகனத்தின் மேல் வீற்றிருப்பதாகத் தியானிக்க.

நண்பகலில்,

புருவநடுவே வெள்ளையுடையும் வெண்ணிறமும் துளசி மாலையுமுடையவளாய், அபயமுங் கதையும் வலக்கை களிலும், சங்குசக்கரம் இடது கைகளிலும் கொண்டு, கருடன்மேல் வீற்றிருக்குங் காப்புச்சத்தியை நினைக்க.

மாலையில்,

பிரமரந்திரமாகிய உச்சியிலே, கருநெய்தற் பூவன்ன ஒளி நிறமுடையவளாய் முக்கண்ணும், பிறைச்சடையும் உடையவளாய். வலது கரங்களிற் சூலமும் செபமாலை யும், இடதுகைகளில் அபயமுஞ் சத்திப்படையுங் கொண்டு காளைமேலிருக்கும் அம்மையை ஒடுக்குஞ் சத்தியாக வழிபடுக சந்தியாதேவி, நுட்பவடிவமாக நள்ளிரவில் துவாதசாந்தத்திற் தியானிக்கற்பாலள்.

உட்புனிதம்:-

திருநீறிடுவான், நிறைமொழிப்படுத்த நீரைச் சிவ தீர்த்தமாகக் கருதி ஐம்முக மந்திரமோதித் தலையிற் றெளித்துக்கொண்டு, சிறிது நீரை எடுத்து நாசி வழியாக உடன் முழுதுஞ் சுத்தி செய்ததாகப் பாவித்து, காற் பெருவிரலில் விட்டு அசுத்தியெல்லாம் எரிந் தொழிந்ததாகக் கருதுக கைச்சுத்தி செய்க

தர்ப்பணம்:- (நீர்நிறைவு)

பின், புனலினைச் சிறிதுசிறிதாக எடுத்துச் சிவ பெருமானுக்கும் உமையம்மைக்கும், தாம் சிறப்பாக வழிபடு மூர்த்திக்கும் ‘உரியதாக’ என்றியம்பிமும்முறை புனலளித்தலும், எல்லா மந்திர மூர்த்திகட்கும் எல்லாத் தேவர்கட்கும் எல்லா முனிவர்கட்கும் எல்லாப் பூதங்கட்கும் மனிதர்க்கும், பிதிரர்க்கும் ஆசிரியன்மார், தோழன்மார் முதலியோர்க்கும் நமது கடமையைச் செய்ய வேண்டுமென்பதை நினைவுறுத்தற் பொருட்டு, அவர்கட்கு ‘உவகையாக’ என்று புனலிரைத்தலும், ஒரு சடங்காகும். அது தர்ப்பணமெனப்படும்.

கடவுளிடம் ஒப்புவித்தல்:-

‘எச்செயலைச் செய்தாலும் அதன் பயனை இறைவன் பால் ஒப்புவிக்க,’ என்பதற்கிணங்கத் திருநீற்றீட்டின் முடிவில், இச்செயற் பயன் சிவத்திற்குரியதேயென நீரினைக் கையாலெடுத்துவிடுக. மணச்சடங்கு முதலி யன மேற்கூறப்பட்டன.

சட்டிபூர்த்தி:-

அறுபதாண்டு நிறைவிலே, சிறப்பாகச் சிவபெரு மானை வழிபடுவதுண்டு. கணபதி, தென்முகத் தெய்வம், துர்க்கை, நந்தி, வயிரவர், ஒன்பதுகோள் முதலியவர்களுக்குச் சிறப்பாக வழிபாடு செய்தலுமுண்டு.

சதாபிடேகம்:-

எண்பத்துநான்காவது ஆண்டின் நிறைவிலே அவ்வாறு செய்வதுடன் திக்குப்பாலகர்க்கும், மும்மூர்த்திகட்கும், பராசரர், அகத்தியர், வியாசர், சுகர் முதலிய முனிவர்கட்கும் பிறந்ததிதி, நாள் (நட்சத்திரம்) என் பவற்றிற்குரிய தேவதைகட்குஞ் சிறப்பாக வழிபாடு செய்யலாம்.

அறுபதாண்டு அல்லது எண்பத்து நாலாவதாண்டு முற்றுப் பெற்றவுடன், ஆடவர் தமது மனைவியர்க்கு உருத்திராக்கத் தாலிகட்டிச் சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்துக் கடவுட்பணியை மேற்கொள்ளற்பாலர்.

இறுதிநாட் சடங்கு:-

ஒரு மனிதன் இறக்குமுன் அவனுக்குக் கடவுள் நினைவு உண்டாதற் பொருட்டு அவனுக்குத் திருநீறிட்டு அவன் செவியில் ஐந்தெழுத்து ஒதித் திருவருட் பாடலாகிய தேவார திருவாசகங்கனைப் பாடல் வேண்டும். இறந்தபின், அவன் உடலைத் தூயநீராற் கழுவி ஆடை அணிவித்துத் திருநீறு மஞ்சட் பொடியுஞ்சாத்தி முடிப் பாடைமேல் சங்கோசையுடன் நன்காட்டிற்கு எடுத்துச் செல்லுக. மஞ்சட்பொடியைப் பொற்சுண்ணமாகப் பாவித்துத் திருப்பொற் கண்ணம்பாடி, அதை ஒரு இலைத் துண்டில்வைத்து இறந்தவர் மடியிற் செருகுதலுண்டு. மயானத்திலே, தலை தென்புறமிருப்பச் சிதையின் மேற் பிணத்தை வைத்திடுக. மண் கும்பம் வைத்துச் சிவனை அதிற் பூசித்து, அதை எடுத்துத் துவாரஞ் செய்து அதன்வழியாக நீரொழுகுங்கால், பிணத்தை மும்முறை மாறிச்சுற்றிவந்து தலைப்பக்கத்தில் வடக்கு முகமாக நின்று கும்பத்தின் மேலோட்டை நீக்கிக் கபாலம் போன்ற எஞ்சிய பகுதியில் உள்ள நீரில் அரிசியிட்டு, அவ் அரிசியை இறந்தவன் வாயிற் போடுக நெருப்பு வளர்த்து அதிற் சிவத்தைப் பூசித்தபின், அதனை எடுத்துத் தலைப்பக்கம் வைத்துத் தீமூட்டுக.

தகனமுடிந்தபின், எலும்புகளை எடுத்துப் புனித நீர்நிலைகளில் விடுக. அல்லது ஒரு பானையிற் சேமித்து வைத்துப் புண்ணிய நதியிலிடுக. தகனஞ்செய்த இடத்தைச் சுத்திசெய்து முளையடித்துப் பால்தெளிக்க.

பத்து நாள் வரை கடவுளைப் பூசித்து ‘இவ்வுயிர் முரணுறு நரகிடையாழாமே யருளரசே போற்றி யெனப்பெருமானைக் குறையிரந்து நிற்க.

கல் வழிபாடு (கல்லெடுப்பு):-

இறந்தவனை நினைவூட்ட ஓரடையாளமாக ஒரு படத்தையேனும் கல் வடிவத்தையேனும் வைத்து அவ் வடிவத்தின் முன்னிலையில், ஒரு தர்ப்பை மீது எள்ளும் நீருந் தெளித்து ஒவ்வொரு பிண்டம் இறந்தவன் பெயர் கூறி அவன் ஆவிக்குரியவாகுக என்றிடுக. பின் அதனையெடுத்துப் புனித நீரில் விடுக. இறந்தவனை வழிபடுங்கால் சிவமானவா போற்றி என்ற அருண் மொழியை முடிவாகக்கூறி மலர் தூவுக. பத்தாநாள் முடிவில் சிறப்பாகப் படைப்பிட்டு வழிபாடியற்றி அடையாளத்தை ஆற்றிலாதல் வேறு நீர்நிலையிலாதலிடுக. இறந்த உயிர் சிவத்தைச் சார்ந்ததாகப் பாவிக்க

உருத்திர பலி:-

கல்லில் நின்ற உயிரை உருத்திர கும்பத்திற் சேர்ப்பதுமுண்டு பின்னர், ஓடுக்கத் தலைவர்களாகிய பதினொரு உருத்திரர்களுக்கும் மகாருத்திரர்க்கும் பலியிடுதற் பொருட்டு நடுவில் மகாருத்திர கும்பமும் அதனைச் சுற்றிப் பதினொருவர் கும்பங்களும் வைத்துப் பூசித்து கும்பத்தின் மருங்குதெற்கு நுனியாக ஒரு வாழையிலை போட்டு அதன்மேல் இரண்டு தர்ப்பையிட்டு அதன்மேல் எள்ளினைத் தூவி, அதன்மேல் பச் சரிசி, வாழைப்பழம், சர்க்கரை, தேங்காய்த் துருவல் என்பவற்றின் கலவையைச் சிறிது சிறிதாக எடுத்து உருத்திரர்களுக்குப் பலியாக இடுக.

ஒரு புதுப்பாத் திரத்தில் பிண்டம் பெறுதற்குரிய பிதிர்களுக்கும் அவ்வாறே பலிகொடுக்க. அந்தப் பாத்திரத்தைத் தர்ப்பை யோடு மும்முறை மாற்றிச் சுற்றித் தர்ப்பையைப் போட்டுவிட்டுப் பாத்திரத்தைக் கவிழ்த்தவும். பின்னர்க் கும்ப தேவதைகளை அகத்திலொடுக்கிக் கொண்டு எல்லாவற்றையுங் களைக.

பதினொரு உருத்திரர் பெயர்:-

மகாதேவர், அரர், உருத்திரர், சங்கரர், நீலலோகி தர்,ஈசானர், விஜயர், பீமர், தேவதேவர், பவோற்பவர், கபாலீசர், மகாருத்திரர், சிவபிரான்.

ஏகோதிஷ்டம்:-

தீட்டுக்கழிந்தபின். இறந்தவுயிரின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட சிவனடியார் ஒருவரை வருவித்து அவரிலே இறந்தவுயிரைப் பூசித்து, எல்லா வகைக் கொடையுமளித்தல் ஒருவர்ப் பெருங்கொடை (ஏகோ திஷ்ட) யென்னப்படும். ஒரு பிண்டம் இறந்தவர் பொருட்டு அவர் முன் இட்டுப்பூசித்து அதனைப்பின் நீரில் விடுக.

சபிண்டீகரணம்:-

பிதிர் வகையார்க்கு ஒரு இலையும், இறந்தவர்க்கு ஒரு இலையும், பிதிரர்கள் போயடைதற்குரிய பதவி களுக்கதிபதியாகிய விசுவதேவர்களுக்கு, ஒரு இலையும், முன் அறியாதவர் முன் அறிந்தவர் என்னுமிருதிறத்து விருந்தினர் பொருட்டு ஓரிலையுமாக நான்கு இலை இட்டுச் சிரார்த்தஞ் செய்வது, பிதுர்வடிவ மாக்குதலாகிய சபிண்டீகரண மெனப்படும். இறந்தவர்க்கும், அவர் தந்தை வகை மூன்று பிதிர்களுக்கும், தாய் வகை மூன்று பிதிர்களுக்கும் ஆக எழுவர்க்கும் ஏழு பிண்டமிடுக.

பிண்டமிடு முறை:-

ஒரு தூய இடத்திலே முக்கோணமாய் மெழுகி அதில் மூன்று வரிசையாக நுனித்தர்ப்பையிட்டு இறந்தவரது தகப்பன் வழி மூன்று பிதிர்கட்கும், தாய்வழி மூன்று பிதிர்களுக்கும், விளிம்புத் தர்ப்பைகளில் மும் மூன்றிடங்களில் எள்ளும் நீருந்தெளித்து ஒவ்வொரு மாவுருண்டை அல்லது அன்ன உருண்டை வைக்கவும். நடுவிலுள்ள தர்ப்பையில் இறந்தவர்க்குப் பிண்டமிடுக. பிண்டங்கள் எல்லாவற்றிற்கும், மலர் சாத்துதல், சந்தனஞ் சாத்துதல், நறும்புகையெடுத்தல், நிவேதித்தல், சூடன் பணிமாறல் முதலிய எல்லா வழிபாடு முடிந்தபின், இறந்தவர் ஆணானால் அவர் பிண்டத்தை மூன்றாகப் பகுத்துத் தகப்பன் வழிப் பிதிர்ப் பிண்டங் களினும், பெண்ணானால், தாய்வழிப் பிதிர்பிண்டங்களிலும் பகுதிகளைச் சேர்த்திடுக. பின் அவற்றை வைத்த முறைக்கு மாறாய முறையில் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துப் புனித நீர்நிலையில் விடுக சிரார்த்தத்தில், ஆறு பிண்டங்களைத் தாய் வழிக்கும் தகப்பன் வழிக்குமிட்டு, மத்தியில் மற்ற எல்லாப் பிதிர் களுக்குமாக ஒரு பிண்டமிடுதல் மரபு. அப் பிண்டத்தைப் பகுப்பதில்லை இறந்தவர், மூன்று பிண்டத்தில், முதற் பிண்டத்திலிருப்பதாகக் கருதப்படுவர். பிண்டமிட்டபின், பிதிர்களுக்கு எள்ளும் நீரும் இரைத்துத் தர்ப்பணம் செய்க.

இறந்தவர்களையும் இனமான பிதிர்களையும் அவர்கள் செல்கதிக்கண் பேரருள் நல்குந் தெய்வங்களையுங் கருதிச் சிரார்த்தஞ் செய்யப்படுகிறது. அச்சடங்கு செய்ய இயலாதவர், பரமசிவனை வழிபட்டு, அவர்க்குப் படைத்த திருவமுதை அன்பர்க்குப் பகுத்துக் கொடுத்து இறந்த உயிர் நன்னிலையெய்த அருள்க வென்று இறைவனை வேண்டுக

ஒருவர் இறந்த பதினோராம் நாளிலும் மாதந்தோறும் வருந் திதியிலும், நாற்பத்தைந்தாம் நாளிலும் ஆறாவது மாதத்திலும், ஆண்டிறுதியிலும், ஆண்டு தோறுஞ் சிரார்த்தஞ் செய்யப்படுகிறது.

நாந்தி சிரார்த்தம்:-

மங்கலச்செய்திகள் நடக்குங்காலை, பிதிர்வழிபாடு செய்வோர் பிண்டமிடுவதில்லை செய்யுங்காரியத்தைப் பிதிர்கள் வாழ்த்தவேண்டுமென்றும், பிதிர்களுக்கு இறைவன் நற்கதியளித்தல் கருதியும் அது செய்யப்படுகின்றது. பிதிரின் பிரதிநிதியாகிய ஒருவர்க்குத் தேங்காய், பழம் அளித்தல் நிகழும்.

சிரார்த்தம் அல்லது இறந்தவர் நாட்கடன்:-

இறந்தோர்க்கு இவ்வுலகில் நடக்குஞ் செய்திகளை அறியுமறிவு உண்டென்றும் அவரை நினைந்து ஒரு சிறப்புச் செய்யுங்கால் அவர் ஆவி மகிழ்கின்றதென்னுள் கருத்தை அடிப்படையாகக்கொண்டு சிரார்த்தஞ் செய்யப்படுகின்றதென்ப.

இறந்தவர்பொருட்டு ஒர் குறியிட்டுச் சந்தனம், குங்குமம், மாலை முதலியன சாத்தி உணவு வகைகளைப் படைத்து அவற்றை உரிமையுடையோர் பயன்படுத்தலே போதுமானதென்ற கொள்கையுமுண்டு.

இப்பொழுது நடக்கிற சிரார்த்தத்தில் சிலர் மூன்று இலையும் சிலர் இரண்டு இலையும் கொடுக்கிறார்கள். இறந்தவர்கள் சிலருடைய ஆவி உயிரோடிருக் கின்றவர்களுடைய ஆவியிற்கலந்து பேசுவது காணப்படுகின்றது என்ற கொள்கையானது இக் காலத்திலே இந்நாட்டிலும் மேலைநாட்டிலும் அறிஞர் சிலரால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இறந்தவர் எல்லாருடைய ஆவியும் அப்படி வருவதில்லை. இறந்த ஆவி அங்ஙனம் இவ்வுலகிற்கு வரக்கூடிய நிலையில்லா திருந்தாலும், இன்னொரு பிறவியெடுத்துவிட்டாலும் அதன் பொருட்டுச் செய்யப்படும் உபசாரத்தை அது எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? எவருடைய உயிரில் இறந்தவர் ஆவி கலக்கின்றதோ அவரை வருவித்துச் சிரார்த்தம் நடத்துவதாகவும் தெரியவில்லை.

இறந்தவரின் ஆவி இவ்வுலகில் நிகழ்வதை அறியக் கூடிய நிலையிலிருந்தாலும், அதற்குப் பிரதிநிதியாக ஒரு மனிதனை வரவழைத்து உபசாரஞ் செய்யவேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. இறந்தவர் பிரதிநிதியாக உபசரிக்கப்படும். மனிதர் தமது நினைவாற் றலினாலே இறந்தவர் ஆவியைத் தம்பால் வருவித்துத் தமக்குச் செய்யும் உபசாரத்தை அதற்கு ஏற்பிக்கக்

கூடியவராயிருந்தால் அவரை வைத்துச் சிரார்த்தஞ் செய்தல் நலமே. இறந்தவர்களின் நினைவிற்காக ஆடைகள் வைத்தும் உணவுப்பொருள்கள் படைத்தும் வணங்குகிறவர்கள் பிரதிநிதிகளைத் தேடுவதில்லை. சிரார்த்தஞ் செய்கின்றவர்களும் ஆடை கிடையாத விடத்துத் தர்ப்பையினாலே கூர்ச்சமிட்டு அதன்முன் எல்லாவற்றையும் படைக்கின்றார்கள். ஆதலால் இறந்தவர் ஆவியை மகிழ்விக்க விரும்புகின்றவர்கள் ஒரு குறியின்கண் அவர்களைப் பாவித்து எல்லாவகை உபசாரங்களையுஞ் செய்யலாமென்று தெரிகிறது.

சிரார்த்தத்தில் பிதிர்க்குக் கொடுக்கின்ற இலை தவிர மற்றொரு இலை இறந்த உயிர் எவ்வுலகத்துக்குப் போதல் கூடுமோ அவ்வுலக அதிபதியாகிய தேவதை களுக்கு உரியதாகின்றது. அத்தேவதையையுங் கூர்ச்சத்தில் வழிபடுவதுண்டு.

இறந்தவர் நற்கதியடையும் பொருட்டு எல்லாம் வல்ல முமுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்கு வழிபாடு செய்தல் சிறந்ததே.

சிரார்த்தத்தில் மூன்றாவது இலை பிராமணர்களால் செய்விக்கப்படும் சிரார்த்தங்களில் அவர்கள் குலதெய்வ மாகிய நாராயணனுக்கும் சைவரால் செய்விக்கப்படும் சிரார்த்தங்களில் விருந்தாகவரும் பிதிர்களுக்கும் இடப்படுகின்றது. அந்த இலை அவ்வளவு அவசியமில்லை.

சிரார்த்தக் கிரியைகளுட் பிண்டமிடுதல் ஒரு சிறந்த கிரியையாகும். பச்சரிசி மாவிலே தேனும், வாழைப்பழமும் எள்ளும் கலந்து ஏழு உருண்டை செய்யப்படுகின்றது, அன்னத்தில் தேன் முதலிய கலந்து பிண்டமிடுதலுமுண்டு. அல்லது அன்னம் உடம்பின் தசைக்கு அறிகுறியாகவும், எள்ளும் நீரும் இரத்தச்சத்திற்கு அறிகுறியாயுமிருப்பதெனக் கூறுவ றுண்டு. இதனாலே பிண்டம் என்பது இறந்தவர் உடம்பிற்குப் பிரதிநிதியாகக் கருதப்படுகின்றது அதனை இறந்தவர்க்கு உணவாகக் கருதின், உணவே உடம்பாகின்றதென்று கொள்க. ஆதலால்; பிண்ட வழிபாடு இறந்தவர்களின் பொருட்டுச் செய்யப்படும் வடிவ வழிபாடாகின்றது அதனை விரும்புகின்றோர்கள் செய்து கொள்ளலாம்.

ஒரு சாரார் நெருப்பு வளர்த்து அதன்கண் சிவபெருமானை வழிபட்டு சிவபெருமானோடு கலந்திருக்கும் பிதிர்களுக்கு நிவேதிக்க வேண்டிய பொருள்களை நெருப்பிலே சிறிது சிறிதாக ஆகுதிசெய்து பிதிர்களைத் திருத்திசெய்வதுமுண்டு அதுவும் ஒர் வகை வழிபாடே.

எல்லாவகைப் பிதிர்கட்கும் ஒரு தர்ப்பை நுனி வழியாக எள்ளும் நீரும் இரைத்து அவரவர் பெயரைக் கூறி அவரவர்க்குரியதாகுக – என்று பாவித்தல் தர்ப் பணமாகும்.

எள்ளு பசையுடையதாய் இரத்தச்சத்தைக் குறிப்பதால் தர்ப்பணம் மிக அவசியமென்றும், அதன் பலனை ஒருவகைத் தேவதாதியாகிய பிதிர்கள் இறந்த உயிர்க்கு எப்படியாவது சேர்ப்பரென்றுங் கூறுவர்.

இறந்த தாய் தந்தையர்க்குப் புண்ணியஞ் சேர வேண்டுமென்று கருதி அடியவர், உறவினர், தக்கவர், வறியவர், முதலியோர்க்கு உண்டியும் உடையமுதவுதலும் ஆதரவு இல்லாத பிள்ளைகளுக்கு உணவுங் கல்வியும் அளித்தலும் செய்யற்பாலன.

மேற்கூறிய முறைகளை நோக்கும் போது இறந்தவரை மகிழ்விக்க அவர் ஆவியின் வழிபாடும் அவர் உயிர்க்கு நற்கதி கிடைக்கும் பொருட்டுக் கடவுட்பூசனையும் அறச்செய்கையும் நடைபெறுதல் புலனாம்.

ஆதலால் இறந்தவர்பால் நமது நன்றி உணர்ச்சிக்கு அறிகுறியாக ஏதாவது ஒருவகை வழிபாடும் அவர் ஆவியின் நற்கதியின் பொருட்டுக் கடவுட் பிரார்த்தனையும் தக்க அறச்செய்கையும் இயன்றவரை யாவரும் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். செல்வான்கள் நிலையான ஓர் அறத்தை ஏற்படுத்தி நடத்துதல் இன்றியமையாததாகும்.

முற்றிற்று.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !