சமரச தீபம்
திரு.வி. கலியாணசுந்தரனார்

நமது நாடு

பண்டை இந்தியா

நமது நாட்டில்‌ உலகியற்றுறைகளும்‌, உயிரியற்றுறைகளும்‌ செம்மை நெறியில்‌ இயங்கு முறையில்‌ மக்கள்‌ இயற்கை வாழ்வு நடத்தி வந்தார்கள்‌. வந்த நாளில்‌, நாடு செழுமையுற்றிருந்தது. அந்நாளில்‌ தோன்றிய கலைகளின்‌ பெருக்கை என்னென்பேன்‌! வீரர்களின்‌ பெருக்கை என்னென்பேன்‌! அறப்‌ பெருக்கை என்னென்பேன்‌! அப்பொழுது, நமது பாரத அன்னை முடியணிந்து, கலையணிந்து, செங்கோலோச்சி, அரியாசனத்தில்‌ வீற்றிருந்தாள்‌; அரசியல்‌ குடியியல்‌ அழகோடியங்கின; அன்பும்‌ அருளும்‌ ஆறாக ஓடின; எங்கணும்‌ இன்ப வாழ்வு! எங்கணும்‌ இயற்கையறம்‌! எங்கணும்‌ சன்மார்க்கம்‌! 

பின்னை, நாளடைவில்‌, பாரத மாதாவின்‌ முடியும்‌ கலையும்‌ செழுமையும்‌ கொழுமையும்‌ வளனும்‌ நலனும்‌ பிறவும்‌ மெல்ல மெல்ல நெகிழ்ந்து நெகிழ்ந்து சுருங்கிச்‌ சுருங்கி இறுகலாயின. இந்நாளில்‌ பாரதத்தாய்‌ அடிமைக்‌ குழியில்‌ வீழ்ந்து கிடக்கிறாள்‌. இச்சிறுமைக்குக்‌ காரணம்‌ என்னை?

இந்தியாவின்‌ வீழ்ச்சிக்குக்‌ காரணம்‌

வாழ்விற்கென ஏற்பட்ட தொழின்‌ முறைகளை நடத்திவந்த மக்களுக்குள்‌, பிறப்பில்‌ ஏற்றத்‌ தாழ்வு புகுந்தமையே சிறுமைக்குச்‌ சிறந்த காரணமாகும்‌. தொழிற்‌ பிரிவுகள்‌ பிறப்புப்‌ பிரிவுகளாக மாறின. பிறப்புவழி ஏற்பட்ட பிரிவுகள்‌, இயற்கைக்கு மாறுபட்டனவாகலான்‌, அந்நாள்தொட்டு, மக்கள்‌ சன்மார்க்க மெனும்‌ இயற்கை வாழ்வினின்றும்‌ பிறழ்ந்து, துன்மார்க்க மெனுஞ்‌ செயற்கை வாழ்வில்‌ வீழலானார்கள்‌. இப்பிறழ்ச்சியால்‌, பார்ப்பனன்‌ பிள்ளை பார்ப்பனனாகவும்‌, அரசன்‌ பிள்ளை அரசனாகவும்‌, வாணிபன்‌ பிள்ளை வாணிபனாசவும்‌, தொழிலாளன்‌ பிள்ளை தொழிலாளனாகவும்‌ கருதப்‌ பட்டனர்‌.

பெளத்தமும்‌ பார்ப்பனமும்‌

ஆசிரியத்‌ தொழில்‌ பூண்டிருந்தோர்‌, அரசர்களைத்‌ தம்‌ வயப்படுத்தித்‌, தம்வழி உலகம்‌ இயங்கவேண்டுமென்னும்‌   எண்ணங்கொண்டு முயன்று வந்த வேளையில்‌, இடபதேவர்‌, மஹா வீரர்‌, புத்தர்‌ முதலிய அருளாளர்‌ கிளம்பிப்‌, பிறப்பால்‌ வகுப்பு வேற்றுமை கூடாது என்று எதிர்த்து வந்தனர்‌. அம்முயற்சியில்‌ புத்தர்‌ பெருமான்‌ வெற்றியும்‌ பெற்றார்‌. மீண்டும்‌ நாடு சன்மார்க்கமெனும்‌ இயற்கை அறநெறியில்‌ இயங்கலாயிற்று. அவ்வியக்கத்தை ஓங்கவிடாது, பார்ப்பனர்‌ சிறு முயற்சியால்‌ தகைந்துவந்தனர்‌. நாளுக்குநாள்‌ புத்தர்‌ பெருமான்‌ அறவுரை ஆக்கம்பெற்று வருவது கண்ட பார்ப்பனத்‌ தலைவர்‌ சிலர்‌, பெளத்த சமயம்‌ புகுந்து, பெளத்த சமய ஆக்கத்தையே மாய்த்தனர்‌. அன்று மீண்டும்‌ எழுந்த பார்ப்பனர்‌, பின்னைநாளில்‌ தமக்கு எத்தகை இடையூறும்‌ நேராதவாறு, எவ்வெக்‌ கோட்டைகள்‌ கட்டவேண்டுமோ, அவ்வக்‌ கோட்டைகள்‌ கட்டிக்கொண்டனர்‌. பெளத்த மதக்‌ கிளர்ச்சி தோன்றாதிருக்குமேல்‌, பார்ப்பனர்‌ தமது நலன்‌ கருதி, இத்துணை அரண்கள்‌ கோலி இருக்கமாட்டார்‌. அச்ச மேலீட்டான்‌, அவர்‌ இயற்கைக்கு மாறுபட்ட பல துறைகள்‌ வகுத்தனர்‌ பாவம்‌!

பெண்‌ மக்களும்‌ கல்வியும்‌

முதல்‌ முதல்‌ பெண்மக்களும்‌, தொழிலாளரும்‌ கல்வி கற்றலாகாது என்னும்‌ சட்டம்‌ பார்ப்பனரால்‌ செய்யப்பட்டது. கல்வி இல்லா மக்கள்‌ விலங்காதல்‌ இயல்பன்றோ? பெண்‌ மக்கள்‌ அருள்பூத்த நெஞ்சின ராகாலான்‌, தங்‌ (பார்ப்பனர்‌) கொடுமை கண்டு பொறாது அறக்கிளர்ச்சிக்குத்‌ துணை நிற்பரெனக்‌ கருதி, அவர்கட்கு (பெண்மக்கட்கு)க்‌ கல்வி மறுக்கப்பட்டது. வேத காலத்தில்‌ பெண்மக்கள்‌ பலர்‌ பெரும்‌ பண்டிதைமாராக இருந்தனர்‌. ஸ்மிருதியில்‌ பெண்கல்வி மறுப்புக்‌ காணப்படுகிறது. ஸ்மிருதிகள்‌ புத்தர்‌ காலத்திற்குப்‌ பின்னரே எழுதப்பட்டன . இதனால்‌ வேண்டுமென்றே பெண்கல்வி மறுக்கப்பட்டது நோக்கத்தக்கது.

தொழிலாளரும்‌ கல்வியும்‌

தொழிலாளர்‌ தொகையில்‌ பெரும்பான்மையோராக இருத்தலான்‌, அவர்‌ கற்றவராயிருப்பின்‌, புத்தர்‌ அறக்கிளர்ச்சி போன்றதொரு கிளர்ச்சி எழுமேல்‌, அதற்கு அவர்‌ துணை புரிவரென்றஞ்சி, அவர்‌ கல்வி கற்றலாகாது என்னும்‌ விதி செய்யப்பட்டது. பின்னும்‌ நாளடைவில்‌ மேல்வகுப்பார்‌ தம்மைக்‌ கடவுளர்‌ என்று மற்ற வகுப்பார்‌ கருதித்‌ தமக்கு ஏவல்‌ செய்யுமாறு பல விதிகள்‌ நிறுவினர்‌. உயர்‌ வகுப்பார்‌ . பிறப்புரிமை, பழைய நூல்களினிடையே செருகப்பட்டது. பிறப்புரிமைக்‌ காப்புக்கெனக்‌ கோயில்கள்‌ மடங்கள்‌ கட்டப்‌ பட்டன. உயர்‌ வகுப்பார்க்குள்ள உரிமைகளையும்‌, மற்றவர்க்‌குள்ள சிறுமைகளையும்‌ ஸ்மிருதிகளில்‌ இன்னுங்‌ காணலாம்‌. 

இக்கொடுஞ்‌ சட்டங்கள்‌ நந்‌ தமிழ்நாட்டில்‌ தலைகாட்டிய போது, அப்பொழுது தமிழ்‌ நாட்டில்‌ வதிந்த திருவள்ளுவர்‌ முதலியோர்‌, “பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌ சிறப்பொவ்வா – செய்தொழில்‌ வேற்றுமை யான்‌” என்று பிறப்புரிமைக்‌ கொடுமையைக்‌ கடிந்தனர்‌. எவர்‌ கடிந்தும்‌, பிறப்பில்‌ உயர்வு தாழ்வு கருதும்‌ முறை யாண்டும்‌ பரவலாயிற்று. நாட்டின்‌ பெரும்பான்மையோர்‌, கல்வி பெறாமையால்‌ அம்முறைக்கு அடிமையாயினர்‌. என்‌ செய்வது? 

இயற்கை நெறிக்கு மாறுபட்டுப்‌ பிறப்பில்‌ உயர்வு தாழ்வு கொண்ட செயற்கை வாழ்வு நாட்டில்‌ நடந்து வந்தது. சன்மார்க்கம்‌ ஓழிந்து, சாதிமார்க்கம்‌ எழுந்தது. செயற்கை முறையால்‌ விளைந்ததென்னை? நாடு எல்லா நலன்களையும்‌ இழந்து, அடிமைக்‌ குழியில்‌ வீழ்ந்த தொன்றே விளைந்த பயன்‌. 

சாதி

நான்குவிதத்‌ தொழில்கட்கும்‌ நான்குவிதச்‌ சாதி யிருத்தல்‌ வேண்டுமென்றும்‌, இல்லையேல்‌ உலகம்‌ நடைபெறாதென்றும்‌ சிலர்‌ வாதமிடுகிறார்‌. மக்கள்‌ பிரிந்து, நான்குவிதத்‌ தொழிலையும்‌ நிகழ்த்தவேண்டுமென்பதை யான்‌ மறுக்கின்றேனில்லை. அப்பிரிவு, பிறப்புவழியில்‌ இருத்தல்‌ இயற்கைக்கு மாறுபாடு என்பது எனது உள்ளக்கிடக்கை. உலகில்‌ எங்கணும்‌ நான்குவித முறைகளிருக்கின்றன. ஆனால்‌ யாண்டாதல்‌ பிறப்பில்‌ உயர்வு தாழ்வு கருதப்படுதலுண்டோ? சிறப்பில்‌ உயர்வு தாழ்வு உறல்‌ இயல்பு. இவ்விந்திய நாட்டில்‌, ,ஹிந்துக்களிடை மட்டும்‌, பிறப்பில்‌ சாதி கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்ளாத நாடுகள்‌ அழிந்து பட்டனவோ? படுகின்றனவோ? அவை யாவும்‌ உரிமை இன்பத்தைச்‌ செவ்வனே நுகர்ந்து வருகின்றன. பிறப்பால்‌ சாதிக்கொண்டு, உயர்வு தாழ்வு கணிக்கும்‌ இந்தியாவோ அடிமைக்‌ குழியில்‌ வீழ்ந்து தவிக்கிறது.

 நாளடைவில்‌ நால்வகைச்‌ சாதி, நாலுலட்சம்‌ சாதிகளாய்‌ விட்டன. சாதிக்குள்‌ சாதியாகவும்‌, கிளைக்குள்‌ கிளையாகவும்‌ சாதிக்குப்பைகள்‌ பெருகிவிட்டன. திண்ணைக்கொரு சாதி, நடைக்கொரு சாதி, கூடத்துக்கொரு சாதி, மாடத்துக்கொரு சாதி, அறைக்கொரு சாதி, அடுப்புக்கொரு சாதி, கொல்லைக்‌ கொருசாதி, வீட்டுக்கொரு சாதி, தெருக்கொரு சாதி, கோயிலுக்‌ கொரு சாதி, மடத்துக்கொருசாதி, கடவுளுக்கொரு சாதி – எத்துணை எத்துணைச்‌ சாதிகள்‌! நாடெங்கும்‌ சாதிநாற்றமே வீசுகிறது.

மூன்று பாவங்கள்

நம்‌ நாட்டார்‌ பெண்ணுரிமை கடிந்த தீவினையும்‌, பிறப்பால்‌ சாதி வகுத்த தீவினையும்‌, மக்களுள்‌ தீண்டாமை கொண்ட தீவினையும்‌ இப்பொழுது மூண்டெரிந்து நாட்டை அரிக்கின்றன; எரிக்கின்றன. இயற்கைக்கு மாறுபட்டு நின்றதன்‌ பயனை இப்பொழுது நாடு அனுபவித்து வருகிறது. கொடுமை களைக்‌ கண்டு இயற்கை அன்னை வாளா கிடப்பளோ? அவள்‌ இப்பொழுது நாட்டை ஒறுத்து வருகிறாள்‌. 

அன்பர்களே! நமது நாட்டுக்குள்ள சிறுமையைப்‌ போல வேறு எந்நாட்டுக்கேனும்‌ உண்டோ? நமது நாட்டு மக்கள்‌ வயிறாரச்‌ சோறு உண்கிறார்களா? அவர்கட்கு நல்லுடை உண்டா? நல்லுறக்கம்‌ உண்டா? நமது நாட்டுக்‌ கலைகள்‌ எங்கே? தொழில்கள்‌ எங்கே? எல்லாம்‌ போயின. ஒரு சாண்‌ வயிற்றிற்கு நம்மவர்‌ கடல்‌ கடந்து ஓடி, மானம்‌ இழக்கின்றனர்‌. இவ்வளவிற்குங்‌ காரணமா உள்ள தீவினைகளுக்குக்‌ கழுவாய்‌ தேடிக்‌ குறைபாடுகளைக்‌ களையவேண்டுவது நமது கடமை யன்றோ?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *