சமரச தீபம்
திரு.வி. கலியாணசுந்தரனார்

நமது கடமை 

கழுவாய்

முதலாவது நம்‌ முன்னோர்‌ செய்த தவறுதலுக்கு நாம்‌ கழுவாய்‌ தேடல்‌ வேண்டும்‌. கழுவாய்‌ பிராமணர்‌ மட்டும்‌ தேடல்வேண்டும்‌ என்னும்‌ நியதி இல்லை. பிராமணரல்லாத மற்றவரும்‌ கழுவாய்‌ தேடக்‌ கடமைப்படல்‌ வேண்டும்‌. பிராமணர்‌ மற்றவரைச்‌ சிறுமைப்படுத்துவதுபோல, மற்றச்‌ சாதியாரும்‌ ஓடுக்கப்பட்டவரைச்‌ சிறுமைப்படுத்துகிறார்‌. எல்லாரும்‌ பெண்மக்களை வருத்துகிறார்‌. ஆதலால்‌, அனைவரும்‌ தத்தங்‌ குற்றமுணர்ந்து கழுவாய்‌ தேடுவாராக. 

ஹிந்துக்களென்று இந்நாளில்‌ தங்களைக்‌ கருதிக்‌ கொள்வோர்‌ அனைவரும்‌, நாடோறும்‌ காலை மாலை இரண்டு வேளைகளிலும்‌ ஆண்டவனை நோக்கி, வழிவழி நிகழ்ந்து வரூஉம்‌ குற்றங்களை மன்னிக்குமாறு கேட்பாராக; கேட்கு மளவோடு நில்லாது, திங்கட்கொருமுறை நோன்பும்‌ இருப்பாராக; இவ்வாறு உள்ளத்தைத்‌ கதூய்மைப்படுத்திப்‌ படிப்படியாகச்‌ சில திட்டங்களைக்‌ கோலி, அவற்றைச்‌ செயலில்‌ நிகழ்த்த முயல்வாராக.

திட்டங்களை முறைமுறையாக ஈண்டுத்‌ தொகுத்துக்‌ கூறவேண்டுவதில்லை. சில குறிப்புக்களை மட்டும்‌ நினைவூட்டு கிறேன்‌.

(௧) பெண்ணுலகு:- பெண்‌ ஒரு பாதி; ஆண்‌ மற்றொரு பாதி. இரண்டுஞ்‌ சேர்ந்த ஓன்றே முழு மனிதத்‌ தன்மை. அங்ஙனமாக, வாழ்வின்‌ ஒரு பாதி உரிமை கடிவது எத்தகை அறியாமை? உடலில்‌ ஒரு பாதி குருதியோட்டம்‌ குன்றினால்‌ உடல்‌ நிலை என்னாகும்‌? பாரத மாதாவின்‌ ஒரு பாதியாகிய பெண்ணுலகின்‌ உரிமை கெட்டமையால்‌, அவள்‌ பக்க வாயுவால்‌ பீடிக்கப்பட்டுக்‌ கிடக்கிறாள்‌. அந்நோய்‌ நீங்கினாலன்றி அவளுக்கு உய்வில்லை.  “ஒத்த பண்பும்‌ ஒத்த நலனும்‌ ஒத்த அன்பும்‌ ஒத்த செல்வமும்‌ ஒத்த கல்வியுமுடைய ஒருவனும்‌ ஒருத்தியும்‌ . என்றார்‌ நக்கீரனார்‌. பெண்மகள்‌ பண்டை நாளில்‌ எல்லா வழியிலும்‌ ஒத்து வாழும்‌ உரிமை பெற்றிருந்தாள்‌. அவ்வுரிமை இன்பத்தை மீண்டும்‌ அவள்‌ நுகருமாறு ஆண்மக்கள்‌ நடந்து கொள்ளல்‌ வேண்டும்‌. பெண்ணுலகுக்‌ கேட்டால்‌ ஆணுலகுக்கும்‌, பின்னை நாட்டுக்குமே ஊறு விளைந்துள்ளதை அன்பர்கள்‌ கருதுவார்களாக. தாய்மைக்குரிய பெண்ணின்‌ சிறுமை, நாட்டின்‌ சிறுமையாதல்‌ இயல்பு. ஆதலால்‌, பெண்ணலன்‌ நாட வேண்டுவது நம்‌ பெருங்கடமை. 

பண்டைநாளில்‌ ஆண்மகனோடு ஒத்த கல்வி பெற்றிருந்த பெண்‌, இந்நாளில்‌ அக்கல்வி ஏன்‌ பெறுதல்‌ கூடாது? நீண்ட நாளாக, நாட்டின்‌ தாயாகிய பெண்‌, கல்வி இழந்தமையால்‌ நாட்டுக்கு விளைந்த கேடுகள்‌ எண்ணில; எண்ணில. 

ஆண்மகன்‌ இரண்டு மூன்று பெண்களை மணஞ்‌ செய்து கொள்வதும்‌, பெண்‌ மகள்‌ உற்ற வயது அடையா முன்னர்‌ அவளைத்‌ திருமணஞ்செய்து கொடுப்பதும்‌, பெண்மகள்‌ இளமையில்‌ கைம்மை எய்தினால்‌, வேறு களைகணின்றி, நரகிடை வீழ்ந்து வருந்துவதும்‌, இன்னோரன்ன பிற நிகழ்ச்சி களும்‌ எத்தகைக்‌ கொடுமைகள்‌! அன்பர்களே! உன்னுங்கள்‌.

 வழுக்கி வீழ்ந்த சகோதரிகள்‌ (Fallen Sisters) நிலையை நினைக்கும்போது கண்ணீர்‌ பெருகுகிறது. எல்லாத்‌ துறை கட்கும்‌ சாதி ஏற்பட்டதுபோல, விபசாரத்துக்கெனவும்‌ ஒரு சாதி நாட்டில்‌ ஏற்பட்டிருக்கிறது! என்ன இழிவு! என்ன இழிவு! ஒருவன்‌ ஒருத்தியுடனும்‌, ஒருத்தி ஒருவனுடனும்‌ வாழும்‌ முறை ஏற்படல்‌ வேண்டும்‌. 

(௨) பிறப்பால்‌ சாதி :- பிறப்பால்‌ உயர்வு தாழ்வு பாராட்டல்‌ தொலைதல்‌ வேண்டும்‌. சிறப்பால்‌ உயர்வு தாழ்வு தோன்றல்‌ இயல்பு. உயர்குலத்தில்‌ பிறந்தவன்‌, எத்தகைக்‌ கயமைத் துறையில்‌ இழிந்து விளையாடினும்‌, அவனை உயர்ந்தவனாகக்‌ கருத வேண்டுமென்னும்‌ நியதி இயற்கைக்கு அரண்‌ செய்வதன்று. ஒருவனுக்கு உயர்வளிப்பது ஒழுக்கமன்றிப்‌ பிறப்பன்று. தொழின்‌ முறைபற்றி எழுந்த பிரிவு, பிறப்பைப்பற்றி எழலாயிற்று. அதைக்‌ குலைத்தல்‌ வேண்டும்‌. இப்பொழுது அஃது இயல்பில்‌ குலைந்தே வருகிறது. இன்னும்‌ விரைந்து அதைக்‌ குலைக்க முயலல்‌ வேண்டும்‌. அதற்கெனச்‌ சில முறைகளைக்‌ கடைப்பிடித்தல்‌ நலம்‌. 

(௮) பிறப்பால்‌ உயர்வு தாழ்வு கருதுவதைத்‌ தொலைத்தல்‌ வேண்டும்‌. 

(ஆ) பிறப்பு வழி உயர்வு கருதி, எவரையும்‌ ஆசிரியராகக்‌ கோடலாகாது. கல்வி அறிவு ஓழுக்கம்‌ உடைய ஒருவன்‌,   எவனாயினும்‌, அவனை ஆசிரியனாகக்‌ கொள்ளும்‌ பயிற்சி முதிரல்‌ வேண்டும்‌.

 (இ) பிறப்புரிமை வழி நிகழும்‌ வினைகள்‌, வழிபாடுகள்‌ முதலியவற்றை ஓழித்தல்‌ வேண்டும்‌. 

(ஈ) பிறப்பால்‌ உயர்வு கருதி, எவருக்கும்‌ வந்தனை வழிபாடுகள்‌ நிகழ்த்தலே கூடாது.

 (ங) தீண்டாமை விலக்கல்‌:-மக்களுக்குள்‌ தீண்டாமை வகுத்தனினுங்‌ கொடுமை பிறிதொன்றில்லை. அஃதொரு பெருநோயாய்ப்‌ பாரதமாதாவைப்‌ பிணித்திருக்கிறது. சிலர்‌, தமது நலங்‌ கருதி ஒருபோழ்து கொண்ட முறைகள்‌ இப்பொழுது நாட்டையே அரிக்கின்றன. தீண்டாமையால்‌ நாட்டுக்கு நேர்ந்துள்ள இடுக்கண்களை உணர்ந்தும்‌, இன்னும்‌ நம்மவர்‌ அந்தநோயைப்‌ போக்கிக்கொள்ள மனங்கொள்கிறாரில்லை. 

தீண்டாமைக்‌ குற்றம்‌ பிராமணரிடத்தில்‌ மட்டும்‌ இல்லை; பிராமணரல்லாதார்பாலும்‌ அக்குற்றம்‌ உண்டு. தீண்டாமையில்‌ பிராமணரினும்‌ பிடிவாதமாகச்‌ சில பிராமணரல்லாதாரிருத்தல்‌ எனக்குத்‌ தெரியும்‌.

பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌

“பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌” என்று ஓன்று தோன்றி யிருக்கிறது. அதன்‌ நோக்கம்‌ என்னை? பிறப்பில்‌ உயர்வு தாழ்வு கருதாது, பிராமணரும்‌ தாமும்‌ எல்லா வழியிலும்‌ ஒத்து வாழல்‌ வேண்டுமென்பது. அது காரணமாகப்‌ பலதிறப்‌ பிணக்குகளும்‌ நிகழ்ந்து வருகின்றன. பிராமணரல்லாதார்‌, பிராமணருடன்‌ சமத்துவம்பெற முயல்வது போற்றற்குரியதே. ஆனால்‌, பிராமணருடன்‌ போராடி, அவருடன்‌ ஒத்து வாழ எண்ணும்‌ பிராமணரல்லாதாருள்‌ எத்துணைபேர்‌ தீண்டாமை விலக்கை ஏற்றுக்கொள்பவர்‌? அதற்கு உழைப்போர்‌ எத்துணை பேர்‌? ஒரு சிலர்‌ இருக்கிறார்‌. பெரும்பான்மையோர்க்குத்‌ தீண்டாமை விலக்கில்‌ கவலையுண்டா என்பதே எனது கேள்வி. “பறையர்‌, பறையர்‌, தீண்டல்‌ கூடாது” என்று ஓதுங்கிப்‌ பார்ப்பனருடன்‌ மட்டும்‌ சமத்துவத்துக்குப்‌ பார்ப்பனரல்லாதார்‌ போராடினால்‌, அப்போராட்டத்துக்கு இயற்கை அன்னை அருள்‌ செய்வளோ? 

பிராமணரல்லாதார்‌, பிராமணருடன்‌ கலக்க முயல்வது போலத்‌ தம்முடன்‌ தீண்டாதார்‌ என்று சொல்லப்படும்‌ மக்கள்‌ கலக்கப்‌ பிராமணரல்லாதார்‌ இடந்தரல்‌ வேண்டும்‌. அந்நல்‌ லெண்ணம்‌ பிராமணரல்லாதாரிடத்தில்‌ வேரூன்றினால்‌, அவர்தம்‌ முயற்சிக்கு ஆண்டவன்‌ துணை கிடைக்கும்‌. தீண்டாமையைப்‌ போக்கப்‌ பிராமணரும்‌, மற்றவரும்‌, எல்லாரும்‌ முயல்வாராக. 

போலிச்‌ செயல்கள்‌

தீண்டாமை போக்க முன்னை நாளில்‌ சில அன்பர்‌ முயன்றனர்‌; இந்நாளில்‌ காந்தியடிகள்‌ முயன்று வருகிறார்.‌ இப்பெரியோர்கள்‌ சொல்வழி நின்று கடனாற்றச்‌ சாதிக்‌ கூட்டத்தார்‌ ஒருப்படுகிறாரில்லை; ஆனால்‌ அவர்களுடைய திருவுருவப்‌ படங்களைப்‌ பூசிக்கவும்‌, அவைகட்குத்‌ திருவிழாச்‌ செய்யவும்‌ ஒருப்படுகிறார்‌. தீண்டாமையை விட்டொழிக்க நம்மவர்‌ நடுக்குறுகிறார்‌! 

கோயில்‌, குளம்‌, தெரு முதலிய பொது இடங்களிலாதல்‌ ஏழை மக்கட்கு உரிமையுண்டா? இல்லையே! தீண்டாமை யுள்ளமட்டும்‌ நாட்டுக்கு உய்வில்லை என்பது ஒருதலை. வாய்ச்‌ சீர்திருத்தம்‌, வாய்‌ வேதாந்தம்‌ முதலியவற்றால்‌ பயன்‌ விளை யாது. தீண்டாமை உன்னும்‌ மனோநிலை மாறுதல்‌ வேண்டும்‌. சாதியுடையார்‌, சாதி யில்லாத ஆதிதிராவிடர்‌ முதலியோரிடம்‌ நன்றாகப்‌ பழகல்வேண்டும்‌. அப்பழக்கத்தால்‌ வேற்றுமை யொழியும்‌. சாதியில்லாத ஆதிதிராவிடர்களிற்‌ கல்வி அறிவு ஓழுக்கமுடையாரைக்கொண்டு, சில தெய்வ வினைகளும்‌ நிகழ்வித்தல்‌ வேண்டும்‌. 

கோயில்கள்‌:- சத்தெனுஞ்‌ செம்பொருளை உன்னுதற்‌கும்‌, போற்றுதற்கும்‌ உரிய இடமாகக்‌ கோயில்கள்‌ கட்டப்‌ பட்டன. நாளடைவில்‌ அக்கோயில்களிலும்‌ சாதிப்பேய்‌ நுழைந்துகொண்டது. ஒரு கூட்டத்தார்‌ இங்கும்‌, மற்றொரு கூட்டத்தார்‌ உங்கும்‌, இன்னொரு கூட்டத்தார்‌ அங்கும்‌ நின்று கடவுளை வழிபடல்‌ வேண்டுமாம்‌! கடவுள்‌ முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு! கடவுளை மரம்‌ செடி கொடி பாம்பு சிலந்தி யானை முதலியன பூசித்தன என்று புராணங்கள்‌ புகல்கின்றன; கடவுள்‌ உருவங்கள்மீது ஈக்கள்‌ மொய்க்கின்றன; பல்லிகள்‌ ஓடுகின்றன. இவைகட்கெல்லாம்‌ இறைவனைத்‌ தொடும்‌ உரிமை யிருக்கும்போது, ஆறறிவுடைய மக்களுக்கா அவ்வுரிமையில்லை? சாதியார்‌ கொடுமை என்னே! என்னே! 

கோயில்களை எப்படித்‌ திருத்துவது? இரண்டு வழி குறிக்கலாம்‌. ஓன்று, சாதிக்கோயில்களுக்குப்‌ போகாம லிருப்பது; மற்றொன்று சத்தியாக்கிரகத்தால்‌ மக்களுரிமையை நிலை நாட்டுவது.

மடங்கள்‌:- பெளத்த சமயத்துக்குப்‌ பின்னரே மடங்கள்‌ பெரிதும்‌ ஏற்பட்டன. சமய ஞானத்தை வளர்ப்பது மடங்களின்‌ நோக்கம்‌. ஓரு பற்றுமில்லாத “சந்நியாசிகளே” மடாதிபதிகளாக அமர்கிறார்கள்‌. அச்சந்நியாசிகளைத்‌ தலைமைகொண்ட மடங்களிலும்‌ சாதிப்பேய்‌ புகுந்திருக்கிறது! 

“மடங்களையும்‌, மடாதிபதிகளையும்‌ குறை கூறவேண்டும்‌” என்பது எனது நோக்கமன்று. நீண்டநாள்‌ பழக்க ஓழுக்கத்துக்கு. மடங்களும்‌ மடாதிபதிகளும்‌ அடிமைப்பட நேர்ந்திருப்ப தொன்றையே ஈண்டுக்‌ குறிப்பிடுகிறேன்‌. யாண்டாயினுமுள்ள ஓரு மடாதிபதி ,நாட்டுநிலை சமயநிலை முதலியவற்றை எண்ணிச்‌ சமரசத்தை வளர்க்கப்‌ புறப்படுவரேல்‌, அவரைத்‌ தெய்வம்போல்‌ போற்றுவேன்‌. காலதேச வர்த்தமானத்துக்‌ கேற்றவாறு முறைகளை மாற்றுவதால்‌ தீங்கு நேரிடாது; நலனே உறும்‌. மடங்களையும்‌ ,மடாதிபதிகளையும்‌ ஒழுங்குபடுத்தும்‌ ஆற்றல்‌ பொது மக்கட்கு உண்டு. சத்தியாக்கிரகம்‌ சிறந்த கருவி என்று சொல்லவேண்டுவதில்லை.

பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌

இப்பொழுது தென்னாட்டில்‌ பிராமணர்‌ பிராமண ரல்லாதார்‌ பிணக்கு யாண்டும்‌ இருத்தல்‌ உண்மை. இப்பிணக்கு, தொடக்கத்தில்‌ அரசியலை ஒட்டி எழுந்தது. இப்பொழுது அது சமூகத்தில்‌ குடியேறிவிட்டது. அதனால்‌ விளைந்துவரும்‌ பயன்‌ என்னை? பிராமணருக்குள்‌ மிக உரமான ஓற்றுமை நிலவி வருகிறது. பிராமணர்‌ மகாநாடுகள்‌ ஆங்காங்கே கூடிவருகின்றன. சாதி வரம்பு கடந்து வாழ்வு நடாத்திய சில பிராமணரும்‌ பழைய இருட்டில்‌ புகலாயினர்‌.

சாதி மகாநாடுகள்

பிராமணரல்லாதாருள்‌ என்ன நிகழ்ந்து வருகிறது? பிராமணரல்லாதாருள்‌ ஓவ்வொரு சாதியாரும்‌ சாதி மகாநாடு கூட்டி வருகிறார்‌. “சாதி அழிவிற்காக இம்மகாநாடுகள்‌ கூட்டப்‌ படுகின்றன” என்று சிலர்‌ சொல்கிறார்‌. அந்நுட்பம்‌ எனக்கு விளங்க வில்லை! பழையபடி சாதிகள்‌ உரம்படுமென்று எனது சிற்றறிவிற்குத்‌ தோன்றுகிறது. ஓவ்வொரு சாதியாரும்‌ சட்டசபை இருக்கைகளில்‌ இடம்பெறத்‌ தீர்மானஞ்‌ செய்வது என்ன காட்டு கிறது? ஆகவே, பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌ பிணக்கால்‌ நாட்டில்‌ ஓற்றுமை விளையாது, வேற்றுமை விளைந்து வரல்‌ கண்கூடு.      இஃது அரசியல்‌ மகா நாடன்றாதலின்‌, ஈண்டு அரசியல்‌ துறை பற்றிப்‌ பலபடக்‌ கூற யான்‌ விரும்புகிறேனில்லை. எடுத்த பொருளுக்கேற்ப இரண்டோர்‌ இரை பகர விழைகிறேன்‌. 

நாட்டுக்குரிய தொண்டு

 நமது நாட்டில்‌ இருவினை நிகழல்வேண்டும்‌. ஒன்று நாட்டு விடுதலை; மற்றொன்று நாட்டிலுள்ள குறைபாடுகளைக்‌ களைந்து சமரசப்படுத்துவது. அதற்கோர்‌ அமைப்புவேண்டும்‌; இதற்கோர்‌ அமைப்பு வேண்டும்‌. முன்னதற்குப்‌ புதியதோர்‌ அமைப்பு காண வேண்டுவதில்லை. காங்கிரஸ்‌ என்னும்‌ பழைய அமைப்பு ஓன்றிருக்கிறது. அரசியல்‌ விடுதலைப்‌ போருக்கு அதைக்‌ கருவியாகக்‌ கொள்ளலாம்‌. மற்ற அமைப்புக்களில்‌ அரசியலைப்‌ புகுத்தாது, சமூக சிர்திருத்தத்துக்கென, அவற்றைப்‌ பயன்படுத்தலாம்‌. இவ்விண்ணப்பத்தை “ஐஸ்டிஸ்‌’ கட்சி (பிராமணரல்லாத)த்‌ தலைவரை நோக்கிச்‌ செய்துகொள்‌ கிறேன்‌. “ஜஸ்டிஸ்‌” கட்சியார்‌, காங்கிரஸில்‌ சேர்ந்து, தேசத்‌ தொண்டு செய்யுமாறும்‌, அன்னார்‌ தமது தென்னிந்திய நலவுரிமைச்‌ சங்கத்தைச்‌ சமூக சீர்திருத்தத்துக்கெனப்‌ பயன்‌ படுத்துமாறும்‌ வேண்டுகிறேன்‌.  விதிமுறை அமைப்பை விரும்புவோர்‌ அந்நெறி பற்றிச்‌ செல்வாராக. அவ்வமைப்பை விரும்பாதார்‌ யான்‌ குறிப்பிடுஞ்‌ சன்மார்க்க சங்கத்தில்‌ சேர்ந்து உழைப்பாராக. அது மக்களாகப்‌ பிறந்த அனைவர்க்கும்‌ உரியது.

சன்மார்க்க சங்கம்

சன்மார்க்க சங்கத்தைப்பற்றி முன்னர்‌ ஓருமுறை “நவசக்தி” பத்திரிகையில்‌ எழுதியுள்ளேன்‌. அதன்‌ ஒரு பகுதியை ஈண்டு எடுத்துக்‌ காட்டுகிறேன்‌. சங்கம்‌  சன்மார்க்கத்தைக்‌ கடைப்பிடித்தொழுக ஒரு கூட்டம்‌ வேண்டற்பாலது. அதுவே, “சன்மார்க்க சங்கம்‌” என்பது. (1) சங்க நோக்கம்‌ என்னை? (2) சங்க அங்கத்தவர்‌ யாவர்‌? (3) நிர்வாக அங்கத்தவர்‌ யார்‌? (4) அமைச்சர்‌ எவர்‌? (5) தலைவர்‌ எவர்‌? (6) சந்தா எவ்வளவு? இவ்‌ வினாக்கட்கு யான்‌ இறுக்கப்புகும்‌ விடை சிலர்க்கு வியப்பூட்டும்‌.

 (1) சங்க நோக்கத்தையும்‌, அந்நோக்கத்தை நிறைவேற்றிக்‌ கொள்ளத்தக்க முறைகளையும்‌ ஈண்டு விரிக்கில்‌ அவை பெருகும்‌. அவை தொன்று தொட்டு நிலவி வருவன. ஆனால்‌  காலநிலைக்‌ கேற்றவாறு அவை ஓரளவில்‌ நடைமுறைப்‌ பொருட்டுக்‌ கணிக்கப்படல்‌ வேண்டும்‌. ஈண்டு அவற்றைப்‌ பற்றிப்‌ பொதுப்படச்‌ சுருங்கச்‌ சொல்கிறேன்‌. 

உயிர்த்‌ தொண்டு கடவுள்‌ தொண்டாம்‌

சத்தாகிய கடவுள்‌, யாண்டும்‌ விற்றிருத்தலால்‌, எவ்‌ வுயிர்க்கும்‌ மனமொழி மெய்களால்‌ தீங்கு நிகழ்த்தாது, தன்னுயிரைத்‌ தான்‌ பரிந்து ஓம்புமாறு போல்‌, மன்னுயிரையும்‌ ஓம்பி, அவ்வுயிர்‌ நலன்‌ கருதித்‌ தொண்டு செய்தல்‌ சங்கத்தின்‌ தலையாய நோக்கம்‌. இப்பெரு நோக்கத்தை நிறைவேற்ற அகமுகத்திலும்‌ புறமுகத்திலும்‌ பணி செய்தல்‌ வேண்டும்‌. 

அகமுகப்‌ பணிகளாவன:- அகத்திலுள்ள மெய்ப்‌ பொருளைக்‌ காணவேண்டி, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீ நீர்மைகளைக்‌ களைதல்‌, கொலை களவு கள்‌ காமம்‌ பொய்யெனும்‌ ஐம்பெரும்‌ பாவம்‌ நிகழாதவாறு தன்னைக்‌ காத்தல்‌ முதலியன. 

புறப்பணிகளாவன:- தேசத்‌ தொண்டு, அத்தொண்டிற்கு இடையூறாக உள்ள குறைகளைக்‌ களைதல்‌ முதலியன. தேசத்‌ தொண்டும்‌ கால நிலையைப்‌ பொறுத்து நிற்பது. இப்பொழுது நமது நாட்டிலுள்ள குறைபாடுகளில்‌ கவலை செலுத்தி, அவற்றைக்‌ களையப்‌ பாடுபடல்‌ சிறந்த தேசத்‌ தொண்டாகும்‌. சுதேசியம்‌, பெண்ணுரிமை, தீண்டாமை விலக்கல்‌, வகுப்புப்‌ பூசலொழித்தல்‌, கருத்து வேற்றுமைக்கு மதிப்புக்‌ கொடுத்தல்‌, தேசத்திற்‌ பிறந்தாரிடை அன்பு வளர்த்தல்‌, கண்மூடி வழக்க ஓழுக்கங்களை அன்பு வழியில்‌ தொலைத்தல்‌ முதலிய அறத்‌ துறைகளை ஓம்ப முயலுதல்‌ இக்காலத்துக்குரிய சிறந்த தேசத்தொண்டாகும்‌. இதைப்‌ பற்றி இன்னும்‌ விரிகிற்‌ பெருகும்‌. 

(2) உலகிலுள்ள அனைவரும்‌ சன்மார்க்கத்தை விரும்புகிறார்‌; ஆனால்‌ சிலரே விரும்பும்‌ வழி நிற்க முயல்கிறார்‌; அவ்வழி நிற்பவரோ மிகச்‌ சிலர்‌. இம்முத்திறத்தாருஞ்‌ சன்மார்க்க சங்க அங்கத்தவராவர்‌. ஆகவே, இவ்வுலகிலுள்ள கடவுள்‌ பிள்ளைகள்‌ அனைவரும்‌ சன்மார்க்க சங்க அங்கத்தவ ரென்க. 

(3) (அவருள்‌) நிர்வாக சபையார்‌; தம்முயிர்‌ போல்‌, மன்னுயிரையும்‌ கொண்டு ஒழுகும்‌ அருளொழுக்கத்தில்‌ தேர்ச்சி பெற்றவர்‌. 

(4) அமைச்சர்‌: நமது கண்முன்‌ காட்சியளிக்கும்‌ இயற்கை அன்னையார்‌.

(5) தலைவர்‌: சத்தெனுஞ்‌ செம்பொருளாகிய அருட்‌ கடவுள்‌. 

(6) சந்தா: உயிர்களிடத்துச்‌ செலுத்தும்‌ அருள்‌. 

இவை சங்கத்தின்‌ அமைப்பாகும்‌. சன்மார்க்க சங்கத்தின்‌ அமைப்பின்‌ வகை குறித்துச்‌ சமயம்‌ நேர்ந்துழி இன்னும்‌ விரித்துக்‌ கூறுவேன்‌. இச்‌ “சன்மார்க்க சங்கமே” என்னால்‌ அடிக்கடி குறிப்பிடப்படுவது. 

இப்பெருஞ்‌ சங்கத்துக்குக்‌ கிளைகளாகப்‌ பல சங்கங்கள்‌ ஆங்காங்கே அமைத்துக்கொள்ளலாம்‌. ஓவ்வொரு வீட்டிலும்‌ கிளைச்சங்கம்‌ அமைக்கலாம்‌. வீட்டுத்‌ தலைவனும்‌ தலைவியும்‌ முறையே சங்கத்தின்‌ தலைவராகவும்‌ அமைச்சராகவும்‌ இருக்கலாம்‌. வீட்டிலுள்ள மற்றவர்‌ சங்கத்தின்‌ அங்கத்தவ ராகலாம்‌. இவர்‌ சங்க நோக்கத்தை நிறைவேற்ற முயலல்‌ வேண்டும்‌.  சன்மார்க்க போதனைக்கென ஒரு சங்கம்‌ ஓவ்வொரு தெருவிலும்‌, ஒவ்வொரு கிராமத்திலும்‌ அமைத்துக்‌ கொள்ள லாம்‌. சங்கத்துக்கெனப்‌ பெருங்‌ கட்டிடங்கள்‌ எழுப்ப வேண்டுவதில்லை. ஓர்‌ அழகிய சிறுநிலையம்‌ சாலும்‌. சங்கத்துக்கெனத்‌ தலைவர்‌ அமைச்சர்‌ முதலியோரைத்‌ தெரிந்தெடுத்தல்‌, சந்தா சேர்த்து வரவு செலவு கணக்குப்‌ படித்தல்‌ முதலியன வேண்டா; வேண்டா. தேர்தலும்‌, பொருளீட்டமும்‌ மக்களைச்‌ சன்மார்க்கத்‌ தில்‌ செலுத்தா. அவை முனைப்பை எழுப்பிப்‌ போர்‌ மூட்டும்‌. சங்கத்தின்‌ எவ்வினைக்காதல்‌ பொருள்‌ வேண்டி யிருப்பின்‌, அவ்‌ வினைக்கெனப்‌ பொருள்‌ சேர்த்து, அவ்வினை யாற்றல்‌ வேண்டும்‌. பின்னை அப்பொருளில்‌ மிகுதி நின்றால்‌, அதை உடனே ஏழை மக்கட்குப்‌ பங்கிட்டுக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. பெரும்பொருள்‌ செலவாகும்‌ வினை ஒன்றும்‌ சங்கத்தில்‌ நடைபெறுதல்‌ கூடாது. சங்கத்துக்கெனத்‌ தனிநிதி கூடவே கூடாது. பெரு நிதியால்‌ இக்கால மடங்களும்‌, கோயில்களும்‌ பேயுறையும்‌ இருட்‌ குகைகளாக மாறியதொன்றே நமக்கு எடுத்துக்காட்டு. ஆதலால்‌, விலங்குணர்வும்‌ பேயுணர்வும்‌ தோன்றாத முறையில்‌ சங்கத்தை நடத்தல்‌ வேண்டும்‌. சங்கத்தில்‌ அருளொழுக்கத்தில்‌ முதிர்ச்சி பெற்றோரைக்‌ கொண்டு சன்மார்க்க போதனை செய்விக்கலாம்‌. சங்க நோக்கத்தை ஒட்டிப்‌ பலதிறத்‌ தொண்டுகள்‌ செய்யலாம்‌. 

சன்மார்க்கம்‌ இன்னது என்றும்‌, சன்மார்க்கத்துக்கு இடையூறாகவுள்ள கொடுமைகள்‌ இன்ன இன்ன என்றும்‌ மிகத்‌      தெளிவாக இராமலிங்க சுவாமிகள்‌ உலகிற்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்‌; அவ்வறிவுறுத்தல்களிற்‌ சில வருமாறு:-

நால்வருணம்‌ ஆசிரமம்‌ ஆசாரம்‌ முதலா
நவின்றகலைச்‌ சரிதமெலாம்‌ பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம்‌ தோல்வருணம்‌ கண்டறிவார்‌ இலைநீ
விழித்திதுபார்‌ என்றெனக்கு விளம்‌பியசற்‌ குருவே
கால்வருணங்‌ கலையாதே வீணில்‌அலை யாதே
காண்பனஎல்‌ லாம்‌எனக்குக்‌ காட்டியமெய்ப்‌ பொருளே மால்வருணம்‌ கடந்தவரை மேல்வருணத்‌ தேற்ற
வணங்குநடத்‌ தரசேஎன்‌ மாலைஅணிந்‌ தருளே”

“கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண்‌ டாடும்‌
கண்முடி வழக்கமெலாம்‌ மண்மூடிப்‌ போக
மலைவுறுசன்‌ மார்க்கம் ஒன்றே நிலைபெறஎவ்‌ வுலகும்‌ வாழ்ந்தோங்கக்‌ கருதி௮ருள்‌ வழங்கினைஎன்‌ றனக்கே
உலைவரும்‌இப்‌ பொழுதேநற்‌ றருணமென நீயே
உணர்த்தினைவுர்‌ தணைந்தருள்வாய்‌ உண்மையுரைத்‌ தவனே

சிலைநிகர்வன்‌ மனங்கரைத்துத்‌ திருவமுதம்‌ அளித்தோய்‌
சித்தசிகா மணியேஎன்‌ திருநடநா யகனே”

“மதமென்றும்‌ சமயமென்றும்‌ சாத்திரங்க ளென்றும்‌
மன்னுகின்ற தேவரென்றும்‌ மற்றவர்கள்‌ வாழும்‌
பதமென்றும்‌ பதமடைந்த பத்தரநு பவிக்கப்‌
பட்டஅனு பவங்களென்றும்‌ பற்பலவா விரிந்த
மதமொன்றுந்‌ தெரியாதே மயங்கியஎன்‌ றனக்கே
வெட்டவெளி யாயறிவித்‌ திட்டஅருள்‌ இறையே
சதமொன்றஞ்‌ சுத்தசிவ சன்மார்க்கப்‌ பொதுவில்‌
தனிநடஞ்செய்‌ அரசேஎன்‌ சாற்றும்‌ அணிந்‌ தருளே”

“சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப்‌ பைகளெல்லாம்‌ பாத்திரமன்‌ றெனவே
ஆதியிலென்‌ உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பாலின்‌ றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்‌

ஓதியுணர்ந்‌ தோர்புகமுஞ்‌ சமரசசன்‌ மார்க்கம்‌
உற்றேன்சிற்‌ சபைகாணப்‌ பெற்றேன்மெய்ப்‌ பொருளாம்‌ சோதிநடத்‌ தரசைஎன்றன்‌ உயிர்க்குயிராம்‌ பதியைச்‌
சுத்தசிவ நிறைவையுள்ளே பெற்றுமகிழ்ந்‌ தேனே”

“தயையுடையார்‌ எல்லாறாம்‌ சமரசசன்‌ மார்க்கம்‌
சார்ந்தவரே இங்கவர்கள்‌ தம்மோடுங்‌ கூடி
நயமுறுநல்‌ லருள்நெறியிற்‌ களித்துவிளை யாடி. நண்ணுகஎன்றெனக்‌ கிசைந்து நண்புறுசற்‌ குருவே
உயலுறும்‌என்‌ உயிர்க்கினிய உறவேஎன்‌ அறிவில்‌
ஓங்கியபேர்‌ அன்பேஎன்‌ அன்பிலுறும்‌ ஒளியே
மயலறுமெய்த்‌ தவாசூழ்ந்து போற்றுமணி மன்றில்‌
மாநடத்தென்‌ அரசேஎன்‌ மாலை அணிந்‌ தருளே”

“அருளுடையார்‌ எல்லாரும்‌ சமரசசன்‌ மார்க்கம்‌
அடைந்தவரே ஆதவினால்‌ அவருடனே கூடித்‌
தெருளுடைய அருள்நெறியில்‌ களித்துவிளை யாடிச்‌
செழித்திடிக வாழ்கவெனச்‌ செப்பியசற்‌ குருவே
பொருளுடைய பெருங்கருணைப்‌ புரணமெய்ச்‌ சிவமே
போதாந்த நுதலாறும்‌ நிறைற்தொளிரும்‌ ஒளியே
மருளுடையார்‌ தமக்குமருள்‌ நீங்கமணிப்‌ பொதுவில்‌
வயங்குநடத்‌ தரசேஎன்‌ மாலையும்‌ஏற்‌ றருளே”

“தங்கமே அனையார்‌ கூடிய ஞான
சமரச சுத்தசன்‌ மார்க்கச்‌
சங்கமே கண்டு களிக்கவும்‌ சங்கம்‌
சரர்திருக்‌ கோயில்கண்‌ டிடவும்‌
துங்கமே பெருஞ்சற்‌ சங்கநீ டூழி
துலங்கவும்‌ சங்கத்தில்‌ அடியேன்‌
அங்கமே குளிர நின்தனைப்‌ பாடி
ஆடவும்‌ இச்சைகாண்‌ எந்தாய்‌”

“மார்க்கமெலாம்‌ ஒன்றாகும்‌ மாநிலத்தீர்‌ வாய்மையிது தூக்கமெலாம்‌ நீக்கிச்‌ துணிந்துளத்தே – ஏக்கம்விட்டுச்‌
சன்மார்க்க சங்கத்தைச்‌ சார்ந்திடுமின்‌ சத்தியநீர்‌
நன்மார்க்கஞ்‌ சோர்வீர்‌இந்‌ நாள்‌”

இச்சன்மார்க்கத்தில்‌ சேருமாறு எல்லாரையும்‌ வேண்டு கிறேன்‌. வந்தேமாதரம்‌. 

திரு.வி.க

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *