சமரச தீபம்
திரு.வி. கலியாணசுந்தரனார்

சத்தும்‌ மார்க்கமும்‌ 

சத்‌ விளக்கம்‌

சத்தெனுஞ்‌ செம்பொருள்‌ தோற்றக்‌ கேடுகளின்றி, என்றும்‌ ஒரு பெற்றியா யிருப்பது; எங்கும்‌ நீக்கமற நிறைந்‌ திருப்பது. அதற்கு உடலில்லை; உறுப்பில்லை. அது மாற்ற மனங்கடந்து நிற்பது; சொலற்கரிய சூழலுடையது; எல்லாமாய்‌ அல்லவுமாய்‌ விளங்குவது; எல்லாவற்றையும்‌ இயக்குவது. அஃதின்றி ஓரணுவும்‌ அசையாது. அத்தகைய ஒன்றன்‌ உண்மையை எங்ஙனம்‌ உணர்வது? 

சத்தும்‌ இயற்கையும்‌

கண்ணுக்குப்‌ புலனாகும்‌ இயற்கை வடிவங்களின்‌ வாயிலாகவே பரம்பொருளின்‌ இருப்பை உணரல்வேண்டும்‌. இயற்கையை ஆராய ஆராயச்‌ சத்தெனுஞ்‌ செம்பொருளின்‌ உண்மை புலனாகும்‌. ஊர்‌ பேர்‌ ஒன்றுமில்லா ஓன்றன்‌ இருப்பை உணர்த்துங்‌ கருவி, இயற்கை என்று சுருங்கச்‌ சொல்லலாம்‌. இயற்கையின்‌ வாயிலாகவே சத்தெனுஞ்‌ செம்பொருள்‌ தன்‌ அருட்டொண்டை நிகழ்த்தி வருகிறது. ஆகவே, சத்தை உணர்த்தும்‌ மார்க்கம்‌, இயற்கை இயற்கை என்பது கருதற்பாலது. சத்தெனுஞ்‌ செம்பொருட்கும்‌ இயற்கைக்கும்‌ உள்ள தொடர்பை என்னென்று கூறுவது? அதை எழுத்தால்‌ எழுதல்‌ முடியுங்கொல்‌! சத்தெனுஞ்‌ செம்பொருளாகிய இறைவனை என்‌ அப்பன்‌ என்றும்‌, இயற்கையை என்‌ அன்னை என்றும்‌ யான்‌ கொள்கிறேன்‌.

செயற்கைச்‌ சேறு

இயற்கையோடியைந்த வாழ்வு நடத்தல்‌ இறைநெறி நிற்பதாகும்‌. இயற்கையோடியைந்த வாழ்வு நடத்தாது, செயற்கைச்‌ சேற்றில்‌ வீழ்வது, இறைநெறி நிற்பதாகாது. இயற்கையோடியைந்து நிற்குமாறு படைக்கப்பட்ட மகன்‌, நெறியல்லா நெறியாகிய செயற்கையில்‌ வீழ்ந்து கிடத்தலால்‌, அவன்‌, தான்‌ பிறந்த நாடு, தான்‌ பேசும்‌ மொழி, தனக்குரிய இனம்‌ முதலிய கட்டுப்பட்ட சிலவற்றைக்‌ கடவுளாக்கொண்டு, மற்ற நாடு மொழி இனம்‌ முதலியவற்றோடு பிணங்கி, இடரிழைத்து வருகிறான்‌. ஒருவன்‌, தான்‌ பிறந்த நாடு மொழி இனம்‌ முதலிய வற்றில்‌ சத்தெனும்‌ செம்பொருளிருப்பதுபோல, மற்ற நாடு மொழி இனம்‌ முதலியவற்றிலும்‌ அப்பொருளிருத்தலை உணராமையால்‌, அவன்‌ வேற்றுமை உணர்வால்‌ இடர்ப்‌ படுகிறான்‌. யாண்டுஞ்‌ செம்பொருளுண்மையை உணர்வனேல்‌, அவன்‌ இடர்ப்படாது இன்பம்‌ நுகர்வன்‌.

இறையின்‌ ஒருமையும்‌, இயற்கையின்‌ பன்மைக்கோலமும்‌

சத்தெனுஞ்‌ செம்பொருள்‌ என்றும்‌ ஒரு பெற்றியாய்த்‌ திரிபு முதலிய மாறுபாடின்றியிருப்பினும்‌, அதனையுணர்ந்துங்‌ கருவியாயுள்ள இயற்கை, பல்வேறு வடிவாகப்‌ பரிணமித்துக்‌ காட்சியளிக்கிறது. பல நாடுகள்‌, பல மொழிகள்‌, பல வழக்க ஓழுக்கங்கள்‌ முதலிய யாவும்‌ இயற்கை அன்னையின்‌ திருவிளையாடல்கள்‌. பன்னாடு பன்மொழி முதலியன இயற்கை அமைப்புக்கள்‌. இயற்கையோடியைந்த வாழ்வு செலுத்து வோர்க்குப்‌ பன்மை வடிவங்களின்‌ பெருமை புலனாகும்‌.

பன்மையின்‌ மாண்பு

“இயற்கை அன்னை பன்மை வடிவங்களாக ஏன்‌ காட்சி யளிக்கிறாள்‌? அதனாலன்றோ உலகில்‌ போரும்‌ பிணக்கும்‌ எழுகின்றன?” என்று சிலர்‌ ஐயுறலாம்‌. பன்மை இல்லையேல்‌ உலகம்‌ நடைபெறாது; மனிதன்‌ கை கால்‌ உறுப்புக்களின்றித்‌ திண்மையாக ஓரே பிண்டமாகப்‌ பிறப்பனேல்‌, அவனால்‌ என்‌ செய்தல்‌ இயலும்‌? இங்ஙனே பிறவும்‌. மனிதனது ஓவ்வொர்‌ உறுப்பும்‌ தன்‌ தன்‌ கடனாற்றித்‌, தனக்கும்‌, தன்னையுடைய முதலுக்கும்‌ இன்பூட்டுவதுபோல, அவ்வந்‌ நாட்டினரும்‌, மொழியினரும்‌, பிறரும்‌ தத்தங்‌ கடனாற்றித்‌ தமக்கும்‌ உலகிற்கும்‌ இன்பூட்டல்‌ வேண்டும்‌. இதற்கு ஒருமையுணர்வு வேண்டற்‌ பாலது என்று மீண்டும்‌ நினைவூட்டுகிறேன்‌. 

இயற்கைவழி நிற்றல்

எவரெவரை இயற்கை எங்கெங்கே பிறப்பிக்கிறதோ, அவரவர்‌ ஆங்காங்கே உள்ள வழக்க ஓழுக்கங்கட்கு இயைந்த வாழ்வு நடத்துவது, இயற்கை அன்னையை வழிபடுவதாகும்‌. ஆங்காங்குள்ள தட்ப வெட்ப நிலைக்கேற்றவண்ணம்‌, இயற்கை அன்னை, மொழி, நாடு, பொருள்‌ முதலியவற்றை வழங்கி இருக்கிறாள்‌. அவ்வளவில்‌ உள்ளநிறைகொண்டு வாழ்வது இயற்கை வாழ்வாகும்‌. நிறைகொள்ளாது பேராசையால்‌ மற்ற நாடுகளையும்‌ பொருள்களையும்‌ பற்றி வாழவிரும்புவது செயற்கை வாழ்வாகும்‌. இதனால்‌ இயற்கைக்கு மாறுபட்ட வினைகள்‌ நிகழ்கின்றன. அவ்வினைகளால்‌ ஏற்றத்‌ தாழ்வும்‌, அடக்கு முறையும்‌, பிற கொடுமைகளும்‌ உலகிடை நுழைந்து துன்புறுத்துகின்றன; உலகில்‌ இன்ப நுகர்ச்சியும்‌ இல்லா தொழிகிறது. இப்பொழுது உலகம்‌ எந்நிலையிலிருக்கிறது? செயற்கை வெம்மையில்‌ வீழ்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. இது நிற்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *