சமரச தீபம்
திரு.வி. கலியாணசுந்தரனார்

வாழ்வு

உடலும்‌ உயிரும்‌

வெறும்‌ இயற்கை வாழ்வு என்றால்‌ ஓழுங்குமுறை இல்லாததா என்று சிலர்‌ கடாவுவர்‌. வாழ்வை அளித்த இயற்கை அன்னை, ஓழுங்கு முறைகளை வகுக்காதொழிவளோ? இயற்கையில்‌ உலக நடைமுறைக்கெனச்‌ சில வாழ்வு முறைகள்‌ கோலப்பட்டிருக்கின்றன. வாழ்வு என்பது இரு திறத்தது. ஒன்று உடல்‌ வாழ்வு; மற்றொன்று உயிர்வாழ்வு. உடல்வாழ்வு உலகியலைப்‌ பற்றி நிற்பது; உயிர்வாழ்வு கடவுளைப்‌ பற்றி நிற்பது. இவ்விரண்டிற்கும்‌ மிக நெருங்கிய தொடர்பு உண்டு. உயிர்வாழ்விற்கென்றே உடல்வாழ்வு ஏற்பட்டது. உடல்‌ வாழ்வின்றி உயிர்வாழ்வு நலம்பெறல்‌ அரிது. எனவே, கடவுள்‌ நெறிக்கு உலகியல்‌ இன்றியமையாததென்க. 

நான்கு துறைகள்

உலகியல்‌ நடைமுறைக்கென நான்கு துறைகளும்‌, கடவுள்‌ நெறிக்கென நான்கு துறைகளும்‌ வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்நான்கில்‌ எல்லாத்‌ துறைகளும்‌ அடங்கலால்‌, பிறவற்றை விரித்துக்‌ கூறவேண்டுவதில்லை. உலகியல்‌ செவ்வனே நடைபெறற்‌ பொருட்டு, மக்கள்‌, தொழிலாளர்‌ என்றும்‌, வாணிபர்‌ என்றும்‌, அரசினர்‌ என்றும்‌, பார்ப்பனர்‌ என்றும்‌ பிரிந்து கடனாற்றி வரலானார்கள்‌. இப்பிரிவு இயற்கையின்‌ பாற்பட்டது. மக்கள்‌ அனைவரும்‌ ஓரே கடனாற்றப்‌ புகுவரேல்‌, உலகம்‌ நடைபெறாது. ஆதலால்‌, பிரிவு இன்றியமையாதது. இம்முறைவழி உலகம்‌ இயங்கி வருகிறது. எங்குத்‌ தொழிலாள ரில்லை? எங்கு வாணிபரில்லை? எங்கு அரசினரில்லை? எங்கு ஆசிரியரென்னும்‌ பார்ப்பனரில்லை? அவ்வத்‌ தொழிலாளர்‌ யாண்டும்‌ உளர்‌. இஃது உலகியல்‌ முறை. 

உயிர்‌ வாழ்விற்கும்‌ நான்கு துறைகள்‌ ஏற்பட்டிருக்கின்றன. அவை: உலகு உயிர்‌ கடவுள்முதலியவற்றை அறிவுறுத்துங்‌ கல்வி ஓன்று; கற்றதை நிகழ்ச்சியில்‌ கூட்டவல்ல இல்வாழ்வு மற்‌ றொன்று; இல்வாழ்வால்‌ பெறும்‌ அன்பால்‌ மனைவியுடன்‌ உயிர்களுக்குதவும்‌ அறம்‌ வளர்ப்பது இன்னொன்று; அதன்வழி அழுக்காறு அவா வெகுளி முதலிய மாசுகளினின்றும்‌ விடுதலை யடைந்து, எவ்வுயிரிலும்‌ சத்தெனும்‌ செம்பொருள்‌ பொலிவது கண்டு, உயிர்கட்குச்‌ செந்தண்மை பூண்டொழுகும்‌ முடி ந்தநிலை எய்துவது வேறொன்று. இந்நான்கும்‌ மக்கட்கு வேண்டற்பாலன. இவையாவும்‌ உலகில்‌ இயங்கிவருகின்றன. எந்நாட்டில்‌ மாணாக்கரில்லை? எந்நாட்டில்‌ இல்வாழ்வோரில்லை? எந்நாட்டில்‌ அறவோரில்லை? எந்நாட்டில்‌ துறவோரில்லை? 

இவ்விரு முறைகளின்‌ வழி, வாழ்வு நடத்துவது இயற்கை யோடியைந்த வாழ்வு நடாத்துவதாகும்‌; அதாவது சன்மார்க்கத்தில்‌ நிற்பதாகும்‌.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *