
சிறுவர் பாட்டு
நாரா. நாச்சியப்பன்
பாராட்டுரைகள்
சிறுவர் பாட்டு-முதற்பகுதி-முதற்பதிப்பாக 1960-ஆம் ஆண்டில் வெளிவந்த போது பத்திரிகைகள் பல சிறந்த மதிப்புரைகள் எழுதின. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
கல்கி
குழந்தைகளுக்காக நாரா. நாச்சியப்பன் நிறைய எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான அவருடைய பாடல்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். அகர வரிசையில் பாடல்களை அமைத்திருக்கும் முறை அழகாக இருக்கிறது. அன்பு, ஆசை, இன்பம், ஈகை, உண்மை. ஊக்கம், எண்ணம், ஏற்றம், ஐயம், ஒழுக்கம், ஒர்தல், ஒளவை, அஃகேனம் (இப்படியே க, ங, ச வுக்கும்) இந்தத் தலைப்புக்களில் அறிவை வளர்க்கும் அழகழகான பாடல்கள் பல இடம் பெற்றுள்ளன. ஒரு பக்கத்துக்கு ஒரு பாட்டு-படத்துடன் என்று இந்தப் புத்தகம் சிறப்பாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
முரசொலி
அழகான சந்தங்களில் எளிதான சொற்கள் சேர்த்து, அறிவுக் கருத்துக்களைக் தருகிறார் ஆசிரியர். கவிதைகளில் எளிமை இருக்கிற அளவிற்குக் கவிதை உணர்வுமிருக்கிறது.
சுதேசமித்திரன்
அனுபவத்தால் தெளிந்த நீதிகளைச் சிறு வாக்கியங்களில் ரத்தினச் சுருக்கமாக ஒளவையார் கூறினார். அரிச்சுவடி படிக்கும் பாலகர்க்கும் இது நினைவில் மறவாது நிற்கவேண்டி அகர வரிசையில் நீதி வாக்கியங்களைப் பாடினார்.
இந் நூலாசிரியரும் அன்பு, ஆசை, இன்பம், ஈகை என்று பண்புகளையும் பொருள்களையும் அகர வரிசைப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லையும் தலைப்பாகக் கொண்டு சிறு சிறு பாட்டுகள். மொத்தம் 32. ஒவ்வொரு பாட்டிற்கும் நல்ல படம்.பாட்டுக்கள் எளிமையாக இருக்கின்றன.
உயர்ந்த மலையும் கடுகாகும்
ஊக்க முள்ளவன் முன்னாலே
அயர்ந்து நிற்பவன் உள்ளத்தில்
அணுவும் பெரிதாய்த் தோன்றுமடா!
என்று பேசுகிறது ஊக்கத்தைப் பற்றிக் கூறும் பாடல். இது போல பல பாட்டுகள். நல்ல ஆர்ட் அட்டை, நிறையப் படங்கள். சிறுவர்கள் விரும்பும் விதத்தில் அமைந்திருக்கின்றன.
மன்றம்
தமிழில் உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பாட்டை ஆசிரியர் தந்துள்ளார். சிறுவர்களுக்கு ஏற்ற நடையில், நல்ல பல கருத்துக்களைத் தாங்கிப் பாடல்கள் உள்ளன. பாடல்களில் இசையும் மணமும் ஒன்று கூடி வருகின்றன; கருத்து உயர்ந்து விளங்குகிறது.
“சிறுவர் பாட்டு” தொடக்க நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற நூல்.
செந்தமிழ்ச் செல்வி
இந்நூல் கண்கவர் வனப்பினதாய்ப் பாட்டுக்குப் பொருத்தமான பன்னிற வண்ண ஒவியங்களுடன், உயர்ந்த தாளில், அழகிய எழுத்துக்களால் ஆக்கப்பட்டுள்ளது. பாட்டுக்கள் கற்பார்க்கு எளிதில் மனத்தில் தங்கும் முறையாக அகர வரிசையில் கோத்துள்ளார்கள்.
சிறுவர்க்கு வேண்டிய இன்றியமையாத பயனுள்ள பாடல்களை ஆசிரியர் எண்ணி இனிமையும் எளிமையும் இன்பமும் பொதுளப் பாடியுள்ளார். இசையமைதியும் ஆற்றொழுக்கமும் கவர்ச்சி நடையும் பொருந்தியன எல்லாப் பாட்டுக்களும். இது பாட்டுப் புத்தகமாக அமைந்திருப்பினும் ஏடு தொடங்கும் மாணவர்கட்கு ஒரு புடை நெடுங் கணக்கு (அரிச்சுவடி)ப் போன்றும் அமைந்துள்ளது.
இதனைக் கல்வித் துறையாளர் சிறுவர் வகுப்புக்களுக்குத் துணைப்பாடமாக வைத்துத் துணைபுரிவது நல்லது. ஏனைப் பெருமக்களும் இதனை வாங்கியும் வாங்குவித்தும் ஆசிரியர் மேன் மேலும் இம் முறையில் பல நூல்களை யாத்துத் தமிழுக்கு ஆக்கஞ் செய்யத் துணை புரிவார்களாக.
தாமரை
நாட்டின் வருங்காலச் செல்வங்கள் குழந்தைகள். அவர்களுக்கேற்றவாறு ஆசிரியர் நாரா. நாச்சியப்பன் இந்தக் குழந்தைப் பாடல்கள் நூலை அற்புதமாக இயற்றியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் நல் கருத்தும் சிந்தனையும் இனிமையும் துள்ளுகின்றன.
முஸ்லிம் முரசு
சிறுவர் சிறுமியரின் சிந்தையைக் கவரக் கூடிய விதத்திலே சிங்காரப் பாடல்களைக் கொண்டு விளங்குகிறது இச் சிறு நூல்.
“உண்மை பேசும் உத்தமனை உலகம் முற்றும் புகழ்ந்தேத்தும்” “பாடம் நன்றாய்ப் படித்தால் நீ பட்டம் பலவும் பெறுவாய்” என்பன போன்ற அடிகள், படிக்கும் இளம் உள்ளங்களில் பதிந்து அறிவூட்ட வல்லனவாக அமைந்துள்ளன.



