ஆலமும் அமுதமும் 
திரு. வி. கலியாணசுந்தரனார்

பொருளடக்கம்

ஆலமும் அமுதமும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

அணிந்துரை

ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள்
திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன்
கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்
கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவ
னாவன்?

சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள்
இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கை
வாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,
விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது.
இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம்
முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய்
நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும்போ
தெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய்
நிகழ்ந்து வருகிறது.

உயிர்களின் நலத்துக்கு உடல் உலகு முதலியன இறைவ
னால் அருளப்படுகின்றன என்று சைவ சித்தாந்தம் அறிவுறுத்து
கிறது. இவ்வறிவுறுத்தல் இக்கால உலகுக்கு இன்றியமையாத
தென்பதற்கு ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. “உலகமே
வேண்டாம்; கடவுளே வேண்டும்” என்னும் கொள்கைக்கும்,
“கடவுளே வேண்டாம்; உலகமே வேண்டும்” என்னும்
கொள்கைக்கும் இடையில் அரிமா நோக்கென மிளிர்வது சைவ
சித்தாந்த விளக்கம்.

மதுரையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முப்பத்
தெட்டாவது ஆண்டு விழாக் கூட்டம்(27,28,29-12-1943)என்
தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையில் இயற்கை வாழ்க்
கையை விடுதலைக்குக் கொழுகொம்பாகக் கொள்ளுதல்
வேண்டுமென்று சைவ சித்தாந்தம் சாற்றுவதையும், அத்தகைய
வாழ்க்கையைச் சாம்ராஜ்யங்கள் குலைத்துக் கேடு சூழ்ந்ததை
யும், அதனால் பெரும்போர் எழுச்சி ஒருபாலும் புது உலக
முழக்கம் இன்னொருபாலும் தோன்றியுள்ளதையும் எடுத்துக்
காட்டல் எனது கடனாகியது. மேலும் உலகச் செம்மை
நலத்துக்குரிய சில முறைகளும் என்னால் கோலப்பட்டன. அம்
முறைகளில் ஆலமும் அமுதமும் பொதுளலாயின.

மகா சமாஜம் கூடிய இடம் ஆலவாய் என்றும், மதுரை
என்றும் அழைக்கப்படுதல் நாட்டவர்க்குத் தெரியும். அப்புனிதப்
பெயர்கள் போராட்டத்தை ஆலம் என்றும், புது உலகை
அமுதம் என்றும் சுட்டிக் காட்டுமாறு என்னைக் கடவின.
அவ்வாலத்தையும் அமுதத்தையும் உள்ளுறையாகக்கொண்ட
தலைமையுரை இந்நூல் வடிவம் பெறலாயிற்று. உள்ளுறைக்
கேற்ப இந்நூலுக்கு “ஆலமும் அமுதமும்” என்னும் தலைப்புச்
சூட்டப்பட்டது.

ஆலம் எது? அமுதம் எது? ஆலம் மக்கள் நிகழ்த்தும்
பாவம். அமுதம் ஆண்டவன் திருவருள். பாவத்தை ஏற்று
அருள்பொழியும் ஆண்டவனை நம்முன்னோர் “நஞ்சணி
கண்டன்” என்று போற்றியது ஈண்டு உன்னற்பாலது. ஆண்டவன்
நஞ்சணிந்த கதையின் நுட்பம் இந்நூலின் உள்ளக் கிடக்கை
என்று சுருங்கச் சொல்கிறேன்.

இந்நூல் காலத்துக்குரியதென்று நவிலவும் வேண்டுமோ?

திருவாரூர். வி. கலியாணசுந்தரன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *