
பாரதி விளக்கம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
கவிக்குயில் வரலாறு
1.காலநிலை
பொதிகைத் தென்றலில் சங்கக்கொடி ஆடுகிறது; கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது; மாணிக்க வீணை தேனிசை பொழிகிறது; உள்ளப் பெருமானைப் பள்ளி எழுப்புகிறது. “தேசமுடையாய் திறவேலோ ரெம்பா வாய்!” என்று கோதைக்கிளி கொஞ்சுகிறது. “நாமார்க் குங் குடியல்லோம்! நமனையஞ்சோம்! நரகத்தில் இடர்ப் படோம்!” என்று திருத்தொண்டர் முழங்குகின்றனர்!. இங்குமங்கும் பண்டிதர் செவி மடுக்கின்றனர்.
மற்றெங்கும் இருட் போர்வை; பாழ்பட்ட பழங் கோட்டையில் சவ உறக்கம் ; அடிமை, மடமை, வறுமை, வேற்றுமைப் பேய்களின் அழி நடனம்; இப் பேய்களுக் குத் தலைப்பேய் அச்சப்பேய்!
“அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே !”
இதுதான் மாந்தர் நிலைமை: அன்னியக் கல்வி, அன்னிய மோகம், அன்னியர் ஆட்சி- மாந்தர் மனம் அன்னிய மாயத்தின் கைப்பாவை!
“கண்ணில்லாக் குழந்தையைப் போல் – பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார் !”
என்ன பரிதாபம்! என்ன வீழ்ச்சி ! ஆஹா……! வெல்லம் தித்திப்பை இழந்தால் என்ன செய்வது ! ஆண்மை ஆண்மையிழந்து நெஞ்சுலர்ந்து பரதர்மத்திற்கு ஆளானது. பெண்மையோ புகைமூண்டு மட இருளில் அடைபட்டது. பழம் பொய் புது முன்னேற்றத்தைத் தடுத்தது; புதிய தீமைகள் பழைய நன்மைகளைச் செல்லரித்தன. பொய்க் கதைகள் “தத்வமஸி-அது நீ ” என்னும் வேத உண்மையை மறைத்தன. எல்லாருள்ளும் கோயில் கொண்ட ஆன்மாவான அறிவுத் தெய்வத்தை மறந்தனர். சாதி மத சாத்திர கோத்திர வகுப்புச் சண்டைகள் வலுத்தன; அந்தர்யாமியின் யாழொலி கேட்கவில்லை. இராமலிங்க சுவாமிகளின் அருட்பா வெள்ளம் பெருகியும் இன்னும் இச்சாதி மத வேறுபாடுகள் ஒழிந்த பாடில்லை ; ஒற்றுமை வரவில்லை. அடிமை, மடமை என்னும் ராகு கேதுக்கள் வாழ்வின்பத்தைக் கௌவின. தமிழர் தமிழை மறந்தனர். சுளையுரித்துத் தந்தாலும் சுவைப்பாரில்லை ! என்ன சங்கடம் !
2. வரகவி வருகை
வந்தாள் புதுயுக சக்தி – வீரக்கனல் விழி; மோகன முறுவல்; இளந் திரு; ஆயிரங் கலை யழகி ; அறிவு, ஆற்றல், அஞ்சாமை,ஒற்றுமை, விடுதலை என்னும் பஞ்ச ப்ராணனைக் கொடுத்து மாந்தரைப் புதுப்பிக்க வந்தாள் !
”வா” என்பார் இல்லை; அறிவார் இல்லை. “இப்படியும் மனிதர் உண்டா?” என்று கன்னத்தில் கைவைத்துத் திகைத்து நின்றாள் சக்தி. அவளது திருவுள்ளத்தை விளக்க வேண்டும்; உறங்கும் நாட்டை எழுப்ப வேண்டும்; உயிர்க்கனல் மூட்டவேண்டும்; மன வேறுபாடுகளை ஒழித்து ஒற்றுமைப் படுத்தவேண்டும்; கலியைப் பிளக்க வேண்டும்; ஸத்ய யுகம் மலரவேண்டும். எல்லாம் தமிழ்ச் சொல்லால் நடக்கவேண்டும். அத்தகைய கவிப்ரஹ்மா யார்? நவசக்தி எதிர்பார்த்திருந்தாள்.
“போற்றி போற்றி ஜய ஜய போற்றியிப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே “
என்று ஒரு குயில் அகவியது ! ஆ , யாரது ? ” வந்தாயா! மகனே! கவிக்குயிலே, வா ! இளைய பாரதத்தினாய் ! தெளிவு மிக்க மதியினாய்! ஒளி இழந்த நாட்டிலே உதய ஞாயிறொப்பவே,-வா, வா, வா ! ! வசந்தம் மலர்ந்தது; இனி அச்சமில்லை, இடரில்லை, இருளில்லை, கட்டில்லை, கவலை இல்லை, எனக் கூவி நாட்டை எழுப்பு. உன் சொல் என் ஜயபேரிகை ! ஓம் சக்தி, வந்தேமாதரம் என்னும் இரண்டு மந்திரங்களால் எடுத்த காரியம் வெல்லும்! உன் சொல் சாகாவரம் பெற்று வாழ்க!” என்று நலங்கூறி, முத்த மிட்டு, ஆசீர்வதித்தாள் நவசக்தி.
3. சொல் வெற்றி
தமிழ் மந்திரச்சொல்லால் முப்பத்தைந்து கோடி மாந்தரையும் தனது திருவுடலாகக்கொண்ட நாட்டன்னையை எழுப்பினான் வரகவி.
“ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே!”
எழுந்தாள் அன்னை. பொழுது புலர்ந்தது; பொய் யிருள் அகன்றது; சுருதிகள் முழங்கின; தொண்டர் பல்லாண்டு கூறினர்.
“வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குது மென்போம் !”
அத்தனை தலைகளும் அன்னையைப் பணிகின்றன !
“சுற்றி நில்லாதே போ – பகையே
துள்ளி வருகுது வேல்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!”
பகையரக்கர் நடுங்குகின்றனர்! “நம் ஆவி வேகச் சூழுதே தீ” என்று ஓடுகின்றனர்.
“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!”
மாந்தர் மனந் துணிந்தனர்! தடைகள் நொறுங்கித் தவிடுபொடியாயின !
“நாமிருக்கும் நாடு நம தென்ப தறிந்தோம் – இது
நமக்கே உரிமையா மென்ப தறிந்தோம் – இந்தப்
பூமியி லெவர்க்குமினி யடிமை செய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்!”
நாடு தலை தூக்கி நடக்கத் தொடங்கிற்று!
“என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?”
என்று கட்டுகள் நீக்கி விடுதலைதரும் கண்ணனுக்கு முறை யிட்டது! “ஐயமுண்டு, பயமில்லை !” என்று முன்சென்றது! ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகள் ஒழிந்தன :
“ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை; ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்போர்
இந்தியாவி லில்லையே !”
விடுதலைக்கு ஓர் ஆவேசக்கனல் எழுந்தது!
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!”
ஆ , பெண் சக்தி விழித்தெழுந்தது!
“பெண்மை வாழ்கெனக் கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கெனக் கூத்திடு வோமடா !”
என்று பெண்ணின் பெருமை முழங்கியது ! இனிஒற்றுமை!
“ஒன்று பட்டாலுண்டு வாழ்வே ”
ஆம், எத்தகைய ஒற்றுமை? உள்ளொற்றுமை; ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும்.
“எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஒரினம்!
எல்லாரும் இந்தியா மக்கள்!
எல்லாரும் ஓர் நிறை; எல்லாருமோர் விலை;
எல்லாரு மிந்நாட்டு மன்னர்!”
இம் மந்திரங் கேட்டு, பேத புத்தி நடுங்குகிறது. ஒற்றுமை வெற்றி பெறுகிறது. இந்த ஒற்றுமை ‘ஸர்வ ஆத்ம மயம்’ என்னும் விசுவாத்ம சேதனத்தை (Cosmic consciousness) எட்டுகிறது :-
“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலு மலையு மெங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை ;
நோக்க நோக்கக் களியாட்டம்!
ஜயபேரிகை கொட்டடா !”
இவ்வாறு ஒற்றுமை பெற்ற பின், சாதி மதச்செருக்கு புறங்காட்டி ஓடியது. உள்ளத்தில் அன்புக்கனல் எழுந்தது.
“ஒரு தாயின் வயிற்றிற் பிறந்தோம்; ஜாதி மதங்களைப் பாரோம்; முப்பது கோடியும் வாழ்வோம்!” என்று நாடு உணர்ந்தெழுந்தது ;
“ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சோம்!
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்;
தாய்த்திரு நாடெனில் இனிக் கையை விரியோம்!
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே !”
என்ற உறுதி பூண்டது.
“மண்ணி லின்பங்களை விரும்பிச் சுதந்தரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ ?”
அடிமைச் சங்கிலி நொறுங்குகிறது ! பட் !
“சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் – இனி – அஞ்சிடோம்!”
படக்! படார்! சங்கிலி சுக்குநூறாக அறுந்தது! பாரதர் தலைநிமிர்ந்து, கை வீசி நடந்து, சுதந்தர வேள்விச் சாலைக்குச் சென்றனர். தாயின் மணிக்கொடியை உயர்த்தி வணங்கினர். ஓம் சக்தி; வந்தே மாதரம்! அகண்டமான தியாக வேள்வி நடக்கிறது!
“ எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ தீ !”
இந்தச் சுதந்தராக்னி குண்டத்தில் நாட்டன்பர் நாள் தோறும், “விடுதலை ! விடுதலை, விடுதலை ! ஓம் சக்தி ! வந்தே மாதரம்!’ என்று ஆகுதி வழங்குகின்றனர். முப்பத்தைந்து கோடி பாரத தேவர்களும் பாரத சக்திகளுடன் பரிபூரண சுதந்தரமாகிய அவியுண்ணக் காத்திருக்கின்றனர்.
4. மந்திரக் கவி
இவ் வீரவேள்விக் கனலைத் தமிழகக் குண்டத்தில் மூட்டியதே கவிக் குயிலின் பெருமை. வேள்வியை வளர்த்தது சொல்; அச் சொல் வற்றாக் கனலருவி! அதன் வீராவேசம் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. அக்கனல் மொழி கேட்டு அச்சப் பேய் அலறி ஓடுகிறது; அக்கனல் பட்டதும் அடிமைத் தளை சடசடவென்று முறிந்து விழுகிறது.
“தெய்வக்கனல் விளைந்து காக்குமே–நம்மைச்
சேரு மிருளழியத் தாக்குமே
கைவைத்தது பசும்பொன் னாகுமே – பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.”
இதுவே சொல்லின் ஆற்றல். கலியைப் பிளந்து, இருளைத் துரத்தி, நஞ்சை மாற்றி அமுதமளித்தது சொல்.
“மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்!”
அத்தகைய மந்திரச் சொல்லின் இன்பக் கனலூற்றே பாரதி. கவிகளிற் சிறந்தது மந்திரக் கவிதை. பாரத சக்தி யாகத்தின் மந்திரங்களைத் தமிழில் பாடிய நவயுக வேதக் கவியே பாரதி. பரா சக்தியை நெஞ்சில் நினைந்து நினைந்து உருகிக் கசிந்த அக் கவியூற்று மந்திர அமுதம். அது இறந்த ஜாதியை எழுப்பி உயிர்வளம் ஈந்தது ; தீரமீந்தது;
“தோளை வலியுடைய தாக்கி – உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் – கட்டு
மாறா வுடலுறுதி தந்து – சுடர்
நாளைக் கண்டதோர் மலர் போல் –ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து – மத
வேளை வெல்லு முறை கூறி –தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்!
ஓம் காளீ, வலிய சாமுண்டீ!”
விவேகானந்த ஐயந்தியன்று பாடிய இந்த யோக சித்திப் பாட்டில் எவ்வளவு வீரக்கனல் கொட்டுகிறது! இதைக் கேட்ட பேடிக்கும் ஆண்மை பிறக்கும் !
“அச்சமில்லை! எல்லாரும் ஓர் நிகர்! வீர சுதந்தரம்! விடுதலை! ஐயமுண்டு, பயமில்லை! ஓம் சக்தி ! வந்தே மாதரம்!” இவையே விடுதலை வேள்விக்கு வீரக் கவிக்குயில் அகவிய மந்திர நாதம்!
5. பாரதியார் திருவுரு
தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக்கு அரும்பணி புரிந்த வீரருள் பாரதியார் முன்னணியில் நிற்கிறார். தமிழ்நாட்டின் வீரத்யாகிகள் கட்டிய விடுதலைக் கோயிலின் பொன் மணிக் கோபுரமாக விளங்குகிறது பாரதி வாக்கு. பாரதியார் சிரஞ்சீவி; சாகாவரம் பெற்றவர்; வாழ்வென்னும் வீணையில் அமுதப்பண்களை ஒலித்தார்; மண்ணுடலல்ல ; அந்தப் பண்ணுடலே பாரதியார். உயிர்க்குழலில் சக்தி நாதம் புரிந்தார்; அந்த நாத சரீரமே பாரதியார். அவர், “பல வேடிக்கை மனிதரைப்போல ” வாழ வந்தவரல்ல.
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ?
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?”
பாரதியாரின் பிறப்பு, வடிவு, வளர்ச்சி, உயிர்ப்பு, பயிற்சி, முயற்சி, உணர்ச்சி – எல்லாம் கவி வீணை கொண்டு மாந்தர் உய்யும் நித்தியப் பண்களை முழக்கிய பெருமையே. தமிழ்த் தெய்வமே இந்த அன்பனைக் கருவியாகக்கொண்டு தன் அருமை மக்களை விழிப்புறுத்தியது. உடல் நிமித்த மாத்திரமே. கவியின் தங்கப் பேனாவை வீர சக்தியே பிடித்து எழுதினாள். காலச் சிலையில் பதிந்து விளங்கும் அந்தப் பொன் மணியெழுத்தே பாரதியார். தெள்ளமுதத் தமிழூற்று, சக்திக் கனலன்பு, வீர விடுதலைக் காதல், தேசா வேசப் புயல் – இவையே பாரதியார். பிணி வறுமையால் உலர்ந்த அவ்வுடல் அல்ல. கோபுரம்போல நிமிர்ந்து “அச்ச மில்லை, தலை குனியாதே, தமிழா” என்று பேசும் அந்த வீரத்திருமுகம் நம் கண்முன் நிற்கிறது; காலன் இழுத்துச் சென்ற காயமல்ல; அறிவும் வீரமும் பொழியும் அந்தக் கனல் விழிகளே நம்முன் நிற்கின்றன. கருந்தீக் கொழுந்து போல் திருகி விட்டு நிவந்த அந்தக் கெய்சர் மீசையல்ல ; அடிமையைக் குமுறத் துடிக்கும் அந்த ஆவேசமே நம் முன் நிற்கிறது! “பட பட பட” வென்று காரிடிப் புயல் போலச் சினக்கும் அத் தன்மையல்ல! அந்தப் புயல் பொழியும் கவி மழையே நாம் உள்ளங்குளிரும் வெள்ளம். “ஐயபேரிகை கொட்டடா, கரும்புத் தோட்டத்திலே, முருகா முருகா,எங்கள் முத்துமாரி,ஓம் சக்தி, யோகசக்தி” இப் பாடல்களை அவர் பாடும்போது பார்க்கவேண்டும் ! ! நமது நெஞ்சம் ஐய பேரிகை கொட்டி எழும்! ஆ அந்த வீர மணிக்குரலைக் கிராமபோனிலாயினும் பிடித்தார்களா! பட படவென்று கோபம் வரும் ; ஒரு குழந்தையை மடிமேல் வைத்துவிட்டால் எல்லாம் அன்பாக மாறும்;
பிறகு பாட்டு, இடி நகை! ஆ, அந்தக் குழந்தை போன்ற ஸரள சுபாவமே நம்மை உருக்குகிறது. வெள்ளை மனம் ; கபடு சூது தெரியாது; வெளிப்படை ; அழகைக் கண்டால் ஆனந்தம்; நல்ல கவிதை கட்டுரைகளைக் கண்டால் பரவசம்; உள்ளுணர்வை வெளியிடாவிட்டால் உறக்கம் வராது. அந்த ரசிகத் தன்மையே பாரதியார். “உடலைப் பந்து போல் ஆக்கவேண்டும்; வைரம் போல் ஆக்கவேண்டும் ; சிங்கம் போல் இருக்க வேண்டும்; புகையிலைப் பழக்கம் விட்டு, கஸரத் பழக்கம் செய்யவேண்டும்” என்றெல்லாம் ஆயிரந் தரம் சங்கற்பம் செய்வார்; நடக்காது! வ.வே.சு.ஐயர் கர்லா, பஸ்கி எல்லாம் நித்ய கர்மானுஷ்டானமாகச் செய்வார்.
அதைப் பார்த்துக்கொண்டு தம் கனவுலகிலேயே இருப்பார் பாரதியார். நாலே பேர் பின் தொடர்ந்து கிரியை முடித்துச் சுட்டெரித்து மூடிய – அந்த உடலல்ல ; அதில் கோயில் கொண்ட “சக்தித் தமிழே பாரதியார். பரமஹம்ஸர் “தாய் தாய் என்று உருகினார். பாரதியார் “தாய்நாடு, தாய்நாடு” என்று உருகினார். அந்த உருக்கமே பாரதியார் திருவுரு. அவர் வருந்தியதெல்லாம் தமிழர் உய்விற்காகச் செய்த அருந்தவம். அத்தவப்பயனை இன்று காண்கிறோம். “இனி நலம் ; தமிழகத்தில் பல பெரியோரும், வரகவிகளும் வருவர். இங்கே தேவர் சங்கம் தோன்றும் ” என்று அவர் சொன்னதெல்லாம் பலித்து வருகிறது. தமது மணிவாக்கைக் கொண்டு ஒரு ஸமுதாயத்திற்கே புத்துயிரளித்து எழுப்பிய மஹாகவியே பாரதியார். ஜர்மன் கவியரசான கெதே (Goethe) யின் தெளிவு, ஹோமரின் வீர நடை, ஷெல்லியின் கனவு, பைரனின் இயலாவேசம் – எல்லாம் நமது கவியரசினிடம் காணலாம்.
ஆனால் இந்த மந்திர சக்தி, சிருஷ்டி வன்மை (Creative Power), ஒரு நாட்டையே விழிப்பூட்டிய வீரக் கனலைக் காண்பதரிது. ஷேக்ஸ்பியர், கம்பன், வர்கிலியன், காளிதாஸன், எல்லாரும் கவி மன்னர்களே. எனினும் கலையுலகை அவர்கள் சிறப்பித்தனர். பாரதியாரின் கவி புதிய தமிழ் சகாப்தத்தை, புதிய ஜாதியை, புதிய நாட்டை அமைத்தது. தமிழில் புது மறைகள் பாடியது. வால்மீகி, துளசிதாஸ், நம்மாழ்வார், சேக்கிழார் போன்ற அருட்கவி களுக்கே இத்தகைய சக்தி உண்டு,
அகவல், வெண்பா, கலிப்பா, விருத்தம் இத்துறைகளில் முழு வெற்றி பெற்றதுடன், சாதாரண நாடோடி மெட்டுகளையும் தமது கவிக் குழலில் இணைத்துச் சிறப்பித் தார் பாரதியார். புதுச்சேரி பாண்டு வாத்தியம்,தெருப் பாட்டு, கும்மி, சிந்து, சில்லறை மெட்டுக்களில் தமது உயர்ந்த உள்ளத்தை அமைத்து, பண்டிதர் பாமரர் யாருக்கும் கவியமுதளித்த பெருமை பாரதியாரின் தனிப்பெருமை.
“விருத்தராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்துபணிய மேன்மை
துன்றியே, பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்மைதீர மெய்மை நேர
வருத்தமொழிய வறுமை ஒழிய
வைய முழுதும் வண்மை பொழிய,
வேண்டுமடி எப்போதும் விடுதலை-
அம்மா ! அம்மா! அம்மா!”
என்று முறையிட்ட அவரது சக்திவாக்கு உலகின் அற்புதங்களில் ஒன்று. அந்த வீரக் கனலருவியின் மின்சாரத்தில் தமிழர் ஸமுதாய யந்திரம் சுழல்கிறது! வேத முனிவரின் பிறப்பு வளப்பம் அறியோம்; நாத மறைவடிவாகவே அவர்களை அறிகிறோம்; கம்பனும் காளிதாஸனும் கவி வடிவு; அவ்வாறே பாட்டினில் நெஞ்சைப் பறி கொடுத்த பாரதியாரை வீரக்கவிக் குயிலாகக் காண்போம்.
“மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?” என்று பாடினார். அந்தப் பொன் மணிக் குயிலாகவே நம் கவி ப்ரஹ்மாவைப் போற்றுவோம். குயில் வசந்த வனப்பைப் பாடும்; நம் கவிக்குயில் புதிய உயிர், புத்துணர்வு, இளமை பெற்ற புதிய தமிழ் நாட்டைப் பாடினார். பாரதியார் மறைந்து போகவில்லை. இதோ நம்முள், நம்முன், நம்முயிரில் நமது நெஞ்சை அள்ளிக் கலந்த வீரக் காதலில் விளங்குகிறார். தமிழ் உள்ள மட்டும், தமிழர் உள்ள மட்டும், தமிழகம் உள்ள மட்டும் பாரதியார் உள்ளார். முன்னே லெமோரி யாவை உண்ட கடல் இத்தமிழ் நாட்டையும் உண்டாலும், “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி!” என்றே கர்ஜிக்கும் ! தமிழர் உள்ளத்தில் ஆவேச வெள்ளமாகப் பொங்கும். இந்த அமரக்கவியின் தூல வரலாற்றை உலகம் அறிய விரும்புகிறது. தெரிந்ததைச் சுருக்கமாகச் சொல்லுவோம்
6. இளமை
இன்றும் திருநெல்வேலி செந்தமிழ்வேலி, எட்டைய புரம் அதில் ஒரு ஜமீன். 1882-ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் ஆங்கு நம் கவி பிறந்தார். தந்தை சின்னசாமி ஐயர் ; தாயார் லக்ஷ்மியம்மாள். 1887-இல் தமது ஐந்தாம் வயதில் தாயை இழந்தார் பாரதியார். சின்னஸாமி ஐயருக்கு ஜமீன் சேவகம். ஐயர் கணக்கிலும், யந்திர நுட்பத்திலும் மிக்கவர்; நம் மணியோ நேர் எதிரிடை ; அவர் வீரக் காதலுக்கும் கவிதா தேவிக்கும் பிறந்ததாகவே நான் கருதுகிறேன். தந்தை கவி, தாய் கவி, சுற்றம் கவி, கவியே அவருடன் கூடப்பிறந்தது; அவர் கற்றதும் கல்லாக் கவி. இயற்கவிகள் இருந்து படிக்க வேண்டியதில்லை ; அடியும் தளையும், சீரும் எதுகையும் தடவித் திரிய வேண்டியதில்லை. காரிகைக்கு அவர்கள் கட்டடிமை இல்லை ; காரிகை அவர் களைக் காதலுடன் எதிர்பார்த்து நிற்பாள். ஆற்றின் பாட்டிற்கும் காற்றின் பாட்டிற்கும் யாப்பிலக்கணம் எது? தட தடக்கும் இடிக்குச் சரளி வரிசை உண்டோ? இளங் குயிலை இசை நுணுக்கம் பிடித்துப் பார்ப்பரோ? ஆர்கலியும், தென்றலும், வெள்ளமும், புட்களும் இயல்பாக, கட்டு மட்டு தட்டுகளின்றித் தமது உள்ளத்தை அமுதாகப் பொழிவது போலவே இயற்கவிகளும் அருளார்வத்தால் இசையமுது பொழிவர்.
கற்ற கவியும், அருள் பெற்ற கவியும் பார்த்தால் பளிச்செனத் தெரியும். இந்த இயற்கவிகளில் ஐந்திலக்கணப் பிழைகள் உண்டோ? இரா! ஹோமர், ஷேக்ஸ்பியர்,வால்மீகி, காளிதாஸன், கம்பன் இவர்களே உலகின் மஹாகவிகள்; இவர் இயற்புலவர். இவர்கள் உள்ளத்தெழுந்த கல்லாக் கவிதையே புலவருக்குப் பல்கலைச் செல்வமாக விளங்கு கிறது. பாரதியார் விருத்தம், வெண்பா, சிந்துகளில் தளை மோனை எதுகைகள் அணுப்பிசகாது பொன்னிற் பொருந்திய மணிபோல் அமைந்துள்ளன. அத்தனையும் முதல்தரமான தங்கக்கவிகள். கல்வியுடன் கடவுளருளும் இருந்தால்தான் கவி மணக்கும். கவி பிறந்தவன்; இயற்கையின் மடியில் வளர்ந்தவன். உலகமெல்லாம் அவன் பள்ளிக்கூடம்,
7. கவிதைக்காதல்
இது உண்மை; ஏழு வயதிலேயே அவர் நாவில் கவிதையூற்றுப் பொங்கி எழுந்தது; பதினொரு வயதில் கற்ற புலவரும் மெச்சும்படி கவி புனைந்தார்; அப்போது (1893) புலவர் கொடுத்த பாரதிப் பட்டமே அவர் பெயருக்கு மகுடமாக நின்று நிலவுகிறது. மற்றப்படி பாரதியாருக்குப் பண்டிதப் படிப்பு இல்லை. ஏனெனில் அவர் காரியம் வேறு; ஒரு பண்டிதர் காரியம் வேறு. திருநெல்வேலி, இந்து கலாசாலையில் நம் பாலபாரதி மூன்றாண்டுகள் படித்தான் (1887-90). நம் இயற் கவிக்குப் பள்ளிப் படிப்புச் சள்ளையாக இருந்தது. கவி நினைப்பு; கவி புனைப்பு; படிப்பு வெறுப்பு. கானக் குயிலைக் காக்காய்ப் பள்ளிக் கூடத்திற் போட்டாற் போல ஆங்கிலக் கல்வி அருந் தமிழ்க் கவிக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
“நலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்“
இதுவே திருநெல்வேலிப் பள்ளிக்கூடப் படிப்பிற்கு அவர் வைத்த முத்திரை. நம் பாலபாரதி இளம் ஷேக்ஸ்பியர் போன்று இயல்வளக் காட்சியில் தனித்து உலாவுவார். அதிகமாகப் பேசார் ; கேள்விக்கு வெட்டு மின்னல் போலப் பளிச்சென்று பதில் சொல்லுவார். அவர் சொல்லில் நகைச்சுவை குலுங்கும். ஒருநாள் காந்திமதிநாத பிள்ளை என்பார், “பாரதி சின்னப்பயல்” என்ற ஈற்றடி கொடுத்து, “எங்கே இதை முடி பார்ப்போம் உனது கவித்திறமையை” என்றார். “காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப்பயல்” என்று விளாசினான் நம் இளங்காளமேகம் ! பள்ளித் தமிழையாவுக்கு இந்தப் பிஞ்சுக் கவியைப் பார்த்தால் பிடிப்பதில்லை. ஏனெனில் தன் பாடங்களை நம் வரகவி கவனிப்பதில்லை. ஒரு நாள் தமிழையா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. ஐயா இடித்துக் காட்டினார். “மேகம் போலப் பொழிவதாக ஊரெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்லுகிறார்களே. காள மேகம் இப்போது பொழியட்டுமே; ஏன் சும்மா இருக்கிறது?” என்றார். ஐயா வாய் மூடு முன்னே நம் கவி சரியான பதிலுரைத்தார். என்ன? ” பண்டித ரவர்களுக்கு மேகத்தின் ஸாமான்ய குணமே தெரியாமல் இருக் கிறதே? காளமேகம் தனக்குத் தோன்றிய போதன்றோ கவி பொழியும்? பிறர் கட்டாயத்திற்காகப் பொழிவ தில்லையே ?” என்றார். பள்ளிச் சிறாரெல்லாம் நகை மழை பொழிந்தனர்; பண்டிதர் வாயடைத்தது. செந்தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் நம் கவியின் பள்ளித் தோழர்.
“வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி
வந்தெனக் கருளுதல் வாழிநின் கடனே!”
என்று கவிக்காதலேறித் திரிந்தார் நம் இயலிசைப்புலவர்.
“பிள்ளைப் பிராயத்திலே – அவள் பெண்மையைக்
கண்டு மயங்கிவிட்டேன் – அங்கு பள்ளிப்
படிப்பினிலே – மதி பற்றவில்லை”
என்கிறார்.
பாட்டுக் கட்டுவார்! வெட்டு நடை கொட்டுவார்; பட்டுப்பட்டென நகைச்சுவை தெறிப்பார்; தமிழையே குறிப்பார் ; இயற் காட்சிகளில் தம் காதலியைக் காண்பார்:
“ஆற்றங் கரைதனிலே – தனி
யானதோர் மண்டப மீதினிலே – தென்றற்
காற்றை நுகர்ந் திருந்தேன் – அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் – அதை
ஏற்று மனமகிழ்ந்தேன் – “அடி
என்னோடி ணங்கி மணம் புரிவாய்‘ என்று
போற்றிய போதினிலே – இளம்
புன்னகை பூத்து மறைந்து விட்டாளம்மா !”
ஆம், சில காலம் கவிதா தேவி மறைந்திருந்தாள். நம் கவிக்காதலனுக்கு 15 வயதில் (1897) கல்யாணம் நடந்தது. 1897-ஜூன் மீ தந்தை காலஞ் சென்றார். தன்னை ஆதரிக்கும் தாயும் தந்தையுமின்றி எவ்வளவோ இடர்ப்பட்டான் சிறுவன். இங்கே ஆதரிப்போரின்றி, காசியில் தன் அத்தையின் பாதுகாப்பில் வளர்ந்தான் (1898-1901). அங்கு ஹிந்தி, ஆரியம் பயின்று, கல்கத்தா சர்வகலாசாலை பிரவேசம்.
1901-இல் ஜமீந்தார் அழைப்பிற்கிணங்கி எட்டையபுரம் வந்து 1904-வரை சமஸ்தான வேலையில் அமர்ந்தார். யுவராஜா அவர் கவிதையில் மகிழ்ந்தார். ஒரு சமயம் புலவர் வியக்க நம் கவி காவடிச் சிந்து பாடினார். கவியரசன் புவியரசனுக்கு வணங்கான்; சுயக் கவிகளிடம் இந்தச் சுதந்தரக் கனல் கொழுந்தேறும். இக்கனல் அரசர் சலுகையினின்று அவரை விலக்கியது. இத்தகைய கவிகளைப் போற்றத் தமிழ்ச் சங்கமும் இல்லை. 1904-இல் மதுரை சேதுபதிப் பள்ளிக்கூடத்தில் சிறிதுகாலம் (3 மாதம்) தமிழ் சொல்லிக் கொடுத்தார். பாச வாழ்வு பன்றிக்கு அழகு; வீரவாழ்வே மனிதனுக்கு அழகு; கனியுண்கையில் கல் கடித்தது போலக் கவிதையுண்கையில் இந்தக் கட்டுச் சேவகம் அவருக்குப் பிடிக்கவில்லை. நல்ல காலம் வந்தது. உள்ளே கனன்ற கவிக்கனல் உலகொளிரக் கொழுந்தேற ஒரு தூண்டுதல் பிறந்தது. “வந்தேமாதரம்” என்ற சக்தி மந்திரம் தமிழர் உள்ளத்தை அள்ளியது. பள்ளிக்கூட வேலையை உதறித் தள்ளினார் கவி ;
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதும் சோரா திருத்தல்”
என்ற மூன்று சங்கற்பத்துடன் தாயின் மணிக்கொடியைத் தாங்கினார். கவிதைக் காதலியை அணுவும் பிரியாது வாழ்ந்தார். அப்போது கவிதா தேவியிடம் அருள் வேண்டினார்: “கவிதையே, என் காதலீ வாராய் ! பல நாளாக நின் அருள் முகத்தைக் காணாது வீணானேன்; முன்னாள் நீ என்னை வசப்படுத்தினை. இருவரும் தனித்து இன்பக் கடலாடினோம். சோலையிலே கூடிக் களித்தோம்; குயிலின் தீங்குரல், குளிர்சுனைச் சொற்கள், மலர் விழியழகெல்லாம் உன்னிலே கண்டு, நீயே உயிர், நீயே தெய்வமென வாழ்ந்தேன்; நீ எனக்கு வானமுது. அமுதை அருந்தும்போது ஒரு வஞ்சக் கொடு முள் தைத்தது போல, என்னை வறுமை துயர்ப்படுத்த வந்தது. அதற்காக ஒரு புன்தொழில் போற்றினேன். ஒரு சிற்றரசன் பணிக்கு இசைந்தேன். பாதகி, நீ மறைந்தாய்; உன் இன்பமெல்லாம் இழந்தேன்.”
“ஒரு கதை : ஒரு முனிவன் சாபத்தால் பன்றி யானான்; அப்படி மாறும்போது மகனை அழைத்து, ‘மகனே, நான் பன்றியானதும் என்னைக் கொல்லுதல் உன் கடன் என்றான். அவ்வாறே மகன் கொல்ல வாளோங்கினான். ‘ஏடா ! நில், நில்! இப்பன்றி வாழ்வே எனக்கு இன்பம். ஆறேழு திங்களாயினும் இந்தப் பன்றியின்பம் அனுபவிக் கிறேன். பிறகு வா’ என்றான் பன்றிமுனிவன். குறித்த காலத்தில் வந்தான் மகன். பன்றி தன் காதல் மனைவி, மக்களுடன் ஆடல் புரிகிறது. மகன் வெட்கிப் பன்றியைக் கொல்லப் போனான். முனிப் பன்றியோ, ‘செல்லடா செல், எனக்கு இவ்வாழ்வே இன்பம் என்றது. மானிடரின் நீசவாழ்வு இவ்வாறு உள்ளது. அவ்வாறே, கவிதைக் காதலி, நின்னை மறந்து திரிந்தேன். பல பல செய்து பல பல கண்டு பற்பல துன்பந் துய்த்தேன். மீகானிழந்த கப்பல் போலக் காலக் கடலிடையே கடுந் துயர்த் திரைகளால் எற்றுண்டு திகைத்தேன். உலகின் இன்ப துன்பங்களை உணர்ந்தேன். நலந்தீது அறிந்தேன். ஒளியிலா வான், மகிழ்விலா முகம், சுதந்தரமில்லா அடிமை நாடு, சத்தியமற்ற சாத்திரக்குப்பை போன்று என் வாழ்வு இருள் மூண்டது! வெறுப்பு உண்டாயிற்று. உலகைத் துறக்க எண்ணினேன். ஆனால் எனக்கும் துறவிற்கும் வெகு தூரம். அதற்கு ஏற்ற பரிசுத்தம் என்னிடமில்லை. பித்தம் பிடித்தவன் உணவை வெறுத்தால் விரதியாவானோ? மற்ற மனிதரைப் போலப் பொறிவழியே உண்டுறங்கிச் சிற்றின்ப வாழ்வு வாழ்வதிலும் எனக்குப் பிரியமில்லை. ஏதாவது நல்ல வழியில் கிளர்ச்சி செய்யலாமெனவே எண்ணினேன். கவிதையே, நின் காதலை நினைத்தேன் ; உளஞ்சிலிர்த்தேன் ; அணிமணிக்குயிலே, நின் புன்னகை, மலர்விழி, தெள்ளமுதச் சொல், நின் பரிசத்தால் உண் டாகும் புளகம்பெற்று, மீண்டும் உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாய்.
நின்னரு ளில்லேல் நிலமிசை வேறோர்
பற்றுமில் லாதிப் பரவியேன் மடிவேன்.
கம்பன், இளங்கோவடிகள், காளிதாஸன் போன்ற பெரியோருக்கு உன் முழு மனமும் தந்தனை. அத்தனை உயர்வு எனக்கு அளித்திட ஒவ்வாதெனில் அதில் பேராசை கொள்ளவில்லை.உன் களிச்சொல் ஒன்று அருள், போதும்; உன் குளிர் மலர் விரலால் எனது சிரத்தைத் தைவரல் செய்; போதும்.”
அன்றுமுதல் கவிதாதேவி அன்பன் நாடிகளில் வீரசுதந்தரகானம் செய்தாள்.
8. பத்திரிகைத் தொழில்
நம் தமிழன்னையின் மற்றொரு மாணிக்கமாகிய ஜீ. சுப்பிரமணிய ஐயர் தமது சஞ்சிகைச் சுடரான சுதேச மித்திரனுக்குத் துணைசெய்யப் பாரதியாரை அழைத்தார்.
தேவி வழிதிறந்தாள். அன்று முதல் பாரதியாரின் பொன்னெழுத்தாணி வீரக்கனலமுது உகுக்கத் தொடங் கியது. கல்லாகச் சபிக்கப் பெற்றவன் உயிர் பெற்றெழுந்த மாதிரி களித்தார்; நெடுநாட் சிறையுண்ட வீரன் விடுதலை அடைந்ததும் ஓர் அறப்போர் எதிர்ந்தது போல் மகிழ்ந்தார். கவிக் காதலியுடன் தாய்த் தொண்டு புரிந்தார். நல்ல தேச வீரராகிய திருமலாசாரியார் நடத்திய “இந்தியா” விற்கு ஆசிரியராகி, தமிழ் நாட்டில் இந்தியத் தாயன்பைப் பற்றவைத்தார்.
9. இந்தியா
‘இந்தியா’வே பாரதியார் திருவுள்ளம். ‘வந்தே மாதரம்’, ‘இந்தியா’ இரண்டும் வீரசுதந்தர பேரிகை கொட்டின. இங்கே வாய்ச் சிலம்பும் அங்கே சர்க்கார் சலாமும் போடும் நிதானக் கட்சியாருக்கு ஹாஸ்யச் சவுக்குக் கொடுத்தது “இந்தியா” ! ஸ்வதேசி, ஸ்வராஜ்யம், நாட்டுக் கல்வி, தொழில், உடற் பயிற்சி முதலிய அரும் பணிகளுக்கு ஆக்கமளித்தது “இந்தியா”! முதல் முதல் படத்துடன் வெளிவந்த பத்திரிகை “இந்தியா “தான். படமா? நாட்டு நிலைமையை விளக்கி வீரவழி காட்டும் சித்திர வாசகமன்றோ இந்தியாவின் முகப்பை அலங் கரித்தது! தேசபக்தி என்னும் சூரியன் உதிக்கிறது; மிதவாத ஆந்தைகள் ஒரு மரப்பொந்தில் ஒளிகின்றன ! “கன்வென்ஷன் ” என்ற வெம்புலியைப் பசுத்தோல் போர்த்து, மிதவாதி பாரத மாதாவிடம் விலை கூறுகிறான். “இதுவா பசு !” என்று சவுக்கால் அடிக்கிறாள் அன்னை- இவ்வாறு அரிய சித்திர விளக்கம் “இந்தியா”வை அலங்கரித்தது. அதன் தலையங்கங்களே புதுப் புதுச் சித்திரங்கள்.
10. பணி
பாட்டுப் போலவே பாரதியார் உரை நடையும் தெளிவும், ஒளியும், திருவும், பொருளும் வாய்ந்து, தமிழுக்கே ஒரு புத்துணர்வும் புதுப் பிறப்பும் அளித்தது. அன்னை என்றால் அன்புக் கனல் பிறக்கும். அன்னை நாட்டில் ஆவேசங் கொள்ளாத கல்லும் உண்டோ? தமிழுக்கும் இந்தியத் தாய்க்கும் பாரதியார் தம் வாழ்வைப் பலிதானமாக்கினார். சக்தி எழுப்பும் தந்தை நாடும், தேனென இனிக்கும் செந்தமிழ் நாடும், வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்டமிழ் மொழியின் அமுதச் சுதையும் ஆர்வமுடன் கூறி,
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்று தமிழரை எழுப்பினார். “சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறுவென்று, அன்னை வெற்றி கொள்கவே!” என்று பாரத தேவிக்கு வாழ்த்தெடுத்தார். மனத்தில் உறுதி, வாக்கில் இனிமையுடன் வீர சுதந்தர தேவியைத் தொழுது,
“விண்ணி லிரவிதன்னை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வாரோ?
கண்ணிலு மினிய சுதந்தரம் போனபின் கைகட்டிப்
பிழைப்பாரோ?”
என்று உறங்கும் தமிழரை உறுத்தி எழுப்பினார்.
ஐரிஷ் அறிஞரான ஐயராம் கஸின்ஸும் பாரதியார் பாடலை மிகவும் போற்றியுள்ளார். 1907-இல் பாரதியார் நஞ்சுண்டராவுடன் சென்று விபினசந்திர பாலரை சென்னைக்கு அழைத்துவந்தார்.
அக்காலம் தமிழ்ப் புலமைபெற்ற வீரர் சிதம்பரம் பிள்ளை திலகர் வழி பற்றி, சுதேச இயக்கத்தைத் தொடங்கினார். திருநெல்வேலியை மற்றொரு வங்காளம் போல், தேசாவேசத்துடன் எழுந்து நிற்கச் செய்தார் நம் செந்தமிழ்த் திலகர். சுப்பிரமணிய சிவாவின் பேச்சு, பாரதியார் பாடல், சிதம்பரம் பிள்ளையின் வீராவேசப் பணிகள் – இம் மூன்றும் தமிழருக்குப் புத்துயிரீந்தன. தூத்துக்குடி மில் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, சிதம்பரம் பிள்ளையை அரசாங்கத்தார் சிறையிட்டனர். அக்காலத்தில் கலெக்டர் விஞ்சிற்குச் சிதம்பரம் பிள்ளை கூறிய வீர மொழியை நம் கவி அழகாகச் சித்திரித்தார். தேச பக்தனுக்கு ஆங்கிலேயன் கூறுவது, ஆங்கிலேயனுக்குத் தேசபக்தன் கூறும் மறுமொழி போன்ற காவடிச் சிந்துகளும், நந்தனார் கீர்த்தனை மெட்டில் நிதானக் கட்சியாருக்கும் தேச பக்தருக்கும் உள்ள மனப்பான்மையை விளக்கும் பாக்களும் வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர் மனத்தைக் கவர்ந்தன. அவரே முதல் முதல் பாரதியாரின் பாடல்களை வெளியிட்டுப் பரவச் செய்தார்.
11. புதுவை புகல்
திலகர், சிதம்பரம் பிள்ளை, அரவிந்தர், பாலர், லஜபதி முதலிய வீர சிகாமணிகள் தாயின் தளையவிழ்க்கத் தளராது உழைத்தனர். அடக்குமுறைகளும் புயல்போல் எழுந்தன. 1908-இல் இந்தியா பத்திரிகை அச்சுச் சட்டத்தால் அடக்கப்பட்டது. பாரதியார் புதுவை புகுந்தார். புதுவையில் தான் நம் புதுயுகப் பாவலர் தம்மைப் பிரியாத கவிக் காதலியுடன் வித விதமான இன்பம் துய்த்தார். அக் காதலின்பத்தில் கொஞ்சிய ஒவ்வொரு முத்தமும் முத்து மலர்க் கவிதையாகித் தமிழ்த் தென்றலுக்குப் புதுமண மேற்றியது.
12. அரவிந்தரும் பாரதியும்
மற்றொரு தெய்விகச் சுடர் பாரதிக்கு வீரக்கனலும், ஞானவொளியும், சக்திப் பெருக்கும் கொளுத்தியது. அதுவே சத்திய யுகக் கதிரான ஸ்ரீ அரவிந்தர். வடக்கே ‘வந்தே மாதரம்’, தெற்கே ‘இந்தியா’. ‘வந்தே மாதர’த் திற்கு மந்திர சக்தி அளித்து, பாரதத் தாயின் பொன்னுருவை இந்தியர் மனக்கோயிலில் நின்று நிலவச் செய்த பெருமை ஸ்ரீ அரவிந்தருக்கே உரியது. பின்னே நடந்த நாட்டியங்களெல்லாம் ‘வந்தே மாதர’த்தின் எதிரொலி யாகும். அதைப் பின்பற்றியே ‘இந்தியா’ வீரத் திருவோங்கி, சுதந்தர விண்ணிற் பாய்ந்தது. திலகர் அரவிந்தரின் வீர நடைக்கேற்ப, நம் கவிக்குயிலின் ஆவேசமும் பொங்கியது. வீர விளக்கான வ. வே. சு. ஐயர் லண்டனிலிருந்து வார வாரம் இந்தியா பத்திரிகைக்கு உணர்ச்சி ததும்பும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். பாரதியார் மாசற்ற வீர சுதந்தரத் தூதர்; மிதவாதம், வௌவால்தனம், காக்காய் பிடித்தல், கரடி ஓட்டல் முதலிய வியாபாரங்களுக்குப் பளிச்சுப் பளிச்செனச் சவுக்கடி கொடுப்பார். நெஞ்சிலுரமற்ற “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் ” அவர் பேனாவை வைரவாளென அஞ்சி அப்புறஞ் செல்லும். துஞ்சும்பொழுதும் நெஞ்சகம் தாயிடம். தாயின் மணிக் கொடியைப் பாரதியார் தமது பேனா முனையில் தாங்கினார். சொல்லுக்கு வெற்றி உண்டு. உரை உலகாளும் ; கவி புவி வெல்லும்; ஆம், வென்றது. அரவிந்தர் சொல்லும், பாரதி பாடலும் நாட்டை ஆளுகின்றன.
13. சூரத் காங்கிரஸ்
மிதவாதிகள் ஜோடித்த சூரத் காங்கிரஸ் நாடகத்திற்குச் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் முதலானோரும் சென்றனர். ஏன்? தேசபக்தர்களான திலகர் அரவிந்தர் கட்சியை வலுப்படுத்தவே. தேசபக்தர் சத்திய வீரரான லாலாஜீயைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். ‘அவரா…. அப்பாடிஇ!’ என்று பயந்து மிதவாதிகள் ரஸவிஹாரி கோஷைத் தேர்ந்தனர். ரஸவிஹாரி ரஸமான இலக்கியம் ஒன்றைத் தயாரித்து, மதிப்பாகப் பிரசங்கம் பண்ணலாமென்று வந்தார். மிதவாதிகள் பேச்சுப் புலிகள். நாடு விரும்பும் சுதேசி, ஸ்வராஜ்யம், வர்ஜனம் என்றால் மிதவாதிகளுக்குக் கிலி. திலகரின் தீரமான சுதந்தர வேகத்திற்கு நிதானக் கட்சி முட்டுக்கட்டை போட்டது. கானாட்டுக் கோமான் (Canute) மாதிரி தேசாவேசக் கடலின் ஓரத்தில் மதிப்பாக அமர்ந்து, “வீரத் திரைகளே, எம்மை அறியுங்கள்! எங்கள் ஆடைமேல் துமி தெறிக்காது அடங்குங்கள் !” என்றனர் மிதத்தலைவர். நடக்குமா? இந்தத் தேசாவேசத் திரைகள் மனித சிருஷ்டி இல்லை ; அவை கடவுளின் ஆணை ‘ என்றார் அரவிந்தர். இந்த நிதானக் கூட்டத்தை உடைத்தெறியக் கச்சை கட்டினார் பாரதசிங்கம் திலகர். ராஜவாழ்த்து முழங்க, சுரேந்திரர் புகழ ( இங்கேயே கலாட்டா ஆரம்பித்து விட்டது), ரஸவிஹாரி தலைமையுரையைத் தொடங்கினார்:- ஏக ரகளை, புயல், இடி, ஸ், ஸ்ஸ-டடடடஹோ, No, No, Sit down ! வேளை பார்த்து ரஸவிஹாரி, “ Brother delegates – My first duty is” என்று தொடங்கினார்! ஹிஸ்ஸ்ஸ்ஸ் ! டப் டப் டங்! புயல், இடி! First dutyயோடு காங்கிரஸ் சரி. திலகர் சிம்மம்போல் எழுந்து நின்றார்; தலைவரை ஒப்புக் கொள்ள மாட்டோம்” என்றார்.”I declare you out of order” என்று உறுமினர் தலைவர் பானர்ஜி, கோகலே, மேதாக் கூட்டங்கள்! “உமக்கு இங்கு வாய் இல்லை; இந்த தலைவரை நாங்கள் ஒப்பவில்லை. நான் தேசப் பிரதி நிதிகளுக்குப் பேசுகிறேன் !” என்று கர்ஜித்தது பாரத சிம்மம். மிதவாதிகளுக்கு ஆத்திரம்! தேசபக்தர்களும் விடாமுண்டர்! ஏக ரகளை! இதனிடையே அதோ ஒரு மராட்டியச் செருப்பு விர்ர்ரென்று பறந்து, சுரேந்திர நாதர் கன்னத்தில் ஓர் அடி போட்டு, மேதாவையும் முத்தங் கொஞ்சியது! உடனே யுத்தம்! ஸ், புஸ், பட் ! தடியடி நாற்காலிப் பூசை, வசவு, திட்டு, லடாய், ஹல்சல், ஆந்தோளன் ! போலீஸ் புகுந்து, சமாதானமாக ஆட்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. இவ்வளவு வரிசையுடன் சூரத் காங்கிரஸ் உடைந்தது. மிதவாதிகள் சபித்தனர். தேசபக்தர் அரவிந்தர் தலைமையில் கூடினர். திலகர் ஸ்வராஜ்ய தத்துவத்தைப்பற்றிப் பேசினார். அக்கூட்டத்தில் பாரதியாரும் கலந்துகொண்டார். அதன் பிறகு இந்தியா பத்திரிகையில் பார்க்கவேண்டுமே ! மிதவாதிகளுக்கு நல்ல சவுக்கடி! ஸ்வராஜ்யம், சுதேசியம் என்றால் அஞ்சும் மிதவாதிகளின் அமிதம், அரசாங்கத்தின் அடக்கு முறை – எல்லாம் பொறுத்து, தேசபக்தர் அக்காலத்தில் தளராது பிடித்த நாட்டுக் கொடிதான் இன்று பறப்பது.
1909-இல் “இந்தியா” பிரிட்டிஷ் எல்லையில் வரக் கூடாதென்று தடை செய்யப்பட்டு, பாரதியாரின் உள்ளத்திலேயே அடங்கியது. அதன் பின் அரவிந்தர் நடத்திய அரிய ஞானவீர மலராகிய “கர்மயோகி”யைத் தமிழில் மொழிபெயர்த்துச் சில காலம் வெளியிட்டார் பாரதியார்.
14. புதுவை வாழ்வு
1910-இல் ஸ்ரீ அரவிந்தர் யோக சித்திக்காகப் புதுவை புகுந்தார். அரவிந்தர் உறவினால் பாரதியார் கவிதையில் ஒரு ஞான சக்திக் கனலேறியது. சக்திப் பாட்டு, வேள்விப் பாட்டு, முருகன் பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன பேரின்பச் சுடர் மணிகளாக வெளிவந்தன. அரவிந்தரிடம் பாரதியார் பேரன்பு பூண்டிருந்தார்.
“ஆடு பாம்பே – எழுந்தாடு பாம்பே!
அன்னை துயில் நீங்கநலந் துன்னு பாம்பே!
உண்மை நிலை கண்டுறங்கும் யோகப் பாம்பே!
உலகத்தைச் சமன் செய்ய எண்ணு பாம்பே!
திண்மை நிலை கொண்டிருக்குந் தெய்வப் பாம்பே!
தெய்விகத்தைக் காட்டுதற்குத் தீவிரங் கொள்வாய்!
ஆதி சிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே – எங்கள்
அரவிந்தப் பேர்புனைந்த அன்புப் பாம்பே!
ஜோதிப்படந் தூக்கிநட மாடி வருவாய் – அந்தச்
சோலைகிழ லாலெமது துன்ப மொழிவோம்!”
என்று அரவிந்தரைப் போற்றுகிறார். கண்ணன் பாட்டை அன்பர் நுட்பமாக ஆராய்ந்தால், இந்த உண்மை விளங்கும். “இங்கே தேவர் சங்கம் கூடும், கிருதயுக மெய்தும், விண் மண்மிசை விளங்கும், புவிமீதினிலே புது வாழ்வுறும், சக்தி விளங்கும்” என்னும் அரவிந்தக் காட்சிகள் பாரதியார் கவிதைகளில் மிளிர்கின்றன. மோகத்தைக் கொன்று, யோகத்தில் நின்று, பந்தனை நீங்கி, சிந்தனை தெளிந்து, உள்ளமுருகி, ஊனமொழிந்து பராசக்தியின் கருணை வெள்ளத்தை அள்ளிப் பருக அவர் மனம் அனவரதமும் துடித்தது. குள்ளச்சாமி என்ற ஓர் அரிய ஞானி புதுவையில் இருந்தார். அவரால் பாரதியார் பெற்ற ஞானப் பயன் மிகப் பெரிது. “பாரதி அறுபத்தாறு குள்ளச்சாமியின் திருவுள்ளமே. இச்சாமியாரின் பூர்வ வரலாறு யாருக்கும் தெரியாது. அவர் உயர்ந்த ஞானசித்தர், பரமஹம்ஸயோகி என்பதில் தடையில்லை, பாரதியார் புதுவையில் 10 – ஆண்டுகள் இருந்தார்கள்.
வறுமை, வறுமை, வறுமை ! புலவரைப் பற்றும் பொல்லா வறுமை ! பாரதியாரின் தூல வாழ்விற்கு இவ்வாறு சாப்புக் கொடுக்க வேண்டி யிருக்கிறது. வறுமை வறுமை ! ரத்தக் கண்ணீர் ! குடும்பமும் குழந்தையும் குட்டியுமாக அவர் பட்ட இடர்கள் சொல்லி முடியா. கவிக்காதலி ஒரு கன்னத்தில் கொஞ்சுவாள் ! நாட்டைப்பற்றியது போதாதென்று நல்லோரையும் பற்றிப் பிடுங்கியெடுக்கும் வறுமைப் பேய் மற்றொரு கன்னத்தைக் கிள்ளும். உள்ளம் மட்டும் அன்னையிடம் ஈடுபட்டிருக்கும்.
வறுமையாயினும் வண்மை மிகுதி ! மனது வெகு தாராளம்! உலகின் சூது விநயம் செட்டுக்கட்டெல்லாம் தெரியாது; நாளைக்காகச் சேர்க்கத் தெரியாது. இன்று ஒரு ரூபாய் வந்தால் அப்படியே செலவு; வந்தவர்களை முகமலர்ந்து உபசரிப்பார். காரசாரமாகச் சாப்பிடுவார். தோசை பலகாரங்கள் உண்ணும் போது பட்சிகளை அழைத்து, அவற்றிற்கும் போட்டு, அவற்றின் இன்பத்தை அநுபவிப்பார்.
“விட்டு விடுதலை பெற்றிருப்பாய் –இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே!”
என்று ஷெல்லி போலப் பாடுவார். படக்கென்று சினப்பார் ! பக்கென்று சிரிப்பார் ! “மஹாசக்தி, உன்னிடம் அமரத்தன்மை கேட்கிறேன். என்னை மனக் கவலையின்றி விடுவிக்க வேண்டும்; … பணம் இல்லாதது பற்றியே கவலைப்படலாமா? மூடா; மூடா ; மூடா ! அச்சத்தைப் போக்கு!’” என்பார். பாரதியார் குடும்ப வாழ்வு ஒரு பெரிய ரஸ மஞ்சரி.
15. சிந்தனை
பாரதியார் உடல் குடும்பத்தில்; உள்ளம் சக்தி வானில் வட்டமிடும் சுதந்தர வானம்பாடி ; உயிர் கவிக் காதலியைப் பிரியாது:
“சித்தந் தளர்ந்ததுண்டோ?- கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்தது போல்– பகற்
பேச்சு மிரவிற் கனவும் அவளிடைய
வைத்த நினைவை யல்லால் – பிற
வாஞ்சை உண்டோ? வய தங்ஙனமே இரு
பத்திரண் டாமளவும் – வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றி நின்றேனம்மா!”
வறுமைக்கு மருந்து சக்திக் காதல். “அன்னையே, உன் சரண். என்மேல் நீ அன்புகொள். அமரர் போல, வாழ்வேன் ; நின்மேல் இசைகள் பாடி மகிழ்வேன் நான் உன் கணவன், என்னை நாணி ஏகலாமோ? நான் கண்ணன் கருவி; அருள் புரி. மனத்தில் உறுதி, வாக்கில் இனிமை, நல்ல நினைவு, நினைத்த வெற்றி, தனம், இன்பம், பெருமை, அறிவு, காவியம், பெண் விடுதலை, கடவுள் துணை, மண் வளம், உண்மை, அச்சமின்மை – எல்லாம் அருள் என்று கூசாமல் சக்தியை வேண்டுவார்.
“அடியார் பலரிங் குளரே –
அவரை விடுவித்தருள்வாய்!
புதுவாழ் வுறவே புவிமி தருள்வாய்”
என்று முருகனை வேண்டுவார்.
தெய்வபக்தியினால் இகபர ஸாதனங்கள் எல்லாம் பெறலாம் என்பது கவியின் உறுதி. மோக்ஷ சுகத்துடன் போக சுகமும் கூசாமல் கேட்பார்:- “திருமகளே, உன்மேல் மெத்த மையல் கொண்டுவிட்டேன்.”
“செல்வ மெட்டு மெய்தி – நின்றன் –
செம்மை யேறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை – உலகில்
இல்லையாக வைப்பேன்.
முல்லை போன்ற முறுவல் – காட்டி
மோக வாதை நீக்கி
எல்லையற்ற சுவையே – எனைநீ
என்றும் வாழ வைப்பாய்!”
என்று திருமகளைக் காதலித்து அஷ்டைச்வர்யமும் வேண்டுவார்.
“கூடுந் திரவியத்தின் குவைகள் – திரள்
கொள்ளுங் கோடி வகைத் தொழில்கள் – இவை
நாடும் படிக்கு வினை செய்து – இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கும் ஒங்கக் – கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் – அடி
தாயே உனக்கரிய துண்டோ – மதி
மூடும் பொய்மை யிருளெல்லாம் – எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
வையத் தலைமை எனக் கருள்வாய் – அன்னை
வாழி நின்னதருள் வாழி!”
இவைதாம் கவிக் குயிலின் சிந்தனைகள். ஆம், கவிப்புலமை தமிழுலகத் தலைமை வகிக்கிறது!
எல்லாரும் அமரநிலை எய்தூநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்!
எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்,
எல்லாரும் இந்நாட்டு மன்னர்.
இதுதான் பாரதியார் இறுதியில் கர்ஜித்த ஆவேசப் பாட்டு !
ஆ ! இந்தத் தீர்க்க தரிசனம் நிறைவேறுகிறது, நிறைவேறும், நிறைவேறிற்று. இதுவே பாரதியார் பாடலின் முத்தாய்ப்பு!இந்தப் பொன்மொழிச் சுடரை வறுமை மேகம் மறைத்துக் கலக்கிய கொடுமை என்னே ! இக்காலம் நாட்டுச் சேவகம் எளிது ! நாட்டன்பர் பெருமையை நன்குணராத அக்காலம் முள் மேல் நடந்தன்றோ இந்த ஆதி வீரர்கள் அன்னைக்கு உழைத்தனர். புதுவை புதிது. சுற்றும் கண்ணுறங்காக் காப்பு, காவல்; குடும்பச் சுமை ; பொது மக்களின் ஆதரவு ஏறக்குறையப் பூஜ்யம்.
” சுதேசி” என்றால் அஞ்சுவர். அந்நாள் ராணா பிரதாபஸிம்ஹன் பட்ட கஷ்டமெல்லாம் இந்தத் தேச பக்தர்கள் பட்டனர் என்பது மிகையல்ல. ஐயரும், பாரதியும் தமிழ்நாட்டின் வீரச் சரிதையில் பொன் னெழுத்தாற் பொலியும் நன்மணிச் சுடர்கள் ! வறுமைச் சிலுவையிலிருந்து இவ்வீரர்கள் நாட்டிற்கு உழைத்தனர். புதுவையிற் புகுந்த தேச பக்தருக்கு விடுதலை கிடைத்ததும், 1919-இல் பாரதியார் குடும்பத்துடன் கடையம் வந்தார். இடையில் டாணாக்காரர் பிடித்து, பிறகு விடுதலை செய்தனர். 1920-இல் மீண்டும் சுதேசமித்திரன் வேலை. சென்னையில் தம்மைப் படையெடுத்த வறுமையின் கொடுமையை ஞானரதத்தில் சித்திரிக்கிறார். புதுவையை விட்டானதும், சிறு சிறு கதைகளாலும், சிங்காரக் கட்டுரைகளாலும் பாரதியார் தமிழ்ப்பணி புரிந்தார். இந்நாட்களில் உடலை மறந்த உள்ளுலகில்தான் பாரதியார் நிலைத்து உலாவினார்; உடல் எலும்பாக இளைத்துப் போயிற்று. இருந்தாலும் வாய் ஜயபேரிகை முழக்கியது. திருவல்லிக்கேணிக் கோயிலை அடுத்த மண்டபத்தில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பாடுவார். 11-9-21-இல் கடலலைகளும் அடங்கிக் கேட்கும்படியாக, “பாரத சமுதாயம் வாழ்கவே !” என்னும் சமரஸ வேதத்தை முழக்கினார். சர்வாத்ம ஸமரஸமே பாரதி பாடலின் உயிர். பார்த்தசாரதி கோயில் யானைக்கு விளாம்பழம் கொடுத்தார். அவரது ஆத்ம ப்ரேமையை மதியாத விலங்கு உதைத்ததும் மெல்லிய உடல் நோவுற்றது, நோயுற்றது! 11-9-1921-இல் பாரதியார் படும் வறுமை நோயைச் சகிக்காது, இந்தத் தமிழருக்கு உணர்வு வரவேண்டுமென்று கவிமகள் விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றாள். “ஆம், வீர மகனே, மாந்தருக்குப் பாடினை ; வா; உன் தமிழைத் தேவர் பருகட்டும் என்றே கவித்தெய்வம் அவரை எடுத்து ஏகியது ! இன்று பாரதியாரின் “தேசோபநிஷத்து சக்தி பரப்புகிறது! தமிழ்நாட்டில் பெரிய மஹாகவிகளும், வரகவிகளும் வருவார்களென்பது பாரதியாரின் உறுதி. ஆம், அது உறுதி. “முருகா, முருகா” “விண்ணும் மண்ணுக் தனியாளும்”, “பாரத சமுதாயம்” – இம்மூன்றும் பாரதி பாடல்களின் ஜீவநாடிகள். இவை தமிழர் நரம்பில் சக்தி நாதம் புரிக!



