பாரதி விளக்கம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

பாரதி பாட்டின் பலன்

1. மஹான்

இவ்வுலகத்தில் சில மஹான்கள் வருகின்றனர்-கால சக்தியின் தூதர்; அசாதாரண சக்திகளை உள்ளே கொண்டு சாதாரணமாக உலவுகின்றனர். உடல்-மனிதரல்ல; அவர் உள்-மனிதர். புற விழிகளுக்கு உள்-மனிதன் புலப்படுவ தில்லை. மாந்தர் பகைப்பர், நகைப்பர், வருத்துவர்; பிறகு……..வருந்துவர், திருந்துவர், ஆடுவர், பாடுவர், கொண்டாடுவர்.

“Seven famous towns contend for Homer dead,
Through which the living Homer begged his bread”

என்று ஒரு பழமொழி. ‘இலியாது’ பாடிய ஹோமர் கிரேக்க மஹாகவி; கண்ணிழந்து, உடல் தளர்ந்து, பிச்சையுண்டு ஊர்தோறும் தள்ளாடித் தத்தளித்து ஏனென்று கேட்பாரின்றி இறந்தார். இறந்த பின் சிறந்தார். அவர் வாக்கு ஐரோப்பியக் கலைக்கே ஜீவநாடியாக இருக்கிறது. அது மாதிரி பாரதியார் உள்ளமட்டும் வருந்தி, சென்றபின் நின்று நிலவுகிறார்.

அவர் வாக்கு, புதிய தமிழ்நாட்டைத் தோற்றியுள்ளது. வீடு வாசலையும் கவனியாது, வறுமையும் பொறுமையும் தாங்கி ஆதன்ஸ் வீதிகளில் “தன்னறிவே பொன்னறிவு ” என்று உபதேசித்தான் மஹாத்மா ஸொக்ராத்தன். காலம் பகைத்தது, நகைத்தது, வெறுத்தது, ஒறுத்தது. அ-நீதி மன்றம் நஞ்சைக் கொடுத்தது. அதையும் புன்னகையோடு உண்டு, புன்னகையோடு உடல் பிரிந்து, உலகின் உள்ளத்தில் வாழ்கிறான் மஹாத்மா. ஸொக்ராத்தனுக்கு ரஸாயன விஷம் ஈந்தனர் ; மஹான் பாரதியாருக்கு வறுமை நஞ்சு ஈந்தனர். அதை நினைக்கும்போது, நெஞ்சு பொறுக்கு தில்லையே!

கவிக்குயில் வறுமையெனும் கல்மாரி தாங்கியும், “கலைத்தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்தது போல்’ வாழ்ந்து, உடலை மண்ணுக்கு ஈந்தது ; உயிரைத் தமிழர்க்கு ஈந்தது! அக்குயிலின் வாக்கு இளந்தமிழ் நாட்டை எழுப்பி, ஒரு வசந்தப் பூஞ்சோலையாக்கியது. அச்சோலையில் இன்று ஆயிரக்கணக்கான புட்கள் பாரதி பாடலைப் பாடிக் களிக்கின்றன. அந்தப் புதுத் தமிழ்ச் சோலையைச் சுற்றிப் பார்ப்போம்! பாரதி பாடலிற் செழித்த கற்பகங்களைக் காண்போம்!

2. முச்சுடர்த் தீ !

தமிழன்பு, நாட்டன்பு, கடவுளன்பு இம்முச்சுடர்க் கனலே பாரதி; அக்கனலைத் தாங்கிய ஸ்தூலகுண்டம் மண் மண்ணானது. அதில் எரிந்த வேள்விக் கனல் தமிழர் மனந்தோறும் கொழுந்தேறுகிறது. “புதுவாழ் உறவே, புவிமீதருள்வாய் ” என்று கடவுளை வேண்டி, “வையமெல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம்” பூண்டு வாழ்ந்தார் பாரதியார்.

3. தேசாவேசம்

1906-ஐயும் நினையுங்கள்; 1937-ஐயும் பாருங்கள். 32-ஆண்டுகளாக நமது ஸ்வராஜ்யக் கற்பகம் வானோங்கி வளர்ந்து வருகிறது; புயல், இடி, தடியடி எல்லாவற்றையும் தனது உறுதிக்கு உரமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. தண்ணீரல்ல, கண்ணீரல்ல, உயிர் நீர் ஊற்றி இக்கற்பகத்தை வளர்த்த வீரர் முன்னணியில் நம் கவி நிற்கிறார். திலகர், அரவிந்தர், லாலாஜி, ஐயர், பாரதி- இவர்களைப் பாரத மாதாவின் “பஞ்சப்யாரா”க்கள் என்று சொல்லத்தகும். மஹாசக்தியான பாரததேவிக்குத் தங்கள் வாழ்வை முதல் முதல் பலிதானமாக்கிய தீரர்கள் இவர்களே. வந்தே மாதரம் என்றால் வாய் பூட்டும் அக்காலத்தில், இந்தத் தீரர்கள் வள்ளிசாக முழுவிடுதலையும் கறந்து வாங்க முயன்று பல கஷ்டங்களை அநுபவித்தனர்.

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய் !”

எங்கு மிந்த ஸ்வராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்!”

-இந்த இரண்டு காரியங்களைப் பாரதியார் வாக்கு வல்லமையாற் செய்தார்.

வந்தேமாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம்.”

பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு!”

“எங்கள் – பாரத தேசமென்றே தோள் கொட்டுவோம்!” என்று உறங்கிக் கிடந்த தமிழர் உரமுற்று எழுந்தனர். பாரதநாட்டை மண்ணென்று எண்ணாது, சக்தித் தாய் என்று வணங்கச் செய்தார் அரவிந்தர். அதே போலத் தமிழர் மனக்கோயிலில் பாரத மாதாவின் திருவடிவை வைத்து வணங்கச் செய்தார் பாரதியார்.

ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம் தேவியிங் குனதே

(தொமாரேயி ப்ரதிமர கதி மந்திரே மந்திரே)

என்று தேசபக்தர் உணரச்செய்தார். “தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்த்திடும்'” என்று தொடங்கும் மணி வாக்கே பாரததேவியின் உண்மை வடிவம்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நலம்புரி வாளெங்கள் தாய் அவர்
அல்லவ ராயின், அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்!”

பாரத சக்தியின் அனுக்ரஹ நிக்ரஹ சக்தியை இந்தப் பாட்டு நன்கு விளக்குகிறது.

இந்தியாவில் பாரததேவியின் மணிக்கொடி வணக்கம் பாடிய முதற் கவி பாரதியாரே.

பட்டுத் துகிலென லாமோ அதிற் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும் அதை மதியாதிவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்

என்ற மணிவாக்கிற்கு அக்ஷரலக்ஷம் தரலாம்! ஆம், எத்தனை அட்டகாசங்கள், அடக்கு முறைகள், இடி, புயல், தடியடி! எதற்கும் அசையாது நமது கொடி கம்பீரமாக வானளாவிப் பறக்கிறது! நாகபுரிக் கொடிப் போர் இந்த மணிவாக்கை விளக்குகிறது.

” Freedom, yet thy banner torn, but flying,
Screams like thunder-storm against the wind!”

என்ற பைரனின் ஆவேசத்தைப் பாரதியாரிடம் காண் கிறோம்.

தாயின் மணிக்கொடியைச் சுற்றிக் கவி கண்ட “ஆரியக் காட்சி” வரவர, தொகையிலும் தொண்டிலும் பெருகிவருகிறது. அந்த ஆரியக் காட்சியில் தலைமை பெற்ற வீர மணிகளை எல்லாம் பாரதியார் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.

லாலாஜி நாடு கடத்தப்பட்டபோது சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பாரதியார் பாடிக் கண்ணீர் விட்ட கண்ணிகள் நெவின்ஸன் என்னும் ஐரோப்பியன் உள்ளத்தையும் உருக்கின. இந்தியாவின் மறு மலர்ச் சியைப் பற்றிய தனது நூலில் நெவின்ஸன் பாரதியாரைக் குறிப்பிடுகிறான். வந்தே மாதரத்திற்கு அடுத்தது, “திலக் மஹராஜ்கீ ஜேய்!” அக்காலம் திலகர் பெயர் தேச பக்தருக்கு மந்திரம்.

‘நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாத மெழுகவே!
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!’

என்று நாடு மார்தட்டி எழுந்தது திலகர் பணியால். திலகரை வீராவேசத்துடன் போற்றிய கவி மஹாத்மா காந்தியை நினைக்கும்போது,

வேதனைகள் இனி வேண்டா
விடுதலையோ திண்ணமே!”

என்று உறுதி கூறுகிறார். “புவிக்குள்ளே முதன்மை பெற்றான்; கொடிய நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன்; பாரததேசந் தன்னை வாழ்விக்கவந்த காந்தி மஹாத்மா!” என்று பொருந்தக் கூறுகிறார். பாரதியார் பாடலில் நமது விடுதலை வரலாறும் அதற்குப் பாடுபட்ட வீரர் பெருமையும் அடங்கியிருப்பதால் அது பாரத இதி ஹாஸமும் ஆகும்.

4. வீர சுதந்தரம்

பாரதியார் வீர சுதந்தரம் வேண்டினார். “கட்டென் பதனை வெட்டென்போம்; அண்டஞ் சிதறினாலும் அஞ்ச மாட்டோம்; வஞ்சக் கவலைக் கிடங்கொடேல்; யானெதற் கும் அஞ்சுகிலேன்; குன்றெனத் தலை நிமிர் ; கொடுமையை எதிர்த்து நில்;ஜயமுண்டு ; பயமில்லை ; ஓம் சக்தி !” என்ற மின்வெட்டுகள் அவர் வாக்கிற் பளிச்சிடும்.

ஓரஞ் செய்திடாமே தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளுமுறைமை

யே அவர் வேண்டியது. “பாஞ்சாலி சபத”த்தில் இந்த அரச நீதியை நன்கு விளக்குகிறார்.

நாட்டு மாந்த ரெல்லாம் தம்போல்
நார்க ளென்று கருதான்
ஆட்டு மந்தை யாமென் றுலகை
அரச னெண்ணி விட்டான் !”

தேயம் வைத்தி ழந்தான் சீச்சீ
சிறிய செய்கை செய்தான்!”

இதில் நாட்டையும் மக்களையும் நன்மதிப்பது நீதி; அப்படியல்லது அநீதி என்று விளக்குகிறார்.

நாடு முழுதும் ஒரே ஜாதி, ஒரே குடும்பம்; சாதி மதநிறக் கொடுமைகள் கூடாது. அன்பு, அறிவு, ஒற்றுமை, பெண் பெருமை, ஆத்ம ஞானம், ஸர்வாத்ம ஸமத்வம் – இவையே சுதந்தர தத்துவம்.

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனு மில்லை; ஜாதியில் இழிவு
கொண்ட மனித ரென்போர்
இந்தியாவில் இல்லையே!

வாழி கல்வி செல்வ மெய்தி
மன மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருநிகர்
ஸமானமாக வாழ்வமே!”

விடுதலை! விடுதலை! விடுதலை ! இதுவே தேசோப நிஷத்தின் மஹாமந்த்ரம்!

5. ஸமதர்மம்

தற்போது, பொதுவாக உலகின் மனத்தைக் கவர்ந்து வரும் ஸமதர்ம இயக்கம் பாரதியார் காலத்தில்தான் முளை கிளம்பியது.

“இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வன வாசம்” என்னும் ஜாரின் கொடுங்கோலெல்லாம் ஒரே “டபாரில்” புகையாகி, ஏழைத் தொழிலாளருக்கு விமோசனம் ஏற்பட்டுப் பொதுவுடைமைச் செங்கொடி உயர்ந்தது ரஷ்யாவில். ஏழைத் தொழிலாளரின் வீராவேசப் புயலால் அதர்மக் காடு விழுந்தழிந்து, எரிந்து சாம்பி மண்ணானது. இச்சம்பவம் நம் கவியின் கருத்தை மிகவும் உயர்த்தியது.

“இடிப்பட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ !’

என்று இச் சம்பவத்திற்கு முத்தாய்ப்பு வைக்கிறார் மஹாகவி. இந்த ஆவேசப் பாற்கடலைக் கடைந்தெழுந்த அமுத கலசம்போல பாரத ஸமுதாய வாழ்த்து எழுந்தது. அதுவே பாரதி மணிவாக்கின் சிந்தாமணி.

முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொது வுடைமை

மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ!”

தனி யொருவனுக் குண வில்லையெனில்
ஜகத்தினை யழித் திடுவோம்!”

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!”

ஆ, இதில் எவ்வளவு தீர்க்கதரிசனம் அடங்கியுள்ளது! இதுதான் அவர் கடைசியாக ஒரு கடற்கரைக் கூட்டத்தில் கர்ஜித்த ஸமதர்ம கீதம்!

இக்காலத்தில் தொழிலாளர் இயக்கத்தையும் அபேத வாதத்தையும் பற்றிப் பாரதியார் அரிய கட்டுரைகள் எழுதி யுள்ளார்; ” ஸமூகம் ” என்னும் கட்டுரைத் தொகுதியில் அவற்றைக் காண்க. ரஷியாவின் கொலை வழி நம் நாட்டிற்குப் பொருந்தாது. இது தானதர்மங்களில் சிறந்த நாடு. தொழில் நிர்வாகச் சங்கம் ஏற்படுத்தி, ஒவ்வோர் ஊருக்கும் வேண்டிய தொழில்களைத் தகுமுறையாகப் பங்கிட்டுத் தொழிலாளருக்கு உண்ண உடுக்க இருக்க வசதிகளைச் செய்ய ஒரு கட்டுப்பாடு இருந்தால் வறுமை நீங்கும். தொழில் வளர்த்தல், விளைவைப் பகுந்துண்ணல் – இவையே நமது நாட்டிற்குத் தக்க வழி என்று அதில் குறிக்கிறார்.

எல்லாரும் தம் மட்டிற்கு உழைத்து உண்ண வேண்டும். அறிவும், தொழிலும், ஆத்ம ஞானமும் வளர வேண்டும். காணி நிலம்; வீடு; கிணறு; தென்னை மரங்கள்; குயிலிசை, தென்றல் – இந்த இயற்கையின் பத்தில் காதல் மனைவியுடன், தனது தொழிலாகிய கவி மாலை புனைந்து வழிபட்டுப் பராசக்தியின் காவலில் வாழ வேண்டும் என்பது கவியின் விருப்பம்! உலகில் பிறரைத் திருடாது, கொல்லாது வாழ்ந்தால் வறுமை இருக்காது.

சீரான மழை பெய்யும்; தெய்வ முண்டு.
சிவன் செத்தா லன்றி மண்மேற் செழுமையுண்டு

என்கிறார்.

6. தொழில்

சுதந்தர நாட்டிற்கு இதந்தருந் தொழில்கள் கோடிக் கணக்காக வேண்டுமல்லவா? அதையும் காண்போம்.

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே

என்று தொழிலூக்கம் தருகிறார் கவி. தற்காலத்தில் புதிதாக வந்த பௌதிக அற்புதங்களை அக்காலத்திலேயே பாடியிருக்கிறார்.

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்
வேலைத் திரை முழுதுங் கப்பல் விடுவோம் !”

காசி நகர்ப் புலவர் பேசுமுரைதான்
காஞ்சியிற் கேட்பதற் கோர் கருவி செய்வோம்.”

உலகத் தொழி லனைத்தும் உவந்து செய்வோம்.”

ஆகாயக் கப்பலில் இமயமலையைத் தாண்டல், முற்காலம் போலே மீண்டும் பாரததேசம் கப்பல் வாணிபம் செய்து செல்வஞ் செழித்தல், இலங்கைக்குப் பாலம், சேதுவை மேடாக்கி வீதி சமைத்தல், கங்கையைப் பாய்ச்சி நடு இந்தியாவை வளமையாக்கல், பயிர்த்தொழில், சுரங்கத் தொழில், வாணிபம், நாட்டிற்கு நாடு பண்ட மாற்றல், உறவு செய்தல், தொழிலொற்றுமை, நதிகளில் உல்லாசப் படகு செலுத்தல், கலைகளை மதித்து வளர்த்தல், வீரம் போற்றல், பட்டு பஞ்சு ஆடைகளை மலை மலையாகச் செய்து குவித்தல், நாட்டைக் காக்கவும் வீட்டைக் காக்கவும் பலவகை ஆயுதங்களும் யந்திரங்களும் செய்தல், ஆலைத்தொழில், காகிதத்தொழில், ஆணி, குடை, உழுபடை ஊசி எல்லாச் சாமான்களும் நாட்டிற் செய்தல்; புதுப்புது யந்திர வண்டிகள் செய்தல், “ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்” செய்தல், ரேடியோ அமைத்தல், முத்துக் குளித்தல், மண் பொன் மரம் இரும்புத்தொழில் ஒன்று பாக்கியில்லாது குண்டூசி முதல் ஆகாயக்கப்பல் மட்டும் நாட்டிற் செய்யத் தொழிலுக்கம் அளிக்கிறார் கவி. பாட்டு, காவியம், ஓவியம், பரத நாட்டியம், மந்திரம், தந்திரம், பிரசங்கம், வானசாஸ்திரம் எல்லாம் வளர்க்கவேண்டும். தொழிலாளர்களை நன்மதிப்பின் உச்சிக்கு ஏற்றுகிறார்:

விண்ணி னின்றெம்மை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே.”

கேவலம் வயிறு வளர்த்து, படைசேர்த்துப் பிறர் நாட்டுடன் போர் செய்யும் தொழிலல்ல ;

நாட்டிலே அறம் கூட்டிவைப் பீரே

என்பதனால் தர்ம நீதியாக வாழ்ந்து வளமை பெருகி, வறுமை, மடமை, அடிமை ஒழிந்து வையமெல்லாம் அமுதம் பெருகி, எல்லாரும் இன்புறவே கோடிக் கணக்கான தொழில்களைக் குறிக்கிறார்.

பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன்;
பிரம தேவன் கலையிங்கு நீரே.”

கேளுங்கள்! கேளுங்கள்! தொழிலாளர்களே, சிறப்புற்று வாழுங்கள்! நாட்டை வாழ்வியுங்கள்! பாரதியார் பல தொழிற் கரங்களுடன் அழகாகப் பாரத தேவியின் திருவுரு ஒன்று சித்திரித்து இந்தியா பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். முதல் முதலில் வெளியான நாட்டுப் பாடல்களிலும் அவை காணும்.

பாரதியாரின் தொழிலாக்கம் கீதாதர்மத்தை அடிப் படையாகக் கொண்டது. ”மனத்தை இறைவனிடம் வைத்து ஒவ்வொரு கையும் வேலைசெய்ய வேண்டும். விளைவைப் பகுத்து உண்ணவேண்டும். இதற்கு ஊர் தோறும் நமக்குள்ளேயே கட்டுப்பாடு வேண்டும்” என்று தொழிற் கட்டுரைகளில் வெகு அழகாக எடுத்துக் காட்டுகிறார்.

இந்தத் தீர்க்கதரிசனக் கவி அமைத்த ‘பொன்னொளிர் பாரத நாட்டின் ” மின்னொளி நமது மனக்கண் முன்னே பளிச்சிடுகிறது. புறவிழிகளாற் காணும் காலமும் வெகு தொலை இல்லை. நாட்டிற்கு வேண்டிய தொழில்கள் பெரும்பாலும் நாட்டிலே நடந்துவருவதைச் சுதேசக் கண்காட்சியிற் காண்கிறோம். இனி வீடுதோறும் காண்போமாக! அப்பேரது “உன்னத பாரத நாடெங்கள் நாடே” என்று தோள் கொட்டுவோம்!

7. தமிழ் வளர்ச்சி

பாரதியார் தமிழுக்குப் புத்தொளி அளித்துள்ளார். 1920-ஆம் ஆண்டிலிருந்து நம் இளந்தமிழர் எழுதும் நூல்கள், நடத்தும் பத்திரிகைகள் எல்லாம் பாரதித் தமிழ்தான்! பாரதியாரின் ஒவ்வொரு பொன்னுரைக்கும் ஒரு பத்திரிகை நடத்தலாம்; நூல் எழுதலாம். இதுகாறும் வள்ளுவரை மேற்கோள் உரைக்காதவர் இல்லை. இப்போதும் இனியும் பாரதி வாக்கை மேற்கோளாக உரைக்காதவர் இல்லை!

பாலுஞ் சோறும் வீட்டுக்குறுதி
பாரதி பாட்டு நாட்டுக்குறுதி

என்று சொல்வோம்!

தெளிந்த தமிழில் தெளிவுற மொழிதல்; அறிந்தோர்க்கு இனிமை ; அழகின் அமுதம்; உயர்ந்த கருத்து, உலகிற்கு அரும்பயன் – இவை பாரதி மணி வாக்கின் இயல்பு. பண்டிதரின் “கரபுறாக்கள்” அவருக்குப் பிடிக்கா. “றற்றுகரபுரா” என்று இருக்கும் பாடல்களை, ‘இதென்ன சங்கடமடா!’ என்று கிறுக்கிவிடுவார். சங்கத்தமிழ் வேறு; கம்பத் தமிழ் வேறு; பெரியபுராணத் தமிழ் வேறு; அவற்றை எல்லாம் தாண்டி, தாயுமானவரும் வள்ளலாரும் தெளிந்த தெய்வத் தமிழமுதம் அளித்தனர். பாரதியார் தாயுமானவர் நடையை மிகவும் போற்றுவார். நம்மாழ்வார் பாசுரங்களின் பக்திச் சுவையை அநுபவிப்பார். ”வெறுமே வர்ணனைகளையும் கற்பனைகளையும் சமைத்து, யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில்” காவியம் எழுதுவது அவருக்கு இயல்பு இல்லை. சம்மதம் இல்லை. அந்தப் பழம் பண்டித சகாப்தம் முடிந்து போயிற்று. இக்காலத்தில் சிலர் போலச் சங்கத் தமிழை நாம் இகழக் கூடாது. அக்காலத்தில் அந்தத் தமிழ் எளிதாகப் புரிந்தது. இந்தக் காலத்திற்குப் பாரதி நடையே சரி. நைடதம், சிலப்பதிகாரம், கம்பன் இவற்றிற்கெல்லாம் பண்டிதர் துணையும், பல நாள் உழைப்பும் வேண்டும். நார் உரித்து, ஓட்டை உடைத்துப் பருப்பு உண்ண வேண்டும். பாரதி பாடல் அத்தனையும் முந்திரிப் பருப்புருண்டை ; அப்படியே சாப்பிட வேண்டியதுதான். பழஞ்சுவையிற் குறைவில்லை; பல்லை உடைக்காது; புத்தமுதச் சுவை காணும்! பாரதியின் நடை ஷெல்லியின் நடை போன்றது ; பைரனின் வீரமும், வேட்ஸ்வொர்த்தின் இயல்வளமும், மில்டனின் உன்ன தியும் பாரதி வாக்கில் காணலாம். இத்துடன் காளிதாஸனின் சமத்காரமும் காணலாம். இதற்கெல்லாம் எடுத்துக் காட்டு குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் – மூன்று இணையற்ற காவியமணிகள் ! வற்றாச் சுரங்கமாகிய தமிழ், காலக்கனலில் உருகி உருகி, கரடு முரடுகள் நீங்கி, துரிசின்றி,மாற்றேறி இப்போது பாரதியாரால் சொக்குப் பொன்மணி மாலைகளாக்கி, தமிழ்ச் சமுதாய தேவிக்குச் சூட்டப்பட்டுள்ளது!

தேன், கனி மதுர மென்கோ!
தெளிந்தவர் உள்ள மென்கோ !

வான்சுவை யமுத மென்கோ!
வயங்குபொன் மணிகளென்கோ!

நான்முகன் புதிய வேதம்
நவின்றனன் உலகிற் கென்கோ!

கான்வளர் அருவி யென்கோ!
பாரதிக் கவிதை யம்மா!

அதைவிட எளிய நடை எழுத முடியாது; அதைவிட ஆழ்ந்த பொருளை அளக்க முடியாது. அதைவிட அழகை அநுபவிக்க முடியாது. பாட்டு, கவிதை, கட்டுரை, சிறு கதை, பெருங்கதை, வர்ணனை, மொழிபெயர்ப்பு அனைத் திற்கும் தாகூரைப் போலவே பாரதியார் சரியான வழி காட்டி யிருக்கிறார். கீதை மொழிபெயர்ப்பே பாரதியார் உரை நடையில் மிகச் சிறந்தது. ஞானரதம் கற்பனையிற் சிறந்தது. “ஆறில் ஒரு பங்கு ” சிறு கதையிற் சிறந்தது, குயில் பாட்டெல்லாம் கீட்ஸும் ஷெல்லியும்; நாட்டுப் பாட்டெல்லாம் பைரன்மயம் ; ஞானப் பாட்டெல்லாம் அபினவ வேதகானம்! பக்திப் பாடலெல்லாம் கபீர். நானக், ரவிதாஸ், வித்யாபதி, சண்டிதாஸ் இவர்களின் பந்தா ! இவ்வாறு உலகக் கவிகளின் சுவை யெல்லாம் கொண்டுவந்து தமிழுக்கே புனர்ஜன்மம் அளித்திருக்கிறார் பாரதியார். கோடி விதமான பண்களமைந்து சுவை குலுங்கும் அமுதவாரிதி தமிழ்மொழி. அந்த அமுதவாநிதி பாரதி சகாப்தத்தில் அரிய முத்துக்களையும் ரத்தினங்களையும் அள்ளி வீசி, சற்சரி பாணி கொட்டி ஆனந்தக் கூத்தாடு வதைக் காண்கிறோம். இன்னும் மேன்மேலும் முத்துமணி யலைகள் விம்மக் காண்போம்!

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா

என்று ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு முலைப் பாலுடன் தமிழன்புப் பாலையும் ஊட்டும் காலம் வந்தது! உலகிலுள்ள அறிவுச் செல்வம், அருங்கலைச் செல்வம், தொழிற் செல்வம், வாணிபச் செல்வம், வீரச் செல்வம், இசைச் செல்வமெல்லாம் படைத்து, தமிழன்னை வெற்றிச் செல்வியாக விளங்கும் காலம் வருகிறது.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலேஎங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

என்று ஒவ்வொரு தமிழனும் உணரும் காலம் வந்தது!

எட்டுத் திக்கும் சென்று எல்லாக் கலைச் செல்வங் களையும் தமிழில் கொண்டு குவிக்கும் முயற்சிக் கனல் எழுந்தது! தமிழ்ப் புகழ் ஏறுது! ஏறுது! இப்போது ஆங்கில மோகினிக்கு அடிமைப்பட்டுத் தாயை மறந் தவர்களும்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்!
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்

என்று விழித்தெழுந்து தமிழ் மோகங்கொள்ளும் காலம் வருகிறது, வந்தது! தமிழ்நாட்டில் வரகவிகள் தோன்றி யுள்ளனர்; இறவா நூல்கள் பிறக்கின்றன; எல்லாம் இந்தத் தீர்க்கதரிசியின் ஆவேசத்தால்!

வாழ்க கவிக்குயில் வாழ்கவே நீடு
வாழ்க கவிப்ரம்மம் வாழ்கவே!

8. நாட்டுக் கல்வி

“வீடுதோறும் கலையின் விளக்கம்” வேண்டுகிறார் நம் கவி. மூளையில் பிறநாட்டுப் புத்தக மூட்டை சுமந்து, வேலையில்லாது, நெஞ்சுலர்ந்து கவலை பற்றி அலைகின்றனர் நம் வாலிபர் – கஷ்ட காலம்! “பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்” என்று இவர்கள் நெற்றியில் பட்டம் ஒட்டுகிறார் மஹாகவி. உய்வு என்ன? வழி காட்டுகிறார். ஆண் பெண் இருவரும் ஸரிஸமானமாகக் கல்வி கற்று முன்னேறும் வழியை நன்கு விளக்குகிறார். ஸமூகம் என்னும் புத்தக மணியில் தேசீயக் கல்விப் பகுதியைத் திருப்பித் திருப்பிப் படியுங்கள்! நாங்கள் தமிழ்க் குருகுலத்தில் எந்தக் கல்வி முறையை அனுசரித்தோமோ அதை முன்பே பாரதியார் எழுதி வைத்திருக்கிறார். எல்லாம் அப்படி அப்படியே இருந்தது கண்டு திடுக்கிட்டேன். தேசபாஷை மூலமாகவே எண்ணெழுத்து, சரித்திரம், பௌதிகம், ஸயன்ஸ், பூகோளம், சமயம், ராஜ்ய சாஸ்திரம், பொருள் நூல் – எல்லாம் கற்பிக்க வேண்டும். கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி, சரீரப் பயிற்சி, யாத்திரைப் பயிற்சி (Excursion) எல்லாம் முறையாகத் தந்து நாட்டினரை நல்ல தர்மவீரர் களாக்க வேண்டுமென்று பாரதியார் அவா. அதைப் பூர்த்தி பண்ணவே தமிழ்க் குருகுலம் எழுந்தது ! தமிழ் நாட்டிற்கு அதிருஷ்டமில்லை. நல்ல காலம் வரவேண்டும்.

“தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக் கல்வி இன்றியமையாதது. தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைத் தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாகும்” என்று பாரதியார் கண்டிப்பாகச் சொல்லுகிறார். அனிபெசண்டம்மையாரும் அருண் டேலும் கல்விக்காகப் பெரிய முயற்சிகள் செய்த காலத்தில் பாரதியார் நாட்டுக் கல்வியைப் பற்றிச் சில அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். கிராமங்களில் கல்வி பரவ ஓர் அரிய திட்டத்தை உபதேசிக்கிறார். கட்டுரைத் தொகுதியில் காண்க.

இந்த மாதிரியே ஸங்கீதம், அபிநயம், கவிதை முதலியவற்றைக் குறித்துக் கலைப் பகுதியில் வெகு ரஸமாக எழுதுகிறார். எளிய நடை; ஆழ்ந்த பொருள்; அத்தனையும் கனிரசம், கனிரசம், கனிரசம் !

9. பெண் விடுதலை

பாரதியார் ஆண்களுக்கு ஆண்மை ஈந்தார் ; பெண்களுக்கு விடுதலை விழிப்பீந்தார். பெண் விடு தலைக்கு வழி “மாதர்” பகுதியில் சாங்கோபாங்கமாக விளக்குகிறார். பெண்களுக்கு நல்ல கல்வி தரவேண்டும்; விவரந்தெரிந்து விவாகம் செய்யவேண்டும். இஷ்டமில்லாத கணவனை மணக்கும்படி வற்புறுத்தக்கூடாது. பிடிக்கா விட்டால் விவாகரத்து செய்து கொள்ள உரிமையுண்டு; பிதுரார்ஜிதத்தில் பெண்களுக்கும் சமப்பங்கு உண்டு. கணவனை இழந்த இளம்பெண் மீண்டும் விவாகம் செய்து கொள்ளத் தடையில்லை. விவாகம் வேண்டாம் என்று தனித்திருந்து நல்ல முயற்சி செய்யும் பெண்களைத் தடுக்கக் கூடாது. பயத்தாலும் பொறாமையாலும் வேறு ஆண்களுடன் பெண்கள் பேசக்கூடாது என்கின்றனர்; அந்தச் சந்தேகம் ஒழிய வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் தலை நிமிர்ந்து உலாவவேண்டும்; அவர்கள் எந்த உத்தியோகமும் செய்யத் தடையில்லை. ராஜாங்க உரிமைகளிலே பெண்களுக்கும் சரிபங்கு அளிக்கவேண்டும். இத்தகைய உரிமைகளையெல்லாம் பாரதியார் பெண்ணினத்திற்குப் பட்டயம் செய்து வைத்திருக்கிறார்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
வைய வாழ்வு தன்னி லெந்த வகையிலும் நமக்குளே,
தாத ரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வ மிந்த நாட்டிலே!
விடுதலை விடுதலை விடுதலை!”

Female is Love and Beauty ;
Male is Action and Power;
Great city is that
Which has great men and women”

என்று ஆத்மஞானியான வால்ட் விட்மன் சொல்லுகிறார்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே மானிடம். பெண்ணினால் ஆண்மைக்கு வீரமும், வலிமையும், இன்பமும், வெற்றியும் உண்டாகும். ஆதிகாலத்தில் ஒரு பெண்ணை மணக்க, வீரர் தமது வீரமெல்லாம் காட்டினர். வேத ரிஷிகள் தர்ம பத்தினியைச் சக்திக் கனலாகக் கருதினர். மத்திமகால ஐரோப்பாவில் பெண் வீரரின் வீரத்திற்கு ஆவேசமளித்தாள்.

தமிழர் நாகரிகம் எப்போதும் பெண்களை நன்மதித்து வந்தது.

நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.”

இந்த வாக்குகள் ஆண்மையின் ஆண்மையைக் கனல் பெறத் தூண்டுகின்றன! பெண்மை வாழ்கென நமது உற்சாகம் கூத்திடுகின்றது ! பெண்கள் படும் துயரைக் கவி ஒரு நொடியும் தாங்க மாட்டார்:- பிஜித் தீவுக் கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் துயரைப் பாரதியார் உருகிப் பாடிய பாட்டு கல்லையும் கரைக்கும். ஒரு கண்ணற்ற தீவில், தனிக்காட்டில் பெண்கள் புழுங்கிக் கண்ணீர் விடுகின்றனர் :

நாட்டை நினைப்பாரோ ? – எந்த
நாளினிப் போயதைக் காண்ப தென்றே யன்னை
வீட்டை நினைப்பாரோ? – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப் பாய் காற்றே துன்பக்
கேணியி லே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டு முரையாயோ அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் !”

ஆ! இரத்தக் கண்ணீர் பீறிடுகிறது!

இப்படி வருந்தும் பெண்களுக்குப் பாரதியாரின் புதுமைப் பெண் வீரவிடுதலை கொண்டுவருகிறாள்.

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவி லொழிப்பரரம்!”

என்று பாரதியார் கூறிய ஜோசியம் இரண்டாவது ஒத்துழையாமைப் போரில் உண்மையானது! எத்தனை வீரமாதர் நாட்டுக் கொடியைத் தாங்கினர்! கண்ணைக் காக்கும் இமையிரண்டென்னவே ஆணும் பெண்ணும் காதலிற் கூடி மங்களமாக வாழவேண்டுமென்பது கவியின் உபதேசம்.

10. காதல்

ஒரே வார்த்தையில்-காதல்; இதுவே பாரதியார் வாழ்க்கையின் பாட்டு! காதல்-கடவுட்காதல், நாட்டுக் காதல், விடுதலைக் காதல், சக்திக் காதல், கண்ணன் காதல், முருகன் காதல், இளந்தமிழ்க் காதல், இயற்கைக் காதல், கவிப்பெண் காதல், யோகக் காதல், போகக் காதல், தன்னலம் கலவாப் பொதுநலக் காதல்! பாரதி வாழ்வு காதற் கட்டிக் கரும்பு;

காதலினால் மானிடர்க்குக் கலவியுண்டாம்,
கலவியிலே மானிடர்க்குக் கவலை தீரும் ;
காதலினால் மானிடர்க்குக் கவிதையுண்டாம்;
கானமுண்டாஞ் சிற்பமுதற் கலைகளுண்டாம்;
ஆதலினாற் காதல்செய்வீர் உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்!”

இந்தக் காதல் சாமானியக் காம விகாரமல்ல. இது பெண்சக்தியும் ஆண்சிவமும் ஒரு மின்சாரத்தின் ஆகு மின்னல் ஏகுமின்னல் (Positive and negative currents) போலக் கூடி, வாழ்வைத் தெய்வசேதனானந்த ஜோதியாக்கும் யோகமாகும். இந்தச் சிவசக்திக் காதல் யோகம் மஹார்ணவம், குலார்ணவம், திருமந்திரம் போன்ற யோகநூல்களைக் கற்று அனுஷ்டித்த மஹான்களுக்கே தெளிவாகும். பெண்ணிடம் குண்டலிக் கனல் உள்ளது ; அதைக்கொண்டு ஆதார சக்கரங்களை மலர்ப்பித்து ஸஹஸ்ரார சித்திபெற்ற சுத்த போக யோகானந்தர்களுக்குப் பெண்மை வணங்கத்தக்க பராசக்தியாகும். ஆண்மை வணங்கத்தக்க சிவமாகும். இதைப் பாரதியார் பல இடங்களில் விளக்குகிறார். இவ்வாறு சக்தியளிக்கும் பெருமையே பெண்ணின் பெருமை.

கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்

என்று அரிய பெரிய யோக ரகசியத்தைக் குறிக்கிறார். பாரதியாரின் பெண்ணமுதம் அழகின் வடிவு; சக்தி யின்பக் கற்பகம். இகம் பரம் இரண்டிற்கும் காதலையே வழியாகக் காட்டும் கவி இகக் காதலைக் குயிற் பாட்டிலும் பரமார்த்தக் காதலைக் கண்ணன் பாட்டிலும் வர்ணிக்கிறார்:

காதலித்துக் கூடிக் களிப்புடனே வாழோமோ?
நாதக் கனலினிலே நம்முயிரைப் போக்கோமோ?
ஆசைக் கடலின் அமுதடா, அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாங் காட்சியடா !

கவிதைக் கனி பிழிந்த
சாற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றியத னோடே யின்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதிவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன் !”

உலகில் காதல் உள்ள மட்டும் இந்த அரிய சொல்லோவியம் சிலையெழுத்தாக நிலவும்! குயிற் பாட்டில் உலகக் காதலின் பாதை கரடுமுரடென்பதை, கரடுமுரடில்லாத கட்டிக் கனிரஸத் தமிழில் விளக்குகிறார். காதல் காதல் காதல் என்று மோகப்படும் மனம் தான் விரும்பிய காதற் குயில் குரங்கையும் எருதையும் புல்லி நிற்கக் காண்கிறது. முடிவாகக் கவி புல்லும்போது அக்குயிலும் மறைந்து போகிறது. எல்லாம் பட்டப்பகலிற் கண்ட நெட்டைக் கனவாகிறது. “Love is a smoke raised with the fume of sighs” என்பது உண்மையாகிறது.

குயிற் பாட்டு காதற் பாட்டிற்கு அரசு; கவிதைக்கு அரசி. அந்தப் பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! அதன்,

ஓசை தரு மின்பம் உவமை இல்லா இன்பமன்றோ?”

11. இயற்கைக் காதல்

இளமை முதலே பாரதியார் இயற்கைக் காதல் மிகுந்தவர்.

நிலா வையும் வானத்து மீனையுங் காற்றையும்
நேர்பட வைத் தாங்கே,
குலரவு மமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி பிடித்தோம்!
உலாவு மனச்சிறு புள்ளினை யெங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச்சுளை வண்டியி லோர்வண்டு
பாடுவதும் வியப்போ?”

கவியின் உள்ளம் எவ்வாறு இயற்கை யின்பத்தில் தாவுகிறது பாருங்கள்! வானிற் பறக்கிறது! காற்றிலேறிச் சவாரியும் செய்கிறது.

தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச்
செய்து வருங் காற்றே,
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோர்
உள்ளம் படைத்து விட்டோம்!”

எல்லாம் ரவீந்திரமயம், ரவீந்திரமயம்! பாரதியார் சாமானியக் கவியல்ல ! ஷெல்லி, பைரன், விட்மன் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலேறி, நம்மாழ்வாரின் விச்வாத்ம திருஷ்டியையும் அடைகிறார். என்ன அருமை !

In the whir and roar I fashion
The living image of God

என்ற கெத்தேயின் மனோபாவனையை அப்படியே பாரதியிடம் காண்கிறோம். பாரதி ஜெர்மனியில் பிறந்திருந்தால் கெத்தே; வங்கத்தில் பிறந்திருந்தால் தாகூர்; தமிழ் நாட்டில் பிறந்தார்! பாருங்கள் என்ன அழகு ; என்ன அழகு! கண்ணனை எங்கும் காண்கிறார்!

சுட்டும் சுடர்விழிதான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ!
சோலை மலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே உனது
நெஞ்சின் அலைகளடீ!
கோலக் குயிலோசை உனது
குர லினிமையடீ!
வாலைக் குமரியடீ கண்ணம்மா
மருவக் காதல்கொண்டேன் !”

யதாதித்யகதம் தேஜோ
ஜகத் பாஸயதே ()கிலம் |
யச்சந்திரமஸி யச்சாக்கௌ
தத்தேஜோ வித்தி மாமகம்|

” ஸூர்யனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும், சந்திரனிடத்துள்ளதும், தீயிலுள்ளதும் – அவ்வொளி எல்லாம் எனதே” என்னும் கண்ணன் மொழியைக் கவி எங்கும் கண்டு அனுபவிக்கிறார்! நம்மாழ்வாரும், சைதன்யரும் கண்ணனிடம் கொண்ட மதுரபாவனை பாரதியாரிடம் மற்றொரு காதற் சுவை பெறுகிறது. காயிலும் கனியிலும் கடவுளைக் காண்கிறார் கவி.

காயிலே புளிப்பதென்னே
கண்ண பெருமானே
கனியிலே இனிப்பதென்னே
கண்ண பெருமானே.

புஷ்யாமி சோஷதீ: ஸர்வா:
ஸோமோ பூத்வா ரஸாத்மக:”

“ரஸ வடிவமுள்ள ஸோமமாகிப் பூண்டுகளை வளர்க் கிறேன்” என்னும் புருஷோத்தமன் வாக்கைப் புளியங் காயில் அநுபவிக்கிறார் நம் கவி. பாரதியாரின் நாட்டுப் பாட்டுத்தான் இப்போது எங்கும் ஒலிக்கிறது. உள்ளுருகி, உடல் குழைந்து உயிர் கலந்து பாடிய அவர் கவிதை நாவினின்றல்ல ; கற்பனை மனத்தினின்றல்ல; ஆத்மவூற்றி னின்றே பொங்கிப் பொசிகிறது!

நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்!
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்!
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்!
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்!

ஜகந்நாதத்தில் அலையிற் கண்ணனைக் கண்டு கடலிற் குதித்த சைதன்யரின் பரவசமன்றோ இதைப் பாடுகிறது!

12. சர்வாத்மக் காதல்

பாரதியாரின் மற்றுமோர் அற்புதமான குணம் தம்மைப் போலவே எல்லா உயிர்களையும் காணல்; எல்லாம் ஆத்மமயமாகக் காணல்.

ஸர்வபூதஸ்திதம் யோ மாம்
பஜத்யேகத்வ மாஸ்தித:
ஸர்வதா வர்த்தமானோ()பி
ஸ யோகீ மயி வர்த்தே

”ஒருமை நிலை கொண்டவனாய், எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன் யாங்கணும் சென்ற போதிலும், அந்த யோகி என்னுளேயே இயலுகிறான்.”

-பாரதியார் மொழிபெயர்ப்பு.

இந்தக் கண்ணன் மொழியைக் காட்சியாகக் காண்கிறோம் நம் கவியின் உள்ளத்தில். நம் கவி கழுதைக் குட்டியிலும் கடவுளழகை அநுபவித்து முத்தமிடுவார் ! தாம் அந்தணர் என்ற அகந்தைப் பூணலையும் அறுத்தெறிவார் ! சிந்தையை எப்போதும் தெய்வ சக்தியிடமே வைத்து எங்கும் அதுவாகக் காண்பார்! இரண்டு சிறு துரும்புகள் காற்றில் அசைவதை முருகன் – வள்ளியாகப் பாவித்து, கலியாணம் ஊடல் கூடல் எல்லாம் செய்கிறார். புட்களைக் கண்டால் பரவசம். பாருங்கள், அவர் சிட்டுக் குருவியை வர்ணிக்கும் அழகை! (கட்டுரைகள்,பக்கம், 183)

“ஒரு பச்சைக் குழந்தை கைப்பிடியிலே பிடித்துவிடலாம்… ஒன்று ஆண்; மற்றொன்று பெண். இரண்டும் தம்முள்ளே பேசிக் கொள்ளுகின்றன. கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன சிட்டுக் குருவி பறந்து செல்வதைப் பார்த்து, எனக்கு அடிக்கடி பொறாமை உண்டாகும். ஆஹா ! உடலை எவ்வளவு லாகவத்துடன் சமந்து செல்லுகின்றது – தெய்வமே, எனக்கு இந்தச் சிறகுகள் கொடுக்கமாட்டாயா! – ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்!”

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில் லாதொரு கூடு கட்டிக்கொண்டு
முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி,
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே!”

குயிலிடம் கவிக்குக் குதூகலக் காதல்!

மனித உருநீங்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ நாதக் கனலினிலே நம்முயிரைப் போக்கோமோ?”

மற்றுமோர் அதிசய ரஸாநுபவம் பாருங்கள்! “மூஞ்சியைப் பாரு குரங்கு மாதிரி, வாலுதானில்லை !’” என்று சாதாரண உலகம் பரிகாசம் செய்கிறது. அந்தக் குரங்கிற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு அழகுபடுத்துகிறார் நம் கவி. பாரதியாரின் அபரிமிதமான நகைச்சுவைக்கும் இது உதாரணம்.

கவிக்குயில் குரங்கைக் காதலித்துப் புகழுகிறது:

மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்குங் கொலுநேர்த்தி தன்னிலுமே,
வானரராஞ் சாதிக்கு மரந்தர்நிக ராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து
வரனரர்தம் ஆசை முகத்தினைப்போல்
ஆக்க முயன்றிடினும், ஆடிக் குதிக்கும்
அழகிலுமை நேர்வதற்கே,
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போ லாவாரோ? வாலுக்குப் போவதெங்கே!

புலியிலும் பராசக்தியைக் காண்கிறார்:

தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தனை செய்திடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே!

பண்டிதாஸ் ஸமதர்சின:”

எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்போன் ஞானி. இந்த ஒருமைப் பார்வை பாரதியாரின் அடிப்படையான தத்துவம்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலாநின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா !
பார்க்கு மரங்க ளெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா!
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா நின்றன் கீதமிசைக்குதடாநந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா!

என்ன கடவுட்காட்சி – கடவுளன்பு!

13. சக்திக் காதல்

கதிரவன் கடவுள்; கதிர் சக்தி – உவமானம். அந்தச் சக்தி உலகெல்லாம் நிறைந்தது; அனைத்திற்கும் ஆதாரமானது. ஸரஸ்வதி, லக்ஷ்மி, காளி, மஹேச்வரி என்று சக்தி நாலு வகையாக விளங்கி அறிவு, அழகு, ஆற்றல், ஞானம் இந்த நான்கு வரங்களையும் தருகிறாள். நம் கவி பிள்ளைப் பிராயத்திலேயே ஸரஸ்வதியிடம் தமது வெள்ளை மனத்தைப் பறி கொடுத்தார். ஒளிவு மறைவில்லை; வெள்ளையாகவே காதலிக்கிறார். அது ஒரு பெரிய கதை.

பிள்ளைக் கவி ஆடி வருகிறான்; வீதி முனையில் ஏடு பிடித்து வருகிறாள் கலைமகள்; சந்தித்ததும்,

ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்; இன்று
கூடி மகிழ்வ மென்றால் விழிக்
கோணத்திலே நகை காட்டிச் செல்வாளம்மா

இவ்வாறு 11-வயசு மட்டும் வெண்மகள் காதல். பிறகு குடும்பக் கவலை வருகிறது; லக்ஷ்மியைக் காதலிக்கிறார். வருகிறாள் சுந்தரி. அவள் அழகிற்குச் சித்தத்தைத் திறை கொடுக்கிறார்! அங்கும், “நெஞ்சம் ஆரத்தழுவிட வேண்டுகின்றேனம்மா” தான்! “மலரின் மேவு திருவே, உன்மேல் மையல் பொங்கி நின்றேன், உன் இன்பம் வேண்டுகின்றேன் !”

லக்ஷ்மி தேவி மட்டும் கவியை ஏமாற்றிவிட்டாள். பிறகு மகாகாளி வருகிறாள்.

அன்னை வடிவமடா இவள்
ஆதி பராசக்தி தேவியடா இவள்
இன்னருள் வேண்டுமடா பின்னர்
யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா!”

என்று கொண்டாடித் தோத்திரம் பாடித் தொழுகிறார். பரமஹம்ஸர் மந்திரம் ‘ஓம் காளி, மா!’ பாரதியார் மந்திரம் ‘ஓம் சக்தி!’ காளிப்பாட்டில்தான் பாரதியாரின் சக்திக் காதல் கனலேறுகிறது.

இன்ப மாகி விட்டாய் காளி
என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால் காளி
பிறிது நானுமுண்டோ!”

சக்திக் காதலின் உச்சநிலை இது! பரமஹம்ஸரை ஆவேசப்படுத்திய ராமப்ரசாதின் சக்திப் பாடல்களைப் போல பாரதியாரின் சக்திப் பாடல் நம்மைப் பரவசப் படுத்துகிறது!

தஞ்சமென் றேயுரைப் பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!”

14. கண்ணன் காதல்

பாரதியார் மிக உயர்ந்த வேதாந்தி ; ஸ்ரீராமதீர்த்த பரமஹம்ஸரைப்போலவே,

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி ; தத்வமஸி நீயே யஃதாம்!”

என்று அறிந்துணர்ந்த அநுபவச் சுடரினின்று தெறித்த அன்புப் பொறிகளே பாரதியாரின் வேதாந்தப் பாட்டுக்கள். நம்மாழ்வார், ஆண்டாள், ஸூர்தாஸ், ரவிதாஸ், ராமப்ரசாத், சண்டிதாஸ் முதலிய பக்தர்கள் போன்று நம் கவியும் கடவுளைப் பல பாவனைகளில் அன்பு செய்கிறார். எனினும் அவர்களிடம் காணாத சுதந்தரத்துடன் கடவுளுறவு பேணுகிறார்.

தோத்திரங்களில்லை உளக் தொட்டு நின்றாற் போதுமடா

என்றபடி கடவுளைத் தம் ஆன்மக்காதலி போலும் ஆருயிர் நண்பன் போலும் உரிமை கொண்டு கட்டிப்பிடித்துத் தொட்டு நிற்கிறார். குயிற் பாட்டில் இசைத்த கரடு முரடான காதல், கண்ணன் பாட்டில் கரடு முரடற்ற கடவுளின்பக் காதலாக வளருகிறது. கண்ணன் பாட்டுத் தான் பாரதியார் பாடல்களின் சிரோன்மணி ; மாயையின் தளைகளை உதறி எறிந்து, கவலைகளை வெட்டி எறிந்து கண்ணனிடம் மனம் பதிந்து திரிந்த பரமபக்தரே பாரதியார்.

நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வேனே
மாயையே! சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை மாயையே!”

என்று மாயையைத் துரத்தியடிக்கிறார். இந்த உவமையைக் கம்பனின் அங்கதன் இராவணன் முன் வழங்குகிறான்:

நீ தரக் கொள்வன் யானே !
இதற்கினி நிகர்வே றெண்ணின்
நாய்தரக் கொள்ளுஞ் சீயம்
நல்லர சென்று நக்கான்.”

கண்ணன் – காளி – எல்லாம் தெய்வ சக்தியே. எவ்வாறு குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனன் “மாம் த்வாம் ப்ரபன்னம் ” என்று கண்ணனைச் சரண் புகுந்தானோ அவ்வாறே வறுமையும் கவலையும் கட்டும் காவலுமாகிய துரியோதனக் கும்பல்கள் சூழும் இந்த ஜீவக்ஷேத்திரத்தில் யாக்கைத் தேரை ஓட்டும் அந்தராத்மாவான கண்ணனையே பாரதியார் சரண் புகுந்தார் ! 1909-க்குப் பிறகு பாரதியாரைப் பரம ஞானி பக்தராகவே கொண்டாடத் தகும்.

ஆண்டானடிமைத் திறத்தை பாரதியார் மனமுருகிப் பாடுகிறார். பாரதியாண்டையின் பாரளாவிய கடவுளன்பைப் பாருங்கள்!

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறிப்
பஞ்சைப் பறைய னடிமை புகுந்தனன்
பார முனக்காண்டே!

என்று சரண்புகுந்து, தம் குறைகளை யெல்லாம் முறையிடுகிறார்.

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!”

அது மட்டுமா?

அண்டை அயலுக்கென் னாலுபகாரங்கள்
ஆகிட வேண்டு மையே உபகாரங்கள்
ஆகிடவேண்டுமையே !
மரனத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி
வாங்கித் தர வேண்டும்.”

தமக்கு மட்டுமா? இல்லை. தமக்கு நாலு முழம் போதும். ஆனால்,

தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவங் கடனாண்டே சிலவேட்டி
தாவுங் கடனாண்டே!

பாரதியார் உடல் பிரிந்ததைக் கேட்ட அன்று இந்த ஆண்டைப் பாட்டைப் படித்துப் படித்து நாள் முழுதும் விம்மி விம்மி அழுதேன்! இன்னும் கண்ணீரில் தோய்த்தே இதை எழுதுகிறேன்! என்ன தாராளமான உள்ளம்! என்ன ஸர்வாத்ம ப்ரேமை! தன்னலமென்பது சிறிதும் உண்டா! உலகமெல்லாம் தமது குடும்பம் என்று காத லித்த அந்த அன்பை என்னென்று உரைப்பது?

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
ஒருசில பேய்கள் வந்தே,
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டு மையே!
சேரி முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடு வேன்!”

பாடத் தொடங்குகிறார். சேவகன் வருகிறான்.

ஏனடா நீ நேற்றை யிங்குவா வில்லையென்றால்
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்

என்று சாக்குப் போக்கின்றி,

காதல் பெரிதெனக்குக் காசு பெரித்தில்லை

என்று வருகிறான் கண்ணன் – சேவகன் ! அதன் பின் அரசன் – கண்ணன் வருகிறான். வாக்கு அத்தனையும்

தீர்க்கதரிசனம்; பின்னால் அப்படியே நிறைவேறும்; பார்க்கப் போகிறோம், பார்க்கப் போகிறோம்.

“வான நீர்க்கு வருந்தும் பயிரென மாந்தர்
மற்றிவன் போர்க்குத் தவிக்கவும்,
தான கீர்த்தனை தாளங்கள் கூத்துகள்

தனிமை வேய்ங்குழ லென்றிவை போற்றுவான்!
நாமவன் வலி நம்பி யிருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்.
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான்;
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்.
காலம் வந்துகை கூடுமப் போதினில்,
கணத்திலே புதி தாக விளங்குவான்!
ஆல கால விடத்தினைப் போலவே

அகில முற்று மசைந்திடச் சீறுவான்!
வேரும் வேரடி மண்ணுமில் லாமலே
வெந்து
போகப் பகைமை பொசுக்குவான்.
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட
துன்பங் கணத்திடை மாற்றுவான்.
சக்க ரத்தை எடுப்ப தொருகணம்!
தருமம் பாரில் தழைத்தல் மறுக்கணம்

இக்கணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?
இதற்குள்ளே பகை மாய்த்திட வல்லன் காண்!”

நம்புங்கள்! நம்புங்கள்! கண்ணன் அவதரித்துள் ளான் ! விடுதலை தருவான்!

சீடக் கண்ணன் வேடிக்கை காட்டுகிறான். குருக் கண்ணன் உள்ளே கடவுளை வைத்து உலகில் வாழும் கர்ம யோகோபதேசம் செய்கிறான். நேசக் கண்ணன் சுடர்ப் பூச்சிகள் போன்று நம் தீமைகளை நசுக்குகிறான்.

“உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித்திடுவான்;
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு

காறி உமிழ்ந்திடுவான்!
உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசக்கிடுவான்
அருள் வண்மையி
னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாயரைப்பான்.”

தாய்க் கண்ணன் இயற்கையுலகிலுள்ள பொருட் குவையெல்லாம் தந்து முலைப்பாலூட்டி மடியில் வைத்து நமது கவிக் குழந்தையை வளர்க்கிறாள். தந்தைக் கண்ணன் வேண்டியது தந்து அர்ஜுனன் போலாக்கு கிறான். தந்தைக் கண்ணன் பகுதி முழுவதும் மற்றோர் உண்மை சித்திரம்.

என்புடை பட்ட பொழுதும் நெஞ்சில் எக்கமறப் பொறுப்பவர் தம்மையுகப்பான் இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பமிகத் தருவதி லின்ப முறுவான்.”

தவழ்ந்து வருகிறான் குழந்தைக் கண்ணன்!

“பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே!
அள்ளி யணைந்திடவே
என் முன்னே ஆடி வருந்தேனே!
கன்னத்தில் முத்த மிட்டால்
உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ !
உன்னைத் தழுவிடிலோ
கண்ணம்மா உன்மத்த மாகுதடீ!
உன்கண்ணில் நீர்வழிந்தால்
என்னெஞ்சில் உதிரங் கொண்டுதடீ!
என்கண்ணிற் பாவையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ! “

என்ன வாத்ஸல்யம்! என்ன வாத்ஸல்யம்! நமது ஜீவாத்மாவும் இப் பாட்டுவெறி கொண்டு பரமாத்மக் கண்ணனைத் தழுவுகிறது! அதன் பின் “தீராத விளை யாட்டுப் பிள்ளை கண்ணன் வந்து லீலானந்தம்” அளிக்கிறான்.

தின்னப் பழங் கொண்டு தருவான் பாதி
தின்கின்ற போதிலே தட்டிப்பறிப்பான்
பின்னலைப் பின்னின் றிழுப்பான் தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்
அங்கரந் திருக்கும்வாய் தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்! “

என்ன ரஞ்சிதமான வர்ணனை! இந்த வேடிக்கை எல்லாம் நம் கவிக்கு வெகு பிரியம்! முடிவில் அபர பக்தியின் சிகரமான மதுரபாவனை வருகிறது ! கவி கற்பனையும் இன்பச் சிகரத்திற்கு ஏறுகிறது!

இந்தப் பாவனையில் ஆணுருக்கொண்ட ஆண்டாளாக விளங்குகிறார் நம் கவி. ஆண்டாள் காதலால் கூவிக் கூவி இறுதியில் ஒரேயடியாகக் காதற்கண்ணனுள் ஐக்கியமாகி மறைந்து போகிறாள். நம் கவியாண்டாள் கண்ணனுடன் கூடி ஆயிரம் வகையான ரஸாநுபவங்களைப் பெறுகிறாள். கண்ணக் காதலனை அணைய நம் கவிக் காதலி ஒரு தமிழ் மறக்குல மாதாக மாறுகிறாள்:

சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவதெல்லாம்
வீர மறக்குலத்து மாத ரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ!
நேர முழுதுமந்தப் பாவிதனையே உள்ளம்
நினைந்து மறுகுதடீ தங்கமேதங்கம்!

சரி ; தோழியைத் தூது விடுகிறாள்; வருகிறான். சும்மாவா? கனிகள், சந்தனம், அத்தர், பூ, தைலம், மை – எல்லாம் கொண்டுவருகிறான்; பொட்டிடு கிறான் ; மார்பெழுதுகிறான்; பணமும் தந்து மையல் செய்கிறான்.

மங்கள மாகுதடீ பின்னோர் வருத்த மில்லையடீ ! “

நாயகனுடன் குலாவியாயிற்று.

பிறகு காதலனும் காதலியுமாகி மாறி மாறி ஆண் பெண் இரண்டின்பமும் அநுபவிக்கிறார். இது ஒரு புத்தப் புதுமையான மதுபாவனை. சைதன்யர் பரம ஹம்ஸாதிகள் தம்மை ராதையாகவே பாவித்து நாயகியாகவே காதல் செய்தனர். பாரதியார் கண்ணனைத் தம் சொந்தக் காதலி யாகவே எண்ணி,

ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நின
தின்பம் வேண்டுமடி கனியே நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல
மொந்தைப் பழைய கள்ளைப் போலே !”

என்று துடுக்காகக் கேட்கிறார்.

காத்திருப்பேனோடி இதோ பார்
கன்னத்து முத்த மொன்று!”

என்று தமது காதல் முத்திரையைக் கண்ணன் கன்னத்தில் பதியவைத்துவிடுகிறார் ! காதலி நாணி முகத்தை மூடுகிறாள்.

தில்லித் துருக்கர்செய்த பழக்கமடீ பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்துவைத்தல் ;
சொல்லித் தெரிவதல்லை மன்மதக்கலை முகச்
சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ!

என்று முகமூடியைத் திறக்கிறார். இதில் ஆழ்ந்த அத்யாத்மப் பொருள் உள்ளது. ஜீவாத்மாவினின்று பரமாத் மாவைப் பிரித்து நிற்கும் மாயையான முகமூடியை விலக்குதலையே இது குறிக்கும். வெகு உரிமையுடன் கண்ணக் காதலியின் ஊடலைத் தீர்த்துக் கூடுகிறார் பாருங்கள்.

கன்னி வயதிலுன்னைக் கண்ட தில்லையோ கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே துகில் பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வானோ?”

பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால்தம்முட்
பன்னி யுபசரணை பேசுவதுண்டோ ?”

இவ்வாறு நாயக நாயகி பாவத்தின் மர்ம ஸ்தானத்தைத் தொட்டுக் கண்ணனைக் கூடிப் புல்லுகிறார். அந்த ஜீவாத்ம பரமாத்ம ஐக்யத்தை வர்ணிக்கும் பாட்டுத்தான் என்ன இன்பம்! மற்றதையெல்லாம் காலம் அழித்தாலும், இது ஒன்றே நம் கவியின் பெருமையைச் சொல்லும் !

வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுனக்கு
மாணுடைய பேரரசே, வாழ்வுநிலையே கண்ணம்மா! வானமழை நீயெனக்கு ; வண்ணமயில் நானுனக்கு
ஊனமறு நல்லழகே, ஊறுசுவையே கண்ணம்மா ! வெண்ணிலவு நீயெனக்கு ; மேவுகடல் நானுனக்கு ! பண்ணுசுதி நீயெனக்கு ; பாட்டினிமை நானுனக்கு!
காதலடி நீயெனக்கு: காந்தமடி நானுனக்கு
நாதவடிவானவளே, நல்லவுயிரே கண்ணம்மா!

15. ஆன்மக் காதல்

இவ்வாறு எல்லா இன்பங்களையும் கண்ணனிடம் அநுபவித்து உயிரிற் கலந்து பக்தியோகத்தின் உச்சநிலையை எட்டிய நம் கடவுட் கவி இனி வேதாந்த விண்ணில் தாவுகிறார். அபரபக்தியின் உச்சியில் பரபக்தி தோன்றுகிறது; ஆன்மக் காதல் மலர்ந்து கனிகிறது. நிற்பது, நடப்பது, பறப்பதெல்லாம் தன்மயமாகக் காண்கிறார். பெளத்தம், சமணம், பார்ஸி, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்,தாவு மதம், கண்பூசி மதம் எல்லா மதங்களும் ஒன்றெனக் காண்கிறார். பாரதி அறுபத்தாறு முழுதும் வேதாந்த லஹரி,

பூமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம்
பொருளினைநா மிங்கெடுத்துப் புகலக் கேளாய்:-
சாமி சாமி நீ ; கடவுள் நீயே;
தத்வமஸி ; தத்வமஸி நீயே யஃதாம்.
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமி நீ ; அம்மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் சிவோஹ மென்று சாதிப்பாயே.

இந்த உச்சநிலையை எட்டியபின் முடிவாக உலகிற்கு உபதேசிக்கிறார், ஆத்ம ஞானத்தை:

என்ன வங்கள், பெருமைகள், வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ,
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சாத்தியமாகுமென்றே,
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் முற்று முணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ!

இவ்வாறு தம்மை வென்று ஆத்மஜயம் அடைந்த பின்,

இங்கே தேவர் சங்கம் கூடும்
மங்கும் தீமை பொங்கும் நலமே

இவ்வாறு தெய்வசித்தியினால் மாந்தரை அமரராக்கி உலகில் தெய்வ சங்கம் ஸ்தாபிக்கும் உன்னதமான அத் யாத்ம லக்ஷ்யத்தைக் காட்டுகிறார் அமர கவி.

16. தமிழர் கடமை

பாட்டுத் திறனாலே இவ்வையத்தைப்
பாலித் திடவேண்டும்.”

ஆம், தமது பாட்டுத் திறத்தால் நம் வரகவி செய்த அற்புதங்களைப் பாருங்கள்! இவ்வாறு நாடு, வீடு, ஆண், பெண், குழந்தை, கல்வி, கேள்வி, அறிவு, தொழில், ஒற்றுமை, விடுதலை, அன்பு, சக்தி, தெய்வபக்தி, ப்ரம்மஞானம் முதலிய எல்லாவற்றிற்கும் தெளிவாக, இனிதாக, ஆவேசக் காதலுடன் வழி காட்டிச் சென்ற இக் கவிக் குயிலை என்னென்று அழைப்பது? செத்துக் கிடந்த தமிழருக்குப் புத்துயிரளித்த இந்த வாக்சஞ்சீவியை என்னென்று அழைப்பது? தமிழ் நாட்டில் வீரக்கனலெழுப்பிய இந்த வெற்றி வீரக் கவியை என்னென்று அழைப்பது?

நமது நரம்பில் சக்தி ஏற்றிய இந்தச் சக்திப் பித்தனை என்னென்று அழைப்பது? பழம் பொய்களை வெட்டி வீழ்த்திப் புதிய தமிழ் நாட்டை ஆக்கிய இந்த கவி ப்ரம்மத்தை என்னென்று அழைப்பது? காவியம், கலை, கல்வி, நாட்டன்பு அனைத்திலும் புத்தொளி பாய்ச்சிய இந்தக் கவிக் கதிரவனை என்னென்று அழைப்பது? கலியுகம் அழிந்து கிருதயுகம் பூக்கத் தமது வாக்கினால் தவம் செய்த இந்தக் கவி யோகியை என்னென்று அழைப்பது?

வீரக் கனலொளியே; வெற்றித் திருமொழியே,
பாரிற் கமுதருளும் பாலூற்றே, –ஆரமாய்க் கன்னித்
தமிழணிந்த கற்பகப்பூ மாலை கவி
மன்னன் புலவர் மணி!

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் பாரதியின் பாடலைப் பாடி வழிபடுக; உலகெங்கும், பல மொழி களிலும் பரப்புங்கள்! எங்கள் பாரதியார் பிறந்த தமிழ் நாடு என்று செருக்குறுங்கள்! என் அருமைத் தமிழர்களே, நமது பாசமே பற்றி, நமது நலமே வேண்டி, சக்தியை வழுத்திப் பித்தமான நம் வரகவிக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நமது தமிழ் நாட்டில் அடக்கமும், காரியத் திறனும் நிறைந்த ஓர் அரிய நண்பர் உள்ளார் – ஹரிஹர சர்மா.

தமிழரிடையே ராஷ்ட்ர பாஷையான ஹிந்தியைப் பரப்பிய பெருமை பெற்றவர்; பாரதியார் நூல்களை வெளியிட்டுத் தமிழரிடையே பரப்பிய பெருமையும் அவரைச் சேர்ந்தது. அவருக்குப் பல வகையிலும் துணை புரிந்து, பாரதி நூல்களைத் தேடிப்பிடித்து அச்சேற்றச் செய்பவர் பாரதியாருடன் பிறக்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீமான் ஸி. விசுவநாதன் அவர்கள். இவர்களுடன் கூடி இன்னும் பல அன்பர்கள் சேர்ந்து பாரதி நூல்களை வெற்றிபெற வெளியிட்டுள்ளனர்.

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் பாரதியார் பிரபந்தங்களை வாங்கிப் படிக்கவேண்டும். சீக்கியர் கிரந்த சாஹெபை மதிப்பது போலும், கிறிஸ்தவ சகோதரர் பைபிளை மதிப்பது போலவும்,வங்காளிகள் தாகூர் நூல்களை மதிப்பது போலும், ஆங்கிலேயர் ஷேக்ஸ்பியரை மதிப்பது போலும், வட இந்தியர் துளஸிதாஸை ஓதுவது போலும், நம் கவிக்கதிரான பாரதியாரை மதித்துப் போற்றுங்கள்! பெண்மணிகாள், உங்கள் விடுதலைக்காகப் பாடு பட்டார் வரகவி ! என்ன கைம்மாறு செய்யப் போகிறீர்கள்? நாள்தோறும் வீட்டில் பாரதி பாடல்களைக் காலை மாலை பாடுங்கள் ! நாட்டுச் சீதேவிகாள், அந்தியில் விளக்கேற்றியதும் பாரதியாரின் பக்திப் பாடல்களை யாழுடன் பாடுங்கள்; வீட்டிற்கு மங்களமுண்டாகும்! தாய்மார்காள், உங்கள் குழந்தைகளுக்குப் பாரதி பாடலைச் சொல்லித் தருவதே முதற் படிப்பாகக் கொள்ளுங்கள்! மணப் பெண்களுக்குப் பாரதி பாடலை ஸ்ரீதனமாகக் கொடுங்கள். நாளுங்கிழமை எது வந்தாலும் பாரதி பாடலைப் பாடுங்கள், ஆடுங்கள், மனங்குளிருங்கள்! இளந் தமிழ்நாட்டீர், பாரதியைச் சாமானியமான தேசீய கவி அல்லது ஏதோ ஒரு கவி என்று மதிக்காதீர்கள். “புதுத் தமிழ்நாட்டுத் தீர்க்கதரிசி” என்று போற்றுங்கள்!தோலை அல்ல, ஆளை அல்ல, அந்த மஹா சக்திக் கனலை, நாதவடிவான அந்த வாக் சக்தியை பாரதி பாடல்களுக்குத் திருநாள் நடத்துங்கள்!

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்துவிட்ட பயிரும் இந்த
வைய முழுதுமில்லை, தோழீ

பாரதியை மறந்து தமிழ்நாடு இருக்க முடியுமா? முடியுமா? பாரதி பிறந்த எட்டையபுர வீட்டை அழகிய பாரதி விலாசமாக்கி, அங்கே பாரதி பாடல்களைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். பாரதியாருக்குச் சென்னையில் நிலையான மாளிகை கட்டி, அங்கே காலைமாலை பாரதி பாடல்களை ஓதச்செய்யுங்கள். இப்போதும் இனியும் நமது தமிழ் நாட்டில் விளங்கும் நல்ல கவிகளைக் கேட்டு ஆதரிக்க அங்கே வழி செய்யவேண்டும். பாரதியின் பெயரால் தமிழரெல்லாம் ஒன்று கூடி, வர்ணப் படங்களுடன் “பாரதிச் சுடர்” என்ற ஒரு பத்திரிகை தோற்றுவிக்க வேண்டும். இளந்தமிழும், அன்பும், அறிவும், வீரமும், ஆற்றலும், அருங்கலையும் ஆத்ம ஞானமும் செழிக்க அந்தப் பத்திரிகை தமிழ் நாட்டில் பரவவேண்டும். பாரதியார் குடும்பத்திற்குத் தக்க இடத்தில் ஒரு நல்ல வீடும் நிதியும் கொடுத்து ஆதரிக்கவேண்டும்; அக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் தமிழர் செலவில் கல்வி புகட்டவேண்டும். பாரதியார் பாடல்களை ஹிந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, வடமொழி முதலிய சுதேச மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜர்மனி, இத்தாலி, ஜப்பானியம், சீனம் முதலிய பிறமொழிகளிலும் தக்காரைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். பாரதி விளக்கத்தைப் பல மொழிகளிலும் எழுதி வெளியிட வேண்டும். பாரதி ஜயந்தியைத் தமிழர் ஜாதீய உத்சவமாகக் கொண்டாட வேண்டும். பொங்கல் தீபாவளி போன்று, அன்று வீடுதோறும் மகர தோரணம் கட்டி, மங்கலமாக இருக்கவேண்டும். அன்று பாரதி நூல்களைப் படிக்க வேண்டும்; கல்யாணம் கார்த்திகைகளில் பணக்காரர் பூரிதக்ஷிணைகள் கொடுப்பது போல, பாரதி நூலை வாங்கி, வருவோருக்கு விநியோகம் செய்யவேண் டும். இப்படிப்பட்ட கவிகள் அபூர்வமாகவே உலகிற்கு வருவர். அதிலும் நம் கவிக்குயிலின் அற்புதம் சொல்லி முடியாது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !