
பாரதி விளக்கம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
கவிக்குயில் வாழ்த்து
1
புல்லடி மைப்பட்ட மாந்தர்க்கு – சுய
புத்தி வரச்செய் தெழுப்பினான்.
வெல்வலி யற்றுத் தளர்ந்தவர்க் – கொரு
வீரக் கனலினை மூட்டினான்.
பல்சமயச் சாதி வேற்றுமை – யாலே
பாழ்பட்ட பாரத நாட்டிற்கே
சொல்வலி வாற்சம தர்மத்தைத் – தூண்டிச்
சோகந் தவிர்த்தனன் பாரதி!
2
பண்டிதர் கொண்ட தமிழினை -நாட்டில்
பாமரரும் பெறச் செய்தனன்.
பெண்டி ரடிமையைத் தீர்த்தனன் – வெறும்
பேச்சினிற் காலத்தைப் போக்கிய
வண்டரை எள்ளி நகைத்தனன் – நாட்டை
வன்பணி செய்திட ஊக்கினான்
தொண்டிவன் செய்ததைச் சொல்லவோ – கவி
தோற்றின னிங்குப் புதுயுகம்!
3
தீரன், அறிவிற் சிறந்தவன் – புது
தீர்க்க தரிசி வரகவி ;
வீர சுதந்தர சக்தியே – இவன்
வேடம் புனைந்திங்குப் பாடிற்று !
பாரி லதிசயம் பாரதி – அவன்
பண்களை வேதமென் றோதுவாம்
வாரிதி சூழுல கெங்கிலும் – நீடு
வாழ்க கவிக்குயில் வாழ்கவே!
இந்த எளிய உள்ளன்புக் காணிக்கையை என் அன் பிற்குரிய கவிக்குயிலின் வீராவேச வாணிக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஓம் சக்தி !
முற்றும்.
★ ★ ★



