முக்கனி
கலைஞர் மு. கருணாநிதி

மா

[15-2-84 அன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய பேருரை]

மன்னர் கல்லூரி பேரவையின் முத்தமிழ் விழாவின் நிறைவுநாளை இடையிலே சில நாட்கள் ஒத்தி போட வேண்டிய சூழ்நிலை எனக்கும் உங்களுக்கும் ஏற்பட்டு எவ்வளவு நாளானாலும் கவலையில்லை நான் வந்தே தீர வேண்டும் என்று நீங்கள் காட்டிய பேரார்வத்தின் காரண மாக இன்று மாலை இந்த கல்லூரிப் பேரவையின் முத் தமிழ் விழா நிறைவுநாளைக் கொண்டாடுகிற இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.

இங்கே என்னை அறிமுகம் செய்து உரையாற்றிய பேராசிரியர் கருப்பையா, தன்னை, எனது மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். என்னை அறிமுகப்படுத் தச் சொன்னால் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் தன்னை எனது மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதன் காரணமாக அவர் சற்று உரிமையோடு நான் எழுதிய நூல்களில்-கட்டுரைகளில் உள்ள அச்சுப் பிழைகளை எடுத்துக் காட்டுகின்ற வாய்ப்பினை பெற்று எனக்குக் கடிதம் எழுதியதாகச் சொன்னாரே, அதைப்போல நானும் முதலில் அவர் இங்கே குறிப்பிட்ட பிழை ஒன்றை திருத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன். அவர் உரையாற்றும்போது “அறுபதாண்டுகளை முடிக்க நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட் அறுபதாவது ஆண்டு முடிந்து அறுபத்தியோ ஆண்டிலே நான் அடியெடுத்து வைக்கவிருக்கிறேன் என்பதைத்தான் அப்படிச் சொன்னார். வருகிற ஜூன் திங்கள் 3-ம் நாள் வந்தால்தான் எனக்கு அறுபது முடிந்து அறுபத்திஒன்று தொடங்குகிறது. அவர் என் னுடைய பிறந்த ஆண்டை குறிப்பிடும்போது 1923 என்று குறிப்பிட்டார். அப்படியானால் இப்பொழுதே அறுபது முடிந்து அறுபத்து ஒன்று நடந்து கொண்டிருக்க வேண்டும்.

எனவேதான் திருத்துவதற்காகச் சொல்கிறேன். நான் பிறந்தது 1923-ம் ஆண்டல்ல. 1924-ம் ஆண்டு என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பிறந்த ஆண்டு தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே ஓரு சிக்கல் தீர்க்கப்பட்ட ஆண்டு. காவிரி பிரச்சினையில் சிக்கலை தீர்ப்பதற்காக தமிழக, கர்நாடக மாநில அரசுகள் கலந்து பேசி, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்ட ஆண்டு 1924-ம் ஆண்டு. அந்த ஆண்டிலேதான் அடியேன் பிறந்தேன்.

ஆனால் அன்று தீர்க்கப்பட்ட சிக்கல் 1974க்குப் பிறகு மீண்டும் எழுகின்ற காரணத்தால், அது இன்னமும் தீர்க்கப்படாது இருக்கிறது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அறுபது ஆண்டுகளை முடித்துவிட்டு, விரைவிலே மணிவிழா கொண்டாட இருக்கின்ற என்னை இளம்பருவத்தினரான மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கின்ற இந்த கல்லூரி முத்தமிழ்ப்பேரவை விழாவில் அழைத்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப் பினை வழங்கிய இந்தக் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், மாணவ உடன்பிறப்பு களுக்கும், பேரவைத் தலைவருக்கும் என்னுடைய நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பெரியாருடைய பள்ளியிலே பயின்ற கதையையும், பேரறிஞர் அண்ணா அவர்களது கல்லூரியிலே கற்ற வரலாற்றையும், இன்றைக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மைக்காக என்னால் இயன்ற தொண்டினை ஆற்றி வருகின்ற நிகழ்ச்சிகளையும் பேராசிரியர் கருப்பையா இங்கு எடுத்துக்காட்டினார்.

அவர் என்னைப்பற்றி புகழ்ந்து பேசிய வார்த்தைகளுக்கு நான் கடமைப்பட்டவனாவேன். அவர் புகழ்ந்துரைத்த சொற்கள் அத்தனையும் எனக்குப் பொருத்தமானவை என்று நான் எண்ணினால் என்னை விட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது.

ஒருவரை அழைத்து மாணவர்கள் மத்தியில்-பேச வேண்டும் என்று பணித்து, யாரை நாங்கள் அழைத்திருக்கிறோம் தெரியுமா? என்று மாணவர்களிடத்தில் அறிமுகப் படுத்துகிறபோது நாங்கள் அழைத்து வந்திருப்பது சொத்தை-சோடை என்று அவர்களே சொன்னால் பிறகு ஏன் அழைத்தீர்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். அதனால்தான் இங்கே அறிமுகப் படுத்தப்படுகின்ற சரக்கு நல்ல சரக்கு; மிடுக்கான சரக்கு என்றுரைத்து தாங்கள் செய்த காரியம் சரியானதுதான் என்று நிரூபிப்பதற்காக இவற்றையெல்லாம் சொன்னார் என்று நான் எடுத்துக் கொண்டேனேயல்லாமல், அவர் நம்மைக் கொஞ்சமாகத் தானே புகழ்ந்தார், இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புகழ்ந்திருக்கவேண்டுமே என்று நான் எண்ணினால் அது மிகமிகத் தவறு. நான் அப்பேர்ப்பட்ட பள்ளியில் பயிலவில்லை என்பதை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

இங்கு முத்தமிழ் விழா கொண்டாடிக் கொண்டிருக் கின்றோம். முத்தமிழ் விழா ஏன் கொண்டாடுகிறோம்? ‘முத்தமிழ்’ விழாமல் காப்பாற்றப்பட முத்தமிழ் விழா கொண்டாடுகிறோம். முத்தமிழ் வீழ்ந்திடுமோ என்றநிலை ஏன் அடிக்கடி ஏற்படுகிறது? நாம் எல்லோரும் தமிழர் களாக இருப்பதனால் ஏற்படுகிறது. மன்னிக்க வேண்டும்- நாம் தமிழர்களாக இருப்பதை உணராத காரணத்தால் ஏற்படுகிறது.

நாம் தமிழர்கள்; நம்முடைய மொழி தமிழ்மொழி. நாம் இந்த தமிழ் மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்; இந்த மண்ணின் மைந்தர்கள்; தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்கின்ற உணர்வு நமக்கு அசைக்க முடியாத அளவிற்கு உறுதியாக நெஞ்சத்திலே பதிந்திருக்குமேயானால் தமிழ் விழக்கூடிய சூழ்நிலை ஏற்படுமா? என்ற கேள்விக் குறிக்கே இடமில்லை.

ஆனால் பல ஆண்டுகாலம் பெரியார் ஆற்றிய தொண்டும், பேரறிஞர் அண்ணா ஆற்றிய பணியும் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் போன்றவர்கள், மறைமலையடிகளாரைப் போன்றவர்கள், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களைப் போன்றவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டும் தமிழை விழாமல் காப்பாற்ற நம்மால் இயன்ற பணியினைச் செய்வோம் என்கின்ற உறுதியை நம்மில் பெரும்பாலோர் பெற்றிடச் செய்துள்ளன! ஆனாலும் செயல்படுத்துகிற நேரத்தில்தான் தயக்கங்கள் ஏற்படுகின்றன. அந்தத் தயக்கங்களும் போக்கப்பட வேண்டும் என் பதற்கு இதுபோன்ற முத்தமிழ் விழாக்கள் பயன்படும் என்று நான் நம்புகின்றேன்.

ஒரு மொழியை மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் இலக்கணம் வகுத்து வாழ்வு மொழி இரண்டையும் இணைத்து ஒரு சமுதாயம் உலகக்திலே முளைத்தது; பூத்தது; காய்த்தது; தழைத்தது என்று சொன்னால் நான் இறுமாப்போடு சொல்லுவேன்-அது தமிழ்ச் சமுதாயம் ஒன்றுதான்.

நமது தமிழ்மொழியைத்தான் நாம் முத்தமிழாகப் பிரித்துள்ளோம்; இயல் என்றும், இசை என்றும், கூத்து என்றும் மூன்று வகையாகப் பிரித்து பயன்படுத்துகிறோம். வேறு மொழிகளிலே இயல் இல்லையா? இசை இல்லையா? கூத்து இல்லையா? இருக்கின்றன. ஆனால் அதற்குரிய இலக்கணம் உண்டா என்றால் இல்லை. நாம்தான் அதற்குரிய இலக்கணத்தை வகுத்திருக்கிறோம்.

இயல் இசை கூத்து என்கின்ற முத்தமிழ்; மனிதவர்க் கத்தின் துவக்க காலத்தில் உலகத்திலே மனிதன் பிறந்து அப்படி பிறந்த மனிதனும் தமிழகம் என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பகுதியிலே தான் பிறந்தான் என்று உலக நிலநூல் வரலாறு எடுத்து காட்டுகின்ற அளவுக்கு இந்தப் பகுதியிலே பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக நாக ரிகத்தைக் கற்று அதில் முன்னேறி முன்னேறி இன்றைக்கு விஞ்ஞான ரீதியான பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறான் என்றால் ஆதிமனிதன் கருத்துக்களை மொழியால் வெளி யிட முடியாமல் வார்த்தைகளால் எடுத்து இயம்ப முடியாமல் அபிநயங்களால்-பாவங்களால் தான் தன்னுடைய எண்ணங்களை வெளியிட வேண்டியிருந்தது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் காணுகிற நேரத் தில் தனது எண்ண வெளிப்பாடுகளை அவனுக்கு சுட்டிக் காட்டுகிற நேரத்தில் பேச அவன் கல்லாத காரணத்தால் – நாகரிகம் தோன்றாத அந்தக்காலத்தில் சைகைகள் மூலமாக, ஜாடைகள் மூலமாக கைகளை அசைத்து அபிநயம் காட்டுவது மூலமாக, கண்களை உருட்டி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமாக உணர்வு களைபரிமாறிக் கொண்டனர். எண்ணங்களை பரிமாறிக் கொள்ள பாவங்கள், அபிநயங்கள்தான் பயன்பட்டன.

தன்னுடைய எண்ணங்களை சைகைகளைக் கொண்டு அவன் காட்டியதும் அதை எதிரே இருப்பவர்கள் புரிந்து கொண்டு தாங்களும் அதே கையசைவால் அதற்கான விடையைப் பகர்வதுமான ஒரு காலகட்டம் இருந்தது. அப்படி அபிநயங்கள் செய்வதுதான் கூத்து. எனவே இந்த முத்தமிழில் முதலில் தோன்றியது கூத்துதான்.

அதற்குப்பிறகு இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது இசை. அபிநயங்கள் மூலமாக பாவங்கள் மூலமாக கருத்துக்களை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொண்டிருந்த மனிதன் அதற்குப் பிறகு ஓசைகள் எழுப்புவதன் மூலமாக ‘ஏ’ என்றும் ‘ஓ’என்றும் ‘வா’ என்றும் ‘ஆ’என்றும் இப்படி ஓசைகளை இழுத்து இழுத்து ஒலித்த காரணத்தால் அது இசையாக உருப்பெற்றது.

கைகளால் அபிநயங்காட்டி கண்களால் பாவ உணர்வுகளை வெளிப்படுத்தி கூத்தாக இருந்த மொழி அதற்குப் பிறகு மனிதன் எழுப்பிய ஒலிக்குறிப்புகளால் இசையாக மாறிற்று. அதற்குப் பிறகு மூன்றாவது கட்டம் தான் நாம் படிக்கிற, எழுதுகிற உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிற சொற்களடங்கிய இயல். ஆனால் இந்த இயல் மிக்க திறமையுடையது. முதலிலே முகிழ்த்த கூத்தையும் இரண்டாவதாக வந்த இசையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இது முதலிலே வந்து அமர்ந்து கொண்டது.

எப்போதுமே சில நேரங்களில் யாராவது ஏமாந்து விட்டால் ஏமாந்தவர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னர் வந்து அமர்ந்து கொள்வது உண்டல்லவா அது போல, இந்த இயல் முதலில் வந்து அமர்ந்து கொண்டது. இசை மிகுந்த கெட்டிக்காரத் தனமுடையது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு கெட்டிக்காரத்தன முடையது என்ற கராணத்தால் முதல் இடத்திற்கும் செல்லாமல், கடைசியாகவும் செல்லாமல் இரண்டாவது இடத்திலேயே இருந்து கொண்டது. அது இசையின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அரசியலில் கூட பல பேரைப் பார்க்கிறோம். இரண்டாவது இடத்தை விடாமலே பிடித்துக்கொண்டிருப்பார் கள். (பலத்த சிரிப்பு; கை தட்டல்) நீண்ட சிந்தனைக்கு பின்னர் தான் புரிகிறது உங்களுக்கு!

இப்படி இயல், இசை, கூத்து என்று மொழியை மூன்றாகப் பிரித்து இலக்கணம் வகுத்து வாழ்ந்து காட்டியவன்- வாழ்ந்து கொண்டிருப்பவன் தமிழன். அந்த மொழியைக் கூட அவன் இனம் பிரித்தான். தன் இனத்தையே உணராமல் இருந்தாலும் கூட மொழிக்கு இனம் தேவை என்று உணர்ந்தான்.

‘கசடதபற’-இந்த எழுத்துக் கோவையை வல்லினம் என்றான். ‘ஙஞணநமன’ என்ற எழுத்துக் கோவையை மெல்லினம் என்றான். ‘யரலவழள’ என்ற எழுத்துக்களின் கோவையை இடையினம் என்றான். அதிலும் ஓர் அற்புதம் என்னவென்றால் இந்த மூன்று இனத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தை எடுத்து தன் னுடைய மொழிக்குப் பெயரே கொடுத்தான்.

‘கசடதபற’ இதிலுள்ள எழுத்துக்களில் ஒன்றான ‘த’ வை முதல் எழுத்தாக எடுத்துக் கொண்டான்.

‘ஙஞணநமன’ இதில் உள்ள ‘ம’வை எடுத்து (மி) என ஆக்கி இரண்டாவது எழுத்தாக்கினான். ‘யரலவழள ‘ – இதில் உள்ள ‘ழ’வை எடுத்து ‘ழ்’ எனப் போட்டு மூன்றாவது எழுத்தாக்கி ‘தமிழ்’ எனப் பெயரிட்டான்.

மூன்று என்பது எப்படியோ தமிழருடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாக ஆகிவிட்டது. “முத்தமிழ், முக்கடல், முக்கொடி, மும்முரசு, மூவேந்தர்” நமது தமிழ்ச்சமுதாயத்தை விழிப்படையச் செய்த நமது தலைவர் ‘அண்ணா’ மூன்றெழுத்து, அந்த அண்ணன் தந்த தாரகமந்திரம் மூன்று-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. இப்படி இயற்கையாகவே இந்த மூன்று என்பது நம்முடன் ஒன்றாக இணைந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற நிலையில் முத்தமிழ் விழாவில் நான் பேசுவது எனக்கு கிடைத்த பெரும்பேறாகும்.

என்னைப்பற்றி அறிமுகம் செய்த போது 1938ஆம் ஆண்டை நம்முடைய பேராசிரியர் கருப்பையா அவர்கள் நினைவு கூர்ந்தார்கள். அதன் தொடர்பாக அண்மையில் ஒரு கேள்வித் தாள் குறித்து அவர்கள் இங்கே சுட்டிக் காட்டிய போது இந்தி எதிர்ப்பு காலக் கட்டத்தை அந்தக் கேள்வியிலே எடுத்துக் காட்டப்பட்டிருந்ததாக. வும், அதற்கு விடை எழுதிய மாணவர்கள் உண்மையான நிகழ்ச்சிகளை அதிலே எழுதியிருந்ததாகவும் அவர்கள் இங்கே கோடிட்டுக் காட்டினார்கள்.

1938ஆம் ஆண்டு பதினான்காவது வயதில் அடி யெடுத்து வைத்த பருவம் எனக்கு. அவர்கள் இங்கே சொன்னதைப் போல புலி, வில், கயல் என்ற மூன்று சின்னங்களையும் ஒருசேர பொறித்து அதன் மத்தியிலே தாமரை மலரைப் பொறித்து தமிழ்க் கொடி என்ற நிலை யிலே அதைக் கையிலே ஏந்தி தமிழகத்திலே பல்வேறு வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் தமிழ் வாழ்க, இந்தி ஆதிக்கம் வீழ்க என்கிற குரல் ஒலித்துக் கொண் டிருந்த காலம் அந்தக் காலம். அந்தக் குரல் திருவாரூர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவனாகிய என்னையும் இழுத்தது. இந்தி எதிர்ப்பு ஊர்வலத்திலே கலந்து கொள்கிற இளைஞர்கள் பட்டாளத்தில் இணைத்தது.

அதன் பிறகு தான் முதன்முதலாக திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற மன்றம் கண்டது. அப்போது தான் புரட்சிக்கவிஞர் அவர்களுக்கு ஒருமடல் தீட்டினேன். எங்கள் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்திற்கு ஆண்டு விழா; அதற்கு வாழ்த்து ஒன்று வழங்குக என்று அந்த மடல் வாயிலாக கேட்டிருந்தேன். இதைக் குறிப்பிடக் காரணம் மாணவர்கள் எந்த அளவிற்கு தமிழ் உணர்வும் இன உணர்வும் பெற்றுத் திகழ வேண்டுமென் பதற்கு அடையாளமாக என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை உங்களுக்குச் சுட்டிக் காட்டத்தான். ஆனால் என்னுடைய வாழ்க்கை முழுவதையுமே நீங்கள் உங்க ளுக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம் அண்ணாவின் பேச்சைக் கேட்காமல் நான் என்னுடைய படிப்பை ஒழுங்காக முடிக்காதவன்.

உயர்நிலைப் பள்ளி படிப்போடு என்னுடைய கல்வியை முடித்துக் கொண்டவன். “ஓகோ, படிப்பை இப்படி கெடுத்துக் கொண்டால் நாமும் கலைஞர் ஆகலாம் போல் இருக்கிறது” என்று யாரும் கருதி விடக் கூடாது. இது விதிவிலக்கு; விதி விலக்குகள் எல்லாம் வாழ்க்கையில் வழிகாட்டிகளாக ஆகிவிட மாட்டா. அதனால் தான் அதற்கு விதி விலக்கு என்று பெயர். எனவே விதி விலக்கை வழிகாட்டியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. ஆனால் இளம் பருவத்தில் நான் பெற்றிருந்த உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறேன்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நான் வேகமாக ஈடு பட்டு அன்றைக்கு தமிழ்நாடு இந்த அளவு பரப்பளவு கொண்டது அல்ல. கேரளத்தில் சில பகுதிகளையும், ஆந்திரத்தில் பெரும்பகுதியையும், கர்நாடகத்தில் கணிச மான பகுதியையும் உள்ளடக்கிக் கொண்டிருந்தசென்னை ராஜதானி. சென்னை ராஜதானி என்ற காரணத்தால் அன்றைக்கு முதலமைச்சர் கிடையாது. பிரிமியர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வேறு வார்த்தைக் கிடைக்காததால் பிரதமர் என்று அதற்கு பொருள் கூறிக் கொண்டிருந்தார்கள்.. அன்றைக்கு அந்தப் பதவியில் இருந்தவர் மூதறிஞர் என்று நம்மால் அழைக்கப்பட்ட- இன்றைக்கும் அழைக்கப்படுகின்ற சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார். அவர்தான் கட்டாய இந்தியை தமிழ் நாட்டுப் பள்ளிகூடங்களில் அன்றைக்குத் திணித்தார். சரித்திரத்தின் மாற்றங்களை நீங்கள் உணரவேண்டும்.

தமிழ்நாட்டுப் பள்ளிக் 38ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில் தமிழ் மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டு மென்று சட்டம் கொண்டு வந்த ராஜாஜி அவர்கள் 1963- 64 ஆண்டில் தலைகீழாக மாறி இந்தியை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டேன் என்ற போராட்டத்தின் தள நாயகனாக மாறினார் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

ஆனால் அன்றைக்கு 38-39ஆம் ஆண்டுகளில் கட்டாய இந்தியைப் பள்ளி மாணவர்களுடைய நெஞ்சத்திலே சுமத்த முனைப்பாக ஈடுபட்டார். அப்போது தான் தமிழகமே ஆர்த்தெழுந்தது. காங்கிரஸ் தேசிய பேரியக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்ட பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களைப் போன்ற வர்கள் எல்லாம் கூட அந்தத் தேசிய இயக்கத் தை உதறி எறிந்து விட்டு தமிழ் மொழி, பின்னர் தான் தேசியம்; என்னுடைய மொழிதான் முதலில்; அதை நான் காப்பாற்றித் தீரவேண்டுமென்று இந்தி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்றைக்கு சிறைச்சாலைகளை நிரப்பினார்கள். சென்னை சிறைச்சாலையில் தாள முத்து, நடராசன் என்ற இரண்டு வீரர்கள் தங்கள் உயிரையே இந்தியை எதிர்த்து தமிழ் வாழ்வதற்காக தத்தம் செய்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் தான் அண்ணா அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியாக பெரியார் அவர்களால் நியமிக்கப்பட்டு, சென்னை தொண்டைமண்டில உயர்நிலைப் பள்ளியின் வாசல்புறத் தில் மறியலில் ஈடுபட்டு, சிறைச்சாலையில் வைக்கப்பட்டார்கள்.

இந்தியத் திருநாட்டில் நாற்பதாண்டு கால மொழிப் போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய உச்சக் கட்டம் மொழிப் புரட்சி. பேராசிரியர் கருப்பையா அவர்கள் குறிப்பிட்ட 1965 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை பற்றியெல்லாம் சொன்னார்களே அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்ற ஆண்டு. 1965ல் நடைபெற்ற மொழிப் புரட்சியில் பல மாணவர்கள் தங்கள் இன்னுயிரை தமிழுக்காகத் தத்தம் செய்தார்கள்.

கீழப்பழூர் சின்னச்சாமியிலேயிருந்து தொடர்ந்து ஆறு பேர் தீக்குளித்து தங்கள் தேக்கு மரத் தேகங்களை தணலுக்கு இரையாக்கி தங்கள் உடல் வெடித்து சிதறிய போதும் தங்கள் கேசம் கருகிய போதும் முத்துப்பற்கள் வெடித்த போதும் அயராமல் சடலம் தரையிலே சாய்கிற நேரத்திலும் கூட நாக்கை உறுதியாக்கிக் கொண்டு தமிழ் வாழ்க இந்தி ஆதிக்கம் ஒழிக என்று சொல்லிக் கொண்டே தான் அன்றைக்கு அவர்கள் உயிர் விட்டார்கள். அதன் விளைவு, நமக்கு இன்னும் முழுமையான வெற்றியாக கிடைக்காவிட்டாலும் அதன் விளைவாகத் தான் மத்திய அரசு சில வாக்குறுதிகளை இந்தி பேசாத மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று. இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் ஆசி யாவின் ஒளிவிளக்கு, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அளித்த உறுதி மொழி தான் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் நீடிக்கும் என்கிற உறுதி மொழி. ஏன் இந்தி மொழியை நாம் வேண்டா மென்று சொல்கிறோம்? அதுவும் ஒரு மொழி தானே, அதை ஏற்பதில் என்ன தயக்கம்? என்ன தடை? ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? அது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள அன்னியனின் மொழி அல்லவா? கடல் கடந்து வாழ்கிற அன்னியனு டைய மொழியை ஏற்றுக் கொள்கிற தமிழன் ஏன் இந்தியத் திரு நாட்டிற்குள் பேசப்படுகிற ஒரு மொழியை ஏற்றுக் கொள்ளக் கூடாது? கேள்வியை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நியாயமாகத் தான் தெரியும். கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுக்காலம் வெள்ளையன் இந்தியாவை ஆண்டான்.

அவனுடையமொழியை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் ஏற்பட்டது. அந்த ஆங்கில மொழியை இந்தி யாவில் இருக்கிற எல்லோரும் கற்றுக் கொண்டால் தான் -கற்றுக் கொண்டவர்களுக்குத்தான் வேலை வாய்ப்பு.

அரசாங்கத்தில் உத்தியோகங்கள். அது நிலைமை. அவன் வெளியேறிய பிறகு அவனோடு சேர்ந்து ஆங்கிலமும் வெளியேறிவிட்டால் இந்தியாவை ஆளக் கூடியவர்களில் பெரும்பான்மை இருக்கிற மக்கள் இந்தி பேசுகின்ற மக்கள். பெரும்பான்மையானவர்கள் இந்தி பேசுகிறவர்களாக இருந்து-சிறுபான்மையாக இருக்கிற மக்கள் இந்தி பேசாதவர்களாக தமிழர்களாக, தெலுங்கர்களாக, கன்னடியர்களாக, மலையாளிகளாக, வங்காளிகளாக இருக்கின்ற அந்த நேரத்தில்-இந்தியை தாய்மொழியாக கொண்ட மக்கள் அதை பள்ளிக்கூடத்தில் கற்கின்ற நேரத்தில் அது சுலபமாக ஆகிவிடுகிறது. எனவே அவர்களுக்கு தாய்மொழியும் இந்தி. அலுவல்களுக்கு அவர்கள் கற்க வேண்டிய மொழியும் இந்தி. ஆனால் நமக்கு தாய் மொழி தமிழ்; அலுவல்களுக்காக வேலைவாய்ப்பிற்காக கற்க வேண்டிய மொழி இந்தி என்று ஆகிவிடுமேயானால் இந்தியாவிற்குள்ளேயே நம்மை அறியாமலேயே நாம் இரண்டாந்தர குடிமக்களாக ஆகி விடுகிறோம். இரண்டாந்தர குடிமக்களாக நாமாகி விடுகிற போது இயல்பாக முதல்தர குடிமக்களாக இந்தி பேசுகிறவர்கள் ஆகிவிடுகிறார்கள். இங்கே படையெடுக்காமலேயே ஒரு அந்நிய ஆதிக்கம் ஒவ்வொரு மாநிலத்தின் மீதும் சுமத்தப்படும். இரண்டாந்தர மக்களாக இந்தி பேசாத மக்கள் ஆகி விடக் கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம். இந்தி பேசுகிறவர்கள் தங்களுடைய மொழி, தாய் மொழி இந்தியாக இருக்கிற காரணத்தால் எளிதில் படிப்படியாக அவர்கள் மேலே உயர்வு பெற்று விடுவர். அதற்கு ஒரு சமரச உடன்பாடாகத் தான் ‘உங்களுடைய மொழியை நீங்கள் தாய்மொழியாகப் படித்துக்கொள்ளுங்கள்; எங் களுடைய தமிழ்மொழியை எங்களுடைய தாய்மொழி யாகப் படித்துக் கொள்கிறோம். இரண்டு பேரும் பதவி களுக்குச்செல்ல –

“இரண்டு பேரும் உயர்நிலைக்கு செல்ல எங்களுக்கு இருக்கின்ற கஷ்டம் உங்களுக்கும் இருக்கத்தக்க விதத்தில் இரண்டு பேருக்கும் பொது மொழியாக ஆங்கிலம் நீடிக்கட்டும்.” என்று நாம் கூறு கிறோம்.

இதைத் தான் பெரியார், அண்ணா மாத்திரமல்ல; மூதறிஞர் ராஜாஜி அவர்களும் தன்னுடைய இறுதிக் காலம் வரை சொல்லி வந்தார்கள். தொடக்கத்தில் இந்தி கட்டாயமாக ஆக்கப்பட வேண்டும் என்ற கருத்தைச் சொன்னார் என்றாலும், அவருடைய கடைசிக் காலத்தில் நான் இப்போது எடுத்துச் சொன்ன அந்தக் கருத்தைத் தான் அழுத்தந்திருத்தமாகச்சொன்னார். ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்றகருத்தைத்தான் அவர் சொன்னார். ஆங்கிலம் நீடிப்பதில்கூட “English may continue” என்றுபோடுவதா? “English shall continue” என்றுபோடுவதா? என்ற சர்ச்சை எழுந்த போது நேரு சொன்னார். இந்தி வெறியர் களின் தூண்டுதல் அவருக்குப் பின்னால் இருந்து வலி யுறுத்திய காரணத்தால் அவர் “English shall continue” என்று தேவையில்லை “May” என்றே இருக்கட்டும் என்று சொன்னார். உடனே ராஜாஜியும், பெரியாரும், அண்ணா அவர்களும் இந்தி ஆதிக்க எதிர்ப்பாளர்களும், இல்லை, இல்லை, ‘Shall continue” என்றுதான் இருக்க வேண்டும்; ஆங்கிலம் கட்டாயம் நீடித்தே தீர வேண்டும் என்று இருக்க வேண்டுமே தவிர, ஆங்கிலம் நீடிக்க லாம் “May continue” என்று இருக்கக் கூடாது என்று சொன்ன போது நேரு அவர்கள் “May” என்றாலும் ‘Shall’ என்றாலும் ஒன்றுதான் என்று சொன்னார், பட் டென்று இராஜாஜி அதற்குபதிலளித்தார். அப்படியானால் “Shall” என்றே போட்டு விடுங்கள் என்று சொன்னார்.

இவைகள் எல்லாம் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப் போராட்டத்தினுடைய கடந்த கால வரலாற்று நிகழ்ச்சிகள். இவைகளை நாம் திரும்பத் திரும்பச் சொல்லக் காரணம் என் எதிரே அமர்ந்து கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்காண மாணவ மணிகள் இந்த வரலாறுகளை உணர்ந்திருக்க முடியாது. இத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். இந்த வரலாற்றில் அங்கங்கள் நாம். அங்கங்களாக இருந்து அணிவகுத்தவர்கள்; அடக்கு முறைகளுக்கு உள்ளானவர்கள், சிறைச்சாலை களுக்குச் சென்றவர்கள் நாம். அவர்களில் சிலர் இந்த மேடையில் கூட அமர்ந்திருக்கிறார்கள்.

ஒரு இயக்கத்தைக் கட்டிக் காக்கின்றவர்கள் நான் அரசியல் ரீதியாகச் சொல்லவில்லை. இப்படிப்பட்ட வர லாற்றை உருவாககியவர்கள்- அதை மக்கள் மத்தியில் அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற் படுகிறது. இல்லாவிட்டால் பழையது மறந்து போய் புதிய புதிய கருத்துக்கள் சொல்லப்பட்டு இருந்தவர்களை வந்தவர்கள் இழித்துக் கூறி தியாகம் மதிக்கப்படாமல்

போய் நாட்டில் நினைவுபடுத்த வேண்டிய பல கருத்துக்கள் மங்கி மறைந்து நாடு காடாக மாறிவிடும். அதனால் தான் ஒரு நாட்டில் வரலாறு மிகவும் முக்கியம். தமிழ னுடைய துரதிருஷ்டம் பண்டைக் காலத்தில் பழம்பெரும் காலத்தில் தமிழன் இலக்கியங்களை படைத்தான். காவியங்களைப் படைத்தான். காப்பியங்களை படைத்தான். ஆனால் வரலாற்றைப் படைக்கவில்லை. வரலாற்று நூல் தமிழனுக்கு இல்லை. நம்முடைய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமேயானால் இலக்கியங்களைப் படித்துத் தான் நம்முடைய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடு கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலராகி செப்பிய
மொழிகளைச் சேரனுக்கு உணர்த்தினான் ஒருவன்!

அது கேட்டு சேரன் செங்குட்டுவன் வடபுலம் வரையிலே படையெடுத்தான். குயிலாலுவம் என்ற இடத்தில் கனகன் விஜயன் என்ற ஆரிய மன்னர்களை முறியடித்தான். அவர் களுடைய தலையிலே இமயத்திலிருந்து கொண்டுவரப் பட்ட கற்களை ஏற்றினான். அதை வஞ்சி மூதூர் வரை கொண்டு வந்தான். கண்ணகிக்கு சிலை எடுத்தான் என்பது வரலாற்று நூலிலே காணப்படுகிற செய்தி அல்ல. சிலப் பதிக கார இலக்கியத்திலே காணப்படுகிறசெய்தி. இப்படி இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்து அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற குறிப்புகளை தொகுத்து தமிழன் வரலாற்றை உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிவிட்டான் அந்தக் காரணத்தால் தான்-

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருகாலத்தில் “ஏ! தாழ்ந்த தமிழகமே!’ எனும் தலைப்பில் உரையாற்றிய அறிஞர் அண்ணா “இந்தியாவின் வரலாறு காவிரிக்கரையிலிருந்து ஆரம்பமாக வேண்டுமே தவிர கங்கைக்கரையிலிருந்து தொடங்கப்படக்கூடாது. ஏனென்றால் வரலாற்றுக்குத் தொடக்ககாலச் சொந்தக்காரன் காவிரிக் கரையில் தான் வாழ்கின்றான்” என்று குறிப்பிட்டார்.

அண்ணா மாத்திரமல்ல; மனோன்மணீயம் ஆக்கித் தந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும், அதே கருத்தைத்தான் சொல்லியிருக்கின்றார்.

“காவிரிக்கரை தான் நாகரிகத்திற்கு-பண்பாட்டிற்கு-கலாச்சாரத்திற்கு- அன்றைக்கு முதலிடமாக இருந்தது. எனவே இந்தியாவின் வரலாறு காவிரிக்கரையிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டுமேயல்லாமல் கங்கைக்கரையிலிருந்து எழுதப் படக்கூடாது” என்று கூறியிருக்கின்றார்.

வரலாறு இல்லாத காரணத்தால் எத்தனையோ கடந்த காலச் சம்பவங்கள் மறைந்துவிட்டன. நல்ல காலமாக இலக்கியங்களாவது காப்பாற்றப்பட்டன. இலக்கியங் களும், காப்பியங்களும் காப்பாற்றப்பட்ட காரணத்தால் தமிழருடைய வரலாற்றை சிறுசிறு குறிப்புக்களாக நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அந்த இலக்கியங்கள் வீரத்தைத் தருகின்ற இலக்கியங்கள். காதலைச் சொல்லுகின்ற இலக்கியங்கள். இப்படி பல இலக்கியங்கள் நமக்கு உண்டு. அதிலே சங்க இலக்கியம் நம்முடைய பழம் பெரும் நாகரிகத்தை-வரலாற்றை எடுத்தியம்புகின்ற இலக்கியமாகும்.

சங்க இலக்கியத்திலே புறநானூற்றில் வருகின்ற ஒரு பாடல். அந்தப் பாடல் தமிழன் எவ்வளவு பெரியவாழ்க் கைச் சித்தாந்தத்தை-வாழ்க்கை தத்துவத்தை அவனுக் காக மாத்திரமல்ல, இந்த உலகத்திற்காகச் சொன்னான்; எப்படிப்பட்ட வாழ்க்கை தத்துவத்தைக் கடைப்பிடித் தான் என்பதை எடுத்துக்காட்டுகின்ற பாடலாகும்.

கணியன் பூங்குன்றனார் எழுதிய அந்தப் பாடல்

“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே…?”

“எல்லாம் நமது ஊர்; எல்லோரும் நமது உறவினர்; தீமையும் நன்மையும் பிறரால் நமக்கு இழைக்கப்படுவ தல்ல! தீமை பகைவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதவேண்டாம். நன்மை நண்பரால் தரப்படுவது என்று கருத வேண்டாம். அந்த இரண்டிற்கும் காரணம் நாமே தான். துன்பம் ஏற்படுவதும் அந்தத் துன்பம் அகலுவதும் அதைப் போல சாவதும் புதுமையல்ல. வாழ்க்கை இனிமையான தென்று மகிழவும்கூடாது. அதே நேரத்தில் என்ன வாழ்க்கை இது என்று அதை வெறுத்துவிடவும் கூடாது.’

இப்படி வாழ்க்கைக்குத் தத்துவம் வகுத்துக்கொண்டு வாழ்ந்தவன் தமிழன்.

அப்பேற்பட்ட நமது தாய்மொழியாம் தமிழுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அதைக் காப்பாற்ற- அதற்கு அரணாக இருக்க தமிழகத்திலே ஒரு பேரியக்கம் உரு வாயிற்று. அந்தப் பேரியக்கத்தில் ஒரு சிறு துளி தான் உங்கள் முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கருணாநிதி!

நான் தமிழை முழுமையாக உணர்ந்தவன்: முற்றாக உணர்ந்தவன் என்றெல்லாம் பேராசிரியர் கருப்பையா இங்கு பேசினார். அதுவும் நான் முழுமையாக உணர வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளே யன்றி வேறல்ல!

இன்னும் நான் இருக்கின்ற காலம் எவ்வளவோ எனக்குத் தெரியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அறுபது ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட இன்றுள்ள மனிதனின் சராசரி வயதைப் பொறுத்து முக்கால்பகுதி முடிந்துவிட்டதைத்தான் குறிக்கும். மீதம் உள்ள கால் பகுதியில் உங்களுக்கு நான் என்ன தொண்டாற்றப் போகிறேன் என்பதை விட என்ன தொண்டுக்கு நீங்கள் என்னை பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்பது தான் முக்கியமான கேள்வி எனக் கூறி இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *