முக்கனி
கலைஞர் மு. கருணாநிதி

பலா

[16-2-84 அன்று தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை]

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய விழாவை மிகச் சீரோடும் சிறப்போடும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அந்த விழாவில் நானும் கலந்து கொண்டு அன்பு உள்ளங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பினை எனக்கு வழங்கிய கல்லூரிப் பேரவையினுடைய அனைத்து மன்றங்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பல் லாயிரக்கணக்கிலே குழுமியிருந்த மாணவ உடன்பிறப்பு களுக்கு மத்தியில் சற்றொப்ப ஒரு மணி நேரத்துக்கு மேலாக முத்தமிழ் விழாவிலே கலந்து கொண்டு பேசுகின்ற வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். அங்கும் காலையிலே இருந்து மழை பொழிந்தது என்றாலும் நிகழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் மழை ஒத்துழைப்புக் கொடுத்தது. ஆனால் தஞ்சை மாவட்டத்திலே காலையிலே இருந்து இதுவரையிலே அந்த ஒத்துழைப்பு நமக்கு கிடைக்காமல் அடாது மழை பொழிந்தாலும் விடாது இந்த விழா நடைபெறும் என்கின்ற மாணவர்களுடைய பிடிவாதத்தோடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது போன்ற சிறப்புக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ள இந்தக் கல்லூரியினுடைய கூடம் இன்றைய விழாவிற்கு இடம் போதாது என்கின்ற காரணத்தினால் நாம் வெளியிலே இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது போலத்தான் பல கல்லூரிகளில் நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள் கல்லூரிக்கு உள்ளே இருக்கின்ற கூடங்களில் நடைபெற முடியாமல் வெளியிலேயே நடைபெறுகின்றன. ஒருவேளை நான் கல்லூரி காணாதவன் என்கின்ற காரணத்தினால் எனக்குக் கல்லூரி கூடங்களில் இடம் கிடைக்காமல் உள்ளே வந்தாலும் வெளியே இரு என்பதைப் போல இந்த வெளி மைதானங்களிலே விழாக்கள் நடைபெறுகின்றன போலும்!

இருப்பினும் மேலே மழைத்துளிகள் உங்களை நனைத் துக் கொண்டிருக்கின்ற போதிலும் தரை ஈரமாக இருக்கின்ற நிலையிலும் இந்த விழா சிறப்புற அமையவேண்டும் என்பதற்காக அமைதியோடு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருப்பதைக் காண நான் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன்.

கல்லூரி முதல்வர் அவர்கள் ஒன்றை எனக்குக் தனியாகக் கோடிட்டுக் காட்டினார்கள். இந்தக் கல்லுரியிலே பயிலுகின்ற மாணவர்கள் மிகப் பெரும்பாலும் விவசாயப் பெருங்குடி மக்களிலிருந்து வந்திருப்பவர்கள். அவர்களுடைய குடும்பத்தில் இவர்களைத்தவிர இதுவரை யிலே மேற்படிப்பு படித்தவர்கள் இல்லை. அப்படிப் பட்டவர்கள் இன்றைக்கு இந்தக் கல்லூரியிலே பயிலுகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த நிலை எப்படி வந்தது; எப்போது வந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப் பெருங்குடி மக்களுடைய சமுதாயத் திலேயிருந்து கல்லூரிப் படிப்பல்ல; பள்ளிக்கூடப் படிப்பே கூட நாடாத – நாடினாலும் அவர்களை பயில விடாத சூழ்நிலை இருந்தது. அந்தச் சூழ்நிலையை மாற்றி அமைத்து பின்தங்கிய நிலையிலே பிற்படுத்தப்பட்ட நிலையிலே கிராமப்பகுதிகளிலே வாழ்கின்ற மக்களைக் கல்வி அறிவுள்ளவர்களாகவும் அவர்களுடைய உரிமைகளைப் பெறக்கூடியவர்களாகவும் அதற்கென இட ஒதுக்கீடுகள் அவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்கின்ற போர்க் கொடியை உயர்த்தி அந்தப் போரிலே கண்ட வெற்றியின் விளைவுதான் இன்றைக்கு கல்லூரி முதல்வர் அவர்கள் இங்கு எடுத்துக் காட்டியதைப் போல் பெரும்பான்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலுகிறார்கள் என்ற இனிப்பான செய்தியாகும்.

ஆனால் இந்த இனிப்பான செய்தியைக் கேட்க கடந்த அறுபதாண்டுக் காலத்திலே எத்தனை எதிர்ப்புக்களை தாங்க வேண்டியிருந்தது. எவ்வளவு சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. இளைய தலைமுறையைச் சோந்தவர்கள் கடந்த கால வரலாற்றை இன்னும் சற்று உன்னிப்பாகப் படித்து அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் பற்றி சிந்திக்கின்ற நாம் கடந்த காலம் எப்படி இருந்தது என்பதை உணர்ந்தால்தான் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கணக்கைச் சரியாகப் போடமுடியும்.

கல்லூரி முதல்வர் குறிப்பிட்டதைப்போல கடந்த காலத்திலே படிக்க இயலாதது மாத்திரமல்ல; படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தோம்; படிப்பது பாபம் என்று பயமுறுத்தப்பட்டிருந்தோம்; படித்தால் ஏறாது என் றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தோம்.

அந்த நிலைகளையெல்லாம் மாற்றுகின்ற ஒரு தலைகீழ்ப் புரட்சியை இந்த சமுதாயத்திலே செய்து காட்டியவர்கள் மறைந்துவிட்டார்கள் என்றாலும் அவர்களை இதுபோன்ற நேரங்களில் நினைவுகூர வேண்டியது நம்முடைய தலையாய கடமையாகும்.

தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும், அவர்களுக்கு முன்பேகூட நீதிக்கட்சியை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காகவென்றே கொள்கைகளை வகுத்துக்கொண்டு– திட்டங்களை வகுத்துக்கொண்டு பாடுபட்டவர்களும், இன்னும் சுட்டிக்காட்டிச் சொல்ல வேண்டுமேயானால் நீதிக்கட்சியினுடைய அமைச்சரவையிலே அமைச்சராக இருந்த சீர்காழி முத்தையா முதலியார் போன்றவர்களும் அன்றைக்கு எடுத்த முயற்சி- தியாகராயர் போன்றவர்கள் அன்றைக்குக் கொண்டிருந்த அந்த எண்ணம் – அதுதான் இன்றைக்கு இப்படிப்பட்ட பயனை அளித்திருக்கிறது. என்று சொன்னால் வரலாற்றை உணர்ந்தவர்கள் நிச்சயமாக அதை மறுக்க முடியாது.

இந்த நிலையை நம்முடைய சமுதாய மக்கள் எய்த வேண்டும். எய்தினால்தான் ஏற்றமிகு பொற்காலம் தமிழகத்திலே அமையும் என்ற அடிப்படையில் வந்தவர்; வந்தவர் மாத்திரமல்ல; தன்னுடைய ஆற்றலை, அதற்காகத் தந்தவர்- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அந்த பாரதிதாசனுடைய விழாவை ‘பாவேந்தர் பாரதிதாசன் விழா’ என்ற தலைப்பிலே இங்கே கொண்டாடுகிறீர்கள் என் றாலும் அவருடைய கவிதைகளால் இந்த நாட்டுக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்ட போது ‘புரட்சிக் கவிஞர்’ என்றுதான் அறிமுகப் படுத்தப்பட்டார். அவருடைய கவிஞர் என்கின்ற பெயருக்கு முன்னால் அடைமொழியாக இன்றைக்கு இடம் பெற்றிருக்கின்ற அந்தப் புரட்சி என்பது உண்மையிலேயே ‘புரட்சி’. அந்த புரட்சி சமுதாயத்திலே ஒரு தலைகீழ் மாற்றத்தை — பொருளாதாரத் துறையிலே ஒரு உண்மையான சமதர் மத்தை – அறிவியல் துறையில் நல்ல பகுத்தறிவு எழுச் சியை உண்டாக்குவதற்காக நடத்தப்பட்ட புரட்சியாகும். அந்தக் காரணத்தினாலேதான் அவர் ‘புரட்சிக் கவிஞர்’ என அழைக்கப்பட்டார்.

அவர் புரட்சிக்கவிஞராக ஆவதற்கு முன்பு அவருடைய தொடக்க காலக் கவிதைகள் எதை நோக்கிச் சென்றன; எதற்காக புனையப்பட்டன? இவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கனகசுப்புரத்தினம் என்பதுதான் அவருடைய இயற்பெயர். கனகசுப்புரத்தினம் பாரதிதாசனாக ஆனார். பாரதியாரைச் சந்தித்த பிறகு, புதுவை மாநகரததிலே விடுதலை இயக்கத்தினுடைய வீறுகொள் கவியான- வெள்ளைக் கார ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வேங்கையான சுப்பிர மணிய பாரதியார் புதுவைக் கடற்கரையிலே அமர்ந்து கவிதைகளை எழுதிக் குவித்தபோது அவருக்கு அறிமுகமான ஓர் ஆசிரியப் பெருமகன் தான் கனகசுப்புரத்தினம்.

கனகசுப்புரத்தினம் ஆரம்பத்திலே எழுதிய கவிதைகள் ‘சுப்பிரமணியர் துதியமுது’; ‘கதர்ப்பாட்டு’!

இப்படி சுப்பிரமணியர் துதியமுதும், கதர்ப்பாட்டும் எழுதி அறிமுகமான கனகசுப்புரத்தினத்தை 1908 அல்லது 1909ல் பாரதியார் சந்திக்க நேருகிறது. அந்த சந்திப்பு வரலாற்றிலே இரண்டு வகையாகக் குறிக்கப்படுகிறது.

ஒரு திருமணவீட்டிலே இருவரும் சந்தித்தார்கள் என்று பேசப்படுகிறது. அல்லது ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு சந்தித்தார்கள் என்றும் பேசப்படுகிறது. எந்த நிலையிலே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தாலும்கூட சந்தித்த கட்டத்திலேதான் கவி எழுதுகின்ற ஆற்றல் படைத்தவர் என்று கனகசுப்புரத்தினம் – பாரதிதாசன், பாரதியாரிடத்திலே சொன்ன போது ‘அப்படியானால் இப்பொழுதே ஒருகவிதை பாடிக் காட்டு பார்க்கலாம்!” என்று பாரதியார் கேட்டார்;

“எங்கெங்கு காணினும் சக்தியடா!- தம்பி
ஏழுக் கடல் அவள் வண்ணமடா!”

என்று உடனடியாகப் பாடினார் கனகசுப்புரத்தினம்- பாரதிதாசன்.

அன்றைக்கு தேசிய விடுதலை இதழாக நடைபெற்றுக் கொண்டிருந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு பாரதியார் அந்தப் பாடலை அனுப்பி வெளியிடச் சொன்னார். அது மாத்திரமல்ல, அதை மொழிபெயர்க்கச் சொல்லிச் சில ஆங்கில ஏடுகளிலும் அந்தக் கவிதை வெளிவர வேண்டும் என்று விரும்பினார்; அவ்வாறே செய்தார்.

அதற்குப் பிறகு கனகசுப்புரத்தினம் பாரதியாருடைய மாணவனாகவே தன்னை ஆக்கிக்கொண்டு ‘பாரதிதாசன்’ என்கிற பெயர் பூண்டார்.

‘தமிழ் இயக்கம்’ என்கிற பாரதிதாசனுடைய ஒப்புயர்வற்ற நூலில் தனித் தமிழுக்காக வாதாடுகின்ற பாரதிதாசன் ‘பாரதி’ என்கின்ற வடமொழி சொல்லையும், ‘தாசன்’ என்ற வடமொழிச் சொல்லையும் இணைத்து- பாரதிக்குத் தாசன்–பாரதிதாசன் என்று பெயர் பூண்டது வியப்புத்தான்! இருந்தாலும் தன் ஆசிரியனிடத்திலே ஒரு மாணவன் காட்ட வேண்டிய அந்த மரியாதைக்காக அவர் தமது இறுதிக் காலம் வரையிலே பாரதிதாசனாகவே இருந்தார்.

அதுமாத்திரம் அல்ல; தன்னுடைய குரு பாரதியாரைப் பற்றி பாரதிதாசன் பாடுகிறார்,

“நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா காடு
கமழும் கற்பூரச் சொற்கோ”

தன்னுடைய குருவைப்பற்றி-பாரதியாரைப்பற்றி-பாரதிதாசன் பாடிய பாடல் வரிகளில் இரண்டு வரிகள் இவை.

இப்படி நூற்றுக்கணக்கான வரிகள் பாரதியாரைப் பற்றி அவர் பாடியிருக்கிறார்.

குருவாக ஏற்றுக் கொண்டார்-கவிதை அளவிலே குருவாக ஏற்றுக் கொண்டாரே அல்லாமல் காலப் போக்கில், கொள்கை அளவில்-கருத்தில் -மாறுபாடு கொண்டார். கருத்து மாறுபாடு, கொள்கை மாறுபாடு கொண்ட போதும் குரு என்கின்ற இடத்திலே பாரதியாரை அவர் மதிக்கத் தவறியதில்லை.

பாரதியாரும் ஒரு சீர்திருத்தக்காரர். ஒரு புதுமைக் கவிஞர் அவர்.

அந்தப் புதுமைக் கவிஞர் பாரதியார் நாட்டிலே ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக புதுவையிலே ஒரு அற்புதத்தை செய்து காட்டினார்.

கனகலிங்கம் என்கின்ற ஒரு அரிசன மாணவனை அழைத்து, அவனைத் தன் வீட்டு கூடத்திலே உட்கார வைத்து, வேறு ஐந்தாறு புரோகிதர்களையும் பிடிவாதம். செய்து அழைத்து வந்து, அந்த கனகலிங்கம் என்கின்ற அரிசன மாணவனுக்கு பூணூல் போட்டு-ஆகம விதி களின்படி ஓத வேண்டிய வேதங்களெல்லாம் ஓதப்பட்டு உச்சரிக்கப்பட வேண்டிய மந்திரங்கள் எல்லாம் சரிக்கப்பட்டு பூணூல் போடப்படுமேயானால், ஒரு அரிசன சிறுவனும் பிராமணனாக முடியும் என்று சுப்பிரமணிய பாரதியார் புதுவையிலே உள்ளவர்களுக்கு எடுத்துக் காட்டி, கனகலிங்கம் என்ற அந்த அரிசன மாணவனை அன்றைக்கு பிராமண மாணவனாக ஆக்கிக் காட்டினார்.

இது பாரதியார் தன்னுடைய காலத்திலே செய்ய முடிந்த புதுமை. சொல்லப் போனால் அந்தக் காலத்துப் புரட்சி என்றும் சொல்லலாம்.

நான் எண்ணுவதெல்லாம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு அரிசன மாணவனைப் பிடித்து அவனுக்கு பூணூலை மாட்டி, அவனைப் பிராமணனாக ஆக்குவதை விட நூற்றுக்கு மூன்று பேராக இருக்கின்றவர்கள் – நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழு பேரைப்பிடித்து நீங்களும் பிராமணர்களாக ஆகுங்கள் என்று அவர்களுக்குப் பூணூலைப் போடுவதை விட, மூன்று பேரும் பூணூலைக் கழற்றிவிட் டால் நூறு பேரும் சமம்! இது இந்தக் காலத்து சிந்தனை. அந்தக் காலத்திலே பாரதியாருடைய சிந்தனை, புரட்சிகரமான சிந்தனையென்றாலும், அந்த காலகட்டத்தில் பாரதியாரால் அவ்வளவுதான் சிந்திக்க முடிந்தது.

அந்த பாரதியாருடைய மாணவன் பாரதிதாசன் காந்தியடிகளுடைய கொள்கைகளைப் பரப்பியவர்-சுப்பிரமணிய கடவுளுடைய பக்திப்பாடல்களைப் பாடியவர்– பெரியாருடைய அடியொற்றி கருத்துக்களை எடுத்து இயம்பத் தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில் அவர் பல ஏடுகளை நடத் தினார். பல இன்னல்களுக்கு ஆளானார். எதிர் நீச்சல் போட்டார். அவர் புதுவையிலே உயிரோடு இருக்கலாகாது என்கின்ற அளவுக்கு மாற்றார், அவருக்குப் பல தீமைகளை விளைவித்தனர்; சூழ்ச்சிகளைச் செய்தனர். அவைகளையெல்லாம் மீறி பாரதிதாசன் நின்றார்.

பாரதிதாசனுடைய கவிதைகளை மாத்திரம்தான் பலர் படித்திருக்கக்கூடும். அவருடைய வாழ்க்கை வரலாற்றிலே எப்படிப்பட்ட மேடு பள்ளங்கள் இருந்தன; அவர் எத்தகைய காடு, மலைகளையெல்லாம் கடந்து – காட் டாற்று வெள்ளத்தில் எல்லாம் நீந்தி, புரட்சிக் கவிஞராக- பாவேந்தராக நிற்க முடிந்தது என்பதை எண்ணுகிற நேரத்திலேதான் ஒரு அற்புதமான மனிதர் – எதற்கும் அஞ்சாத சிங்கம் பாரதிதாசன் என்பது புலப்படும்.

ஒருமுறை 942-ம் ஆண்டு திருவாரூரில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஒரு மாணவர் அமைப்பை உருவாக்கி அதனுடைய ஆண்டு விழாவை திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே நான் நடத்தினேன்.

அந்த ஆண்டுவிழாவிற்கு சேலம் கல்லூரியின் முதல்வர் ராமசாமி கவுண்டர் அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார். வேறு பல தலைவர்களும் அழைக்கப் பட்டிருந்தார்கள்.

அந்த விழாவை முன்னிட்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு நான் ஒரு மடல் எழுதினேன். அப்போது 1942-ல் நான் அவரை நேரிலே கண்டதில்லை; அவரும் என்னை அறியார்.

நான் அவருக்கு தீட்டிய மடலில் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற ஆண்டு விழா, திருவாரூரில் நடைபெறு கிறது; அதற்குத் தங்களுடைய வாழ்த்துக் கவிதை ஒன்று அனுப்புங்கள், அலட்சியமாக இருந்து விடவேண் டாம்” என்று எழுதினேன்.

அவரும் வாழ்த்துக் கவிதை அனுப்பினார். அந்தக் கவிதையினுடைய அடிக்குறிப்பில் ஒன்றைக் கோடிட்டுக் காட்டி இருந்தார். “தோழர் கருணாநிதிக்கு”-என்று குறிப்பிட்டிருந்தார். ஆளைப் பார்த்திருந்தால் அவருடைய வயதுக்கு நான் தோழனா? என்பது அப்போது அவருக்குப் புரிந்திருக்கும்.

எவ்வளவு பெரிய கவிஞர்! அந்தக் கவிஞர் அன்றைக்குப் பள்ளி மாணவனாகிய என்னை மதித்து நான் எழுதிய கடிதத்துக்கு மரியாதை தந்து – கவிதையும் அனுப்பி பின் குறிப்பில் “கேட்ட வண்ணம் தீட்டி தெரிந்த வரைக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டும் முடிக்கவில்லை. அலட்சியமாக இருந்திடேல்” என்று-நான் எழுதியிருந்தேன் அல்லவா’ அதற்காக “அலட்சியமாக இருந்திடுவதுண்டு வாரம் ஒன்றுக்கு இருபது ஒன்றரை அணா தபால் செலவை எண்ணி”-அப்பொழுதெல்லாம் தபால் செலவு- கவர் அனுப்புவதற்கு ஒன்றரை அணா ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்! நான் அந்த ஸ்டாம்பை கூட அனுப்பாமல் அவரிடத்திலே கவிதை கேட்டேனாம்! அதைக் கேலி செய்து “அலட்சியமாக இருந்திடுவதுண்டு வாரம் ஒன்றுக்கு இருபது ஒன்றரை அணா தபால் செலவை எண்ணி!என்று எழுதினார்!

அப்பொழுது அவர் எழுதிய கவிதைதான்-

“தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில்
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்காண்
வண்மையொடும் உண்மையொடும் வாழ்ந்திடுங்காண்!
மக்களிடை எழுச்சிக்கு மருந்தாகுங்காண்!
புண் வாய்ந்தோர் அல்லர் காண்! திருவாரூரின்
புலி இளைஞர்கள்காண்! தோள்கள் பூரித்தார்காண்! கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்

கிழித்தெறிய தேடுது காண் பகைக்
கூட்டத்தை வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார்
வால் நீட்டினால் உதைதான் கிடைத்திடுங்காண்!”

இதுதான் அன்று புரட்சிக் கஞவிர் பாரதிதாசன் அவர்கள் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்துக்கு எழுதி அனுப்பிய வாழ்த்துக் கவிதை !

அந்தக் கவிதையை நான் இங்கே சொன்னதை விட மிக அழகாக, இன்னும் உரத்த குரலில்-இன்னும் கவரத் தக்க வகையில்,

‘கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்
கிழித்தெறிய தேடுதுகாண் பகைக் கூட்டத்தை”

என்ற அந்த வரிகளை எனது நண்பர் நாவலர் அவர்கள் அடிக்கடி சொல்ல நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.

இப்பொழுது கிளம்புகிறதோ இல்லையோ, தமிழச் சிங்கக் கூட்டம் ஆனால், அவர்சொல்லி-நீங்கள் பல முறை கேட்டிருக்கக்கூடும், ஆனால் அந்தக் கவிதையினுடைய பின்னணி பலருக்குத் தெரியாது அது திருவாரூருக்காக 1942-ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை என்கின்ற அந்த பின்னணி பலருக்குத்தெரியாது.

புரட்சிக் கவிஞர் அதிகமாக விளம்பரமாகாத அந்தக் காலகட்டத்தில் அவருடைய கவிதைகளின் முதல் தொகுப்பு, சிறிய அளவில் அப்பொழுது வெளியாயிற்று. அந்த நூலுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஒரு அணிந்துரை எழுதியிருந்தார். அந்த அணிந் துரையில் அவர்

“கவிதைக்காக ஒருமுறை; கருத்துக்காக ஒருமுறை; கொள்கைக்காக ஒருமுறை; உவமைக்காக ஒருமுறை-இப்படி பலமுறை படித்தேன். ஒவ்வொரு முறையும் அது ஒரு படித் தேனாகவே சுவைத்தது” என்று “படித்தேன்” என்கின்ற அந்த சொல்லையே சொல்லாடல் செய்து குறிப்பிட்டிருந்தார்.

பாரதிதாசன் கவிதைகளை எல்லா பகுதிகளிலும் இருக்கின்ற மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு எழுதுகின்ற கட்டுரை எதுவானாலும், அதில் பாரதிதாசனுடைய பாட்டு ஒன்றைத் தவறாமல் கோடிட்டுக் காட்டி, கட்டுரையைத் தொடங்குவார் அல்லது முடிப்பார்.

அண்ணா அவர்களுடைய கட்டுரைகளை அன்றைக்கு பலாப்பழத்தில் மொய்க்கின்ற ஈக்களைப் போல மொய்த்து படித்துக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம், பாரதிதாசனை அறிந்து கொள்ள முடிந்தது.

இப்படி பாரதிதாசன் தமிழகத்தினுடைய சொத்தாக மாறினார்.

ஒரு முறை உவமைக்காக படித்ததாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொன்னாரே, அந்த உவமைகள் என்ன சாதாரணமான உவமைகளா?

இன்றைய தினம் தமிழகத்திலே பாரதிதாசனுடைய பரம்பரையில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகி இருக்கின்றார்கள். பாரதியாருடைய கவிதா மண்டலத்திலே ஒருவராக உருவான பாரதிதாசனின் கவிதா மண்டலம் இன்றைக்கு பரந்து, விரிந்து, செழித்துக் கிடக்கின்ற கவிதா மண்டலமாகும்.

இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, வைகறைப் பொழுது வருகிற அந்தக் காட்சியை எத் தனையோ கவிஞர்கள் சிறப்பித்திருக்கிறார்கள். வருணித்திருக்கிறார்கள். ஆனால் மிகப் புதுமையாக எடுத்துச் சொன்னவன் பாவேந்தன் பாசதிதாசன்தான்.

என்ன புதுமை?

தொட்டியில் நீல வண்ணம் கரைத்து வைக்கப்பட் டிருக்கிறது. அந்த நீல வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கிறது. வெளுப்பதற்குக் காரணம், அந்த நீல வண்ணம் கரைத்து வைக்கப்பட்டிருக்கின்ற தொட்டியில் ஒருவன் சுண்ணாம்பைக் கலக்கிறான். சுண்ணாம்புக் கலக்கப்பட கலக்கப்பட அந்த நீலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்து வெளுப்பாகிறது. அது எப்படி இருக்கிறதென்று ஒப்பிடுகின்றார் பொழுது விடிகின்ற காட்சியோடு!

“தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பன்ன
இருள்தன் கட்டுக் குலைந்தது”

இப்படிப்பட்ட ஒரு உவமையை, பொழுது விடிகின்ற அந்தக் காட்சிக்கு எந்தப் புலவனும் உவமித்துச் சொல்லவில்லை.

இன்னும் ஒரு படி மேலே போய் நள்ளிரவு விலகுவதைப் பற்றிச் சொல்கிறார்.

“கேள்வியால் அகலும் மடமை போல்”

– அறிவு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட வழங்கப்பட, அறிவுத் தெளிவு ஏற்பட ஏற்பட எப்படி மடமை விலகுகிறதோ, அப்படி,

“கேள்வியால் அகலும் மடமை போல்
நள்ளிரவு மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது” என்கிறார்.

அவர் உவமையைக் கையாளுகின்ற நேரத்தில் நாட்டு நடப்பையும், அந்த நாட்டு நடப்பை எடுத்துச் சொல்கிற நேரத்தில், அவர் கொண்ட கொள்கையையும் எடுத்துரைக்க தவறியதே இல்லை.

வெண்ணிலாவை வருணிக்கிறார் பாருங்கள்!

குருடன் ஒருவன்; உண்மையில் குருடன் அல்ல; குருடன் என்று சொல்லி வைக்கப்பட்டவன். அவனைக் காண, அவனிடத்திலே பாடம் கற்கின்ற பட்டத்து இளவரசி வருகிறாள். அப்பொழுது இன்னும் மாணவி வந்து சேரவில்லையே என்கின்ற துணிவில் அவன் நிலவைப் பார்த்து பாடிக் கொண்டிருக்கின்றான்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை! கோலமுழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கி
கனல்மாறி குளிரடைந்த ஒளிப்பிழம்போ!”

காலையிலே வந்த சூரியன், கடல் நீரில் விழுந்த காரணத்தால் அந்த ஒளியெல்லாம் குறைந்து நிலவாக மாறி விட்டாயா என்று குறிப்பிடுகிறார். எந்தக் கவிஞன் இப்படி நிலவைப் பார்த்துக் கேட்டான்? அங்கே பொதுவுடமைக் கொள்கையும் பளிச்சிட்டுக் காட்டப்படுகிறது.

‘தினைத்துணையும் பயனின்றிப் பசித்த
மக்கள் சிறிது கூழ்தேடுங்கால் பானை ஆர
னத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ?”

பசித்த மக்கள் கூழாவது இருக்கிறதா என்று தேடுகிற நேரத்தில் பானையார காணப்படுகின்ற அந்த வெண்சோறு இருக்கிறதே, அந்த வெண்சோற்றைக் காணுகின்ற இன்பம் தான் நிலவே உனைக்காணும் இன்பமோ என்றுகேட்கிறார்.

சாதிக்கு அவன் தருகின்ற சாட்டையடி-

“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

என்று-சாதி இருக்கின்றது என்று சொல்லுகின்றவன் இருக்கின்ற காரணத்தால் இருட்டறையில் இந்த உலகம் இருக்கிறது;

“மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றை”

என்று நிலைமையை விளக்கிவிட்டு,

“இவைகளையெல்லாம், இல்லையாயின் விரட்டுவது பகுத்தறிவே! விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்” என்கிறார்:

இவைகள் எல்லாம் ஒழியாத ஒரு நாட்டில் விடுதலை கிடைத்தால் கூட, அப்படி கிடைக்கக் கூடிய விடுதலை கெடுதலையாகத்தான் இருக்குமே தவிர, அது விடுதலையாக இருக்காது என்று கூறுகிறார்.

அவருடைய கவிதையிலே பொதுவுடமைக் கருத்துக்கள் பொங்கி எழுகின்றன! அவர் கேட்கிறார்:

“சிற்றூரும் வரப்பெடுத்த வயலும்
ஆறுதேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்கள் எலாம்
எவரின் தோள்கள்?

கற்பிளந்து, மலைபிளந்து கனிகள் வெட்டி
கருவியெலாம் செய்து தந்த கைதான்
யார்கை?

பொற்றுகளை, கடல்முத்தை, மணிக்குலத்தை
போயெடுக்க அடக்கிய மூச் செவரின் மூச்சு?’

இப்படிப்பட்ட அவர்கள் எல்லாம் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு-

“எலியாக, முயலாக இருக்கின்றார்கள்
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேஷம் போடுகின்றான் பொதுமக்கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?”

1983ம் ஆண்டை எதிர்பார்த்து அன்றைக்கே புரட் சிக் கவிஞர் பாரதிதாசன் “ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்; பொதுமக்களுக்கு புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?” என்று பாடியிருக்கின்றார்!

“ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோர்” என்பது எவ்வளவு லாவகமான வார்த்தை வீச்சு! ‘புலி வேஷம் போடுகின்றார்; பொதுமக்களுக்குப் புல்லளவு மதிப்பேனும் தருகின்றாரா?” என்று ஆவேசமாகக் கேட்கிறார். யாருடைய கை? யாருடைய உழைப்பு? யார் சிந்திய வியர்வை? என்றெல்லாம் கேட்கிறார்!

உழைப்போர் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று சொல்கிற நேரத்தில்-கனல் தெறிக்கிறது அவருடைய கவிதைகளில்!

நடவு செய்த தோழர் கூலி
நாலணாவை ஏற்பதும் உடலுழைப்பி லாதசெல்வர்
உலகை ஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டமீதிலே கடவுள் என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்!

என்கின்ற இத்தகைய வீரவரிகளுக்குச் சொந்தக்காரர் பாரதிதாசன்!

அந்த வீரக்கவிஞனை-வெற்றி படைத்த கவிஞனை- அவருடைய வாழ்நாளெல்லாம், தமிழ்ச் சமுதாயத்திற்காக, தமிழ் இயக்கத்திற்காக அர்ப்பணித்த கவிஞனை பாராட்டுகின்ற நல்ல விழாவினை நீங்கள் இங்கே எடுத் திருக்கின்றீர்கள்.

கவிஞனைப் பாராட்டி விட்டால் மாத்திரம் போதாது. அந்தக் கவிஞன் எதற்காகப் பாடுபட்டான் என்பதை யும் சிந்திக்க வேண்டும்.

‘மாணவர்களுக்கு நீங்கள் நல்ல செய்தி அறிவியுங்கள்; நீங்கள் அளிக்கின்ற செய்தி பெரிய செய்தியாக இருக்கட்டும்” என்று கல்லூரியின் முதல்வர் அன்புக்குரிய கேப்டன் கோவிந்தசாமி அவர்கள் இங்கே எனக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நான் உங்களுக்கு அறிவிக்க என்ன செய்தி இருக் கிறது?

இங்கே நான் எடுத்துக்காட்டிய பாரதிதாசனுடைய கவிதைகள் எல்லாம் நீங்கள் சுமந்துசெல்ல வேண்டிய செய்திகள்தான்! சிந்தையிலே நீங்கள் பதித்துக் கொள்ள வேண்டிய செய்திகள்தான்.

அந்தச் செய்திகளின்படி-நீங்கள் செயலாற்றிட வேண்டியவர்கள். சுற்றிச் சுற்றி பாரதிதாசனுடைய இனமான உணர்வு – இன உணர்வு-அந்த உணர்வுகளுக்குப் பழுதில்லாமல்-இன உணர்வைக் காட்டி காப்பாற்றுகின்ற காரியத்தில் நாம் ஈடுபட வேண்டும். மாணவர்கள் ஈடுபட வேண்டும்;

இளைய தலைமுறையினரான மாணவர்களுக்குப் பழைய வரலாறுகள் தெரியாமல் இருக்கலாம். அந்த வரலாறுகளை அவர்கள் படிக்க வேண்டும்.

எவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு- எவ்வளவு எதிர்ப்புக்களுக்குப் பிறகு இந்த நிலை தமிழகத்திலே ஏற் பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்;

“சிற்றூரும், வரப்பெடுத்த வயலும்
ஆறுதேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்கள் எலாம் எவரின் தோள்கள்?”

என்று பாரதிதாசன் தொழிலாளர்களைப் பார்த்து மாத்திரம் தான் கேட்டாரா?

இன்றைக்கு ஒரு பெரிய மறுமலர்ச்சியை, கலாச்சாரப் புரட்சியை தமிழகத்திலே உருவாக்கி இருக்கிறோம் என்றால், இதை உருவாக்குவதற்காகப் பாடுபட்டவர்கள் யார்? உழைத்த கை எது? இதற்காக ஊரெல்லாம் நடந்த கால் எது? அவர்கள் எல்லாம் இன்றைக்கு எலியாக – முயலாக ஆக்கப்பட்டார்கள்; இடையிலே வந்தவர்கள் புலிவேஷம் கட்டி ஆடுகின்றார்களே என் றெல்லாம் பாரதிதாசன் அன்றைக்குக் கேட்டிருக் கின்றார்!

அவைகள்தான் உங்களுக்குரிய செய்திகள்;

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *