
முக்கனி
கலைஞர் மு. கருணாநிதி
வாழை
[16-2-84 அன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை]
நெருக்கடி நிலை இல்லாமலே நெருக்கடி நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தக் கல்லூரியின் பேரவையின் சார்பில் முத்தமிழ் விழா இன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டதாக அமைந்து நிறைவுரையாற்றும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
நான் இங்கு வருவதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் “இலக்கியப் பெண்டிர்களில் காதல் உணர்வில் மிஞ்சி நிற்பது யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டு ‘சீதையா? மாதவியா? சகுந்தலையா?” என்ற வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டிருக்கின்றது.
நடுவரால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் காதல் உணர்வில் மிஞ்சி நிற்பது சீதையா? மாதவியா? சகுந்தலையா? என்ற கேள்வி எழுந்ததைப் பற்றி அந்த மூன்று பேரும் கவலைப்படப் போவதில்லை. (பலத்த சிரிப்பு, கைதட்டல்) கவலைப் படுகின்றவர்களெல்லாம் நீங்கள்தான். உங்கள் கவலை எப்படி போக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.
காலையில் இங்கு நடைபெற்ற கவியரங்கத்தில் ‘தாகம்’, ‘சோகம்’, ‘வேகம்’, ‘மோகம்’ என்ற தலைப்புக்களில் கவிதைகள் பாடப்பட்டிருக்கின்றன. இவற்றோடு ‘காகம்’
என்கின் ற தலைப்பும் இணைந்திருக்குமேயானால் அந்த காகத்தைப் பார்த்தாவது தமிழன் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்கின்ற ஒரு உணர்வினைப் பெற்றிருக்க முடியும்.
தாகம் – மோகம் என்ற கவியரங்கத் தலைப்புக்களைப் பார்த்தபோது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. மோகம் எவ்வளவு பொல்லாதது என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
ஒரு துறவி பல மாணவர்கள் அடங்கிய ஒரு தூய்மையான மடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அந்த மடத்திலே மாணவர்களுக்கு நல்ல அறநெறியையும் கல்வியையும் அவர் போதித்து வந்தார். மாணவர்கள் ஒருநாள் தங்களுக்குள்ளாகவே ஒரு கலந்துரையாடலை நடத்தி “இந்தத் துறவியாரோடு நீண்ட காலமாகவே நாமும் இங்கேயே தங்கி பயின்று வருகிறோம். இந்த மடத்தில் நமக்கு எல்லாம் பிடிக்கிறது. ஆனால் இந்த மடத்திலே இருக்கின்ற சமையல்காரன் நல்ல உணவை சமைப்பது இல்லை. எதற்கும் ஒரு பெண்மணி சமையல்காரியாக இங்கு வருவாளேயானால் நல்ல உணவு கிடைக்கும்” என்று தீர்மானித்து எல்லா மாணவர்களும் சேர்ந்து அந்த மடத்தினுடைய குருநாதரைச் சந்தித்தனர்.
அவரிடம் மாணவர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளியிட்டார்கள். உடனே அந்தத் துறவி “சமையற் காரப் பெண் ஒருத்தி இந்த மடத்திற்கு வந்துவிட்டால் உங்களிலே யாருக்காவது அவள் மீது தவறான எண்ணம்- மோகம் பிறந்துவிட்டால் இந்த மடத்தின் தூய்மை என்ன ஆவது? எனவே சமையற்கார பெண்ணை வேலைக்கமர்த்த நான் ஒப்புக்கொள்ள இயலாது” என்று கூறிவிட்டார்.
உடனே சில மாணவர்கள் “பரவாயில்லை ஒரு கிழவியை சமையற்காரியாக அமர்த்துங்கள். அப்படி நியமித்தால் நீங்கள் சொல்லுகின்ற நிலை ஏற்படாது” என்று சொன்னார்கள். “சரி! நாளைக்கு யோசித்துச் சொல்லுகிறேன். இரவு சாப்பாட்டிற்கு எல்லோரும் செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டார்.
மாணவர்களும் தங்கள் கடமைகளை முடித்து விட்டு இரவு உணவுக்குத் தயாராக வந்துவிட்டார்கள். அதற்கு முன்பே துறவியார் சமையற்காரனை அழைத்து “இன்றைக்கு இரவு மாணவர்களுக்குப் பரிமாறும் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பைக் கொட்டி விடு. அத் துடன் உணவு பரிமாறுகின்ற போது யாருக்கும் தண்ணீர் வைக்காதே” என்று உத்தரவிட்டார். துறவியார் சொன்ன படியே உப்பு அதிகமாக போடப்பட்ட உணவு மாணவர்களுக்குப் பரிமாறப்பட்டதுடன் யாருக்கும் தண்ணீர் வைக்கப்படவில்லை.
துறவியும் அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார். துறவிக்கு பரிமாறப்பட்ட உணவில் உப்பு கலக்கப்படவில்லை. மாணவர்களுக்கு அது தெரியாது, துறவி உணவை வேக வேகமாக சாப்பிடுவதை பார்த்த மாணவர்கள் “துறவியே இப்படி சாப்பிடுகிறாரே! நமது உணவில் உப்பு அதிகம் என்று நாம் எப்படிச் சொல்வது?” என்று பயத்தோடு அத்தனை பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். பிறகு தாங்கள் தங்குகிற விடுதிக்குச் சென்று படுத்துவிட்டார்கள். குருநாதர் தனது அறைக்குப் போய் விட்டார். அதற்குமுன் அவர் சமையற்காரனை அழைத்து, “மாணவர்கள் தூங்குகின்ற தாழ்வாரத்திற்கு அருகில் உள்ள முற்றத்தில் ஒரு பாத்திரத்தில் சாணத்தை கரைத்து வைத்து விடு” என்று சொல்ல சமையற்காரனும் அப்படியே சாணத்தைக் கரைத்து வைத்துவிட்டான்.
மாணவர்களோ, அதிக உப்பு கலக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தாகத்தால் தவித்தார்கள்.
என்ன செய்வதென்றே புரியவில்லை. வழக்கமாக வைக்கப்படுகின்ற தண்ணீர்ப் பானைகளும் அங்கு இல்லை. தேடித் தேடிப் பார்த்த மாணவர்கள் கடைசியாக சாணம் கரைத்து வைக்கப்பட்டிருந்த பானையைப் பார்த்தார்கள்.
ஒரு மாணவன் “கொஞ்ச நேரம் சென்றால் சாண நீர் தெளியும். அதற்குப் பிறகு நாம் அந்தத் தண்ணீரைக் குடிப்போம்” என்று சொல்லி காத்திருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக சாணம் தெளிந்து வர அந்த மாணவன் ஒரு குவளையை எடுத்து அந்தத் தண்ணீரை மொண்டு சாப்பிட்டான். குவளையை விட்டு மொண்டதில் சாண நீர் மறுபடியும் கலங்கிவிட்டது.
ஆனால் தாகம் தாங்க முடியாத மாணவர்கள் வேறு வழியின்றி அந்த சாணத் தண்ணீரையே எடுத்து குடித்து தாகத்தை தணித்துக் கொண்டார்கள்.
காலையில் துறவி வந்தார். “இங்கு இருந்த சாணத் தண்ணீர் என்ன ஆயிற்று?” என்று கேட்டார். மாணவர்கள் நடந்ததைச் சொன்னார்கள். அப்பொழுது “தாகத்தில் நீங்கள் சாணத் தண்ணீரா நல்ல தண்ணீரா என் று கூட கருதாமல் அந்தத் தண்ணீரைச் சாப்பிட்டிருக்கிறீர் கள். அதைப் போலத்தான் இங்கு ஒரு கிழவியை வேலைக்கு வைத்தால்கூட மோகத்தில் அவள் கிழவியா குமரியா என்று கூட பார்க்காமல் தவறு செய்து விடுவீர் கள்” என்று சொன்னார்.
மோகம் எவ்வளவு பொல்லாதது என்பதை விளக்க இந்தக் கதை போதும்!
முத்தமிழ் விழாவில் நேற்று புதுக்கோட்டையிலும் இன்றைக்கு இங்கேயும் கலந்து கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. இதற்கு முன்பு- தம்பி கணேசன் குறிப்பிட்டதைப் போல-பூண்டி கல்லூரியிலே நடைபெற்ற பாவேந்தர் விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழுக்கு – தமிழ் இனத்திற்கு தமிழர்களுடைய எதிர்கால வாழ்விற்கு பாடிய கவிதை களைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூறுகிற வாய்ப்பைப் பெற்றேன்.
இந்த முத்தமிழ் விழாவில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழன் போற்றியவைகள் மூன்று. மூன்று, மூன்றாகத் தான் போற் றினான். மூவேந்தர், முத்தமிழ், மும்முரசு என்கின்ற இந்த வகையிலே தான் அவன் தன்னுடைய பண்பாட்டை வளர்த்தான்.
நாகரீகத்தை வளர்த்தான்; மொழியை வளர்த்தான்; தன்னுடைய வரலாற்றை வளர்த்தான்.
மும்முரசு என்றால் – அந்த முரசுக்கே கூட தமிழ னுடைய இலக்கியத்தில் பெருமை சேர்த்தான். முரசு என்றால் மங்கல நிகழ்ச்சிகளிலே ஆர்த்திடப்படுவது என்ற அளவோடு நிற்காமல் அல்லது களம் காணும் வீரர்களை அழைக்க ஒலிப்பது என்ற நிலையோடு நிற்காமல் அந்த முரசுக்கும் பெருமை சேர்த்து, அந்தப் பெருமைக் கும் அவன் இலக்கியம் தந்தான்.
தமிழ் மன்னன் ஒருவன்-அவன் முரசை மதித்தான்; மிகப் பெருமையோடு ஆராதித்தான்; அந்த முரசு கட் டிலில் யாரும் வந்து அமரவோ அதைத் தொடவோ கூடாது; அந்த முரசுக்கு வேலை இல்லாமல் அது முரசுக் கட்டிலில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அதை யாரும் தொடுவதே கூட தவறு; அப்படி தொடுகிறவர்களுடைய கை வெட்டப்படும் என்ற அளவிற்கு கடும் தண்டனை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் மன்னனைக் காண மோசிகீரனார் என்ற புலவர் வருகிறார். மன்னன் இல்லை. ஓய்வு எடுத்துக் கொள்ள அந்த முரசுக் கட்டிலிலே படுக்கிறார். அயர்ந்து தூங்கி விடுகிறார். அந்த நேரத்தில் மன்னன் வேகமாக மாளிகைக்குள் வருகிறான். மன்னனுடைய கண் முரசு கட்டிலின் மீது விழுகிறது. ஆத்திரத்தோடு பார்க்கிறான். “யார் அவன் முரசுக் கட்டிலில்?” என்று கேட்டுக்கொண்டே அருகே வருகிறான். பார்த்தால் புலவர் பெருமான் மோசி கீரனார் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். காவலர்கள்; மன்னன் உடனே கையிலே வாள் எடுத்து புலவனை வெட்டி வீழ்த்துவான் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்குப் பதிலாக மன்னன் வெண்சாமரத்தை எடுத்து வரச் சொல்லி மோசிகீரனார் படுத்திருக்கின்ற அந்தக் கட்டிலின் அருகிலே நின்று புலவர் பெருமான் நன்றாக ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக வெண்சாமரம் வீசுகிறான்.
உயிரினும் மேலாக மதிக்கப்பட்ட அந்த முரசத்தை விட புலவரை அந்தக் காலத்து மன்னர்கள் மதித்தார்கள். காரணம் தமிழுக்காக; அவர்கள் கற்ற தமிழுக்காக மதித்தார்கள். அப்படி மதிக்கப்பட்ட காரணத்தால் தான் கிள்ளிவளவன் என்ற ஒரு பெருமன்னன் எப்படி வாழ்ந்தான்? எப்படிஇறந்தான்? என்பதைப்பற்றி நப்பசலையார் என்ற ஒரு புலவர் சிந்திக்கும்போது கிள்ளிவளவனின் நண்பராக இருந்த அந்த புலவர் அவன் எப்படி இறந் திருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறார்.
செற்றென் றாயினும்
செயிர்த் தென்றாயினும்
உற்றென்றாயினும்
உய்வின்றி மாதோ!
பாடுநர் போல,
கைதொழுதேத்தி
இரந்தன்று ஆதல்
வேண்டும்!
என்று குறிப்பிடுகிறார். “கிள்ளிவளவா! எமன்; உன்னை உற்றார், உறவினரைப் போல நெருங்கி வந்து வஞ்சித்து கொன்றிருக்க முடியாது. எதிர்த்து உன்னோடு போரிட்டு உன்னை வென்று உன்னுடைய உயிரைப் பறித் திருக்கவும் முடியாது. அவன் எப்படி உன்னுடைய உயிரைக் கவர்ந்திருப்பா னென்றால் ஒரு வேளை தன்னை ஒரு புலவர் வேடத்தில் மாற்றிக்கொண்டு வந்து உன்னுடைய உயிரை யாசித்திருப்பான்; புலவர் கேட்டதைத் தர வேண்டுமே, என்ற காரணத்திற்காக ஏமாந்து போய் அவனை தமிழ்ப் புலவர் என்று எண்ணி உன்னுடைய உயிரை அவனிடம் அளித்திருப்பாய்; அதைத் தவிர உன்னை யாரும் கொல்ல முடியாது!” என் கிறார்.
அப்படி தமிழுக்கு உள்ள ஏற்றம் -தமிழ்ப் புலவர்களுக்கேற்ற ஏற்றம் ஒரு காலத்தில் தமிழகத்தில் போற்றப்பட்டது. அந்த ஏற்றமும் பெற்றியும் இடைக் காலத்தில் தொய்வு விழுந்து அது மீண்டும் தொடருகின்ற காலக் கட்டம் ஒன்று வளர்ந்து மீண்டும் தொய்வு விழுகிறதோ என்று அஞ்சுகின்ற காலக் கட்டத்தில் நாம் இந்த மாமன் றத்திலே கூடியிருக்கிறோம்.
எனவே அந்தக் காலக் கட்டம் என்ன என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியவர்களாக இருக் கிறோம்.
இங்கு உரையாற்றிய தம்பி எல். கணேசன் குறிப்பிட்டதைப் போல எனது மாணவப் பருவத்திலே, தமிழ் மாணவர் மன்றத்தை நடத்தியதுடன் நான் நின்று விட வில்லை. மாணவப் பருவத்தில் தமிழ் மொழியைக் காப் பாற்ற போர்க்களத்திலும் இறங்கினேன். என்னுடைய அரசியல் வாழ்வாகட்டும்; பொது வாழ்வாகட்டும்; அல் லது சமுதாய வாழ்வாகட்டும், அந்த வாழ்க்கை இந்தியை எதிர்த்த அந்தப் போர்க்களத்தில்தான் தொடங் கிற்று. அன்று தொடங்கிய அந்த இந்தி எதிர்ப்புப் போர்க் கள வாழ்க்கை இன்னமும் நின்றிடவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
1938ம் ஆண்டில் அன்றைய சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ராஜாஜி பள்ளிகளில் கட்டாய இந்தி யைத் திணித்தார். ஆனால் அதே ராஜாஜிதான் 1963-64-ம் ஆண்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரவாதியாக மாறி, இந்தி தமிழகத்தில் நுழைக்கப்படுமேயானால் தமிழன் இரண்டாந்தர குடிமகனாக ஆகி விடுவான். எனவே ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று போரிட்ட தளபதிகளில் ஒருவராக மாறினார்.
1938-39ல் நடைபெற்ற அந்த மொழிப் போராட்டம் தொடர்ந்து ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று 65ம் ஆண்டிலே மொழிப்புரட்சியாக உருவெடுத்தது. அதற்குமுன் இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரையில் ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும்” என்ற உறுதிமொழியை வழங்கினார். இன்றள வும் நாம் போராடிக் கொண்டிருப்பது- நேருவின் அந்த உறுதிமொழி அரசியல் சட்டத்திலே இடம் பெற வேண் டும் என்பதற்காகத்தான். பிரதமர் இந்திரா காந்தி “என் தந்தையார் அளித்த உறுதிமொழியை நான் காப்பாற்று வேன்” என்று தான் சொல்கிறார்.
ஆனால் அந்த உறுதிமொழி காப்பாற்றப்படுகிறதா என்றால் இல்லை. மறைமுகமாக, நாம் இந்தி கற்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற அளவிற்கு இந்தி ஆதிக்கம் பலப்பல கிளை நதிகளாகப் பிரிந்துவந்து தமிழகத்தில் ஒரு ஆதிக்கப் பெருவெள்ளத்தை உருவாக்குகின்ற நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
எங்கெங்கே இந்திப் பிரச்சாரம் நடைபெற முடியுமோ – எங்கெங்கே நடைபெற்றால் மக்கள் ஈர்க்கப்படுவார்களோ-இந்தி கற்பதைத் தவிர எதிர்கால வாழ்வுக்கு வேறு வழியில்லை என்கின்ற எண்ணத்தைக் கொள்வார்களோ அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் இன்றைக்கு இந்திப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தித் திரைப்படங்கள் தமிழகத்தில் ஏராளமாக திரையிடப்படுகின்றன. வானொலியில் இந்திக்கென்று ஒதுக்கப்படுகிற நேரம் நம்முடைய மொழிக்கு ஒதுக்கப் படுகின்ற நேரத்தை விட அதிகமான நேரம், ஆங்கிலத்தை விட அதிகமான நேரம் ஒதுக்கப்படுகிறது. தொலைக்காட்சியிலும் அதுதான் நடைபெறுகிறது.
பிற ஊர்களில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டி களையோ கால் பந்தாட்ட போட்டிகளையோ தொலைக் காட்சியில் ஒளிபரப்பும் போது அதை வர்ணனை செய் பவர்கள் இந்தியில்தான் வர்ணனை செய்கிறார்கள். எத்தனை ரன் எடுத்தார்? எந்த ஆட்டக்காரர் அவுட் ஆனார் என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இடையில் தப்பித் தவறி ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட சொல்வது பாவம் என்றுதான் இந்தி வர்ணனையாளர் நினைக்கின்றார். அந்த வர்ணனைகளை நாம் ஊன்றி கவனிப் போமேயானால் வேண்டுமென்றே ஆங்கிலச் சொற்களை அறவே நீக்கிவிட்டுத்தான் நம்மை திகைக்க வைக்கிறார் கள் என்பது நன்கு புரியும். அந்த அளவிற்கு இந்தி ஆதிக்கம் இங்கு நுழைந்திருக்கிறது.
அஞ்சல் அட்டைகளில் இந்திதான் முதலிடம் பெறுகிறது. அதைப் போலவே அஞ்சல் உறைகளில் பண விடைத்தாள்களில் இந்திதான் முதலிடம் பெறுகிறது.
இந்தி ஒரு தேசிய மொழியல்லவா? அதை நாம் உதறித் தள்ளலாமா என்று கேட்கலாம். இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதை மறந்து விட்டால் அதைக் கேட்கலாம்.
இந்தியாவிலே பல தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்தி பேசும் ஒரு தேசிய இனம் மட்டும் இந்தியாவில் இல்லை. தமிழ்மொழி பேசுகின்ற தேசிய இனம், மலையாள மொழி பேசுகின்ற தேசிய இனம், கன்னட மொழி பேசுகின்ற தேசிய இனம் என்று பல தேசிய இனங்கள் இங்கு இருக்கின்றன.
இந்த தேசிய இனங்கள் இந்தி ஆதிக்கத்தால் வலு விழந்து போகக் கூடாது. தேசிய இனங்கள் வலுவிழக் காமல் இருந்தால்தான் முழுமையான இந்திய தேசியமே உருக்குலையாமல் இருக்கும். தேசிய இனங்கள் வலுவிழக்குமேயானால் இந்திய ஒருமைப்பாடு ஒரு கற்பனையாக நிழலாக இருக்குமேயல்லாது நிஜமாக இருக்காது.
எனவேதான், இந்திய ஒற்றுமையின் மீது, ஒருமைப் பாட்டின் மீது, இறையாண்மையின் மீதுள்ள அக்கறையின் காரணமாகச் சொல்கிறேன். தேசிய இனங்களை- தேசிய இன மொழிகளை நாம் மதிக்கக் கற்றுக் கொண்டாக வேண்டும்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கில மொழியின் மீது உங்களுக்குள்ள ஆசை ஏன் இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் இந்தி மொழி மீது இருக்கக்கூடாது என்று கேட்கலாம்.
ஆங்கிலமொழி இந்தியாவில் இருநூறு ஆண்டுகளாய் வேரூன்றி விட்ட மொழி. அதற்காக அது இருக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஆங்கில மொழி எல்லோரையும் சமப்படுத்தி வைத்த மொழி. சமம் என் றால் ஜாதிகளை ஒழித்து அல்ல! சமம் என்றால் மதங்களை யெல்லாம் ஒன்றாக்கி அல்ல. அந்த சமத்துவத்தை அல்ல.
அது உருவாக்கிய சமம் என்னவென்றால் ஆங்கிலம் படித்தவன் யாராக இருந்தாலும் அவன் இந்தி பேசுபவனாக இருந்தாலும்- தமிழனாக இருந்தாலும் -ஒரிசாக்காரனாக இருந்தாலும் -பீகாரியாக இருந்தாலும் ஆங்கிலம் படித்து தகுதி பெற்றிருந்தால் அவனுக்கு அரசாங்க உத்தியோகங் களில் சம வாய்ப்பு கிடைக்கும்.
ஆங்கிலத்தை அகற்றி விட்டு கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் தமிழ்மொழி பேசுகின்ற தமிழ்த் தாயகத்தில் நம்முடைய தாய்மொழி தமிழ். இந்தியாவின் பொது மொழி -அரசு மொழி இந்தி என்று வருகிற நேரத்தில் நாம் தாய்மொழியாம் தமிழையும் படித்துவிட்டு, நம்முடைய வேலைக்காக, உத்தியோக வாய்ப்புக்களுக் காக அரசாங்க அலுவல்களுக்காக படிக்க வேண்டிய மொழி இந்தி மொழி. எனவே நம் மீது இரண்டு மொழி, ஒன்று நம் தாய்மொழி-கற்றுத் தீர வேண்டிய மொழி. இன்னொன்று கற்றால்தான் பிழைப்பு நடக்கும் என்ற அள வுக்கு இருக்கின்ற இந்தி மொழி.
அதே நேரத்தில் இந்தி பேசுபவர்களது நிலைமை என்ன? அவர்களுக்கு இந்திதான் தாய்மொழி. அந்தத் தாய்மொழியே அவனுக்கு பாட மொழி-பயிற்று மொழி. அந்தத் தாய்மொழியே அவனுக்குப் பயிற்று மொழியாக வந்துவிட்டால் அவனுக்கு சுலபம். ஒரே மொழி படிக்க வேண்டிய நிலையில் அவன்! தாய்மொழியோடு இரண்டாவது மொழியான இந்தியையும் படிக்க வேண்டியவர்கள் நாம். எனவே அவனுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள், வசதிகள் தமிழனுக்கு நிச்சயமாக கிட்டாது.
எனவேதான் இருசாராரையும் சமப்படுத்த இருவருமே கஷ்டப்படட்டும். நீ ஆங்கிலத்தைச் சுமந்து கொள்.
நீ நாங்களும் ஆங்கிலத்தை சுமக்கிறோம், நீ இந்தியையும் படி. ஆங்கிலத்தையும் படி. நாங்கள் தமிழையும் படிக்கிறோம். ஆங்கிலத்தையும் படிக்கிறோம். இருவரும் ஆங்கிலத்தைப் படித்தால் நமக்கு வேலை வாய்ப்புக்கள் சமமாக இருக்கும். எனவே தான் ஆங்கில மொழி இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம். இரண்டாந்தர குடி மக்களாக நாம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதைச் சொல்கிறோம்.
அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் வேண்டுமென்றே இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிறோம். ஏதோ தமிழ் இன வெறியை கிளப்புகிறோம் என்று யாராவது எண்ணுவார் களேயானால் அவர்கள் நம்மையும் புரிந்து கொள்ள வில்லை. நமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வைப் பற்றியும் கணிக்கவில்லை என்று தான் பொருள்.
எனவே இந்த நாட்டில் விரைவில் இந்தி ஆதிக்கத்தால் ஏற்பட இருக்கின்ற கொடுமைகளை அகற்றுவதற்கான பாசறைகள் உருவாக வேண்டும். அப்படி உரு வாவதற்கு நாம் தமிழ் உணர்வைப் பெற்றாக வேண்டும். தமிழன் என்கின்ற அந்த உணர்ச்சியைப் பெற்றாக வேண்டும்.
இங்கிருக்கின்ற தமிழன் என்றாலும் அவன் உலகத்திலே எங்கு பரந்து கிடந்தாலும் அந்தத் தமிழன் ஆனாலும் எல்லோரும் ஓர் இனம் என்கின்ற அந்த உணர்வை நாம் பெற்றிட வேண்டும்.
உலகப் பந்தில் இன்றைக்கு ஏறத்தாழ ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத் திலே வாழுகிற நாலரை அல்லது ஐந்து கோடி தமிழர்களை இலங்கையில் 35 லட்சம் தமிழர்கள் வாழுகிறார்கள் மன்னிக்க வேண்டும்; வாழுகிறார்கள் என்று சொல்ல முடியாது; வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்கள் சிங்கப்பூரிலே இருக்கிறார்கள். சிகாகோவிலே இருக்கிறார்கள். நியூயார்க்கிலே இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலே இருக்கிறார்கள்.
ஆனால் அங்கெல்லாம் இருப்பவர்களுக்கு ஏற்படாத இன்னல், கொடுமை, பயங்கரம், இங்கேயிருந்து 20 அல்லது 30 கல் தொலைவிலே உள்ள இலங்கைத் தீவில் ஈழத் தமிழகம் வேண்டுமென்று கேட்கின்ற விடுதலைப் பட்டாளத்திற்கு-அவர்களை வழி நடத்திச் செல்கின்ற தலைவர்களுக்கு – அவர்களால் வழி நடத்தப்படுகின்ற தமிழர்களின் குடும்பங்களுக்கு–நம்முடைய அக்காள்-தங்கை- சகோதரி என்கின்ற தமிழச்சிகளுக்கு கேடுகள் விளைவிக் கப்படுகின்றன.
இப்பொழுது செய்திகள் வராமல் இருக்கலாம்; இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம். வந்த செய்திகள்? அதன் காரணமாக நம்முடைய மனம் நொந்த நிலைமை கள் மறக்கக் கூடியவைகளா? மீண்டும் வராது என்று எண்ணக் கூடியவைகளா? இரண்டாயிரத்துக்கு மேற் பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. கோடிக்கணக்கான. ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இளம் பிஞ்சுகள், மலர்கள், அன்றலர்ந்த பூக்கள் – இவைகள் தூக்கி சாவுப் படுகுழியில் வீசி எறியப்பட்டன.
சிறைச்சாலை ஒரு பாதுகாப்பான இடம் கைதிகளுக்கு! அந்தச் சிறைச் சாலைக்குள்ளேயே சென்று சிங்களவர்கள் தமிழர்களைக் கொன்றார்கள்.
நான் அடிக்கடி கூறுவதைப் போல்-கையில்லாத ஊமைகளாக தமிழகத்தில் உள்ள நாம் இருக்கிறோம்.
ஏதோ பேச்சு வார்த்தை நடத்துவதாக சொல்கிறார் கள். வட்ட மேஜை, பேச்சு வார்த்தை என்றெல்லாம் ஆரம்பித்த போதே நான் தெளிவாகச் சொன்னேன். இவைகள் எல்லாம் காலம் கடத்துகின்ற விவகாரங்கள் என்று சொன்னேன். காலம் கடத்துவது இன்று தெளி வாகப் புரிகிறது.
அங்கே நாடு வேண்டுமென்று கேட்ட தலைவர்கள் எல்லாம் கூட இங்கே வீடு கிடைத்தால் போதும் என்று திருப்தி அடைகிறார்கள். எனவே தமிழினம் உலகத் திலே பல இடங்களில்-குறிப்பாக இலங்கையிலே சீரழிகிறது.
இங்கே தன்னுடைய இன உணர்வைப் பற்றியே சிந்திக்க முடியாமல் தமிழினம் இன்றைக்கு அடக்கம் படுகிறது.
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றவர்களும் உருவாக்கிய இன உணர்வு, அறிவாற்றல், பகுத்தறிவு ஒளி, இவைகள் எல் லாம் இன்றைக்கு ஐம்பதாண்டு காலத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டு விட்டதோ என்று எண்ணுகின்ற அளவிற்கு நான் வேதனையோடு இருக்கிறேன். அப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையை மாற்ற இப்படிப்பட்ட முத்தமிழ் விழாக்கள் பயன்பட வேண்டும்.
★ ★ ★



