நாயன்மார் திறம்
திரு. வி. கலியாணசுந்தரனார்

பாய வாருயிர் முழுவதும் பசுபதி யடிமை
ஆய வெவ்வகைப் பொருள்களு மவனுடைப் பொருள்கள்
மேய விவ்வண மலதுவே றின்றென வுணர்ந்த
தூய மெய்த்தவத் தடியவர் துணையடி தொழுவாம்.

– கச்சியப்பர்


தோற்றுவாய்

தமிழ் நாட்டில் வாழ்ந்த கடவுள் அடியவர் இருவிதப்
பெயரால் அழைக்கப்படுகின்றனர். ஒன்று “நாயன்மார்” என்பது;
மற்றொன்று “ஆழ்வார்” என்பது. முன்னையது சிவனடி யவர்க்கும்,
பின்னையது திருமாலடியவர்க்கும் வழங்கப்படுகின்றன.

ஆண்டவன் அடிக்கு அன்பு செலுத்தித் தலைமைப்
பேறெய்தினவர் நாயன்மார் எனப்படுவர். நாயன் -தலைவன்.
நாயன்மார் – தலைவர். தலைவனைப் போற்றித் தலைவராயவர்
நாயன்மாரென்க. நாயன்மார் என்னுஞ் சொல்லிற்கு வேறு பல
பொருள் கூறுவோரும் உளர். பொருள் பலபடினும் கருத்து
ஒன்றாக முடியும்.

அறுபத்து மூவரும் அப்பாலவரும்

“நாயன்மார்” என்னும் பெயர் “அறுபத்து மூவர்” என்னுந்
திருக்கூட்டத்தவர்க்கு வழங்கப்பட்டு வருவது தமிழ்நாட்ட
வர்க்குத் தெரியும். அறுபத்து மூவர் என்னுந் தொகைக்குறிப்பைக்
கண்டு, அடியவர் அறுபத்து மூவரே என்று கோடலாகாது.
அறுபத்து மூவரல்லாத ஏனைய பக்தரும் அடியவரே யாவர்.
இவ்வுண்மை, “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும்
அடியேன்”, “அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன்”
எனவரூஉந் திருத்தொண்டத் தொகைப் பத்தாஞ் செய்யுளால்
நனி விளங்கும்.

இறைவன் ஒருவனே. “உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே”
என்று அப்பரும், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று
திருமூலரும் அருளியிருத்தல் காண்க. ஒரே இறைவனுக்குப் பல
விடங்களில் பலதிறப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. தென்
னாட்டில் இறைவனுக்கு வழங்கப்படும் பெயர் “சிவம்” என்பது.
இதனை, “தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்
டவர்க்கும் இறைவா போற்றி” எனவரூஉம் மாணிக்கவாசகனார்
திரு வாக்கால் உணர்க. எந்நாட்டவர்க்கும் இறைவனாயுள்ள
ஒருவன் திருவடிக்கு அன்பு செய்வோர் எந்நாட்டிலும் இருப்பர்.
எந் நாட்டன்பரும் அடியவரேயாவர். பின்வருந் தென்னாட்டு
மக்கள், தங்கள் நாட்டில் தோன்றிய நாயன்மாரே கடவுள்
அடியவரென்றும், மற்ற நாட்டில் அடியவர் தோன்ற மாட்டா
ரென்றுங் கொள்ளாதிருக்குமாறு திருத்தொண்டத் தொகை
பாடிய பெருமான், “அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும்
அடியேன்” என்று அருளினார். தென்னாட்டுக்கு அப்பாலுள்ள
நாடுகளிலும் அடியவருளர் என்பதை அத்திருவாக்கு உணர்த்து
கிறது. “அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன்”
என்னும் நன்மொழிக்கு “மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்
கப்பால் முதல்வனார் அடிசார்ந்த முறைமையோரும்” என்று
சேக்கிழார் விரிவுரை கூறியிருத்தல் ஈண்டு உன்னற்பாலது.

நூல்வழி

அறுபான் மும்மை நாயன்மாரைப் பற்றிக் கூறும் முதல்
நூல் திருத்தொண்டத் தொகை; வழி நூல் நம்பியாண்டார்
நம்பி திருவந்தாதி; சார்புநூல் பெரிய புராணம். பின்வந்த
நூல்களுஞ் சில உள. அந்நூல்களை நிரலே கிளந்தாய்ந்து
எழுதப்புகின், இஃதொரு பெரு நூலாக விரியும். ஆதலால் ஒரு
சிறு கட்டுரை அளவாக இப்பொருளை என் சிற்றறிவிற் கெட்டிய
வாறு – என்னால் இயன்ற வரை – சுருங்க எழுதப் புகுகிறேன்.

அன்பில் ஒருமைப்பாடு

நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ் நாட்டில் பல்வேறு
இடங்களில், பல்வேறு மரபுகளில், பல்வேறு சாதிகளில்
தோன்றினவர். அவர்தந் தொண்டுகளும் பலதிறப் பட்டவை.
அவர்தந் தொழில்களுங் கோலங்களும் பலதிறப்பட்டவை.
நாயன்மார் இடத்தானும், மரபானும், சாதியானும், தொண்
டானும், தொழிலானும், கோலத்தானும் வேறு பட்டவரா
யினும், கடவுளிடத்தில் அன்பு செலுத்துவதில் அவரெல்லாரும்,
ஒன்றுபட்டவரே யாவர். இவ்வாறே நமது தேசத்தில் வாழும்
மக்கள் பிறப்பாலும் சிறப்பாலும் பிறவாற்றாலும் வேறுபடினும்,
பொதுஜன சேவையில் ஒன்றுபட்டவர்களா யிருத்தல்
வேண்டும். கடவுள் சேவையில் நாயன்மார் வேறுபடாது
ஒன்றுபட்டமையான், அவர் வீடுபே றெய்தினர். அவர் இன்னும்
ஆலயங்களில் பூசிக்கப் படுகின்றனர். அறுபத்துமூவர் நினைவு
தோன்றுங்காலத்து, அவர்தந் தொழில் சாதி முதலியன
மனத்தில் தோன்றுகின்றனவோ? இல்லையே. அவரெல்லாருஞ்
சிவனடியார் என்னும் ஓரெண்ணமே உள்ளத்தில் எழுகிறது.

சாதிப்புன்மை

அறுபத்துமூவர் அனைவர்க்கும் ஒரேவித பூசை, விழா,
வணக்கம் முதலியன நடைபெறுகின்றன. கண்ணப்பரை வேடரென
யாவராயினுங் கழிக்கின்றனரோ? திருக்குறிப்புத் தொண்டரை
வண்ணாரென எவராவது ஒதுக்குகின்றனரோ? திருநாளைப்
போவாரைப் பஞ்சமரென யாராவது தள்ளுகின்றனரோ?
இவரனைவரையும் இன்னுங்கோயில்களில் பிராமணரல்லரோ
பூசிக்கின்றனர்? இந் நாயன்மாரைப்போல இந்நாள் வாழும்
பாரதமக்களும் தேச சேவையில் ஒன்றிய அன்பு கொள்வார்
களாயின், உலக இன்பம் விரைவில் எளிதில் கிடைக்கும்.

அறுபத்து மூவருள் வேதியரிருந்தனர்; வேளாளரிருந்
தனர்; சாலியர் இருந்தனர்; சான்றார் இருந்தனர்; பஞ்சமர்
இருந்தனர்; பரதவர் இருந்தனர்; வண்ணார் இருந்தனர்; வேடர்
இருந்தனர்; வேறுபல சாதியாருமிருந்தனர். இப்பெரியவர்கள்
தாங்கள் பிறந்த சாதியில் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டு
தாங்கள் செய்த சேவையில் ஒருவரோ டொருவர் மலைந்து
பூசல் விளைத்தார்களோ? எல்லோரும் ஆன்மநேய ஒருமைப்
பாட்டில் கட்டுப்பட்டுக் கிடந்தனர். அவர்தம் வழி வழி வந்த
தமிழ் மக்கள் இப்பொழுது சாதிப் பகைமையில் தலைசிறந்து
விளங்குகிறார்கள். என்னே காலம்! என்னே கொடுமை!!!

சுந்தரர்

திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ஆதிசைவ பிராமண குலத்தில் பிறந்தார்; நரசிங்க முனையர்
என்னுங் குறுநில மன்னர் வீட்டில் வளர்ந்தவர்; பாவை என்னும்
உருத்திர கணிகையையும், சங்கிலி என்னும் வேளாளப் பெண்ணை
யும் மணந்தார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் வாழ்வில் சாதிப்புன்மை
இடம் பெற்றதோ? அப்புன்மை நொறுங்குண்டது என்றே
சொல்லலாம்.

திருநாவுக்கரசரும் அப்பூதியடிகளும்

திருநாவுக்கரசர் வேளாளகுலத்தில் பிறந்தவர். இவரைக்
குருவாகவும் கடவுளாகவும் பொன்னாகவும் பொருளாகவும்
அப்பூதியடிகள் போற்றினார். அப்பூதியடிகள் பிராமண குலத்
தில் தோன்றியவர். அப்பூதியடிகள், திருநாவுக்கரசு சுவாமிகள்
பால் அன்புகொண்டு, அவரை வரவேற்றுப் போற்றிய முறை
களையும், அவரோடமர்ந்து உண்ட நேயத்தையும் அவரது
வரலாற்றிற் காண்க.

அப்பரும் சம்பந்தரும்

வயதில் முதிர்ந்த வேளாளராகிய அப்பர் சுவாமிகள்,
குழந்தைப் பருவமுடைய பிராமணராகிய திருஞானசம்பந்த
சுவாமிகளைக் கண்டவுடன் பணிந்ததும், இவர் அவரை “என்
அப்பரே'(தந்தையரே) என்று கூவி விழுந்ததும், அப்பர், சம்பந்தர்
சிவிகையைத் தாங்கியதும், அதையறிந்ததும் சம்பந்தர் அப்பர்
திருவடியில் விழுந்து வணங்கியதும் இருவரும் க்ஷேத்திர
யாத்திரை செய்து பலதிறக் குலங்களிற்றோன்றிய நாயன்மாரின்
மடங்களிலும் வீடுகளிலும் உண்டதும் தமிழ் நாட்டில் நிகழ்ந்தன
வேயாம். திருநாவுக்கரசர் – சம்பந்தர் காலத்தில் அடியவரிடைச்
சாதிப்புன்மை ஆக்கம் பெறவேயில்லை “ஆவுரித்துத் தின்றுழனும்
புலையரேனும் – கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே” என்பது அப்பர்
திருவாக்கு. “நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற –
குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி சூலச்சிறை பரவும் –
கலைமலி காத்தன்” என்பது சம்பந்தர் திருவாக்கு.

சேரமானும் வண்ணானும்

சேரமான் பெருமாள் நாயனார் சேரநாட்டு மன்னர். அவர்
ஒருநாள் யானைசேனை புடைசூழ நகர்வலம் வந்தபோது,
அவரெதிரே ஒரு வண்ணான் வெளுத்த வடிவினனாகப்
போந்தான். மழை நீரால் அவன் தலைமீதிருந்த உவர்மண் கரைந்து
ஒழுகி அவன் உடலை வெளுக்கச் செய்தது. அவ்வெண்ணிறம்
திருநீறு பூசிய வேடம் போல் சேரர்பெருமானுக்குப் புலனாயிற்று.
ஆனதும் சேரர் பெருமான் யானைவிட்டிழிந்து வண்ணான்
காலில் விழுந்தார். அவன் அஞ்சி, “அடி வண்ணான்” என்று
அலறினான். மன்னர் “அடிச்சேரன்” என்று விழுந்து விழுந்து
அவனை வணங்கினார். மன்னர் பிறப்பெங்கே? வண்ணான்
பிறப்பெங்கே? மன்னர் சிறப்பெங்கே? வண்ணான் சிறுமை
எங்கே? எல்லாம் அன்புக்குமுன் ஓடின.

நமிநந்தி – திருநீலநக்கர்

சாதியால் தீட்டு உண்டு என்னுங் கருத்துக்கொண்டி ருந்த
நமிநந்தியடிகளுக்குக் கடவுள், எல்லா மனிதருஞ் சிவகணங்களே ”
என்ற உண்மையை அறிவுறுத்தியதையும், அந்தணச் செல்வ
ராகிய திருநீலநக்கர், தம்மில்லம் போந்த திருநீலகண்ட
யாழ்ப்பாணர்க்குத் தம் வீட்டின் நடுவண், வேதிகையின் பாங்கர்,
இடந் தந்து உபசரித்ததையும், வேறு பல நாயன்மார் சாதி பேதங்
கருதாது, எல்லாரிடத்துஞ் சமரச உணர்வுகொண்டு, அன்ன
மிட்டு வழிபட்ட வரலாற்றையும் பெரியபுராணத்திற் பரக்கக்
காண்க.

சாதி பாராட்டாமை

நாயன்மார் காலத்தில் சாதிபேதம் இருக்கவில்லை என்று
சொல்லுதல் முடியாது. அவர்கள் காலத்தில் சாதி பேதம்
இருந்தது. ஆனால் சாதிபேதம் பாராட்டப்படவில்லை. சாதி
பேதங் கூடாது என்று உபதேசிக்கும் தற்கால நாகரிக தேவதை
தாண்டவம் புரியும் இந்த வேளையில், சாதி நிந்தை, சாதிப்
பகைமை, சாதிப்பூசல், சாதிக் கூட்டம், சாதிப் பற்று முதலிய
கொடுமைகளே நடம் புரிகின்றன. நாயன்மார் காலத்தில் தற்கால
நாகரிகம் பரவி யிருக்கவில்லை. ஆனால் அக்காலத்தில் சாதி
பேதத்தால் நிந்தையாதல், பகைமையாதல், பிறவாதல் மூண்டு
கனன்றெழவில்லை. அக்காலம் நாகரிகக் காலமோ? இக்காலம்
நாகரிகக் காலமோ? உண்மையை அறிஞர்கள் ஆராய்வார்
களாக.

அந்தணர் பெருமானாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்
தொண்டத் தொகையில் எல்லாச் சாதியாரையும் “அடியார்க்கும்
அடியேன்? என்று வழுத்தி யிருக்கிறார். திருநாவுக்கரசு
சுவாமிகள்,

“சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளு மாற்பேறரே”

என்று திருவாய்மலர்ந்திருக்கிறார்கள். வேறு பல நாயன் மாரும்
சாதிபேதத்தை மறுத்தோதியிருக்கிறார். நாயன்மார் காலத்தில்
சாதி வேற்றுமை யிருந்தும், அதைக் கருதாது, அவர் அன்பின்
வழி நின்று ஓழுகியதுபோல, இக்காலத்தும் அவர்தம் வழித்
தோன்றிய தமிழ்மக்கள் சாதியில் கருத்தைச் செலுத்தாது,
அன்புநெறிபற்றித் தொண்டு செய்ய முயல்வார்களாக.
அன்பு நெறி

இனி நாயன்மார் சமய நிலையைச் சிறிது ஆராய்வோம்.
நாயன்மார் அனைவரும் சைவசமயிகள் என்று சிலர் கூறிவிடுவர்.
நாயன்மார் எத்தகைப் பொருள் கொண்ட சைவ சமயத்தைப்
பற்றி ஒழுகினார் என்பது ஆராயத்தக்கது. நாயன்மார்
கடவுளைச் சிவமென்னும் நாமத்தால் வழிபட்டு வந்தார். அவர்
சிவமென்னுஞ் செம்பொருளை அன்பாகக் கொண்டார்;
கண்டார். இதை,

“ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடத்த
இன்பமே என்னுடை யன்பே”

என்னுந் திருவாசகமும்,

“அன்புஞ் சிவமு மிரண்டென்பர் அறிவிலார்
அன்பு சிவமாவ தாரு மறிகிலார்
அன்பு சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருப் பாரே”

என்னுந் திருமந்திரமும் வலியுறுத்தும்.

அன்பு சமயம்

அன்பாகிய சிவத்தை வழிபடுஞ் சமயநெறிபற்றி
ஒழுகினவர் நம் நாயன்மார் என்று தெரிகிறது. சைவம் –
சிவசம்பந்தம்; சிவம் -அன்பு; சைவசமயம் – அன்பு சமயம். அன்பு
சமயமாகிய சைவசமயமே நாயன்மார் கைக்கொண்டது.
நாயன்மார் கடைப் பிடித்த சைவம் சாதிச் சைவமன்று; மடச்
சைவமன்று; வேடச் சைவமன்று.

சிவத்தின் நிலை

நாயன்மார் அன்பாஞ் சிவத்தைத் தாய்தந்தை, மனைவி,
மக்கள், நண்பராகப் போற்றினார்; கோயிலாக வணங்கினார்;
உயிர்களாகத் தொழுதார்; உலகமாக வழிபட்டார். இக் கருத்
தடங்கிய தமிழ்வேத மொழிகள் சில வருமாறு:-

“ஏழறிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மட்டிலா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே”

“அப்பனீ அம்மைநீ ஐயனுநீ
அன்புடைய மாமனு மாமியுநீ
ஒப்புடைய மாதரு மொண்பொருளுநீ
ஒருகுலமுஞ் சுற்றமுமோ ரூருநீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் னெஞ்சந் துறப்பிப்பாய்நீ
இப்பொன்னீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவனீ ஏறூர்ந்த செலவனீயே”

“இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் நாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுற் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையா யின்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.”

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *